தீண்டாத தீ நீயே புத்தகம்

2
4428

தீண்டாத தீ நீயே- சில துளிகள்?

“நா…நான் என்ன செஞ்சேன்”
“எதுக்கு இப்போ பயந்து போய் கார் கதவில பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு வர்ற”
“ட்ரெஸ் எல்லாம் சேறா இருக்கே…அதுதான்…”
“பொய் சொல்லாதே…முகத்தில் பயமும் டென்ஷனும் டன் கணக்கா வழியுது”
“இன்னைக்கு பங்க்ஷன்ல நான் பாடணும்…ஆனா டிரஸ் எல்லாம் இப்படி…”
“ஸோ…வாட்?” என்று கேட்டவன் அழகாக ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க ஒரு நிமிடம் தன்னை மறந்து பார்த்தவள் டக்கென தலையை குனிந்து கொண்டாள்.
“எனக்கு தெரிஞ்சு பாடுறதுக்கு தேவை நல்ல குரல் வளம் மட்டும் தான்.இப்போ நீ சொல்லித் தான் தெரியுது டிரஸ் நல்லா இருந்தா தான் பாட முடியும்னு”அப்பட்டமான கேலி வழிந்தது அவன் குரலில்.
“என்னோட நிலைமையைப் பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்கா?”உதடு பிதுக்கி அழத் தயாரானாள் வானதி.
“பின்னே வேற என்ன செய்ய சொல்ற…உன்னோட திறமை நீ போட்டு இருக்கிற டிரஸ்ல இருக்குனு நீ இவ்வளவு உறுதியா நம்புறியே”என்று சொன்னவன் அவள் சிந்திக்க சில நிமிடங்கள் அவகாசம் கொடுத்தவன் தொடர்ந்து பேசினான்.

