தீரா மயக்கம் தாராயோ இறுதி அத்தியாயம்

0
1180

படபடப்பு குறையாமல் பரபரப்பாய் தனது காரை காவல் நிலையத்திற்கு செலுத்தினான், முகுந்த். ‘புவியரசன், நேரம் பார்த்து கழுத்த அறுக்கரியா? நல்லவனா மாறிட்டான், இனி என்ன செய்வான்னு தானே ஆட்டம் ஆடற. உன்னை முதல்ல தூக்குறேன் டா’ என்று வஞ்சனையின்றி வஞ்சம் கொண்டான்.

அதற்குள்ளாக விக்கியிடமிருந்து கைபேசியில் அழைப்பு வர, அதனை ஏற்றவன், “என்ன? நல்லவன் மாதிரி நீயும், உன் ப்ரெண்டும் காலையில கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதிட்டு, ராத்திரி ஆப்பு வைக்கறீங்களா? டேய் உங்களுக்கு…”, அவன் கூறி முடிப்பதற்குள், “இங்க பாருங்க முகுந்த், பிரச்சனை இப்போ வேற ரூபத்தில போயிட்டு இருக்கு. நீங்க சவால் விடவும் நான் கோபப்படவும் நேரமில்லை. தயவுசெஞ்சு கமிஷனர் ஆபீஸ் பின்புறமா வாங்க. ஆபிஸ் வாசல்ல மீடியா ஆளுங்க நிக்கறாங்க, உங்க சேனலையும் சேர்த்து” என்று உள்ளதைக் கூறினான், விக்கி.
“டேய்…” என்று வெறி கொண்டு முகுந்த் கத்த, அதற்குள்ளாக அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. வேறு வழியின்றி கமிஷனர் அலுவலகத்தின் பின்புறமாகச் சென்று காரை நிறுத்திவிட்டு, அங்கு காத்திருந்த விக்கயுடன் உள்ளே சென்றான். கமிஷனரிடம் நேரே சென்றவன், “என்ன சார் இது? என்ன பிரச்சனை? உண்மையிலேயே என்ன நடந்தது? அக்யூஸேஷன் என்னனு எதுவுமே சொல்லாம அதுக்குள்ள மீடியாவுக்கு போயிருக்கீங்க?” என்று சீறினான்.
“முதல்ல உட்காருங்க மிஸ்டர் முகுந்த்.”
“இன்னைக்கு காலைல தான் எனக்கு கல்யாணம் ஆயிருக்கு. என் குடும்பத்தில என்ன பிரச்சனைன்னு தவிச்சிட்டு இருக்காங்க. அதுக்குள்ள மீடியாக்காரர்கள் கண்டபடி கண்ட நியூஸ் போடறத பார்த்துட்டு போன் மேல போன் எனக்கு வந்துட்டே இருக்கு. என்ன சார் நினைச்சுட்டு இருக்கீங்க?”
“எல்லாத்தையும் எங்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாங்க முயற்சி செஞ்சுட்டு தான் இருக்கோம். நீங்க கொஞ்சம் விசாரணைக்கு ஒத்துழைக்கணும். முதல்ல உட்காருங்க” என்று ஒருவாறு அவனை ஆசுவாசப்படுத்தி அமரச் செய்த கமிஷனர், “இங்கே பாருங்க முகுந்த், உங்க கல்யாண பார்ட்டில போதைப் பொருள் பரிவர்த்தனை நடந்திருக்கு. கல்யாணத்துக்கு கெஸ்ட்டா வந்த எங்க டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த மற்றொரு அசிஸ்டென்ட் கமிஷனர் அதை மோப்பம் பிடிச்சிருக்காரு. சந்தேகத்தின் பேரில் ஒருத்தன மட்டும் யாருக்கும் தெரியாம விசாரணைனு சொல்லி கூட்டிட்டு வந்து ரெண்டு தட்டு தட்டினதுல ரொம்ப நாளா உங்க கம்பெனில வேலை செய்ற சிலரோட உதவியால போதைப்பொருள் பதுக்கி வைக்கவும், கை மாற்றி விடவும் உங்க வளாகம் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கு, சார்”
“சார் நாங்க ஒரு நேஷனல் சேனல்.”
“எக்ஸாக்ட்லி. உங்க சேனல் குறைஞ்ச நாள்ல ரொம்ப பெருசா வளர்ந்துடுச்சு. உங்க இடத்துல சில விஷயங்கள் நடந்தா யாருக்கும் சந்தேகம் வராதுனு நினைச்சு உங்க ஆளுங்கல கைக்குள்ள போட்டு இதெல்லாம் செஞ்சிருக்காங்க.”
“அப்படி எப்படி சார் கோடிக்கோடியாய் சரக்கு உள்ளே கொண்டுவர முடியும்?”
“கோடி கோடியா உள்ள கொண்டு வரல. ஐம்பதாயிரம், ஒரு லட்சம் பெறுமானமுள்ள டீலிங் மட்டும்தான் நடந்திருக்கு” என்ற கமிஷனரை கோபமும், குழப்பமுமாய் முகுந்த் நோக்க, “நீங்க யோசிக்கறத தான் நாங்களும் யோசிக்கறோம். நாங்க இந்த விஷயத்தைப் பத்தி ஒரு தெளிவுக்கு வரதுக்குள்ள மீடியாக்கு நியூஸ் போயிருக்கு. அத்தனை சேனலும் இங்க வந்து இருக்காங்க. இதற்கு காரணமானவங்க யாருனு தெரியல. இவ்வளவு பெரிய பரபரப்பு எல்லாருடைய கவனத்தையும் திசை திருப்புவதற்காக நடக்குதுன்னு தோணுது.”
“என்ன சார் நீங்க, தமிழ் சினிமால வர்ற போலீஸ் கமிஷனர் மாதிரி என்னென்னமோ சொல்றீங்க?!”
“மிஸ்டர் முகுந்த், நான் உங்ககிட்ட கேட்கிறதெல்லாம் ஃபுல் கோ-ஆப்ரேஷன். எங்களுக்கு தேவைப்படுற விவரங்களை நீங்க சொல்லணும். இதை நாங்க ப்ராப்பர் வாரண்ட் வாங்கி செய்திருக்க முடியும். ஆனா, நீங்க ஒரு வி.ஐ.பி.ங்கற ஒரே காரணத்துக்காக இதை லீகலா நாங்க கையாளல. உங்களுக்கு முழு பாதுகாப்பையும் நாங்க தரோம். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு உண்டு. உங்களுடைய வீடு, சேனல் ஆபிஸ்னு எல்லா இடத்திலேயும் போலீஸ் செக்யூரிட்டி போட்டாச்சு. நீங்க எதை நினைச்சும் பயப்பட வேண்டாம்” என்று கமிஷனர் கூறி முடிக்க, மகிழ்வேந்தன் அவ்விடம் வந்து சேர்ந்தான்.

முகுந்தனை முறைத்தபடி கமிஷனரின் எதிரே வந்தமர்ந்தான், மகிழ்வேந்தன்.
“மிஸ்டர் மகிழ்வேந்தன், உங்க சேனல் ஆபீஸ்ல நடந்த கொலை வழக்கு தொடர்பாக உங்களை வரவழைச்சிருக்கோம். அந்த மர்டர் கேஸ்ல சம்மந்தப்பட்ட குற்றவாளிய நாங்க சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம். எங்களுக்குத் தேவையான சில விவரங்களை நீங்க கொடுக்கணும்.”
கமிஷனர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்த முகுந்த், ‘இவனுக்கு என்ன பிரச்சனை?!’ என்று யோசனையாய் அமர்ந்திருக்க, அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரோடு முகுந்தனை முறைத்தபடி கலந்துரையாடல் அறைக்குள் சென்றான், மகிழ்வேந்தன்.

நீர் பருகி தன்னை சற்று சமன் செய்து கொண்ட முகுந்த் சற்றே பரபரப்புகள் ஓய்ந்து அமைதியானான்.
“புவியரசன் எங்க?” என்று கமிஷனர் விக்கியை வினவ,
“அவருடைய மனைவி திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க. அதான்…” என்று விக்கி நீட்டி முழக்க,
“வாட்? எவ்வளவு பெரிய விஷயம் இங்க நடந்துட்டு இருக்கு…” என்று எரிந்து விழுந்து கமிஷனர், சுதாரித்துக்கொண்டு, “இஸ் எனிதிங் சீரியஸ்?” என்றார். விக்கி பதில் கூறும் முன், “நத்திங் சீரியஸ் சார்…” என்றபடியே கமிஷனரின் எதிரே வந்து நின்றான், புவியரசன்.

மற்றொரு கலந்துரையாடல் அறைக்குள் முகுந்தை அழைத்துச்சென்று அமரச் செய்தனர் புவியும், விக்கியும். அவர்கள் இருவரையும் கண்டு நக்கலாய் சிரித்த முகுந்த், “என்னப்பா, என்ன ஸ்கெட்ச் போட்டு இருக்கீங்க? வெளியே மீடியா குவிஞ்சு கிடக்கு. என்ன பிளான்?” என்றான் இருவரையும் நோக்கியபடி.
“தம்பி முகுந்தா, உன்னை தூக்கணும்னு நான் நினைச்சிருந்தா பாரீஸ்லேயே உன் கதையை முடிச்சு, கையோட ஸெயின் நதிக்கரையில எள்ளும் தண்ணியும் தெளிச்சுட்டு வந்து இருப்பேன். ஆனா அது என் இண்டென்ஷன் இல்லை. நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. கார்த்திக் எங்க?”
அசராமல் அவனை பார்த்திருந்தான், புவி.
“கார்த்திக்கா… இன்னைக்கு தானே அவனுக்கும் என் தங்கைக்கும் கல்யாணம் ஆச்சு?!”
“ஆமாம்… காலைல உன் தங்கச்சிக்கு தாலி கட்டினான். மதியானம் புது பொண்டாட்டி கூட சேர்ந்து பாயசமும், வடையும் சாப்பிட்டான். சாயங்காலம் ரிசப்ஷன்ல குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடினான். ராத்திரி எங்க போனான்?”
“என்ன? ஹே புவியரசன், என்ன விளையாடறியா? என்னாச்சு கார்த்திக்கு? அவன எங்க ஒளிச்சு வச்சிருக்க? அவனுக்கு ஏதாவது ஆச்சு நான் உன்னை சும்மா விடமாட்டேன்.”
கண்களில் கோபம் பொங்க, ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டினான், முகுந்த்.
“தலைக்கு தில்ல பார்த்தியா புவி… கமிஷனர் ஆபிஸ்ல உட்கார்ந்துகிட்டு நம்மளையே மிரட்றாரு…”
விக்கி கூறியதைக் கேட்டு வாய்விட்டு புவி சிரிக்க, உடன் சேர்ந்துகொண்டான், விக்கி.

