நிலவே உந்தன் நிழல் நானே 12

0
1615
NUNN Tamil Novels 37

புதுமண தம்பதிகள் இருவரும் கீழே அழைக்கப்பட்டு விருந்தினர்கள் மத்தியில் அமர வைக்கப் பட்டு இருந்தனர்.புதுமண தம்பதிகளுக்கான இயல்பான கேலி பேச்சுகளும் இருந்தது.வசீகரன் அவர்களை இயல்பாக எதிர்கொண்டான். சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரித்து , பதில் சொல்ல முடியா கேள்விகளுக்கு அவனுடைய மௌனத்தையுமே சிறந்த பதிலாக தந்தான்.

உன் பொண்டாட்டி ரொம்ப சாது வசீகரா நீ ரொம்ப கொடுத்து வைத்தவன்.இப்படி ஒரு பெண் மனைவியாக கிடைக்க!!!!

யார் இவளா ??? உங்களுக்கு இவளைப் தெரியாது அண்ணி.பேச ஆரம்பித்தாள் வாயை மூட மாட்டாள்.

பிறகு ஏன் இப்பொழுது வாயை திறக்கவே மாட்டேன் என்கிறாள்.

வெட்கப் பட முயற்சி செய்கிறாள்னு நினைக்கிறன்.

இவ்வளவு நேரம் இவர்கள் பேசுவது அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தாலும் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட மிதுலா பேசவில்லை.நமக்கு ஏன் வம்பு.சும்மா இருக்காமல் எதையாவது சொல்லி உன்னிடம் வாயை கொடுத்து புண்ணாகி கொள்ள வேண்டும்.நான் வாயை திறக்கவே மாட்டேன் என்று மனதினில் நினைத்தவள் வெளியே ஈஈஈஈ என சிரித்து வைத்தாள்.

ஆமா அண்ணா , அண்ணியை முதலில் எங்கே பார்த்தீங்க. அண்ணியோட வீட்டுக்கு போய் பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டு பொண்ணு பார்க்க போனீங்களா???? பார்த்ததும் உங்களுக்கு என்ன தோணுச்சு?

இந்த கேள்வியில் மிதுலா சற்று ஆர்வமானாள். என்ன பதில் சொல்ல போறீங்க புருஷர்ர்ர்ர்

ஓங்கி ஒரு அறை விடணும்னு நினைச்சேன்.தயங்காமல்  பதில் வந்தது  வசீகரனிடம் இருந்து.

எதுக்காம்??? புருஷர்ர்ர்ர் இப்ப எதை சொல்லுறார். முதன்முதலாக ரோட்டில் பார்த்ததையா? இல்லை அன்னிக்கு லைப்ரரி போய்ட்டு வரும் போது பார்த்ததையா? இல்லை கடைசியா ஹோட்டலில் பார்த்த பொழுதா??? ஒண்ணா ரெண்டா நம்ம எல்லா நேரத்துலயும் தலைவர் அடிக்க வர மாதிரியான சுட்ஸுவேஷன்ல தான் பார்த்தோம். இதுல எதுவா இருக்கும்????மிதுலா தீவிரமான முக பாவனையோடு யோசிக்க ஆரம்பித்தாள்.

பின்னே இத்தனை நாள் என்னை பார்க்காமல் எப்படி இவள் இருக்கலாம்.எனக்கென்று பிறந்தவள் இவள் கொஞ்சம் முன்னாடியே இவளை பார்த்து இருந்தால் இன்னும் முன்னாடியே கல்யாணம் ஆகி இருக்கும்ல.

இப்ப எதுக்கு இந்த புளுகு புளுகிறார் மிதுலா மெதுவாக திரும்பி வசீகரனை பார்த்தாள்.

ஆஹா ஆஹா உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அவ்வளவு காதலா?அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டீர்களா?சும்மா சொல்ல கூடாது ரெண்டு பேரு ஜோடி பொருத்தம் ரொம்ப அம்சமா இருக்கு.

சரி சரி பேசி அரட்டை அடிச்சது போதும் வாங்க எல்லாரும் சாப்பிடலாம் வாங்க.காவேரி அழைக்க உறவு பெண் ஒருத்தி எங்கே காவேரி உன் பொண்ணு வர்ஷினியை காணோம்???

