நதியிசைந்த நாட்களில் 8

0
92

Oh ho Kaizala…

பிடித்தமான இன்னொரு ஹிந்தி பாப் இசைக் கலைஞரைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். பொதுவாக ஒருவரைப் பற்றி இத்தொடரில் எழுதும் போது துவக்கத்தில் அவரைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுவேன். அடுத்து அவரது ஆல்பங்கள் பற்றி எழுதுவது என் வழக்கம். இந்த அத்தியாயத்தின் நாயகர் குறித்து எழுதுவதில் சின்ன மாற்றம். இசை நாயகர் பற்றிய விஷயங்களை அடுத்த அத்தியாயத்தில் எழுத முடிவு செய்திருக்கிறேன். இந்த அத்தியாயத்தில் அவர் எனக்கு எப்படி செவி வழி மூலம் பரிச்சயமானார் என்பதை சொல்கிறேன்.

நாயகர் – லெஸ்ஸி லூவிஸ் (Lesie Lewis)

இந்த அத்தியாயம் அவர் ஹரிஹரனுடன் இணைந்து கலக்கிய கலோனியல் கஸின்ஸ் (Colonial Cousins) பற்றியது.

லெஸ்ஸி அவர்களை என் போன்றோர் அறியக் காரணமாக இருந்த கர்த்தா ஹரிஹரன். நம்மில் பலருக்கு ஹரிஹரன் அவர்களின் குரல் “தமிழா தமிழா” என்னும் ரோஜா படப் பாடல் மூலம் அறிமுகமாகியிருக்கும் ஆனால் எனக்கு அவர் பரிச்சயமானது கஸல் மூலம்.

உஸ்னுவா… (Usnuvaa) ஷராப்… (Sharaab) போன்ற கஸல் பாடல்களைக் கேட்டு கஸல்களின் சுல்தான் (Sultan of Ghazhal) என்று எண்பதுகளின் இறுதியிலேயே கொண்டாடத் துவங்கி இருந்தேன். அடுத்து ஹிந்துஸ்தானியில் அவரின் பாண்டித்தியம் கண்டு பிரமித்து அந்த காந்தக் குரலோனின் பித்தனாகிப் போனேன்.

கஸல், ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் என சகல பாரம்பரிய சங்கீத வடிவங்களிலும் அவரின் ஆட்சி நீக்கமற நிறைந்திருந்தது. எனவே அவரின் முகம் கண்டாலே துள்ளிக் குதிக்கும் என் போன்ற பக்தர்கள், லெஸ்ஸியும் அவரும் இணைந்த புகைப்படத்துடன் கூடிய மேக்னா ஸவுண்ட் நிறுவனம் வெளியிட்ட கலோனியல் கஸின்ஸ் கேஸட்டை வாங்காமல் இருப்போமா? அதில் இடம் பெற்ற பாடல்களைக் கேட்காமல் இருப்போமா? வாங்கினேன்… கேட்டேன்… லயித்தேன்…

இந்த ஆல்பத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள், நிறைய சர்வதேச விருதுகளை வென்ற ஆல்பம் இது. 1996 ஆம் ஆண்டு மழைக்கால அக்டோபர் மாதம் வெளியாகி ஹிட் அடித்தது.

கிருஷ்ணா நீ பேகனே… ச நி த ப…, இந்தியன் ரெயின்… போன்ற ஹிட் பாடல்கள் தேசம் எங்கும் திசை, மொழி பேதமின்றி ஒலித்தது. இந்த ஆல்பத்தில் உள்ள கிருஷ்ணா பாடலின் காட்சியமைப்பும் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தியன் ரெயின் பாடல் இசையமைப்பாளர் தேவாவால் சமைக்கப்பட்டு உன்னி கிருஷ்ணன் பாடி தமிழ் படமொன்றில் வெளி வந்தது.

“First impression is the best impression” என்று சொல்வார்கள். இந்த ஆல்பத்தில் நான் முதலில் கேட்ட பாடலானது என் ஆயுட்கால Song anthems களில் ஒன்றாக நீடிக்கிறது.

