பாடல் போட்டிக்கான ஆடிஷன் நிறைவடைந்திருந்தது. போட்டியானது போட்டியாளர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு அறிமுகச்சுற்று, கால்சுற்று, அறைசுற்று, அறையிறதி, இறுதிச்சுற்று என பல சுற்றுக்களாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல சுற்றுக்களால் நடைபெறுவதால் வாரமொருமுறை ஸ்ருதியை சந்திக்கும் வாய்ப்பை பெற்றான் முகுந்தன்.
அவனுக்கான வேலைகள் தலைக்கு மேல் அழுத்தினாலும், போட்டி நடக்கும் ஸ்டூடியோவிற்கு அவன் வரவேண்டிய தேவை இல்லாத போதும், அவனுக்கு அங்கு வேலையே இல்லாத போதும், ஸ்ருதியின் ரீங்கார ஸ்ருதியை கேட்கவே வருவான். அவ்வாறு வரும் பொழுதுகள் எல்லாம் அவன் உருவாக்கிக் கொண்ட வாய்ப்பு தான் என பிறர் அறியாது ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு ஒருமுறையாவது பேசிவிடுவான்.
நேருக்கு எதிராய் பார்த்தால் ஒரு புன்னகை, பேசினால் மரியாதையோடு சில வார்த்தைகள் என பண்போடு தன் எல்லைக்குள் நின்றிருந்தாள் ஸ்ருதி. ஆனால் அவள் பேச ஏங்கியதோ ரகுவிடம், அவர்களின் இருபத்தி நான்கு மணி நேரங்களில் சில நிமிடங்கள் கூட அவர்களுக்கானதாக இறைவன் தரவில்லை.
இந்த இரண்டு மாதத்தில் ஆரம்பத்தில் இவள் பேச முயலும் போதெல்லாம் அவன் வேலைப்பளு, வெளியில் உள்ளேன் என்க, அவன் வேலையை கருத்தில் கொண்டு பொறுத்துக் கொண்டாள். ரகுவின் ஃபீரி டைம்மில் கால் செய்தால் இவள் பிஸியா இருந்தாள் ஆக இந்த இரண்டு மாதத்தில் மூன்று நான்கு முறை தான் பேசிக்கொண்டனர். இதற்கிடையில் இருவீட்டிலும் திருமண ஏற்பாடு வெகுவிரைவாக ஏற்பாடானது.
ஞாயிறு விடுமுறை நாளான்று இருவீட்டாரும் நிச்சியதார்த்த பட்டு எடுக்க கடைக்கு வந்திருந்தனர். ஸ்ருதி, சுந்தரம், காயத்திரியோடு ரகுவின் பெற்றோரும் வந்திருந்தனர். பல மணி நேரமாகியும் கடையையே புரட்டிப்போட்டு ஸ்ருதிக்கு புடவை தேடிக்கொண்டிருக்க, எதார்த்தமாக திரும்பியவள் முகுந்தனை கண்டாள்.
சுந்தரமும் பார்த்துவிட அவனும், “ஹாய் அங்கிள்” என்றவாறு அருகே வந்தான். இருபுறமும் நலம் விசாரித்து முடிய தன் குடுப்பத்தாரை அறிமுகப்படுத்தினார்.
“காயத்திரி இந்த புடவைய பாரு” என தேவிகா அழைக்கவும் அவர்கள் விலகிச் செல்ல, ஸ்ருதியும் முகுந்தனும் மட்டுமே நின்றிருந்தனர்.
“என்ன சார் உங்க அம்மாவுக்கு புடைவை எடுக்க வந்தீங்களா?” என்றாள்.
இல்லாத அம்மாவுக்கு எப்படி புடவை எடுத்துக் கொடுப்பேன்! என மனதில் நினைத்துக்கொண்டு, “சாமிக்கு பட்டெடுக்க வந்தேன், வீட்டுல ஒரு பூஜை அப்பா ஏற்பாடு பண்ணிருக்காரு” என்றான்.
அவன் எதிரே இருந்த கடையில் தான் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தான், ஆனால் ஸ்ருதியின் கார் வருவதையும் குடும்பத்தோடு இறங்கி கடைக்குள் செல்வதையும் பார்த்துவிட்டே பின்னே இங்கு வந்தான்.
