ரிமீக்ஸ் என்பதும் திரைப்படப் பாடல்களில் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. துவக்கத்தில் திரைப்படப் பாடல்களை இவ்வடிவத்தில் மாற்றி இசைத்தாலும் அது தனி கேஸட்டாகத் தான் வெளி வந்தது. தற்போது திரைப்படங்களிலேயே அந்தப் பாடல்களும் இடம் பிடிக்கத் துவங்கிவிட்டன.
ரீமிக்ஸ் என்றாலே ஆதிமூலப் பாடலை சிதைக்கும், சீரழிக்கும், கொடூரமான அனுபவத்தைத் தரும் என்பதே பொதுவான அபிப்பிராயமாக ஜனங்களில் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டது. இதை யாராலும் மறுக்க முடியாது.
ரீமிக்ஸில் சில அடிப்படை விஷயங்கள் உள்ளன :
• எந்தப் பாடலை நாம் வடிவம் மாற்றுகிறோமோ அதைப் பாடிய பாடகரின் குரல் மிக முக்கியம். அந்தக் குரலை ஈடு செய்வது போல் சமகாலப் பாடகர்கள் இல்லை என்று ரீமிக்ஸ் பாடலை கேட்ட உடனே அனைவரும் கருத்து சொல்வார்கள்.
• இசை… ப்ரொக்ராம் செய்து வைத்த துள்ளல் ட்ரம்ஸ் இசையை பாடலில் ஸ்ருதிலயத்திற்கு ஏற்ப ஒலிக்கவிட்டு ஒப்பேற்றுவது. இதுவும் இசை ரசிகர்களுக்கு சலிப்பைத் தரும்.
• ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான தரிசனத்தை ஒவ்வொரு ரசிகருக்கும் அவரவர் புரிதல், விருப்பம், ரசனை, அனுபவம், வாழ்க்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தரும் தன்மை கொண்டது. பாடலின் ஜீவன் என்று சொல்வதை விட அந்தப் பாடலைக் கொண்டாடும் ரசிக ஜீவன்களை அழிக்காதவாறு ரீமிக்ஸ் செய்யப்பட வேண்டும். ஆம் ஜீவன் முக்கியம்.
• வரிகள் தெளிவாக கேட்பவர் காதில் விழ வேண்டும். இசை, அர்த்தமுள்ள வரிகளை கபளீகரம் செய்யக் கூடாது.
இப்படி நிறைய பட்டியலிடலாம் ஆனால் மேலே சொன்ன நான்கு விஷயங்களும் ரீமிக்ஸ் இசைக்கு மிக முக்கியமானவை.
நிறைய இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்கிறார்கள் ஆனால் எந்தப் பாடலையும் சிதைக்காமல் ஜீவன் சாகாமல் மாற்றித் தருவதில் பிதாமகன் என்று நான் சொல்வது பாலி ஸாகு அவர்களை!
பல்ஜித் சிங் ஸாகு தான் பாலி ஸாகு. புது தில்லியில் பிறந்த சீக்கியரான இவர் இங்கிலாந்து தேசத்தில் உள்ள பர்மிங்ஹாமில் தான் பால்ய காலத்தில் வசித்தார். இசைத்துறைக்கு வந்ததிலிருந்து ரீமிக்ஸ் மேல் தீராத காதல். அந்த தளத்தில் வளையவரத் துவங்கினார். முறையாக சாஸ்திரீய சங்கீதம் கற்றவர்.
நஸ்ரத் ஃபதே அலி கான் சாஹேப், ஆஷா போஸ்லே போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
ஆஷா போஸ்லே அவர்கள் பாடிய அட்டகாசமான ஹிட் பாடலான சுராலியா பாடலை இவர் ரீமிக்ஸ் செய்த போது தேசமே இவரைத் திரும்பிப் பார்த்தது. பிபிஸி ரேடியோ ஒன் அலைவரிசை அப்பாடலை ஒலிபரப்பியதோடு பாலி ஸாகு பற்றி ஒரு தனி நிகழ்ச்சியும் நடத்தி அவருக்கு புகழாரம் சூட்டியது.
புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்ஸன் இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அவர் தம்முடன் இணைந்து இசை தொடர்பான பணிகளை செய்ய அழைத்த இசைக் கலைஞர் பாலி ஸாகு!
