தீரா மயக்கம் தாராயோ 16

0
692

சுதா கூறியதைக் கேட்ட ஸ்ருதியின் உடல் முகுந்தனை நினைத்து நடுக்கம் கொள்ள, நடுங்கும் தன் கரத்திலிருந்த முகுந்தனுக்கு எதிரான ஆதாரங்களை வெறித்தபடி இருந்தது அவளது விழிகள்.

ரகுவின் கூற்றையும் சுதாவின் ஆதாரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தவளால் முகுந்தனை சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. ‘காதல் என்னும் மாய வலை ஒருவரை இப்படியும் வெறி கொள்ள செய்யுமா’ என்று ஆராயும்படி செய்திருந்தது முகுந்தனின் செய்கைகள்.

‘உன் மேல் உள்ள காதலினால் தானே இவ்வாறு செய்தான்’ என்று அவனுக்காக பேசிய மனதை கடிவாளமிட்டு அடக்கியவள், “காதலா? முகுந்தன் என் மேல வச்சிருந்ததுக்கு பேர் காதலா? தான் நேசிக்கிற பொண்ணோட உணர்வுகளுக்கு கூட மதிப்பு குடுக்காம தன்னோட உணர்வுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுக்கிறதுக்கு பேர் காதலா?” முகுந்தனுக்கு சாதகமாக வாதாடிய தன் மனதிடம் ஆக்ரோஷமாக கேள்வி கேட்டவள்,

“இல்ல! அதுக்கு பேர் காதல் இல்ல வெறி! என் விஷயத்துல ரகு அத்தான் கிட்ட தோற்றுவிட கூடாதுங்கிற வெறி! அழகான குருவிக் கூடா இருந்த என் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிய வெறி!” தனக்குள் குமுறியவள், தந்தை தாயின் நினைவுகள் மேலோங்க தான் ஆதரவின்றி தவிப்பதற்கு காரணமாய் இருந்த காதல் என்று பெயர் சூட்டப் பெற்ற வெறி தானே என்ற நிதர்சனத்தை கண்டு கொண்டவள் சுற்றம் மறந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

துக்கம் தொண்டையை அடைக்க, ஆறுதல் தேடி அலைந்தது பெண்ணவளின் மனம். தேடலின் முடிவோ பாகற்காயை கடித்தது போல் கசக்க, ஆறுதல் கூற கூட ஒருவருமின்றி தனித்து விடப்பட்டுள்ளோம் என்று கனத்து போனது அந்த பேதையின் மனம்.

மனதை அடைத்த துக்கம் யாவும் கண்ணீராய் கரைய, தன்னைத் தானே சமாதானம் செய்து, சுற்றி தன் பார்வையை சுழல விட்டவள், தான் இருக்கும் இடம் உணர்ந்து அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்துப் போனாள்.

முகுந்தனுக்கு எதிரான ஆதாரங்களை ஸ்ருதியிடம் கொடுத்துவிட்டு சுதா சென்றுவிட, யோசனையில் சுழன்றவள் தன் எதிரே இருந்த மெட்ரோவில் ஏறியதையோ இல்லை அது பிர்-ஹாகீம் (Bir- Hakeim) சப்வே (Sub Way) ஸ்டேஷனில் வந்து நின்றதையோ அவள் கவனிக்கவில்லை.

பாரிஸிற்கு வந்த பின் நந்து இல்லாமல் அவள் எங்குமே சென்றதில்லை. பயணம் எத்தனை தொலைவாக இருந்தாலும் நந்துவின் துணையோடு பயமின்றி சென்று வந்து விடுவாள். ஆனால் இன்றோ நந்துவின் துணையின்றி ஒரு நெடுந்தூர பயணம். சிறிதாய் பயம் தொற்றிக்கொள்ள சுற்றிலும் தன் பார்வையை சுழற்றிவள் கண்ணில் பட்டது அந்த வானுயர வளர்ந்து நின்ற ஈஃபில் டவர்.

அதைக் கண்ட ஸ்ருதியின் மனம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. இதயத்தின் அடி ஆழத்திலிருந்து எதையோ தட்டி எழுப்புவது போல் ஓர் உணர்வு தோன்ற, அது என்னவென்று இனம் காண இயலவில்லை அவளால். ஏதோ ஒரு மந்திர சக்தி அவளை அதற்கு நேராக இழுத்துச் சென்றது.

இதோ வந்துவிட்டால், உலகமே அதிசயிக்கும் பிரம்மாண்டம்!! இதோ! அவள் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டிருக்க, கண்கள் விரிய அதன் அழகில் லயித்திருந்தாள் பெண்ணவள். “எத்தனையோ முறை நந்து அழைத்தும் வர விரும்பாத அவள் மனம் அனிச்சையாய் இங்கு வந்ததன் காரணம் ஏனோ” என்று தன்னை தானே கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

காரண காரியமின்றி இப்புவியில் எதுவும் நிகழாது. முன்பு நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கப்போவது என அனைத்தும் மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்டது. அனைத்திற்கும் காரண கர்த்தாவாக மனிதன் என்னும் பொம்மையை அழகாய் ஆட்டி வைக்கும் சர்வ வல்லவன் கையில் பொம்மையாய் அவள்.

குறிப்பிட்ட இலக்கில்லாமல் சென்று கொண்டிருக்கும் அவளின் வாழ்க்கை பயணத்தில், அவள் பயனிக்க வேண்டிய சரியான பாதையை சுட்டிக்காட்டவே இப்பயணம் என்று சிறிதும் அறியாமல் தன்முன் ஒய்யாரமாய் நிற்கும் பிரம்மாண்டத்தை ரசித்தபடி இருந்தாள் அந்த பேதை. இனி அவள் வாழ்வில் அவன் நிகழ்த்தப் போகும் திருவிளையாடலை எண்ணி மாயப் புன்னகை ஒட்டிக்கொண்டது அந்த சர்வ வல்லவனின் இதழில்.

ஈஃபில் டவரிலிருந்து பார்வையை விலக்கியவளின் விழிகள் சுற்று புறத்தை ஆராய துவங்கியது. ஆராய்ச்சியின் முடிவில் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. சுற்றிலும் காதல்! காதலர்கள்! காதலர்களின் உலகம் இதுவோ என்று தோன்றும் படி சுற்றிலும் காதலர்களின் கூட்டம் அலைமோதியது.

“அப்படி என்ன இருக்கிறது இந்த காதலில் இப்படி கூட்டம் கூட்டமாய் அலையும் அளவிற்கு” தனக்கு தானே கேட்டுக் கொண்டிருந்தவளின் உதட்டில் விரக்தி புன்னகை வந்தமர்ந்தது. இந்த காதலினால் தானே தான் எந்த ஒரு பிடிப்பும் இன்றி தனிமையில் வாழ்கின்றேன் என்ற ஆற்றாமையில் வெளிவந்த விரக்தி புன்னகை அது.

