தீரா மயக்கம் தாராயோ 25

0
770

இதழ் கூம்பி நிற்கும் அல்லியின் மனம்புரிந்த ஆதவன் தனது ஆயிரம் கரங்களை விரித்து அழைக்கும் அதிகாலை நேரம். ஸ்ருதியின் அழகான குரலால் கந்தசஷ்டிகவசம் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டிய வீடு, இன்று ஒளியிழந்து இருட்டிக்கிடந்தது. எப்போதும் கடைசியில் எழும் நந்தினி இன்று முதலாவது எழுந்துவிட்ட அதிசயம் வேறு இன்று இலவச இணைப்பாய்.

அரைத்தூக்கத்தில் அசைந்தாடிக் கொண்டுவந்த நந்தினி, ‘ஸ்ருதி இன்னும் எழுந்திரிக்கல போல?! அதுசரி, நல்ல நாள்லயே பாதி ராத்திரி தூங்க மாட்டா. நேத்து ஆடின ஆட்டத்துக்கு எத்தனை மணிக்கு தூங்கினாளோ?! பாவம் புவி அண்ணன், நேத்து ரொம்பவே நொந்துட்டாரு. இவ நேத்து காலையில வரைக்கும் நல்லாத்தான இருந்தா? திடீர்னு என்ன வந்து தொலைச்சிது?’ என்று புலம்பியபடி அதகளமாய் இருந்த வீட்டை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

மேகக்கூட்டத்தைத் தாண்டி, பாய்ந்து வந்த சூரிய ஒளிக்கீற்று ஜன்னல் இடுக்குகளில் நுழையத் தொடங்க, அவனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஜன்னல்களை திறந்துவிட்டாள். கதவைத் திறந்த நொடிதனில் நெடிய நிழலுருவம் ஒன்று அவளை நெருங்கிற்று, நிமிர்ந்து பார்த்தாள், புன்னகை முகமாய் மகிழ்வேந்தன்.

அவனுடன் பேசாமல் இருந்த நேரமே அவனது காதலின் ஆளுமையை அவளுக்கு உணர்த்தி இருக்க, துள்ளியோடி வந்து, “கேகே..” என்று அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள். விம்மி வெடித்துச் சிதறியவளை, விலகவிடாது இறுக்கிக் கொண்டான்.

அவளும் அவனை விலக திரும்ப மனம் இல்லாதவள் போல் இரண்டற கலந்து, “எங்க போனீங்க கேகே? நான் உங்க போனுக்காக எவ்ளோ ஈகரா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?” என்றாள் தவிப்பு நிறைந்த குரலில்.

“நதிம்மா.. நான்..”

“பேசாதீங்க, கார்த்திக்க பத்தி சொன்னதும் என் மேல கோபப்பட்டு என்ன விட்டுப் போய்ட்டீங்கனு நெனச்சேன்.”

“அதான் வந்துட்டேன்ல, அழாதடா நதிம்மா..” என வாஞ்சையாய் அவள் கூந்தல் வருடினான்.

பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த புவியும் ஸ்ருதியும் வேந்தனை கண்டதும், ஒரு நொடி இன்ப அதிர்ச்சி அடைந்தாலும் அடுத்த நொடியே மகிழ்ச்சியாய் அவனை வரவேற்றனர். வேந்தனோ அவசர வேலையாய் இந்தியா வருவதாய் சொன்ன ஸ்ருதி, இன்று தழையத் தொங்கும் தாலியோடு வந்து நிற்பதைக் கண்டு அதிர்ந்து போய் இருந்தான். அதிலும் புதிதாய் திருமணம் ஆகியிருக்கும் கணவனும் மனைவியும் தனித்தனி அறையிலிருந்து வருவதையும் வேந்தனின் கண்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டது.

ஸ்ருதியோ இத்தனை நாட்களாக தனக்கு ஆதரவளித்த நிறுவனத்தின் முதலாளி என்பதாலும், தன் தோழியின் எதிர்கால கணவன் என்பதாலும், வேந்தன் முன்பு புன்னகை எனும் முகமூடி அணிந்திருந்தாள். ஆனால் புவிக்கு அவளின் உள்மனக் கோபம், அவளின் விழி வழியே அப்பட்டமாய் தெரிந்தது. அதுசரி, அவன் அவளுக்கு கணவன் மட்டுமா? ஆருயிர்த் தோழனுமாயிற்றே.

ஸ்ருதி, “என்ன சார், சொல்லாம கொள்ளாம வந்து இருக்கீங்க? அதுவும் இவ்வளவு காலையில!”

வேந்தன், “இன்னிக்கி மகிழினிக்கி பிறந்தநாள், அவளுக்கு ஒரு பரிசு தரப்போறேன். அவளோட புது அம்மாவ” என்றவனின் பார்வை காதல் பொங்கிட நந்தினியின் கண்களில் நிலைத்து நின்றது.

