தீரா மயக்கம் தாராயோ 17

0
1066

ஸ்ருதியும் புவியும் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். சுருதியின் கைகள் புவியின் கைகளுக்குள் அடங்கி இருந்தது. சில்லிட்டு இருந்த அந்த கைகள் அவளின் பதட்டத்தை அவனுக்கு எடுத்துக்காட்ட போதுமானதாக இருந்தது. அவளின் இமைகள் தட்டும் சப்தம் கூட தனக்கு கேட்பதாக தோன்றியது புவிக்கு ஏன் என்றால் அந்த அமைதி அத்தனை கொடியதாக இருந்தது. கண்டிப்பாக அவள் மனதில் தன் மேல் காதல் இல்லை இருந்தும் என்னிடம் உதவி கோராமல் தாலி கட்ட அழைத்தது மனதிற்குள் அதிர்ச்சியுடன் கூடிய சந்தோசத்தை கொடுத்தது புவிக்கு. அவளிருக்கும் பதட்ட நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியதாக எண்ணி விடுவாளோ என்ற பயமும் அவனின் மனதை அரித்து கொண்டு இருந்தது.
அதற்கு நேர்மாறாக அவளின் மனமோ எந்த சிந்தையும் இன்றி அமைதியாக இருந்தது. தான் செய்தது சரியா என்று யோசிக்க கூட அவள் மனம் விரும்பவில்லை. திருவிழாவில் தொலைந்த சிறு குழந்தைக்கு சிறிது நேரம் கழித்து தாய் முகம் கண்டவுடன் கிடைக்கும் நிம்மதி போன்ற மனநிலையில் இருந்தாள் சுருதி.
இவர்களுக்கு தனிமையை அளித்துவிட்டு தள்ளி இருந்த விக்கியின் செல்போன் சிணுங்கியது. அதில் கூறப்பட்ட செய்தியை உடனே தெரிவிக்க இவர்களிடம் வந்த விக்கி புவியை நோக்கி , “இங்கிருக்கும் போர்மலிட்டிஸ் எல்லாம் முடித்துவிட்டு நாளை மதியம் நாம் இந்தியா கிளம்ப மெலிடத்து உத்தரவு” என்று கூற அதை கேட்ட சுருதியோ அப்போதுதான் கனவில் இருந்து விழிப்பவள் போல விழித்தாள். சுருதியின் பயத்தின் காரணத்தை அறிந்த புவி, ‘உனக்கும் சேர்த்து டிக்கெட் போட சொல்லவா பொம்மிமா? ” என கேட்க உடனடியாக மறுத்தாள் சுருதி. அவளிருக்கும் நிலையில் அவளை விட்டு செல்லவும் மனமில்லாமல் குழம்பிய புவியை கண்ட சுருதி,” நீங்க போய்ட்டு வாங்க புவி எனக்கு எங்க சில வேலைகள் இருக்குது அதை முடிச்சிட்டு உடனே வர்றேன். “
“நீ மட்டும் தனியா எப்படி சுருதி’ என்ற புவிக்கு,” இப்ப நீங்க கட்டின தாலி எதையும் சமாளிக்கும் தைரியத்தை கொடுத்து இருக்குது. என்னை பத்தி கவலை படாதீங்க நான் புவியரசு IPS இன் மனைவி என்னை யாராலும் எதுவும் செய்யமுடியாது” என்று வீரவசனம் பேசினாள்.
‘ உனக்கு வேணும்டா புவி’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு” சரி வா உன்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறேன்” என்றான்.
“ஐயோ” என்று சப்தமாக கத்திவிட்டு தன் தவறுணர்ந்து கண்களை தாழ்த்தி “நானே போய்கிறேன்’ என்றாள். ஏன் என்ற கேள்வியை புவி எழுப்பவில்லை கைதியின் கண்களை வைத்தே அவன் குற்றவாளியா இல்லையா என்பதை அறியும் புவிக்கா தெரியாது தன்னவளின் மனநிலை?
