தீரா மயக்கம் தாராயோ – 6

0
1144

சத்தியம் சிவம் சுந்தரம் ஆ..

சரவணன் திருப்புகழ் மந்திரம்

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ..

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன்

அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்..

அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன்

அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ..

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்..

உலகின் அழகிய நகரமான பாரீஸில் நடந்துகொண்டிருந்தது ஸ்ருதியின் கச்சேரி.. இமைகள் இரெண்டும் முத்தமிட்டிருப்பதை காணும்பொழுது அவள் அந்தப் பாடலில் முழுமையாய் லயித்திருப்பதுபோல்..

தாளங்கள் பிறளாது வார்த்தைகள் தடம்புரளாமல் அவள் மீட்டிடும் இசைச்சாரல் அனைவரையும் கட்டிப்போட்டு இசைக்குள் மூழ்கடித்துக்கொண்டிருந்தது..

முழுமையாய் மூன்று மணி நேரம் மக்களை தன் குரலால் ஆட்கொண்டவள் மங்களகீதம் பாடி தனது கச்சேரியை முடித்துக்கொள்ள அப்படியொரு கைத்தட்டல்.. ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள் பரிசளிக்கும் விலைமதிப்பில்லா பரிசு..

இதழ்களைப் பிரிக்காது புன்னகைத்தவள் கைகள் இரெண்டையும் கூப்பி விடைபெற.. அவளது கன்னத்தில் சில்லென்ற முத்தச்சாரல்..

“சூப்பரா இருந்துச்சு பேபி இன்னைக்கு..”, பாராட்டு மழை வேறு..

“தாங்க்ஸ்..”, ஸ்ருதியின் குரல் உணர்ச்சிக்குவியலாய் பிசிறிட.. அங்கிருந்து வேகமாய் நடந்திருந்தாள்..

“ஹே.. ஸ்ருதி பேபி.. நில்லுடா..”, நந்திதா உச்சஸ்த்தானத்தில் கத்தியே இருந்தாள்.. இருந்தும் ஸ்ருதியின் நடை நிற்கவேயில்லை.. என்னவோ தனது முகத்தை யாருக்கும் காட்டப் பிடிக்கவில்லை அவளுக்கு..

கச்சேரி நடந்து முடிந்த அந்தப் பெரிய ஹாலை தியாகம் செய்தவள் பத்தாவது மாடியில் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறையைத் தொடும் வரை மிகவும் சஞ்சலத்துடன்.. அழகன் முருகனின் பாட்டு அவளது மனதை ஒரு அன்ஸ்டேபிள் நிலைக்குத் தள்ளியிருந்தது..

அறைக்குள் நுழைந்து கதவை அடைத்த அடுத்த நொடி அப்படியே சரிந்து மடிந்து அழவே துவங்கியிருந்தாள் காரிகை.. ஏன் எதற்கு என்ற காரணம் அறியாது.. அறிந்துகொள்ள முயற்சிக்காது பெரியதொரு அழுகை..

உடலில் இருக்கும் சக்தி முழுவதும் வற்றும்வரை அழுதவள் மனது கொஞ்சமே கொஞ்சம் சமன்பட்டதுபோல் இருக்க.. மெதுவாய் எழுந்து தனது கைப்பையைத் திறந்து அந்தப் புகைப்படத்தை கையில் ஏந்திருந்தாள்..

அது ஒரு குடும்பப் புகைப்படம்.. அம்மாவும் அப்பாவும் மர ஊஞ்சலில் அமர்ந்திருக்க.. இவள் இருவரையும் அணைத்தபடி..

“நான் யார்க்கிட்டயும் தோத்தற மாட்டேன்ப்பா..”, மெல்ல வார்த்தைகளை ஒருவித அழுத்தத்துடன் உச்சரித்திட.. ட்ரிங்கென்ற மணியோசை..