“இங்க பாரு முகுந்த், கடைசியா அவன் அவனுடைய மனைவி சத்யாவை கூட்டிட்டு பக்கத்துல இருக்கற கோயிலுக்கு போறதா சொல்லி, உங்க சித்தி வீட்டிலிருந்து கிளம்பியிருக்கான். அவன் எங்க போனான்னு தெரியலை.”
“எங்க போனான்னு தெரியலனா போய் தேடுங்கடா… இங்க உக்காந்து என்கிட்ட கேட்டா என்ன அர்த்தம்? அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உங்க ரெண்டு பேரையும்…”
“ஹே முகுந்த் தயவு செஞ்சு தேஞ்ச ரெகார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்காத. கார்த்திக்கோட கார் ‘மகிழ்’ சேனலோட ஹெட் ஆஃபீஸ் கிட்ட நின்னுட்டு இருந்தத எங்க டிபார்ட்மெண்ட்ல சீஸ் பண்ணிட்டாங்க. ஹெட் ஆஃபீஸ் கார்பேஜ்(Garbage) ஏரியா கிட்ட அந்த சேனல்ல வேலை பாக்குற ஒரு ரிப்போர்ட்டர யாரோ கொலை பண்ணி அங்க வீசியிருக்காங்க. இறந்துபோன ரிப்போர்ட்டரும் இந்த கார்த்திக்கும் நல்ல நண்பர்கள். அதுக்கான ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு. சோ கார்த்திக் எங்க முகுந்த்? எதிர் சேனல்ல வேலை செய்த தன்னுடைய நண்பனை கார்த்திக் எதுக்காக கொன்னான்? உங்க தங்கை சத்யா எங்க?”
புவியரசன் கூறியதனைத்தையும் கேட்டு ஸ்தம்பித்து நின்றான், முகுந்த். எதிரே எவன் நின்றபோதும் துணையாய் கார்த்திக் இருக்கும் தைரியத்தில் இத்தனை ஆண்டுகள் தனது திமிர் சற்றும் குறையாது மிடுக்கோடு வலம்வந்த முகுந்த், முதல் முறை உடல் நடுங்க, கண்கள் கலங்கினான்.
“புவியரசன், உனக்கு என் மேல கோவம்னா என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. உனக்கு என்னை சுடணுமா, இதோ இப்ப இங்க என்னை சுட்டுத் தள்ளு. பரவால்ல… அதுக்காக என்ன சுத்தி இருக்கறவங்கள டார்கெட் பண்ணாத. என் கார்த்தி என்னை விட ரொம்ப நல்லவன். அவன் எந்தத் தப்பும் பண்ணியிருக்க மாட்டான். அவனை…”
அதற்குமேல் பேசமுடியாமல் தொண்டை அடைத்து குரல் கம்மி அமர்ந்தான், முகுந்த். வாழ்வில் முதல் முறை தனது ஆணவத்தைக் கழற்றி வைத்துவிட்டு புவியிடம் தனது ஆருயிர் நண்பனுக்காக மன்றாடினான்.
“திரும்பவும் சொல்றேன், பிரச்சனை கொஞ்சம் சீரியஸ். நீ நினைக்கிற மாதிரி பழி வாங்க’னு சொல்லிக்கிட்டு இப்படி தர்ட் க்ரேட் காரியம் எல்லாம் நான் பண்ண மாட்டேன். கார்த்திக் எங்கே இருப்பான்னு மட்டும் சொல்லு.”
“சத்தியமா எனக்குத் தெரியல புவியரசன். நீ போன் பண்ணதும் அடுத்து அவனுக்கு தான் கால் பண்ணேன். ஆனா ஸ்விட்ச் ஆஃப்’னு வந்தது. அவனும் என்னை மாதிரி இன்னைக்குத்தானே கல்யாணம் ஆகி வாழ்க்கையை தொடங்கினான். அதனால என்னோட பிரச்சனைய தனியாவே சமாளிப்போம் அவன் கிட்ட கொண்டு போக வேணாம்னு நெனச்சு அவன காண்டாக்ட் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணி நான் இங்க வந்துட்டேன்.”
“திஸ் இஸ் கெட்டிங் சீரியஸ் புவி” என்று விக்கி கூற, “சம்திங் ஃபிஷி” என்ற புவி, “சரி முகுந்த் நாங்க சீக்கிரம் கார்த்திக்கை கண்டுபிடிக்கறோம்” என்ற புவி, முகுந்தை அறையில் தனிமையில் விட்டுவிட்டு, விக்கியுடன் தனது இருக்கைக்குச் சென்றான்.

முகுந்திடம் பேசிவிட்டு தனது இருக்கைக்கு வந்த புவி அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விக்கியோடு ஆலோசிக்கத் தொடங்கினான். மகிழ்வேந்தனை விசாரித்த காவல்துறை ஆய்வாளர் புவியரசனிடம் பரபரப்பு குறையாமல் வந்து நின்றார்.
“புவி சார், கொலை செய்யப்பட்ட ரிப்போர்ட்டரோட லேப்டாப் மற்றும் மொபைல் போன் மிஸ்ஸிங். இப்ப ஹெட் கான்ஸ்டபிள் சொன்ன தகவல் படி அந்த ரிப்போர்ட்டரோட வீட்ல யாரோ நுழைஞ்சு எதையோ தீவிரமா தேடியிருக்காங்க.”
“அங்க பாதுகாப்புக்கு இரண்டு கான்ஸ்டபிள்கள் நிறுத்தி வைக்கலயா?”
“அந்த ரிப்போர்ட்டரோட பாடிய போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு அவரோட வீட்டுக்கு கான்ஸ்டபிள் போறதுக்குள்ள எல்லாமே தலைகீழா இருந்திருக்கு.”
“அவங்க வீட்ல இருக்கிறவங்க?”
“இந்த பையன் தனியா இங்கே ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்ட வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கான். வீட்டில வேற யாரும் இல்லை. அவனுடைய அம்மாவும், அப்பாவும் ஊர்ல இருக்காங்க.”
“மொபைல், லேப்டாப் மிஸ்ஸிங்?!” என்று விக்கி புருவத்தை சுருக்கி யோசிக்க, “உடனே ஸ்பாட்டுக்கு போலாம்” என்று அவனை அழைத்துக் கொண்டு கொலை செய்யப்பட்ட மகிழ் தொலைக்காட்சியின் நிருபனின் இல்லத்திற்கு விரைந்தான், புவி. வரவேற்பறையில் இருந்த மூன்று பிளாஸ்டிக் சேர்கள் உருண்டு இருந்தன. ஒற்றைப் படுக்கை அறையின் உள்ளே இருந்த இரும்பு கட்டிலின் மேல் இருந்த மெத்தையும், மெத்தை விரிப்பும் பாதி தரையில் தள்ளிவிடப்பட்டிருந்தன. அலமாரி திறக்கப்பட்டு துணிமணிகள் அனைத்தும் கலைக்கப்பட்டு கிடந்தன. புத்தக அலமாரியில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் பிரித்துப்பார்க்கப்பட்டு தரையில் வீசப்பட்டு இருந்தன. கிச்சனுள் ஒன்றிரண்டு பாத்திரங்களும், குப்பையில் எறிய மறந்த உணவு பொட்டலங்களும், சில பீர் பாட்டில்களும் கிடந்தன. மூலையில் மூன்று அடி உயர, நீல நிற பிளாஸ்டிக் நீர் தொட்டி ஒன்று கருப்பு மூடிபோட்டு நின்றிருந்தது. அதனைத் திறந்து உள்ளே எட்டிப்பார்த்த புவி, நிறைந்திருந்த தண்ணீரைக் கண்டு மீண்டும் அதனை மூடிவிட்டு வெளியே வந்தான்.

அதிகாலை புலர்ந்திருந்த நிலையில் தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மக்கள் நடமாட்டம் தென்பட்டது.
“என்ன சார் நடக்குது இங்க?” என்று புவியரசனை வழிமறித்தார் ஒருவர்.
“நீங்க யாரு?” என்று புவி வினவ,
“நான் இந்த அப்பார்ட்மெண்ட்டோட மெயிண்ட்டெனன்ஸ் இன் சார்ஜ். என்ன விஷயம் சார்?” என்றார் கேள்வியாய்.
“டிவி பாக்கலையா?” என்றான் விக்கி.
“இல்ல சார், வீட்ல எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க…”
“அப்ப நீங்க தூங்காம என்ன பண்றீங்க சார்?”
“லாரி தண்ணி வரும் சார். நாங்க சம்ப்ப நிரப்பி, மோட்டார் போட்டு டேங்க்ல ஏத்தணும். வாரத்துல ரெண்டு நாள் லாரி தண்ணீர் வாங்க வேண்டியதா இருக்கு. சிட்டில இருக்கோம்னு தான் பேரு, தண்ணி இல்லாம ரொம்ப அவஸ்தைப்பட வேண்டியதா இருக்கு” என்று அவர் புலம்பிக் கொண்டிருக்க, அதற்குள்ளாக தண்ணீர் லாரியும் வந்தது, விசாரித்துக் கொண்டிருந்தவரின் கவனமும் திரும்பியது.

வாயிலில் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம், “கொஞ்சம் கவனமா பார்த்துகோங்க. ஏதோ அந்தப் பையன் கிட்ட முக்கியமான ஆதாரம் இருந்திருக்கனும். அதற்காகத்தான் அவனை கொலை பண்ற அளவுக்கு துணிஞ்சிருக்காங்க” என்று விக்கி கூறிக்கொண்டிருக்க, புவியின் கவனமோ டேங்கர் லாரியிலும், நீர் தொட்டியிலும் நிலைத்திருந்தது. ஏதோ யோசனை வந்தவனாய் வேகமாய் ஓடோடிச் சென்று அந்த நிருபனின் வீட்டிற்குள் நுழைந்தான். ஒன்றும் புரியாமல் விரைந்து வந்த விக்கி, “என்ன ஆச்சு?” என்று புவியைக் கேட்க, அவனோ அந்த நீர் தொட்டியின் முன் மண்டியிட்டு அதனை விரல்களால் மெல்ல வருடினான்.
“இதுக்கு கீழ என்னமோ இருக்கு” என்று புவி கூற,
“தரையில நிக்க வச்சு இருக்கிற வாட்டர் டேங்க் கீழே என்ன இருக்கும்?” என்று விக்கி வினவ,
“சொல்றேன்… வந்து அந்தப் பக்கம் பிடி” என்றான் புவி.
இருவருமாகச் சேர்ந்து அந்த நீர் தொட்டியைத் தூக்கி, கீழே இறக்கி வைக்க, தரையிலிருந்து அரையடி உயர தொட்டியின் பகுதி அவ்விடத்திலேயே இருக்க, மீதம் மட்டும் நீர் நிறைந்திருந்த தொட்டியாய் பிரிந்து வந்தது. அந்தக் கீழ்ப்பகுதியை பிரித்துப் பார்த்த புவியரசன், ஒரு ஹார்ட் டிஸ்க்கும், செய்தித்தாளில் வெட்டப்பட்ட சில செய்திச்சுருக்கங்களும், சில காகிதங்களும், புகைப்படங்களும் இருப்பதைக்கண்டு முறுவல் சிந்தினான்.
“கேச அல்மோஸ்ட் முடிச்சிட்டோம் விக்கி” என்ற புவி, அதற்குமேல் தாமதிக்காது உடனே அலுவலகத்திற்கு விரைந்தான்.