*****
மாலையில் சம்ஹார மூர்த்தியோடு வந்த பொழுது இதமாக இருந்த அதே சாலை,இப்பொழுது அந்த இருட்டு வேளையில் அரக்கத்தனமாக தோன்றி அவளை மிரட்டியது.கீழே விழுந்ததில் காலில் எங்கோ அவளுக்கு அடிபட்டு விட ,மீண்டும் எழுந்து ஓட முடியாமல் பயத்துடன் அப்படியே அமர்ந்து இருந்தாள் வானதி.
கொட்டும் மழை…இரவு நேரம்…ஆளில்லா பிரதேசம்…அவளுக்கு எதிரில் அதே சிவப்பு நிற கார்.
விர் விர் என்ற சத்தத்துடன் ஆக்சிலேட்டரை முறுக்கியபடி அந்தக் கார் எந்த நொடியும் அவள் மீது பாயத் தயாராக இருந்தது.
‘யார் இது? எதற்காக என்னைத் துரத்துகிறான்?என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்வானோ?ஒ…ஒருவேளை என்னைக் கடத்திக் கொண்டு போய் ஏதேனும் கும்பலிடம் விற்று விடுவானோ?’அவ்வபொழுது நாளேடுகளில் படித்த நிகழ்வுகள் அனைத்தும் அவள் கண் முன்னே வந்து போனது.
வானதியின் நெஞ்சம் அளவுக்கு அதிகமான வேகத்துடன் பட் பட்டென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.
கரண்ட் இல்லாததால் அவ்வபொழுது பளிச்சிடும் மின்னலின் உபயத்தினால் மட்டுமே அந்தக் காரை அவளால் பார்க்க முடிந்தது.சில நொடிகள் இடைவெளி விட்டு தெறித்த மின்னல்கள் தொடர்ந்து நான்கைந்து முறை மின்ன ஒவ்வொரு மின்னலுக்கும் அந்த காருக்கும் தனக்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பதை அவளால் உணர முடிந்தது.
‘இவ்வளவு தூரம் தன்னை துரத்தி வந்த கார் இப்பொழுது பின்னால் போவது ஏன்?’காரணம் புரியாமல் அவள் விழிக்க அந்த வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்கி வேகம் கூட்டுவது அவளுக்கு தெளிவாக கேட்டது.அந்த காருக்கும் அவளுக்கும் இருபதடி தூரம் இருக்கும் என்பதை ஓரளவிற்கு கணிக்க முடிந்தவளால் அடுத்து அவன் என்ன திட்டமிடுகிறான் என்பதை ஊகிக்க முடியவில்லை.
‘என்ன செய்யப் போகிறான்…மேலே ஏத்திக் கொல்லப் போகிறானோ?கடவுளே என்னைக் காப்பாற்று…சுந்தரேசன் அய்யாவை இனியொரு முறை பார்க்க முடியுமா…இதோ காரை எடுத்து விட்டான்.வேகமாக வருகிறது…என் மீது மோதப் போகிறது…அவ்வளவு தான்…முடிந்து விட்டது என் வாழ்க்கை’என்று எண்ணியபடி கண்களை இறுக மூடிக் கொண்டாள் வானதி.
சற்று நேரம் அந்த இடத்தில் அமைதி மட்டுமே நிலவ கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள் வானதி…அந்த கார் அவளுக்கு பத்தடி இடைவெளியில் நின்று கொண்டு இருந்தது. ‘அவ்வளவு வேகமாக வந்து இடையில் ஏன் நிறுத்த வேண்டும்’என்று அவள் யோசிக்கும் பொழுதே அந்த காரின் ஹெட்லைட் பளீரென்று கண்ணை கூச வைக்கும் ஒளியைக் கக்கியது.
அதுநேரம் வரை இருளுக்கு ஏற்ப தன்னுடைய கண்களை பழக்கி இருந்த வானதிக்கு இந்த தீடீர் வெளிச்சம் கண்களை கூச செய்ய அவளால் எதிரில் இருந்த காரையோ,அதை ஓட்டுபவனையோ தெளிவாக பார்க்கவே முடியவில்லை.கண்களை மூடி அந்த வெளிச்சத்திற்கு கண்களை பழக்க முயன்ற பொழுது மீண்டும் அந்த கார் அவளை இடிக்க வேகமாக வந்தது.
அவளுக்கும் காருக்கும் இடையில் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருக்கும் பொழுது அந்த கார் மீண்டும் ப்ரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
வானதிக்கு ஒன்றுமே புரியவில்லை.அவள் மீது காரை ஏற்ற வருவதும்,பின் ரிவர்ஸ் எடுத்து மீண்டும் அவளை பயமுறுத்துவதுமாக இருந்த அந்த கார்க்காரனின் நோக்கம் என்ன என்று அவளுக்கு புரியாவிட்டாலும் அதற்கு மேலும் அப்படியே இருக்காமல் அவன் பின்னால் ரிவர்ஸ் எடுத்த நேரம், அடிப்பட்ட காலுடன் ஓட முடியாமல் தட்டுத்தடுமாறி ஓட ஆரம்பித்தாள்.
ஓடிக் கொண்டே இருக்கும் பொழுது அவள் மனதில் ஒரு விஷயம் தோன்ற ஆரம்பித்தது.
‘ஒருவேளை இவன் ஒரு சைக்கோவோ…உடலில் ரத்தம் வழிந்து கொண்டே காயத்துடன் ஓட முடியாமல் பயத்துடன் நான் ஓடுவதைக் கண்டு ரசிக்கிறானோ’என்ற எண்ணம் அவளுக்கு தோன்றிய வேகத்தில் ஓடிக் கொண்டே அந்தக் காரை திரும்பிப் பார்க்க இருளடைந்த அந்த கார் அவளுக்கு திகிலை ஊட்டியதே தவிர அதிலிருந்து அவளால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
*****
“சா…சார்” தீனமான அவளது அந்தக் குரல் நிச்சயம் அவன் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே அவனது கை விரல்கள் ஒரே ஒரு நொடி தன்னுடைய வாசிப்பை நிறுத்தி, தன்னுடைய பேச்சு அவன் காதில் விழுந்ததை அவளுக்கு சொல்லாமல் சொல்லியது.
அவனுடைய அமைதி ஒரே நொடி தான். அடுத்த நொடி அவனது விரல்கள் முன்னைக் காட்டிலும் அதிக வேகத்துடன் அந்த பியானோவில் பயணித்தது. சற்று முன் மெல்லிய தென்றலைப் போல இதமாக ஒலித்த இசை இப்பொழுது வேகமாக நடந்து வரும் ஆயிரம் யானைகளின் நடை ஏற்படுத்தும் அதிர்வைக் காட்டிலும் அதிக அதிர்வை அவளுள் ஏற்படுத்தியது.
“சா…சார் யார் சார் நீங்க?”
“கடத்தினவனை மரியாதையா சார்ன்னு கூப்பிட்ட ஒரே ஆள் நீயாத் தான் இருப்ப” என்று அமர்த்தலான குரலில் சொன்னவன் வாசிப்பை நிறுத்தி விட்டு எழுந்து அவள் புறம் திரும்பி நின்றான்.
வெள்ளை நிற கோட் சூட்டின் பட்டனை ஸ்டைலாக போட்டபடி மென்குரலில் அவன் பேசிய கடின வார்த்தைகள் பொய்யோ என்று ஐயப்படும் வகையில் சிரித்த முகத்துடன் அவளை நோக்கித் திரும்பினான் அவன்.தீட்சண்யம் நிறைந்த கண்கள் அவளை ஊடுறுவும் பார்வையை செலுத்த, அவளிடம் இருந்து ஒரு கணம் கூட பார்வையை அவன் பிரித்தெடுக்கவில்லை.

