தூதுவன்—-சிறுகதை

0
129

இதுவரையில் நான் எழுதிய கதையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் இது.நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளேன்.தவறாது படித்து கருத்துக்களை தெரிவிக்கவும்]

நள்ளிரவு 2.30 மணியளவில் அந்த குடிசைவீட்டுக்குள் இருந்த ஒரு பெண் அரை தூக்கத்துடன் கதவை திறந்தாள் .அப்போது அவள் வீட்டு திண்ணையில் ஒரு காவி வேட்டி மட்டும் கட்டி கொண்டு இடுப்பு வரை தாடியுடன் ஒரு வயதானவர் இருப்பதை பார்த்து பயந்து போய் உள்ளே போய் கணவனை அழைத்து கொண்டு வருகிறாள் .கணவன் வந்து”யாருங்க நீங்க?இங்க என்ன பண்றீங்க ?”என்றதும் அவர் சிரித்தபடியே “காவல்காரனை பார்த்து என்ன பயம்?நான் தூதுவனின் சீடன் கலிகாலம் அழைச்சிருக்கு எங்களை”என்றவர் மெதுவாக நடந்து இருளில் கலந்தார்.இருவரும் குழம்பி போய் நின்றனர் .

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அந்த நிறுவனம் உலகம் முழுவதும் தங்களது கிளைகளை பரப்பி வருகிறது .அந்த கம்பேனி நிறுவனர் அங்கே பணிபுரியும் அபர்ணா குணசேகரை தனது அறைக்குள் அழைத்து “அபர்ணா உனக்கு அடுத்த வேலை உன் ஊர்ல தான்.தமிழ்நாட்டுக்கு போய் உடனே வேலைய ஆரம்பிக்கனும்.உனக்கு எந்த பிரச்சனையும் வராம பாத்துக்க ஏற்பாடு பண்ணியாச்சு .நாளைக்கு நீ இந்தியாவில் இருக்கணும் .”என்றதும் அபர்ணா சற்று யோசித்தாள் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவிற்கு போவதில் விருப்பம் இல்லாமல் போனாலும் வேலைக்காக கிளம்பினார் .

இரண்டு நாட்களுக்கு பிறகு அபர்ணா தன்னுடைய நிறுவன அதிகாரிகளுடன் கம்பேனிக்கு சொந்தமான நிலத்தை பார்க்க கிளம்பினாள் .அந்த கார் பூங்காவனம் என்ற ஊரின் எல்லையை தாண்டும் போது எல்லை கல்லின் மேல் ஒரு சாமியார் தியானம் செய்தபடி இருந்தார் .காரில் வந்த அனைவரின் கவனமும் அவர் மீது இருக்க அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் .அபர்ணாவின் பார்வை அவர் மீது படர சட்டுனு கண் திறந்தவர்”இது எதுவாகினும் நீயே சுமப்பாய்”என்று மீண்டும் கண் மூடினார்.அபர்ணா அந்த நிலத்தை வந்தடைவதற்குள் பத்திற்கும் மேற்பட்ட சாமியார்களை பார்த்திருந்தாள்.அபர்ணா காரில் இருந்து இறங்கி நிலத்தில் கால் வைத்ததும் வானத்தில் இருந்த வெள்ளை நிற மேகங்கள் விரைந்து விலகி கருமேகம் கூடியது .

அப்போது அபர்ணா “சுரேஷ் நாளைக்கு பைனல் டெஸ்ட் எடுத்த உடனே மற்ற வேலைகளை வேகமாய் ஆரம்பிச்சிருங்க.நான் அடிக்கடி வந்து போற மாதிரி பக்கத்துல ரூம் போடுங்க “என்று கிளம்பினார் .அவர் திரும்புகையில் அவர் முன் வந்த ஒரு சாமியார் “உரியவன் உக்ரம் உயிரை கொல்லும் “என்றதும் சிரித்தபடியே காரில் ஏறி கிளம்பியதும் சாமியாரும் சிரித்தபடியே “விளையாட்டு ஆரம்பிக்க போகிறது .தூதுவனே உன்னை வரவேற்கிறது இந்த உலகம் “என்றபடி பலமாய் சிரித்தார் .