“நான் நந்தினிய ரெண்டு நாள் எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாமா? இன்னிக்கி ஈவ்னிங் பார்ட்டில அவள என் ரிலேடிவ்ஸ்க்கு இன்ட்ரடியூஸ் பண்ணலாம்னு இருக்கேன்.”

ஸ்ருதி, “தாராளமா” என்று அகமகிழ்வாய் தன் தோழியை அனுப்ப சம்மதித்தாள்.

வேந்தன், “நீங்களும் சாயங்காலம் பார்ட்டிக்கி வந்திடுங்க. நதிம்மா உனக்கு ரெண்டு நாளைக்கி வேணுங்கிற திங்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வா, நான் கார ரிவர்ஸ் பண்றேன்” என முன்னால் சென்றான்.

நந்தினி தன் அத்யாவசிய உடமைகளை எடுத்ததுவிட்டு, “புவி அண்ணா, ஸ்ருதி ஏதோ குழப்பத்துல இருக்கா, சீக்கிரமே சரியாகிடுவா. நான் ரெண்டு நாள்ல வந்துடுவேன், அதுவரைக்கும் அவ எது செஞ்சாலும் கொஞ்சம் பொறுமையா பாத்துக்கோங்க” என்று ரகசியமாய் அவன் காதில் ஓதிவிட்டுச் சென்றாள்.

நந்தினி வேந்தனோடு சென்றதும் புவி தயக்கமாய், “பொம்மி, எனக்கு உன் வலி புரியுது, நான் சொல்ல வர்றத கொஞ்சம் கேளுடி” என ஸ்ருதியோடு சமாதானம் பேச முயன்றான்.

ஆனால் அவளோ அவனை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. அருகில் வந்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். அதையும் மீறி நெருங்க முயன்றால், கையில் கத்தியை எடுத்துக் கொண்டாள். மதியம் வரையில் இருவரும் இப்படியே கண்ணாமூச்சி விளையாட, புவியரசுக்கு மேலிடத்திலிருந்து அவசர அழைப்பு வந்தது.

புவி, “பொம்மி, நான் வர்ற வரைக்கும் நீ வெளியில எங்கேயும் போகாதடா” என ஒன்றிற்கு பத்து முறை அறிவுறித்திவிட்டு அவசரமாய் கிளம்பி ஓடினான்.

புவி கிளம்புகையில் அவன் முகத்திலிருந்த சுறுசுறுப்பு, திரும்பி வந்த பொழுது தொலைந்து போயிருந்தது. அப்படி என்ன ஆனது என்று ஸ்ருதிக்கு கேட்கவேண்டும் போல் இருந்தாலும், வீம்புக்காக முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவனோ இந்நிலையிலும் அவள் தன் பவளவாய் திறந்து ஒரு வார்த்தை பேசாமல் இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் உடைந்து போனான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அரக்கப் பறக்க ஓடி வந்த விக்கி, “என்னடா ஆச்சு? ஏன் உன்ன சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க?” என்றதும் ஸ்ருதிக்கு தூக்கி வாரி போட்டது.

புவி, “என்னத்த சொல்ல? அதே தருண் விஷயம்தான், அவரோட வொய்ப் சஞ்சனா ரகசிய வாக்குமூலம் தந்திருக்கிறதா சொல்றாங்க, ஆனா அந்த பொண்ணு அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். என்ன புடிக்காத எவனோ ஒருத்தன் ஏதோ செஞ்சிருக்கான்.”

விக்கி, “சரி, நீ இப்போ என்ன செய்யப்போற?”

புவி, “மேலிடத்துல இருந்து ஆர்டர் வந்தப்புறம் என்னால என்ன செய்ய முடியும்? பேசாம இந்த ரெண்டு மாச லீவுக்கு என் சொந்த ஊருக்கு போகலாம்னு நினைக்கிறேன்.”

விக்கி, “ஏய், ஏன்டா?”

புவி, “இங்க இருந்தா பிரச்சனை இன்னும் பெருசாத்தான் போகும்னு எனக்கு தோணுது. நந்தினிய பாத்துக்குறதுக்கு வேந்தன் வந்துட்டாரு. எல்லாத்தையும் விட எங்களுக்கு கொஞ்சம் தனிமை வேணும்டா.”

அனைத்தையும் கேட்டு விட்டு, கிணற்றில் விழுந்த பாறைபோல் அசையாமல் அமர்ந்திருக்கும் ஸ்ருதியின் இறுகிய முகம் விக்கியின் அடிமனதை பிசைந்தது.

விக்கி, “சரிடா, பாத்து போயிட்டு வாங்க, எதும் வேணும்னா கால் பண்ணு” என்று நாகரீகமாய் விலகிக் கொண்டான்.

நந்தினியோ ஸ்ருதி இருக்கும் நிலையில் இருவரையும் தனியே அனுப்ப மாட்டேன் என்று அனைவரையும் ஒருபாடு படுத்தி எடுத்தாள்.

