தோழியானவன்

0
113

“இன்னிக்கு லேட் தான். உன்னோட டெய்லி இதே வேலையாப் போச்சு. காலையில் தினம் லேட்டா தான் எழுந்திக்கற.நைட் ஒரு மணி வரைக்கும் மொபைலையும் லேப்டாப்பையும் கட்டிகிட்டு அழவேண்டியது. காலையில் என்னைக் கதற விட வேண்டியது. என்ன தீபு இது? முதல்ல உன்னை அமெரிக்காவுக்கு பேக் பண்ணனும். அப்புறமா தான் நான் நிம்மதியா என்னோட வேலையைச் செய்ய முடியும்” புலம்பித் தள்ளினாள் மீரா.

ஸ்கூட்டியின் பின்னிருக்கையில் இருந்து புலம்பியபடி வந்த மீராவை சைட்மிரர் வழியாகப் பார்த்துச் சிரித்துக் கொண்ட தீபு என்கிற தீபா “என்னோட விசா கிளியரன்ஸ் கிடைச்சதும் தானேம்மா பார்க்கனும். இப்போவே துரத்துரதுல குறியா இருக்கியே? நீ ஏன் இங்க தனியா இருக்கனும். நான் போய் செட்டிலாகிட்டு சொல்றேன். நீயும் வந்திரும்மா. ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.

“எனக்கிந்த அமெரிக்கா பேரிக்காவெல்லாம் ஒத்தே வராது தீபு. நான் இங்கே இதே ஊர்ல நிம்மதியா என்னோட வேலையைப் பார்த்துட்டு இப்படியே என்னோட காலத்தைக் கழிச்சிருவேன். இதான் சரி எனக்கு” என்றாள் மீரா. நாற்பத்தைந்து வயது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப முடியாது. தனது முப்பதாம் வயதிலேயே கணவனை கேன்சருக்குப் பறிகொடுத்தவள். தனது ஒரே மகளை மட்டுமே வாழ்வின் பிடியாகக் கொண்டு வாழ்ந்து வருபவள்.

தீபு முதுகலைப்படிப்பு முடித்து வேலைக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம். எவ்வளவோ போராடிப் பார்த்தாள் மீராவிடம் “நீங்களும் வாங்கம்மா என்னோட”. மீரா பிடிவாதமாக மறுத்து விட்டாள். ஏனோ இந்தியாவை விட்டுச் செல்ல மனசேயில்லை. ஆனால் மகள் சென்ற பின் தான் இங்கே தனித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி மட்டும் அவ்வப்போது பூதாகாரமாக எழும்பி நின்றது.

இதைச் செய்யலாமா அதைச் செய்யலாமா என்று ஆயிரம் விஷயங்கள் எண்ணிக் கொண்டாலும், ஆயிரம் ஐடியாக்களை நட்பு வட்டாரம் அள்ளித் தெளித்தாலும் எதுவுமே ஏனோ ஈர்க்கவில்லை. ஏதோ ஒரு தாகம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. இன்னதென்று புரியாத தாகமது.

“மேடம் காசு கொடுங்க” சிந்தனையை தடை செய்த குரலுக்குச் சொந்தக்காரரை முறைத்துப் பார்த்த மீராவின் பார்வை மெல்ல தணிந்தது. அவள்…. அல்ல அவர் ஒரு சிவசக்தி. அர்த்தநாரி. சுமார் இருபதுகளில் இருப்பார். நல்ல உயரம். பெரிய கொண்டை போட்டிருந்தார். காதுகளில் வளையம் ஊஞ்சலாடியது. முகத்தில் புன்னகை எப்போதும் நிரந்தரமாகக் குடித்தனமேறியிருந்தது. சிக்னலில் நின்று போகும் வண்டிகளை நிறுத்தி பணம் கேட்பார். வழக்கமாக யாரேனும் இப்படி கேட்டால் ஒன்றும் கொடாது கடந்து சென்றுவிடும் மீரா இன்று மறுபேச்சின்றி பத்து ரூபாயத்தாளை நீட்டினாள். சிக்னல் பச்சையைக் காட்ட தீபு வண்டியைக் கிளப்பிச் சென்றாள்.