காரில் போகும்போது சுரேஷ் அபர்ணாவிடம் “மேடம் அவர் என்ன சொல்றார் ?”என்றதும் அபர்ணா “என்ன சுரேஷ் பயமா இருக்கா ?இது எல்லாம் சேம்பிள் தான்.இன்னும் நிறைய பண்ணுவாங்க நம்ம எதிர் கம்பேனிகள்.நான் இங்க வர அது தான் காரணம் .தைரியமா சமாளிக்க தெரியனும்.நாளைக்கு வேலை ஆரம்பிச்சே ஆகணும் “என்று உறுதியா சொன்னாள் .மறுநாள் காலை 10.23 மணியளவில் எல்லோரும் வந்து அபர்ணாவிற்காக காத்திருந்தனர் .அபர்ணா வந்து எல்லாத்தையும் கவனித்த பிறகு நிலத்தில் துளையிடும் கருவி பொருத்தபட்ட அடுத்த நொடிகளில் மேகம் விரைந்து கூடி பெருமழையாய் உருவானது .தொழிலாளர்கள் வேலைகளை நிறுத்திவிட்டு மறைவான இடம் நாடி ஓடினர்.அபர்ணா காருக்குள் போனதும் ஒரு சாமியார் கண்ணாடி அருகில் வந்து “தூதுவன் வருகை உனக்கே தீங்கு “என்று நகர்ந்தார்.அபர்ணா அவர் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தார் .இரண்டு மணி நேர மழையில் நிலம் குளமாகி போனதால் அனைவரும் வீடு திரும்பினர்.அந்த வழியா வந்த பெண் ஒருவரை அழைத்த அபர்ணா “அம்மா இந்த சாமியார் எல்லாம் யாரு?இத்தனை பேரு இங்க என்ன பண்றாங்க ?”என்றதும் அந்த பெண் “ஒரு வாரமா தான் இருக்காங்க .யார்கிட்டயும் பேசுறது கூட கிடையாது .கோயில்ல நேரம் காலம் இல்லாம கண்ண மூடிட்டு உக்காந்து இருக்காங்க .நான் அவுங்க சாப்புட்டு கூட பாத்தது இல்ல”என்றவாறு நகர்ந்து போனாள் .

மறுநாள் அபர்ணா அதே நேரத்துல வேலைய ஆரம்பிக்கும் போது வானத்தில் இருந்து ஒரு இடி கண் இமைக்கும் நேரத்துல நிலத்தின் நடுவே தாக்க அனைவரும் பயத்தில் சிதறி விழுந்தனர்.

அதே நொடி நியூயார்க் நகரில் அபர்ணா தலைமை அலுவலகத்தின் ஏதோ ஒன்று பலமாய் தாக்க அங்கிருந்த அனைத்து கம்பியூட்டர்கள் செயல் இழந்து போக மின்சாரம் இன்றி ஆபிஸ் இருளில் மூழ்கியது.அந்த சத்தம் அனைவரையும் நிலைகுலைய செய்தது .அந்த நிறுவன தலைவர் ராபர்ட் மைக்கேல் காதுகளில் இருந்து இரத்தம் வழிவதை உணர்ந்தார் .அப்போது அவரது கம்பியூட்டர் திரையில் “warning stop this indian project work”என்று வந்ததும் தன்னோட போனை எடுத்தார் .

அபர்ணா நிதானம் திரும்பினார் .இடி விழுந்தது உண்மை ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.இடி விழுந்த அடையாளமே இல்ல .அப்போது அபர்ணா போன் சிணுங்கியது எடுத்தவுடன் “அபர்ணா இப்போது அந்த வேலைய நிறுத்தி வை.அங்கேயே இரு .நான் அப்புறமா பேசுறேன் “என்றதும் அபர்ணா நடப்பது அறியாமல் திகைத்து போனாள் .தன்னுடைய அறைக்குள் சென்று யோசிக்க ஆரம்பித்தாள் .அமெரிக்காவில் நடந்த சம்பவம் பற்றியும் யோசித்தபடி இருந்தாள் .உடனே போனை எடுத்து”சுரேஷ் நாளைக்கு பூங்காவனம் போகணும் கார் எடுத்துகிட்டு வா”என்றதும் சுரேஷ் முகத்தில் பயத்துடன் போனை துண்டித்தான் .

