ஸ்ருதியை அறையில் அடைத்து விட்டு வந்த பின் தான் முகுந்தனுக்கு தான் செய்ய இருந்த தவறு புரிந்தது.. என்ன தான் தன்னை பற்றி அவள் கண்டுகொண்டாள் என்றாலும் அதையும் சுதாவையே மாற்றிப் பேச வைத்து தன்மேல் நம்பிக்கை வரும் படி செய்து விடலாம்.. ஆனால் அவளை அறையில் அடைத்து விட்டு வந்தால் தன்னை பற்றிய உண்மை அவளுக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாக தெள்ளத் தெளிவாக புரிந்துவிடும் என்பதை உணர்ந்தான்..
அதனாலேயே தன் மேல் அவளுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கார்த்திக்கிடம், நந்தினியிடம் ‘ஸ்ருதியை இனிமேல் தொல்லை செய்யப் போவதில்லை’ என்று கூறச் சொன்னான்.. தன்னைப் பற்றிய பயம் இல்லாமல் அவள் மனம் சிறிது சமனப் பட்ட பின், கதையை எப்படி எப்படி மாற்றலாம் என மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டே மறுநாள் விமானத்தில் தனக்கான முன்பதிவு செய்ய சொன்னான்.
ஆனால் அவர்கள் நேரம்.. மறுநாள் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.. ஸ்ருதியை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? என்று மாற்றி மாற்றி யோசித்தபடி இருந்ததாலோ என்னவோ ஸ்ருதியை கவனிக்காமல் விட்டு விட்டான்.
அவன் பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளும் நேரத்தில் அவனை விட்டு பிரிந்து சென்று அந்த பெண்களை கவனிக்கத் தோன்றாமல் கார்த்திக்கும் முகுந்தன் உடனே தங்கிவிட்டான்.. தங்களது தொல்லை இனிமேல் இருக்காது என்று சொன்னதால் அவள் உடனே இந்தியா செல்லும் திட்டத்தை கைவிட்டு இருப்பாள் என்று எண்ணினார்கள்..
ஆனால் புவியரசு ஸ்ருதிக்கும் நந்தினிக்கும் டிக்கெட் ஏற்பாடு செய்து மறுநாளே தன்னுடன் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுவிட்டான்.. இரவு முழுவதும் போதையில் உருண்ட முகுந்தனும், கார்த்திக்கும் மறுநாள் ப்லைட்டிற்கு நேரமாகி விடவே ஸ்ருதியை சென்று பார்க்காமல் கிளம்பி விட்டார்கள். அதனால் அவள் இந்தியாவிற்கு சென்று விட்டதை அவர்கள் அறியவில்லை..!!
மகிழ்வேந்தன் தன்னுடைய காதலை ‘ஸ்ருதி, நந்தினிக்கு கூறினாளா? இல்லையா? அதற்கு அவள் என்ன பதிலுரைத்தாள்?’ என்று தெரியாமல் தவித்தான்..
தானே நந்தினியிடம் நேரடியாகப் பேசலாம் என்றாலும், அது முறையாக இருக்கும் என்று தோன்றவில்லை.. பணம் படைத்தவர் எல்லாம் கெட்டவர்கள் இல்லை.. நல் மனதிற்கும் செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
செல்வத்தில் கொழித்த முகுந்த்திற்கு தான் ஆசைப்பட்டதெல்லாம் அடைய வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது.. அதிக பணம் பார்க்காமல் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ரகுராமிற்கும் தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று வெறி இருந்தது.. ஆனால், செல்வத்திலே பிறந்து மகிழ்வேந்தனுக்கு நல் குணமும் பண்பும் நிறைந்திருந்தது.
அவனுடைய நல்ல குணத்தினாலேயே தன்னுடைய அண்ணன் குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொண்டான். அதனாலேயே நந்தினியையும் விரும்ப ஆரம்பித்தான்.. அதே நல்ல குணமே அவளிடம் சென்று காதல், கல்யாணம் என்று பேச விடாமல் அவளுக்கு பொறுப்பாளராக இருக்கும் ஸ்ருதியிடம் பேச வைத்தது..!! தனக்கான பதில் வரும்வரை அமைதியாக காத்திருக்க முடிவு செய்திருந்தான்.