அமைதியாய் சுற்றத்தை வேடிக்கை பார்த்தவளின் கண்களில் விழுந்தனர் அந்த வயதான காதல் ஜோடி. காதல் என்னும் பந்தத்தால் அழகாக பிணைக்கப்பட்டுடிருந்தனர். இத்தனை வயதிலும் ஒருவரை ஒருவர் தாங்கி, ஆதரித்து அரவணைத்து, சற்றும் தொய்வில்லாத வாழ்க்கை வாழ்கின்றனர் என்றால் அது அவர்களுக்கிடையே இருக்கும் அசைக்க முடியாத காதலால் மட்டுமே சாத்தியம் என்று உணர முடிந்தது ஸ்ருதியால்.

உணர்ந்த ஸ்ருதியின் மனதில் ரகுவின் நினைவுகள் வந்து போக, கண்களை இறுக்க மூடி ரகுவை பற்றி யோசிக்கலானாள். தன் சிறுவயது சினேகிதன், தன் இளவயதின் நாயகனாய் திகழ்ந்து சிறந்தவன் என்று பெயர் பெற்றவன், தன் மணவாளன் ஆக போகும் நேரத்தில் பொய்த்துப் போனதேனோ என்று தனக்குள் குமுறியவள்,

அந்த வயதான ஜோடியை பார்த்து, “இவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள், சவால்கள், இன்னல்களை சந்தித்திருப்பார்கள் அல்லவா? அத்தனையையும் கடந்து வந்த பின்னும் தொய்வில்லாத காதல் இவர்கள் பந்தத்திற்கு சாட்சியாய் இருக்கிறதல்லவா? எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்த இவர்கள் காதல் பொய்த்துப் போகவில்லையே! அப்படி இருக்க ஒரு சிறு பிரச்சனை அதுவும் மனம் விட்டு பேசியிருந்தால் சரியாகி போகின்ற ஒரு பிரச்சினையை ரகு அத்தான் ஏன் பெரிதாக்கினார். இந்த சிறு பிரச்சனைகாக என் ரகு அத்தான் என்மேல் வைத்த காதல் எப்படி பொய்த்து போனது. அதுவும் சந்தேகம் என்னும் நோயால், அவர் காதல் மாறி போனதேனோ” கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

ரகு செய்ததற்காக அவள் அவனை மன்னித்து விட்டாள் தான். ஆனால் அதற்காக அவனை இனி தன் சரிபாதியாக ஏற்றுக்கொள்வது என்பது நடக்காத காரியம் என்று அடித்துச் சொல்லியது அவள் மனம்.

ரகு முகுந்தன் என்று இருவரும் தன் மண்டைக்குள் அமர்ந்து குடைவது போல் இருக்க, இவர்கள் கண்ணை விட்டு தான் மாயமாகி போய்விட மாட்டோமா என்று ஏங்கியது அவள் மனம். அவர்கள் இருவரையும் காண்பதை அந்த அளவுக்கு வெறுத்தால்.

மனம் கனத்துப் போக ரகு மற்றும் முகுந்தனின் நினைவுகளை ஓரம் கட்டியவள் கொந்தளிக்கும் மனதை தனிக்க அமைதியாய் கண்களை மூடி தன்னை தொட்டு செல்லும் குளிர் தென்றலை ரசித்தவள், தன் வாழ்வில் தான் எதிர்கொண்ட கசப்புகளை துறந்து இனிமையான பொழுதுகளை அசைபோட துவங்கினாள்.

இனிமை என்றதுமே முதலில் அவள் நினைவுக்கு வந்தவர்கள் அவள் பெற்றோர்கள் தான். அவர்கள் அல்லவா அவள் வாழ்வின் ஆணிவேர்! அவர்களின் இறப்பிற்கு பின் தானே அவள் வாழ்வின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது.

அடுத்ததாக அவள் நினைவில் வந்தது அவளின் குழந்தைப் பருவம். நிச்சயம் அதில் ரகு இடம் பெற்றிருந்தான் தான்! ஆனால் காதலனாக அல்ல மாறாக அவள் பாசம் கொண்ட மாமன் மகனாக.

அடுத்ததாக அவள் மனதை உரசிச் சென்றது அவளின் கல்லூரி பருவம். இனிமையான பருவம்! கஷ்டம் என்றால் என்ன என்று கூட அறியாத இளமைப்பருவம்! அதை நினைக்கும் போதே புன்னகை வந்தமர்ந்தது அவள் இதழில்.

கல்லூரி கால நினைவுகளை அசை போட்டவளின் கண்களில் மின்னல் போல் வந்து சென்றது அந்த முகம். சட்டென ஆழ் மனதிலிருந்து மின்சாரம் தாக்கியதைப் போல் ஓர் உணர்வு ஏற்பட்டது அவளுக்கு.

“என்ன ஆச்சு எனக்கு” கண்களை இருக்க மூடி யோசித்தவள், மின்னல் கீற்றாக தன் கண் முன் வந்து சென்ற முகத்தை ஜூம் செய்து பார்த்தவளின் அகமும் முகமும் புன்னகையால் மலர்ந்தது.

“ஐயோ இவனா! இந்த கேரக்டரை நான் எப்படி மறந்தேன்? இவனுக்கு மட்டும் நான் அவனை மறந்துட்டேன்னு தெரிஞ்சுது பேசியே என்ன சாகடிச்சிடுவானே” என்றவள், தான் அவனை மறந்து விட்டேன் என்று கூறினால் கண்களை சுருக்கி இடது புருவத்தை ஒரு மாதிரி கோணலாக உயர்த்தி முகத்தை ஒரு மார்க்கமாக வைத்து அவன் முறைக்கும் அழகை நினைவுக்கு கொண்டு வந்தவளால் தன் சிரிப்பை அடக்க மாட்டாது சுற்றம் மறந்து குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

“சற்று முன் சுற்றம் மறந்து குலுங்கி குலுங்கி அழுதவள் இவள் தானா?” என்று கேட்க தோன்றும் அளவுக்கு சிரித்துக்கொண்டிருந்தாள் நம் நாயகி. சற்று நேரத்தில் சிரிப்பை கடினப்பட்டு அடக்கியவள் பார்வையில் விழுந்தது அந்த ஈஃபில் டவர். இந்த ஈஃபில் டவர் தன்னை ஈர்ப்பதற்கான காரணம் தற்போது தெள்ள தெளிவாக புரியத் துவங்கியது அவளுக்கு.

“ஏன்டா தொண தொணன்னு எந்த வேலையும் செய்யாம பேசிக்கிட்டே இருக்கியே வாழ்க்கையில உன் லட்சியம் தான் என்ன” ஓயாமல் எதையாகிலும் உளறிக் கொண்டிருக்கும் அவன் வாயை அடைக்கும் வழி அறியாமல் அவனிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டாள் ஸ்ருதியின் தோழிகளில் ஒருத்தி .