மறுநாள் பூங்காவனத்திற்குள் நுழைந்த அபர்ணா “சுரேஷ் இந்த ஊர்ல இருக்குற வயசானவங்கள நான் பாத்து பேசணும் “என்றதும் சுரேஷ் ஒருவரை பற்றி அறிந்து அந்த வீட்டிற்கு அழைத்து சென்றான் .அவருக்கு வயது 90 தாண்டி இருக்கும் .அவர் முன்பு அமர்ந்த அபர்ணா “இந்த ஊர் பத்தி சொல்லுங்க ?”என்றதும் அவர் “இந்த ஊர் பேருக்கு தகுந்த மாதிரியே பூங்காவனம் தான்.வறட்சியே காணாத பூமி .இந்த ஊர சுத்தி எல்லா ஊருமே அப்படி தான்.மூன்றாம் அறுபடை பாக்குற மண்ணு இது”என்றதும் அபர்ணா அவரிடம் “இங்க எதாவது வழக்கத்துக்கு மாறி நடந்திருக்கா?நல்லா ஞாபக படுத்தி சொல்லுங்க ?”என்றதும் பெரியவர் சிறிது நேரம் யோசிச்சு “இப்ப இல்ல எங்க தாத்தா காலத்துல ஏதோ ராஜா இங்க வந்து அரண்மனை கட்ட ஏற்பாடு செஞ்சிருக்கார்.

ஆனா பாருங்க ஒரு அடி கூட தோண்ட முடியல.எவ்வளவு முயற்சி பண்ணியும் முடியலையாம்.அப்புறம் அந்த,ராஜா மர்மமா செத்து போயிட்டார்னு சொல்றாங்க “என்றதும் அபர்ணா காரில் ஏறியதும் “சுரேஷ் இந்த நிலத்துக்கு கீழ ஏதோ இருக்கு.அதை கண்டுபுடிச்சே ஆகணும் .தமிழ்நாட்டுல அதுலயும் இந்த பகுதியை பத்தி தெரிஞ்ச வரலாற்று ஆசிரியர்களை பாக்க ஏற்பாடு பண்ணு”என்றாள் .தினமும் அது சம்பந்தப்பட்டவர்கள் வந்து போனார்கள் .ஆனால் எதிர்ப்பார்த்த தகவல் கிடைக்கல .ஒரு கட்டத்துக்கு மேல் குழம்பி போனாள் .அபர்ணாக்கு இது தோல்வி பயத்தை ஏற்படுத்தியது .அப்போது அந்த சாமியார் முகங்களும் அவர்களது வார்த்தைகளும் வந்து போனது .இரவில் ஏதோ ஒரு யோசனை தோன்ற தனது டைரியில் எதையோ தேடி எடுத்தவள் .உடனே போன் செய்தாள் .போனை எடுத்ததும்”நாளைக்கு உடனே வந்து என்னை பாரு “என்று போனை வைத்து விட்டு முகவரியை அனுப்பி வைத்தாள் .