இறுதியில் வேந்தன், “நதிம்மா, புவி சொல்றதுதான் சரி. கொஞ்ச நாள் தானே? அவங்க போயிட்டு வரட்டும்” என்றான் உறுதியான குரலில்.

ஸ்ருதி, “நந்தினி, ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. இப்போ இருக்கிற மன நிலைமையில எனக்கு யாரையும் பார்க்க புடிக்கல, எல்லாருமே என்ன ஏமாத்துற மாதிரி தோணுது. என்ன நானே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கனும், அதுக்காகவாவது நான் போயிட்டு வர்றேன்டி” என்றாள்.

அனைவரும் ஒரு அணியில் நின்று கொண்டு வாதாடிட, நந்தினியால் அதற்குமேல் அவர்களோடு மல்லுக்கட்ட இயலவில்லை. இரண்டு நாட்களிலேயே மகிழினி பாப்பா வேறு தன் மழலையால் நந்தினியை மயக்கி வைத்திருந்ததால், மனதே இல்லாமல் புவியையும் ஸ்ருதியையும் வழியனுப்பினாள்.

அடுத்தநாளே புவியின் கார் அவனது காதல் மனைவியை சுமந்தபடி வால்பாறையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. தகிக்கும் நெருப்பை நெஞ்சத்தில் சுமந்து கொண்டிருந்த அவர்கள் இருவரையும், அந்த குளிர் பிரதேசம் தன் மடிக்குள் இழுத்து அணைத்துக் கொண்டது.

புவியின் பூர்வீக குடியிருப்பாகிய வால்பாறையைப் பற்றி தகவல் தெரியாத முகுந்தன், உள்ளூரில் அவர்களை தேடிச் சலித்து ஓய்ந்து போனான். அடுத்தகட்டமாக அவர்களைத் தேட அவன் முனையும் முன், மிருதுளா முந்திக் கொண்டாள்.

கார்த்திக்கோடு தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தவனின் முன்னால் வந்து நின்ற மிருதுளா, “சாரி மிஸ்டர் முகுந்த், பலதடவை உங்களுக்கு அன்பா சொல்லிப் பார்த்தேன், ஆன நீங்கள் கேட்கல. அதனால இப்போ அதிகாரத்த கையில எடுக்க முடிவு செஞ்சுட்டேன்.”

முகுந்தன், “ஏய், எதப்பத்தி பேசிட்டு இருக்க?”

“இன்னுமா புரியல? உங்க கம்பெனி விஷயமாதான் பேசுறேன். ஒருத்தர கட்டாயப்படுத்தி வேலைதான் வாங்க முடியும், அவர் காதல வாங்க முடியாதுன்றது எனக்குத் தெரியும். உங்களுக்குத்தான் அது இன்னும் தெரியல. பை த வே இன்னிக்கில இருந்து உங்களுக்கு ப்ரெண்ட்ஸ், என்டர்டெயின்மெண்ட் எல்லாமே கட். காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் கம்பெனில என்கூட வேலை பார்க்கனும்.”

முகுந்தன் உச்சகட்ட அதிர்ச்சியோடு, “வாட்? ஹௌ டேர் யூ? என் வீட்டுல நின்னுட்டு என்னையே அதிகாரம் பண்ற? கெட் அவுட்” என்று கத்தினான்.

அவன் கத்தி முடிக்கும்வரை காதுகளை விரலால் அடைத்துக் கொண்டிருந்த மிருதுளா, “கூல் மிஸ்டர் முகுந்த், உங்க கம்பெனில இப்போ என்னோட ஷேர்தான் ஜாஸ்தி, நான் நினைச்சா உங்க கம்பெனியையும் உங்களையும் ஒரே நாள்ல ஒட்டுமொத்தமா என் கைக்குள்ள கொண்டு வர முடியும். ஆனா நான் அப்டி செய்ய மாட்டேன், ஆனா உங்க அப்பா செய்வாரு. இன்னிக்கி தேதிக்கி நான் சொன்னபடி நீங்க கேட்கலைனா உங்க டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், செல்போனெல்லாம் கோவிந்தா. இதுக்கு மேலையும் நீங்க அடம் புடிச்சா அநியாயமா உங்க அப்பா அம்மாவே உங்களுக்கு கட்டாயக் கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்க. பொண்ணு யாருன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல.”

முகுந்தன் எதையோ சொல்ல வாய் திறக்க, கார்த்திக் அவன் காதில் ரகசியமாய், “கோபப்படாத, இப்போதைக்கு அவ சொல்றத கேக்குறதத் தவிர நமக்கு வேறு வழியில்ல” என்றான்.

மிருதுளா, “சரி வாங்க, சமீபகாலமா உங்களுக்கு தெரியாம போன, உங்க கம்பெனி டீடெயில்ஸ் எல்லாம் நான் சொல்றேன்.”