அவளை ஹோட்டல் ரூமுக்கு அனுப்பிட்டேன் அக்காகல்யாணத்துக்கு அவளுக்கு கடைசி நேரத்துல தான் சொன்னோம்.அதனால் ட்ரெயின் கிடைக்காம விடிய விடிய பஸ்சில் பயணம் செய்து வந்து சேர்ந்தாள். அசதியாக இருக்குமே என்று நான் தான் அவளை ஓய்வு எடுக்கட்டும் என்று ஹோட்டல் ரூமுக்கு அனுப்பி வைத்து விட்டேன்.

தனியாகவா அனுப்பி வைத்தீர்கள் அண்ணி என்று பதறினார் தெய்வானை.

இல்லை அண்ணி சில சொந்தக்காரர்கள் தங்களின் குடும்பத்தோடு தங்குவதற்கு ஹோட்டலில் ரூம் புக் பண்ணி இருக்கு அண்ணி.அவர்களுடன் தான் அனுப்பி இருக்கிறேன்.

வீட்டில் மாடி அறைகள் இரண்டு சும்மா தானே அண்ணி பூட்டி வைத்து இருக்கிறேன்.அதில் அவர்களை தங்க வைத்து இருக்கலாம் இல்லையா???

தெய்வானையின் அருகில் சற்று நெருங்கி தாழ்வான குரலில் அதற்கில்லை அண்ணி இன்று இரவு சடங்கு ஒன்று பாக்கி இருக்கிறது அல்லவா?? வயது பெண்கள் எதற்கு என்று தான் , மேலும் நேற்று முழுக்க அவளுக்கும் அலைச்சல்.இது விசேஷ வீடு யாரேனும் வந்து போக இருப்பார்கள்.அவள் தூக்கம் கெட்டு விட்டது என்று புலம்புவாள் அதனால் தான் அவளை அனுப்பி வைத்து விட்டேன்.வேறு ஒன்றும் இல்லை அண்ணி தவறாக நினைக்காதீர்கள் என்று சமாதானமாக கூறியதில் சற்றே அமைதியானார் தெய்வானை

இவர்கள் அனைவரும் தன் போக்கில் பேசிக் கொண்டே இருந்தனர்.ஆனால் மிதுலாவும் வசீகரனும் ஆளுக்கு தனி தனி உலகங்களில் இருந்தனர்.வசீகரனின் புருவ மத்தியில் இருந்த  முடிச்சு அவன் எதையோ ஆழ்ந்து  சிந்திப்பதை உணர்த்தியது.

மிதுலாவின் மனமோ அந்நேரம் தனது தோழி சுஜியை நினைத்து வருந்திக் கொண்டு இருந்தது.இந்நேரம் என்ன செய்து கொண்டு இருக்கிறாளோ தெரியவில்லையே!!!! அவள் மட்டும் இந்நேரம் இங்கு இருந்தால் இந்த நிமிடம் எவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்து இருக்கும்.கங்காதரன் மாமா செய்ததும் தவறு தான் என்றாலும் அவர் தகுந்த கரணம் இல்லாமல் செய்ய மாட்டாரே!!!!

இவரிடம் மெதுவாக எடுத்து சொல்லி பார்க்கலாமா?என்று நினைத்தவள் மெதுவாக திரும்பி வசீகரனை பார்த்தாள். அவள் தன்னிடம் எதையோ பேச விரும்புவதை உணர்ந்து கொண்டவன்.பேச விரும்பாதது போல் சாப்பிட செல்ல வேண்டிய சொந்தங்களை  இழுத்து பிடித்து பேசிக் கொண்டு இருந்தான்.

சற்று நேரம் அவனிடம் பேச முயற்சித்துவிட்டு அதை கை விட்டாள் மிதுலா காரணம் சுற்றி இருந்தவர்கள் புதுமணப் பெண்ணான மிதுலா கணவனிடம் பேச துடிப்பதை கண்டு கேலியாக சிரிக்க தொடங்கி விட்டனர்.