“எப்படி உனக்கு தோணுச்சு அங்க ஏதாவது இருக்குமோனு?”
நண்பனை அதிசயித்து வினவினான், விக்கி.
“அது ஒன்னுமில்ல விக்கி. தொட்டியோட உயரத்தை வைச்சு பார்க்கும்போது உள்ளே இருந்த நீர் அளவு கம்மியா இருந்த மாதிரி தோணுச்சு. தொட்டிக்குள்ள எட்டிப் பார்க்கும் போது அடிப்பகுதி அகலமாய் இருந்தது. ஆனா வெளியிலிருந்து பார்க்கும்போது தொட்டியினுடைய அடிப்பகுதி ரொம்ப குறுகலாக இருந்தது. விரலால தொட்டிய தடவிப்பார்க்கும் போது தான் ஒரு சன்னமான ஜாயிண்ட் தட்டுப்பட்டது. யார் பார்த்தாலும் அது வெறும் வாட்டர் டேங்க்னு நெனச்சு அதை பத்தி பெருசா யோசிச்சிருக்க மாட்டாங்க. அவன் அதனாலதான் புத்திசாலித்தனமா இப்படி ஒரு ஏற்பாடு பண்ணி, இந்த எவிடன்ஸ மறைச்சு வச்சிருக்கான். ஏதோ ரொம்ப பெரிய விஷயத்துல அவன் கை வச்சிருக்கான். அது அவன் உயிரை வாங்குற அளவுக்கு போயிருக்கு. போலீஸ் அங்க போறதுக்குள்ள இவனை கொலை பண்ணவங்க வீட்டை முழுசா அலசி தேடியிருக்காங்க. பாவம் எதுவும் கிடைக்கல…”

அலுவலகத்திற்கு வந்தவன் ஸ்ருதியை அழைத்து அவளது நலம் விசாரித்துவிட்டு, அவளை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு தனது பணியில் மீண்டும் மூழ்கினான். எடுத்துவந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினான். அதிலிருந்த செய்தித்தாளில் இருந்து வெட்டப்பட்டு, சேகரிக்கப்பட்ட செய்திகள் தொகுப்பை ஒன்றுவிடாமல் வாசித்தான். ஹார்ட் டிஸ்கில் இருந்த ஆவணங்களை பிரித்துப் பார்த்தான். மற்றொரு கவரில் இருந்த போட்டோக்களையும் எடுத்து ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்தான். திடுக்கிடும் பல தகவல்கள் கிடைக்கப் பெற்று அதிர்ந்து போனவன், அவசரஅவசரமாக கமிஷனரிடம் சென்றான்.

ஒருபுறம் கார்த்திக், சத்தியாவின் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்க, தன்னைச் சுற்றி நடப்பது என்னவென்று அறியாமல் முகுந்த் தவித்திருக்க, மகிழ்வேந்தன் கோபத்தில் கனன்று கொண்டிருக்க, மணம் முடிந்தும் நிம்மதி இன்றி தவித்திருந்தாள், மிருதுளா.

புவியரசு கொண்டுவந்திருந்த ஆதாரங்களைக் கண்டு மனமகிழ்ந்து உரக்கச் சிரித்தார் கமிஷனர்.
“வெல்டன் புவி வெல்டன்!!” என்று உளமார பாராட்டினார்.
“கரை வேட்டி கட்டியிருக்கற மிதப்பில திரிஞ்ச அந்த மினிஸ்டரோட வேட்டியை உருவருத்துக்கான நேரம் வந்துடுச்சு சார்” என்று புவி கூற,
“இதற்காகத்தான் காத்திருந்தேன் புவியரசன். போலீஸ்காரர்களைப் பற்றி ரொம்பத் தவறா பேசினான். இவன் நல்லவனா வேஷம் போட்டு பண்ணாத அக்கிரமம் கிடையாது. ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’னு தெரியாமலா சொன்னாங்க?! இன்னைக்கு வசமா மாட்டியிருக்கான். இதோட அவனுக்கும், அவனுடைய அரசியல் வாழ்க்கைக்கும் அஸ்த்தமனம். ரிட்டையர்மென்ட் வரதுக்குள்ள அவனை ஒரு வழி பண்ணனும்னு நெனச்சேன். உன்னால அது நடந்திருக்கு. வெல்டன் புவியரசன்!!” என்று மீண்டும் பாராட்டினார் கமிஷனர்.

கொலை செய்யப்பட்ட நிருபனின் பிரேத பரிசோதனை முடிந்து விட்டதாக தகவல் வர, அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர் புவியரசும், விக்கியும்.
“டாக்டர் இது மர்டரா?”
“ஆமாம், ஒரு கயிறு கொண்டு அவருடைய கழுத்தை இறுக்கி கொன்னிருக்காங்க.”
“வேறு ஏதேனும் காயங்கள் இருக்கா?”
“வேற எந்த காயமும் இல்லை. சிறு கீறல் கூட இல்லை” என்ற மருத்துவருக்கு நன்றி கூறி விட்டு ஆவணங்களை வாங்கிக்கொண்டான் புவி.

விஷயம் அறிந்து ஊரிலிருந்து வந்து சேர்ந்தனர் இறந்த நிருபனின் பெற்றோர். அவர்கள் கலங்குவதைக் கண்டு உள்ளம் வருந்தியவன், பெற்றோர் இன்றி தவிக்கும் தன்னையும், துரதிருஷ்டவசமாக பெற்றோரை இழந்து, வாழ்க்கை திசைமாறி, மனம் மரித்து இருந்த ஸ்ருதியையும் எண்ணிக்கொண்டான். அவனே முன்னின்று இறந்த நிருபனின் உடலை பெற்று, ஆம்புலன்ஸ் ஒன்றினை ஏற்பாடு செய்து, மகனை இழந்து தவித்திருந்த பெற்றோரை அவர்களது ஊருக்கு அனுப்பிவிட்டு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான்.

அவனை அழைத்த கமிஷனர்,
“நான் மும்பை போலீஸ்க்கு கன்ஃபார்ம் பண்ணிட்டேன். இன்னைக்கு ராத்திரி நீங்க மும்பைல இருக்கணும்” என்று கமிஷனர் கூற தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான், புவி. மணி இரண்டு என்று காட்டியது. அவனது கைப்பேசி அடிக்க, அதில் ஸ்ருதியின் பெயரைக் கண்டவன் அழைப்பினை ஏற்காது துண்டித்தான். அதனைப் பார்த்த விக்கி புவியின் மனக்கவலையை புரிந்துகொண்டு, “சார் நீங்க தப்பா நினைக்கலேனா நான் மும்பைக்கு போகட்டுமா? ஏன்னா புவியோடு மனைவி கொஞ்சம் உடம்பு சரி இல்லாம இருக்காங்க” என்றான்கமிஷனரிடம்.
“வாட்? என்ன காரணம் இது?” என்று கமிஷனர் கூற,
“இல்ல சார், அவங்க தனியா இருக்காங்க. அவங்களுக்கு துணைக்கு இருந்தவங்களும் இப்போ ஊருக்குப் போயிருக்காங்க. சோ அவங்களுக்கு ஏதாவது உடனடி தேவைனா புவி தான் அவங்கள பார்க்கிற மாதிரி வரும். அதுவுமில்லாம நம்ம கஸ்டடியில இப்ப முகுந்தும், மகிழ்வேந்தனும் இருக்காங்க. அவங்க ரெண்டு பேருமே சொசைட்டில விஐபி. இந்த நேரத்தில் புவி இங்க இருக்கறதுதான் சரினு எனக்கு தோணுது” என்று விக்கி கூற, அவன் கூறுவதும் சரியே என்று உணர்த்த கமிஷனர் உடனே விக்கியை மும்பைக்கு கிளம்பும் படி பணித்தார். விக்கியும் தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் விமான நிலையத்தை அடைந்திருந்தான்.

மகிழ்வேந்தனும், முகுந்தும், விசாரணை முடிந்து தத்தம் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மீடியாவின் அலப்பறையும் கமிஷனர் அலுவலக வாயிலில் சற்றே அடங்கியிருந்தது.

Epi – 2

ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த இளம்பெண்களை மும்பை துறைமுகம் வழியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக கடத்தி வரப் போவதாக மகிழ் சேனல் நிருபன் வைத்திருந்த சாட்சியங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு, மும்பை துறைமுகம் காவல்துறையினரால் பலமாய் கண்காணிக்கப்பட்டது. நள்ளிரவு நெருங்கியும் காவல்துறையினர் சந்தேகித்தது போல் எதுவும் நடக்கவில்லை.

“என்ன விக்கி சொல்ற? நல்ல தரவா செக் பண்ணீங்களா?”
“மும்பை போலீஸ்க்கு மட்டுமில்ல, கோஸ்ட் காட்’க்கும் சொல்லியாச்சு புவி. அந்த மாதிரி எதுவுமே நடக்கல. நடக்கறத்துக்கான அறிகுறியும் இல்லை. ஒரே குழப்பமா இருக்கு புவி.”
புவியரசன் மௌனமாய் யோசித்துக் கொண்டிருக்க, “இன்னொரு சந்தேகமும் இருக்கு புவி” என்றான் விக்கி, கைபேசியில்.
“என்ன விக்கி?”
“மும்பையில இப்படி ஒரு விஷயம் நடக்கப்போகுதுனா அதுக்கு சென்னையில எதுக்கு போலீஸோட கவனத்தை திசை திருப்பும் வேலை எல்லாம் நடக்குது?”
“எனக்கும் இந்த எண்ணம் வந்தது விக்கி. ஆனா, அவனுடைய ஆதாரங்கள வச்சு பார்க்கும் போது…”
“கரெக்ட் புவி. ஆதாரத்தை எல்லாம் வச்சு பார்க்கும்போது நிச்சயம் மும்பையில ஏதோ ஒரு விஷயம் இந்நேரம் நடந்திருக்கணும். ஆனா, நடக்கல. அந்த ரிப்போர்ட்டருக்கு இந்த விஷயம் தெரியவந்ததால் தான் அவன் கொல்லப்பட்டிருக்கான். அவன் கொல்லப்பட்டிருக்கான்னா அந்த கிரிமினல்ஸ் அலெர்ட் ஆயிட்டாங்கனு தானே அர்த்தம்? அப்போ அவங்க போட்ட பிளான் நடக்க 50-50 வாய்ப்பு தானே இருக்கு? இதுக்கு மாற்று பிளான் ஒன்னு நிச்சயம் வச்சிருப்பாங்க. இவ்வளவு பெரிய தப்பு செய்றவங்க நாசுக்கா செய்யறதுக்கு எத்தனை பிளான் வச்சிருப்பாங்க?! நம்ம எக்ஸ்பீரியன்ஸ்ல பார்க்காததா புவி?”
“ஆமாம், விக்கி. சரி நீ எதுக்கும் அலெர்ட்டா இரு” என்றவன் அழைப்பினை துண்டித்துவிட்டு மீண்டும் அந்த ஆதாரங்களை அலசினான். குற்றவாளிகளால் ‘ஆப்பரேஷன் பிரின்செஸ்’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த கடத்தல் நிகழாமல் இருப்பதற்கான பின்னணியை யோசித்திருந்தான்.

ஏதோ உந்த, விரைவாக சென்னைத் துறைமுகத்திற்கு விரைந்தான் புவியரசன். அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பலில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். தூரத்தில் கஸ்டம்ஸ் ஆபீஸர் ஒருவருடன், ஒருவன் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தான். கட்டைகளால் ஆன பெட்டிகள் ஒரு இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பலவகை கண்டைனர்களும், ஏற்றுமதி பொருட்களும் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கே எவ்வித சலனமும் அவனுக்கு தோன்றவில்லை. வண்டியை திருப்பிக்கொண்டு வர நினைத்தவனுக்கு ஏதோ பொறி தட்ட திரும்பி கப்பலின் பெயரைக் கண்டான். அதில் ‘பிரின்செஸ்’ என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தையைக் கண்டதும் அவசரமாக கமிஷனரை அழைத்தான்.

இறந்த நிருபன் வைத்திருந்த ஆதாரங்களில் இந்த ஆட்கடத்தலுக்கு ‘ஆப்பரேஷன் பிரின்செஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தது. ‘பிரின்செஸ்’ என்பது பொதுவாக பெண்களைக் குறிக்கும் பெயர் என்பதால், இதில் பெண்களை மட்டும் கடத்த திட்டமிட்டுள்ளதால் இது அவ்வாறு அழைக்கப்படுகிறது என்று எண்ணிய புவியரசனுக்கு அது கப்பலின் பெயர் என்று இப்பொழுதே விளங்கியது.

