திருநாள்

0
83

அன்று ஊரே விழாக்கோலமாய் இருந்தது. வாசலிலேயே மாவிலைத் தோரணம் கட்டி இளம் பெண்களுடன் வயதானவர்களும் கூட போட்டியாக கலர் கோலம் போட்டு வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் தம் சொந்தங்களுக்காக.

நாகரிகம் பெருகியதாலோ என்னவோ தற்போது உறவுகளின் அவசியம் தெரிவதில்லை இக்கால பிள்ளைகளுக்கு. பெற்றோரை பிரிந்து படிக்க செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், திருமணமான பெண்கள் என அனைவரும் ஒன்று கூடிவதற்காகவே ஏற்பட்டது பண்டிகைகள்.

இன்று தமிழ் புத்தாண்டு அதை தன் பிள்ளைகள் பேரன் பேத்திகள் என அனைவருடனும் கொண்டாடுவதற்காக வாசலில் காத்திருந்தார் மதியம்மாள்.

மதி அவங்க வருவாங்க நீ வா எவ்வளவு நேரம் தான் இங்கயே உட்கார்ந்து இருப்ப. பெரியவன் நீ வந்தா தான் சாப்பிடுவேன்னு உட்கார்ந்து இருக்கான் எழுந்து வா என்று தன் மனைவியை அழைத்தார் ஆறுமுகம்.

ஆறுமுகம் – மதியம்மாள் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு மகள். பெரியவன் பெயர் நடராஜன், அவருக்கு ஒரு மகன் வம்சிராஜன் அவன் எம். எஸ்சி முடித்து விட்டு தங்கள் வயலில் விவசாயம் பார்த்து கொண்டிருக்கிறான் அது மட்டுமல்ல பக்கத்து ஊரில் கல்லூரி ஒன்றை திறம்பட நடத்தி வருகிறான். இளையவன் பெயர் துரைராஜன் அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருவரும் படித்து கொண்டு இருக்கின்றனர். அவர்களை பற்றி பிறகு பார்ப்போம். ஒரு மகள் மதுரையில் இருக்கிறாள் அவள் தான் இந்த புத்தாண்டிற்கு வருகை தர இருக்கிறார் குடும்பத்தோடு பத்து வருடம் கழித்து. சொத்து பிரச்சினையில் சண்டையிட்டு கிளம்பியவள் இன்று தான் தன் அன்னையின் வற்புறுத்தலின் பேரில் வந்து கொண்டு இருக்கிறாள். பெயர் அம்சவர்த்தினி அவருக்கு ஒரு மகள் பெயர் விசாகா நம் நாயகி.

அவர்கள் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட நேரம் இதோ வர்த்தினி அவள் குடும்பத்துடன் வந்து சேர்ந்தாள்.

அவர்களை கண்டதும் அன்புடன் வரவேற்றார்கள் குடும்பத்தினர் ஆனால் ஒருத்தனை தவிர.. வேற யாரு நம்ம வம்சி தான்.

வம்சி அவர்களை கண்டதும் முகத்தை திருப்பி கொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக விசாகாவின் மேல் மோதினான்.

ஒரு நிமிடம் அவளை இமைக்க மறந்து பார்த்தான். மான் விழி, கூர் நாசி, ஒப்பனை இல்லா முகம், ஆரஞ்சு பழ உதடு என அவளை ரசித்தான்.

ஆனால் அடுத்த நொடியே ஏய் அறிவில்ல இப்படி தான் யார் எதிர்ல வராங்கன்னு கூட தெரியாம வந்து இடிப்பீயா என்றான்.

அவள் ஏதோ சொல்ல நினைக்கையில் இவன் போதும் என்று ஒற்றை செய்கை செய்து விட்டு நகர்ந்தான்.

அவனை ஒரு நொடி பார்த்தவள் சரியான லூசா இருப்பான் போல அவன் இடிச்சிட்டு என்ன திட்டிட்டு போறான்.

அவனை திட்டி விட்டு உள்ளே சென்றவள் அங்கு இருந்த தன் தாய்மாமன்களோடு ஓன்றி போனாள் பேச்சு சுவாரஸ்யதில் திரும்பியவளின் கண் ஒரு இடத்தை விட்டு நகர மறுத்தது.