ஆனாலும் இரண்டு மூன்று நாட்களாக ஸ்ருதியை காணவும் இல்லை, அவளை தொடர்புகொள்ளவும் இயலவில்லை.. எனவும் ஸ்ருதியின் எண்ணிற்கு அழைத்தான்.. அது அப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கவும் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று பார்ப்பது என்று முடிவு செய்தான்.
ரகுராமன் ஸ்ருதியை காணாமலே தவித்துக் கொண்டிருந்ததால் அவனும் ஸ்ருதியை பார்க்க அவளது அறைக்கு வந்தான்.. அன்றைக்கு அத்தான் என்று அழைத்து அவனிடம் அன்பாக பேசினாள் அல்லவா? அது அவனுக்கு ஒரு தைரியத்தை கொடுத்தது.. எப்படியாவது பேசி அவளை தன்னுடன் இந்தியாவிற்கு அழைத்துச் சென்று விட வேண்டும்.. கண்டிப்பாக அவள் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி விடுவாள் என்று எண்ணினான்!
வேந்தன் வந்து அங்கே தேடிச் சலித்து அவர்கள் இருவரும் அவர்களுடைய உடமைகளும் கூட அங்கு இல்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.. என்னவாயிற்று? எங்கே சென்றார்கள்? சொல்லாமல் கொள்ளாமல்.. என்று மனம் பதைத்து பரிதவித்தது..
அவன் அந்த அபார்ட்மெண்டில் சுற்றிச்சுற்றி வந்த வேளையில் ரகுவும் வந்து சேர்ந்தான்.. இருவருமே பெண்கள் இருவரும் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் குழம்பித்தான் போனார்கள்..
பாரிசில் அவர்களுக்கு தெரிந்த இடங்களிலெல்லாம் தேடிப் பார்த்து சோர்ந்து போய் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் முகுந்தன்.. அவனது அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஸ்ருதியிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது …
“அவசர வேலையாக சொல்ல முடியாமல் இந்தியா செல்ல நேர்ந்ததாகவும், தற்போது தானும் நந்தினியும் இந்தியாவில் இருப்பதாகவும் தங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்றும் சீக்கிரமே நந்தினியிடம் அவளது சம்மதத்தைப் பெற்று தருவதாகவும்” அதில் தெரிவித்திருந்தாள்.. “மேலும் தனக்கு ரகுராம் மேல் எந்த விருப்பமும் இல்லை என்பதையும், அதனால் அவனுக்கு தான் சென்ற இடத்தை பற்றி ஏதும் கூற வேண்டாம் என்றும், தான் அவனைப் பார்க்க எப்போதும் விரும்பவில்லை என்பதையும்” மின்னஞ்சலில் தெரிவித்திருந்தாள்..!!
அந்த மின்னஞ்சலை பார்த்ததும் உடனே இந்தியாவிற்கு ஓட தவித்தான் காதல் கொண்ட வேந்தன்..! ஆனாலும் இப்போது தான் புதிதாய் சேனலை லான்ச் செய்திருந்ததால் அலுவலகம், அதற்கான ஊழியர்கள் என்று வேலைகளும் அவனை இழுத்துக் கொள்ளவே.. இந்தியாவிற்கு உடனே திரும்ப இயலாது தவித்தான்.
ஆனாலும், ஸ்ருதி அவனிடம் வாக்களித்தபடி நந்தினியிடம் சம்மதம் வாங்கி தருவாள் என்ற நம்பிக்கையும் இருந்ததால் தன் கண்ணை விட்டு அவர்கள் மறைய மாட்டார்கள் என்று நம்பி, தான் இந்தியா செல்லும் வரை மனதை கடினப்பட்டு காத்திருப்பது என முடிவு செய்தான்..