தனது கைகளில் வீற்றிருந்த அந்தப் புகைப்படத்தைப் பத்திரப்படுத்தியவள்.. முகம் கழுவிக்கொண்டு கதவைத் திறந்திட.. அங்கு கைகளை இடுப்பிற்கு முட்டுக்கொடுத்தபடி முட்டைக்கண்ணை உருட்டிக்கொண்டு நின்றிருந்தாள் நந்திதா..

“வா நந்து..”, எதுவும் நடவாததுபோல் ஸ்ருதியிடமிருந்து வார்த்தைகள் தெறித்துவிழ.. கோபத்தில் முதுகில் இரண்டு போட்டேவிட்டாள் நந்திதா..

“அடிக்காதடீ கொரங்கே.. எல்லாரும் பார்க்கறாங்க..”, சிரித்தபடியே ஸ்ருதி மொழிந்திட.. ஒன்றும் பேசாமல் அறைக்குள் நுழைந்த நந்திதா பால்கனியிலிருந்த குஷனில் தன்னை பொருத்திக்கொண்டு விழிகளை மூடிக்கொள்ள.. ஐந்து நிமிடத்திற்குள் அவளது விழிகளை பளபளக்கவைத்தது தேநீரின் மனம்..

ஒன்றும் பேசாமல் தன் முன்னே நீட்டப்பட்டத்தை சொட்டுசொட்டாய் அவள் பருகத்துவங்க, “சாரி நந்து..”, என்றிருந்தாள் ஸ்ருதி.. உண்மையில் அவ்வளவு வருத்தம் அவளது குரலில்..

கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொன்றையும் நந்திதா தனக்காய் பார்த்துப் பார்த்து செய்ய.. எப்பொழுதும் அவளுக்கு இவள் பரிசளிப்பதே உதாசீனம்தான்.. அது மனசார அவள் செய்யும் செயலல்லதான்.. ஆனால் காண்போருக்கு அது அப்படித்தான் தோற்றத்தை அளிக்கும்..

“நீயே வெச்சுக்கோ அதை..”, என்னால் உன்னைப் புரிந்துகொள்ள முடியும் என்பதாய் இருந்தது நந்துவின் பதில்..

“இன்னைக்கு அப்பாவோட நியாபகம் ரொம்பவே நந்து.. அதுவும் அவருக்குப் பிடிச்ச முருகன் பாட்டுப் பாடும்போது..”, வார்த்தைகள் தடுமாறிட.. கண்களில் நீர் வழிந்தது ஸ்ருதிக்கு..

“ஹே.. ரிலாக்ஸ் ஸ்ருதி.. ஒண்ணுமில்லைடா..”, ஆதரவாய் கைகளைப் பிடித்துக்கொண்டாள் நந்திதா..

“ஹ்ம்.. ஒண்ணுமில்லை நந்து.. இப்போ உண்மையில் ஒண்ணுமே இல்லை.. என் அப்பா.. அம்மா.. ஒருத்தரும் இல்லை..”, வலி தாங்காது ஓவென்ற கதறல்..

நினைக்கவே பிடித்திடாத சம்பவங்கள் அவை..

கடந்த காலத்தை நோக்கி பயணிக்கத் துவங்கிய மனதினை அடக்கியவள்.. எதுவுமே நடக்காதது போன்று, “நம்ம வெளியில போகலாம் நந்து..”, என்று சாதாரணமாய் சொல்ல.. ஸ்ருதியின் மனதிடம் எப்பொழுதும்போல் இன்றும் நந்திதாவிற்குள் பிரம்மிப்பை கொடுத்தது..

இதுவரை ஸ்ருதியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் முழுதாகத் தெரியாது நந்திதாவிற்கு.. தெரிந்துகொள்ளவும் முயலவில்லை அவள்.. பழைய விஷயங்களை மறக்க முயற்சிப்பவளிடம் என்னவோ கேட்கக்கூடாதென்ற எண்ணம்.. அதுவே இருவரையும் நெருங்கிய வட்டத்திற்குள் நிறுத்தி வைத்திருந்தது என்றே சொல்லலாம்..