தன்னவளை அழைத்துக்கொண்டு மெட்ரோ ஸ்டேஷன் சென்ற புவி அவளை இருக்க அணைத்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,” எதுவா இருந்தாலும் உனக்கு நான் இருக்குறேன் உனக்காகவே நான் இருக்குறேன் பொம்மிமா மறந்துடாதே புரியுதா?” என்றான். இதழ் விரித்து தலை அசைத்து கண்ணீருடன் புவியிடம் இருந்து விடை பெற்று மெட்ரோவில் ஏறி அமர்ந்தாள் சுருதி.
பயணம் நீண்டதாய் இருந்தது சுருதிக்கு.புத்திக்கும் மனதிற்கும் பெரும் போராட்டமே நடந்தது. உண்மையில் என் தேவைதான் என்ன? நான் யாரின் காதலி? அல்லது யாரை காதலிக்கிறேன்? இதில் நிஜம் எது? சதி எது? இதுபோன்ற ஒரு தாலியை நான் ராமிடமோ முகுதனிடமோ கேட்காததான் காரணம் என்ன? இது தவறு என்றால் என் மனதில் குற்ற உணர்ச்சி வராது போனதன் காரணம் என்ன? மயக்கமே வருவது போல இருந்தது சுருதிக்கு. அப்படியே கண்களை மூடி அமர்ந்து இருந்தால்.காலையில் இருந்த பதட்டம் அலைச்சல் காரணமாக உறக்கம் அவள் கண்களை தழுவியது. சிரித்துக்கொண்டே இருகைகளையும் நீட்டி இவளை அணைக்க வந்தான் புவி. திடுக்கிட்டு கண்விழித்தாள்.
இன்று மதியம் வரை புவியை பற்றிய நினைப்பே வரவில்லை ஆனால் இப்போதோ புவி அல்லாது வேறு ஒரு முகமும் மனதில் இல்லை. அப்போ அத்தான் ஆகட்டும் முகுந்தன் ஆகட்டும் நம் மனதின் உள்ளே வரவில்லை. புத்தியின் வரையே அவர்கள் வரவு. எனில் அவர்களிடம் நான் உணர்ந்த உணர்வுக்கு பெயர் என்ன என்ற புத்தியின் கேள்விக்கு மனம் அமைதியாய் கூறியது நீ அத்தானிடம் தேடியது புவியிடம் உணர்ந்த பாதுகாப்பு உணர்வை. முகுந்தனிடம் உணர்ந்தது புவியின் ஆளுமையை ஆக நீ உன் மனதில் பதிந்துள்ளது புவி என அறியாமல் புவியையே அவர்களிடம் தேடி இருக்கிறாய் என்று கடிந்தது. இந்த விளக்கம் சுருதியின் முகத்தில் தெளிவையும் புன்னகையையும் கொடுத்தது. மஞ்சள் கண்ணாடி போட்டவன் கண்ணுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம் என்று தனக்கு தானே சொல்லி சிரித்து கொண்டாள் சுருதி.
தன்னுடைய ஸ்டேஷன் வரும்வரை சிந்தனைகளில் சிக்குண்டு சிரித்துக்கொண்டு இருந்தவள் ஸ்டேஷன் வந்த அறிவிப்பு வந்ததும் சுடுநீர் பட்டது போல அதிர்ந்து எழுந்தாள். அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று குழப்பம் மெலோங்கியது. தன்னுடைய இந்த திடீர் திருமணம் மற்றும் புவி குறித்து யாரும் அறியாதிருப்பது நல்லது என்று தோன்றியது. உடனே தாலியை உடைக்குள் மறைத்து வைத்தாள். அதற்குள் புவியோ அவளே அறியாவண்ணம் அவளுடைய பாதுகாப்புக்கு விக்கிமூலம் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த சுருதியை கண்ணீருடன் வந்து அணைத்துக்கொண்டாள் நந்து.
” எங்க போன சுருதி உண்ண காணாம பயந்து போய்ட்டேன் தெரியுமா? ஆமா நீயேன் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல போன? எந்த கோவிலுக்கு போன? ஏன் இவ்வளவு நேரம்? ” இப்படி பதட்டத்தில் என்ன கேட்கிறோம் ஏன் கேட்கிறோம் என்று தெரியாமல் கேள்வி கணைகளை தோடுத்துக்கொண்டே இருந்தாள்.
