நதியிசைந்த நாட்களில் 14

0
108

Cheba
ஃபாரூக் வீட்டில் தீதீ பாடலைக் கேட்டு முடிக்கவும் கரண்ட் கட்டாகவும் சரியாக இருந்தது. ஃபாரூக்கின் அம்மா ஏலக்காய் டீயும், காலி ஃப்ளவர் பக்கோடாவும் கொண்டு வந்து தந்து சாப்பிட சொன்னார்.

அரட்டை அடித்தபடி பகோடாக்களைக் கொறித்து டீ குடித்து முடித்து அரட்டையைத் தொடர ஒரு மணித்தியாலம் கடந்ததே தெரியவில்லை.

“டேய் ஃபாரூக் கிளம்புடா மணி நாலேகால் ஆச்சு, விளையாட எல்லாரும் வந்துருப்பாங்க” சொல்லி முடிக்க கரண்ட் வந்தது.

“இந்தப் பாட்டை கேட்டுட்டு கிளம்பலாம், நீ இந்தப் பாட்டை கேட்கனும்னு தான் வெயிட்டிங்”

“அந்தப் பாடலையும் அப்போது தான் முதல் முறை கேட்கிறேன். ஹிந்தியில் நஷா என்றொரு வார்த்தை உண்டு. தமிழில் போதை என்று தட்டையாக மொழி பெயர்க்க விரும்பவில்லை. பாடலை முதல் முறை கேட்கும் போது அந்த “நஷா” உணர்வு எனக்குள் அமிழ்ந்தது.

அந்த இசைப் பிரயோகம், துல்லியமான ஒலிப்பதிவு… பர்ஃபெக்ஷன் இந்த டிஜிட்டல் யுக காலத்திலும் பல இசையமைப்பாளர்களிடம் இல்லை.

El Arbi
இரண்டு வருடங்கள் கழித்து ஒரு விடுமுறை தின சனிக்கிழமை காலை பதினோரு மணியளவில் வேளையில் வீட்டில் ATN சேனலில் இந்திப் பாடல்களைப் பார்த்தபடி இருந்தேன். அம்மா திடீரென அருகில் உள்ள மனோகர் கடையில் இருந்து பச்சை மிளகாய் வாங்கி வர சொன்னார். டிவியில் லயித்திருந்த எனக்கு அம்மா சொன்னது வேப்பங்காயாக கசந்தது. அம்மாவிடம் சலித்துக் கொண்டாலும் வேகமாக ஓடி கடையில் வாங்கி அதே வேகத்தில் வீடு திரும்பினேன். டிவி ஓடிக் கொண்டிருந்தது.

அக்ஷய் குமாரும் காஞ்சனும் டூயட் ஆடிக் கொண்டிருந்தார்கள். நல்ல லொகேஷன். எதுவும் கவனத்தைக் கவரவில்லை ஆனால் அந்தப் பாட்டு, இசை அப்படியே ஃபாரூக் வீட்டில் கேட்ட பாட்டு போலவே இருக்கிறதே! அடுத்ததடுத்து சந்தேகங்கள்.

ATN சேனலில் கேட்ட பாட்டு என்ன படம்? காலேத் பாட்டைத் திருடிய அந்த மியூஸிக் டைரக்டர் யார்? காலேத் பாட்டின் ஆரம்ப வரி என்ன? உடனே அவன் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தேன்.

என் புறப்பாடு முஸ்தீபுகளைக் கண்டு அம்மா “எங்கடா வெளிய போற?” என்று கேட்டார்.

“ஃபாரூக் வீட்டுக்கும்மா”

“பக்கத்துல இருக்கற கடைக்குப் போக சலிச்சுக்கிட்ட இப்போ அவ்ளோ தூரம் போக முடியுமா? எதுக்குப் போற?”

“ஒரு பாட்டு சம்பந்தமா சந்தேகம் கேட்கணும்”

“ஞான சூனியமே, இதுக்காக அவன் வீட்டுக்குப் போவியா? ஃபோன் பண்ணி கேட்டுக்கோ”

அப்போது எங்கள் வீட்டிற்கு புதிதாக லேண்ட் லைன் வந்த நேரம். அவன் வீட்டிற்கு போன் செய்தேன் எடுத்துப் பேசியது ஃபாரூக் அம்மா.

“என்னப்பா?”

“அம்மா, ஃபாரூக் இல்லை?”