சென்னை துறைமுகத்தை காவல்துறையினர் சூழ்ந்து கொள்ள, கஸ்டம்ஸ் ஆபீஸரிடம் கத்திக்கொண்டிருந்தவன் சந்தேகத்தின் பெயரில் முதலில் கைது செய்யப்பட்டான். தான் மத்திய மந்திரியின் கையாள் என்றும், இது அவரது ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் சரக்கு என்றும் விடாமல் வாதாடி கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாக மினிஸ்டரின் மற்ற கைக்கூலிகளும் சேர்ந்து கொள்ள அனைவரும் போலிசாரால் பிடித்து வைக்கப்பட்டனர். அவசர அவசரமாக ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டிகளைத் திறந்து பார்க்க அதில் தமிழகத்திலிருந்து காணாமல்போன 60க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மயக்கநிலையில் முடங்கிக் கிடந்தனர்.

துறைமுகத்தை போலீசார் முற்றுகையிட்ட நேரத்தில், மத்திய அமைச்சரின் இல்லம், ஏற்றுமதி/இறக்குமதி அலுவலகம் மற்றும் தொழிற்கூடங்கள் அனைத்தும் போலீசாரால் சோதனையிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டன.

மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பெண்களின் குடும்ப விவரங்களை சேகரித்து அவர்தம் குடும்பத்தினரிடம் அவர்களை ஒப்படைக்கும் பணியை நான்கு காவல் துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றிற்கு நியமித்துவிட்டு அலுவலகத்திற்கு திரும்பினான், புவியரசன்.

மீண்டும் கமிஷனரின் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்ட புவியரசன், சேகரித்த ஆவணங்களைக் கொண்டு அறிக்கை ஒன்றை தயார் செய்யத் தொடங்கினான்.

முகுந்த் இல்லத்தில் திருமண விழா நடந்துமுடிந்த சந்தோஷம் சிறிதுமின்றி அனைவரும் கார்த்திக் மற்றும் சத்யாவை எண்ணி மனம் கலங்கி துவண்டிருந்தனர். இந்த விவகாரம் பல விதமாக பல சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு முகுந்தின் சேனல் ஒரே நாளில் பெரும் சரிவைக் கண்டது. பங்குகள் சரிய, போர்ட் ஆப் டைரக்டர்கள் அனைவரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். முகுந்த் வேறு வழியின்றி தனது டைரக்டர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தான். மற்ற டைரக்டர்கள் ஒருவாறு அமைதியானாலும், பல நாட்கள் கட்டிய கோட்டை ஓர் நாளில் சரிவதை தடுக்க முடியவில்லை.

அறிக்கையை புவி தயாரித்து முடிக்க, அதற்குள்ளாக விக்கியும் மும்பையிலிருந்து திரும்பியிருந்தான். மதியம் கமிஷனரிடம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு மாலைக்குள் மத்திய அமைச்சருக்கு அரெஸ்ட் வாரண்ட் வாங்கிட வேண்டும் என்று முனைப்போடு செயல் பட்டான். விக்கி தீவிரமாக கார்த்திக்கைத் தேடும் பணியில் மூழ்கியிருக்க, அமைச்சரின் பினாமியின் காய்கறி மண்டியில் அவன் பதுக்கிவைக்கப்பட்டது தெரியவந்தது.

கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்ட கார்த்திக், புவியரசனைக் கண்டதும் பயத்தால் நடுங்கியபடி அழத்தொடங்கினான்.
“கார்த்திக், நேற்று முன்தினம் ராத்திரி என்ன நடந்தது? நீங்க எப்படி ‘மகிழ்’ சேனலுக்கு போனீங்க?”
புவியும், விக்கியும் அதிதீவிரமாக அவனை விசாரித்தனர்.
“சார், என் சத்யா எங்க?” என்றவன் கண்களில் தவிப்போடு அவர்களையே பார்த்திருந்தான்.
“அதை நீங்க தான் சொல்லணும் கார்த்திக்…”
“சார்… அவனுங்க…” என்றவன் தோள்கள் குலுங்க அழத்தொடங்கினான்.
“கார்த்திக், என்ன நடந்ததுன்னு சொன்னா தான் நாங்க மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும்” என்று விக்கி நிர்பந்திக்க, கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்ல தன்னை சமன்செய்து கொண்டவன், நடந்தவற்றை விளக்கினான்.

இறுதினங்களுக்கு முன்…
இரவு திருமண வரவேற்பு முடிந்து முகுந்தும், மிருதுளாவும் அவர்களின் இல்லத்திற்கு சென்றுவிட, கார்த்திக்கும், சத்யாவும் சத்யாவின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். முதலிரவு ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்க, சத்யா ஒரு வித பதட்டத்தோடே காணப்பட்டாள்.
“என்ன ஆச்சு சத்யா?”
அவளைக் கண்ட கார்த்திக்கிற்கு கவலை தொற்றிக்கொண்டது.
“இல்ல, ஒரு மாதிரி இருக்கு… இந்த சடங்கெல்லாம்…” என்றவள் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அமைதியாகிப்போனாள்.
அவளின் தயக்கத்தை புரிந்துகொண்டவன், அவளது இறுக்கத்தைத் தளர்த்தும் பொருட்டு ஒரு முடிவோடு வீட்டில் பெரியவர்களின் முன் சென்று நின்றான்.
“நானும் சத்யாவும் பக்கத்துல ஒரு கோயிலுக்கு போயிட்டு வரோம்”
“இந்த நேரத்துல எந்த கோவில் திறந்திருக்கும்?”
“அது… எனக்கு தெரிஞ்ச கோவில்ல பூஜைக்கு சொல்லியிருந்தேன்…” என்று ஏதேதோ சமாளிக்க, சத்யாவின் பதட்டத்தையும் இவனது அக்கறையையும் உணர்ந்து அவர்கள் செல்ல அனுமதித்தனர்.

“கோவிலுக்குனு சொல்லிட்டு எங்கேயோ போயிட்டு இருக்கீங்க?”
காரில் இருவரும் கிளம்பிய சில நேரத்திலேயே அவள் சற்றே பதட்டம் குறைந்து அமைதியானதைக் கண்டு கார்த்திக் நிம்மதி கொண்டான்.
“கோவிலெல்லாம் இல்ல… உன் டென்ஷன குறைக்க ஒரு ட்ரைவ் போலாம்னு தோணுச்சு. வீட்ல சொன்னா ஒத்துக்கமாட்டாங்கன்னு கோவில்னு பொய் சொன்னேன்.”
அழகாய் சிரித்தவள், “நீங்க சொன்னத நம்பியிருப்பாங்கனு நினைக்கறீங்களா?” என்று அவள் வினவ, ‘இல்லை’ என்று தலையசைத்தவன் தனது மந்தமான யோசனையை எண்ணி சிரித்துக்கொண்டான்.

“எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்” என்று அவள் கேட்க, காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அவளுக்கான ஐஸ்க்ரீமை வாங்கி வந்தான். அவள் சிறுபிள்ளையென ரசித்து ருசித்திருக்க, கண்களாலேயே அவளை அவன் ருசித்திருந்தான்.

கைபேசியில் அழைப்பு வர எடுத்தவன், ‘மகிழ்’ சேனலின் நிருபனின் பெயரைக் கண்டதும் ‘எதுக்கு இப்போ இவன் கூப்பிடறான்?’ என்று யோசித்தபடியே அழைப்பினை ஏற்றான்.

மறுமுனையில் நிருபன் கதறும் சத்தம் மட்டுமே கேட்க, பதறிப்போனான் கார்த்திக். ‘டேய் நீங்க என்னை கொன்னாலும் சரி, உங்களுக்கு அந்த டாகுமெண்ட்ஸ தரமுடியாது… உங்க மினிஸ்டர் கதை முடிஞ்சுது… சேனல் ஆபிஸ்ல புகுந்து என்னை மிரட்டறீங்களா?’ என்று அந்த நிருபன் தட்டுத்தடுமாறி யாரிடமோ கூறி முடிக்க, மீண்டும் அவனது கதறல்களே ஒலிக்கத் தொடங்கின.

“சத்யா, நீ கார் எடுத்டுட்டு வீட்டுக்கு போ. என் பிரெண்டு ஏதோ பிரச்சனைல இருக்கான். அவன் எனக்கும் முகுந்துக்கும் ரொம்ப உதவி செஞ்சிருக்கான்…”
“என்னங்க சொல்றீங்க?”
“இங்கிருந்து அந்த சேனல் ஆபிஸ் அஞ்சு நிமிஷம் தான்… பேச நேரமில்லை…” என்றவன் காரை விட்டு இறங்க,
“என்னங்க போலீசுக்கு சொல்லலாம்…” என்று அவள் வழிமறிக்க,
“நீ சொல்லிடு” என்றவன் நடக்கத் தொடங்க, “கார்ல வேகமா போயிடுவோம் வாங்க” என்றவள், வலுக்கட்டாயமாக காரை கிளப்பிக்கொண்டு அவனோடு சென்றாள்.

சேனல் வாயிலில் இறங்கிக்கொண்டவன், அங்கே பெருத்த அமைதி நிலைகொண்டிருந்ததைக் கண்டு துணுக்குற்றான்.
“சத்யா நீ கிளம்பு. போலீசுக்கு சொல்லிடு” என்றவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த சத்யாவிடம் கூறிவிட்டுத் திரும்ப, மடாரென யாரோ கட்டையால் அடிக்க மறுநொடி சுருண்டு விழுந்தான்.

“எனக்கு அவ்வளவு தான் தெரியும் சார்… அவன் எதுக்கு எனக்கு போன் பண்ணான்னு தெரியல… அங்க என்ன நடந்ததுன்னு தெரியல… எனக்கே என்ன ஆச்சுன்னு தெரியல… இன்னைக்கு போலீஸ் வந்து என்னை மீட்ட பிறகு தான் சுயநினைவுக்கே வந்தேன். என் சத்யாவுக்கு என்ன ஆச்சு?” என்றவன் உயிர் நோக அழுதிருந்தான்.

மருத்துவமனையில் பெண்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு மயக்கம் தெளிந்து நிலைக்குத் திரும்பியவர்களிடம் மேலும் விசாரணைகள் தொடரப்பட்டது. அவ்வப்போது புவியரசனுக்கு தகவலும் கொடுக்கப்பட்டது. கார்த்திக்கிடம் பேசி முடித்து யோசனையாய் அமர்ந்திருந்த புவியிடம், “இதெல்லாம் அந்த மினிஸ்டர் வேலை தான்னு ரொம்ப கிளீனா தெரியுது” என்றான் விக்கி.
“ஆமாம் விக்கி, ஆனா சத்யாவுக்கு என்ன ஆச்சுன்னு யூகிக்க முடியலையே” என்று புவி மீண்டும் யோசனையாக, அவனது கவனத்தைக் கலைத்தது கைபேசி அழைப்பு.