கதிரையில் சாய்ந்தமர்ந்து உதட்டை பிதுக்கி தன் நாடியில் கை வைத்து பலமாய் யோசித்தவன், “ஸோ சிம்பிள்!! பாரிஸ்ல இருக்குற ஈஃபில் டவர் முன்னாடி மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட கைகோர்த்து கெத்தா நின்னு, இன்னிலிருந்து காதலுக்கு சின்னம் நீ கிடையாது நாங்க தான்னு கத்தி சொல்லி, என் சரிபாதியோட நெற்றியில அழகா ஆழமா ஒரு முத்தம் குடுக்கணும் …” உணர்ச்சி குவியலாய் அவன் சொல்ல ஏன்டா கேட்டோம் என்றானது அப்பெண்ணுக்கு .

“லட்சியம் என்னனு கேட்டா ஒரு வார்த்தையில பதில் சொல்லணும் இப்படி நீட்டி முழுக்கிட்டு கண்டதையும் சொல்லக் கூடாது” அவனை முறைத்துக் கொண்டே கூறிய ஸ்ருதியிடம், “அட போ பொம்மி! நீ கூட என்ன புரிஞ்சுக்கல.. நான் எவ்வளவு ஃபீல் பண்ணி சொன்னேன் தெரியுமா?” என்று சிணுங்கியவனை கண்டு சிறிதாய் புன்னகைத்தாள் ஸ்ருதி . அவளின் பொம்மை போன்ற முக அமைப்பை பார்த்து அவன் அவளுக்காய் வைத்த பெயர் தான் பொம்மி .

அவன் அன்று கூறிய வார்த்தைகள் அவளே அறியாமல் அவளின் ஆழ் மனதில் பதிந்து கிடக்கின்றன, அதுவும் அவன் கூறிய தினுசிலேயே. அதுவே அவளுக்கு சற்று வியப்பாய் இருந்தது.

அது மட்டுமல்ல கண்களை மூடி அமர்ந்திருந்தவளுக்கு அவனின் குரலும் அவன் மொழிந்த ஒவ்வொரு வார்த்தைகளும் காட்சிகளுடன் படமாய் ஓடியது அவள் மனதில். அவன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர். அவன் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும்.

அந்த மேடை பேச்சாளனின் கணீர் குரலுக்கு ஸ்ருதி ரசிகை என்றால் அவளின் தேன் சிந்தும் குரலுக்கு அவன் ரசிகன். எந்த ஆடவனிடமும் அத்தனை எளிதில் பழகாத ஸ்ருதி இவனிடம் நட்பு கரம் நீட்டியதற்கு காரணமும் இதுவே. ஒருவரின் குரலின் மற்றவர் தீரா மயக்கம் கொண்டிருந்தனர்.

அந்த ஈஃபில் டவரை ஏறிட்டு பார்த்தவள், “இதன் கம்பீரத்திடம் போட்டி போட்டு வென்றுவிட முடிந்திடுமா அவனால்?” தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள், “நிச்சயம் அவனால முடியும்! அந்த சேட்டை பையனால முடியாததுனு ஒன்று உண்டா? நிச்சயம் அவனோட காதல் இந்த உலக பிரமாண்டத்த விட உன்னதமா இருக்கும். ஆனா அவன் காட்ற காதலுக்கு இணையான காதல அவன் மனம் கவர்ந்த பொண்ணால அவனுக்கு திரும்ப குடுக்க முடியுமா?” கேள்வி வெளிவந்த அடுத்த நொடி தன் நெஞ்சை ஈட்டியால் யாரோ குத்தியதை போல் ஓர் உணர்வு ஏற்பட்டது அவளுக்கு.

“அவன் மனம் கவர்ந்த பெண் நீ தானே..! உன்ன விட்டிட்டு வேற யார் கூட அவன் இங்க வருவான்.. அந்த நல்லவனோட காதல உதாசீனப் படுத்தியதுனால தான் உனக்கு இந்த நிலைமை” என்று அவளை குற்றம் சாட்டியது அவளின் மனசாட்சி.

ஆம் அவனின் மனம் கவர்ந்தவள் நம் ஸ்ருதி தான். “என்னையன்றி வேறு ஒரு பெண்ணோடு நிச்சயம் அவன் இங்கே வந்திருக்க மாட்டான்” என்று அடித்துக் கூறியது அவள் மனம். அவன் காதலை மறுத்தவளும் அவளே அந்த காதலுக்கு சாட்சியாய் விளங்குபவளும் அவளே. அவன் காதலுக்கு சாட்சியாய் நிற்கும் அவளது மனதிற்கு அந்த காதலை ஏற்றுக்கொள்ளும் மனம் இருகிறதா என்றால் இல்லை என்றே கூறாம்.

“தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கண்ணியமாய் விலகி நின்று தன்னை காதல் செய்த கண்ணிய காதலனல்லவா அவன்” பெருமை அடித்தது அவள் மனம். அவள் நினைவுகள் முழுவதையும் அந்த அன்புக் கள்வன் ஆக்கிரமித்திருக்க கண்கள் மூடி அதில் லயித்திருந்தவளை அதிர்ந்து சுயம் பெற செய்தது அந்த வெடி சத்தம்.

அதிர்ந்து விழி திறந்தவளின் முன்னால் ஒருவன் ஒரு சிறுவனின் தலையில் துப்பாக்கியை வைத்துபடி நிற்க, அவனை சுற்றி துப்பாக்கி ஏந்திபடி அவனையே குறி பார்த்து நின்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தான்.

“ஏய் போலிஸ்! எவனாவது கிட்ட வந்தீங்க இந்த பையன் தலை சிதறி தூள்தூள் ஆய்டும் ஜாக்கிரதை!” அவன் மிரட்ட சிறிதுகூட அசையவில்லை அந்த காவலர்கள். அதுவே அவர்கள் அவனின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை என்பதை அழகாக பறைசாற்றியது.

அதை கண்டு கொண்டவன், “இது வெறும் மிரட்டல் இல்ல! நான் சொன்னா செய்வேன்! அது உங்களுக்கே நல்லா தெரியும்! மரியாதையா உங்க கையில இருக்கிற துப்பாக்கியை கீழே போடுங்க” என்றவன் தன்னை சுற்றி நிற்பவர்களை விடுத்து, தன் நெற்றி பொட்டை குறி பார்த்து கொண்டிருப்பவனிடம்,

“ஏய் அரசு! துப்பாக்கிய தூர தூக்கி போட சொல்லு உன் டீம் மெம்பர்ஸ் கிட்ட இல்லைன்னா….” என்று கத்தியவன், அந்த சிறுவனின் தலையில் குறி பார்த்த அந்த துப்பாக்கியை அழுத்தி பிடித்து சுடுவதுபோல் மிரட்ட அதில் சுற்றி இருந்த அனைவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது ஒருவனை தவிர.