அவள் மூச்சு வாங்க விட்ட இடைவெளில் அவளுடைய முகத்தை கையில் ஏந்திய சுருதி ,”நான் என்ன சின்ன குழந்தையா தொலைந்து போக? அதுக்காகவா இப்படி அழுதிருக்குறே” என்று வினவ, “அதுகில்ல கார்த்தி என்னைய ரொம்ப திட்டிட்டாரு” என்று உள்ளதை மறைக்காமல் கூறினாள் நந்து.
“சரி அதை விடு நீ எங்க போன அதை இன்னமும் சொல்லலே” என்றாள் நந்து. அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு குளியல் அறைக்குள் புகுந்துகொண்டாள் சுருதி. காலைமுதல் ஏற்பட்ட பதட்டம் அலைச்சல் எல்லாம் நீங்க ஒரு வெண்ணீர் குளியல் போட்டாள். அதற்குள் குளியலறை கதவை தட்டிக்கொண்டே “பதில் சொல்லு சுருதி தலை வெடிக்குது “என்று தோனதோனத்து கொண்டே இருந்தாள் நந்து.
“ஏன்டி நான் என்ன இங்கேயே குடித்தனம் நடத்தவா போறேன் இருடி வந்து எல்லாம் சொல்லுறேன். மனுஷிய நிம்மதியா குளிக்க விடு” என்று அத்தட்டினாள்.
நந்துவோ அமைதியாக வாசலிலேயே சமணம் இட்டு அமர்ந்தே விட்டாள். குளியல் முடித்து கதவை திறந்த சுருதி கண்களால் அறைமுழுவதும் நந்துவை தேடி “நந்து..நந்து” என்று குரல் கொடுக்க, “நான் இங்க இருக்குறேன்” என்ற நந்துவை குனிந்து பார்த்து சத்தமாக சிரித்தாள்.
” ஏன்டி நந்து இப்படி உட்கார்ந்து இருக்குறே ?”
” பின்ன நீ பாட்டுக்கு குளிக்க போய்ட்ட இங்க பாரு என் தலையை எப்படி வீங்கி இருக்குதுன்னு” என்று பாவமாக கூற, “எங்க பாப்போம் என்னமா எங்கெயாச்சும் இடிச்சிகிட்டியா? ” என்று சிரிக்காமல் கேட்ட சுருதியின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்திருந்தாள் நந்து. “ஏன்டி இங்க ஒருத்தி என்ன ஆச்சுன்னு தெரியாம தலையே வெடிக்கிற மாதிரி இருக்குறேன் நீ என்னடான்னா சாவகாசமா குளிச்சிட்டு வந்ததும் இல்லாம இடிச்சிகிட்டியானா கேக்குறே உன்னைய இன்னைக்கி கொள்ளாமல் விடமாட்டேன்டி” என்று பத்திரகாளி போல கத்திக்கொண்டு இருந்தாள். “பொறுமை… பொறுமை…பொறுமை” எருமையினும் பெரிது என்று நக்கலாக சொல்லி அவளின் ரத்த அழுத்தத்தை கூடினாள் சுருதி. இருவரும் கட்டி புரண்டு சண்டை இட்டு ஒருவழியாக ஓய்ந்து படுக்கையில் விழுந்தார்கள்.
மல்லாந்து படுத்திருந்த சுறுதியை நோக்கிய நந்து” என்ன அம்மணி இன்னைக்கி ரொம்ப சந்தோஷமா தெரியுறீங்க? என்கிட்ட சொல்ல கூடாதா” என்று கேட்ட நந்துவின் முகத்தை நோக்காமல் ஆம் என்பதாய் தலை அசைத்தாள் சுருதி. மறுபடியும் ஊமைபோல ஆகிவிடுவளோ என்ற நந்துவின் எண்ணத்தை புரிந்துகொண்ட சுருதி அமைதியாக அவளின் முகம் நோக்கினாள் ஆனால் அதில் இவ்வளவு நேரம் இருந்த சந்தோசம் மாறி குழப்பம் சூழ்ந்து இருந்ததை நந்து கவனிக்க தவறவில்லை ஆனாலும் அவளாக கூறட்டும் என்று அமைதி காத்தாள் நந்து.