அதன்படியே, “நந்தினியின் மனமறிந்து அவள் முழு மனதுடன் சம்மதம் சொன்னால் போதும்.. அவளை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று ஸ்ருதிக்கு மின்னஞ்சல் செய்தான் வேந்தன்.
வேந்தனிடம் ஏதாவது தகவல் இருக்கும் என்று தேடி வந்த ரகுவிடம் “இங்க பார் ரகு, நீ என்ன செய்தாய் என்று தெரியலை.. எதற்காகவோ அவர்கள் அந்த இடத்தை காலி செய்து சென்றுவிட்டார்கள்.. உன்னுடைய அலுவலகத்திலிருந்து இங்கே மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்கள், அவர்களுடைய ஜர்னலிஸ்டை உடனே திரும்ப அனுப்ப சொல்லி.. ஆகையால் நீ சென்று உன் வேலையை கவனி.. இரண்டு ஆண்டுகள் பொறுமையாய் இருந்தது போல் காத்திரு, அல்லது வேறு பெண்ணை பார்த்துக் கொள்.. இனிமேல் ஸ்ருதி விஷயத்தில் உனக்கு நான் எந்த உதவியும் செய்ய இயலாது” என்று தீர்க்கமாகவே கூறினான்.
இதைக் கேட்டு ஆவேசமடைந்த ரகு.. “இதோ பார் வேந்தன் உன்னால் எனக்கு உதவ முடியாது என்றால் உதவ முடியாது என்று மட்டும் சொல்.. அதை விட்டு விட்டு ஸ்ருதியை தேடாதே என்று எனக்கு அறிவுரை கூறாதே.. அவள் என்னுடைய சொத்து! என் மாமன் மகள்! அவளை என்னால் எப்போதும் விட்டுக் கொடுக்க இயலாது.. அவள் எங்கிருந்தாலும் அவளை தேடி கண்டுபிடித்து என்னுடன் எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றே தீருவேன்” என்று சூளுரைத்தான் ரகு.
தன் வீட்டு தோட்டத்தில் உலவிய படி, முகுந்தனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.. நெடுநெடுவென்ற உயரமும், அலை அலையான கேசமும், குத்தீட்டியாய் பார்வையும், அலட்சியமான திமிரும், அலட்டாத நடையுமாக கல்லூரிக்கே அவன் ஹீரோ தான்.. அதுவும் பணமும் நிறைய நிறைய இருக்கவே அவனை பல பெண்கள் ஈசல் போல் சுற்றினார்கள்..
அதனாலேயே மிருதுளாவின் உண்மை காதல் கூட அந்த ஈசல்களில் ஒன்றாகவே தோன்றியது அவனுக்கு.. இவள் அவன் பின்னால் போகப் போக இவளை அலட்சியம் செய்து விரட்டி அடித்தான்.. கல்லூரி முடியும் நாட்களிலும் இவள் மீண்டும் தன் காதலை புரிய வைக்க முயற்சிக்க, “உனக்கு உண்மையிலேயே என் மேல் காதல் என்றால் என்னை விட்டு விலகியே இரு” என்றான்.
அவன் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக முழுதாய் ஐந்து வருடங்கள் அவன் கண்ணில் கூட படாமல் விலகி தான் இருந்தாள்.. ஆனால் பாரிசில் இருந்து இந்தியா செல்லும் பிளைட்டில் அவனைப் பார்த்ததும் தன்னையே கட்டுப்படுத்த இயலாமல் அவனிடம் சென்று பேசினாள்.. இப்போதும் அதே அலட்சியத்துடன் பதில் தருகிறான்..
இப்படியே சென்றால், ‘இலவு காத்த கிளியாக’ இவனுக்காய் நான் ஏங்கி ஏங்கி காத்திருக்க வேண்டியது தான்.. என எண்ணிய மிருதுளா அவனை கணவனாக அடைவது இருக்கட்டும், முதலில் அவன் அருகிலேயே சென்று இருக்க வேண்டுமென்று முடிவு எடுத்தாள்..!!