சுவற்றில் தொங்கி கொண்டு இருந்த ஆள் உயர படத்தில் கம்பீரமாய் சிரித்து கொண்டு இருந்தான் வம்சிராஜன்.அந்த நிழற்படத்தோடு சற்று முன்னர் பார்த்தவனை ஒப்பிட்டு பார்த்தாள் விசாகா உயரம் ஆறடிக்கும் குறையாமல் இருக்கும் வயலில் வேலை செய்வதால் நிறம் கருத்திருக்கும் போல படத்தில் நல்ல நிறமாகவே இருந்தான். எதையோ பேசி கொண்டு இருக்கும் கண்கள், நீளமான நாசி, கெட்ட பழக்கம் இல்லை என்பதற்கு சாட்சியாக இருந்த உதடுகள், நிற்கும் தோரணையில் ஒரு கர்வம் கம்பீரம் என்று ரசித்து கொண்டு இருந்தவளை கலைத்தது மதியம்மாளின் குரல்.

என்ன தங்கம் இங்கயே நிக்குற வா சாப்பிடலாம் என்றார்.

பாட்டி இது என்று இழுத்தாள். இது உன் பெரிய மாமா பையன் உன் முறை மாமன் வம்சிராஜன். எம் எஸ்சி படிச்சிட்டு ஒரு காலேஜ் கட்டி அத நல்லபடியா நடத்திகிட்டு வரான். கூடவே அவங்க அப்பாகளுக்கு உதவியா வயலையும் இருப்பான் ரொம்ப பாசமான புள்ள என்று தன் பேரனை பற்றி பெருமையாக சொல்லி கொண்டு இருந்தார்.

சாமி கும்பிடும் நேரம் வந்ததால் அனைவரும் பூஜை அறையில் இருந்தார்கள்.

அங்கே பூஜைக்கு தேவையானதை பார்த்து பார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தனர் அவ்வீட்டின் மருமகள் இருவரும்.

அப்பொழுது அங்க வந்த வம்சி விசாகாவை முறைத்துக் கொண்டே பாட்டியிடம் நான் ஏதாவது செய்யனுமா என்றான்.

இல்லப்பா நீ வா சாமி கும்பிட்டு சாப்பிட்டு அப்பறம் வேற வேலையை பாரு என்றார்.

அவர் பேச்சுக்கு எதிர்த்து பேசும் பழக்கமில்லை அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு ஆதலால் சரி என்ற ஒற்றை வார்த்தையொடு முடித்தான்.

பாட்டி இந்த பூஜையை ஏதுக்காக செய்யனும் எப்படி செய்யனும் என்றாள் விசாகா.

இது கூடவா உன் அம்மா உனக்கு சொல்லி தரல என்று ஏளனமாய் சிரித்தான் வம்சி. அவனை அதட்டி விட்டு தன் பேத்திக்கு சொல்ல தொடங்கினார்.

சித்திரையின் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவார்கள்.

தமிழர் விழாக்களுக்கு, இயற்கைவளம், குடும்ப மகிழ்ச்சி, சமூக ஒற்றுமை, வணிகம், ஆகிய காரணங்கள் முதன்மையானவை. சித்திரையில் புத்தாண்டையும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவையும், கார்த்திகையில், விளக்குத் திருவிழாவையும், தையில் பொங்கல் என ஒவ்வொரு பண்டிகையும் இயற்கையை சார்ந்தே இருக்கும்.

தமிழர் நாள் தொடக்கமாக இருளுக்கும் ஒளிக்கும் மையமான காலை நேரத்தை நாள் தொடக்கமாக கொண்டது போலவே ஆண்டு தொடக்கத்திற்கும், பின்பனி முடிந்து வெயிலின் தொடக்க காலமான இளவேனிற் காலம் தொடங்கும் சித்திரையை ஆண்டு தொடக்கமாகக் கொண்டனர்.

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் ‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை’ என்றும், பழமொழி நானூறு ‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்’ என்றும் பாடுவதால் இளவேனில் தொடக்க சித்திரை புத்தாண்டாய் கொண்டாடப் பட்டது என அறியலாம். இலங்கையில் தமிழரைப் போல சிங்களவருக்கு தனி ஆண்டுக் கணக்கு இல்லாததால், சித்திரை ஒன்றையே அவர்களும் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

போகியை போல, புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை தூய்மை செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவளிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான விளை பொருட்களை வைத்து, அதனை கண்ணாடியின் அருகே வைத்து அதன் பிரதிபலிப்பை பார்த்தால் எல்லா வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.

புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி சமைத்து சாப்பிடுவது வழக்கம் என்று தன் நீண்ட விளக்கத்தை சொல்லி முடித்தார் மதியம்மாள்.

ஐய்யோ பாட்டி இதுல இவ்வளவு விசியம் இருக்கா சூப்பர் என்று பாட்டியை கொஞ்சி கொண்டிருந்தவளை ஒரு நொடி இமைக்கவும் மறந்து பார்த்தான் வம்சி.

அவன் பார்த்ததை கவனித்த விசாகா முறைக்க ஆரம்பித்தாள்.

அவள் பார்வை இவன் பக்கம் திரும்பியதும் தன்னை விரைப்பாக மாற்றி கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் வம்சி.

அவன் பார்வையை விசாகா மட்டுமல்லாது பாட்டியும் கவனித்து விட்டார்.

மதியம் விருந்து உபசரிப்பு முடிந்தவுடன் பாட்டி எல்லோரையும் கூடத்திற்கு அழைத்தார்.

சொல்லுங்க அம்மா எதுக்கு எல்லாரையும் இங்க வர சொன்னீங்க என்ன எதாவது பிரச்னையா என்றனர் அனைவரும் ஒருசேர.

மதியம்மாள் சிரித்து கொண்டே ஏம்பா பிரச்சினைன்னா தான் எல்லாரும் ஒண்ணு கூடனுமா நான் ஒரு நல்ல விசியத்துக்காக தான் உங்க எல்லாரையும் இங்க வரசொன்னேன் என்றார்.

வம்சியோ அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பாட்டி சுத்தி வளைக்காம என்னனு சொல்லுங்க எனக்கு வேல இருக்கு என்று சிடுசிடுத்தான்.

இருடா விசியமே உன்ன பத்தி தான் என்றதும் அனைவரும் மதியம்மாளை ஆர்வத்துடன் நோக்கினர்.

அம்மா வர்த்தினி உன்கிட்ட ஒண்ணு கேக்கனும் என்றார்.

என்னம்மா சொல்லுங்க என்றார்.

விசாகாவ என் பேரன் வம்சிக்கு குடுக்கிறீயா என்றதும் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி இருவரை தவிர.

வம்சிக்கும் விசாகவும் மட்டும் மகிழ்ச்சியே இல்லாமல் இருந்தனர்.

பாட்டி இவர்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் நிச்சிய தாம்பூலம் மாற்றி விட்டார். வம்சி எவ்வளவு தடுத்தும் கேளாமல் இந்த விசியம் நடந்தது.

அவரிடம் சில மணி நேரம் கழித்து பேச போனவன் பாட்டி ஏன் இப்பிடி பண்ணீங்க யார கேட்டு இந்த கல்யாணத்த முடிவு பண்ணீங்க.

யார கேக்கனும் வம்சி அவ உனக்கு முறப்பொண்ணு தானே என்றார்.

பாட்டி நான் இல்லன்னு சொல்லல ஆனா கல்யாணம் பண்ணி வாழ போறது நாங்க தான் நீங்க இல்ல என்றான் தீர்க்கமாக.

சரி அவளுக்காவது இதுல இஷ்டம் இருக்கான்னு கேட்டீங்களா என்றான்.

இங்க பாருங்க முடிவா ஒண்ணு சொல்றேன் இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்ல போதுமா என்று அவரின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டான்.

விசாகாவும் அதையே தான் சொல்லி கொண்டு இருந்தாள்.

அம்மா அப்பா என் முடிவு இது தான் இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றாள்.

ஏன் விசாகா வம்சிக்கு என்ன குறைச்சல் நல்ல இருக்கான் நல்ல குணம் நல்ல படிப்பு சம்பாத்தியம் இதுக்கு மேல என்ன வேணும் என்றார் வர்த்தினி.

அம்மா அவர பத்தி நான் எந்த குறையும் இல்ல ஆனாலும் இன்னைக்கு தான் பாத்து இருக்கேன் அவரப்பத்தி எதுவுமே தெரியாது. சரி என்னையே கேக்குறீங்களே வம்சிக்கு இதுல விருப்பமான்னு கேட்டீங்களா என்றாள்.