சிறிது நேரம் நந்துவின் முகத்தையே பார்த்துக்கொண்டு மனதிற்குள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினான் சுருதி. காலையில் சுதா கூறியதை இவளிடம் கூறலாமா? கார்த்தி மேல் இவளுக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பு இவளை நம்ம அனுமதிக்குமா? என்று குழம்பி தவித்தாள் சுருதி. இருந்தாலும் வேறு வழி இல்லை முகுந்தன் குறித்து இவளும் கட்டாயம் அறியவேண்டும் என்ற முடிவுக்கு வந்த சுருதி நந்துவை நோக்கி “நந்து உனக்கு நான் எப்படி ?” என்று மொட்டையாக கேட்டாள். எந்த கேள்வியில் குழம்பிய நந்து ,”இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்லணும் சுருதி? எனக்கு உன்னை விட்டா வேறு யார் இருக்குறா? இப்போ மாதிரி எப்போதும் சிரிப்பும் சந்தோசமுமாய் மீதி வாழ்க்கையை நாம் ஒண்ணா வாழ்ந்தா அதுவே போதும் எனக்கு” என்றாள் நந்து.
கண்கள் கலங்க நந்துவை பார்த்தவள் அவளின் கைகளை தன் கைகளுக்குள் இறுக்கி பிடித்து கொண்டு “எனக்கும் உன்னை விட்டா வேறு யார் இருக்குறா அம்மா அப்பாவை இழந்த பிறகு நான் வாழ எனக்கு கிடைத்த ஒரே பிடிப்பு நீதான் நந்து” என்றாள் சுருதி.
அவளின் வார்த்தைகளில் இருந்த நடுக்கத்தை வைத்து அவளின் பயத்தை உணர்ந்த நந்து “என்ன ஆச்சுடா எதுவா இருந்தாலும் நான் இருக்குறேன் உன் கூட சமாளிக்கலாம்” என்று கூறினாள். அவளை ஆச்சரியத்தோடு பார்த்த சுருதி இதே வார்த்தையை கூறிய புவியை நினைத்தாள். ஏன் என்னால் இவளோடு ஒன்ற முடிகிறது என்று புரிந்தது. ஆழ்ந்த சிந்தனையின் முடிவில் இவளிடம் அனைத்தையும் கூறி விடுவது என்ற முடிவிற்கு வந்தவளாய் நந்துவை நோக்கினாள்.
“நந்து நான் சொல்லுறத கவனமா கேளு. நாம ரெண்டு பேரும் நமக்கே தெரியாம ஒரு மாய வலைக்குள்ள சிக்கி இருக்குகிறோம் ” என்று ஆரம்பித்து காலையில் சுதாவிடம் இருந்து வந்த கால் அதை தொடர்ந்து அவள் சென்றது அவள் கொடுத்த ஆதாரங்கள் அனைத்தையும் நந்துவிடம் கூறினாள். ஆனால் அதன்பிறகு புவியை கண்டதையோ தனக்கு திருமணம் நடந்ததையோ மட்டும் கவனமாக மறைத்தாள்.
“என்ன நந்து இதில நீ எங்க மாட்டி இருக்குறேனு யோசிக்கிறியா? நீ நல்ல யோசிச்சு பாரு என்னைய பாதுகாக்க உன்ன செலக்ட் பண்ணதா அன்னைக்கி நீ என்கிட்ட சொன்ன. என்னைய இந்த நிலைல ஆக்கினவங்களே என்னைய ஏன் பாதுகாக்கணும்? அப்போ உன்னைய அனுப்பியது என்னோட பாதுகாப்புக்கு இல்ல. என்னோட நடவடிக்கை எல்லாமே அவங்களுக்கு தெரியனும்னுதான். அன்னைக்கே உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் கார்த்தி லவ் கூட எனக்கு இப்போ சந்தேகமா இருக்குது. ஏன்னா புலி எப்பவும் பூனை கூட கூட்டணி வைக்காது. முகுந்தன் கூட இருக்குற கார்த்தி எப்படி சரியான ஆளா இருக்க முடியும்?