ஸ்ருதி சொல்லாமல் சென்றதால் வெளிநாடுகளில் எந்த ப்ரோக்ராமும் நடத்தாமல் இருந்த முகுந்தனின் சேனல் சிறிது மந்தமாகவே சென்றது..
ராகவனுக்கு தாயில்லா தன் அருமை மகனை மிகவும் கண்டிக்கவும் இயலவில்லை. அவனிடம் நிர்வாகத்தைக் கொடுத்த பின் அதை பற்றி கவலைப் படாமல் ஒதுங்கியே இருந்து கொண்டார்.. ஆனாலும் இப்போது பாரிசிற்க்கு சென்றவன் பல நாட்களாக திரும்பவில்லை.. தொழில்கள் எல்லாம் அவன் கையெழுத்து இட வேண்டியது, அவனை நேரடியாய் செய்ய வேண்டிய வேலைகள் என அனைத்தும் நெருக்கி பிடிக்கவே ஊழியர்கள்.. ராகவனை தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்கள்!!
அதன் பின் தான் கம்பெனி, ஃபேக்டரி சேனல் என அனைத்து கணக்கு வழக்குகளையும் பார்த்தவர் முகுந்தன் ஏதோ ஒரு இடத்தில் இடறி இருக்கிறான் என்று புரிந்து கொண்டார்..
நந்தகுமாரின் மகள் அர்ஷிதா அவன் மீது ஆசை கொண்டு திருமணத்திற்கு கேட்டபோது ஒரேயடியாய் மறுத்தான்.. அதனால் நந்தகுமாரின் நட்பும் கூட இவரை விட்டு விலகி விட்டது.. அந்தப் பெண் அர்ஷிதா மிகவும் நல்லவள் ஆகத் தான் தோன்றினாள்.. இவனை மிகவும் விருப்பப்பட்டது போல கூட தோன்றியது..
ஆனால் அவளை வேண்டாம் என்று ஸ்ருதியுடன் தனது பெயரை இணைத்து பத்திரிகைகளில் செய்திகள் வர வைத்தான்.. அதற்காக மகனை கண்டித்தவர் உடனே ஸ்ருதியை அழைத்து அவளிடம் மன்னிப்பும் வேண்டினார்..ப் அதனாலேயே ‘முகுந்தனின் மேல் தவறில்லை’ என்ற எண்ணம் ஸ்ருதிக்கு வந்தது.. ஆனால் தன் தந்தை தன்னை கட்டுப்படுத்துகிறார் என்று தெரிந்ததும் ரகுவிடம் சென்று அவனை சீண்டி விட்டான்..
அதனாலேயே ஸ்ருதியின் பெற்றோர் இறக்க நேர்ந்தது.. அதன் பின் ஸ்ருதி நாட்டைவிட்டே சென்றதும் ராகவன் அறிவார்.. ‘அவள் காணாது போன பின், தன் மகன் அமைதியாய் தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறான்’, என்று நினைக்க அவனோ ஏக குளறுபடிகள் செய்து வைத்திருந்தான்.
தொழிலை சமாளிக்க பெரும் பங்குகளை விற்க வேண்டிய நிலையில் தன்னுடைய நிறுவனங்கள் இருப்பதை உணர்ந்து கொண்டார்.. இந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக உதவ முன்வந்தார் மிருதுளாவின் தந்தை மயில்வாகனன்..
பெரும் தொழிலதிபரான அவர் தானே முன் வந்து இவர்களது தொழில் பங்குகளை வாங்கி இவர்களுக்கு உதவ முன்வந்தார்.. கம்பெனியின் ஒரு டைரக்டராக தன்னுடைய மகளை நியமிக்க வேண்டும் என்ற விதியை மட்டுமே கூறி னார்..
தன்னுடைய தொழில் சாம்ராஜ்யத்தை காக்க ராகவனும் வேறு வழியில்லாததால், மிருதுளாவை டைரக்டராக நியமித்தார்.. இது எதையும் முகுந்தன் அறியவில்லை!