அமிதாபச்சனுடன் இணைந்து இவர் கொண்டு வந்த எபி பேபி (Aby Baby) ஆல்பமும் மக்களை வசியம் செய்தது. அந்த ஆல்பத்தில் கபி கபி மேரே தில்… பாடலை வேறு த்வனியில் ரீமிக்ஸ் செய்து மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். ஏக் ரஹேன் பீர்… பாடல் அப்போதைய ஹிந்தித் திரைப்பட ஹிட் பாடல்களுக்குப் போட்டியாக சவால் விடும் விதத்தில் ஹிட்டாகி மக்களை கொள்ளை கொண்டது.
பாலி ஸாகு எங்கு பிறந்தார்… என்ன செய்தார்… எப்படி இசைத்துறைக்கு வந்தார்… இவையனைத்தும் அவரின் இசை ஆளுமையை நுகரத் துவங்கிய பின் விசாரித்து அறிந்தது. அவர் குறித்த தகவல்களை விட அவரின் இசை தந்த நோஸ்டால்ஜிக் அனுபவம் அதிகம். அவற்றில் மூன்று பாடல்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். மூன்றும் ஒரே ஆல்பத்தில் இடம் பெற்றவை… ரிஷி மூலமான பாடலைப் பாடியவர் கிஷோர் தா. ரீமிக்ஸ் பாடலை கிஷோர் தாவின் ஆளுமையை சிதைக்காது முறையே பாடியவர்கள் ஷங்கர் மஹாதேவன் மற்றும் ஷான் (இரு பாடல்கள்)
- ஸாம்னே ஏ… (Samne Yeh Kaun aaya…)
இதை எம் டிவி… வி சேனல்… ஹிந்தி பாப் பொற்காலத்தில் ஒரு சனிக்கிழமை மதியத்தில் தான் கேட்டேன். ரீமிக்ஸ் வடிவப் பாடல் தான் எனக்கு முதலில் செவி வழியேயும் கண் வழியேயும் பரிச்சயமானது. ஷங்கர் மஹாதேவன் வழக்கம் போல் பிசிறின்றி சர்வ சாதாரணமாக உச்ச ஸ்தாயியை தொட்டுப் பாடி அசத்தி இருப்பார். அடுத்து காட்சியமைப்பு… உடை, பின்புலம், சிகை அலங்காரம், காட்சி நிறம் என சகலமும் மத்திம எழுபதை (70’s) நினைவுபடுத்தும். ஏனோ பாட்டைக் கேட்டவுடன் மிகவும் பிடித்துப் போனது என்பதை விட மனம் பித்தாய் போனது!
உடனே அம்மாவிடம் சென்று பாடலை சொன்னேன். “என்ன பாடல்?” என்றார் சரியாக சொல்லத் தெரியவில்லை. “எம் டிவி ஃப்ரெஷ்னு போடறான். திரும்ப வரும். பாட்டு ஓடும் போது கூப்பிடறேன்” என்றேன்.
பாடல் மீண்டும் திரையில் ஓடும் போது அம்மாவும் ரசித்துப் பார்த்தார். தன் பழைய அனுபவங்களை ரீவைண்ட் செய்து கொண்டது அவர் முகத்தில் தெரிந்தது. பாடல் முடிந்ததும் அவர் சொன்னது.
“உனக்கு இந்தப் பாட்டு பிடிக்கலன்னா தான் அதிசயம், உன் கிஷோர் தா பாடின பாட்டை ரீமிக்ஸ் செஞ்சுருக்காங்க. ரந்தீர் கபூர் நடிச்ச படம்னு நினைக்கறேன். படம் பேர் சரியா நினைவில்லை. ஊருல இருந்தா தெரியும், இங்க தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு, என்னத்த சொல்ல” என்றார்.
1972 ஆம் ஆண்டு ரிலீஸான ஜவானி திவானி படப் பாடல் அது. இசை : ஆர்.டி பர்மன், பாடலை எழுதியவர் : ஆனந்த் பக்ஷி, ஹீரோ : ரந்தீர் கபூர், பாடியது : கிஷோர் தா… இந்தத் தகவல்களை என்னிடம் சொன்னது அந்த ரெக்கார்டிங் சென்டர் பெண்மணி.