“வாட்…”
அமர்ந்திருந்த புவி வெடுக்கென நிமிர்ந்து எழுந்து நின்றான்.
“என்ன புவி?”
“விக்கி, சத்யாவும் அந்த பொண்ணுங்கள்ல ஒருத்தியா கடத்தப்பார்த்திருக்காங்க. இப்போ தான் மயக்கம் தெளிஞ்சு, ஹாஸ்பிடல்ல, தான் முகுந்தின் தங்கைனு விவரம் சொல்லியிருக்கா…”
“ஹாஸ்ப்பிடலா? அவளுக்கு என்ன ஆச்சு சார்?” என்று ஒன்று புரியாமல் குழப்பத்தில் கார்த்திக் தவித்திருக்க,
“எல்லாம் விளக்கமா சொல்றேன்” என்ற புவி, விக்கி மற்றும் கார்த்திக்குடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

கார்த்திக்கைக் கண்டதும் பதறியடித்து அவனை கட்டியணைத்து அழுதவளைக் கண்டு உயிர் நொந்தது கார்த்திக்கிற்கு.
“என்ன ஆச்சு சத்யா? நீ எப்படி இங்க?” என்றான் கார்த்திக், அவளது கண்ணீரை துடைத்தபடி.
“உங்கள அடிச்சுப்போட்டவங்க என்னை வலுக்கட்டாயமா இன்னொரு கார்ல ஏத்திட்டு போனாங்க. ஏதோ ஒரு பாழடைஞ்ச குடோன் உள்ள இழுத்துட்டு போய் கட்டிப்போட்டாங்க. அங்க என்னை மாதிரி இந்த பொண்ணுங்களையெல்லாம் கட்டி வச்சிருந்தாங்க. ஒருத்தன் என் கைய பிடிச்சு ஏதோ ஒரு ஊசி போட்டான். உடனே மயங்கிட்டேன். கண் முழிச்சு பார்த்தா… இங்க…” என்று உடல் நடுங்க கூறி முடித்தவள், மீண்டும் கார்த்திகை கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள்.

Epi – 3

தலைப்புச்செய்தி:

தமிழகத்தைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் கைது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைமையால் நிர்பந்திக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியையும் இழந்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புவியரசனையும், விக்கியையும் வெகுவாகப் பாராட்டிய கமிஷனர் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட பரிந்துரை செய்தார். அமைச்சரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர், கமிஷனர், புவி மற்றும் விக்கி.

“அனைவருக்கும் வணக்கம்! ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ எனும் , கூற்றிற்கு இணங்க பணம், பதவி என்ற எவ்வித பாகுபாடும் இன்றி மத்திய அமைச்சரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரது தண்டனை குறித்த தீர்ப்பும் வெளிவரவுள்ளது. யாராயிருப்பினும் அனைவரும் சட்டத்தின் கண்களுக்கு சமமே என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இதற்கு ஒத்துழைத்த காவல் துறை அதிகாரிகளுக்கும், மீடியாவிற்கும், பொது மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று கூறிமுடித்தார் கமிஷனர்.

கேள்வி 1: சார், முகுந்த் மேல எந்த ஆக்ஷனும் எடுக்கலையே?
புவி: ட்ரக்ஸ் பரிமாற்றங்கள் அவருடைய வளாகத்தில் நடந்ததே தவிர, அவருக்கும் அக்குற்றத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. காசுக்கு ஆசைப்பட்டு அவர் சேனல்ல பணி புரிஞ்சு சிலர் ட்ரக் டீலர்களுக்கு உதவியிருக்காங்க. இந்த மாதிரி ஆட்கள் மீது எவ்வித சந்தேகமும் வராது. அதனால ஈஸியா இந்த ட்ரக் டீலர்சால அதை சமூகத்துல விநியோகம் செய்ய முடிஞ்சுது. குறிப்பா மாணவர்களிடம் ரொம்ப சுலபமா கொண்டு சேர்க்கப்பட்டது.

கேள்வி 2: ‘மகிழ்’ சேனல் நிரூபர் கொலை செய்யப்பட அவசியம் என்ன?
புவி: அவரிடம் இருந்த ஆதாரங்கள் போலீசிடம் சிக்கக்கூடாதுன்னு தான். அவர் இறந்துட்டா அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களும் அழிக்கப்பட்டுடும்னு நினைச்சாங்க.

கேள்வி 3: அந்த நிரூபர் முன்கூட்டியே ஏன் போலீசிடம் தெரிவிக்கல? நம்பிக்கை இல்லாமலா?
புவி: உண்மை எனக்குத் தெரியாது. ஆனா, அவர் கொலை செய்யப்படுவற்கு முந்தைய நாள் தான் முக்கிய வேலையா பம்பாய் செல்லவிருப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். எங்கள் கணிப்பு படி, அவர் ஆதாரங்களை சேர்த்து சேனலில் வெளியிட்டு, தனது சேனலை சென்சேஷனலா ஆக்க நினைச்சிருக்கலாம்.

கேள்வி 4: சேனலுக்காக உயிரை விடறதெல்லாம் நம்பும்படியா இல்லையே?
புவி: தான் எவ்வளவு பெரிய ஆபத்தான காரியத்துல இறங்கியிருக்கோம்னு அவர் புரிஞ்சுக்க தவறியிருக்கார். அதான் அவர் உயிரை பறிக்கும் அளவுக்கு போயிடுச்சு. காவல்துறையை நம்பனும் சார். டிபார்ட்மென்டல ஒரு போலீஸ்காரன் தப்பானவனா இருந்தா, பத்து பேர் நல்லவனாத்தான் இருப்பான். நீங்க பொத்தாம்பொதுவா டிபார்ட்மெண்ட்டையே பழி சொல்றது தவறு. போலீஸ்காரன் தவறு செஞ்சா அதைத் திரும்பத்திரும்ப மக்கள் கிட்ட போட்டுக்காட்டறீங்க. இதையே நல்லது செஞ்சா சாதாரணமா கடந்து போயிடறீங்க. அப்புறம் மக்களுக்கு எப்படி எங்க மேல நம்பிக்கையும், மரியாதையும் வரும்?

கேள்வி 5: அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்படுவதற்கான நோக்கம் என்ன?
விக்கி: பெண்கள் என்றாலே பாலியில் தொழிலில் ஈடுபடுத்தத்தான் கடத்தப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஓர் காரணமாக இருந்தாலும், ஆர்கன் ஹார்வெஸ்ட்டிங் அதாவது உடல் பாகங்களுக்காக கடத்தப்படுவது என்று அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் விஷயமாக உள்ளது. பெண்கள் குறிப்பாக அவர்களுடைய கர்ப்பபைக்காக கடத்தப்படும் குற்றங்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த கேஸ்ல ஆர்கன் ஹார்வெஸ்ட்டிங்கான காரணிகள் இல்லை.

கேள்வி 6: அப்போ மும்பைல கடத்தல் நடக்கப்போறதா வந்த செய்தி?
புவி: இப்போ வரைக்கும் அந்த மாதிரி எதுவும் நடக்கல. அதுகுறித்த விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

கேள்வி 7: முகுந்த், மகிழ்வேந்தன் அவர்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் நிச்சயமா இல்லையா?
புவி: நிச்சயமா இல்லை. அவர்கள் சமயம் பார்த்து மாட்டிவிடப்பட்டிருக்காங்க. ஒரு விஐபி’ய பெரிய பிரச்சனைல மாட்டிவிட்டு, எல்லாருடைய கவனத்தையும் திசை திருப்பி குற்றம் அரங்கேத்தறது தானே இப்போ ட்ரெண்டா இருக்கு.

கேள்வி 8: சார், இனி குற்றங்கள் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க?
விக்கி: அதெல்லாம் விலாவாரியா சொல்லிட்டா அப்புறம் தப்பு செய்யறவன் உஷாராயிடுவான். இனி தப்பு செய்யறவன் மட்டுமில்ல, தப்பு செய்யணும்னு நினைக்கறவனுக்குக் கூட உயிர் பயம் வரும்படி இனி வரும் நாட்கள்ல டிபார்ட்மெண்ட்டோட நடவடிக்கைகள் இருக்கும்.

“சார், என்னதான் நாங்க மடக்கி மடக்கி உங்கள கேள்விகள் கேட்டாலும், இவ்வளவு பெரிய விஷயத்தை துணிச்சலா செய்து முடிச்ச உங்க டிபார்ட்மென்டுக்கு பொதுமக்கள் சார்பா நன்றி கூறிக்கொள்கிறோம்.”
மீடியாக்கள் ஒருமனதாக பாராட்டிச் சென்றனர்.

“எல்லா பிரச்சனையும் முடிஞ்சு ஒரு மாசம் ஆச்சு. நமக்கு கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆகப்போகுது. இன்னும் உன் முகத்துல குழப்பும், கவலையும் மட்டும் தான் தெரியுது முகுந்த். நான் மத்த டைரக்டர்ஸ் கிட்ட பேசறேன். நீ திரும்பவும் போர்ட்ல சேரணும்.”
தனது படுக்கையறை வராண்டாவில் நின்றுகொண்டு பௌர்ணமி நிலவினை ரசிக்க மறந்து, கவலையாய் இருந்த முகுந்தை எவ்வகையேனும் உற்சாகமூட்ட எண்ணினாள், மிருதுளா.
“மிது நீ நினைக்கற மாதிரி ரிசைன் பண்ணதுக்காக நான் வருத்தப்படல. என் தவறுகளை நினைச்சு கூனிக்குறுகி இருக்கேன்.”
“முகுந்த்…”
“மிது, நான் ஒரு பொண்ணுக்கு செய்த கொடுமையெல்லாம் திரும்பி, என் தங்கச்சிய பாதிக்கும்னு நினைக்கவே இல்ல.”
“ஹே அவ தான் இப்போ நல்லா இருக்காளே. புதுசா அவங்க தொழில் தொடங்கி, நிம்மதியா இருக்காங்களே?!”
“ஆமாம் மிது. அதை நினைச்சு எனக்கு நிம்மதி தான். அன்னைக்கு மட்டும் அவளை காப்பாத்த முடியாம போயிருந்தா, இந்நேரம் அவ…”
முகுந்தின் கண்களில் நீர் துளிர்த்தது.
“கவலைப்படாத முகுந்த். அவளுக்கு இனி எந்த குறையும் வராது. நீ இப்படியே இருந்தா நான் மட்டும் இல்ல, கார்த்திக், சத்யா, மாமா, அப்பா’னு எல்லாருக்குமே ரொம்ப கஷ்டமா இருக்கு.”
‘சரி’ என்று தலையசைத்தவன் ஒரு பெருமூச்சு விடுத்து அவளைத் தன் மார்மீது சாய்த்துக்கொண்டான். கவலைகளை ஒதுக்கியவன், அவளது விழிகளுக்குள் விழுந்து தொலைந்தான்.

