அங்கிள் நீங்களா!!!!! ஆச்சரியப்பட்டான் வசீகரன்.
அடப்பாவி!!! உனக்கு அங்கிளை முன்னாடியே தெரியுமா? அப்படின்னா நீ எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் செஞ்சு இருக்கியா?அங்கே வினோத் அண்ணனை அடிச்சு போட்டு இங்கே மிதுலாகிட்ட தப்பா நடக்க பார்த்தியா?நீங்க போலீஸ்க்கு போன் பண்ணுங்க அங்கிள்.
மறுபடி உளற அரம்பிச்சுட்டியா??? கொஞ்ச நேரம் வாயை மூடு.
இருவரையும் மாறி மாறி பார்த்த கங்காதரன் கடகடவென சிரிக்க ஆரம்பித்தார்.
“என்ன சுஜி உங்க அண்ணன்கிட்ட இப்பவே வம்பு பண்ண ஆரம்பிச்சுட்டியா????
அண்ணனா???? அதிர்ந்து விழித்தாள் சுஜிதா.
பின்னே மிதுலாவை கல்யாணம் செஞ்சுக்க போறவர் உனக்கு அண்ணன் முறை தானே!!!
முறை எல்லாம் கரெக்ட் தான். ஆனால் இவர் எங்கே மிதுலாவை கல்யாணம் செஞ்சுக்க போறார்? உங்க பையன் தானே மிதுலாவை கட்டிக்க போறார்.
அப்படின்னு உனக்கு யார் சொன்னது?
உங்க பையன் தான்.
ஓஹோ உன்கிட்ட அப்படி சொல்லி மிதுலாவை கூட்டிட்டு வர சொன்னானா??
“ஹய்யோ என்ன அங்கிள் சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலை.
“ஒண்ணும் குழப்பம் இல்லை சுஜிதா.மிதுலாவை இங்கே கூட்டிக் கொண்டு வர சொன்ன போது அவன் இங்கு அவளை பார்க்க வரப் போவதாக சொல்லி வர சொல்லி இருந்தானா???
“இல்லையே? திருத்திருத்தாள் சுஜிதா.
தன் மகனை பற்றி தெளிவாக கணித்து வைக்காவிட்டாலும் அவருக்கு மிதுலாவை பற்றி தெரியும்.வினோத் அவளை பார்க்க வர போவதாக சொல்லி இருந்தால் கண்டிப்பாக மிதுலா அதற்கு ஒத்துக் கொண்டு இங்கே வந்து இருக்க மாட்டாள்.
வினோத்தும் தன் பெயரை சொன்னால் மிதுலா வர மாட்டாள் என்பதை உணர்ந்து இருந்ததால் சுஜியிடம், “மிதுலாவிற்கு நான் வர போவதை சொல்லாதீங்க சுஜி சிஸ்டர்.அவளுக்கு சர்ப்ரைஸ் ஆஹ் இருக்கட்டும்.நீங்க என் பேரை அவகிட்ட சொல்லாதீங்க ” ப்ளீஸ்!!! என்று சொன்னதும் அவளுக்கு நியாபகம் வந்தது.இருந்தாலும் அன்று வினோத், தான் எந்த அளவுக்கு மிதுலாவை விரும்புவதாக சொன்னான் அது எப்படி பொய்யாக இருக்க முடியும்?
இல்லை அங்கிள் வினோத் அன்னிக்கு பொய் சொன்ன மாதிரி இல்லையே!!!
நீ ரொம்ப கண்டாய்!!! அவனை பற்றி உனக்கு என்ன தெரியும்.எனக்குத் தானே தெரியும் என்று நினைத்து கொண்டவர். என்ன சுஜிதா என் மேல் நம்பிக்கை இல்லையா? வேணும்னா இதோ நம்ம தெய்வானையே வந்தாச்சே நீ அவங்கிட்டயே கேளேன்!!