ஸ்ருதியின் பார்வை மிரட்சியோடு மிரட்டும் அவனையே பார்த்தபடி நிற்க, அவன் யாரை மிரட்டுகிறான் என்று கவனிக்க தோன்றவில்லை அவளுக்கு. ஆனால் அவளை திரும்பி பார்க்க வைத்தது அந்த கணீர் குரல்.

“நானும் அதைத் தான் சொல்கிறேன் வரதன்.. ஒழுங்கா அந்த பையனை விட்டிட்டு மரியாதையா சரண்டர் ஆனா உனக்கு நல்லது… இல்லைனா என் ஒரே ஒரு புல்லட் போதும் உன் தலைய சிதறடிக்க.. சோ புட் யூவர் கன் டவுன்” கர்ஜனையாய் ஒலித்த குரலை கேட்டு அதிர்ந்து திரும்பினாள் அவள்.

அங்கே அவள் எண்ணத்தின் நாயகன் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த துப்பாக்கி அங்கே மிரட்டிக் கொண்டிருந்தவனை குறிபார்க்க, அவன் கண்களிலோ அத்தனை கூர்மை. ஆறடிக்கும் சற்று உயர்வான உயரம், அதற்கேற்றார் போல் உடல் அமைப்பு, கோபத்தில் சிவந்ததிருந்த அவன் முகம் என அவன் அங்கங்கள் ஒவ்வொன்றும் சுற்றியிருந்த அனைவரையும் அவன் மிரட்டாமலேயே மிரட்டியது.

“வேணாம் அரசு! ரொம்ப தப்பு பண்ற… பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்… தமிழ் நாடே கொந்தளிக்கும்டா” வரதன் மேலும் மிரட்ட

அதற்கு சற்றும் அலட்டிக்கொள்ளாமல், “அஹான்” நக்கலாய் புருவம் உயர்த்தியவன் இரண்டடி முன் வைத்து, “உனக்காக தமிழ்நாடு கொந்தளிக்கிறத பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு வரதன். அந்த திரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ ஏன் வீணாக்கணும்?” என்று எள்ளலாக கூறியவன், வரதனுக்கு பின்னால் நின்ற காவலனிடம், “விக்கி ஷூட்!” என்றதும் பயத்தில் வரதன் பின்னால் திரும்ப, அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய நம் நாயகன், வரதனின் கையில் குறி பார்த்து சுட, அவன் கையிலிருந்த துப்பாக்கி எங்கோ பறந்து சென்று விழ, கண் இமைக்கும் நேரத்தில் வரதனை நெருங்கி சிறுவனை மீட்டிருந்தான். தற்போது அவனின் துப்பாக்கி வரதனின் நெற்றியை சரியாய் குறி பார்த்தபடி நின்றது. ஆடித்தான் போனான் வரதன்.

சுற்றியிருப்பவர்கள் கண்கள் வியப்பில் விரிய, ஸ்ருதியோ அவனை விட்டு தன் பார்வையை விலக்கவே இல்லை. அவன் எப்பொழுது வரதனின் அருகே வந்தான், எப்பொழுது சிறுவனை மீட்டான், எப்பொழுது வரதன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான் என்று சுற்றியிருந்த ஒருவராலும் கூற முடியவில்லை அத்தனை வேகம் அவனிடம்.

வரதனின் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தி, “நீ என்ன பெரிய கொம்பனா உன்ன அடிச்சா தமிழ்நாடே கொந்தளிக்கிறதுக்கு? சரி நான் இப்ப உன் மேல கை வைக்குறேன் உன்னால என்ன பண்ண முடிமோ பண்ணிக்கோடா” என்றவன் ஓங்கி வரதனின் கன்னத்தில் அறைந்திருந்தான்.

வரதனின் வாயில் இரத்தம் கொட்டிக் கொண்டிருக்க அவனை நெருங்கியவன், “இன்னொரு தடவை இந்த புவியரசு லைன்ல நீ கிராஸ் பண்ணா வர சேதாரத்துக்கு இந்த அரசு பொறுப்பில்ல” வரதனின் கண்களை ஊடுறுவும் தன் கூர் விழிகளை வைத்து மிரட்டினான் புவியரசன் ஐபிஎஸ், Deputy Superintendent of Police.

பின் “வேணு” என்று கர்ஜித்தவன், அவன் வந்ததும் “இவனை முதல்ல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க..” என்றவன் விக்கியை அழைத்து, “இந்த நாட்டு போலீஸ் கிட்ட பர்மிஷன் வாங்கி முடிக்க வேண்டிய ஃபார்மாலிடீஸ் எல்லாத்தையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சிடு… நாளைக்கு இவன் இந்தியால என் ஸ்டேஷன்ல என் கஸ்டடில இருக்கணும்” வரதனை பார்த்துக்கொண்டே கூற பய பந்து உருண்டது வரதனின் வயிற்றில்.

தன்னுடன் பணிபுரியும் காவலர்களுக்கு உத்தரவிட்டவன், பயத்தோடு நின்ற மக்களை நோக்கி தன் பார்வையை சுழல விட்டான். சுற்றி இருந்த அனைவரின் முகத்தையும் ஆராய்ந்தவனின் விழிகள் ஒரு கட்டத்தில் ஸ்ருதியின் விழிகளை சந்தித்தது. ஒரே ஒரு நொடிதான் அந்த பார்வை ஸ்ருதியின் மேல் இருந்தது பின் வேறு பக்கம் திரும்பிக் கொண்டது.. தனக்கு தெரிந்த பெண் என்றோ இல்லை தன் மனம் கவர்ந்த பெண் இவள் என்றோ சுட்டிக்காட்டும் பார்வை அவனிடம் எள்ளளவும் இல்லை. மற்றவர்களை பார்த்த ஆராய்ச்சி பார்வை தான் இவளிடமும்.

அவன் தன்னை கண்டு கொள்ளாமல் சென்றதை பார்த்து, ஒருவேளை அவன் தன்னை மறந்து விட்டானோ இல்லை அவனுக்கு திருமணம் ஆகி இருக்குமோ அதுதான் தன்னை கண்டு கொள்ளாமல் சென்றானோ என பலவிதமான எண்ணங்கள் அவளை ஆட்டி படைத்துக் கொண்டிருக்க, ஏனோ அவள் அடி மனம் நிச்சயம் அவன் என்னை தவிரற வேறு எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று அடித்து சொல்லியது.