“இருக்கானே என்ன விஷயம்”

“ஒரு பாட்டு சம்பந்தமா பேசணும்மா ப்ளீஸ்”

“உங்களைப் பெத்துட்டு உங்கம்மாவும் நானும் படாத பாடு பட்டுத் தொலையுறோம். சாம்பார் வைக்க முருங்கைக்காய் பறிக்க சொன்னேன். மொட்டை மாடிக்கு போயிருக்கான்”

“அவசரம் மா”

“பத்து நிமிஷம். கீழ அவன் வந்த உடனே நானே உங்க வீட்டு நம்பரை டயல் செஞ்சு அவன் கிட்ட தரேன் போதுமா?

அடுத்த பத்து நிமிடம், இருப்புக் கொள்ளவில்லை. கால் மணி நேரம் கழித்து ஃபாரூக் போன் செய்தான். வெகு அலட்சியமாக பதில் சொல்லி என்னை வெறுப்பேற்றினான்.

“டேய் இப்போ ATN பாத்தியா?”

“இல்லை டா அரை மணி நேரமா மாடில இருக்கேன்”

“அன்னிக்கு நீ காலேத் பாட்டு போட்டு என்னை கேட்க வெச்சியே”

“ஆமா”

“அதுல ரெண்டாவதா ஒரு பாட்டு”

“El Arbi”

“அந்தப் பாட்டை காப்பி அடிச்சு ஒரு புது ஹிந்திப் பாட்டு வந்துருக்குடா, அக்ஷய் குமாரும், காஞ்சனும் நடிச்ச படம்”

“ஓ அதுவா அந்தப் பட ஆடியோ கேஸட் என்கிட்ட இருக்கு டா, படம் பேரு அமானத். அந்தப் பாட்டு தான் ஹிட். படம் ஃப்ளாப்”

“அப்படியே காப்பி டா”

“அதுக்கென்ன செய்ய?”

“மியூஸிக் யாரு?”

“பப்பி லஹரி”

“டிஸ்கோ டேன்ஸர் ஃபேமஸ் பப்பி லஹரியா?”

“ஆமாம் டா”

காரோ, ரெயிலோ, பேருந்தோ ஒரு பயணம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். வெயிலற்ற காலம் முக்கியம். மேக மூட்டம் ஸ்லாக்கியம். மதியம் மூன்று மணி என்பது உசிதம். பயணிக்கும் போது கண் முன் மலைகள், அருவிகள் போன்ற காட்சிகள் தென்படவேண்டியது முக்கியது. அப்படி ஒரு தருணத்தில் இந்தப் பாட்டைக் கேளுங்கள்.

குமுளி பக்கம் போன போது நான் மேலே சொன்ன அனைத்தையும் ஒருங்கிணைத்து சூழலை அமைத்து அருவி மலை பார்த்தபடி பாடலைக் கேட்டிருக்கிறேன். நீங்களும் அவசியம் கேளுங்கள்.

பாடலைக் கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=TATrYS_FW_A

பப்பி லஹரி நகலெடுத்த பாடலைக் கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=oa2SNbTRe20

Cheba
ஒரு நாள் கிரிக்கெட் விளையாடி முடித்து மாலை ஆறரை மணிக்கு மைதானத்திலிருந்து கிளம்பும் போது ஃபாரூக் என்னிடம் வந்து அவன் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்ஸ், பைல்ஸ் போன்றவற்றை வீட்டிற்கு கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொண்டான். அவன் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான் உதவி.

“இந்த ஹெல்ப் பண்ணா உனக்கு பதிலுக்கு நான் ஒன்னு செய்வேன். ரெண்டு ஆப்ஷன் தரேன் எது வேணும்னு நீயே செலெக்ட் செய். ஓகே வா?” – இது ஃபாரூக்

“ஆப்ஷனை சொல்லு”

அப்பா வண்டியை எடுத்துட்டு வந்து ஒன்னை வீட்ல கொண்டு போய் விடுவேன்
நீ இதுவரைக்கும் கேட்காத புது பாட்டு ஒன்னு டேப்ல வைக்கறேன்

ரெண்டுல எது வேணும் சொல்லு?

“ரெண்டாவது ஆப்ஷன்”

ஒரு மெல்ட்ரக் 60 கேஸட்டில் பதிவு செய்யப்பட்ட பாடலை ஓட விட்டான். பாடியவரின் குரல், இசை பாணி இரண்டும் மிக எளிதாக யாருடைய பாடல் என்று என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

“காலேத் பாட்டு தானே?”

“கரெக்டா கண்டுபிடிச்சுட்டியே, சூப்பர்”

இரண்டாவது முறை ரீவைண்ட் செய்து வைக்க சொன்னேன். கேட்டேன்.