மறுநாள் காலையில் இருந்தே வாசலில் யாரோ வருகைக்கு காத்திருந்தாள் .எதிர்ப்பார்த்த படி முகிலன் அவள் முன்பு வந்து நின்றான் .அவனை பார்த்ததும் முதலில் எதை பேசுவது என்றே தோன்றவில்லை .அவன் காத்திருந்தான் .பின்பு “முகில் இங்க பாரு நான் பழைய விஷயங்கள பேச வர சொல்லலை .எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும் அது உன்னால மட்டும் தான் முடியும் .நீ ஆன்மீகத்த பத்தி நிறைய தெரிஞ்சவன்.ஆராய்ச்சி பண்ணிருக்க.எனக்கு ஒரு ஊர் பற்றிய தகவல் தெரிஞ்சுக்கணும்னு தான் கூப்புட்டேன்”என்றதும் முகிலன் “சரி பண்றேன் .நானும் பழைய நினைவுகளோடு உன்னை பாக்க வரல.எனக்கு தகவல் வேணும் அந்த ஊர் பத்தி அவ்ளோ தான்”என்றவன் சுரேஷிடம் தகவல்களை வாங்கி கொண்டு பூங்காவனத்திற்குள் நுழைந்தான் .அந்த சாமியார்களை சந்தித்தான்.அவனோடு யாரும் பேசவில்லை .நிலத்தை பாத்துவிட்டு அபர்ணாவிடம் வந்தவன் “நீ நினைக்குற மாதிரி அவுங்க சாமியார் இல்ல சித்தர்கள்.உண்மையான சித்தர்கள் .

ஆனா அவுங்க உன்கிட்ட மட்டும் ஏன் பேசுறாங்கன்னு புரியல.நிறைய மர்மம் இருக்கு அதுவும் ஆன்மீகம் தழுவி .இனி இந்த மர்மம் தேடி போகணும் .நிறைய இடங்களுக்கு .சின்ன சின்ன குறிப்புக்கள் தான் நமக்கு உதவியா இருக்கும் .நான் நாளைக்கு கிளம்புறேன்.”என்றதும் அபர்ணா “நானும் உன் கூட வர்றேன் .இங்க இருக்க இருக்க எனக்கு என்னவோ போல இருக்கு.உன் கூட வந்தா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்”இருவரும் பயணத்துக்கு தயார் ஆனார்கள் .உடன் சுரேஷ் கிளம்பினான் .

தமிழ்நாட்டில் பிரபலமான அனைத்து சித்தர்கள் சார்ந்த பகுதிக்கும் பயணம் ஆனார்கள் .அகத்தியரில் துவங்கிய ஆய்வு சமீப கால சாக்கடை சித்தர் வரையில் தொடர்ந்தது .ஒரு நாள் இரவு பயணம்.காஞ்சிபுரம் வழியாக திருவண்ணாமலை நோக்கி வரும்போது முகிலன் தன்னை அபர்ணா பாத்து கொண்டு இருப்பதை உணர்ந்தான் .அப்போது “என்ன அபர்ணா எதாவது பேசணுமா?”என்றதும் “இல்லை”என்று தலையசைத்தாள் .அப்போது “உனக்கு கடைசி வரையில் என்னை புடிக்கல இல்லையா?அமெரிக்கா தான் உனக்கு எல்லாமே .அஞ்சு வருஷம் உனக்காக காத்திருந்தேன் .அமெரிக்கா கிளம்பும் போது சொல்லிட்டு போகணும்னு கூட தோணல இல்லையா?”என்றதும் அபர்ணா “ஸாரி முகில் .சின்ன வயசுல இருந்து பெத்தவங்க இல்லாம சித்தப்பாகிட்ட வளந்தவ நான் .நிறைய இழப்புகள் எனக்கு.ஒரு கட்டத்துக்கு மேல உறவுகள் மேல வெறுப்பு வந்திருச்சு .யாரையும் ஏத்துக்க மனசு வரல ஸாரி “என்றதும் இருவரும் வார்த்தைகள் இன்றி அமைதியாகினர்.

மறுநாள் அபர்ணாவின் முதலாளி சீனாவில் இருந்து ஒரு புகழ்பெற்ற சாமியாரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார் .திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிக்குள் பூங்காவனம் பற்றிய தகவல் எதாவது கிடைக்குமா என்று தேடி கொண்டு இருக்கும் போது ஒரு சித்தரை சந்திக்கும் போது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் .அபர்ணாவை உள்ளே வந்தவுடன் கண் விழித்த அவர் “தேடவிட்டான் பாத்தியா?நீ தேடும் விதை .ஆறுமுகன் காலடியில் போய் எடுத்துக்கோ”என்றவர் மீண்டும் கண் மூடி கொண்டார் .அபர்ணாவுக்குள் முன்பை விட இப்போது மிகப்பெரிய சந்தேகமும் குழப்பமும் ஏற்பட்டது .அவர் குறிப்பிட்டதை வைத்து பார்த்தால் அது முருகனை குறிக்கும் .ஆறுபடைவீட்டில் எங்கு தேடுவது என்ற குழப்பம் தோன்றியது .

