நதியிசைந்த நாட்களில் 2

0
32

பகுதி – 2

சிறு வயதில் அந்த இரண்டு ஆல்பங்கள் குறித்து நிறைய பேர் பேசிக் கேட்டிருக்கிறேன் ஆனால் நான் அவற்றைக் கேட்டுப் பேசியதில்லை. வளர்ந்து டீன் ஏஜ் பருவத்தில் இருக்கையில் என் அண்ணன் அந்த இரண்டு கேஸட்களை வீட்டுக்கு கொண்டு வந்தான். அவனிடம் ஒரு சோனி வாக்மேன் உண்டு. வாக்மேனில் அந்தக் கேஸட்டை கேட்டபடி அவன் காண்பிக்கும் அங்க சேஷ்டைகள் எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அடுத்து என்னுடைய சகோதரி, இருவரும் அந்த ஆல்பத்திற்கு கம்போஸ் செய்த இசையமைப்பாளரின் விசிறிகள். நானோ புயலில் கட்டுண்டு கிடப்பவன்.

புயல் காலம் … முதல் நாள் இரவிலிருந்து விடாது மழை கொட்டிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் துண்டிக்கப்பட்ட மின்சாரமானது மறு நாள் மதியம் மூன்று மணியளவில் தான் உயிர்ப்பித்து வந்தது. இயந்தர கதியில் சுறுசுறுப்பாக வீடு இயங்கத் துவங்கியது.
என் சகோதரனிடம் அந்த கேஸட்டை வாங்கி டேப் ரெக்கார்டரில் பொருத்தினேன்.

எங்கள் வீட்டில் ஒரு பிபிஎல் ஸ்டிரியோ செட். அதற்கு எக்ஸ்ட்ரா ஆம்ப்ளிஃபையர், ரெண்டு ஸ்பீக்கர், ஈக்வலைஸர், எக்ஸ்ட்ரா பேஸ்க்கு வூஃபர், ட்வீட்டர் போன்ற அசெம்ப்ள்ட் சமாச்சாரங்கள் அனைத்தையும் அலங்காரம் செய்து அழகிய மணப்பெண் போல் பாட்டு கேட்கும் சாதனத்தை உருவாக்கி வைத்திருந்தேன்

ஆல்பத்தின் பெயரை சொல்லவில்லையே… எப்படி பெயரிட்டு சொல்ல? அதான் பெயர் “How to name it”

இது ராக தேவனின் இசை சாம்ராஜ்யம். வயலினை ராஜாவாக்கியவர் என் ராஜ குரு இளையராஜா – இப்படி சொன்னது என் அண்ணன்

இதற்கு முன் எதுவும் நெருங்க முடியாது. இது அவரின் இசை உச்சம் – வழிமொழிந்தது என் சகோதரி

எனக்கும் உள்ளூர ஒரு ஆர்வம் இருந்தது. கேட்க ஆரம்பித்தேன். ஏன் ஆர்வம்?

இந்தியாவைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் என்பவர் பெரும்பாலும் திரைப்படங்களுக்கு இசையமைப்பவராகவே இருக்கிறார். திரைப்படங்களுக்கு இசையமைப்பது எல்லைகளுக்குட்பட்டது. கதாசிரியரின் கதைக்கு, பாடலுக்கான சூழலுக்கு, பாடல் காட்சிகளில் தோன்றும் நாயகன் மற்றும் நாயகிக்கு என பல நிர்பந்தங்களுக்கு உட்பட்டே இசையமைக்க வேண்டியிருக்கிறது. சுருங்கச் சொன்னால் ஒரு இசையமைப்பாளரின் முழுமையான பாண்டித்தியம், இசை ஆற்றல் திரை இசைப் பாடல்களில் வெளிப்படுவதில்லை ஆனால் தனி ஆல்பம்? அது அப்படி அல்ல.
இசையமைப்பாளரின் முழு கற்பனைத் திறன் அதில் வெளிப்படும். அவரால் பரிசோதனை முயற்சிகளை செய்ய முடியும். எல்லைகள் அற்ற வெளியில் பிரயாணித்து சிகரம் தொடுதல் போன்றது. எந்தவொரு சமரசமும் செய்யத் தேவையில்லாத களம் அது.