“மேலோட்டமா கேட்கும் போது துள்ளலான தாளகட்டு ஆட்டம் போட வைச்சாலும், மியூஸிக்கை கவனமா கேட்டா செம டெப்தா இருக்கு. எப்படி சொல்றதுன்னு தெரியல, கிளாஸ்”

“இந்தப் பாட்டு தீதீ ஸாங்குக்கு முன்னாடியே வந்தாச்சு. சரியா சொல்லனும்னா 1988 ல ரிலீஸ்”

“ஓ இந்தப் பாட்டை எப்படி புடிச்ச?”

“அது சஸ்பென்ஸ், கேட்காத”

அந்தப் பாட்டு சொல்ல முடியாத ஒரு தனித்துவமான பரவசத்தை எனக்கு தந்து கொண்டே இருந்தது. ஃபாரூக் வீட்டிற்கு போகும் போதெல்லாம் அந்தப் பாட்டை ப்ளே செய்ய சொல்லி கேட்டு ரசிப்பேன். தவறாமல் பாட்டு எப்படி கிடைத்தது என்றும் கேட்பேன். ஃபாருக்கும் தப்பாமல் சஸ்பென்ஸ் என்றே பதில் சொல்வான்.

1995 ஆம் வருடம்… இந்த காலகட்டத்தில் குமார் என்கிற என் நண்பன் ஒருவன் இசையமைப்பாளர் வித்யாசாகரின் காத்தாடியாக மாறிக் கொண்டிருந்தான். கர்ணா படப் பாடல்கள் வெளியானது. வழக்கமான டீக்கடைகளின் எங்க ஷேவிங் செட் களமாடி உரையாடும் போது கர்ணா படப்பாடல்களை அநியாயத்துக்கு ஸ்லாகித்தான். ஒரிஜினல் கேஸட் வாங்கிவிட்டதாகவும் சொன்னான். மூன்று பாடல்கள் தம்மை பித்து பிடிக்க வைத்ததாகவும் காலை எழுந்தவுடன் அந்தப் பாடல்களை கேட்காவிட்டால் காபி கூட குடிக்கமாட்டேன் என்று ஃபீலினான்.

அவன் சொன்ன மூன்று பாடல்கள்

ஏ ஷப்பா…
மலரே மெளனமா…
புத்தம் புது தேசம்…

அந்தப் பாடல்களைக் கேட்குமாறு என்னை வற்புறுத்தினான். அவன் வீட்டில் ஃபிலிப்ஸ் பவர் ஹவுஸ் வேறு இருந்தது. அவன் வீட்டிற்கு சென்றேன். எனக்காக ரீவைண்ட் ஃபாஸ்ட் ஃபார்வேட் எல்லாம் செய்து ஏ ஷப்பா பாட்டை ஓட விட்டான்.

கேட்க கேட்க எனக்கு ஆத்திரமாக வந்தது. அவனை தெறிக்க விடவேண்டும் என்ற வெறி வந்தது. குமாரின் அப்பா பள்ளிக்கூடத்தில் வேலை செய்பவர். அவரிடம் வெஸ்பா ஸ்கூட்டர் உண்டு. அப்பா வீட்டில் இருந்தார். ஸ்கூட்டரும் இருந்தது.

“அப்பா கிட்ட சொல்லி வண்டியை எடுத்துட்டு வா, இந்த பாட்டு எங்க இருந்து, எப்படி சுடப்பட்டதுன்னு உனக்கு விளக்கேன்” என்று அவனை அழைத்தேன்.

குமார் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி என்னுடன் ஃபாரூக் வீட்டிற்கு வந்தான். கடங்காரன் ஃபாரூக் வீட்டில் இல்லை. ஃபாரூக் அம்மாவிடம் பேச ஆரம்பித்தேன்.

“ஃபாரூக் எங்கம்மா?”

“பெனாஸிரை (ஃபாரூக்கின் முதல் அக்கா) ஃப்ரெண்ட் வீட்டுல விட பொன்மலைப்பட்டி போயிருக்கான். அரை மணி நேரத்துல வந்துருவான் நீ வெயிட் பண்ணு”

“ஐயோ, குமாருக்கு ஒரு பாட்டு போட்டு காட்ட சொல்றதுக்கு வந்தேன்ம்மா”

“ஏன் டா நீங்க எல்லாருமே இப்படி லூஸா திரியறீங்க, அவன் ரூம்ல போய் டேப்ல நீயே போட்டு காட்டு நான் குடிக்க டீ எடுத்துட்டு வரேன்”

“கஷ்டம்மா, அது கம்பெனி கேஸட் கிடையாது”

“வேற என்ன அடையாளம்பா கேஸட்டுக்கு இருக்கு?”