Feel Alright

கேஸட்டை வாங்கியவுடன் பார்க்கும் போது இந்த வரிகள் சடாரென ஈர்த்தது. SVK ஆடியோ சென்டர் கடையிலேயே பாயிடம் இப்பாடலை வைக்க சொல்லி கேட்க அவர் சரியாக ரீவைண்ட் செய்து பாடலை செவிக்குள் நுழைக்க… ஏராளமான ஸ்பீக்கர்களில் தாராளமாக கீதம் வழிந்தோடியது வெளியே அப்போது பெய்த சாரல் மழையால் தெருக்களில் நீர் வழிந்தோடுவது போல!

அப்புறமென்ன? வழக்கம் போல் இந்தப் பாடலும் ஆட்சி செய்யத் துவங்கியது.

இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு திரைப்பட இசையமைப்பாளர்கள் பல்வேறு மாநில பாஷைகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதை நாம் காண்கிறோம். இதில் சலீல் செளத்ரி அவர்களை ஒரு பரிபூரணமான இசை ஜாம்பவான் என்று சொல்லலாம். அந்நிய நாட்டு இசையை நகலெடுத்து அவர் இசையமைத்ததில்லை. கிழக்கு வடகிழக்கு மாநிலங்களில் தவழும் நம் பாரம்பரிய இசையை அவர் தன் திரை இசையில் அதிகம் பிரயோகிப்பார்.

மதுமதி என்றொரு ஹிந்திப்படம். திலீப் குமார் & வைஜெயந்தி மாலா அம்மா நடித்தது. என்னைப் பெற்ற அம்மா சிறுமியாக இருந்த போது வெளியான திரைப்படம் அது. அப்படத்திற்கு இசை சலீல் செளத்ரி. பாடல்களுக்காகவும் கொண்டாடப்பட்ட படம் அது. அனைத்து பாடல்களும் மெகா ஹிட்…

அப்படத்தில் பிச்சு வா என்றொரு பாடல்… பாடலின் இசை வட கிழக்கு மாநில நாட்டுப்புற பாணியில் அமைந்திருக்கும். அற்புதமான பாடல், பாடலின் காட்சியமைப்பு உன்னதம். முக பாவம், நடன அசைவுகள், நளினம், உடல் மொழி என சகலத்திலும் உயர்தரத்தின் உச்சத்தை வைஜெயந்தி மாலா அம்மா அவர்கள் தன் நடனம் மூலம் வெளிக் கொணர்ந்திருப்பார்.

அந்தப் பாடலை இவ்வளவு தூரத்திற்கு விவரிக்க காரணம், Feel Alright அதை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே! அது முழுமையான நாட்டுபுறப் பாடல் என்றால் Feel Alright கொஞ்சம் மேற்கத்திய பாணி ஒலிக்கலவை கொண்டு மெலடியை அடிப்படையாகக் கொண்டு கோர்க்கப்பட்ட பூச்சரம்.

மழை முடிந்த பின் பொழுதில் யாருமற்ற நள்ளிரவு நேரத்தில் ஒரு நகர்த்து தெருவில் நில்லுங்கள். தார்ச்சாலையில் ஈரம் இருக்கும். தெரு விளக்குகளிளிருந்தும், விடுபட்ட மரங்களிலிருந்தும் அவ்வபோது காற்றுக்கு ஏற்றவாறு நீர் தெறித்து பூமியை நனைக்கும். அதைப் பார்த்தவாறு இந்தப் பாடலைக் கேளுங்கள். நகரம் இவ்வளவு அழகானதா? என்று ஆச்சரியப்படுவீர்கள். அது தான் இப்பாடலின் பலம். நான் ரசித்து அனுபவித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். நீங்களும் அனுபவித்துப் பாருங்கள். நகரமும் வசப்படும்.

அந்தப் பாடலை கேட்டு ரசிக்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=IN1JcqKZ3mU

மதுமதி படப்பாடலையும் பார்த்து கேட்டு லயிக்க விரும்புபவர்கள் இக்கொழுவியை சொடுக்குங்கள்: https://www.youtube.com/watch?v=M0prEueTYTA

கலோனியல் கஸின்ஸ் – இந்த வெற்றிக்கூட்டணியின் இரண்டாவது ஆல்பம் “the way we do it” என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் (அதே மழைக் காலம்) வெளிவந்தது BMG crescendo நிறுவன வெளியீடு.