இருவரும் மற்றவர்களது பர்சனல் ஸ்பேசிற்குள் இதுவரை நுழைந்ததில்லை.. அவரவர் கடந்துவந்த பாதைப் பற்றி பேசியதுமில்லை.. சொல்லப்போனால் எப்படி இப்படி இருவரும் தோழிகளாயினர் என்பதும் பெரிய புதிர்தான்..

ஸ்ருதியின் பெற்றோர்கள் இருவரும் இறந்து நான்கு மாதமான காலமது..

அப்பொழுது எங்கும் செல்லப் பிடித்தமில்லாமல் வீட்டிலேயே அடைந்திருந்தாள் ஸ்ருதி.. எதிலும் பிடித்தமில்லாமல் அலைந்துகொண்டிருந்தது அவளது மனம்.. மாற்றமொன்று தேவைப்பட்ட நேரம் அது..

வாழ்க்கையில் அடுத்து என்னவென்று அவள் யோசிக்கத் துவங்கிய சமயம் அவளே எதிர்பாராமல் கிடைத்ததுதான் இந்த வாய்ப்பு.. இரண்டு வருட காண்ட்ராக்ட்.. பெரும்பாலான உலக நாடுகளுக்குச் சென்று கச்சேரி செய்யும் வாய்ப்பு..

நடந்தவைகளை எண்ணி கூட்டிற்குள்ளே அடைந்து போக விடாமல் தன்னைத் தானே மீண்டும் செதுக்கிக்கொள்ள தனக்குக் கிடைத்திருக்கும் கால அவகாசம் என்று எண்ணியவள்.. அந்த நிறுவன ஒப்பந்தத்திற்கு சம்மதித்திருந்தாள்.. கூடவே அது முகுந்தின் போட்டி நிறுவனம் என்று அறிந்தபின் முழுமனதாய் பயணத்திற்கு தயாரானாள் அவள்..

“ஹாய் ஸ்ருதி.. எப்படி இருக்க..?? ட்ராவெல் எப்படி போச்சு..??”, சிங்கபூரில் தனது முதல் கச்சேரிக்கு வந்திருந்த ஸ்ருதியின் முன் பூங்கொத்தை நீட்டியபடி நின்றிருந்தாள் நந்திதா..

என்னவோ நெடுநாள் பழகிய தோழியைப் போல் தன்னுடன் கதைப்பதைக் கண்டு ஒருநிமிடம் விழித்த ஸ்ருதி, “நீங்க நந்திதாவா..??”, கொஞ்சம் தயக்கம் இருந்தது குரலில்..

“எஸ்.. எஸ்.. கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்ட.. நீ பண்ற கச்சேரி எல்லாத்துலையும் நான்தான் உங்க ப்ளூட்டிஸ்ட்..”, எவ்வித பந்தாவும் இல்லாமல் தன்னுடன் பேசியவளை சட்டென்று பிடித்துவிட்டது ஸ்ருதிக்கு..

அன்றிலிருந்து ஸ்ருதிக்கு எல்லாமாகிப் போனாள் நந்திதா..

“ஹே நந்து.. போலாம்னு சொல்றேன் நீ என்னடான்னா கனவு கண்டுட்டு இருக்க..??”, தலையில் ஒரு தட்டுக் கிடைத்தும் தலைக்கு மேல் ஒளிர்ந்து கொண்டிருந்த சுருளை (அதாங்க ப்ளாஷ் பேக்) நிறுத்தியவள் ஸ்ருதியுடன் கிளம்பத் தயாரானாள்..!!

லெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் வடிவமைத்த ஈபல் கோபுரம்.. பாரிஸின் அடையாளச் சின்னம்.. அதன் கடைசி தளத்தில் ஸ்ருதியும் நந்திதாவும்.. பாரிஸின் மொத்த அழகையும் இருவரும் பருகிக்கொண்டிருந்தனர்..

