நதியிசைந்த நாட்களில் 3

0
82

நதியிசைந்த நாட்களில்…

பகுதி – 3

போன அத்தியாத்தில் காற்று குறித்து பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன் அதை இத்தொடரின் மற்றொரு அத்தியாயத்தில் சுவாசிக்கலாம். இப்போது மீண்டும் 80 ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலம்

அப்போது டிடியில் இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுப் பார்க்க வேண்டுமெனில் சித்ரஹார் நிகழ்ச்சி மட்டுமே அதாவது வாரமுறை இந்த நேரத்தில் என அறிவிப்புடன் வெளிவரும். தமிழ் சினிமா பாடல்களுக்கு ஒலியும் ஒளியும். பாப் இசைக்கு?

சனிக்கிழமை தோறும் காலை நேரத்தில் யூரோ டாப் என்று அரை மணி நேரத்திற்கு ஆங்கிலப் பாப் பாடல்களை ஒளிபரப்புவார்கள் ஆனால் அது வாரம் தவறாது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி கிடையாது. சில வாரம் யூரோ டாப்பை தரிசிக்க இயலாது. மாதமொரு முறை யூரோ டாப் இந்திய டாப்பாக உருமாறும். ஆம் இந்திய பாப் இசைக் கலைஞர்களின் பாடல்களை ஒளிபரப்புவார்கள்.

ஆங்கிலப் பாப் இசைக்கான சந்தை பெரிது. தேச எல்லைகள் கடந்து பல நாடுகளில் பாப் ஆல்ப ஆடியோ கேசட்டுகள் விற்பனையாகும் ஆனால் இந்திய ஆல்பங்களுக்கு சர்வதேச அளவில் பெரிய அறிமுகம் கிடையாது அப்போது தான் அந்த பாப் இசைக் கலைஞர் முதன் முதலாக டிவியின் துணையுடன் அறிமுகமானார். பொதுவாக ஒரு ஆல்பத்தில் ஆறு அல்லது எட்டு பாடல்கள் இருந்தால் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத் தான் இந்தியா அல்லாத பிற தேச பாப் இசைக் குழுக்கள் காட்சிப்படுத்துவார்கள். அதாவது விடியோ ஆனால் இந்திய அளவில் ஒரு ஆலபதிற்கு ஒரு பாடல் என்னும் விகிதாச்சார அடிப்படையில் காட்சிப்படுத்துவதே அந்த காலத்தில் பெரிய விஷயம்.

அந்தக் கலைஞரின் புகழ் பெற்ற ஆல்பத்தின் ஒரு பாடலை வீடியோ வடிவில் காண முடிந்தது. அந்தப் பாடல் பிடித்தும் போனது. சரியாக சொல்லவேண்டுமெனில் பித்து பிடிக்க வைத்தது.

தமிழ் திரைப்படக் கலைஞர்களில் டி.ராஜேந்தரை அஷ்டாவதானி என்பார்கள் அவரின் படத்தில் அவரும் திரையில் தோன்றுவார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை என பலவற்றை அவரே செய்வார். திறமைசாலி. அதே போல் இவரும் சகலகலா வல்லவர். இசையமைப்பாளர் அதாவது கம்போசர். பாடல்கள் எழுதுவார். விடியோ ஆல்பத்தில் நடிப்பார். பல்வேறு வாத்தியக் கருவிகளை முறையாக வாசிக்கத் தெரிந்தவர். பாடுவார். இசைக் கோர்ப்பு, எடிட்டிங், ஸிந்தசைசிங், மிக்ஸிங், ஒலிப்பதிவு என சவுண்ட் இன்ஜினியர் வேலை அனைத்தும் செய்வார். தனி ஆளாக இவர் ஒருவரால் ஒரு ஆல்பத்தையே கொண்டு வர முடியும்.

பூர்வீகம் கோவா மாநிலம். கோவாவின் அடையாளம் என்று தாராளமாக இவரை சொல்லலாம்.

பாடல்களில் கோவா மாநில வாசம் மனம் வீசி வெளிப்படும். புல்லாங்குழலில் இவர் காட்டும் ஜாலம் பிரமிக்கத்தக்கது. அசாத்திய பாண்டித்தியம்.

இவரின் இசை ஜாலங்களில் இரண்டே இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

முதன் முதலில் டிடியில் நான் பார்த்தது இந்தப் பாடலைத் தான்.