“நீங்க என்ன இங்க? ஃபேமிலி ஷாப்பிங் போல” என்றான் வசீகர சிரிப்புடன்.
“எஸ் சார். என் நிச்சியதார்த்ததிற்கு, விவஹாப்பட்டு அத்தான் வரவும் தான் பார்த்து எடுக்கணும்” என சொல்லும் போதே புதுப்பெண்ணின் பொலிவோடு அழகு முகம் மேலும் மலர்ந்தது.
அந்த வார்த்தைகள் ஆயிரம் இடியை ஒன்றாக உச்சத்தலையில் இறக்கியது போன்று, துடிக்கும் இதயத்தில் அமிலவீச்சாய் இருந்தது. முகத்தில் தசைநார்கள் சுருங்க முகம் இறுகியது, புன்னகை தொலைந்தது என்ன முயன்றும் அந்த நொடி வலியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முகத்தையும் குரலையும் வெகுசாதாரணமாக வைத்துக்கொண்டு அவசர வேலை என்று கூறி விடைப்பெற்றான்.
அன்றிரவு அவன் அறையில் காலியான மதுபாட்டில்கள் ஒவ்வொன்றாக உடைந்துக் கொண்டிருந்தது. போதை ஏற ஏற ஸ்ருதியின் மயக்கும் குரலும், மந்திர சிரிப்பும், மலர்ந்த அழகும் நினைவில் வந்து அவனின் வலியை பல மடங்கு அதிகப்படுத்தியது. ஸ்ருதியை விட்டுக்கொடுக்கும் எண்ணம் நூற்றில் சிறுபங்கு கூட அவனுக்கு இல்லை. தனக்கே உரிமையானவள் என நஞ்சை போலே நெஞ்சை கீறி விதைத்துக்கொண்டான்!
சுட்டெறிக்கும் சூரிய ஒளி முகத்தில் அறைய காலை பதினோரு மணி அப்போதே எழுந்து தன்னிலை உணர்ந்தான் முகுந்தன். உடனே தனது பி.ஏ சுதாவை அழைத்தவன் இன்றைய பாட்டு போட்டி சுற்றை ஒருமணி நேரம் தள்ளி வைக்கும் படியும், போட்டியாளருக்கும் ஸ்ருதியை தவிர மற்ற நடுவர்கள் அனைவருக்கும் அறிவித்துவிடும் படி ஆணைட்டான்.
டிஸ்பிளேயில் தெரியும் ஸ்ருதியின் புகைப்படத்தைப் பார்த்து மோகனமாய் பார்வையோடு போதை தலைகேறியாடும் ராஜநாகம் போலே தலையை ஒருமுறை சுற்றி சிரித்துக் கொண்டு, “என்னை நோக்கி உன்னை ஈர்க்கும் திருவிளையாடல் இன்றிலிருந்தே ஆரம்பம்” என்றான். எந்த செயலுக்கு எதிர்வினை உண்டு இவன் மட்டும் அதிலிருந்து தப்பிவிடுவானா!
மதியம் மூன்று மணிபோலே வந்திருந்தாள் ஸ்ருதி ஆனால் அங்கு வேலையாட்களை தவிர மற்ற யாருமில்லாது தெரிய குழப்பமாய் நின்றிருந்தாள். அவளின் பின்புறம் வெகு அருகே, உரசும் நெருக்கத்தில், “ஹாய் ஸ்ருதி” என்ற குரல் செவியோர கேசங்களை விலக்கிக்கொண்டு செவி தீண்ட, திடுக்கிட்டவள் தடுமாறி திரும்பினாள்.
எப்போதும் போலே மெல்லிய சிரிப்போடு முகுந்தன் நின்றுகொண்டிருக்க, இதென்ன புதிதாய் இத்தனை நெருக்கத்தில் நின்று பேசுகிறான் என எண்ணிய போதும் அதை முகத்தில் காட்டாது பதிலுக்கு சிரித்தாள்.
