நதியிசைந்த நாட்களில் 4

0
52

நண்பர்களுக்கு வணக்கம்.

“முகங்கள்” புத்தக வெளியீடு தொடர்பான வேலைகள், புத்தக வெளியீடு, சென்னை புத்தகக் கண்காட்சி போன்றவற்றால் தொடரைத் தொடர்ந்து எழுத முடியாமல் ஒரு இடைவெளி. இந்த வெள்ளி முதல் (01/02/2019) “நதியிசைந்த நாட்கள் இனி தொடர்ந்து இசைக்கும்.

பகுதி – 4

PNG|690x366

போனி எம், இளையராஜாவின் சினிமா அல்லாத இசை, ரெமோ ஃபெர்னாண்டஸ் என்று முந்தைய அத்தியாயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு வரிசை போல் பிரதிபலிப்பதால் வரிசை முறையை உடைக்க வேண்டியிருக்கிறது. முன்னமே சொன்னது போல் திரைப்பட இசையைத் தாண்டி ஒரு சாதாரண ரசிகன் ரசித்த மாற்று இசை, பாடல்கள் பற்றியது தான் இந்தத் தொடர். இத்தளத்தில் நான் எழுத விரும்புவது “ஹிந்தி பாப்” பற்றி. உண்மையில் சொல்லவேண்டுமெனில் இந்த அத்தியாயத்திலிருந்து தான் தொடரின் நோக்கமே துவங்குகிறது. இனி களம்.

ஹிந்தி பாப் – நகர வாழ்க்கை என்னும் சூழலில் பதின்பருவத்தை 90 மற்றும் 90 களின் இறுதியில் கழித்தவர்களால் ஹிந்தி பாப், எம் டிவி, வி சேனல் போன்றவற்றை மறக்கவே முடியாது. தமிழகத்தில் அவ்வளவு லயிப்பு மக்களிடையே இல்லையெனினும் தமிழகம் தாண்டி பிற மாநிலங்களில் இந்த ரகப் பாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் ஹிந்தி பாப் பாடல்களை ரசித்து சுகித்தவர்கள் பலர்.

இப்போதும் அந்தப் பாடல்களுடைய யூ டியூப் கொழுவியை அழுத்தி பாடல்களைப் பார்த்து கேட்டு ரசித்துவிட்டு கீழே மக்களின் பின்னூட்டங்களைப் பாருங்கள். ஒவ்வொருவரின் நோஸ்டால்ஜிக் அனுபவமும் வெளிப்படும் அத்தோடு அந்த கானக்(கனா)காலம் இப்போது இல்லையே என்ற பரிதவிப்பையும் உணர முடியும்.

திருச்சியில் வசித்த அந்த 90 களின் மத்திம இறுதிக் காலத்தில் ரஹ்மான் இசையமைத்த படப் பாடல்கள் என்றால் ஒரிஜினல் கம்பெனி கேஸட் வாங்குவது என் பழக்கம். பிற இசையமைப்பாளர்களின் தமிழ்த் திரைப்படப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து கேஸட்டில் பதிவு செய்து கேட்பேன்.

ஹிந்திப் பாப் பாடல்களுக்கு எங்கு செல்வது? திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே சோனா மீனா தியேட்டர் செல்லும் சாலையில் ஒரு ரெக்கார்டிங் சென்டர் இருந்தது. ஏஸி வசதி கொண்டது. அங்கு ஹிந்தி பாப் பாடல்களைப் பதிவு செய்யலாம் என்ற தகவல் மனதைப் பரவசப்படுத்தியது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது மட்டுமே பார்த்து கேட்டு ரசிக்கக் கூடிய பாடல்களை கேஸட்டில் பதிவேற்றி விரும்பும் போதெல்லாம் டேப் ரேக்கார்டரிலும், வாக் மேனிலும் கேட்க முடியும் என்பது எப்படியொரு வாய்ப்பு. நான் அவ்வாய்ப்பை தவற விடவில்லை. அந்த ரெக்கார்டிங் சென்டர், அதில் பணிபுரியும் முக்கியப் பொறுப்பாளரான அந்தப் பெண்மணி (இவரைக் குறித்து “முகங்கள்” தொகுப்பில் தனியாக ஒரு அத்தியாயத்தில் விரிவாக எழுதி இருக்கிறேன்) என அனைத்தும் என் தேவைகளைப் பூர்த்தி செய்தது.

ஒரு பாடலை சொன்னால் அந்தப் பாடல் இடம் பெற்ற ஆல்பத்தின் பெயரை அந்தப் பெண்மணி சரியாக சொல்வார். ஒரு ஆல்பம் பெயரை சொன்னால் அதில் உள்ள பாடல்கள் என்ன, நான் பார்த்த விடியோ பாடல் எது என்பதை அந்தப் பெண்மணி உடனே எடுத்து சொல்வார். சில சமயம் பாடலின் துவக்க வரி தெரியாது பாடல் இடையே உள்ள வரியை சொல்லி புலம்பினாலும் அது என்ன பாடல் என்பதை எடுத்து சொல்லி புலம்பலைப் போக்குவார். குறிப்பிட்ட பாடலை கடையில் உள்ள பெரிய ஆடியோ செட்டில் ஸ்பீக்கர்கள் வழிய வழிய ஒலிக்கவிட்டு “இது தானே?” என்று முகம் கொள்ளா சிரிப்புடன் கேட்பார்.