சீனாவில் இருந்து வந்த சாமியார் பூங்காவனத்தின் எல்லையை நெருங்கும் போது சாலையின் மத்தியில் அனைத்து சித்தர்களும் ஒன்று கூடி நின்றார்கள் .சீன சாமியார் வண்டியை அவர்கள் மீது விட சொல்ல அவர்கள் அசராமல் நின்று மூச்சை இழுந்து எதிர் திசையில் விடும் போது அது புயலை விட வேகமாய் காரை பின்னோக்கி தள்ளியது.சீனா சாமியார் மந்திரம் சொல்லிவாறு முன்னேற சித்தர்கள் வழிவிட்டு விலகி நின்றனர் .சீன சாமியார் தாண்டி போனதும் சித்தர் ஒருவர்”உனக்கு அழைப்பு வருகிறது தூதுவனிடம் இருந்து”என்று அனைவரும் அங்கிருந்து அகன்றனர்.

முகிலன் ஆறுபடை கோயில்களின் தலபுராணங்களை படித்து விட்டு”அபர்ணா சித்தர்களுக்கும் முருகனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குதுன்னா அது பழநி மட்டும் தான்.நாம அங்க தான் போய் ஆகணும் .நம்ம கேள்விக்கு பதில் அங்க தான் இருக்கு .உடனே கிளம்பியாகணும்”என்றவன் அபர்ணாவுடன் பழநிக்கு விரைந்தான்.

சீன சாமியார் நிலத்தை அடைந்ததும் முதலில் ஒரு பிடி மண்ணை அள்ளி நுகர்ந்து பார்த்தார் .பின்பு நிலத்தில் காது வைத்து எதையோ கேட்டவர் உடனே சீடர்களை அழைத்து நிலத்துக்கு நடுவே பெரிய வட்டம் போட சொல்லி சுற்றி சீடர்கள் மந்திரம் சொல்ல நடுவில் அமர்ந்து அவரும் கண்களை மூடி மந்திரம் சொல்ல ஆரம்பித்தார் .

பழநியை அடைந்ததும் விரைவில் மலை கோயில் மீது ஏறி அங்கிருந்த கல்வெட்டுகளை வரலாற்று ஆசிரியர்களின் உதவியால் படித்தனர்.அப்போது அதில்”பழநி என்ற பகுதியே மலை போன்ற மேடான பகுதியாய் இருந்ததும்.போகர் முருகன் மீது பக்தியால் ஒன்பது வகையான சக்திகளை ஒன்றிணைத்து நவபாசானசிலையை உருவாக்கினார் என்றும்,இந்த விஷக்கலவை உயரிய மருந்து என்பதும் ,சிலையில் குறிப்பிட்ட அளவுக்கு கதிர் இயக்கம் நிகழ்வதாகவும்,போகர் சமாதி மலை மேற்பகுதியில் இருப்பாதாகவும் இருந்தது .போகர் சமாதி அருகே ஒரு குகை இருப்பதை அறிந்த முகிலன் அதைப்பற்றி விசாரிக்க அவர்”இது எந்தஅளவுக்கு உண்மைன்னு தெரியல .இந்த குகை வழியா தான் போகர் திருவண்ணாமலை போயிட்டு வந்திருக்கார்.