“ஹலோ சார், என்ன யாரையும் காணும்?” என்க, “ஹோ, ப்ரோகிராம் ஓன் ஹவர் டிலேனு உங்களுக்கு யாரும் இன்ஃபார்ம் பண்ணலையா?” என்றான் நெற்றியை தடவிக்கொண்டு.
ஒருமணிநேரமா என சோர்ந்தவள் முகத்தை சுறுக்க, “டைம் பாஸ்ஸாக எனக்கு கம்பெனி கொடுக்கலாமே?” என்றான். என்ன மாதிரியான அர்த்தத்தில் பேசுகிறான் என ஆராய்வது போல் தீப்பார்வை பார்த்தாள்.
“ஐ மீன், என்னோட லஞ்ச்க்கு ஜான் பண்ணிக்கலாமே?”
“பட் அல்ரெடி ஐ ஹேட் அ லஞ்ச்”
“இட்ஸ் ஒகே, ஒரு லெமன் ஜூஸ்ஸாவது? உங்களை இங்க தனியா விட்டுட்டு என்னால லஞ்ச்க்கு போகவும் முடியாது” என்றான்.
இங்கு தனக்கு வேலையில்லை எனும் போது மறுப்பதற்கான வேறு காரணம் கிடைக்காது போக, தலையாட்டினாள். ஏனெனில் அவன் குரலிலோ, பேச்சிலோ, முகத்திலோ, நடத்தையிலோ துளிகூட வேறுபாடோ வித்தியாசமோ இல்லை.
அருகே இருக்கும் ஹோட்டல் ஒன்று அழைத்துச் செல்ல, அவளோ சொன்னது போலே ஒரு ஆரஞ்சு ஜூஸ் மட்டுமே வாங்கிக் கொள்ள, அவன் தனக்கான உணவை ஆர்டர் செய்தான்.
”அப்பறம் கல்யாணம் எப்போ?” என மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.
“இன்னும் இருபத்தியெட்டு நாள்ல” என்றாள் மென்சிரிப்போடு. எப்போதும் வசீகரிக்கும் அவள் கன்னக்குழி சிரிப்பு இன்றேனோ அவனுக்கு வலித்தது.
“குட், அப்பறம் உங்க ஆத்துக்காரை அறிமுகப்படுத்த மாட்டிங்களா?”
“அத்தான் இங்க இல்லை சார், ஜெனலிஸ்ட் டெல்லில வொர்க் பண்ணுறாரு” என்றவள் ரகுவின் உறவு முறையிலிருந்து, உறுதி செய்த நாள் நடந்தது வரை அனைத்தையும் சொல்லினாள். ரகுவை பற்றி பேசும்போதெல்லாம் முகம் சிறு குழந்தை போன்றே இளகி அத்தனை பாவனைகள் காட்டியது. முகுந்தனோ சிறிதும் நெருடலின்றி தனக்கே உரிமை இது என்ற எண்ணத்திலே ரசித்துக்கொண்டிருந்தான்.
இறுதியில் ரகுவின் புகைப்படத்தை காட்ட, ஒருநொடி நெற்றியை தடவிக்கொண்டு யோசித்தவனுக்கு அவனை எங்கே பார்த்தோமென நினைவு வந்தது. ‘எங்க போனாலும் என்னை இடிக்கவே வந்திருவியாடா இடியட், இந்த அத்தான் இனி குறுக்க வந்தான் செத்தான்’ என மனதில் நினைத்தான்.
ஆடர் செய்த உணவுகள் வர, “நான் நான்வெஜ் சாப்பிடுறதுல உங்களுக்கு ஒன்னும் கஷ்டமில்லையே?” என்றான் கள்ளச்சிரிப்புடன்.
‘நான்வெஜ்ஜா’ என்று முகம் அஷ்டகோணலாக மாறிய போதும், அவனுக்கும் நமக்கும் என்ன, ஜஸ்ட் டென் மினிட்ஸ் அட்ஜெட் பண்ணிக்க வேண்டியதான் என்ற எண்ணத்தில் சரியென தலையசைத்தாள். வெய்ட்டர் வைத்து சென்ற உணவுகள் அனைத்தும் சைவமாகவே இருந்தது.
‘இப்போதல்ல வருங்காலத்திற்காக கேட்டேன்’ என நினைத்தவன் அவள் முகபாவனைகளை பார்த்து மலர்ந்து சிரித்தான்.
“தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.
தீராத விளையாட்டுப் பிள்ளை….”
என்ற பாடலின் வழி நிசப்த்தமான கலையரங்கில் ஸ்ருதியின் குரல் இன்னிசையாய் ஒலித்துக்கொண்டிருந்தது. கூட்டம் நிரம்பி வழியவில்லை எனினும், இருக்கைகள் நிரம்பியே இருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த முகுந்தனுக்கு தான் ஏதோ மந்திரக்கட்டுக்குள் சிக்குண்டது போலே இருந்தது. கோலமுகமும், மான்விழியும், குறுநகையும் இதெற்க்கெல்லாம் உச்சமாய் அவள் குரலும் அவனை தீரா மயக்கத்தில் ஆழ்த்தியது அந்த நொடி! அதிலிருந்து தெளியவும் அவன் விரும்பவில்லை!
இன்று தான் முதல் முறையாக ஸ்ருதியின் கச்சேரியை நேரில் பார்க்கிறான். ஆண்டாளின் அருள் பெற்றவள், கலைமகளின் அவதாரமானவள் என பிறர் புகழ கேட்கையில் பெரும் வெற்றியை பெற்றத்தை போன்ற கர்வம் கொண்டான், அதை தனக்கே உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற வெறி மேலும் ஏறியது.
கச்சேரி முடிந்து அரங்க வாசலில் அவளிடம் ஆட்டோஃகிராப்புக்கும் செல்ஃபிக்கும் ஒரு கூட்டமே நிற்க, அதில் பூங்கொத்தொன்றை நீட்டியவாறு முகுந்தனும் சிரிக்க, ஆச்சர்யப்பட்டவள், “சார் நீங்க என்ன இங்க?” என்றாள்.
“ஏன் நான் உங்க ரசிகன்னு சொன்னா ஏத்துக்க மாட்டிங்களா ஸ்ருதி?” மாறா சிரிப்புடன் கேட்க, மகிழ்வோடு பூங்கொத்தை அவள் வாங்கிக்கொள்ள இருவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். தன்னிசையை முகுந்தன் ரசித்திருப்பான் என்பது அவள் சிறிதும் எதிர்பாராதது.
லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் ஸ்ருதியின் குரு. அவர்களின் மகள் ரிஷப்ஷனிற்கு அழைக்கப்பட்டிருந்தாள் ஸ்ருதி. தந்தையிடம் உதவி இயக்குனராக இருந்து தற்போது இரெண்டே படத்தில் புகழ்பெற்ற இளம் இயக்குனரின் ரிஷப்ஷனிற்கு தந்தை வர இயலாத காரணத்தால் அவர் சார்பாக வந்திருந்தான் முகுந்தன்.
திரை பிரபலங்களும், இசை பிரபலங்களும் என அந்த ஹாலே நட்சத்திரங்களால் ஜொலித்தது. மெல்லிய இசையும் மின்னும் மின்சார விளக்கொளியும் அந்த இடத்தையே நிறைத்திருந்தது. இதற்கிடையே மின்னல் கீற்றுகள் போன்று பாய்ந்து வரும் கேமரா ஃப்லாஸ் லைட்ஸ் கண்ணை கூசிக் கொண்டிருந்தது.
அங்கே ஸ்ருதியின் வருகை முகுந்தனுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. இதற்கு முன் ஸ்ருதியுடனான சந்திப்புகள் எல்லாம் அவனே ஏற்படுத்திக் கொண்டது. அவள் அருகே சென்று அமர்ந்தவன் எப்போதும் போலே பேசிக்கொண்டிருந்தான். மணமக்களை வாழ்த்த ஸ்ருதி மேடை ஏற, அதே நேரம் முகுந்தனும் மேடையில் அவளோடு நின்று அவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தினான். இருவரும் இணைத்தே இறங்கினர்.