****
“ஹே சில்லக்கா… ஆட்டை வெட்டுறதுக்கு முன்னாடி வரை அதுக்கு ராஜ உபச்சாரம் நடக்கும்னு நீ கேள்விப்பட்டது இல்லையா? அதே மாதிரி தான்…என்னோட காரியம் நடக்கிற வரை உன்னோட உயிரோட வச்சு இருப்பேன்.அதுக்கு அப்புறம்…” என்றவனின் பார்வையை பார்த்து பீதியில் உறைந்து போனாள் பெண்ணவள்.
“எ…என்னை வச்சு மிரட்டி அவர்கிட்டே ஏதாவது பணம் வாங்கப் போறியா?”
“பணமா?…நான் நினைச்சா உனக்கும் , அந்த மூர்த்திக்கும் சேர்த்து ஒரு விலை கொடுத்து வாங்க முடியும்.யாருக்கு வேணும் பணம்?”என்று இகழ்ச்சியாக உதட்டை பிதுக்கினான்.
அவளின் அதிர்ந்த பார்வையை கண்டு கொள்ளாது இண்டர்காமை எடுத்து யாரிடமோ ஏதோ புரியாத மொழியில் பேசினான்.
“சாப்பாடு கொண்டு வர சொல்லி இருக்கேன் …சாப்பிடு” என்றவன் சொல்லி வாய் மூடும் முன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே ஒரு வெள்ளைக்காரன் ட்ராலியில் உணவை மூடி எடுத்து வர, அதுநேரம் வரை உணவைப் பற்றி கவலைப்படாத வானதிக்கு பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.
‘இவனிடம் இருந்து இப்போதைக்கு தப்பிக்கவாவது தெம்பு வேண்டும்.அதற்கு கொஞ்சம் சாப்பிட்டு கொள்வது நல்லது’ என்று அவசர முடிவுக்கு வந்தவள் வேலையாள் வெளியே சென்றதும் சந்தேகமாக அவனைப் பார்த்தாள்.
“இந்த சாப்பாட்டில் எதுவும் கலந்து வச்சு இருக்கியா?”
“இதுவரை உனக்கு சாப்பாட்டில் விசம் வைத்துக் கொல்லனும்ன்னு நான் நினைக்கலை.நீ சொன்னதுக்கு அப்புறம் தான் தோணுது”என்று அவன் சொல்ல அவளுக்கு வாயைக் கொடுத்து தானே மாட்டிக் கொண்டோமோ என்று எண்ணத் தோன்றியது.
அவனது பேச்சை அசட்டை செய்து விட்டு வேகமாக உணவுத் தட்டைத் திறந்து பார்த்தவளின் முகம் அஷ்டகோணலாக மாறியது. அடுத்த நொடி வேகமாக வாஷ்பேசினுக்கு விழுந்தடித்துக் கொண்டு சென்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்காக கொண்டு வரப்பட்ட உணவு ஏதோ அழுகிப்போன மாமிசம்.அதன் மேலே புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்தது. வாந்தி எடுத்து முடித்தவுடன் தளர்ந்து போன உடலுடனும், மனதுடனும்,கண்களில் வெறுப்பை கக்கியவாறே அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“கண்டிப்பா நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட…”
“ஹ…நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க..இங்கே உன்னை கடத்திக்கிட்டு வந்து மூணு வேலையும் உனக்கு வயிறார சோறு போடுவேன்னு நினைச்சியா? இன்னைக்கு இது தான் உனக்கு சாப்பாடு…இஷ்டம் இருந்தா சாப்பிடு..இல்லாட்டி பட்டினி கிட…” என்று சொல்லி விட்டு அறையை விட்டு அவன் வெளியேற அவன் பரந்த முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.
*****