“பாரிஸை உலகத்துலேயே அழகான நகரம்னு ஏன் சொல்றாங்கன்னு இப்பத்தான் தெரியுது..”, ஸ்ருதியின் நயனங்கள் ரசனையில் குவிந்திருந்தது..

“ஆமா ஸ்ருதி.. டேஸ்ட்டா இருக்கு..”, அரைகுறையாய் ஸ்ருதியின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு பதில் அளித்திருந்தாள் நந்திதா..

“என்ன கேர்ள் உளறுகிறாய்..??”, நந்துவின் புறம் ஸ்ருதி திரும்பிட.. எதையோ மென்று கொண்டிருந்தாள் அவள்..

“சோத்துக் குச்சி.. எப்போப் பாத்தாலும் அரச்சுக்கிட்டே..”, ஸ்ருதி தலையில் அடித்துக்கொள்ள..

“சோத்துக் குச்சின்னு சொல்லாத ஸ்ருதி..”, சிணுங்கலாய் சிலுப்பியவள் மேலும் இரெண்டு புளிப்பு மிட்டாயை வாயில் போட்டிருந்தாள்..

“ஹே சோத்துக் குச்சியை சோத்துக் குச்சின்னுதான் சொல்ல முடியும்..”, இதழுக்குள் சிரிப்பை அடக்கியிருந்தாள் ஸ்ருதி..

“அடி வாங்கப் போற நீ..”

“ஹான்.. அதுக்கெல்லாம்..”, கவுன்ட்டர் கொடுக்கத் துவங்கியவளை தடையிட்டது, “கொஞ்சம் ஓரமா போய் சண்டைப் போடுங்கம்மா இரண்டு பேரும்.. ஆளுங்க நடக்கற இடம்..”, என்ற எரிச்சல் குரல்..

“எவன் அவன்..??”, என்ற ரீதியில் நந்திதா அவனைப் பார்த்துவைக்க.. மன்னிப்பு கேட்கும் பாவனையில் ஸ்ருதி..

அவர்களின் அந்த போசில் இன்னுமே முகத்தில் கடுப்பேறியது அவனுக்கு..

“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்.. இரண்டு பேரும் இப்போ ஒதுங்கி நிக்கறீங்களா..??”, அப்படியொரு அழுத்தம் குரலில்.. அதுவே இருவரையும் ஒதுங்கி நிற்க வைத்திட.. ஸ்ருதியை அழுத்தமாய் பார்த்தபடி நகர்ந்திருந்தான் அவன்..

“சப்பா.. பேசுன இரண்டு வரியே இடி மாதிரி இருக்கு.. அனேகமா இவன் சரியான கே கேவா இருப்பான் போல..”, நந்திதா சொல்ல..

“அது என்னடி கே கே..??”

“கடுப்பு காத்தவராயன்தான்..”, நந்திதா நீட்டி முழக்கிட.. அடக்க முடியாமல் அப்படியொரு சிரிப்பு ஸ்ருதியின் முகத்தினில்..

சட்டென ஸ்ருதியின் வலது கையில் கிள்ளிவைத்திருந்தாள் நந்திதா..

“எதுக்கு கேர்ள் கிள்ளின்ன..??”, கையைத் தேய்த்தபடி ஸ்ருதி கேட்டிட..

“இல்லை.. நீதான் சிரிச்சியான்னு ஒரு சந்தேகம்.. அதான் கிள்ளிப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..”, விளையாட்டாக சொல்லிட.. சட்டென்று முகம் மாறிப்போனது ஸ்ருதிக்கு..

நந்திதா ஏதேதோ பேசிக்கொண்டிருக்க.. ஒரு ஊம் கொட்டலே ஸ்ருதியிடம் பதிலாய்.. சில நிமிடங்கள் வரை அவளது செய்கை சுத்தமாக தெரியவில்லை அவளுக்கு..