ஹப்பா!!! ஆன்ட்டி நல்லவேளை நீங்களே வந்துட்டீங்க!!!.அங்கிள் என்னென்னமோ சொல்லுறார் எனக்கு ஒண்ணுமே புரியலை.இவரையா நீங்க மிதுலாவுக்காக மாப்பிள்ளையா பார்த்து இருக்கீங்க.
பெற்ற தாயான தெய்வானையின் மனம் முழுதும் சுஜியே நிறைந்து இருந்தாள். மகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் கண்ணார காண துடித்துக் கொண்டு இருந்தது அந்த தாயின் மனம்.தெய்வானைக்கு சுஜிதா பேசிய எதுவும் புரியாமல் ஆரம்பத்தில் முழிக்கத் தான் செய்தார். மகள் அருகிலேயே இருப்பதை கண்ணார கண்டதும் மகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதில் அமைதி ஆனவர். சுஜிதா சொல்லிய செய்தியில் அதிர்ந்து போய் கங்காதரனை பார்த்தார்.
கங்காதரனின் பார்வை உணர்த்திய செய்தியை உடனே கிரகித்தவர் ,முகத்தை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டார். இவர்களுடைய பார்வை பரிமாற்றத்தை கூட்டத்தில் மற்றவர் யாரும் கண்டுகொள்ளவில்லை.வசீகரனை தவிர.முகம் இறுக அவர்களின் பேச்சை கவனிக்க தொடங்கினான்.
ஆமாம் சுஜிதா.என் இவ்வளோ சந்தேகமா கேக்குற?
அது …. அதுவந்து ஆன்ட்டி…..
மாப்பிள்ளை தான் ஏற்கனவே என்னை மிதுலாவை இங்கே கூட்டிக் கொண்டு வர சொல்லி இருந்தார் சுஜி.நீ இதே ஹோட்டலில் பங்ஷன் சொன்ன அதான் உங்களை முன்னால் அனுப்பிவிட்டு நாங்கள் பின்னால் வருகிறோம்.
இவ்வளவு கூறியும் தெளியாமல் அதில்லை ஆன்ட்டி…. என்று இழுத்தாள் சுஜிதா.
ஆமா மிதுலா எங்க சுஜி??? உன் கூட தானே அனுப்பினதா தெய்வானை சொன்னுச்சு!!!!
வசீகரன் கங்காதரனை கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான் அவனுக்கு அவரின் போக்கு ஐயத்தை கொடுத்தது.நடக்கும் நிகழ்வுகளுக்கு இவர் தான் சூத்திரதாரியோ என்று இமை சிமிட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அங்கிள் மிதுலா இதோ அங்கே படுத்து இருக்கா பாருங்க!!!!
படுத்து இருக்காளா!!!! ஏன் மிதுலாவிற்கு என்ன ஆச்சு???
அதை தான் அங்கிள் நாங்களும் கேட்டுகிட்டு இருக்கோம்.
நாங்களும் கேட்கிறோம்ன்னு சொன்னா என்ன அர்த்தம் சுஜிதா !!!!
உன்னை நம்பி தானே மிதுலாவை அனுப்பினோம்.
இல்லை அங்கிள் நான்…..
நீ எதுவும் பேச வேண்டாம்.உன்னை நம்பி அனுப்பியது எங்க தப்பு தான்.
அங்கிள் நான் சொல்றதை கொஞ்சம்….
இவ இப்படி மயங்கி கிடக்கிறாளே என்ன ஆச்சு????
அதுக்கு காரணம் நான் தான் அய்யா … ஐம்பது வயதை நெருங்கிய சர்வர் ஒருவர் முன் வந்தார்.
“அவங்க குடிக்க ஜூஸ் கேட்டாங்க நான்தான் மாத்தி கொடுத்துட்டேன்.இவங்களுக்கு இதெல்லாம் புதுசு போல அதான் இப்படி மயங்கிட்டாங்க.”