அவன பாட்டி பாத்துப்பாங்க என்றார் அவர். மேலும் தொடர்ந்தார் இங்க பாரு விசா பத்து வருஷம் கழிச்சி இப்ப தான் நான் என் பிறந்த வீட்டுக்கு வந்து இருக்கேன் உன்னால அது இன்னும் வலுவாக போகுது அதனால நீ கொஞ்சம் யோசிச்சி சொல்லு என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

இரண்டு நாள் கழித்து விசாகா அவளின் சம்மத்தை சொல்ல அனைவருக்கும் மகிழ்ச்சி ஆனால் வம்சி மட்டும் பிடிகுடுக்காமல் இருந்தான். அவன் எவ்வளவு சொல்லியும் சொந்தம் விட்டு போக கூடாதுன்னு சொல்லி அவனையும் வாயை திறக்க முடியாமல் செய்தனர். தன் குடும்பத்திற்காக இருவரும் அமைதி காத்தனர்.

ஒரு நல்ல முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது.

முதலிரவு அறைக்குள் வம்சியே முதலில் பேச ஆரம்பித்தான்.

விசாகா இந்த கல்யாணத்துல உனக்கும் அந்த அளவுக்கு இன்டிரெஸ்ட் இல்லன்னு தெரியும் ஆனா இந்த குடும்பம் எனக்கு ரொம்ப முக்கியம். இன்றிலிருந்து நீயும் நானும் நண்பர்கள் நம்ம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்குற வரைக்கும் இதெல்லாம் வேணாம் இன்பேக்ட் நீ அதுக்கு அப்புறம் என்ன விட்டு போகணும் னு நினைச்சா கூட போகலாம் ஆனா ஒரு ஆறு மாசம் கழிச்சி என்றான்.

அவன் சொன்னத்திற்கு தலையாட்டியவள் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அவளின் அன்பும் அரவணைப்பும் வம்சிக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. விசாகவிற்கும் அதே நிலை தான் அவளின் விருப்பத்திற்கு இணங்க அவளை மேற்படிப்பிற்கு சேர்த்ததாகட்டும் தன் குடும்பத்தை கவனிப்பதிலும் தன்னை அரவணைத்து பாதுகாப்பத்திலும் வம்சி அவளின் கவனத்தை ஈர்த்தான்.

ஒருநாள் விசாகாவை கல்லூரி விட்டு அழைத்து வர சென்றவன் அவளை காணாது தவித்தான். எல்லா இடத்துலயும் தேடியும் கிடைக்காமல் போகவே பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் அங்கு ஒரு விபத்து நடந்ததாகவும் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

அம்மருத்துவமனைக்கு சென்றவன் அவளை பார்த்தவுடன் தான் தன் உயிர் வந்ததை போல உணர்ந்தான். இவளோ இவனை பார்த்ததும் அவளுக்கு இனம் புரியாத ஒரு உணர்வு அவளால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை.

அவள் அழுததும் ஓடி வந்து அணைத்தவன் அவள் உடல் நடுங்குவதை பார்த்ததும் அவளின் முதுகை மெதுவாக தடவி கொடுத்தான்.

அவளும் அவனுள்ளேயே புதைந்து கிடந்தாள் அவனின் அணைப்பு அவளுக்கு மிகவு‌ம் தேவையானதாக இருந்தது. அதில் பாசம் மட்டுமே இருந்தது ஒரு துளி காமம் இல்லை. இத்தனை நாளும் தன்னுடன் ஒர் அறையில் இருந்தாலும் பார்வையால் கூட அவளை தீண்டியதில்லை ஆனால் இன்று அணைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு என் மீது பாசம் உள்ளது இது வெறும் பாசம் மட்டும் தானா இல்லை அதையும் மீறி என் மேல் காதல் இருக்குமா. எனக்கு வம்சியை மிகவும் பிடித்து இருக்கிறது ஆனால் நானாக முன் வந்து சொன்னால் அவர் என்ன ஏற்றுக்கொள்வாரா என தன்னை தானே கேட்டு கொண்டு இருந்தாள் விசாகா.