ஒரு கட்டத்தில், “நான் பேசிட்டே இருக்கேன்.. நீ என்ன இவ்ளோ அமைதியா இருக்க..??”, யோசனையுடன் நந்து கேட்டிட..

“ஒண்ணுமில்லை நந்து.. நம்ம கிளம்பலாமா..??”, என்றிருந்தாள் ஸ்ருதி..

“என்னாச்சு..??”

“தலை வலிக்குது..”, மொட்டையாய் ஸ்ருதி பதில் தர..

“அஞ்சு நிமிஷம் முன்னால வரைக்கும் நல்லாத்தானே பேசிட்டு இருந்த..?? திடீருன்னு என்ன ஆச்சு ஸ்ருதி..??”

“ப்ச்.. நீ ரூமுக்கு வரதுன்னா வா.. இல்லைன்னா நான் போறேன்..”, எரிந்து விழுந்திருந்தாள் அவள்.. யார் மீதோ காட்ட வேண்டிய கோபம் இது..

அதற்கு மேல் ஒன்றும் பேசிவில்லை நந்திதா.. மௌனமாகவே ஸ்ருதியுடன் கிளம்பியிருந்தாள்..

“நல்லாத்தானே இருந்தா இவ.. இப்போ என்னாச்சு.. ஒன்னும் புரியலையே.. எதையோ மனசுக்குள்ள போட்டு குழப்பிக்கறா.. அது மட்டும் தெரியுது..” மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது நந்துவால்..

இவர்கள் இருவரின் செய்கைகளையும் அதுவரை நோட்டமிட்டுக்கொண்டிருந்த அந்த கேகேவிற்கு ஸ்ருதியின் நிலை அப்பட்டமாய் விளங்குவதாய்.. வருடங்கள் இரெண்டைக் கடந்தும் நடந்த சம்பவங்கள் எதையும் பெண்ணவள் மறக்கவில்லை என்று நன்கு தெரிந்தது.. அது விட்டுச் சென்ற தாக்கமும் புரிந்தது.. ஆனால் அதற்கு மருந்து என்னவென்று சுத்தமாகத் தெரியவில்லை..

இருந்தும் மனதில், “உன்னைப் பழைய ஸ்ருதியா கண்டிப்பா மாத்துவேன்டா..”, என்ற உறுதி ஆலமர விழுதாய்..!!

“ந ந்து.. மணி எட்டாகுது..”, எட்டாவது முறையாக நந்திதாவை எழுப்பிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி..

“பை மினிட்ஸ் ஸ்ருதி.. ப்ளீஸ்..”

“இதோட எட்டாவது பை மினிட்ஸ் நந்து.. ஒழுங்கா எந்திரி..”, ஸ்ருதியின் குரல் சற்றே உயர்ந்திருந்தது..

“பேபி.. நம்மோட ஒவ்வொரு விடியலும் நமக்கு பிடிச்சமாதிரி இருக்கனுமாம்.. சோ எனக்குத் தோணுற நேரத்துல எழறேன்..”, பிரண்டு படுத்திருந்தாள் நந்து..

“சந்தோஷ் சுப்பிரமணியம் படம் பார்த்துட்டு உளறாதே கேர்ள்.. இன்னைக்கு நம்ம கம்பனியோட புது லான்ஜ் வேற இருக்கு.. நியாபகம் இருக்குல..??”

“இருக்கு இருக்கு..”, அரைத்தூக்கத்தில் இன்னும்..

“நம்மளோட கடைசி கச்சேரி வேற நந்து.. அதுவும் நம்ம நிறுவனத்தோட எம் டிக்கு முன்னாடி.. கரெக்ட் டைமுக்கு போகனும்.. எழுந்திரி..”, என்றிட..

“ப்ச்.. ஏன்டி இந்நேரத்துக்கு அந்த சொட்டத் தலையை நியாபகப் படுத்தற..”, என்றபடி எழுந்திருந்தாள் நந்து..