இவங்க வேற என்ன நடக்குதுனே தெரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க.புருஷர்ர்ர்ர் வேற ஏகத்துக்கும் அளந்து கதை விடறார். ஹ்ம் இது வேலைக்கு ஆகாது.

ஒரு வழியாக மற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் தம்பதிகள் இருவரும் சாப்பிட அழைக்கப்பட்டனர்.சரி இப்பவாவது எப்படியும் பேசிவிடலாம்னு பார்த்தா எல்லாரும் சுற்றி நின்று கொண்டு பொண்ணுக்கு அதை ஊட்டி விடுங்க நீ மாப்பிள்ளைக்கு இதை ஊட்டி விடு என்று ஆளாளுக்கு ஏவ ஆரம்பித்தனர்.

ஏற்கனவே மிதுலா இரண்டு நாட்களாக சரியாய் சாப்பிடவில்லை.ஹோச்பிடலில் இருந்த அந்த நாளிலும் இன்று காலையில் திருமணம் நடந்து வசீகரனை கணவனாக கண்டு மனம் தெளிவாகும் வரையும் அவள் சரியாக சாப்பிட்டு இருக்கவில்லை.இப்பொழுது கண் முன்னே இத்தனை உணவு வகைகள் நாக்கில் நீர் ஊற ஆரம்பித்தது.முதலில் வயிற்றை சமாதான படுத்துவோம் பிறகு புருஷர்ர்ர்ர்ரை   சமாதான படுத்துவோம் என்று நினைத்தவள் சுற்றி இருப்போரை மறந்து தெய்வா வந்து ஊட்டிவிடு பசிக்குது என்று அன்னையை அழைத்தாள்.

எல்லாரும் அவளை விசித்திரமாக பார்க்க ஆரம்பித்தனர் வசீகரன் உட்பட.”ஒன்றும் இல்லை மாப்பிள்ளை எப்பொழுதும் அவள் நான் ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவாள். ஏண்டி கல்யாணம் ஆகிடுச்சு இன்னும் சின்ன பிள்ளையா ???இனிமேல் எல்லாம் நான் ஊட்டி விட மாட்டேன்.ஒழுங்காக நீயே சாப்பிட்டு பழகு.

தெய்வா பசிக்குது ரொம்ப நல்லா சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.ப்ளீஸ் என்னை பட்டினி போட்டு விடாதே !!!!

நீயே சாப்பிட்டு பழகு மிதுலா அங்கே வந்து உனக்கு யாரு ஊட்டி விடுவா?

அதெல்லாம் அவளுடைய வீட்டுக்காரர் ஊட்டிவிடுவார் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் பெண்டாட்டியை பட்டினி போட்டு விடுவாரா என்ன?அதெல்லாம் எங்க பையன் பார்த்துக் கொள்வான்.

அப்போ ட்ரைனிங் இப்பொழுது இருந்தே ஆரம்பிக்கட்டும் வசீகரா பொண்ணுக்கு ஊட்டி விடு.

அண்ணி அது தான் நான் இனி தொடர்ந்து செய்ய போகிறேனே.அத்தை நீங்கள் ஊட்டிவிடுங்கள் .நாளை எல்லாம் உங்கள் பெண்ணுக்கு ஊட்டி விட முடியாது  உண்மை நிலையை நினைவுறுத்தினான் வசீகரன்.