எனக்கு என்னமோ உனக்கு வேந்தன் தான் சரியான ஆளா தோணுது. ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் இருக்குது. இப்போ உனக்கோ எனக்கோ உண்மை தெரிஞ்சிடிச்சுன்னு முகுந்தனுக்கு தெரிஞ்சா நமக்கு மட்டுமில்ல நம்மை சார்ந்த எல்லாரையும் அவங்க காலி பண்ண நினைப்பாங்க. அதுனால நாம நல்ல யோசிச்சு அவங்க கண்ணுல மண்ணை தூவிட்டு இந்தியா போய்டனும்” என்று மூச்சுவிடாமல் கூறிக்கொண்டு இருந்தாள் சுருதி.
இவை அனைத்தையும் கேட்டு பேய் அறைந்ததுபோல அமர்ந்து இருந்தாள் நந்து.
“ஏய் நல்ல சொல்லுறது புரியுதா இல்லையா ?”என்று நந்துவை உலுக்கினாள் சுருதி.
சுய நினைவு வந்த “நந்து நம்மால எப்படி சமாளிக்க முடியும்டி? இவனுங்க வேற கொலைகார பாவிகளா இருக்கிறாங்க. பேசாம நாம வேந்தன் சார்கிட்ட உதவி கேட்டா என்னடி” என்று கேட்க. அவளை முறைத்த சுருதியோ ,”இப்போ நீ வேந்தன் சார் கிட்ட தான் வேலை பாக்குற ஆன உன்னைய சேர்த்தது கார்த்தினு உனக்கு மறந்து போச்சா? அப்படினா என்ன அர்த்தம் ? வேந்தன் சார்கிட்ட இருக்குற யாரோ கார்த்திக்கு கைஆள். இப்போ நாம அங்க போய் நின்ன உடனே விஷயம் முகுந்தனுக்கு தெரிஞ்சிடும். நமக்கு இருக்குற ஒரே வழி இவங்கள எப்படியாவது ஏமாத்தி இந்தியாக்கு போறதுதான். அங்க போய்ட்டா சமளிச்சிடலாம் “என்றாள் சுருதி.
“ஏன்டி அங்க மட்டும் இவங்க எதுவும் செய்ய மாட்டார்களா? அதெப்படி எவளோ உறுதியா சொல்லுறே” என்று கேட்டாள் நந்து.
“அத்தப்பத்தி அப்புறமா யோசிக்கலாம் முதல்ல இதுக்கு ஒரு வழிய கண்டுபிடி” என்று கூறிய சுருதி தீவிரமாக சிந்திக்க தொடங்கினாள்.
விதி வலியதல்லவா? சுருதி வீட்டுக்கு வந்ததை ஏற்பாடு செய்திருந்த ஒற்றன் மூலமாக கேள்விப்பட்ட முகுந்தன் அவளைகாணும் ஆவலுடன் அங்கு வந்திருந்தான். சுருதியும் நந்துவும் கட்டிபுரண்டு சண்டை இடும்போதே வந்த முகுந்தன் சண்டை முடியட்டும் என்று காத்திருந்தான்.அதன் பலனாக இவ்வளவு நேரமும் இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டிருந்தான். அவனின் முகம் கர்ணக்கொடூரமாக மாறி இருந்தது. சிறு சப்தம் கூட எழுப்பாமல் கதவை வெளிப்புறம் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு ‘இனி நீங்க எப்படி இந்தியா போறீங்கன்னு நானும் பார்க்குறேன்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.
இது எதுவும் தெரியாது தீவிரமா தப்பிக்க யோசித்து கொண்டிருந்தார்கள் நந்துவும் சுருதியும். வெளியே வந்த முகுந்தன் நேராக ஒரு எலக்ட்ரானிக் கடைக்கு சென்று ஜாமர் கருவியை வாங்கி வந்து இவர்கள் இருக்கும் அறையின் கதவுக்கு அருகில் மாட்டிவைத்தான் சிறுசப்தமும் இல்லாமல். இனி இவர்கள் முகுந்தனிடம் இருந்து தப்பிப்பார்களா? வேந்தன் அறிவானா இவர்களின் நிலையை? புவியிடம் இருந்து முகுந்தனுக்கு கிடைக்க போகும் தண்டனை என்ன?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here