The way we do it… பாடல் மெலடியின் உச்சம். இந்த ஆல்பத்தில் பன்னிரெண்டு பாடல்கள். ஆல்பம் வெளிவந்த போது இதில் இடம் பெற்ற பாடல்கள் குறித்து எனக்கு அதிக பரிச்சயம் இல்லை. இந்த காலகட்டத்தில் ஹிந்தி பாப் என்றாலே அந்த ரெக்கார்டிங் சென்டர் என்று பழகி இருந்தேன். வேறு சில பாடல்களை தேர்வு செய்து இந்த ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களுடன் ரெக்கார்ட் செய்யுங்கள் என்று வழக்கமான கடையில் உள்ள அந்தப் பெண்மணியிடம் சொன்னேன். பரிச்சயம் இல்லாத ஆல்பம் குறித்து அறிவதற்காகவே நான் அந்தக் கடைக்கு மதிய நேரத்தில் செல்வேன். மூன்று மணி வாக்கில் கடையில் அதிக திரக்கு இருக்காது. கடைப் பெண்மணியும் சாப்பாட்டுக் கடையை முடித்து சற்று ரிலாக்ஸ்டாக இருப்பார். கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் நிதானமாக பதில் சொல்லுவார்.

கலோனியல் கஸின்ஸ்… மழை… நான்… இந்த மூன்றும் எப்போதும் ஒரு புள்ளியில் இணையும். நான் ரெக்கார்டிங் சென்டரில் இருந்த போதும் மழை பெய்து கொண்டிருந்தது. கண்ணாடிக் கதவு மூடியிருந்ததால் கடைக்கு உள்ளே இருந்து வெளியே மழையைப் பார்க்க முடிந்தது. மழையின் ஒலியைக் கேட்க முடியவில்லை. உள்ளே குறைவான வெளிச்சம். குளிரூட்டப்பட்ட சீதோஷ்ணம். அனைத்தும் என் அலைவரிசைக்கு ஏற்றவாறு இருந்தது.

அந்தப் பெண்மணி என்னிடம் “இந்த ஆல்பத்துல இருந்து ஒரு பாட்டை வைக்கறேன், கேளுங்க, வாவ், அருமை, கிளாஸ், சூப்பர்னு பிலாக்கனம் பாடுவீங்க” என்றார். பாடலை ஒலிக்க விட்டார்.

Rhythm of the world

இந்தப் பாடலைத் தான் அவர் எனக்காக ஒலிபரப்பினார். கலோனியல் கஸின்ஸ் என்றாலே இந்திய மொழியை ஹரிஹரனும் அந்நிய நாட்டு ஆங்கில மொழியை லெஸ்ஸி அவர்களும் பாடுவது வாடிக்கை. இது முழுமையான ஆங்கிலப் பாடல் என்பதால் ஆங்கில வரிகளை இருவரும் மாற்றி மாற்றிப் பாடுவார்கள். முதல் ஆல்பம் வந்த போதே கலோனியல் கஸின்ஸ் அல்லாத லெஸ்ஸியின் பிற ஆல்பங்களைக் கேட்ட அனுபவம் உண்டு. இருந்தாலும் இந்த ஆல்பதிலிருந்து தான் அவரின் இசை மேதமையை அறிந்து கொண்டேன். இவர் சாதாரண ஆள் இல்லை என்பதை அழுத்தமாக அவர் என்னுள் பதியமிட்டார். இப்போதும் வெளியே கொட்டும் மழையின் சத்தம் கேட்காது மழையை மட்டும் பார்த்தபடி அறைக்குள் இருக்கும் சூழலுக்குள் பிரவேசித்தால் ஏனோ இப்பாடல் நினைவுக்கு வரும். தவிர்க்கவே முடியாது. அந்தத் தருணத்தைக் கொண்டாட அப்பாடலை கேட்கவும் செய்வேன்.

பாடலைக் கேட்ட பின் அந்தப் பெண்மணி என்னிடம் “கேஸட் நாளைக்கு வாங்கிக்குங்க, இதோட வீடியோ வெர்ஷன் டிவியில் வர ஆரம்பிச்சுருச்சு. போய் பாருங்க என்றார். WWF கொஞ்சம் திசை திருப்பியதால் MTV, [V] சேனல் பார்ப்பது குறைந்திருந்தது. எவ்வளவு பெரிய தப்பை செய்கிறோம் என்றுணர்ந்து மீண்டும் இசை அலைவரிசைகளைப் பார்க்க அதிக நேரம் ஒதுக்கத் துவங்கினேன். அந்தப் பாடலின் காட்சியையும் பார்த்தேன்.