“நீ உள்ளே போ” என்றான் அவளைப் பார்த்து…
இரண்டு நாட்களாக அவளிடம் அவன் அடக்கி வாசிக்கும் தைரியத்தில் அந்த இடத்திலேயே அழுத்தமாக கால் ஊன்றி நின்றாள் வானதி. ‘எனக்குத் தெரிந்து தான் ஆக வேண்டும். நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்’ என்று சொல்லாமல் சொல்வது போல…
மெதுவாக அவள் புறம் திரும்பி பார்த்தான் ஈஸ்வர். அவளின் செய்கைக்கான காரணத்தை உணர்ந்து கொண்டவனின் முகத்தில் மெல்லிய புன்சிரிப்பு… அவனது அந்த ஒற்றைச் சிரிப்பிலேயே அவளது தைரியம் எங்கோ ஓடிப்போய் ஒளிந்து கொண்டது.
‘மூர்த்திக்குத் தான் என்னைப் பத்தி தெரியாது..உனக்குமா தெரியாது” என்றே அதே உதட்டில் உறைந்த புன்னகையுடன் லேசாக தாடையை தடவியபடி அவன் கேட்க இருளிலும் பளபளத்த அவனது கண்கள் ஆரம்ப கால ஈஸ்வரை நினைவுபடுத்த அவளையும் அறியாமல் அவள் கால்கள் பின்னோக்கி செல்லத் தொடங்கியது.

*****
சட்டென்று ஏதோ கோளாறு காரணமாக ஒலித்துக் கொண்டு இருந்த பாடல் நின்று விட அவன் முகத்தில் அமைதி தொலைத்த பாவனை.பாடல் நின்று விட்டால் அங்கே இருந்த ‘பிரபல’ பாடகி வானதிக்கு பொறுக்குமா? அதீத ஆர்வக் கோளாறின் காரணமாக தான் இருக்கும் இடம் மறந்து , நிலை மறந்து தன்னுடைய குரலை சரி செய்து கொண்டு பாடத் தொடங்கினாள்.

‘பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்’

என்று அவள் தன்னை மறந்து கண்களை மூடி ரசித்துப் பாடிக் கொண்டு இருக்க இங்கே ஈஸ்வரின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை கவனிக்கத் தவறி விட்டாள் வானதி.
“போதும்….நிறுத்து”என்று ஆங்காரத்துடன் கத்தியபடி ருத்ர மூர்த்தியாக தனக்கு எதிரில் நின்றவனைப் பார்த்து மலங்க மலங்க விரித்தாள் வானதி.அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்தவன் வெறியோடு அவளை நோக்கி வந்தான்.
“இனியொரு முறை நீ பாடினே…இந்த கண்ணாடியை அப்படியே உன்னோட தொண்டையில் சொருகிடுவேன்…”என்று கர்ஜித்தவன் அவளின் மிரட்சியான பாவனையை அசட்டை செய்து விட்டு அங்கிருந்து புயலென கிளம்பி வெளியே சென்று விட்டான்.

புத்தகத்தை வாங்க:

priya nilayam
51,Gowdiamuttroad ,
near ponnusamy hotel,
Royapettah, Chennai
Phone number: 9444462284

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here