அந்த சூழலில் இந்தப் பாடலை தொலைக்காட்சியில் பார்த்த உடனே மனம் பித்தாகிப் போனது. பஞ்சாபி பாங்க்ரா ஸ்டைலில் பக்கா வெஸ்டர்ன் பீட் கலந்த சிறப்பான பாடல். காட்சியமைப்பும் அட்டகாசமாக இருக்கும். குடியிருக்கும் ஏரியா நண்பர்கள் என்று சிலர் உண்டு. அதில் ஒரு பெண் எனக்கு முக்கியமானவர். அவரின் பூர்வீகம் கோவா ஆனால் தமிழ் ஸ்பஷ்டமாகப் பேசுவார், தமிழைத் தமிழ் என்றே சொல்லுவார். தமில் என்று உச்சரிக்க மாட்டார். என்னைப் போல் அவருக்கும் இந்தப் பாட்டு பிடித்துப் போனது. இந்தப் பாட்டு என்றில்லை, பாடல்கள் தொடர்பான பிடித்தமான ரசனையில் இருவருக்கும் பெரும்பாலும் குணாதிசயம் ஒத்துப்போகும். இந்தப் பாட்டில் தோன்றும் முக்கிய ஆண் மாடலான ஜாஸ் அரோரா மேல் அவருக்கு அப்படியொரு “க்ரஷ்” அவர் என்றில்லை அந்தக் காலகட்டத்தில் பல பதின் பருவப் பெண்களுக்கு அவர் மீது பித்து உண்டு.

ஆண் மாடல், சினிமா பிரபலங்களில் இருவர் மீது எனக்கு அப்போது (இப்போதும் தான்) பயங்கர பொறாமை. ஒன்று : ஜாஸ் ஆரோரோ மற்றொருவர் : அப்பாஸ். பெண் ரசிகைகள் இவர்கள் இருவருக்கும் அதிகம் என்பதால் பொறாமை என்று நீங்கள் நினைத்தால்? ஆம் அதே தான் அது தான் உண்மை.

இருவரும் அந்தப் பாட்டைக் கொண்டாடித் தீர்த்தோம். அதே ரெக்கார்டிங் சென்டரில் பதிவு செய்தோம். எப்போது கேட்டாலும் ஒரு துள்ளல் உணர்வை அப்பாடல் கொடுக்கும்.

இப்பொது போல் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்த ஹீரோ கிடையாது. இயல்பான நாயகன். பாட்டில் தோன்றும் நாயகிக்கும் எக்கச்சக்கமாக பெயிண்ட் அடித்து வெள்ளைத் தோல் ஆக்க மாட்டார்கள். அளவான மேக்கப். ஆபாசம் இல்லாத காட்சியமைப்பு.

இந்தப் பாடலிலேயே சகோதரன் சகோதரி இடையே உள்ள புரிதல், நாயகனின் காதல், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சிறியவர்கள் காட்டும் மரியாதை, பஞ்சாபிய பாரம்பரியம் என அனைத்தும் காட்சிகளாக வெளிப்படும். தற்போது உள்ளது போல் சுயமற்ற மிதமிஞ்சிய அந்நிய நாட்டுத் திணிப்புகள் இருக்காது.

யூ டியூபில் இப்பாடலை முதல் முறையாக கேட்கும் போது இழந்த எதையோ ஒன்றைக் கண்டெடுத்து பெற்றது போல் அகமகிழ்ந்து திளைத்தேன். பல ரசிகர்கள் பின்னூட்டம் செய்திருந்தனர். ஒரு பின்னூட்டம் என்னை யோசிக்க வைத்தது. உள்ளுணர்வு எதையோ எடுத்து சொன்னது. அந்தப் பின்னூட்டத்திற்கு பதிலளித்தேன். என் யூகம் பொய்க்கவில்லை அதை எழுதியவர் அந்தக் கோவா பெண் தான். இந்தப் பாடல் சிறுவயது நட்பையே மீட்டெடுத்தது என்று சொல்லலாம்.

பாடல் : குட் நால் இஷ்க் மிதா… (Gud Naal Ishq Mitha)
கம்போஸர் : பாலி ஸாகு (Bally Sagoo)

பாடலைப் பார்த்து கேட்டு ரசிக்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=EJXdBKuIFzM

பாடலைக் கேட்ட பின் அட இந்தப் பாட்டு மாதிரியே ஜெய் ஹிந்த் படத்துல… என்று யோசிக்கிறீர்களா? ஆம் இதில் இருந்து “சுட்டது” தான் அது!

இப்போது அலைபேசியில் பாடலை தரவிறக்கம் செய்து கேட்கிறேன் அந்தக் கால நினைவுகளுடனும் இந்தக் காலத்தில் வயதாகிவிட்டதே என்ற வயோதிக அங்கலாய்ப்புடனும்!

பாலி ஸாகு பற்றி எதுவுமே சொல்லவில்லை என்கிறீர்களா? அவர் பற்றியும், அவரின் இசை ஆளுமை குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here