“அது மெல்ட்ரக் 60 கேஸட் மா”

“சுத்தம், அவன் ஆறு மெல்ட்ரக் கேஸட் வெச்சுருக்கான், வேற அடையாளம் இல்லியா?”

“ஆங் கேஸட் கவர்ல assorted ன்னு எழுதி இருப்பான் மா”

“ஓ அதுவா, புரியாத பாஷை பாட்டா இருக்கும் போ கேளு”

“அது அரபிக் ஸாங் மா, உங்களுக்கு அரபி தெரியாதா? ஆச்சர்யமா இருக்கு”

“நான் தெலுங்கச்சி, இந்த நாட்ல ஆந்திரா தமிழ்நாடுன்னு ரெண்டு ஸ்டேட் பாத்துட்டேன். எனக்கு தெலுங்கு, தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ்… இது போதும்”

அம்மாவுடன் பேசுவதை நிறுத்தி கேஸட்டை ஓட விட்டு ஒவ்வொரு பாட்டாக பரிசோதித்து அந்தப் பாட்டை குமாருக்காக ப்ளே செய்தேன். பாடல் ஓடத் துவங்கியது. குமார் முகம் மாறியது…

“இப்போ சொல்றா”

“இதெல்லாம் காபி கிடையாது, ஒரே மாதிரி யோசிச்சுருக்கலாம், இல்லை வித்தியாசாகரோட மியூஸிக்கை…”

“அடி ரேஸ்கல், இந்தப் பாட்டு 1988 ல வந்துருக்கு”

இப்படியாக அந்தப் பாடல் எனக்கு தந்த அனுபவங்கள் அதிகம்.

2008 ஆம் ஆண்டு மெட்ராஸில் வசிக்கும் போது நான் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் மாதா மாதம் ஒரு கொண்டாட்டம் நடக்கும். உதாரணத்திற்கு மே மாதக் கடைசி இலக்கு முடிந்த பின் ஜூன் மாத துவக்கத்தில் முதல் வார வெள்ளிக்கிழமை டாப் பெர்ஃபார்மர் யார் யார் அப்படி இப்படி என்று அறிவித்து பாட்டு போட்டு டான்ஸ் ஆடி முகத்தில் கேக்கை அள்ளி அப்பி எல்லா கூத்தும் நடக்கும்.

ஒரு ஜூன் மாத துவக்கத்தில் நான் டாப் பெர்ஃபார்மராக தேர்வானேன். மே மாதம் ட்ரெயினிங்குக்கு ஹைதராபாத் சென்றதால் ஜூன் மாதம் தாமத பிறந்த நாள் வாழ்த்து சொல்லி எல்லா அயோக்கியப் பயல்களும் கேக்கால் என்னை சாத்து சாத்து என்று சாத்தினார்கள். அது தவிர மாதக் கணக்கு கேக் அடி தனி.

அந்த நிகழ்வுக்காக நான் ஒரு பாடலுக்கு நடனமாட முடிவு செய்தேன். அந்தப் பாடலைப் பற்றி எடுத்து சொல்லி கலீக் அருணிடம் உதவி கேட்டேன். அவன் ஒரு பென் டிரைவில் பாடலை சேமித்துத் தந்தான்.

அந்தப் பாடல்… காலேத் பாடிய “Cheba” பாடல் என்று தனியாக சொல்ல வேண்டுமா?

விவரம் தெரியாத பலரிடம் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது பாடலின் பாலைவனமூலத்தையும், இது தான் சரியான வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு கர்ணா படத்தில் இடம் பெற்றது என்றும் வாய் வலிக்க ஒவ்வொருவராக சொல்லியபடி இருந்தேன்.

இந்தப் பாடல் 1998 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட “Kutche” என்ற ஆல்பத்தில் இடம் பெற்றது என்பதை இணையத்தில் தேடி கண்டு கொண்டேன். அதாவது சிறிய அளவில் தம் தேசத்தில் அவர் கேஸட்டுகளாக வெளியிட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்!

இந்தப் பாடலைக் கேட்டு பார்த்து ரசிக்க இக்கொழுவியை சொடுக்குங்கள் :

ஒரு பாடல்… எங்கேயோ எந்த வருடத்திலோ வெளிவந்து, எங்கேயோ எந்த நாட்டிலோ யார் மூலமாகவோ என்னால் கேட்கப்பட்டு என் நாட்டின் பல பகுதிகளில் பயணித்து என் நினைவுகளில் பசுமையாக இடம்பிடிக்கிறது என்றால்… அற்புதம் தானே?

(தொடரும்)

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here