தாயை பிரிய போகிறோம் என்பதையே அப்பொழுது தான் உணர்ந்தாள் மிதுலா.முதன்முறையாக தாயை பிரிந்து போவதை எண்ணி கலங்கினாள். சிறு வயது முதலே மிதுலாவும் தெய்வானையும் ஒருவருக்கு ஒருவர் என்றே வாழ்ந்து வந்தனர்.நாளை முதல் தாயைக் கட்டிக் கொண்டு தூங்க முடியாது.காலையில் எழுந்ததும் அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டு பல்லை விளக்காமல் காபி குடிக்க முடியாது. சந்துரு கூடயும் சந்திரா கூடயும் விளையாட முடியாது.குளிச்சுட்டு கிச்சன் மேடை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அம்மாவை ஊட்டிவிடுமா பசிக்குது என்று பொய்யாக பசிப்பது போல் நடிக்க முடியாது.காலேஜ்க்கு போய்ட்டு வந்ததும் அம்மா மடியில் படுத்துக் கொண்டே அன்றைய கதைகளை பேச முடியாது.அந்தி சாயும் நேரத்தில் தெய்வா செய்து கொடுக்கும் தீனி வகைகளை குறை இல்லாவிட்டாலும் அது சரி இல்லை இது சரி இல்லை என்று பொய் கூறி தாயின் முகம் விளையாட்டாக சிணுங்குவதை ரசிக்க முடியாது. இத்தனை வயசு ஆகியும் உங்க பொண்டாட்டிக்கு சமைக்க தெரியலை அப்பா.சமையல் என்ற பெயரில் தினமும் புதுசு புதுசா ஏதாவது செஞ்சு என்னை வச்சு டெஸ்ட் பண்ணுறாங்க. உங்க பொண்டாட்டிக்கு என்னை பார்த்தால் பரிசோதனை கூட எலி மாதிரி தெரியுது போல.நீங்க கொஞ்சம் சொல்லி என்னை காப்பாத்துங்க அப்பா என்று தந்தையுடன் உரையாட முடியாது.நினைக்க நினைக்க மிதுலாவால் தாங்க முடியாமல் சுற்றுப்புறத்தை மறந்து அம்மா என்று கூவியபடி தெய்வானையை போய் கட்டிக் கொண்டாள்.

மகளை பிரிய போவதை எண்ணி ஏற்கனவே வருந்திக் கொண்டு இருந்த தெய்வானையும் மகளுடன் சேர்ந்து அழத் தொடங்கினார். இவர்கள் இருவரும் அழுவதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்த்தனர்.வயதில் சிறியவர்கள் ஏதொ நாடகத்தை பார்ப்பதை போல பார்த்தனர்.காவேரியோ நாளை தானும் தான் பெண்ணை பிரியும் பொழுது இப்படி தானே அழுவோம் என்று நினைத்தார்.வசீகரன் முகம் இன்னதென வரையறுக்க முடியாத உணர்ச்சிகளால் நிரம்பி இருந்தது.யாரும் பார்க்கும் முன் தனது முக பாவனையை சட்டென மாற்றிக் கொண்டான்.

அந்த தாய், மகளின் அழகிய உணர்ச்சி மிகுந்த அந்த நொடிகளை கலைக்க யாருக்கும் மனம் இல்லை.இருவரும் அழுது ஓய்ந்ததும் போதும் மிதுலா போய் உட்கார்ந்து சாப்பிடு.மாப்பிள்ளை அங்கே தனியாக இருக்கிறார் பார். இனிமேல் இப்படி அழாதே???

ஏன் தெய்வா உனக்கு கஷ்டமா இருக்கா???

இல்லை சாப்பிட்டு அதே கையோடு வந்து என்னை கட்டிப்பிடித்து அழுதாய் இல்லையா பார் புடவை எல்லாம் சாப்பாட்டு கறை ஆகிவிட்டது.பட்டு புடவை வீணாகி விடுமே என்று தான்.

சீரியசாக தாயை முறைக்க ஆரம்பித்தவள்.உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு தெய்வா. இங்கே நான் கதறி கதறி அழுகிறேன்.உனக்கு பட்டுப் புடவையை பற்றி கவலையா???? இரு வரேன் என்று போனவள் ஒரு கப் ஐஸ்கிரீமை எடுத்து வந்து தெய்வானையின் முகம் எல்லாம் தடவி விட்டு விட்டாள். தெய்வானை பயப்படுவது போலும், தடுப்பது போலும்  நடித்து மகளின் குறும்பை ரசித்தார்.அங்கு இருந்த அனைவருமே அந்த காட்சிகளை ரசித்து பார்த்தனர்.

தெய்வானையை ஒரு வழி செய்து விட்டு மீண்டும் சாப்பிட அமர்ந்த மகளுக்கு தானே அருகில் அமர்ந்து ஊட்டி விட தொடங்கினார் தெய்வானை.