முகுந்தன், “வந்து தொலைக்கிறேன்..”

மிருதுளா, “அப்புறம் மிஸ்டர் கார்த்திக், இன்னிலிருந்து உங்க வேலை மாறுது. அஃபீசியலோ, பெர்சனலோ நீங்க ரெண்டு பேரும் எது பேசுறதா இருந்தாலும், முதல்ல என்கிட்ட பர்மிஷன் கேக்கனும்” என்று அடுத்த குண்டை தூக்கிப் போட்டுவிட்டு அலட்டிக் கொள்ளாமல் சென்றாள்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஸ்ருதியின் மூச்சுக்காற்றில் விரவி நின்ற குளிர் காற்றின் இதம் அவள் கனவில், ‘நிகழ்ந்து முடிந்தது எல்லாம் கனவு, நான் இன்னமும் என் பெற்றோரின் அருகாமையில்தான் இருக்கின்றேன்’ எனும் மாய பிம்பத்தை தோற்றுவித்தது. அவர்களின் அன்பில் அவள் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கர்ண கொடூரமாய் ஒரு கதறல்.

படாரென்று பதறி அடித்துக்கொண்டு படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தவளின் காதில் கிச்சனிலிருந்து,

“நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!”

எனும் வரிகள் வந்து விழுந்தது. இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தாள். புவி சமையல் செய்து கொண்டே தன் இசையில், மன்னிக்கவும் தன் கதறலில் லயித்திருந்தான். அறையில் ஒரு மூலையில் அவனோடு போட்டி போட இயலாமல் ஒலி தேய்ந்த குரலில் பாடிக் கொண்டிருந்தது அவனின் செல்போன்.

விழி விரிய நின்றிருந்தவளின் முகம் பார்த்ததும் புவியரசு, “ஹேய் பொம்மி, வா.. வா.. இந்தா டீ” என்று ஒரு பீங்கான் கப்பை நீட்டினான்.

இதுவரையில் இருவருக்குள்ளும் எதுவுமே நடக்காதது போல் பேசுபவனைக் கண்டு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது ஸ்ருதிக்கு.

வெடுக்கென, “உன் கையால செஞ்சது எதுவும் எனக்கு வேணாம்” என்றவள் மீண்டும் தன் அறைக்கு செல்ல முயல்கையில், இழுத்துப்பிடித்து சுவரில் சாய்த்து நிறுத்தினான் புவி. ஒரே நேரத்தில் அவன் விரலும் விழியும் சேர்த்து தீண்டியதில் திணறிய பேதையின் முகம் அந்திவானத்தின் நிறந்தனை பூசிக் கொண்டது.

ஸ்ருதி திக்கி திணறி, “என்ன பண்ற புவி?” என்றாள்.

அவனோ முன்பை விட இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்று, “என் பொம்மிய சமாதானப் படுத்துறேன்” என்றான்.

அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுது அவனுடைய சூடான மூச்சுக் காற்று அவள் மேனியில் பட்டு குறுகுறுப்பை உண்டாக்கிற்று.

“அதுக்குனு இப்டியா ஒட்டிக்கிட்டு, சீ தள்ளிப்போ” என்றதும் அவளின் படபடப்பை கண்டு குறுநகை பூத்த அக்கள்வன், மெதுவாய் தன் பிடியிலிருந்து அவளை விடுவித்தான்.

அடுத்த நொடியே அங்கிருந்து ஓட எத்தனித்தவளின் வலது கரம் பற்றி, “எங்க ஓடுற? அடுத்த சண்டை போட உடம்புல தெம்பு வேணாம்? கொஞ்சம் டீ குடி, நான் கஷ்டப்பட்டு போட்டிருக்கேன்” என டீ கப்பை அவள் முகத்திற்கு நேராக நீட்டினான்.

இந்த சம்பவம் சென்னையில் இரண்டு நாள் முன்பு நிகழ்ந்திருந்தால் ஸ்ருதியின் அவதாரமே வேறாக இருந்திருக்கும். ஆனால் இன்று அவளின் கோபத்தை ஏலக்காய் டீயின் வாசனையும், வால்பாறையின் குளிரும் அசைத்துப் பார்க்க, அவன் நீட்டியதை அமைதியாக வாங்கிக் கொண்டாள். ஒரு மிடரு பருகியதுமே அவளுக்கு அந்த டீயின் மணம், சுவை, திடம் புரிந்துவிட்டது. புருஷன் முதல் முதலாக அவளுக்கென போட்ட டீ, சர்க்கரை சற்று தூக்கலாக பாயாசம்போல் இருந்தாலும், மலைத் தேயிலையும், புது ஏலக்காயும் அதைக் குடிக்கும் அளவிற்கு மாற்றிவிட்டது.