மறுநாள் மிருதுளாவிற்கு முன்னதாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்ட முகுந்த், மிகுந்த ஆர்வத்தோடு தனது பணியில் மூழ்கியிருந்தான். அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல் மிருதுளா அமைதியாக தனது பணியில் கவனம் செலுத்தினாள்

“மிது, ஒரு பத்து நிமிஷம் அப்பாய்ண்ட்மென்ட் வேணும்” என்று கையில் சில தாள்களோடு அவள் முன்னே சென்று நின்றான்.
“சொல்லு முகுந்த்…”
“நம்ம சேனலோட பலமே ரியாலிட்டி ஷோ தான். நாம புதுசா ஒரு ஷோ பண்ணலாம்னு தோணுது. எப்படியாவது நம்ம சேனல் இழந்த க்ரெடிபிலிட்டிய திரும்ப சம்பாதிக்கணும் மிது”
“கண்டிப்பா முகுந்த்… என்ன ஷோ?”
“எட்டு வயதிலிருந்து 18 வயது வரை உள்ள குழந்தைகளை மையமா வச்சுதான் இந்த ஷோ. இந்த வயது வரம்புல நல்லா பாடத் தெரிஞ்சவங்க இருப்பாங்க; கிட்டார், கீபோர்ட், வயலின் இந்த மாதிரி இசைக்கருவிகளை நல்லா வாசிக்கத் தெரிஞ்சவங்க இருப்பாங்க; அதுபோக சொந்தமா பாட்டு எழுத தெரிஞ்சவங்களும் இருப்பாங்க. அந்த மாதிரி ஒட்டுமொத்த திறமைகளையும் கொண்டுவந்து அவங்கள ஒவ்வொரு பாண்டா(Band) பிரிச்சு, அதாவது ஒவ்வொரு குழுவிளையும் பாடறவங்க, இன்ஸ்ட்ரூமென்ட் வாசிக்கறவங்க, பாட்டு எழுதுறவங்கன்னு சேர்த்து ஒரு பேண்ட் தயார் செய்து, அவங்களுக்கு ஒரு மெண்டர் கொடுத்து, அவங்களுக்குள்ள போட்டி வச்சு, இறுதியா தேர்வாகற பேண்டுக்கு ஒரு மியூசிகல் ஷோ ஏற்பாடு செய்தா எப்படி இருக்கும்?”
“இது ரொம்ப நல்லா இருக்கு முகுந்த். இந்த மாதிரி நானும் கேள்விப்பட்டதில்லை. நிச்சயம் நாம் செய்றோம்…” என்று அவனது யோசனைக்கு ஒப்புதல் அளித்தவள், அதற்குண்டான பணிகளில் முகுந்துடன் இணைந்து செயல்படத்தொடங்கினாள்.

மென்டர்களாக இசைத்துறையைச் சேர்ந்த பல நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். முகுந்த் தயங்கினாலும், மிருதுளாவின் வலியுறுத்தலால் ஸ்ருதியும் அழைக்கப்பட்டாள். அவளும் எவ்வித தயக்கமுமின்றி பணியாற்ற சம்மதித்தாள். அதோடு நில்லாது, மகிழ்வேந்தனின் ஒப்புதலோடு நந்துவையும் தன்னோடு சேர்த்துக்கொண்டாள். தோழிகள் இருவரும் பிள்ளைகளோடு சிறு பிள்ளைகளாய் மாறி குறும்புத்தனங்களினூடே ஒவ்வொரு வாரமும் அவர்களை சிறப்பாக தயார் செய்தனர். ஐந்தாறு மாதங்களாக நடந்த போட்டி முடிவிற்கு வந்தது. வெற்றி பெற்ற அணியினருக்காக பிரம்மாண்ட ‘மியூஸிகல் நைட்’ ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக மகிழ்வேந்தன் அழைக்கப்பட்டிருந்தான். அதோடு, விக்கியும், கார்த்தியும் தத்தம் ஜோடிகளோடு விழாவிற்கு வருகைத்தந்தனர்.

ஸ்ருதி தனக்குப் பிடித்த கீர்த்தனைகளைப் பாட, நந்துவின் குழல் நாதம் இதம் சேர்த்தது. பல வருடங்களுக்கு முன் கல்லூரியில் ஸ்ருதியின் கச்சேரியைக் கேட்ட நினைவுகள் புவியரசனின் நெஞ்சில் வரிசைக்கட்டி நின்றன. ஆனால் அன்றை விட, இன்று மேடேறிய வயிரோடு ஸ்ருதி மேலும் அழகு கூடிவிட்டதாகவே உணர்ந்தான் புவி. பெண்மை ஏற்கும் முதல் தாய்மையின் பூரிப்பில் அவள் திளைத்திருந்தாள். விழா இனிதே முடிவுற, முகுந்த் நண்பர்களுக்கு என பிரத்யேகமாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். முகுந்த்-மிருதுளா, புவி-ஸ்ருதி, மகிழ்வேந்தன்-நந்து, விக்கி-பவித்ரா மற்றும் கார்த்திக்-சத்யா ஜோடிகள் ஒரே மேஜையில் அமர்ந்து கதை பேசியபடி உண்டு களித்தனர்.

“பழசையெல்லாம் மறந்து இன்னைக்கு எல்லாரும் மியூசிகல் நைட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். அதோட, இந்த ஷோல மென்டரிங் பண்ண சம்மதிச்ச ஸ்ருதி, நந்து… உங்க ரெண்டு பேருக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ்!”
முகுந்த் கூறியதைக் கேட்டு ஸ்ருதி மெல்லிய புன்னகை சிந்த, குற்ற உணர்வு மட்டுப்பட்ட திருப்தியில் முகுந்தும் முறுவலளித்தான்.
“ஸ்ருதி, நான் இதுவரைக்கும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கவே இல்லை. நடந்த எல்லாத்துக்கும் ஐம் வெரி சாரி” என்றான்.
“பழசையெல்லாம் இப்ப எதுக்கு பேசிக்கிட்டு. இந்த நிமிஷம் நாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருக்கறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எனக்கு அது போதும்.”
அவள் கூறியதைக் கேட்டு புவியின் முகத்தில் பெருமிதம் மின்னியது.

“ஆறு மாசமா இந்த ஷோ நல்லபடியா முடியணும்னு ஒரே டென்ஷன்” – மிருதுளா.
“ஆமா, பிள்ளைங்க ஒவொன்னும் அருந்த வாலு” – நந்து.
“அதை நீ சொல்றியா?” – மகிழ் கூறியதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, நந்து மட்டும் அவனை முறைத்து வைத்தாள்.

“நான் இந்த ஐடியாவ சொன்னதும் உடனே ஓகே சொன்ன உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம்” என்றான் முகந்த் மிதுவிடம்.
“கண்டிப்பா உன் ஐடியா நல்லாத்தான் இருக்கும் முகுந்த்”
கணவனை தன் பங்கிற்கு புகழ்ந்தாள், மிது.
“தெரியும்… அதான் நான் இன்னொரு ப்ராஜெக்டும் உன்னை கேட்காமலே அடுத்த பத்து நாளைக்கு முடிவு பண்ணி அதற்கான ஏற்பாடும் பண்ணிட்டேன்…”
“என்னது?”
“ப்ராஜெக்ட் டி.என்.(T.N.)”
“அப்படினா? தமிழ்நாடு சம்மந்தமாவா?”
“ச்ச ச்ச… தமிழ்நாட்டுல வாழற நம்ம சம்மந்தமா…”
“எனக்கு புரியல…”
“இவ்வளவு பெரிய சேனலோட டைரக்டர் நீ, இது கூட புரியலையா?”
“ஐயோ, என்னை சோதிக்காம உண்மைய சொல்லு முகுந்த்…”
“ப்ராஜெக்ட் டி.என். – தேன் நிலவு” என்றவன் புருவத்தை மேலும் கீழுமாக ஆட்டி ‘எப்படி?’ என்க, ‘ஹே’ என்று மற்றவர்கள் கைதட்டி சிரிக்க, இம்முறை மிது, முகுந்தை முறைக்கலானாள்.
“இப்படியெல்லாம் முறைச்சா போலீஸ் கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்” என்று புவி, விக்கியை சுட்டிக்காட்டி முகுந்த் கூற, முறைப்பதை விடுத்து சிரிக்கத் தொடங்கினாள், மிது.
“முகுந்த், பொண்ணுங்க சைக்காலஜி ரொம்ப சிம்பிள். வெளில முறைக்கறாங்கன்னா உள்ளுக்குள்ள ரசிக்கறாங்கன்னு அர்த்தம்.”
விக்கி கூறியதைக் கேட்டு “அப்படியா?” என்ற முகுந்த், திரும்பி மிதுவை நோக்கி, அவளது கன்னத்தைக்கிள்ளி, “அடிக்கள்ளி” என்க, மீண்டும் சிரிப்பலைகள் எழுந்து அடங்கின.
“அதுக்குத்தான் மாசம் ஒண்ணாம் தேதி ஆனதும் முதல் வேலையா மூணு நாளைக்கு எங்கயாவது ஹனி மூனுக்கு பிளான் போட்டுட்டு தான் அடுத்த வேலையே…”
மகிழ் தனது பங்கிற்கு அறிவுரை கூற, நந்துவின் கன்னங்கள் சிவந்து போயின.
“செம ஐடியா மகிழ் சார்” என்று இம்முறை கார்த்திக் ஆர்வமாக, சத்தியாவிடம் பெற்ற நறுக்கென்ற கிள்ளலில் அடங்கினான்.
“உண்மை தாங்க. போன வாரம் கூட மூணு நாள் மூணாறுக்கு எஸ்கேப்…” என்று மகிழ் கூற, திடுக்கிட்ட நந்து ஸ்ருதியைக் காண, அவளோ அசராது இவளை முறைத்துக்கொண்டிருந்தாள்.
“யாருக்கோ 105 டிகிரி ஜுரம்னு சொன்னாங்க?” என்று ஸ்ருதி புருவத்தை உயர்த்தி வினவ,
“உண்மைய சொல்ல கொஞ்சம் கூச்சமா இருந்தது… அதான் டி…”
என்று நந்து பம்ம,
“சரி பொழைச்சுப்போ மன்னிச்சு விடறேன்” என்றவள், நந்துவைக் கண்டு சிரிக்க, அவளும் ‘தேங்க்ஸ் டி’ என்று பலமாய் தலையாட்டி வைத்தாள்.

“என்ன புவி ரொம்ப அமைதியா இருக்கீங்க?” என்று முகுந்த் வினவ,
“ஒண்ணுமில்ல மூணாறு போலாமா இல்ல வயநாடு போலாமானு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றவன் பற்கள் அனைத்தும் மின்ன சிரித்தபடி ஸ்ருதியைக் காண, அவளோ இவனது அபத்தத்தைக் கண்டு செய்வதறியாது அமர்ந்திருந்தாள்.
“என்ன ஸ்ருதி உன் ரியாக்ஷனே சரியில்லையே?!”
கவலையுற்றான் புவி.
“நாளைக்கு செக் அப் இருக்கு, அடுத்த வாரம் ஸ்கான் இருக்கு, இதுல உங்களுக்கு வயநாடு கேட்குதா?”
“அப்போ கிடையாதா?” என்று பாவமாய் புவி வினவ,
“வாய்ப்பில்ல ராஜா” என்று பதிலுக்கு விக்கி உரக்கக்கூற, மீண்டும் சிரிப்பலை அடித்து ஓய்ந்தது.
“புவி உனக்கு வாழ்நாள் வில்லன் வந்தாச்சு. இனிமேல் நீ சந்நியாசி தான்.”
“டேய் நான் சம்சாரியாகி ஒண்ணுத்தையுமே முழுசா அனுபவிக்கலையே டா. திரும்பவும் சந்நியாசியா?”
“ஆமாம் புவி…”
விக்கி கூறியதைக் கேட்டு கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டான் புவி. அவனது நிலையைக் கண்டு பிரயத்தனப்பட்டு தனது சிரிப்பினை அடக்கிக் கொண்டாள், ஸ்ருதி.

“நல்ல வேலை சரியான நேரத்துல என்னோட ஞானக்கண்ணை திறந்துவிட்டீங்க விக்கி.”
மனமுவந்து நன்றி கூறினான் முகுந்த்.
“பத்து நாட்களுக்கான ப்ராஜெக்ட் டி.என். மாற்றியமைக்கப்பட்டு காலவரையறையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.”
முகுந்த் கூறியதைக் கேட்டு மிது முறைக்க, கிண்டலும் கேலியும் சிரிப்புமாய் அந்த இரவு இனிதே கழிந்தது.