“ஏன்மா வழக்கமா யார் வந்து பிச்சைன்னு கேட்டாலும் அட்வைஸ் பண்ணி அழவிடுவ. இப்போ என்னம்மா இவங்களுக்கு மட்டும் பைசா குடுக்கிற? மீராவுக்கு என்னாச்சு இன்னிக்கு?? உடம்பு சரியில்லையா? வீட்டுக்கு ரிட்டர்ன் போவோமா?” கேள்விகளை அடுக்கினாள் தீபு. பின்னிருக்கையில் இருந்து பதில் வராது போகவே வண்டியை ஓரமாக நிறுத்தி “என்னாச்சும்மா?” என்றாள் தீபு.

“ஒன்னுமில்லை. இவங்களை பார்க்க பாவமா இருந்துச்சு. அதான்” என்றாள். தனது அன்னையைக் கூர்ந்து பார்த்திருந்தவள் “என்னவோ போ மீரா. வரவர உன்னோட நடவடிக்கை ஒன்னும் சரியில்லை.” என்று பெரிதாக நொடித்துக் கொண்டு வண்டியைக் கிளப்பினாள்.

இது தினப்படி வழக்கமானது. தீபு தனது அன்னையை அலுவலகத்தில் கொண்டு விட தினமும் காலையில் செல்லும் வழியில் அதே நபர் இவர்களை நிறுத்தி பணம் கேட்பது வாடிக்கையானது. தீபுவுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது தினப்படி வழக்கமாக நடந்தது. சில நாட்கள் சில்லறை இல்லை எனும் போது கூட சிரித்த முகத்துடனே “பரவால்ல சிஸ்டர்! நாளைக்குத் தாங்க.” என்றுவிடுவார். கொடுக்கும் நாட்களில் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு தீபுவின் தலையில் கையை வைத்து ஆசிவழங்கி விட்டுச் செல்வார்.

தீபு கூட கிண்டலாக “பார்ம்மா பைசா குடுக்கிறது நீ. ஆசி மட்டும் எனக்கா? இப்படி இவங்களுக்கு பைசா குடுத்து ஏமாந்து போறியேம்மா” என்பாள். ஆனால் எதுவும் மீராவை அசைக்கவில்லை. பைசா கொடுப்பது நின்றபாடுமில்லை. ஒருநாள் சிக்னலில் இவர்களை நிறுத்தியவர் “சிஸ்டர் இன்னிக்கு நாங்களெல்லாம் பூஜை பண்ணுவோம். உங்களால முடிஞ்ச பணம் குடுங்க. இல்லைன்னு சொல்லாம நூறோ ஐநூறோ குடுங்க. எல்லாருக்காகவும் வேண்டிக்குவோம்.” என்றார்.

ஒரு நொடி தயங்கிய மீரா பின்பு என்ன தோன்றியதோ தன்னிடம் இருந்த இருநூறு ரூபாயைக் கொடுத்தார். தீபுவுக்கு சரியான கோபம். “என்னம்மா இப்படி ஏமாளியா இருக்கீங்க?” என்று கத்தித் தீர்த்தாள். பதிலாக ஒரு புன்னகை மட்டுமே மீராவிடமிருந்து. இந்தச் சம்பவத்தின் பின் அவரைக் காணவே முடியவில்லை. வழக்கமான சிக்னலில் அவரில்லை. மீரா மட்டும் அவரை மிகவும் தேடினாள். “பாவம் ரொம்ப கிடைக்கும்னு நினைச்சிருப்பாங்க. இருநூறு தான் உன்கிட்ட பிடுங்க முடிஞ்சது. அதான் கிடைச்ச வரைக்கும் லாபம்னு போயிட்டாங்க” என்று கிண்டல் செய்தாள்.

காலமும் பறந்தது. தீபுவுக்கு விசா கிடைத்து அவள் அமெரிக்கா செல்லும் நாளும் நெருங்கியது. “உன்னை எப்படிம்மா தனியா விட்டுட்டு போறது?” புலம்பிக் கொண்டே இருந்தாள் தீபு. “தீபும்மா!! எல்லாரோட வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம், ஒரு அர்த்தம் இருக்கும். உனக்கான நோக்கம் என்னனு நீ தேடு. எனக்கானது என்னனு நானும் தேடறேன். எனக்கானது இங்கே தான் இருக்கும். பார்க்கலாம்” என்று அவளைச் சமாதானப்படுத்தி வழியனுப்பி வைத்தார் மீரா.