கண் பார்க்கும் தூரத்தில் அந்த வரதனை கைது செய்து வண்டியில் ஏற்றிக்கொண்டு இருக்க, இந்நாட்டு காவல் அதிகாரிகளிடம் ஏதோ பேசியபடி நின்ற புவியரசனை கண்டவள் அவனிடம் சென்று பேசலாமா என்று எண்ணிய அடுத்த நொடி,

“வேண்டாம்டா சாமி! ஏற்கனவே இரண்டு பேர் படுத்துற பாடு போதாதா! இதுல இவன வேற அந்த லிஸ்ட்ல் சேர்க்கணுமா?” என்று யோசிக்க,

“அவங்களும் புவியும் ஒன்னா?” தன்னிடம் கேள்வி கேட்ட மனதிடம்,

“நிச்சயம் இல்ல! அவங்கள விட புவி தௌசண்டு டைம்ஸ் பெட்டெர். நிச்சயம் அவன் என் விருப்பத்தை மீறி எதுவும் செய்ய மாட்டான்”

“அப்புறம் என்ன? போய் பேச வேண்டியது தானே” கேட்ட மனதிற்கு மௌனம் தான் பதிலாய் கிடைத்தது.

உண்மை என்னவென்றால், புவி அவளிடம் யாசிக்கும் ஒன்றே ஒன்று அவளது காதல் மட்டுமே அதையும் அவள் ஏற்கனவே நிராகரித்து விட்டாள். இனி மற்றும் ஒருமுறை அதை அவன் யாசித்து அதை அவள் நிராகரித்து அவனை காயப்படுத்த அவள் தயாராக இல்லை. ஸ்ருதியின் காயப்பட்ட மனம் இன்னொரு நல்ல மனதை காயப்படுத்த விரும்பவில்லை என்றே கூறலாம். ஆனால் இன்னும் சற்று நேரத்தில் அவனின் காதல் கொண்ட மனதை அவள் காயப்படுத்த போகிறாள் என்று நிச்சயம் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவனிடம் பேச வேண்டாம் என்று முடிவெடுத்து, அவ்விடத்தை விட்டு செல்ல அடி எடுத்து வைத்தவளின் கால்கள் அப்படியே உறைந்து நின்றது, அவனது “பொம்மி” என்ற அழைப்பில்.

நிஜமாகவே அவன் தான் தன்னை அழைத்தானா இல்லை தன் பிரமையோ இது என்று திரும்பி பார்க்க, “இல்லை” என்று பதில் அளித்தது அவன் புன்னகை பூத்த முகம். கண்கள் விரிய அவனைப் பார்த்தவள் அடுத்த நொடி விக்கித்து நின்றாள். அவனது வலிய கரத்தினுள் பூக்குவியலாய் சிறைப்பட்டிருந்தாள் அவனது பொம்மி. அவனது அணைப்பின் இறுக்கமே அவனது இத்தனை வருட தவிப்பை அழகாய் உணர்த்தியது.

“பொம்மி! ஐ அம் சோ ஹாப்பி!! என் பொம்மிய நான் பார்த்துட்டேன்…அவ எனக்கு திரும்ப கிடைச்சுட்டா…” அவளை அணைத்தபடி மகிழ்ச்சியாய் வெளி வந்தது அவன் வார்த்தைகள்.

பின் அவளை தன்னை விட்டு பிரித்தவன் கண்கள் நிறைய காதலுடன், “எங்க நீ எனக்கு திரும்ப கிடைக்க மாட்டியா, உன்ன திரும்ப பார்க்கவே முடியாதோன்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். ஆனா இப்ப நீ எனக்கு திரும்ப கிடைச்சிட்ட” பூரிப்பாய் அவன் சொல்ல, அதை உணர கூட முடியாமல் சற்று முன் அவன் செய்த காரியத்தால் உடல் நடுங்க நின்றுகொண்டிருந்தாள் அவள்..

பூரிப்பாய் பேசிக் கொண்டிருந்தவனின் முகம் சட்டென கருத்து விட முறைப்பாய் அவளை ஏறிட்டவன், “ஏன் பொம்மி நான் உன்ன தெரிஞ்ச மாதிரி காட்டிக்காட்டி உடனே என்ன விட்டு போயிடுவியா. ஓடிவந்து என்ன எப்படிடா நீ மறக்கலாம்னு என் தலையில ரெண்டு கொட்டு குடுத்து கேட்டு இருக்கணும்மா இல்லையா?” தன்னிடம் கோபத்தில் கத்துபவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் அவனை பார்த்தபடி நின்றாள். .

அவளின் மௌனத்தை கண்டு அவனே பேசினான், “நான் அந்த வரதன் முன்னாடி உன்கிட்ட பேச வேண்டாம்னு நினச்சு தான் உன் கிட்ட பேசல..ஆனா நீ மறுபடியும் காணாம போக பார்க்கிற” சிறுபிள்ளையாய் தன்னிடம் முறுக்கிக்கொண்டு நிற்பவனை பார்த்து குறுநகை எட்டிப் பார்த்தது அவள் இதழில்.

இத்தனை நேரம் அவள் மௌனத்தை பார்த்து அமைதியாய் இருந்தவனின் பொறுமை காற்றோடு பறக்க, கடுப்பானவன், “என்ன பொம்மி… நான் இவ்வளவு பேசுறேன் நீ ஒரு வார்த்தை கூட என்கிட்ட பதிலுக்கு பேச மாட்டேன்குறியே.. போ பொம்மி” முறுக்கிக்கொண்டு அவன் திரும்பி நிற்க, சற்று முன் தன் ஒற்றைப் பார்வையால் அனைவரையும் மிரள வைத்த புவியரசன் தானா இவன்” அவனிடம் இருக்கும் இருவேறு குணங்களை பார்த்து வியப்புற்றாள் அவனது பொம்மி.

அவன் முறுக்கிக்கொண்டு நிற்பதை பார்த்து அவளின் குறுநகை சிரிப்பாய் மாற்றம் கொள்ள. “நீ கொஞ்சம் கூட மாறவே இல்ல புவி… தொண தொணன்னு பேசிட்டே இருக்க…சரி நாம கேள்வி கேட்டோமே எதிர்ல இருக்கிறவங்களுக்கு பதில் சொல்ல ஒரு சின்ன கேப்பாவது விட்டியா ம்ஹூம்.” தலையை இட வலமாக ஆட்டியவள், “நான் ஸ்டாப் கொண்டாட்டம் மாதிரி பேசிக்கிட்டே இருக்கடா” என்று அவனை கலாய்த்து சிரிக்க, பல வருடம் கழித்து கேட்ட அவளின் குரலின் இனிமையில் மெய்மறந்து நின்றான் புவியரசன்.

புவியின் மோன நிலையை கலைக்க அங்கே வந்து சேர்ந்தான் புவியின் நண்பன் விக்கி என்னும் விக்னேஷ். “டேய் மச்சான் எங்கடா போன? உன்னை எங்கெல்லாம் தேடுறது?” என்று புவியிடம் கேட்டபடியே திரும்பியவன் கண்ணில் பட்டாள் ஸ்ருதி.