“சொட்டத் தலையா..?? அது சரி.. பார்க்காத ஒரு ஆளு உனக்கு சொட்டத் தலையா..??”

“பின்ன.. நம்ம நிறுவனம் தொடங்கி இருபது வருஷத்துக்கு மேல ஆச்சு.. இன்னுமா நம்ம எம்டிக்கு சொட்ட விழாம இருக்கும்..??”, நந்து வாயாட.. ஸ்ருதி கிளம்பியிருந்தாள்..

“ஐயோ.. விட்டுட்டு போகாத கேர்ள்..”, இவள் கத்த, “நான் முன்னாடி போறேன்.. நீ வந்து ஜாயின் பண்ணிக்க..”, நந்துவைக் கண்டுகொள்ளாமல் ஸ்ருதி சென்றுவிட..

“இன்னைக்கு ரொம்ப பேசிட்டோம் போல..”, தனக்குள் நொந்த நந்து குளியறைக்குள் புகுந்தாள்..!!

கிழ்.. இந்தியாவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனங்களுள் ஒன்று.. இப்பொழுது உலக அளவிலும் காலெடுத்து வைத்திருக்கிறது..

ஆம்.. ஆங்கிலம்.. பிரெஞ்ச்.. ஜெர்மன்.. ஆகிய மூன்று மொழிகளில் இனி.. அதன் முதல் கட்டமாய் பாரிஸில் தங்களுக்கான ஒரு புதிய கிளை..

ஒன்பது மணியாக பத்து நிமிடங்கள் இருக்க மகிழிற்குள் நுழைந்திருந்தாள் ஸ்ருதி.. அவளது நடையில் ஒரு அவசரம் அப்பட்டமாய்..

வலதுபுறமிருந்த மின் தூக்கிக்குள் நுழைந்தவள் பத்து என்ற எண்ணை அழுத்திவிட்டு நிமிர்ந்திட.. அவளை அழுத்தமாய் பார்த்தபடி நேற்று முன்தினம் பார்த்த கே கே..

“இவன் எப்படி இங்கே..??”, மனதிற்குள் கேள்வி எழுந்த போதும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அவள்..

பத்தாவது தளத்தில் மின் தூக்கி நிற்கும் வரையிலும் இருவருக்குள்ளும் எந்தப் பேச்சும் இல்லை.. யாரோ தெரியாதவர்களுடன் பயணம் செய்யும் பாவம்..

முதலில் அந்த தளத்திற்குள் நுழைந்தது இவள்தான்.. அவள் பின்னே அவனும்..

வலதுபுறம் இவன் திரும்பிச் செல்ல.. இவள் நேராகவே நடந்திட, “ஸ்ருதி மேம்.. நீங்க வந்த உடனே உங்களை மகிழ்வேந்தன் சார் அவரைப் பார்க்கச் சொன்னார்..”, ரிசெப்ஷன் பெண் அவளைத் தடுத்திருக்க..

“சொட்டத் தலை நம்மள எதுக்கு பார்க்கனும்னு சொல்லியிருக்கும்..??”, என்று நினைத்தபடியே எம்டியின் அறைக்கு அருகில் வந்தவள், “மே ஐ கம் இன்..??”, என்று குரல் எழுப்பிட..

“எஸ்..”, என்றது அழுத்தமான குரல்..

“சொட்டத் தலைக்கு இப்படியொரு வாய்ஸா..??”, இப்படித்தான் தோன்றியது ஸ்ருதிக்கு.. அதிலும் நந்து சொன்ன சொட்டத் தலை அப்படியே பதிந்திருந்தது..

ஒரு அசட்டு சிரிப்புடன் இவள் உள்ளே நுழைந்திட.. கே கே (அ) மகிழ்வேந்தன் தனது இறுக்கையில் கம்பீரமாய் அமர்ந்திருக்க.. அவனுக்கு அருகில் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தான் ரகுராம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here