“ஏன்டா எவ்ளோ பெரிய தப்பை செய்து விட்டு கொஞ்சம் கூட பயமே இல்லாமல் சொல்ற நீ ??? என்று கேட்டார் கங்காதரன்.அவர் கேட்ட கேள்விகளுக்கும் கேள்வி கேட்ட விதத்திற்கும் இடையேயான பேதத்தை தெளிவாக உணர்ந்து கொண்டான் வசீகரன்.
அவர் கேள்வி கேட்ட விதத்தில் கொஞ்சம் கூட கோபம் வெளிப்படவில்லை.அதே நேரம் அந்த சர்வரும் ஒன்றும் அவருக்கோ அங்கே இருந்த கூட்டத்திற்கோ அஞ்சி நடுங்கிக் கொண்டு நிற்கவில்லை.
என்ன தான் தொழில் போட்டியாக இருந்தாலும் கங்காதரனிடம் இருந்து இப்படி ஒரு நடத்தையை அவன் எதிர்பார்க்கவில்லை.
தப்புன்னு தெரியும் சார் அது தான் அந்த பொண்ணுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட கூடாதே என்று தான் தனியாக இந்த அறையில் தங்க வைத்தேன்.அவர்கள் யார்கூட வந்தாங்கன்னு விசாரிச்சு அவங்கிட்டயே சேர்த்திடலாம்னு தேடிக்கிட்டே இருந்தேன்.அதுக்குள்ள இவ்ளோ பிரச்சினை ஆகிடுச்சு.மன்னிச்சுடுங்க.
அப்பாடி!!!அந்த மட்டிலும் யார் எப்படி போனா எனக்கென்ன அப்படின்னு இல்லாம இதையாவது செய்தாயே!!! இந்த முறை பிழைத்துப் போ.உங்க மேனேஜர் கிட்ட நான் பேசிக்கிறேன். உன் மேல மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்னு சொல்லிடறேன்.போ என் கண் முன்னாடி நிற்காதே!!!
நடப்பது அனைத்தையும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தான் வசீகரன்.
ஏய் யாருப்பா அது செல்லுல போட்டோ எடுத்தது அதை காட்டுங்க. ம் நல்லா தானே இருக்கு.மாப்பிள்ளை இந்த போட்டோவை அப்படியே பத்திரிக்கைக்கு கொடுத்து விடலாம் உங்க திருமண அறிவுப்புக்கு கரெக்ட் ஆஹ் இருக்கும். ஏப்பா சர்வர் உங்க மேனேஜர்கிட்ட பத்திரிகைகாரங்களுக்கு போன் செய்து அழைக்க சொல்லி இருந்தேன்.அவர்கள் வந்ததும் இந்த போட்டோவை அவர்களிடம் கொடுத்து இவர்களுடைய திருமண அறிவிப்பை நாளை எல்லா பேப்பரிலும் போட்டு விட சொல்லு.அப்பறம் அதுல ***** பத்திரிகை ரிப்போர்ட்டர் வருவார். அவரோட MD என்னோட நெருங்கிய ஸ்நேகிதன் .அவர்கிட்ட நாளைக்கு அவங்க பத்திரிகையில் இது தான் தலைப்பு செய்தியா இருக்கணும்னு நான் சொன்னதாகவே சொல்லிடு.
அப்பறம் மாப்பிள்ளை சம்மந்தியோட போன் நம்பர் நீங்க அன்னிக்கு குடுத்தீங்களே அது எப்படியோ டெலிட் ஆகிடுச்சு.கொஞ்சம் மறுபடி சொல்லுங்க.மத்த விஷயம் எல்லாம் பேசணும் இல்லையா?
“சார் வசீகரனோட பெரியம்மா நம்பர் என்கிட்ட இருக்கு நான் தரேன்“
ஓ நன்றி தம்பி.நீங்க மூர்த்தி இல்ல!!!