Episode – 4

விருந்து முடிந்து வீடு திரும்பிய முகுந்த், அவசரஅவசரமாக மிதுவை அறைக்கு இழுத்துச் சென்றான்.
“முகுந்த் என்னாச்சு?” என்றவள், அறைக்குள் நுழைந்ததும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மெத்தையைக் கண்டு கன்னங்கள் சிவப்பேற கொண்டாள்.
“எ… என்ன முகுந்த்… பெட்டு மேல பூவலங்காரம்?” என்று அவள் தட்டுத்தடுமாறி வினவ,
“ம்ம்… பூஜைக்கு” என்றான் மந்தகாசப் புன்னகையோடு.
“என்ன பூஜை?”
ஒன்றும் அறியா சிறு பிள்ளையென அவள் அவனை நோக்க,
“டெமோ காட்றேன் வா” என்று அவளை இறுக்கி அனைத்தவன், அவள் மேற்கொண்டு கேள்விகள் கேட்கா வண்ணம் இதழ் சேர்த்தான். அவள் கிறங்கி அவன் தோள் சாய, அவன் மயங்கி தன்னிலை மறக்க, உருகி மருகி காதல் கொண்டும், காதல் தந்தும், இரு நெஞ்சங்கள் சிலிர்த்துக் களித்தது. இருவரின் உள்ளமும் ஆசைகளின் ஆர்ப்பாட்டத்தில் முக்குளித்து எழுந்து, விழியோரம் இன்ப நீர் பொங்க, இனிதே தொடங்கினர் நல்லதொரு இல்லறத்தை!!

“டாடி” என்று கூவிக்கொண்டு பொன் மானெனத் துள்ளிக்கொண்டு வந்த மகள் மகிழினியை அள்ளிக்கொண்டு சுற்றிய மகிழ்வேந்தன், அவளது கன்னங்களில் அன்பு முத்தங்கள் தந்தான்.
“என்னடா செல்லம் இன்னும் தூங்கலையா?”
“இல்ல டாடி. உங்களுக்கு குட் நைட் சொல்லிட்டு தானே தூங்குவேன். அதான் தூங்காம முழிச்சிருந்தேன்…”
“என் செல்லம்” என்றவன் “குட் நைட்” என்று கூறி முத்தங்கள் கொடுக்க, நந்துவும் அவள் பங்கிற்கு முத்தங்கள் கொடுத்து “குட் நைட்” கூற, துள்ளிக்கொண்டு ஓடிச்சென்று தனது பாட்டி தாத்தாவின் மத்தியில் படுத்துக்கொண்டு, அவர்கள் கூறும் கதையைக் கேட்டுக்கொண்டே கண்ணயர்ந்தாள்.

தனது அறைக்குள் நுழைந்த மகிழ் அருகிலிருந்த நந்துவைத் தூக்கி கட்டிலில் கிடத்தி அவள் மீது மையல் கொள்ள, “தள்ளு மகிழ்” என்று திமிறியவள், அவனை தள்ளிக்கொண்டு எழுந்து நின்றாள்.
“ரொம்ப அறுந்த வாலாகிட்ட மகிழ்…”
“எல்லாம் உன்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்…”
“நான் இப்படித்தான் உன் மேல வந்து விழறேனா?”
“வா செல்லம்… உனக்கில்லாத உரிமையா?!” என்று கண் சிமிட்டியவன், நொடியில் அவளை இழுத்து தன் மீது கிடத்திக்கொண்டான்.
“நந்து செல்லம், நீ இன்னைக்கு எவ்வளவு அருமையா வாசிச்ச தெரியுமா? எல்லாரும் கை தட்டி, உன்னை புகழ்ந்து பேசும்போது எனக்கு அப்படியொரு பெருமை. ஐ ஆம் வெரி ப்ரௌட் ஆஃப் யூ!!”
“இதுக்கு காரணமே நீங்க தானே. போட்டி சேனல்னு யோசிக்காம நான் அந்த ஷோல கலந்துக்க சம்மதிச்சீங்க. இன்னைக்கு நான் வாங்கியிருக்கும் பெயருக்கும், புகழுக்கும் நீங்க தான் காரணம். தனிமையில வாழ்ந்து மறுத்துப்போன மனசு இன்னைக்கு சிறகடிச்சு பறக்குது. மனசு முழுக்க அவ்வளவு நிம்மதி, அவ்வளவு சந்தோஷம். நான் நிம்மதியா தூங்கப்போறேன் மகிழ்…”
அவள் கூறியதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், அவள் கூறிமுடித்த பின் அவளது விழிகளை ஊடுருவி நோக்கியபடி, “ஹ்ம்ம்… கடைசில உன் வேலைய காமிச்சுட்டல?” என்றான். அவன் பார்வையையும், அவன் கூறியதையும் கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள், “மகிழ் என்ன சொல்றீங்க?” என்று கலவரமானாள்.
“எப்படி உன்னால உன்னை பத்தி மட்டுமே யோசிக்க முடியுது?”
“மகிழ்…”
“பேரு தான் மகிழ்… ஆனா மகிழ்ச்சியே இல்லை… ச்ச…”
“மகிழ்…”
“சுயநலமா இருக்கறது ஒன்னும் பெரிய கொலை குத்தம் இல்லை. அதுக்குன்னு இப்படியா?”
“சத்தியமா நீங்க என்ன சொல்றீங்கன்னு ஒண்ணுமே புரியல. ஏன் என்னென்னமோ பேசறீங்க?”
அவள் குரல் உடைந்துபோனது.
“நான் என்னென்னமோ பேசறேனா? நீ என்ன பேசின’னு யோசிச்சு பாரு…”
ஒரு கட்டத்திற்குமேல் துக்கம் தாளாமல் கண்கள் கலங்கியவள், தனது கைகளுக்குள் முகத்தினை புதைத்து அழுத்தொடங்கினாள்.
“ஐயோ நந்து பேபி, ஏன் மா அழற? நான் சும்மா தான் மிரட்டினேன். இப்படி நிஜமாவே அழறியே?”
அழுகையை நிறுத்திவிட்டு அவனை தலைநிமிர்ந்து நோக்கியவள், “என்ன சும்மா விளையாண்டீங்களா?”
“சும்மா’னா… கொஞ்சம் சும்மா… கொஞ்சம் நிஜமா…”
“ப்ளீஸ் எனக்கு ஒண்ணுமே புரியலைங்க…”
“நீ ஏன் அப்படி சொன்ன?”
“என்ன சொன்னேன்?”
“பக்கம் பக்கமா எனக்கு வாழ்த்து மடல் வாசிச்சுட்டு கடைசில அப்படி ஒரு வார்த்தையை சொன்னா எனக்கு கஷ்டமா இருக்காதா?”
அவனது கைகளை தனது கைகளுக்குள் அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டவள், அவனது விழிகளை நோக்கி, “நான் உங்கள என்னைக்குமே காயப்படுத்தனும்னு நினைச்சதே இல்லை. ஏதாவது சொல்லியிருந்தா அது என்னை அறியாம வந்த வார்த்தையாத்தான் இருக்கும்” என்றாள் அன்பொழுக.
“இல்ல… நீ தெரிஞ்சே தான் சொன்ன…”
“என்னதுங்க? ப்ளீஸ் சொல்லுங்க…”
“‘தூங்கப்போறேன்’னு சொன்னியே… நான் எவ்வளவு ஏமாந்துட்டேன் தெரியுமா?”
“என்னது?”
கங்கா சந்திரமுகியாக மாறினாள்!
“ஆமா… ஒரு மனுஷன் ஏகப்பட்ட ஆசையோட நெருங்குனா ‘தூங்கப்போறேன்’னு சொல்ற… இது எனக்கு மட்டுமில்ல, உலகத்துல எந்த புருஷனுக்கும் பிடிக்காத வார்த்தை இது” என்றவன், அவளைக் கண்டு திருட்டு முழி முழிக்க,
“படுபாவி நான் என்னமோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்” என்று சீறியவள், தன் நெஞ்சோடு சேர்த்து வைத்திருந்த அவனது கைகளைப் பற்றி கட்டிலின் மேல் அவனை தள்ளிவிட்டு, தலையணை எடுத்து ஆத்திரங்கள் அடங்கும் வரை அடித்து ஓய்ந்தாள். சந்திரமுகி சாமுண்டேஸ்வரியாக மாறினாள்!!
“மவனே நீ மட்டும் கிட்ட வா, அப்புறம் இருக்கு உனக்கு”
“நந்துமா நான் உன் புருஷன் மா”
“என்னை ஒரு நிமிஷம் கதிகலங்க வச்சு என்னவெல்லாம் பேசின… நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா… இனி பத்து நாளைக்கு நோ டச்சிங் டச்சிங்…”
“ஹே நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்”
“ஆனா நான் சீரியஸா தான் சொல்றேன்”
“ப்ளீஸ் பேபி… ப்ளீஸ் மா…”
பற்பல கனவுகளோடு ஏங்கியிருந்தவனின் இரவு, வெறும் ‘ப்ளீஸ்’, ‘சாரி’களால் கரைந்து போனது.

“என்ன ஸ்ருதி, ரொம்ப அசதியா இருக்கியா?”
அன்று முழுதும் மியூசிகல் நைட்டிற்காக பரபரப்பாய் இருந்தவள், இரவு மிகவும் சோர்ந்துவிட்டிருந்தாள்.
“ஆமாம்ங்க. ரொம்ப சோர்வா இருக்கு” என்றவள் அசந்து சோபாவில் அமர, அவளது காலடி அருகே அமர்ந்து கொண்ட புவியரசன், அவளது கால்களை இதமாய்ப் பிடித்துவிட்டான்.
அவள் பருகிட பால் கொணர்ந்தாள், பவித்ரா.

“பவித்ரா, நீ எப்ப ஊருக்கு போகணும்?” – புவி.
“நாளைக்கு காலைலயே போகணுமாம்” – வருத்தம் தோய்ந்த குரலில் பதில் கூறினான், விக்கி.
தன்னுள் சிரித்துக்கொண்ட பவித்ரா, “அண்ணா நான் ஊருக்கு போகல. அக்காவுக்குத் துணையா இங்க தான் இருக்கப்போறேன்” என்றவள் குறும்பாய் விக்கியை நோக்க,
“அப்போ எதுக்கு என்கிட்ட நாளைக்கே போகணும்னு சொன்ன?” என்றான் கோபமாய், சிறிது நேரம் தான் ஏமாந்த கோழி ஆகிவிட்ட ஆதங்கத்தில்.
உரக்கச் சிரித்த பவித்ரா, “என்ன போலீஸ்கார் ஏமாந்தீங்களா?” என்க,
“இங்க தான இருக்கப்போற, இருடி உன்னை வச்சுக்கறேன்” என்றான் அவளை விழுங்கும் பார்வை பார்த்தபடி.
“விக்கி இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாசம் இருக்கு. கன்ட்ரோல்… கன்ட்ரோல்…” என்று புவி கூற, விக்கிக்கு பப்பி ஷேம் ஆகிவிட்டது.

விக்கி மாடியில் தாங்கிக்கொள்ள, புவி-ஸ்ருதியுடன் பவித்ரா தங்கிக்கொண்டாள். தன்னை மீட்டெடுத்து அடைக்கலம் கொடுத்ததன் நன்றிக்கடனாய் ஸ்ருதியை அதிசிரத்தையுடன் அவள் கவனித்துக்கொண்டாள். அவ்வப்போது விக்கியின் இனிய இம்சைகளையும் சகித்துக்கொண்டாள். திருமண ஏற்பாடுகள் நிமித்தமாக சிலவற்றை பேசித்தீர்க்க வேண்டும் என்று ஏதேதோ காரணங்கள் கூறி, அவ்வப்போது அவளைத் தனிமையில் சந்தித்தான், விக்கி. அவனது போக்கிரித்தனங்கள் புரிந்திருந்தும், செல்ல கண்டிப்புகளோடு நாட்களைக் கடத்தினாள், பவி.