‘அவன் முன்னால் சிரித்து தொலைத்தால் அதை அவன் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வான்’ என்று நினைத்த ஸ்ருதி வலுக்கட்டாயமாய் தன் சிரிப்பினை, இதழ் எனும் பெட்டகத்தில் பூட்டிக் கொண்டாள்.

குளிருக்கு இதமாக சூடான டீ உள்ளே செல்லச்செல்ல, அவள் அதை ரசித்து பருகத் தொடங்கினாள். ஸ்ருதி முரண்டு செய்யாமல் டீயை குடிக்க ஆரம்பித்ததும் புவி சமையல் வேலையில் தன் கவனத்தை செலுத்த தொடங்கினான். இருவரும் அவரவர் வேலையில் கவனமாய் இருந்த பொழுது, அவளது காதுகளில் மீண்டும் அதே கதறல் ஒலி. புவி குழம்பினை கிண்டிக்கொண்டே,

“ஓ.. பூக்களை செடி கொடியின்,
பொருளென்று நினைத்திருந்தேன்!
பூவே உன்னை பார்த்த பின்பே,
பூக்களின் மொழி அறிந்தேன்!” என்றிட,

ஸ்ருதி, “ஐயோ ராமா, புவி நீ பண்ற சமையல வேணாலும் தாங்கிக்கிறேன். ஆனா தயவு செஞ்சு பாட்டு மட்டும் பாடாதடா, எனக்கு பிஞ்சு நெஞ்சு”

“ஹலோ, நீங்க வேணும்னா பாட்டுல பத்ம பூஷன் வாங்குனவங்களா இருக்கலாம். அதுக்குனு எல்லாரும் அப்டியே இருப்பாங்களா? அவனவனுக்கு எவ்ளோ வருமோ அவ்ளோதான் பாடுவான். பாடத் தெரிஞ்சவங்க மட்டும்தான் பாடனும்னா ஸ்மியூல் மாதிரி ஆப் எல்லாம் யாரு காப்பாத்துறது?”

“வேணாம் புவி, நீ பாடுனதெல்லாம் பாட்டுனு கூட சொல்லாத.”

“ஏன் என் பாட்டில் என்ன பிழை கண்டீர்?”

“காட்டு கத்து கத்திட்டு அது பாட்டுனு ஏன்டா மல்லுக்கட்டுற?”

“நக்கீரா.. என்னைப்பார் என் கண்ணைப்பார்”

“மூக்குதான் முன்னால தெரியுது..”

“சரி பரவாயில்ல, என் மூக்கையே பார்”

“டேய் போதும்டா, மூஞ்சிய கிட்டத்துல கொண்டு வராத, பயமா இருக்கு” என்றவளுக்கு அப்பொழுதுதான் தன்னை மறந்து, தான் பேசிக் கொண்டிருப்பது விளங்கியது. கல்லூரி காலங்களில் எப்போதும் இப்படித்தான், இருவருக்குமிடையில் வேண்டாத விதண்டா வாதங்கள் நிறைய நடக்கும். விவாதம் முடியும் பொழுது அது ஆரம்பித்த புள்ளியே தொலைந்து போகும்.

ஸ்ருதி சடாரென்று கிச்சனின் வழியே தெரிந்த வீட்டின் பின்புற தோட்டத்திற்கு சென்று, ‘நான் என்ன செய்கிறேன்? மீண்டும் ஒருவர் மீது நம்பிக்கை வைக்க தொடங்கிவிட்டேனா? அடுத்து ஒரு ஏமாற்றம் நிகழ்ந்தால் அதை தாங்கும் வலிமை என் உள்ளத்திற்கு இல்லையே?! ஆனால் அவன் கண்களைக் கண்டதும் ஏன் என் கட்டுப்பாடுகள் அனைத்தும் அறுந்து விழுகின்றன? உன் பார்வையின் வட்டத்திற்குள் நிற்கையில், ஏனடா இந்தப் பாவியின் மனம் பழி பாவம் அனைத்தும் மறந்து போகின்றது? நிலையின்றி தவிக்கும் என் மனதினை வைத்துக்கொண்டு என் செய்வேன் நான்?’ என்று குழம்பினாள்.

அப்போது ஏதோ ஒரு பறவையின் கீச்சுக் குரல் அவள் சிந்தனையை கலைக்க தலை நிமிர்ந்து மேலே பார்த்தாள். அங்கே பனிப்புகையில் உலாப் போகும் பல வண்ண பறவைகள் கூட்டமும், பரந்து விரிந்து கிடக்கும் பச்சை நிறம் படர்ந்த மலைகளும், அது அத்தனையையும் ஊடுருவ முயலும் பொன் வண்ண சூரிய கோடுகளும் ஸ்ருதியின் கண்களை சில நொடிகளுக்கு தமது வர்ணஜாலத்தால் ஆக்கிரமிப்பு செய்தது. அந்த இயற்கை காட்சியால் அவளின் மனபாரம் குறைய, மன அழுத்தம் எனும் கார்மேகம் விலகி, தன்னிச்சையாய் இன்று மாதாந்திர கார்த்திகை என ஞாபகம் வந்தது.