பாப் இசை என் மனதில் தங்க பிடித்த பாடல்களுக்கான காட்சியமைப்பும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். இந்தப் பாடலின் காட்சியமைப்பு ஒரு சிறுகதை போல் சிறப்பாக இருக்கும். பிறக்கும் போதே கால் ஊனமாக குறைபாடுடன் பிறக்கும் குழந்தை. வளர வளர அவனைக் கவனமாக பார்த்துக் கொள்ளும் பெற்றோர், அவனுக்காக பிரத்தியேகமான காலணியைத் தகப்பன் வாங்கி வர அதைக் கண்டு தவிக்கும் தாய், மகனுக்கு ஒரு இணக்கமான காதல் துணை, அவர்களின் திருமணம், இறுதியில் அந்த மகன் பெரும் புகழை ஈட்டி அங்கீகாரம் பெறுதல்… ஒவ்வொன்றும் அற்புதம். பார்த்து முடித்தவுடன் காட்சியமைப்பும், பரிந்துரைத்த ரெக்கார்டிங் சென்டர் பெண்மணியின் ரசனையும் சரிசமமான வியப்பைத் தந்தது.

கலோனியல் கஸின்ஸ் வெளியிட்ட மூன்றாவது ஆல்பத்தின் பெயர் “ஆத்மா” இது 2001 ஆம் ஆண்டு SONY BMG நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பம் வெளியான சமயங்களில் நான் மெடிக்கல் ரெப் உத்தியோகத்தில் அதிகமாக மூழ்கத் துவங்கி இருந்தேன். வீட்டில் இருக்கும் நேரமும் குறைந்துவிட்டதால் டிவி ரிமோட் என் ஆளுகையிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டது.

Kaizala…

திருச்சியில் மெடிக்கல் ரெப்பாக இருந்த போது எனக்கு ஒரு பெண் மெடிக்கல் ரெப் அறிமுகமானார். ரெப்களில் பெண்களின் பங்களிப்பு பொதுவாக குறைவு என்பதால் பெண் மெடிக்கல் ரெப் எனக்கு அதிசயம். நான் ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை விற்கும் கம்பெனியில் குப்பை கொட்ட அவர் சகல விதமான நார்மல் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தார். சபரி மில்ஸ் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒரு கன்சல்டன்ட் டாக்டர் எங்கள் நிறுவனத்தின் டயபடிக் மற்றும் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டேடின் மாத்திரைகளை அதிகம் பரிந்துரைப்பார். இரண்டும் பிற பிராண்டுகளை விட விலை குறைவு என்பதே அதற்கு காரணம். நான் ரெகுலராக அந்த மருத்துவரை மாதம் மும்முறை பார்ப்பேன். அடுத்து தில்லை நகரில் இருந்த ஒரு கேஸ்ட்ரோ மருத்துவரையும் நான் மாதம் மும்முறை பார்ப்பேன். அல்சர் நோய் குணமாக தரப்படும் கிட் (மூன்று மருந்துகள் அடங்கிய ஒரு பேக்) மருந்தை எங்கள் நிறுவனம் பிற பிராண்டுகளை விட விலை குறைவாக விற்பனை செய்தது. அதை அந்த மருத்துவர் பரிந்துரைத்து வந்தார். இவ்விரு மருத்துவர்களையும் அந்தப் பென் மெடிக்கல் ரெப்பும் தவறாது பார்ப்பார். அங்கு தான் அவர் எனக்கு அறிமுகமானார்.

அந்தப் பெண்ணின் பெயர் கேதரின் டயமண்ட்… இந்தப் பெயருடைய இன்னொருவரை அவரைப் பார்ப்பதற்கு முன்பாகவும் சரி அவரைப் பார்த்த பின்பும் சரி இதுவரை கண்டதில்லை. அவருக்கு பூர்வீகம் மதுரை. ஒரு பெண்கள் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். சனி இரவு ஊருக்கு புறப்பட்டுவிடுவார். எங்கள் வீட்டு எலுமிச்சை ஊறுகாய் மீது அவருக்கு அதிக பிரியம் உண்டு. ஒரு சனி இரவு ஊருக்கு செல்லும் போது பாட்டிலில் வழக்கம் போல் ஊறுகாய் தருமாறு கேட்டார். சரி என்றேன்.