கடைசி படிகளில் இறங்கிய ஸ்ருதியின் புடவை திடீரென காலை இடற நிலையில்லாது தடுமாறி விழப்போனவளை அவள் பின்னே வந்த முகுந்தன் சட்டென தாங்கிப் பிடித்தான். நெஞ்சில் கை வைத்துக்கொண்டு மூச்சை விட்டு கண்களை திறந்தவள் நன்றியுரைத்தவாறு நிலையாய் நின்றாள். அதுவரை அவள் தோள் சுற்றி அணைத்துப் பிடித்திருத்த கைகளை விலக்கி விட்டு அவனும் சிரிப்புடன் விலகினான்.
உணவுண்ணும் போதும், பாட்டுப்போட்டி அவள் பாடல் என அவளுக்கு விருப்பமானதை பற்றி பேசி அவளையும் மலர்வோடு பேச வைத்தான். பார்ப்பவர்களுக்கு இருவரும் இணைந்தே விழாவிற்கு வந்து மகிழ்வோடு கலந்து கொண்டது போன்றே தெரியும்.
மறுநாள் இரவு பனிரெண்டுமணி ஸ்ருதிக்கு உறக்கமே வரவில்லை. ஒரு எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தவள் கைபேசியையே வெறித்துக் கொண்டிருந்தாள். இத்தனை வருடங்களில் பிறந்தநாளின் முதல் வாழ்த்து ரகுவிடமிருந்து வர தவறியதே இல்லை. எத்தனை வேலைப்பளுவிழும், எங்கிருந்தாலும் அதை மட்டும் மறப்பதே இல்லை அவன்.
இன்றும் அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ரகு அழைக்க, சிறு குழந்தையாய் துள்ளிக்குத்திக் கொண்டு அட்டென் செய்தவள், “ரகு அத்தான்” என அழைத்தாள்.
“உன் வாட்சப் ஓபன் பண்ணி பாரு ஸ்ருதி” என உரைத்துவிட்டு ரகு கட் செய்துவிட, தனக்கான சப்ரைஸ்ஸ் எதுவுமோ என்ற எண்ணத்தில் பார்த்தவளுக்கு உண்மையிலே அது அதிர்ச்சியாக தானிருந்தது.
ஸ்ருதியின் தோளில் கைப்போட்டவாறு மகிழ்ச்சியோடு ஜோடியாக நின்றிருந்த முகுந்தன். பிரபல தொலைக்காட்சி உரிமையாளர் முகுந்தன் இளம் பாடகி ஸ்ருதி சுந்தரத்தோடு காதலாம், அதை வெளியில் தெரிவிக்கவே கச்சேரிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் நேற்றைய லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் வீட்டு வரவேற்பிலும் இருவரும் ஜோடியாக கலந்துக் கொண்டனர் என்பது மாதிரியான ஒரு கட்டுரையும் இருந்தது.
ஸ்ருதிக்கு ஒருபுறம் ஆத்திரமும் அழுகையும் வர, அவள் இதயம் அந்த நொடி நொறுங்கியது உண்மை. மீண்டும் ரகுவிடமிருந்து அழைப்பு அட்டென் செய்தவள், “ஹலோ” என்றாள்.
“என்ன ஸ்ருதி இது?” என்றான் சினமாக,
“இந்த நியூஸ் பொய்யானது அத்தான்” என்றவளுக்கு அழுகை பொங்கியது. விளக்கமளித்து தான் தன்னை ரகுவிடம் நிரூபிக்க வேண்டுமா என்ற எண்ணம்!
“நானும் ஜெனலிஸ்ட் தான் அது பொய்யான நியூஸ்னு எனக்கும் தெரியும்! ஒருத்தன் நம்ம கூட பழகும் போது என்ன இன்ட்டேன்ஷனோட பழகுறான் கூடவா உன்னால நோட் பண்ண முடியாது? அந்த அளவுக்கு நீ என்ன முட்டாளா? இல்லை சின்ன குழந்தையா?”