‘திக்கற்றவர்க்கு தெய்வமே துணை!’ எனும் எண்ணத்தில் அசைவற்ற நம்பிக்கை கொண்டிருப்பவள் ஸ்ருதி. மனைவியின் மணம் புரிந்த மன்னவன் என்ன செய்வான்? அவள் விருப்பப்படியே அன்று மாலை வால்பாறையின் பிரசித்தி பெற்ற பால முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.

அக்கோவில் ஒரு தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டின் உள்ளே அமைந்திருந்தது. இருந்தும் பக்தர்கள் தங்குதடையின்றி வந்து செல்வதற்காக சாலை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கரும் பச்சை வண்ண தேயிலைத் தோட்டத்தில் நடுவேயான சிறு குன்றில், நவரசங்களையும் காட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தான் பாலமுருகன்.

தன் மனம் சுமந்திருந்த அத்தனை பாரங்களையும் அவன் காலடியில் இறக்கிவைக்க நினைத்தவள், தன்னை மறந்து நெடுநேரம் அங்கு இருந்துவிட்டாள். மலைப் பிரதேசமாதலால் நேரம் ஆறு மணியைத் தாண்டும் பொழுதே கோவில் நடைசாற்ற ஆரம்பிக்க, இருவரும் வீட்டைத்தேடி கிளம்பினர்.

பாதிதூரம் வந்திருக்கையில் திடீரென பாதையின் வலதுபுறம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியிலிருந்து சிலர் கூச்சலிடத் தொடங்கினர். போலீஸின் புத்தி, உடனே புவியை அங்குசென்று என்ன பிரச்சனை என்று பார்க்கத் தூண்டியது.

கும்பலில் ஒருவன், “நில்லுங்க தம்பி, பாத்தா புதுசா கல்யாணமான புள்ள மாதிரி இருக்கீங்க. அங்கிட்டு போகாதீங்க, சிறுத்த வந்திருக்கு” என்றதும், சடாரென தனது ஷூவினுள் மறைத்து வைத்திருந்த கன்னை எடுத்துக்கொண்டு கூட்டத்தினுள் புகுந்தான் புவி.

கட்டிப் போடப்பட்டிருந்த நான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒன்றை கடித்துக் கொன்று, அதை தன்னோடு இழுத்துச் செல்ல முயன்று கொண்டிருந்தது சிறுத்தை. ஆனால் ஆட்டின் கழுத்து கயிற்றால் மரத்தோடு கட்டப்பட்டிருந்ததால் அதன் உடல் சிறுத்தையோடு வரவில்லை. புவி சிறுத்தையை நோக்கி குறிவைக்கயில் ஆடுகளில் ஒன்று கட்டவிழ்த்து ஓடத்துவங்கிற்று.

தனக்கு நல்லதொரு இரை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், சிறுத்தை தப்பியோடும் ஆட்டை நோக்கிப்பாய்ந்தது. அடுத்த நொடியே தப்பி ஓடிய ஆடும் அதை விரட்டிய சிறுத்தையும் புவியின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகி விழுந்தன. சிறுத்தை இறந்து விழுந்த அடுத்த நொடியே புவி அவ்விடத்தை விட்டு விரைந்து கிளம்பச்சொல்லி ஸ்ருதியை அவசரப்படுத்த ஆரம்பித்துவிட்டான்.

வீட்டிற்கு வந்ததும் ஸ்ருதி பயங்கர கோபமாய், “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?”

“ஏன் பொம்மி?”

“சிறுத்தைய சுட்ட சரி, அந்த ஆட்டு குட்டி என்ன பாவம் செஞ்சது? அதை ஏன்டா சுட்ட?”

“இரைக்காக ஓடுற சிறுத்தையை குறி வைக்கிறது ரொம்ப கஷ்டம் பொம்மி, ஒரு வேளை குறி தப்பிடுச்சுனா அதுக்கப்புறம் அந்த சிறுத்தைய சமாளிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஏன்னா அது பசியிலயும் வெறியிலயும் எது கிடைச்சாலும் கொன்னு திங்க துடிக்கும். அதனாலதான் நான் அந்த ஆட்டுக்குட்டியை முதல்ல சுட்டேன்.”

“இப்போ நல்லா வியாக்கியானமா பேசுறியே, ஒருவேள ஆட்டுக்குட்டியை சுட்ட சத்தம் கேட்டதும் சிறுத்தை உஷாராகி இருந்தா என்ன செய்வ?”