இந்தியா திரும்பியவன் எண்ணமெல்லாம் ஸ்ருதி மேலான வெறி ஊறிப் போயிருக்க, வீட்டிற்கு வந்து தந்தையின் கண்காணிப்பில் தொழிற்சாலைக்கு செல்ல அவன் விரும்பவில்லை.. ஆதலால் நேராக கோவாவிற்கு சென்றவன் அங்கு ஒரு ரிசார்ட் புக்கிக் கொண்டு கார்த்திக் உடன் அங்கேயே தங்கிவிட்டான்..
அவன் மனதில் ஸ்ருதியை பார்த்த நாள் முதல் இன்று வரையான நிகழ்வுகள் வரிசை கட்டி இம்சித்தன.. அவளது அழகும், அலட்டல் இல்லா குணமும்.. இவன் பணம், பதவி கண்டும்.. இவனே அவளை நெருங்கிய போதும் விலகி நின்று நட்பை மட்டும் கேட்ட அந்த குணமுமே அவள் மேல் பித்து கொள்ள போதுமானதாய் இருந்தன..
தன்னை சுற்றி சுற்றி வந்த மின்மினிகளையே கண்டு அலுத்தவனுக்கு.. விலகி நிற்கும் பெண் பெரும் போதையாய் தோன்றினாள்.. அவளே அவனிடம் மயங்கி அவன் பின்னால் வர வேண்டும் என எண்ணினான்.. மமதை கண்ணை மறைக்க ஏதேதோ செய்து இரண்டு வருடங்கலாய் துரத்திய பேதைப் பெண்.. தன் சுய ரூபம் தெரிந்ததும் விலகி ஓட நினைத்ததை மனம் அசை போட்டது..
இப்போதும் அவள் விலகவே நினைக்கிறாள்.. அவள் விலக, விலக இவனது பிடிவாத மனம் அவள் வேண்டும் வேண்டும் என வெறி ஏற்றியது.. கோவா சென்றதும் அவன் முதலில் அறிய முற்பட்டது ஸ்ருதியை பற்றி தான்..
ஆனால் அவள் அங்கிருந்து காணாமல் சென்ற மாயம் தான் விளங்கவில்லை.. தான் இந்தியா திரும்பிய பின், அவள் பயம் விலகி அங்கேயே தங்கியிருப்பாள் என எண்ணியிருக்க.. அவளோ காணாது மறையும் பொய் மானாய் மறைந்திருந்தாள்…
மேலும் வெறி கொண்டது போல குடித்தே தீர்த்தவன்.. அவளை எப்படியாவது கண்டுபிடிக்குமாரு கார்த்திக்கிடம் காய்ந்தான்.. அவனும் பெண்கள் இருவரையும் தேட தனியார் துப்பறியும் நிறுவனத்தை நியமித்தான்.. பெண்களை காணாது முகுந்தன் தவிக்க.. அவன் தவிப்பை போக்க தீவிரமாய் அவர்களை தேட முயற்சித்தான் கார்த்திக்..!!
அவன் கோவாவில் கழித்த ஒரு வார காலத்திற்குள் மிருதுளா அவனது தொழில் சாம்ராஜ்யத்தில் அசைக்க முடியாத சக்தியாக வந்து நின்றாள்.. பணத்திற்காக தன்னை அவள் துரத்துவதாக கூறிய அவனுக்கு, தன் பணத்தால் தான் அவன் தொழில் நிலையாக நிற்கிறது என்று புரிய வைக்க முயன்றாள்..!!
என்னவானாலும் அவனை விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.. அவனுக்காக என்ன செய்யவும், தயாராக இருந்தாள்.. அதற்கு அவனையே கட்டிப்போட நேர்ந்தால் கூட அதற்கும் கலங்க மாட்டாள் என்றே தோன்றியது.