அவளை நிமிர்த்தி முகம் பார்த்தவன் கண்ணிற்கு அருகில் காயம் இருந்ததை அப்பொழுது தான் கவனித்தான்.அதை பார்த்ததும் அவனுக்கு என்ன தோணியதோ குனிந்து கண் அருகே முத்தம் வைத்தான் இதை எதிர்ப்பார்க்காத அவளோ பேந்த பேந்த விழித்தாள்.

சிறது நேரம் இமைக்க மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஒரு வழியாக சுதாரித்தவன் ஏய் என்ன பண்ணி வச்சி இருக்க யார கேட்டு நீ தனியா வந்த உனக்கு எதாவது ஆச்சின்னா நான் என்ன பண்ணுவேன் என்ன பத்தி யோசிச்சியா நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் இவ்வளவு நாளா என்ன பாத்து பாத்து கவனிச்ச எனக்காக எவ்வளவவோ விட்டு குடுத்து இருக்க என் குடும்பத்துக்காக நான் உன்ன பல தடவ திட்டி இருக்கேன் அப்ப கூட என்கிட்ட நீ எப்பவும் போல தான் நடந்துகிட்ட ஒரு சின்ன முக சுளிப்பு கூட இல்ல. ஏன் ஒரு சண்டையில நான் உன்ன வீட்ட விட்டு போன்னு சொல்லிட்டேன் ஆனா அத சொல்லிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியல தெரியுமா. நீ எப்படி என் மனசுக்குள்ள வந்த எப்படி என் வாழ்க்கையில பாதி ஆனேன்னு சத்தியமா தெரியாது. இன்னும் சொல்ல போனா இப்ப தான் நான் அத உணர ஆரம்பிச்சேன் என்று திட்ட ஆரம்பித்து காதலை சொல்லி முடித்தான் வம்சி.

அவன் சொல்வதை கேட்டவளுக்கு நிதர்சனம் புரிய வேக நேரம் எடுத்துக் கொண்டது.

இதை தவறாக புரிந்து கொண்டவன் சாரி விசா நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா என்ன மன்னிச்சிடு. உனக்கு என் மேல விருப்பம் இல்லன்னா நீ தராளமா என்ன விட்டு போகலாம் என்று சொல்லி முடிக்கும் முன் தன் இதழ் கொண்டு அவன் இதழை அடைத்தாள் விசாகா.

இந்த இதழ் யுத்தம் மூலம் சொல்ல முடியாத காதலை மாற்றி மாற்றி சொல்லி கொண்டு இருந்தனர்.

சில வருடங்களுக்கு பிறகு..

டேய் நில்லுடா இன்னைக்கு வருஷ பிறப்புடா சீக்கிரம் குளிச்சி சாமி கும்பிடனும் என்று தன் மூன்று வயது மகன் துஷ்யந்த் ராஜனை துரத்தி கொண்டிருந்தாள் விசாகா.

விசா ஏன் அவன கத்திக்கிட்டே இருக்க இது வம்சி.

விசாகா என் செல்லக்குட்டிய எதுவும் சொல்லத இது பாட்டி.

இப்படி ஆள் ஆளுக்கு அவன கொஞ்சிக்கிட்டே இருங்க இப்படியே வால் தனம் பண்ணிக்கிட்டு திரிவான் என்றாள் அவள்.

அவன திட்றத விட்டுட்டு நீ போய் பூஜைக்கு ரெடி பண்ணு என்று அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான் வம்சி.

இன்றும் அந்த வீட்டில் எல்லோரும் ஒற்றுமையாய் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இன்றைய தலைமுறைகளுக்கு கூட்டு குடும்பத்தின் அருமை தெரியவில்லை ஆதலால் தான் முதியோர் இல்லம் என்று ஒன்று இருப்பதே. கூட்டு குடும்பத்தில் பிரச்சினைகள் வீட்டை விட்டு வெளியில் செல்லாது ஆனால் தற்போது அதை நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.

சரி மக்களே கருத்து கொஞ்சம் ஓவரா தான் போகுதோ. சரி சரி கோவம் வேண்டாம்.

பூஜைக்கு நேரமாகிறது வாங்க என்று பாட்டி அழைத்து விட்டார். வாருங்கள் நாமும் அப்பூஜையில் கலந்து கொண்டு எல்லா வளமும் பெறுவோம்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here