அதுமட்டுமல்ல போகர் நவபாசனத்தில் இன்னோரு பல மடங்கு சக்தி வாய்ந்த சிலை செஞ்சிருக்கார் .அதை குகைக்குள் வச்சிருக்கார்னு சொல்லப்படுது.போகர் இன்னும் சமாதி நிலை அடையவில்லை சிலைக்கு அருகில் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது”என்றதும் முகிலன் பழனியில் இருந்து திருவண்ணாமலை வரைப்படம் எடுத்து பார்த்தான் .இரண்டு ஊருக்கும் மிகச்சரியான தூரத்தில் பூங்காவனம் இயற்கை எழில் சூழ்ந்து இருந்தது .அதை பார்த்த முகிலன் “அபர்ணா உடனே பூங்காவனம் போகணும் .சீனசாமியார் யாகத்த நிறுத்தனும்.அவுங்க உங்களுக்கு உதவி பண்ணல.அந்த சிலையை சீனாவுக்கு கொண்டு போக பாக்குறாங்க.சிலையை எடுத்தால் போகர் வருவார் .இழப்புகள் கணக்கில் அடங்காது.உடனே கிளம்பு”என்று காரில் ஏறி புறப்பட்டார்கள் .

சீனசாமியாரின் மந்திரம் பூமிக்கு அடியில் மின்சாரம் போன்று ஊடுருவி ஆழத்தில் இருக்கும் சிலையை அவர் கண்ணில் காட்டியது .அருகில் போகரையும் காட்டியது .சாமியார் சிரித்தபடியே மந்திரத்தின் பலத்தை கூட்டினார்.பூங்காவனத்திற்குள் அபர்ணா வேகமாய் உள்ளே நுழைந்தாள் .அவளை நிலத்திற்குள் வர விடாமல் தடுத்து நிறுத்தினர்.சாமியார் தனது சக்தியால் மண்ணிற்கு அடியில் இருக்கும் சிலையை காந்தம் என இழுத்தார்.சிலை மெதுவாக நகர்ந்தது .அப்போது ஒரு சித்தர் அபர்ணாவிடம் வந்து “உரியவன் உக்ரம் உயிரை கொல்லும் இப்ப புரியுதா?போ போய் தடுங்க.தூதுவன் வந்தா உயிர்கள் போகும் கணக்கில் இல்லாம “என்று நகர்ந்தார் .

அபர்ணா முகிலன் சுரேஷ் மூவரும் ஒரு முடிவா இறங்கி சாமியாரின் சீடர்களை தாக்கினார்கள்.மந்திர சக்தி அவர்களை வீசி அடித்தது.அப்போது ஒரு சித்தர்”ஒரே கூட்டிற்குள் பத்தையும் அடைச்சிரலாம் .கூடு உன்னோடது வேணும் .ஏன் தெரியுமா?நீ ஒரு சாம்புசிவ சித்தனின் பரம்பரை .உனது இரத்தத்தில் சித்தம் கலந்தே இருக்கு”என்றதும் அபர்ணா தைரியமாய் முன் நிற்க .பத்து சித்தர்களும் அவளுக்குள் ஊடுருவியதும் அங்கிருந்த சீனர்கள் தடுக்க முடியாமல் சிதறி ஓடினர் .சீன சாமியாரை ஓங்கி அறைந்தாள்.கண் திறந்த சாமியார் திகைத்து நிற்க அப்போது அபர்ணா “காவலுக்கு இருப்பவனும் உன் தேசம் தான்.அவன் வந்தால் மன்னிப்பு மறந்தே போகும் .ஓடி போ இந்த மண்ணை தாண்டி “என்றதும் தோல்வியை ஏற்று புறப்பட்டார்.சித்தர்கள் அவளிடம் இருந்து விலகி அவளை ஆசிர்வதித்து விட்டு புறப்பட்டனர்.மயக்கம் தெளிந்த அபர்ணா “போலாம் முகில் .நம்ம ஊர் மண்ணுக்கு நிறைய சக்திகள் இருக்குனு இப்ப புரிஞ்சுகிட்டேன்.”என்றாள் .

அபர்ணா அமெரிக்கா வேலையை ராஜினாமா செய்து விட்டு முகிலனுடன் திருமணவாழ்க்கையை ஆரம்பித்தார் .

[முற்றும் ]

நன்றிகள்! வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here