ஆச்சரியத்தில் கண்களை விரித்தபடி, “ஹே புவி!! இது ஸ்ருதி தானே” என்று கேட்டவன் புவியின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் ஸ்ருதியிடம் திரும்பி,

“எங்கமா போயிருந்த? உன்னை காணாம இவன் பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிட்டான். உன்ன தேடி பைத்தியம் மாதிரி எங்கெல்லாம் அலைஞ்சான் தெரியுமா. இந்தியா முழுசா சல்லடை அடிச்சு தேடிட்டான்… நீ என்னடான்னா பாரிஸ்ல வந்து உட்கார்ந்திருக்க” ஆதங்கமாய் வெளி வந்தது அவன் வார்த்தைகள்.

“டேய் சும்மா இருடா!” என்ற நண்பனின் பேச்சை சட்டை செய்யாதவன், “இன்னொருக்கா அவனை விட்டு போயிடாதமா… பையன் செத்தே போய்டுவான்… இந்த காக்கி சட்டை தான் அவன இவ்வளவு நாள் உயிரோட வச்சிருக்கு… ப்ளீஸ்மா!” நண்பனுக்காக அவளிடம் கெஞ்சவே துவங்கி விட்டான் விக்கி

கல்லுரி முடிந்த அதுத்த வருடமே சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவன் பயிற்சிக்காக முசோரிக்கு செல்வதற்கு முன் ஸ்ருதியிடம் அவன் காதலை வெளிப்படுத்தியவன், அவள் பெற்றோரை சந்தித்து, அவர்களின் ஆசி பெற்றுக்கொண்டு தான் பயிற்சிக்கு சென்றான்.

ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வந்து, அவள் தந்தையிடம் அவளை பெண் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தான், அதுவும் ஸ்ருதி விரும்பினால் மட்டுமே. ஆனால் அவன் திரும்பி வந்த போது அனைத்தும் தலைகீழாய் மாறி இருந்தது.

அவளது பெற்றோர் இறந்த செய்தி அதிர்ச்சி தந்தது என்றால் ஸ்ருதியை காணவில்லை என்ற செய்தி பெரும் இடியாய் அவன் தலையில் விழ, துவண்டுபோய் அமர்ந்து விட்டான்.

ஸ்ருதிக்கு நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டவன், நேராக சென்றது ரகுவின் வீட்டிற்கு தான். கறந்த பாலை விட சுத்தமான தன் பொம்மியை எப்படி நீ சந்தேகிக்கலாம் என்று புரட்டி எடுத்து விட்டான் ரகுவை. புவி அடித்த அடியில் தான் புத்தி வந்தது ரகுவிற்கு. அதன் பின் தான் ஸ்ருதியை தேடி பாரிஸை நோக்கி பயணித்தான் ரகு.

ஸ்ருதிக்கான புவியின் தேடலை பற்றி சொன்ன விக்கி அவன் ரகுவை சந்தித்ததை பற்றி அவளிடம் சொல்லாமல் விட்டுவிட்டான்.

அனைத்தையும் விக்கியின் மூலம் தெரிந்து கொண்ட ஸ்ருதிக்கு புவியின் காதலின் ஆழத்தை எண்ணி மலைப்பாய் இருந்தது. அவன் காதலை தான் நிராகரித்த பின்னும் என்றாவது ஒருநாள் தான் அவன் காதலை ஏற்றுக் கொள்வேன் என்று தன் மேல் இத்தனை மதிப்பும் நம்பிகையும் வைத்திருக்கின்றானே, அதுவும் தீரா காதலோடு.

“யார் இவன்? எதற்காக என்னை இப்படி காதலிக்கிறான்? நான் அப்படி இவனுக்கு என்ன செய்துவிட்டேன் என்று இப்படி உருகி உருகி என்னை காதல் செய்கிறான்? அதுவும் தான் அவன் காதலை நிராகரித்த பின்னும் என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எட்டி நின்று கண்ணியமாய் என்னை காதல் செய்கிறானே. தன் உணர்வுகளுடன் விளையாடும் முகுந்தனுக்கும் தன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் புவிக்கும் தான் எத்தனை வித்தியாசம்?. ஆனால் அவனின் உன்னதமான காதலுக்கு அங்கீகாரம் அளித்தாளா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம். அங்கீகாரம் அளிக்கவும் அவள் விரும்பவில்லை. மீண்டும் ஒருமுறை அந்த காதல் என்னும் மாய நதிக்குள் மூழ்க பயமாய் இருந்தது அவளுக்கு.

அதே நேரம் காலையில் சுதா கூறியதை நினைவுக்கு கொண்டு வந்த ஸ்ருதிக்கு முகுந்தனை எண்ணி பயம் தொற்றிகொள்ள, இத்தனை நேரம் மனதில் குடிகொண்டிருந்த அமைதி எல்லாம் காற்றோடு பறந்து சென்றது. இந்நேரம் தனக்கான தேடுதல் வேட்டையை துவங்கியிருப்பான் முகுந்தன். நான் ஈஃபில் டவர்க்கு வந்திருப்பேன் என்று அவனால் நிச்சயம் கணித்திருக்க முடியாது. ஆனால் எத்தனை நேரம் என்னால் இங்கு இருக்க முடியும். வீட்டிற்கு சென்று தானே ஆகவேண்டும். நிச்சயம் இந்நேரம் நான் சுதாவை சந்தித்ததை அறிந்திருப்பான். இப்போது என்ன செய்ய என்று யோசித்தவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தவளின் பார்வையில் ஈஃபில் டவரை ரசித்தபடி அமர்ந்திருந்த புவி விழ, சட்டென ஒரு யோசனை உதித்தது அவள் மனதில். அது சரியா தவறா என்று கூட ஆராய மனம் வரவில்லை அவளுக்கு. புவி தன் உணர்வுகளை புரிந்து கொள்வான் என்று மட்டும் அவள் மனம் திரும்ப திரும்ப கூவ அதுவே அவளுக்கு சிறு தைரியத்தை குடுக்க, தன் யோசனையை செயல்படுத்த அவனை அழைத்தாள். அவள் அறிந்திருக்கவில்லை இந்த ஒற்றை அழைப்பு அவள் வாழ்கை பாதையையே மாற்றி அமைக்க போகிறதென்று.

புவியின் தன் பொம்மிக்கான தேடுதலை பற்றி சொன்ன பின், அவர்களுக்கு தனிமை கொடுப்பதற்காக விக்கி அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தான். மௌனம் என்னும் அரசன் அவர்களுக்கிடையே தன் ஆட்சியை சிறப்பாய் செய்ய அதை கலைப்பதாய் அமைந்தது ஸ்ருதியின், “புவி” என்ற அழைப்பு.