  1. பாம்பே ஸிட்டி :

ஆல்பத்தின் பெயர் இதுவே ஆல்பத்தில் உள்ள பாம்பே ஸிட்டி பாடல். மேற்கத்திய இசை, தேர்ந்த ஒலிப்பதிவு. பம்பாயின் முகத்தை பாடல் வரிகளில் எடுத்து சொல்லும் அசத்தலான பாங்கு. இப்போது போல் பெரிய அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் பிரமிக்க வைக்கும் மிக்ஸிங், ஸிந்தசைசிங், ஆர்கஸ்ட்ரேஷன் என அனைத்திலும் கொடியேற்றம் தான். இப்போது போல் சகஜமாக பிடித்த பாடலைக் கேட்கும் வாய்ப்பு அப்போது இல்லை. பாம்பே ஸிட்டிக்கு போக முடியுமா? ச்ச பார்த்து கேட்க முடியுமா என்று ஒவ்வொரு சனிக்கிழமை காலைப்பொழுதுகளில் டிவி பெட்டி முன் பரிதவிப்புடன் காத்திருப்பேன்.

  1. ஃப்ளூட் ஸாங் :

இசை அல்ல பாடல் தான் புல்லாங்குழல் பாடல் என்று தான் தலைப்பு. குழல் தவழும், தத்தி தடுமாறி நடக்கும், தெளிவாக நடக்கும், வேக நடை போடும், ஓடும், தாவும், குதிக்கும், ஆர்ப்பரிக்கும், நடனமாடும், சுழலும்… சகலமும் குழல் இசையில் கொண்டு வந்து நம்மை மிரள வைக்கும் அனுபவத்தை இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நாம் உணர முடியும்.

இதையும் டிடியில் தான் ஓரிரு முறை கேட்டேன்.

தனூர் மாத சமயத்தில் கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களின் தரங்கிணி கேஸட் நிறுவனம் வெளியிடும் ஐயப்ப பக்திப் பாடல்கள் ஆல்பம் வருடந்தோறும் வெளிவருவது அப்போது வாடிக்கை. ஒரு முறை எஸ்விகே ஆடியோ சென்டருக்கு அம்மா செல்ல வழக்கம் போல் பாய் குறிப்பறிந்து அம்மாவிடம் ஜேசுதாஸ் வெளியிட்ட அந்த வருட ஆல்பத்தைத் தந்தார். அருகிலிருந்த அக்கா என்னைப் பார்த்து கேஸட்டுகள் அடுக்கப்பட்ட ஒரு ரேக்கைக் காட்டி உனக்குப் பிடிச்சது அங்க இருக்கு பாரு என்றார்.

பார்த்தவுடன் அம்மாவிடம் அடம் பிடித்து ஒற்றைக் காலில் நின்று அந்தக் கேஸட்டைக் கவர்ந்தேன். அப்போதே அதன் விலை ரூபாய் ஐம்பது. வீட்டில் இருந்த பிபிஎல் ஸ்டீரியோ டேப் ரெக்கார்டரில் கேட்டுருக்கிறேன். வாக் மேனில் கேட்டிருக்கிறேன். அடுத்து ஆம்ப்ளிஃபையர், வூஃபர், ட்வீட்டர் போன்ற அஸம்பெள்ட் வஸ்துக்களின் துணையுடன் அதே டேப் ரெக்கார்டரில் கேட்டிருக்கிறேன். அடுத்து மெட்ராஸ் வந்த பின் வாங்கிய ஆடியோ சிஸ்டமில் கேட்டிருக்கிறேன். மொபைலில் தரவிறக்கம் செய்து கேட்கிறேன். லேப்டாப்பில் சேமித்து வைத்தும் கேட்கிறேன். அவ்வபோது யூ டியூப்பில் மும்பை ஸிட்டி என்றும் கேட்கிறேன் ஆனால் பாம்பே ஸிட்டி போல் தாங்கள் வரிகளை மாற்றி மும்பை என்று பாடியது ஏனோ மனதுக்கு நெருக்கமாக இல்லை.

மாறாது அதே போல் ஜீவித்திருக்கும் வரிகளற்ற புல்லாங்குழல் பாடல் அப்படியே மனதை ஆட்டுவிக்கிறது.

தற்போதைய வடிவில் உள்ள மும்பை ஸிட்டி பாடலைக் கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=4pPlosSE4Bs

புல்லாங்குழல் பாடலைக் கேட்க : https://www.youtube.com/watch?v=6MXzO45pTb8

அவர் அவர் என்று நான் குறிப்பிட்ட இசை ஆளுமையின் பெயர் ரெமோ ஃபெர்ணான்டஸ் என்று தனியாக சொல்லவும் வேண்டுமா?

(தொடரும்)

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here