“முகுந்தன் சாரை தப்பா சொல்லாதீங்க அத்தான். இது வரைக்கும் அவர் எங்கிட்ட கண்ணியமா தான் நடந்துக்கிட்டாரு, வரம்பு மீறினா ஒரு வார்த்தையோ பார்வையோ கூட கிடையாது. நமக்கு கல்யாணம் உறுதியானது கூட அவருக்கு தெரியும் அன்ட் இந்த ஆர்டிக்கில் பப்ளிஷ் பண்ணியிருக்கிற செய்தி நிறுவனம் அவரோட போட்டி நிறுவனம். அவர் மேல உள்ள காழ்புணர்ச்சி காரணமா, தொழில் போட்டி காரணமா இதை பண்ணிருக்கலாம்”
“அடியே அம்மாஞ்சி, அவன் நியூஸ்ல அவனே பப்ளிஷ் பண்ணா இந்த உலகம் நம்புமா? அவன் என்ன உன்ன மாதிரி அசடா? போட்டி நிறுவனத்துல வந்திருந்தாலும் பண்ண சொன்னது அவன் தான் நான் எல்லாம் விசாரிச்சுட்டேன். கல்யாண நேரத்துல இப்படியொரு பிரச்சனையை இழுத்துவிட்டுறீக்கியே நம்ம ஆத்து பெரியவாளுக்கு தெரிஞ்சா என்னாகும்?”
“இல்லை அத்தான், முகுந்தன் சார் அப்படி பண்ணிருக்க மாட்டாரு”
“அப்போ என் வார்த்தைகளை பொய்ன்னு சொல்லுறியா ஸ்ருதி? எப்போ இருந்து என்னைவிட அவன் உனக்கு பெரிசா போய்ட்டான்? இனி என்கிட்டே பேசாத ஸ்ருதி” கோபத்தில் கத்தி போனை கட் செய்தவன் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
சில நொடிக்கு பின்னே தான் சொல்லிய வார்த்தைகள் நினைவில் வர தன் தலையில் தானே தட்டிக்கொண்டு சென்னை செல்லும் ப்ளைட் லிஸ்ட்டை ஆராய தொடங்கினான். முதலில் சென்று பெரியவர்களிடம் பேசி திருமணத்தை முடிந்து விட்டு பின் வந்து உன்னை கவனித்துக்கொள்கிறேன் முகுந்தன் என சபதமிட்டுக் கொண்டான்.
தன்னை பற்றி தானே கீழாக செய்தி பரப்ப அவன் என்ன முட்டாளா? ஒருவேளை என்மீது உள்ள கோபத்தை தீர்க்கவா? இல்லை வேறு காரணமா? ஏதோ திட்டமிட்டே ஸ்ருதியை சுற்றி வலை பின்னுகிறான் என முகுந்தனை சரியாக கணித்தான் ரகு. பாம்பின் கால் பாம்பறியும்!
முகுந்தனுக்கும் அந்த இரவு உறங்காத இரவாகிப் போனது, ஸ்ருதியின் பிறந்தநாள், நாளை பாட்டுப்போட்டிக்காக அவள் ஸ்டூடியோ வருவாள் எனவும் தெரியும் ஆகையாலே அவளுக்கு ஒரு சப்ரையிஸ்ஸை திட்டமிட்டுவிட்டு விடியலுக்காக காத்துக் கிடந்தான்.
ஸ்ருதி சற்று யோசனையோடே அமர்ந்திருந்தாள். முகுந்தனுடனான சந்திப்புகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தும் அவன் மீது சிறிது கூட சந்தேகம் வரவில்லை. ஆனால் ஒரு செயல் அவனை காட்டிக்கொடுத்து, அன்று வேகமாக நடக்கையில் தன் புடவையின் முந்தானை இழுபட்டு பின் திடீரென விடுபட்டதாலே நான் தடுமாறினேன். ஆகா அன்று அவன் தான் தன் முந்தானையை மிதித்திருக்கிறான் என அவளே முடிவு செய்துக்கொண்டாள். அது உண்மையோ?!
பொங்கும் எரிமலையாய் முகுந்தன் மீது கோபம், அப்போதே வெடித்துச் சிதற தயாராக இருந்த போதும் நாளை அவனை சந்திக்கும் பொழுதில் அவன் மீதே கனலாய் கக்க காத்துக்கிடந்தாள்.
யாரிடமும் சொல்லாமல் ரகு கிளம்பிவிட, ஸ்ருதிக்காக முகுந்தன் காத்திருக்க, முகுந்தனுக்காக ஸ்ருதி காத்திருக்க, யாருக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ? விடியலுக்கே வெளிச்சம்!