நாட்கள் பறந்தது. தீபு அமெரிக்கா போய் ஒருமாத காலம் ஓடிவிட்டது. அன்றாடம் வீடியோ காலில் பேசிக் கொள்ளும் போது மகளிடம் மறக்காது சொல்லும் ஒரு வாக்கியம் “இன்னிக்கும் அவங்களைப் பார்க்கல தீபு. எங்கே போயிருப்பாங்க?” என்பது தான். தன் அன்னைக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது என்பது புரிந்தது. இது என்ன மாதிரியான பிணைப்பு என்று தான் எண்ணத் தோன்றியது தீபுவுக்கு.

ஒரு நாள் அதிகாலை நேரம் தீபு வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க மீராவிடம் இருந்து வீடியோ கால். இந்தியாவில் இப்போது மாலை ஆறு மணியிருக்கும். என்ன அவசரமோ என்று பதறி அழைப்பை எடுத்தவளுக்கு அன்னையின் முகத்தில் இருந்த சந்தோஷம் ஆச்சரியமாக இருந்தது. “தீபு!!!!!! நான் பார்த்துட்டேன்… அவங்க.. அதான் யாஷிகா… அதான் அவங்க பேராம். பார்த்தேன் இன்னிக்கு. என்னோட ஆஃபிஸ் பக்கத்தில் இருக்கிற சிக்னல்ல பார்த்தேன். பாவம் ஏதோ ஆக்ஸிடென்ட் ஆச்சாம். சிக்னல்ல இவங்க வழக்கமா நிற்கிற இடத்துலே நின்னப்போ யாரோ இவங்க மேல் வண்டி ஏத்திட்டாங்களாம். ரெண்டு மாசம் ஹாஸ்பிடல்ல இருந்தாங்களாம். பாவம் தானே!” என்ற அம்மாவைப் பார்க்கையில் தீபுவுக்கு அம்மாவின் மகிழ்ச்சி புரிந்தது.

தினமும் மீராவின் ஃபோன் கால்கள் அந்த யாஷிகாவைப் பற்றிய செய்திகளை நிரப்பின. ஒருநாள் மீரா பேசுகையில் “தீபும்மா இன்னிக்கு நான் யாஷிகா கூட அவங்க இடத்துக்கு போனேன். உனக்குத் தெரியுமா தீபு!!! இவங்க நம்மகிட்ட எல்லாம் கேட்டு வாங்கிற பைசா வச்சு தான் சில குழந்தைகளைப் படிக்க வைக்கிறாங்க. அவங்களை மாதிரி இருக்கிற இன்னும் ரெண்டு பேரும் அவங்களும் சேர்ந்து அனாதை குழந்தைகளைப் படிக்க வைக்கிறாங்க. இன்னும் இவங்களைப் போன்றவர்களுக்கு சிறுதொழில் கல்விக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்றாங்க. நானும் இதுல……” என்று முடிக்கும் முன் “நீயும் ஹெல்ப் பண்ண போறியாம்மா?” என்றாள் தீபு.

“ஹெல்ப்பா??? அதெல்லாம் பெரிய வார்த்தை தீபும்மா. நானும் இதுல பங்கெடுத்துக்கலாம்னு பார்க்கிறேன் தீபும்மா. என்னோட வாழ்க்கைக்கான நோக்கம் இதுதான்டா. அம்மாவைப் புரிஞ்சுப்பேனு நினைக்கிறேன். செய்யட்டுமாடா?” மகளிடம் கேட்ட குரலிலேயே மறுத்து விடாதே என்ற தவிப்பு தெரிந்தது.

“லவ் யூ மீராம்மா. உனக்குப் பிடிச்சதை செய்ம்மா. எனக்கான சுதந்திரத்தை தந்த நீ எதுக்கு எங்கிட்ட பெர்மிஷன் கேட்க நினைக்கிற?. நீ எது செஞ்சாலும் எனக்கு சரிதான்மா. யாஷிகா அக்கா கிட்ட நான் கேட்டதாக சொல்லும்மா” என்றாள். “அவ உன்னைத் தான் அடிக்கடி கேட்பா தீபு. தாங்க்ஸ்டா. அம்மாவைப் புரிஞ்சுகிட்டயே” என்றாள். அம்மாவின் அழைப்பு துண்டிக்கப்பட்டு சில நிமிடங்களுக்குப் பின்னும் ஃபோனையே பார்த்திருந்த தீபு தன் அன்னை தனக்கு அனுப்பியிருந்த புகைப்படத்தை பார்த்திருந்தாள். தாயும் அவரது தோழியுமான யாஷிகாவும் சிரித்தபடி நின்றிருந்தனர். தாயின் தோழியானவன்!!!!!!!!!!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here