இந்தியாவில், ஸ்ருதிக்கும், நந்தினிக்கும் வாழ்க்கை இந்த இரண்டு வருடங்களாக இல்லாத அளவுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.. தன்னுடைய சின்னஞ்சிறிய வீட்டில் இவர்கள் வருவதற்கு முன்பே அழகாய் அலங்காரம் செய்து முறையாக மருமகளாய் அவளை வீட்டிற்கு வரவேற்றான் புவியரசன்..!!
வந்த மறுநாளே தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி சில நண்பர்களின் உதவியுடன் அவர்களது திருமணத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி முறையாக பதிவு செய்து கொண்டான்.. இதெல்லாம் ஸ்ருதியின் பாதுகாப்பிற்கு மிகவும் தேவை.. அவள் மனதை ஆற்ற இவையெல்லாம் உதவும் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தான்.
முதல்நாள் அவர்களை ஹோட்டலில் தங்க வைத்தவன், மறுநாள் ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணம் முடிந்த பின்பே அழகிய பட்டில் தேவதையாய் தன் அருகே நின்ற அவளுக்கு மீண்டும் மாலை மாற்றி தங்களது திருமணத்தை அவள் மனதில் மீண்டும் ஒருமுறை ஆழமாய் பதிய வைத்து அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான்..
இருவரது பெற்றோர் புகைப்படங்களும் பூஜை அறையை அலங்கரிக்க தெய்வமாய் நின்ற தன் பெற்றோர்கள் தன்னை ஆசிர்வதித்த திருப்தியை உணர்ந்தாள் ஸ்ருதி. தனக்காக அவன் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொன்றும் அவளை மெய் உருக வைத்தது..
இதுவரை எதற்காக திடீர் கல்யாணம்? எதற்காக உடனே இந்தியா புறப்பட வேண்டும்? என்றோ, முகுந்தனை பற்றியோ, ரகுராமை பற்றியோ ஒரு கேள்வியும் கேட்கவில்லை கண்ணாளன்..!!
கண்களில் அதே காதலுடன் அவளுக்கு வேண்டியதை அவள் கேட்காமலே பார்த்து பார்த்து செய்தான்.. அவனது ஒவ்வொரு செயலிலும் நான் உனக்கானவன்.. உன்னுடனேயே இருக்கிறேன்.. எதற்கும் நீ கலங்க வேண்டாம் என்ற செய்தி அப்பட்டமாய் தெரிந்தது..
அந்த வீட்டிற்கு அவள் வந்த முதல் நாள் இரவு விக்கியும் நந்தினியும் சேர்ந்து அவனது அறையை முதலிரவு அறையாக அலங்கரித்து இருவரையும் உள்ளே தள்ளினார்கள்..!!
மிகவும் நடுக்கத்துடனே உள்ளே நுழைந்த ஸ்ருதிக்கு புவியரசின் மென்மையான புன்னகையே ஆயிரம் யானை பலத்தைக் கொடுத்தது..
“பொம்மி என்கிட்ட என்ன பயம் உனக்கு? நான் உன்னோட அதே பழைய பிரண்ட் அரசு தான்.. காலேஜ் படிக்கும் போது எப்படி என்கிட்ட உரிமையா பேசி பழகினாயோ, எப்படி என்னை கிண்டல் செய்தாயோ, அடித்து விளையாடினயோ அதே போல் நீ நீயாகவே இருக்க வேண்டும்.. அதைத் தான் நான் விரும்புகிறேன்..
அமைதியான பாந்தமான ஸ்ருதி.., தன்னோட நட்புக்களிடம் மட்டும் குறும்பை காட்டுற அடாவடியான ஸ்ருதி.. வேணும்!! எதற்கு எடுத்தாலும் இப்படி கோழிக்குஞ்சு போல வெடவெட என்று நடுங்கும் ஸ்ருதிய எனக்கு பிடிக்கவே இல்லை..” என்றான்.