பாடலுக்கான கொழுவி :
https://www.youtube.com/watch?v=0iSrBZUKfuU
ஒரிஜினல் வர்ஷன் மற்றும் ரீமிக்ஸ் இரண்டையும் நன்கு கவனமாக கேளுங்கள். ஜீவன் சாகாமல் என்பதற்கான அர்த்தத்தை பாலி ஸாகு நமக்கு உணர்த்துவார்.
இருப்பினும் கிஷோர் தா ஆளுமை… அது வேற லெவல், யாராலும் நெருங்க முடியாது.
- தில் க்யா கரே (Dil Kya Kare…)
ஜூலி என்றொரு ஹிந்தித் திரைப்படத்தில் கிஷோர் தா பாடிய பாடல். ராஜேஷ் ரோஷன் அவர்கள் இசையமைத்தது (ஹ்ரிதிக் ரோஷனின் தகப்பனார்) ஏற்கனவே பால்யத்தில் தூர்தர்ஷனில் இந்தப் பாடலைப் பார்த்துக் கேட்ட பரிச்சயம் உண்டு. கிஷோர் தா வழக்கம் போல் மனதுள் ஆழமாக குடி கொள்ளும் விதத்தில் பாடியிருப்பார் ஆனால் காட்சியமைப்பு சொல்லிக்கொள்ளும் விதத்தில் இருக்காது. கிஷோர் தாவின் குரலுக்கேற்ற பாவத்தை தன் உடல் மொழியிலோ, முக பாவங்களிலோ பாடலில் தோன்றும் நாயகன் வெளிப்படுத்தி இருக்க மாட்டார். பாடலின் ஒட்டு மொத்த காட்சியமைப்பு “பிற விஷயங்களை” மட்டும் நன்கு “வெளிப்படுத்தி” இருக்கும்.
இதன் ரீமிக்ஸ் வடிவத்தையும் எம் டிவியில் தான் பார்த்துக் கேட்டேன். முதல் முறை பார்த்து கேட்டவுடனேயே மனதை உலுக்கி எடுத்துவிட்டது. பாடகர் ஷான் கிஷோர் தாவின் ஆளுமைக்கு பங்கம் வராமல் உணர்வுகளை வெளிப்படுத்தி பாடி இருப்பார். அடுத்து பாடலைப் படமாக்கிய விதம். ஒரிஜினல் வர்ஷனை விட அற்புதமாக கவித்துவமாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
நாயகியைத் தேடி பாடல் முழுதும் நாயகன் பல இடங்களுக்கு பயணிப்பார். இறுதி கட்டத்திற்கு முன்பு வரை நாயகியின் நினைவுடன் நாயகன் தேடிச் செல்வதால் நாயகியின் புகைப்படத்தை கறுப்பு வெள்ளை நிறத்தில் பாடலின் இடையே காட்டிக் கொண்டிருப்பார்கள். இறுதியில் நாயகி நிழலின்றி நிஜமாக வளைய வரும் போது கறுப்பு வெள்ளை மறைந்து வண்ணமயமாகும்.
ஒரு பத்தியில் இந்தக் காட்சி கவிதையை விவரிக்க என்னால் இயலவில்லை பார்த்து கேட்டு உணர்பவர்களால் மட்டுமே அவரவர் சிந்தனைக்குத் தகுந்தவாறு ரசிக்க முடியும்.
இந்தப் பாடலையும், பாடல் இடம்பெற்ற ஆல்பத்தில் உள்ள பிற பாடல்களையும் ஒரு டிடிகே 90 கேஸட்டில் வழக்கமான ரெக்கார்டிங் சென்டரில் பதிவு செய்தேன்.