ஆமா சார்.நல்லா நியாபகம் வச்சு இருக்கீங்க போல? கரெக்ட் சார் உங்களை மாதிரி தான் எது நடந்தாலும் எதையும் மறக்காம இருக்கணும்!!!! இந்த வயசில இப்படி ஒரு நியாபக சக்தியா? பிரமாதம் போங்க!!!!உங்களை பார்த்தா எனக்கு பிரமிப்பா இருக்கு கங்காதரன் சார்!!!
“என்ன தான் தொழிலில் உங்களுக்கும் வசீகரனுக்கும் போட்டி இருந்தாலும் அவருக்கே உங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து தருகிறீர்களே??? உங்களது உயர்ந்த குணம் யாருக்கு வரும்??? வசீகரன் மட்டும் என்ன உங்க வீட்டுப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள போகிறார்.அவர் எவ்வளவு தெளிவான ஆள் என்பது இதில் இருந்தே தெரியவில்லையா?? உங்க வீட்டு பொண்ணு என்றால் நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்களே!!! வசீகரனுக்கு சுக்கிர திசை தான்.”
சரி மூர்த்தி நீங்க மாப்பிள்ளை கூட பேசிட்டு இருங்க.நான் சம்பந்தி அம்மாகிட்ட பேசிட்டு வந்துடறேன்.
இவர் என்ன இந்த மூர்த்தியை எனக்கு காவலுக்கு வைக்கிறாரா??? முகம் இறுகி பல்லை கடிக்க தொடங்கினான் வசீகரன்.எனக்கென்ன பயமா பெரியம்மா வரட்டும் அவர்களிடம் எடுத்து சொன்னால் புரிந்து கொள்ள போகிறார்கள்.வரட்டும் வரட்டும்….
கங்காதரனின் செயல்களை அங்கு இருந்த யாரும் ஆட்சேபிக்கவில்லை.தெய்வானை அவர் கூறிய எதையும் மறுக்கவில்லை என்றாலும் அவருக்கு இந்த ஏற்பாடுகள் பற்றி ஏதும் தெரியாது என்பதை அவருடைய முககுறிப்பில் இருந்து தெரிந்து கொண்டான் வசீகரன்.
வசீகரனின் பெரியம்மாவுடன் போனில் என்ன சொன்னாரோ அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர் அங்கே இருந்தார்.இதற்கிடையில் மிதுலாவை சுஜி மற்றும் மகேஷ் உடன் மருத்துவ மனைக்கு அனுப்பி விட்டு இருந்தார்.
வசீகரனின் பெரியம்மா காவேரி அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கு இருந்தார். முதலில் காவேரியும் கங்காதரனும் அதே ஹோட்டலிலேயே உயர்தர சூட் ஒன்றை எடுத்து அதில் சென்று ஒரு அரை மணி நேரம் பேசினார்கள்.என்ன பேசினார்களோ எனக்கு தெரியாது.பிறகு சற்று நேரம் பொறுத்தே நானும் மாப்பிள்ளையும் ஒன்றாக உள்ளே சென்றோம்.
மாப்பிள்ளை எவ்வளவோ எடுத்து சொன்னார்.ஆனால் அவருடைய பெரியம்மா அதை கேட்க மறுத்துவிட்டார்.நீ மிதுலாவை திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் வசீகரா. நம்மால் ஒரு குடும்பம் அழிந்தது என்று இருக்க கூடாது.
அம்மா இதில் என் தவறு எதுவும் இல்லையே?
ஒரு பெண்ணின் பாவம் நமக்கு வேண்டாம்பா. எனக்காக என்று இதுவரை நான் எதுவும் உன்கிட்ட கேட்டது இல்லை.இது எனக்காக நான் கேட்கும் வரம் தருவாயா???
அம்மா பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க!!! நீங்க இதுவரை என்கிட்ட எதுவுமே கேட்டது கிடையாது உங்களுக்காக நல்லா கேட்டுக்கோங்க உங்க ஒருத்தரோட ஆசைக்காக மட்டும் தான் நான் ஒத்துகிறேன் . மற்றபடி யாருக்கும் பயந்து அல்ல என்று கூறிக்கொண்டே குறிப்பாக கங்காதரனை பார்த்தான். ஆனால் இதற்கு நான் சம்மதிக்க வேண்டும் என்றால்அதற்கு இரண்டு நிபந்தனை!!!!