“ம்” மட்டுமே பதிலாய் வந்தது அவனிடமிருந்து. தன் பொம்மி தனக்கு கிடைத்த சந்தோஷத்தில் வார்த்தை வெளிவரவில்லை அவனுக்கு.

ஸ்ருதி, “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா புவி” பட்டென அவள் மனதில் தோன்றியதை கேட்டு விட்டாள். அவன் மேல் காதல் வந்ததா என்றல் நிச்சயம் இல்லை என்று தான் கூறுவாள். பின் ஏன் இந்த கேள்வி?

அதிர்ந்து அவளை பார்த்தான் புவி. அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி சத்தமின்றி குத்தாட்டம் ஒன்றை அரங்கேற்றி இருந்தான் அவனுக்குள்ளேயே. இந்த நாளுக்காக அல்லவா இத்தனை வருடம் தவமாய் தவம் இருந்தான். அவளாகவே தன் காதலை புரிந்து தன்னிடம் வர வேண்டும் என்று கிட்டத்தட்ட ஆறு வருட காலம் காத்திருந்த கண்ணிய காதலன் அல்லவா அவன். பூரித்துப் போய் அமர்ந்து விட்டான். ஆனால் இன்று அவள் அவனிடம் வருகிறாள் தான் ஆனால் அவன் காதலை தன்னுள் உணர்ந்து வருகிறாளா என்றால் அது கேள்விக்குறி தான்.

அவனின் முகமே அவனின் மகிழ்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்த, அவனை ஏமாற்றுகிறோமோ என்ற குற்ற உணர்ச்சி மேலிட்ட, கண்களில் அவள் எவ்வளவு தடுத்தும் கண்ணீர் வெளிவருவதை நிறுத்த முடியவில்லை. அவனை ஏமாற்றவும் மனம் வரவில்லை அதே நேரம் முகுந்தனை நினைத்து பயப்படாமலும் இருக்க முடியவில்லை. பயத்தில் கைகள் நடுங்க கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

அவளின் கண்ணீரை கண்டு பதற்றம் அடைந்தவன், “ஹே பொம்மிமா! என்னாச்சுடா? எதுக்காக இந்த அழுகை?” அவளின் கண்ணீரை துடைத்தபடி கேட்க, அவன் முகத்தையே பார்த்திருந்தவளுக்கு தன் மீது கள்ளமில்லாத காதல் வைத்திருப்பவனை ஏமாற்றுகிறேனே என்று கண்ணீர் கூடியதே தவிர குறைய வில்லை.

அவள் கண்ணீரும் அவளின் உடலில் இருந்த நடுக்கமும் அவள் எதையோ நினைத்து பயப்படுகிறாள் என்பதை தெள்ள தெள்ளிவாக உணர்த்த அவன் கூறிய எந்த ஆறுதலும் அவள் செவியை தீண்டவில்லை.

பின் அமைதியாக அவள் முகத்தையே ஆராய்ந்தவன், அடுத்தநொடி அவளை தன் வலிய கரங்களுக்குள் சிறை செய்திருந்தான். அவனின் செய்கையை உணர்ந்து திமிறியவளை அடக்கியவன், “பொம்மி” என்று அழுத்தமாக அழைக்க, அவன் குரலில் இருந்த அழுத்தம் அவளை அமைதியடைய செய்தது.

அவளின் திமிறல் நின்றதும் அவளை மென்மையாய் அணைத்தவன், “இங்க பாரு பொம்மி, நீ எதையோ பார்த்து பயப்படுறேன்னு எனக்கு நல்லா புரியுது. ஆனா அது என்னனு நான் கேக்க மாட்டேன். உனக்கா எப்ப சொல்லனும்னு தோணுதோ அப்ப என் கிட்ட சொல்லு. ஆனா ஒரு விஷயத்த மட்டும் நல்ல மனசில வச்சிக்கோ… யாரை பார்த்தும் எதுக்காகவும் நீ பயப்படக்கூடாது. எப்பேர் பட்ட பிரச்சினையா இருந்தாலும் தைரியமா நேருக்கு நேர் நின்னு பேஸ் பண்ணனும். எக்காரணத்தைக் கொண்டும் ஓடி ஒழிய கூடாது .புரியுதா?. எப்பேர்ப்பட்ட பிரச்சனையா இருந்தாலும் உன் கூட சேர்ந்து அத பேஸ் பண்ண இந்த புவி தயாரா இருக்கான். அத நீ என்னைக்கும் மறந்திறாத. உன் விருப்பத்த மீறி நான் எதையும் செய்ய மாட்டேன்..” அவள் முதுகை ஆறுதலாக தட்டி கொடுத்தபடி அவன் கூற அவன் மென்மையான அணைப்பும் ஆறுதலான பேச்சும் அவளுக்கு பயம் நீங்கி அறுதல் அடைய செய்தது.

அவள் படபடப்பு நீங்கியதை உணர்ந்தவன், “சரி பொம்மி வா கிளம்பலாம்..நாம வந்து ரொம்ப நேரம் ஆச்சு” என்றதும் எங்கோ பறந்து சென்ற பயம் போன வேகத்தில் ரிவர்ஸ் கீர் போட்டு திரும்ப வந்தது.

“எ…எங்க..போறோம்..” திக்கி திணறி கேட்க,

“ம்…வேற எங்க உன்னோட வீட்டுக்கு தான். உன்ன கொண்டு விட்டிட்டு ஸ்டேஷன் போகணும்..முடிக்க வேண்டிய பார்மலிட்டீஸ் கொஞ்சம் இருக்கு..”

“எ..என்ன விட்டுட்டு போக போறியா..” பயத்தில் கலவரம் ஆனது அவள் முகம். மேலும் அவள் மனம் தான் கேட்க நினைப்பதை கேட்கலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது.

அவளின் கேள்வியும் கலவரமான அவள் முகத்தையும் பார்த்தவன், “பொம்மி..நீ என்ன சொல்லனும்னு நினைக்குறியோ அத தைரியமா சொல்லு..” என்றதும் சிறிது தைரியம் பிறக்க,

“நாம இ…இன்னைக்கே…கல்யாணம் பண்ணிக்கலாமா புவி…ஐ மீன் இ..இப்பவே” தன்னை பற்றி அவன் என்ன நினைப்பானோ என்று பயந்து பயந்து கேட்டாள் ஸ்ருதி.

புருவம் முடிச்சிட கூர்மையாய் அவளை பார்த்தவன் மௌனம் என்னும் ஆயுதத்தை குத்தகைக்கு எடுத்ததை போல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவனின் அமைதி குட்டி ப்ரளயத்தையே ஏற்படுத்தி விட்டது அவளுக்குள்.