“சிறுத்தை எல்லாமே பொதுவா ராத்திரி நேரம் தான் வேட்டைக்கு வரும். அதுவும் இரை தனியா இருந்தாத்தான் அடிக்கும், கூட்டமா இருந்தா விலகிப் போயிடும் பொம்மி. இன்னிக்கி அங்க வந்த சிறுத்தை பகல்ல வந்திருக்கு, முக்கியமா கூட்டத்தைப் பார்த்து பயப்படாம நின்னுச்சு. அப்டினா அது ஒரு நேர பசியாற வரல, பலநாள் பசியில வந்திருக்கு. அத நான் கொல்லலைனா அது இன்னிக்கி குறைஞ்சது நாலஞ்சு பேரையாவது காவு வாங்கி இருக்கும்.”

“ஓ…”

“என்ன ஓ போடுற? நான் செஞ்சது சரியா தப்பான்னு தீர்ப்பு சொல்லிட்டு போங்க மேடம்.”

தற்சமயம் அவன் ஒரு போலீஸ் அதிகாரி என்பதையே மறந்து பழைய நியாபகத்தில், “மேடையில பேசிப்பேசி உன் புத்தி அதே மோடுல செட்டாகிடுச்சுடா, பேசி முடிச்சதும் தீர்ப்பு வேணும்னு கேக்கிற?!” என்றாள்.

“நீங்க சொல்லப் போற தீர்ப்புலதான் என் வாழ்க்கையே அடங்கி இருக்குது.”

“சரிதான்”

“அப்புறம் ஏன் பொம்மி அந்த தருண் விஷயத்துல மட்டும் இந்த உண்மையை ஏத்துக்க மாட்டேங்கிற?”

அது நேரம் வரையில் அவள் முகத்தில் குடி கொண்டிருந்த எதார்த்தப் புன்னகை சட்டென்று மறைந்து போனது. பால் வடியும் முக அழகில் சிரித்துக் கொண்டிருந்த ரிஷி அவளின் கண் முன்பு தோன்றி மறைந்தான். பிஞ்சுக் குழந்தைக்கு அப்பாவின் அருகாமை எத்தனை முக்கியமானது? அது என்னவனால்தானே பறிபோனது!’ என்று அவள் தன் சிந்தனை சூழலுக்குள் சிக்க தொடங்கிய நேரம்,

“பேசு பொம்மி?” என்று உரக்கக் கத்தினான் புவி.

“புவி, பாவம்டா ரிஷி” என்றாள்.

“ஆமா பொம்மி, அந்தக் குழந்தை பாவம்தான். அந்தக் குழந்தையோட சந்தோஷமான வாழ்க்கைய பறிச்சது என் தப்புதான். ஆனா அன்னிக்கி அந்த தீவிரவாதி கையில இருந்த டேட்டா அவன் டீம்க்கு போயிருந்தா ரிஷி மாதிரி ஆயிரக்கணக்கான குழந்தைங்க தன் அம்மா அப்பாவ இழந்திருப்பாங்க. டாக்டர் தருண்க்கு அந்த தீவிரவாதியோட திட்டம் பத்தியோ, அவன் செல்போன்ல இருந்த டேட்டா பத்தியோ எதுவும் தெரியாது.”

அவன் பேச்சில் வழக்கம் போல தன்னை மறந்திருந்த ஸ்ருதி, “அப்டி என்ன தகவல் அதுல இருந்துச்சு?” என்றாள்.

“ஒரு நல்ல போலீஸ்காரன் நாட்டோட ரகசிய தகவல்கள, தன் பொண்டாட்டிட்ட கூட சொல்லமாட்டான். இப்போ நான் தகவல சொல்லவா? இல்ல கதைய சொல்லவா?”

அவன் கேள்வியின் பொருள் புரிய ஸ்ருதி தலைகுனிந்து, “கதை” என்றாள்.

“டாக்டர் தருணோட கண்ணுக்கு அந்த தீவிரவாதியோட உயிர் மட்டும்தான் முக்கியமா தெரிஞ்சது. ஆனா என் கண்ணுக்கு நம்ம நாட்டோட மானமே கண்ணு முன்னால வந்துட்டு போச்சு. இதுக்குள்ள நாட்டை ஏன் இழுக்குறேன்னு உனக்கு குழப்பம் வரலாம், ஆனா அதுதான் அன்னிக்கி என் நிலமை. ஒவ்வொரு பாம் ப்ளாஸ்ட்டும் நம்ம நாட்டோட அவமானச்சின்னம், ஆயிரம் வருஷமானாலும் அது அழியாத வடுவா இருக்கும். அந்த தீவிரவாதிங்க அதுக்காகத்தான் அங்க ஒண்ணு கூடியிருந்தாங்க. அந்த நேரத்துல அவங்கள்ல யாரு வெளியில போனாலும் அது நாட்டுக்கு ஆபத்து. அதான் அவசரத்துல டாக்டரையும் சேர்த்து சுட்டேன். ஒருவேள அன்னிக்கி நான் அத செய்யலன்னா இன்னிக்கி எங்கேயோ நடக்குற பாம் பிளாஸ்ட்டுக்கு நான் காரணமா இருந்திருப்பேன். அப்டி இருந்தா உனக்கு சந்தோஷமா பொம்மி?”