எதுவாக இருந்தாலும் சொல்லுங்க தம்பி மிதுலா என் பொண்ணு போல என் சொத்தையும் சேர்த்து அவளுக்கே கொடுக்க சொன்னாலும் சரிதான்.
அண்ணா!!!!
நீ சும்மா இரு தெய்வானை…..
பணமா!!!! என்று கேட்டவன் கடகடவென சிரிக்க ஆரம்பித்து விட்டான். நான் வசீகரன் நினைவில் வச்சுகங்க பெண்டாட்டி மூலம் பணக்காரன் ஆகணும்னு எனக்கு அவசியம் இல்லை.எனக்கு வேண்டியது வேறு“
ஒண்ணு – இந்த கல்யாணத்துக்கு இவரோ இவர் சம்பந்த பட்ட யாருமோ கீழே இதுவரை கத்தி கூப்பாடு போட்டு என் மானத்தை வாங்கிச்சே ஒரு பொண்ணு அவங்க யாரும் வரக்கூடாது.கல்யாணத்துக்கு பிறகும் அவர்கள் யாரும் என் வீட்டிற்கு வந்து போக கூடாது.
இரண்டு – இவர்கள் பெண்ணுக்கு எந்த சீதனமும் தர கூடாது இதற்கு சம்மதமா னு கேளுங்க.மற்றதை மேற்கொண்டு பேசுங்க
நான் வரக்கூடாது னு சொல்றீங்க சரி தான் தம்பி .ஆனா சுஜி பாவம் சின்ன பொண்ணு மிதுலா மேல இருக்கிற பாசத்துல அப்படி பேசிட்டா…. அதே மாதிரி மிதுலா ஒரே பொண்ணு அவளுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் செய்து சீர்வரிசை செய்யணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கும் இல்லையா???
என் முடிவில் மாற்றம் இல்லை.இதற்கு சரி என்றால் மேற்கொண்டு நடக்க வேண்டியதை பார்க்கலாம் எக்ஃகின் உறுதியோடு கூறிவிட்டு எழுந்து கொண்டான
கடைசியாக ஒன்றே ஒன்று,என்ன தான் தொழிலில் நமக்குள் போட்டி இருந்தாலும் உங்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்து இருந்தேன்.அது அத்தனையும் ஒரே நொடியில் பாழாக்கிவிட்டிர்கள்.
தம்பி…. என் மேல் நீங்கள் கோப படுங்கள் நான் தாங்குவேன். ஆனால் மிதுலா அவள் இனி உன் பொறுப்பு.அவள் என் மகள் மாதிரி .அவளுக்கு பூ போல மனசு.அவளை காயப்படுத்தாதீர்கள்.
ஓ !!! அப்ப அங்க அடிச்சா இங்கே வலிக்கும்னு சொல்லுறீங்க!!!
தம்பி …. நான்…
இன்று நடந்த எதையுமே நான் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.குடும்பத்தோடு எல்லாரும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து இப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கீங்க இல்ல!!!! அதுக்கு உண்டான தண்டனை உங்க எல்லாருக்கும் உண்டு.தப்பு செஞ்சவங்களை இந்த வசீகரன் என்னைக்குமே மன்னிச்சது கிடையாது.அதே தான் எல்லாருக்கும்.உங்க அருமை பொண்ணையும் சேர்த்து தான். என்ன இருந்தாலும் அவள் என்னில் பாதி ஆக போகிறாள் இல்லையா அதனால் அவளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு.
தம்பி எனக்கு என்ன தண்டணை வேணும்னாலும் குடுங்க அவளை விட்டுடுங்க!!!!
விடுவதா!!!!! அவளையா!!!!! ஹா ஹா ….