இப்போது உங்களுக்கு என் ஆர்வத்திற்கான காரணம் விளங்கியிருக்கும்…

கேஸட்டில் உள்ள ஒவ்வொரு இசைத் தொகுப்பையும் தனித்தனியாக விவரிக்க வேண்டுமெனில் “How to name it” என்னும் தலைப்பில் நான் தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கும் என்பதால் அந்த ஆல்பத்தில் என்னை மிக மிகக் கவர்ந்து பித்து பிடிக்க வைத்த ஒரு இசைக் கலவையை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

முதல் முறை அந்த அடை மழை தணிந்து தூவானமான நாளில், மாலை நேரத்தில் (என்ன ஒரு ரம்மியமான சூழல் பாருங்கள்!) கேட்கும் போது என் மனதில் பட்டது…
“இந்த இசையை ஒரு பிரம்மாண்டமான நதிப் பாலத்தைக் கடந்து பிரயாணிக்கும் போது கேட்டு லயித்துக் கொண்டு நதியைப் பார்த்தபடி கடக்க வேண்டும்” என்று!
இன்று வரை அந்த ஆசை நிறைவேறவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு மின்சார ரயிலில் பயணம் செய்தபடி அந்த ஆல்பத்தை, குறிப்பிட்ட அந்த இசைக் கலவையைக் கேட்டுக் கொண்டு பயணித்தேன்.
எதிரே சாளரம் வழியே கடக்கும் பல விதமான காட்சிகளை கவனிக்க ஆரம்பித்தேன். ரயில் நிறுத்தப் பலகைகளில் அருகருகே அமர்ந்திருந்தாலும் காத்திருக்கும் சக பிரயாணியிடம் பேசாமல் அலைபேசியைத் துழாவும் ஜனம், ஆள் இல்லாது தனித்து உடன் வரும் தண்டவாளங்கள், பெரிய காம்பவுண்ட் சுவர் இடையே எழும்பி இருக்க இந்தப் பக்கம் ரயில் செல்லும் பாதை அந்தபக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புகள், சொல்லி வைத்தது போல் அனைத்தும் குடியிருப்புகளில் பின்பக்கமாக பால்கனி கூட இல்லாது காட்சி தரும் வீடுகள், இன்னொரு புறம் குடிசை வீடுகள். ஒரு ஆள் ஓங்கி அடித்த வலியால் அழுதபடி கடக்கும் சிறுவன்… கலவையான காட்சிகள், உணர்வுகள் அனைத்தையும் பார்வைக்கு மட்டுமல்லாது அதன் ஊடே செவியில் பாயும் இசையும் வெளிப்படுத்த, ஒரு மாறுபட்ட அனுபவம்.

இந்த இசைப் பிரவாகத்தில் வயலின் இசைக்கருவியே பிரதானம். எட்டு நிமிட இசைக் கோர்ப்பில் ஒவ்வொரு நொடியிலும் அவரின் மேதமை. அணு அணுவாக ரசித்து அதில் பயணித்தால் போதும். யாராக இருந்தாலும் அதை உணர முடியும்.
முக்கியமாக இசை 5.20 கட்டத்தை உற்று கவனித்து கேட்கத் துவங்குங்கள். வயலின் மட்டுமல்ல அத்தோடு இணைந்து பரிணாம காட்டும் ட்ரம்ஸ் இசைக் கருவியும் சிகரத்தை நோக்கி முன்னேறும்.

7.10 – இதிலிருந்து இசை முடியும் வரை மிக மிக கவனமாக கேளுங்கள். ஒரு பக்கம் வயலின், இன்னொரு பக்கம் ட்ரம்ஸ் இரண்டும் சளைக்காது களமாடும். ஒரு இசை மேதையின் தேர்ந்த இசை உன்னதத்தின் உச்சமது. ஜுகல்பந்தி என்று சொல்லி வெளிவரும் பிற விஷயங்கள் எல்லாம் சம்பிரதாயமானது தான். உச்சஸ்தாயியில் பாடகர்கள் பிசிறில்லாது ஆலாபனை செய்வதைக் கேட்டு நாம் பல தருணங்களில் வியந்திருக்கிறோம் ஆனால் வயலின் உச்சஸ்தாயியில் ஸ்ருதி தப்பாது இசையாக ரீங்காரமிடுவது இதில் தான்! ஈசனின் திருவடியைக் கண்ட தருணத்திற்கு ஒப்பானது அது.
எதை ஸ்லாகிக்கிறேன் என்று சொல்லவில்லை இப்போது சொல்லிவிடுகிறேன்.

ஆல்பம் : How to name it
அந்த இசை : Don’t Compare

கேட்க விரும்புபவர்கள் இக்கொழுவியை சொடுக்குங்கள் :

பொருத்தமான தலைப்பு தானே?

அடுத்து ஒன்றுமில்லை… வளி தான் ஆம் Nothing, but wind

(தொடரும்)

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here