பெயரைக் கேட்டவுடன் நீங்கள் ஏதேனும் ஒரு உருவத்தை உருவகப்படுத்தி இருந்தால் அதை அழித்துவிடுங்கள். மற்ற பெண்களைப் போல் அவரும் இயல்பாகத் தான் உடுத்தி வளைய வருவார். வெள்ளி நீங்கலாக அனைத்து நாட்களிலும் சுரிதார், வெள்ளிக்கிழமை தலை குளித்து பட்டுப்புடவை, எப்போதும் என் போன்றவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் நீளமான கார் மேகம் போன்ற அளக பாரம்… அவர் பற்றி விவரித்தால் அதற்கே தனி அத்தியாயம் எழுத வேண்டியிருக்கும்.

அந்த சனிக்கிழமை இரவு பத்தரை மணிவாக்கில் மத்தியப் பேருந்து நிலையத்தில் ஊறுகாய் கொண்டு வந்து தர ஏற்பாடு. நான் போன போது விராலிமலை வழியாக செல்லும் மதுரை பேருந்தருகே நின்று கொண்டிருந்தார். காதில் இயர் போன் ஆனால் நான் வந்தால் சில நிமிடங்கள் கதைக்க வேண்டியிருக்கும் என்பதால் எங்களிருவர் சம்பாஷணை நிறைவுற்ற பின் பாடல்களைக் கேட்கலாம் என்று வாக்மேனை உயிர்ப்பிக்காது இருந்தார்.

வேகமாக சென்று அவரிடம் பாட்டிலை நீட்ட சம்பிரதாய பேச்சு முடிந்து நான் கிளம்பும் போது தான் அவர் கையில் இருந்த கேஸட் உரையை கவனித்தேன். என் ஆத்மா பரிதவித்தது. ஆம் ஆத்மா கேஸட் தான்!

“இது, நீங்க, எப்போ?..” வார்த்தைகள் கோர்வையாக வராத கவிஞன் போல் பிதற்றினேன்.

“அடப் பாவமே, இந்த கேஸட் ரிலீசானது தெரியாதா? பொங்கலுக்கு முன்னாடியே வந்தாச்சு. போய் உங்க வழக்கமான கடைல நாளைக்கு ரெக்கார்ட் செய்யுங்க. oh ho kaizala”

“கடைசில சொன்னது புரியல”

“இந்த ஆல்பம்ல இருக்கற கரைச்சலான பாட்டு அது, அவங்களை அந்தப் பாட்டை வைக்க சொல்லி ஸ்பீக்கர்ஸ் ததும்ப ததும்ப கேளுங்க புரியும்”

“இன்னொரு விராலிமலை வழி பஸ் பக்கத்துல நிக்குது, ஒரு வேளை இந்த பஸ் புறப்பட்டு அந்த பஸ்ல கிளம்பினா வீட்டுக்கு போக அரை மணி நேரம் லேட்டாகும், பரவால்ல. தானே? நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?”

வாக்மேனை என்னிடம் தர நான் அந்தப் பாடலைக் கேட்க அந்த சனி இரவு முழுதும் என்னுள் உற்சாக ஹார்மோன்கள் ஓவர் ஃப்ளோ ஆக… ஏகப்பட்ட ஆக ஆக தான்!

பாடலை ரெக்கார்ட் செய்து கேட்டுவிட்டேன் ஆனால் சில நாட்கள் கழித்து தான் அப்பாடலின் காட்சியமைப்பைக் காண முடிந்தது. அழகான ஒரு திரைக்கதை போல் மனதை விட்டு அகலாத பிக்சரைசேஷன்…

இப்பாடலைப் பார்த்து ரசிக்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=rjAlMxgTgmQ

கலோனியல் கஸின்ஸ் வெளியிட்ட நான்காம் ஆல்பத்தின் பெயர் “once more” , 2011 ஆம் ஆண்டு Universal Audio வெளியிட்டது. இந்த ஆல்பம் பற்றி நான் எதுவுமே சொல்லப்போவதில்லை. ஆல்பத்தை முழுமையாக கேளுங்கள். “kai zhala” என்ற என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

kai zhala என்ற மராத்தி சொல்லுக்கு என்ன ஆச்சு? என்று பொருள். முடிவு என்ன? என்றும் பொருள் கொள்ளலாம்.

(ஜெஸ்ஸி லீஸ் – தொடரும்)

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here