ஒரு மாத காலம் உருண்டோடிப்போக, மண நாளும் தவழ்ந்து கை வந்து சேர, சிறு பூவைப்போலே அவள் நாணி மிளிர, பூவை சுற்றும் வண்டாய் அவன் விழியால் வருட, திருமாங்கல்யம் ஏற்றாள் பாவை, அனைவரின் ஆசியோடு!!

விக்கி-பவித்ரா திருமண விழாவிற்கு புவி- ஸ்ருதி தம்பதியரோடு, முகுந்த்-மிருதுளா மற்றும் மகிழ்வேந்தன்-நந்து அவர்களது செல்லப்பிள்ளை மகிழினியும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விரைப்பான போலீசாக வளம் வந்த விக்கி, அதற்கு நேர் மாறாக தனது திருமணத்தில் புவியோடு சேர்ந்து திருமண வரவேற்பில் ஆட்டம் ஆட, மற்ற இரு ஜோடிகளும் தப்பாமல் உடன் ஆடினர். கணக்கும் வயிற்றுடன் ஸ்ருதி அமர்ந்திருந்தாலும், அவளது ஆவலை அவள் முகமே படம்போட்டுக்காட்ட, புவி அவளை கைத்தாங்களாய்ப் பற்றிக்கொள்ள, அவளும் இரண்டொரு நொடிகள் ஆட்டம் போட்டுவிட்டு நல்ல பிள்ளையாய் அமர்ந்துகொண்டாள்.

விக்கி, தான் தங்கியிருந்த புவி வீட்டின் மாடி வீட்டிலேயே பவித்ராவுடனான புது வாழ்வைத் தொடங்கினான். இருவரும் தாங்கள் புதுமணத் தம்பதியர் என்று ஒதுக்கமும், தனிமையும் பாராட்டாமல், முழுநேரமும் ஸ்ருதிக்கு துணையாய் இருந்தனர். மருத்துவர் குறித்த தேதி நெருங்க நெருங்க புவியைப் போல் பவியும், விக்கியும் ஆர்வமாகினர்.
“புவி, குழந்தைக்கு என்ன பேருடா வைக்கப்போற?”
“இன்னும் ரெண்டு மூணு நாள்ல குழந்தை பிறந்திடும். என்ன குழந்தைனு பார்த்துட்டு யோசிக்கலாம்னு விட்டுட்டோம்.”
புவி ஸ்ருதியைப் பார்க்க, அவளோ பயமும், பரவசமும் சூழ்ந்தவளாய் மெல்லிய படபடப்போடே இருந்தாள்.

“பேரு செலக்ட் பண்றதுல என்ன புவி பிரச்சனை? ஆண் குழந்தைக்கு ஒரு பேர், பெண் குழந்தைக்கு ஒரு பேர்’னு யோசிச்சு வச்சுடலாம்.”
புவியைவிட விக்கியே மிகவும் ஆர்வமானான்.
“ஆமா அண்ணா, பேரு யோசிக்கலாம்” என்று பவியும் கூற,
“நீயே ஒரு நல்ல பேர சொல்லுமா” என்றான் புவி.
“எனக்கு உலகத்துலேயே ரொம்பப்பிடிச்ச பேரு விக்னேஷ் அலைஸ் விக்கி தான் அண்ணா” என்று கூறிய பவித்ரா விக்கியைக் கண்டு நாணம் கொள்ள, புவியும், ஸ்ருதியும் அவர்களை விளங்காத பார்வை பார்த்துவைத்தனர்.
“நீ ஏன்டாப்பா அமைதியா இருக்க? உலகத்துலேயே உனக்கு பிடிச்ச பேரு எதுன்னு… எங்களுக்கு தெரியும்… இருந்தாலும் அதை உன் வாயாலேயே நீயே சொல்லிடு…” என்றான் புவி சலிப்போடு.
பவியைக் கண்டு புன்முறுவல் சிந்திய விக்கி, “எனக்கு உலகத்துலேயே ரொம்பப் பிடிச்ச பெயர் பவித்ரா அலைஸ் பக்கி” என்றவன், பவியின் முகம் போன போக்கைக் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க, அதைக் கேட்டு ஸ்ருதியும் கண்ணில் நீர் வர சிரித்து ஓய்ந்தாள். மலர்ந்திருந்த அவளது முகத்தை புவி இமைக்காது பார்த்திருக்க, விக்கியுடன் சேர்ந்து புவியைப் பரிகாசம் செய்து சிரித்துக்கொண்டிருந்தவள், திடீரென முகம் சுருங்கி பதட்டம் கொண்டாள். அடுத்த அரை மணி நேரத்தில் வலி எடுக்க, அவளை தாமதிக்காது மறுத்தவமனையில் சேர்த்தனர்.

அதிகாலை ஒளி பரப்ப சூரியன் துயில் எழும் தருவாயில், ஸ்ருதி-புவியின் வாழ்வில் வண்ண ஒளி கூட்ட, அவர்களின் திருமகள் பூமிக்கு அவதரித்தாள். ரோஜா பொதியென பட்டு மேனியாள் தொட்டிலில் கிடக்க, பெற்றவனின் உள்ளம் நிறைந்து முகத்தில் மகிழ்ச்சி பொங்கிப்பெறுகியது. மகிழ்வேந்தனும், நந்துவும் பிள்ளை பிறந்த செய்தி அறிந்து ஓடோடி வந்தனர்.
“ஸ்ருதி அப்படியே உன்னை மாதிரி இருக்கா…” என்று, குழந்தை மீது வைத்தக்கண் மீட்காமல் பார்த்திருந்தாள் நந்து.
“என்னடி, ஆசையா இருந்தா நீயும் ஒன்னு பெத்துக்கோ. என் பொண்ணு விளையாட துணை வேண்டாமா?” என்று ஸ்ருதி கூற,
“ஒரு எட்டு மாசம் பொறுத்துக்கோடி, பெத்து கொடுத்துடறேன்” என்றாள் நந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாய்.
மகிழ்வேந்தனுக்கும், நந்துவிற்கும் புவியும், விக்கியும் வாழ்த்துக்கள் கூறி இனிப்பு வழங்க, தனது பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளையை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தான், ரகு.
“அத்தை, மாமா… வாங்க!” என்று வாஞ்சையோடு வரவேற்றாள் ஸ்ருதி. சொந்தம் என்று கூறிக்கொள்ள உலகில் இருக்கும் ஒரே உறவு அவளது அத்தையும், மாமனுமே. ஆயிரம் கோபங்களும், வேதனைகளும் இருந்தாலும், தனது மகள் பிறந்திருக்கும் இந்த இனிய தருணத்தில் அவள் மனதின் தேடலை உணர்ந்து அவர்களை வரவழைத்த புவிக்கு விழியோர நீர்த்துளியால் நன்றி கூறினாள், ஸ்ருதி.
“ஸ்ருதிமா, இந்த அத்தைய மன்னிச்சுடு மா…” என்று அவர் மனம் வருந்த,
“அத்தை நீங்க எல்லாரும் வந்ததுல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?” என்றாள் ஸ்ருதி உளமார.
“புவி, எங்களுக்கு நீங்களும் இன்னொரு மகன் தான். ஸ்ருதி எங்க பொண்ணு. தெரிஞ்சோ தெரியாமலோ என் தங்கையும், மாப்பிள்ளையும் இறந்து போக நாங்க காரணமாயிட்டோம். அதுக்கு பிராயச்சித்தமா ஸ்ருதியையும், குழந்தையையும் அவங்க உடல் தேறும் வரை பார்த்துக்கணும்னு ஆசைப்படறோம்” என்று ஸ்ருதியின் மாமா புவியிடம் வேண்டிக்கொள்ள,
“நான் போன் பண்ணதும் நீங்க வருவீங்களோ வரமாட்டீங்களோனு நினைச்சேன். நீங்க வந்ததும் இல்லாம கூட இருந்து ஸ்ருதியையும், குழந்தையையும் பார்த்துக்கணும்னு சொன்னது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ்பா” என்றான் புவி, ஸ்ருதியின் மாமாவிடம் உரிமையாய்.

ரகுவும் தன் பங்கிற்கு மன்னிப்பு கோர, சஞ்சனாவை எதிர்கொள்ள முடியாமல் புவியும், விக்கியும் தவித்திருந்தனர்.
“புவி அண்ணா, நீங்க நடந்து முடிஞ்சதை நினைச்சு மனசுல எந்தக் கவலையும் வச்சுக்காதீங்க. உங்களோட நேர்மைய, டெடிகேஷனை, எனக்கு மட்டுமில்ல இந்த ஊருக்கே புரிஞ்சிடுச்சு. கடவுள் நம்முடைய வாழ்க்கையை முன்னமே தீர்மானிச்சிடுவார். அவருக்குத் தெரியும் என்ன பண்ணனும்னு. இப்போ எனக்கும் என் குழந்தைக்கும் அழகானதொரு குடும்பம் கிடைச்சு, நானும் ரகுவும் சந்தோஷமா இருக்கோம். நான் பழசையெல்லாம் யோசிக்கறதே இல்லை. நீங்களும் யோசிக்காதீங்க…”
சஞ்சனா கூறியதைக் கேட்டு மனதோரம் நெருடிய குற்ற உணர்வு முற்றிலும் மட்டுப்பட்டதாக உணர்ந்தான், புவியரசன்.

புவியரசனின் இல்லம் அவனது செல்ல மகளின் பெயர் சூட்டு விழாவிற்குத் தயாராகிக்கொண்டிருந்தது.

ரகுவும், விக்கியும் வீட்டின் அலங்காரங்கள் செய்து முடிக்க, தேவையான பொருட்களை சீர் தட்டில் பவியும், சத்யாவும் அடுக்கி வைக்க, குழந்தைக்கு மிது புத்தாடை உடுத்த, ஸ்ருதிக்கு நந்து உதவிகள் செய்ய, பூஜை பொருட்களை சஞ்சனாவும், அவளது மாமியாளும் சரி பார்த்து எடுத்து வைக்க, கார்த்திக் கேட்டரிங் ஆட்களுக்குத் துணையிருக்க, முகுந்தும், மகிழும் தொட்டிலை அலங்கரிக்க, விருந்தினரை வரவேற்று விருந்தோம்பினான் புவியரசன்.

“குழந்தைக்கு என்ன பேர் முடிவு பண்ணியிருக்கீங்க?” என்று ரகு புவியை வினவ, ஸ்ருதி உட்பட அனைவருமே புவியின் பதிலை ஆவலோடு எதிர்பார்த்தனர்.
“அது தாய்மாமனோட கடமையாச்சே. விக்கிய கேளுங்க” என்று புவி கூற, மனம் நெகிழ்ந்த விக்கி, குழந்தையை தொட்டிலிலிட்டு, “நிலா மாதிரி அழகா இருக்கற எங்க வீட்டு தங்கத்தை நாங்க ‘தமிழ் நிலா’னு கூப்பிடப்போறோம்!!” என்றான் பரவசம் குறையாமல். அப்பெயர் பிடித்துவிட்ட களிப்பில் குழந்தை உறக்கத்தில் மென்னகை சிந்தி, மாமனின் சுட்டு விரலை பற்றிக்கொண்டது!!

வாழ்க வளமுடன்!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here