அந்தக் கடைக்குப் போய் அங்கிருந்த பெண்மணியிடம் பாடல்கள் எழுதிய பட்டியல் காகிதத்தைத் தந்தவுடன் அவர் கேட்டது “இன்ஸ்டன்ட் கர்மா ஆல்பம் ஸாங்ஸ் நிறைய இருக்கே”
“ஆமாங்க”
அவர் என்னை உற்று நோக்கினார். பொதுவாக எனக்கு ஜீன்ஸ் பேண்ட் அணியப் பிடிக்காது. ராஜேஸ்வரி என்ற பாப் இசைக் கலைஞரின் விசிறியாக நான் அப்போது இருந்ததால் அவர் நடித்த ட்ரிகர் ஜீன்ஸ் விளம்பரம் பார்த்து கறுப்பு மற்றும் நீல நிறம் என இரண்டு ஜீன்ஸ் பேண்ட்கள் வாங்கி வைத்திருந்தேன். இருப்பினும் அவற்றை அதிகம் அணிந்ததில்லை. இந்தப் பாடலைப் பார்த்த பின் நீல நிற ஜீன்ஸ், சற்று மஞ்சள் நிறம் பூசிய சென்டர் ஃப்ளீட் வைத்த சட்டை, ப்ரில் க்ரீம் ஜெல் பூசிய கேசம் என்று வெகு நாட்கள் திரிந்தேன். அதே கோலத்தில் ரெக்கார்டிங் செண்டருக்கும் சென்றதால் அப்பெண்மணி என்னைப் பார்த்து “தில் க்யா கரே” ரொம்ப பாதிச்சுருக்கு போல, கைல கோட்டு மட்டும் மிஸ்ஸிங்” என்றார்.
பாடலுக்கான கொழுவி :
https://www.youtube.com/watch?v=jtP1JKdgEik
இப்போதும் இந்த ஆல்பத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் துணையாக அலைபேசியில் சேமிக்கப்பட்டு என்னுடன் பயணிக்கின்றன.
- ஹம் பேவஃபா (Hum Bewafa…)
இந்தப் பாடலும் எனக்கு முன்பே பரிச்சயமானது தான். கிஷோர் தா அவர்கள் ஷாலிமார் என்ற படப் பாடலுக்காக பாடியது. இசை : ஆர்.டி. பர்மன். ஒரிஜினல் வர்ஷனில் படத்தில் நாயகனாக நடித்த தர்மேந்திராவுக்கு க்ளோஸ் அப் வைத்து பாடலைக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். வழக்கம் போல் அவரும் கிஷோர் தாவின் குரல் வெளிப்படுத்திய உணர்வை துளி கூட வெளிப்படுத்தாது ஒப்புவிக்கும் போட்டியில் பங்கு பெறும் மாணவன் போல் பாவமின்றி வாயசைப்பார்.
ரீமிக்ஸ் வடிவில் மிக கவனமாக நாயகனுக்கு அதிக க்ளோஸ் அப் வைக்காமல் காட்சியமைத்து இருப்பார்கள்.
ரீமிக்ஸ் பாடலானது துவங்கும் போது ஒலிக்கும் இசையே ஒரு தேடல் உணர்வை நமக்குள் புகுத்தும். அடுத்து ஷான் அவர்களின் குரல். “Humko mili uski sazaa
Hum jo khata kar naa sake…” என்ற வரிகளை கிஷோர் தா பாடும் போது எப்படி ஒரு உருக்கதைத் தருவாரோ அதே போல் சிரமப்பட்டு உருகி உருகி பாடியிருப்பார்.
ஆத்மார்த்தமாக உள்ளம் கசிந்து நாமும் உருகி லயிக்கும் உணர்வை இது வரை வேறெந்த பாடலும் தந்ததில்லை.
ஒரிஜினல் வர்ஷன் தந்த அதே பரவசம் ரீமிக்ஸிலும்.
பாடலுக்கான கொழுவி :
https://www.youtube.com/watch?v=_nohNsgEsIM
ரீமிக்ஸ் இசையைக் கையாள்பவர்கள் பாலி ஸாகு வை அவதானிப்பது அவசியம்.
இத்தொடர் எழுதத் துவங்கி இது ஐந்தாம் அத்தியாயம். எழுதும் போதே சொல்ல முடியாத விதத்தில் மனதில் தோன்றுவதை எழுதுவதற்குள் மனம் அலைபாய்ந்து பல எண்ணங்களுக்குள் சங்கமிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
அந்தக் காலம் மீண்டும் வரப் போவதில்லை. ரிப்பீட் மோடில் நோஸ்டால்ஜிக் பாடல்களைக் கேட்டாலும் கடந்த காலம் நிழலாய் பலவீனமாக அகத்துள் காட்சிகளை ஓடவிடும் அதை மனதுள் தரிசித்து பெருமூச்சொன்றை விடலாம் அவ்வளவு தான். பாடலுக்கு மட்டுமல்ல. இது வாழ்க்கைக்கும் பொருந்தும் போல!
(தொடரும்)