அவனது கூற்றில் தான் இப்போதெல்லாம் மிகவும் நடுங்குவதை உணர்ந்தவள்.. அவனை தேற்றுவதற்காகவே தன் மனதிற்குள் தைரியத்தை கூட்டிக் கொண்டாள்.. “யார பார்த்து கோழிக்குஞ்சு போல நடுங்கும் ஆள் என்று சொல்கிறாய்? நான் அரசுவின் மனைவி.. போலீஸ்காரன் பொண்டாட்டி..!! எனக்கெல்லாம் பயம் என்றால் என்னவென்றே தெரியாது.. இனிமேல்..!!” என்றாள்.
அவள் பேசுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவன் ‘பொம்மி, எதற்கும் கலங்காதே.. எனக்காக இப்ப சொல்ற இந்த தைரியம் உனக்கு உள்ளேயே வரும் அளவுக்கு உன்னை நான் தைரியசாலியாக மாற்றி விடுவேன்.. கவலைப்படாதே’ என்று தன் மனதிற்குள்ளாகவே அவளுக்கு வாக்களித்தான்..
மென்மையாக அவளை பார்த்து சிரித்தவன், “இதெல்லாம் அவங்க தெரியாமல் ஏற்பாடு செஞ்சிட்டாங்க டா.. உன் மனசு எப்போ என்னை முழுவதுமாக உன் கணவனாக ஏற்றுக் கொள்கிறதோ அதுவரை இதெல்லாம் தேவையில்லை.. நீ கொஞ்சம் தைரியமாகனும்.. உன் மனசு தன்னால இளகி என்னிடம் வர வேண்டும்.. இத்தனை வருடம் உனக்காக காத்திருந்த என்னால், இன்னும் கொஞ்ச நாட்கள் காத்திருக்க முடியும்.. கண்டிப்பா என் அன்பால் உன் மனசை வென்று விடுவேன்.. என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றான்.
அவளது மனமும் எப்போதோ அவன் பக்கம் சாய்ந்து விட்டிருந்ததை அவள் உணரவில்லை.. தன்னுடைய பயத்திலேயே சுழன்றாள்.. கல்லூரிக் காலத்திலேயே அவன் மேல் காதல் வந்ததையே இன்னும் அறியாமல் தான் இருந்தாள்.. ஆனால் அவளது காதல் அவனுக்கு தெரியாமல் இல்லை.. அந்த காதலை வெளிக் கொண்டு வரும் வித்தையும் அவன் அறிந்தே இருந்தான்…
வெகு விரைவிலேயே அவளை பழையபடி கலகலப்பாக மாற்ற வேண்டும் என்று மனதிற்குள் உறுதி ஏற்றான்..
இதற்கு நடுவில் முகுந்தனையும், ரகுராமையும் அவளது வாழ்விலிருந்து மொத்தமாய் விளக்குவதற்கான வழிகளையும் ஆராய தவறவில்லை.. ஆழ் மனது எந்நேரமும் அந்த சிந்தனையில் இருக்க, வெளியே அவளைப் பார்த்து சிரித்த அவன் அவளை இழுத்து இறுக்கமாக அணைத்தான்..
வெம்மையான அந்த அணைப்பில் கட்டுண்டு அமைதியாய் நின்ற அவளை, அவளது எலும்புகள் நொறுங்கும் அளவு மிக நெருக்கமாய்.. இறுக்கமாய் அணைத்த அவன் அவளது இரு கன்னங்களிலும் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.. உதடுகளுக்கு நகரத் துடித்த தன் தடித்த உதடுகளை சிரமப்பட்டு பிரித்து எடுத்து.., உடனே அவளை விலக்கி விட்டு, “நீ படுத்து தூங்கு மா.. நான் அப்புறமா வந்து தூங்குகிறேன்..” என்றபடி வேகமாக வெளியேறினான்.
அவன் விட்டுச் சென்ற இடத்தில்.. பதுமை என நின்றிருந்தாள் பாவை அவள்!!
நேசம் கொண்ட மனது தன் மனதில் ஆனந்தபைரவி இசைத்தது..