“…….”

தலை கவிழ்ந்து நின்ற அவளின் முகத்தை தன் கரங்களால் தாங்கிக் கொண்ட புவி, “தீர்ப்பு சொல்ல உனக்கு விருப்பமில்லையா பொம்மி, சரி விடு. நீ ரொம்ப டயர்டா இருக்க, நான் போய் உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்.”

காலையில் குடித்த டீ அவள் சிந்தனைக்குள் அபாய அலாரம் அடிக்க, “ஐயா சாமி, வேணாம், ஆளவிடு” என்று இரண்டடி பின்னால் போய் நின்றாள்.

“பயப்படாத பொம்மி, இப்போ கரெக்ட்டா பண்றேன். வேணும்னா நீயும் கூட வந்து பாரு.”

“வேணாம், நீ இங்கேயே இரு. நான் போய் டீ போடுறேன்” என்றவள் உள்ளே சென்றாள்.

அவள் முகத்தில் இருந்த தெளிவும் பார்வையில் இருந்த கனிவும் புவிக்கு புது தெம்பைத் தர, “பொம்மி நீ டீ போட்டதும் ஹால்ல எடுத்து வை, நான் அர்ஜென்ட்டா ஒரு போன் பேசிட்டு வர்றேன்” என்றான்.

வீட்டின் முன் வாயிலுக்கு வந்தவன் சுற்றுப்புற பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு தன் செல்போனில் “ஹலோ சார்..” என்றான் போலீஸ் புவியாய்.

“என்ன மேன்? ஊரும் வொய்ப்பும் செட் ஆயிட்டாங்களா?” என்றது அந்த கரகரப்பான குரல்.

“அல்மோஸ்ட் சார். இன்னிக்கி ஒரு பிரச்சனை, நாங்க கோயிலுக்கு போயிட்டு வரும்போது ஒரு இடத்துல சிறுத்தை வந்திடுச்சு. நான் சிறுத்தைய சுட்டுக் கொன்னுட்டேன். இந்நேரம் அந்த இடத்துக்கு போலீஸ் வந்திருக்கும், நீங்க அதை கொஞ்சம் பார்த்து ஹேண்டில் பண்ணிக்கிறீங்களா?”

“இதுக்காடா உன்ன ரகசியமா அங்க அனுப்பி வச்சேன்?”

“அந்த சிறுத்த பயங்கர பசியில இருந்தது, அதுவுமில்லாம அங்க நிறைய லேடிஸூம் குழந்தைகளும் இருந்தாங்க. திடீர்னு பாய்ஞ்சதுனா அவங்களால தப்பிச்சு ஓட முடியாது. நான் நியாயம் தர்மம் பார்த்துகிட்டு நின்னா அந்த சிறுத்தை பல பேர தாக்கியிருக்கும், அதான் சுட்டுட்டேன்.”

“சரி, நான் அந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கு டிபார்ட்மெண்ட்ல இருந்து தகவல் அனுப்ப ஏற்பாடு செய்றேன். புதுசா கல்யாணமானவன், பொண்டாட்டிய மட்டும் பாத்துட்டே இருந்துடாத, கூடவே நீ அங்க போன வேலையையும் பாக்கனும். உன்ன நம்பித்தான் ரெண்டு மாசத்துல நீ கேஸ முடிச்சுடுவன்னு மினிஸ்டர்ட்ட வீரவசனம் பேசிருக்கேன், என் பேர காப்பாத்துடா”.

“ஷ்யூர் சார், இதுவரைக்கும் உங்க நம்பிக்கைய காப்பாத்தின மாதிரியே இனிமேலும் காப்பாத்துவேன். நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் இந்த ஆபரேஷன சீக்கிரம் முடிக்க வேண்டியது எனக்கு ரொம்ப முக்கியம் சார். ஏன்னா எனக்கு இதுக்கப்புறம் சென்னையில முடிக்க வேண்டிய முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு.”

“அப்டி என்னடா வேலை?”

“என் போலீஸ் மூளையப்பத்தி தெரியாத ஒரு க்ரிமினல் மூளை என் உயிரோட விளையாடிடுச்சு. என்ன கதற வச்ச அந்த மூளைய, என் கன்னால சிதற வச்சு பாக்கனும் சார்..”

“உன்னப்பத்தி தெரியாம எவன்டா உன்ட்ட வம்பிழுத்தான்?”

“எங்கிட்ட வம்பிழுத்தாக்கூட விட்ருப்பேன், அவன் வம்பிழுத்தது என் உயிரோட. அவள அனாதையாக்கி அழவச்சவன நான் அவ்வளவு சுலபமா விட்ர மாட்டேன் சார்..” என்று சீறியவனின் முதுகுக்குப் பின்னால் காதல் பொங்கும் கண்களோடு ஸ்ருதி.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here