“நீ நல்லா யோசிச்சு தான் இத சொல்லுறியா” நீண்ட யோசனைக்கு பின் அவன் கேட்க,

“ஆமாம்” என்றது போல் தலையை ஆட்டி வைத்தாள் ஸ்ருதி.

“ம் சரி உன் விருப்பப்படியே பண்ணிடலாம்” அவனின் சம்மதம் வியப்பை தந்தாளும் அவன் மேலும் அவளிடம் காரணம் கேட்காமல் சம்மதித்தது ஆறுதலாய் இருந்தது அவளுக்கு.

ஈஃபில் டவரை விட்டு கிளம்புவதற்கு முன் அதின் முன் தன் பொம்மியின் கைகோர்த்தபடி நின்றவன், “இப்ப போற நான் நிச்சயம் ஒரு நாள் என் பொம்மியோட திரும்ப வருவேன்…அதுவும் அவ என்ன மனசார காதலோட ஏத்துகிட்ட பிறகு.. அப்ப வந்து என் லட்சியத்த நிறைவேத்திக்கிறேன்…அப்ப நீயே எங்க காதல மலைப்பா பார்ப்ப” தன் மனதிற்குள் சபதம் எடுத்தவன் அவனின் பொம்மியிடம் திரும்பி அவள் கண்களில் தன் கண்களை கலக்க விட்டவன் அவள் நெற்றியில் அழுத்தமாக தன் முதல் முத்திரையை பதித்தான். அந்த அழுத்தமான முத்தம் அவன் காதலின் ஆழத்தை அவளுக்கு ஒருமுறை கூட எடுத்துக் காட்ட ஸ்தம்பித்து போய் நின்றிருந்தாள் பெண்ணவள்.

ரகுவை அடித்து உதைத்த அன்றே முகுந்தனை பற்றியும் அறிந்துக் கொண்டான் புவியரசன். அனைத்து பிரச்சனைகளுக்கும் காரண கர்த்தா அவன் தான் என்று கண்டுக் கொண்டவன் மறைமுகமாக முகுந்தனை பின்தொடர்ந்தான். அதன் மூலம் அடிக்கடி அவன் மேற்கொள்ளும் பாரிஸ் பயணம் தன் பொம்மி தொடர்பாக இருக்குமோ என்று புவியை சந்தேகிக்க வைக்கும்படியாக அமைய வரதன் வழக்கை முன்நிறுத்தி பாரிஸ்க்கு வந்துவிட்டான்.

தன் பொம்மியின் வாழ்கையில் நடந்த அனைத்தையும் அறிந்து தான் இருந்தான் புவி. தற்போதுள்ள அவளின் பயமும் முகுந்தனை சார்ந்தது என்று புரிய, அவளை மேலும் வருத்த வேண்டாம் என்று திருமணத்திற்கு உடனே சம்மதம் தெரிவித்தும் விட்டான். தன் பொம்மியின் விழி அசைவை வைத்தே அவள் மனதை படிப்பவனுக்கு அவள் மனதில் காதல் இல்லை என்று கண்ட கொள்ள எத்தனை நேரம் வேண்டும்?. அவன் அவளை அணைத்தபடி கூறிய அனைத்தும் முகுந்தனை மனதில் வைத்து தான். முகுந்தன் மேல் உள்ள அவளின் பயத்தை போக்கவே அவன் அப்படி கூறினான். ஸ்ருதி காதலின்றி அவனை திருமணம் செய்ய கேட்டதும் அவன் மனதளவில் காயப்பட்டுப் போனான் தான். இருந்தும் அவள் பாதுகாப்பையும் அவளின் மனம் பயத்திலிருந்து விடுபட்டுப் அமைதியடையவே திருமணத்திற்கு சம்மதம் சொன்னான்.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஈஃபில் டவரிலிருந்நு அவளை நேராக கோவிலுக்கு அழைத்து சென்றிருந்தான் புவியரசன். அங்கே அவனுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு காத்திருந்தான் விக்னேஷ். பொம்மியை தவிர்த்து புவிக்கென இருக்கும் ஒரே சொந்தம் விக்னேஷ் தான். அதனால் ஈஃபில் டவரிலிருந்நு கிளம்பும்போதே அவனுக்கு தகவல் சொல்லிருந்தான் புவி. நந்துவை அழைக்க எண்ணிய ஸ்ருதி முகுந்தனுக்கு செய்தி சென்று விடும் வாய்ப்பு இருப்பதால் தவிர்த்து விட்டாள்.

மாங்கல்யத்தை கையில் ஏந்தியவன், “தாலி கட்டட்டுமா பொம்மி… உனக்கு ஓகே தானே” இவ்வளவு தூரம் வந்த பின்னும் தன் உணர்வுக்கு இப்படி மதிப்பளிபவனை பார்க்கும்போது அந்த முகுந்தனோ இல்லை ரகுவோ இவன் கால் தூசிக்கு கூட தேறாதவர்கள் என்று அவள் மனம் அடித்துக் கூற இப்படிப்பட்டவனை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி மேலோங்க, ‘ஐ அம் சாரி புவி’ கண்கள் கலங்க மானசீகமாய் அவனிடம் மன்னிப்பு கேட்டவள், “சரி” என்று தலையை இட வலமாக ஆட்ட மாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டி அவளை தன் சரிபாதியாக மாற்றியிருந்தான்.

பெண்ணே இனி உன் கேடயமாக நான் இருப்பேன். அந்த முகுந்தன் மாத்திரமல்ல வேறு எந்த ஒரு தீங்கும் உன்னை நெருங்க விடமாட்டேன். நீ என்னிடம் வேண்டும் பாதுகாப்பை நிச்சயம் உனக்கு தருவேன். இது நான் உன் மேல் கொண்டுள்ள என் காதலின் மேல் சத்தியம். அவள் சங்கு கழுத்தில் தாலியை அணிவிக்கும் போது அவன் எடுத்துக் கொண்ட சபதம்.

பின் அவள் புறம் திரும்பி அவள் கைக்குள் தன் கையை கோர்த்து, “இப்ப நான் புடிக்குற இந்த கைய எந்த பிரச்சனை வந்தாலும் விட மாட்டேன் பொம்மி…அதே மாதிரி உன் விருப்பத்த மீறி நான் எதையும் செய்யவும் மாட்டேன்..” கண்கள் நிறைய காதலோடு அவன் சொல்ல கண்கள் கலங்க அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவனது பொம்மி. அந்த காட்சியை அழகாய் தன் கைபேசியில் நிழல்படமாக்கினான் விக்கி.

காதல் என்னும் மாய நதியில் மூழ்க பயந்தவள் கூடிய சீக்கிரம் அவனது தீரா காதல் கடலில் மூழ்கி முத்தெடுக்கப் போகிறாள் என்று புவியின் பொம்மி அறிந்திருக்கவில்லை.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here