மனதில் தோன்றிய உற்சாகத்தில் தன்னை மீறி வீணையை கையில் எடுத்தவள் அந்த குளிர்ந்த இரவில், இனிமையான ஆலாபனை ஒன்றே அரங்கேற்றி விட்டே நித்ரா தேவியிடம் தன்னை ஒப்புவித்தாள்..!!
….
கண்ணன் என் காதலன் – பாரதியார்
செஞ்சுருட்டி – திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல் – வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக – எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் – மனது
வெறுத்து விட்டதடீ! . … 1
பாயின் மிசை நானும் – தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் – சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் – சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; – சகியே!
நுங்க ளுறவை யெல் லாம். … 2
உணவு செல்லவில்லை; – சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; – சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; – எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே – சுகமே
காணக் கிடைத்ததில்லை. … 3
பாலுங் கசந்தடீ தடீ! – சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் – செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் – இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் – கிரகம்
படுத்து மென்று விட்டான். … 4
கனவு கண்டதிலே – ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை – எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; – சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே – புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ! . … 5
உச்சி குளிர்ந்ததடீ! – சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் – முன்னைப்போல்
மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! – எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! – சகியே!
அழகு வந்ததடீ! … 6
எண்ணும் பொழுதி லெல்லாம் – அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! – புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; – அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் – அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ! … .7
கண்ணியவளை கண்ணன் மனம் ஒரு கணமும் மறக்கவும் இல்லை, நினைக்காமல் மறுக்கவும் இல்லை.. அவளை கல்லூரியில் கண்ட நாள் முதலாய் காதலில் கட்டுண்டவன் இன்னும் மீளும் வழி தெரியாமல் தவித்தபடி இருந்தான்..
அவள் பெற்றோர் மரண செய்தி கேட்டு ஓடோடி வந்தவன் அவள் சென்ற திசை தெரியாது.. தண்டக வனத்து ராமனாய்.. தொலைத்த தன் சீதையை தேடி நாடெங்கும் அலைந்தான்..
அவள் பாரிசில் இருப்பதாக ஒரு ஊகத்தின் அடிப்படையிலேயே அந்த கேசை எடுத்து அங்கே சென்றான்.. ஆனால் அவனை தேடி அலைய விடாமல் கன்னியவள் கை சேர்ந்த அதிசயத்தை அவனால் இன்னமும் நம்ப இயலவில்லை..
வரதன் முன் அவளை கண்டுகொள்ளாதது போல நகர பெரும்பாடு பட்டது காதல் மனது…!! அவளை கண்ட நொடி.., அவளும் அவனைத் தான் பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அன்றொரு நாள் கல்லூரி காலத்தில், ஈபிள் டவர் முன் தன் காதலை ஓங்கி உரைக்க வேண்டுமென அவன் பேசிய வார்த்தைகள் நியாபக இடுக்குகளில் பாய்ந்து அவனை தாக்கின..
அடுத்த அதிர்ச்சி.., அவளே மணம் செய்ய கேட்டது.. காணவே இயலாதோ என எண்ணி ஏங்கிய பெருங்கனவு.. கண்களில் பட்டது மட்டுமில்லாது அவன் கைகளிலேயே தன்னை ஒப்புக் கொடுத்தது..!!
எந்த நிலையிலும் அவளை கலங்க விடக்கூடாது என்ற உறுதி இதயத்தில் திடமாய் ஏறியது.. இதோ அவன் கனவுகளின் தேவதை கண்ணெதிரே.. , அவன் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறாள்..
அவனது ஆண்மை.., அவளை அடைய இம்சித்தது.. அவனது பேராண்மை தள்ளி நிற்க எச்சரித்தது.. அவளை உடனே அடைந்துவிட உடல் தகித்தது.. அவள் மனதை வென்ற பின்பே என உயிர் தடுத்தது..
தனக்குள்ளேயே தவித்து தத்தளித்தவன்.. அவளது மெல்லிய ஆலாபனையில் மனம் சாந்தி அடைய.. நிர்மலமான உள்ளத்துடன் உறங்க சென்றான்…!!