விக்கித்து நின்றார் கங்காதரன் .இவர்களின் பேச்சு அனைத்தும் மென்குரலில் இருந்ததால் காவேரிக்கு காதில் விழுந்து இருக்காது.ஆனால் தெய்வானைக்கு தெளிவாக கேட்டது.
கிடைத்த தனிமையில்,”அண்ணா எனக்கு பயமாக இருக்கிறது,அப்படி இவரை வற்புறுத்தி இந்த கல்யாணத்தை இத்துணை அவரசமாக ஏன் செய்ய வேண்டும் அண்ணா?
தெய்வானை என் மேல் உனக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா?அப்படி நம்பிக்கை இருந்தால் மேற்கொண்டு எதுவும் கேட்காதே?
வசீகரன் கோவக்காரன் தான் ஆனால் தங்கமான பையன்.நீ முதலில் ஹோஸ்பிடலுக்கு போய் மிதுலாவை பார். அந்த சுஜியிடம் கொஞ்சம் கோபமாகவே பேசி அவளை அங்கு இருந்து அனுப்பு.மாப்பிள்ளை சொன்னது நினைவில் இருக்கிறது இல்லையா? இனி அவள் மிதுலாவுடன் பேச கூடாது.
அடுத்து அடுத்து வரிசையாக அனைத்தையும் மளமளவென வயதுக்கு மீறிய சுறுசுறுப்போடு செய்ய தொடங்கினார் கங்காதரன்.
உங்க மாமா கல்யாண ஏற்பாடு எல்லாத்தையும் அவர் தான் பார்த்தார்.ஆனா கல்யாணத்துக்கு அவர் வரலை.அவர் எதுக்காக இவ்வளவு அவரசமா இந்த கல்யாணத்தை செஞ்சார்னு எனக்கும் தெரியாது.ஆனால் நான் அவரை நம்புறேன்.அதுக்கு பின்னாடி உன்னோட நன்மை மட்டும் தான் காரணமா இருக்கும்னு முழு மனதா நம்புறேன். எனக்கு தெரிந்த வரை சொல்லிட்டேன் மிதுலா. இனி மாப்பிள்ளைக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பது உன் சாமர்த்தியம்
என்னது !!!! எடுத்து சொல்லி புரிய வைக்கணுமா யாருக்கு? என் புருஷனுக்கா?? சுத்தம் !!! உன் மூளையை யாருக்கும் கடன் கொடுத்துட்டியா தெய்வா? ஏற்கனவே அவர் என்னை ரொம்ப பாசமா பார்த்து வைக்கிறார். அவர் இப்ப இருக்கிற மன நிலைமையில் எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்குவார்னு எனக்கு தோணலை.
” ரொம்ப சந்தோசம் மிதுலா.”
சந்தோசமா? தெய்வா உனக்கு என் நிலைமையை பார்த்தா கிண்டலா இருக்கா? பழைய மிதுலா சிலிர்த்து எழுந்தாள்.
கல்யாணம் முடிஞ்சு அரை நாள் ஆகிடுச்சு.இந்த கல்யாணம் நடந்த சூழ்நிலையை பற்றியும் உன்கிட்ட எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சொல்லிட்டேன்.மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணம் விருப்பம் இல்லாம நடந்து இருக்குன்னு உனக்கு நல்லா தெரியும்.அவர் உன் மேலேயும் கோவமாக தான் இருப்பார்னு உனக்கு புரிஞ்சுருக்கும்.இருந்தும் அவரை வாயார புருஷன்னு சொல்லிட்டே என்னையும் தெய்வா னு கூப்பிட ஆரம்பிச்சுட்டே. அது மட்டும் இல்லை அதுக்குள்ள மாப்பிள்ளையோட குணத்தை புரிஞ்சு வச்சு இருக்கியே??? அதுக்கு தான் இந்த சந்தோசம்.
அம்மாவும் பொண்ணும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல? என்ற குத்தல் குரலுடன் உள்ளே நுழைந்தாள் ஒரு அழகிய பெண்.