சாப்பிட்டு முடித்ததும் மிதுலாவை குளிக்க சொல்லி மிதமான அலங்காரம் செய்து விட்டார்கள் தெய்வானையும் காவேரியும்.காவேரி மாடி அறையில் அலங்காரம் எல்லாம் முடிந்து விட்டதா என பார்த்து வர மாடிக்கு சென்று பிறகு மகளை அருகே அமர்த்திக் கொண்டு பேச தொடங்கினார் தெய்வானை.

மிதுலா உனக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சு. இன்னும் நீ குழந்தை கிடையாது. இனி பொறுப்பா நடந்துக்கணும். மாப்பிள்ளையை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தான் தெரியுது.நீ தான் அவரை புரிஞ்சு அவர் மனசு அறிஞ்சு நடந்துக்கணும் (நானா மாட்டேங்குறேன் உங்க மாப்பிள்ளை அது தான் என் புருஷர்ர்ர்ர் என்கிட்ட பேசினா தானே.இன்னும் அவர் ஹீரோ வா இல்லை வில்லனா னு எனக்கு டவுட் ஆஹ் இருக்கு)

மாப்பிள்ளையோட கோபம் நியாயமானது மிதுலா.அதை நாம் தப்பு சொல்ல முடியாது.அவர் மனசில இருக்கிற கோபம் ஆறும் வரை கொஞ்சம் பொறுத்துப் போ.தப்பு நம்ம பக்கம் என்பதை மறந்திட கூடாது.

சுஜியை பத்தி அவர்கிட்ட எடுத்து சொன்னா அவர் புரிஞ்சுப்பார் இல்லையாம்மா? அது தான் கல்யாணம் முடிந்து விட்டதே.இனி அவள் என்னை வந்து பார்த்து விட்டு போகட்டுமே!!!!

தப்பு மிதுலா.உன் கணவருக்கு பிடிக்காத விஷயத்தை எந்த காரணம் முன்னிட்டும் செய்யாதே.உங்கள் திருமணத்திற்கு அவர் வைத்த இரண்டு நிபந்தனையும் அப்படியே இருக்கட்டும்.என்றைக்கு அவருக்கு உன் மேலும் நம்மில் யார் மேலும் தவறு இல்லை என்ற எண்ணம் தோன்றி உறுதி ஆகிறதோ அன்றைக்கு அவரே இந்த நிபந்தனைகளை மாற்றிக் கொள்ளுவார். அதற்கு நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.அவர் உன் கணவர் நீ அவரின் மனைவி என்பதை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள் .அவர் மனதிலும் பதிய வை.

அவர் கோபப்பட்டாலும் நீ அமைதியாக இரு.நீ அவரோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினால்     தான் எனக்கும் சந்தோசம். நீ புத்திசாலி மிதுலா.இனி இது தான் உன் வாழ்க்கை இதை காப்பாற்றிக் கொள்வது உன் சாமர்த்தியம்.என்ன புரிந்ததா????

அம்மா ஒரு சின்ன சந்தேகம்?

என்ன மிதுலா? கேளு

நான் கிளம்பி போய் விட்டால் சந்திரனும் சந்திராவும் யார் கூட விளையாடுவாங்க???

கருமம் !!!! கருமம்!!!! எனக்குன்னு வந்து பொறந்து வச்சு இருக்கியே? ஆண்டவா இவளை வச்சுக்கிட்டு என் மாப்பிள்ளை என்ன பாடு பட போறாரோ தெரியலையே நீ தான் அவரை காப்பாற்ற வேண்டும் என்று மனதில் நினைத்த படியே மகளின் அலங்காரத்தை நிறைவு செய்து காவேரி வந்ததும் இருவரும் ஆசிர்வதித்து கையில் பால் சொம்பை கொடுத்து மாடிக்கு அனுப்பி வைத்தனர்.

உள்ளம் படபடவென அடித்துக் கொள்ள மெதுமெதுவாக மாடி ஏறினாள் மிதுலா.புதுப்பெண்ணுக்கு உண்டான வெட்கமும் அச்சமும் கலந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள்.அவளுடைய அறை தான் ஏனோ இன்று தயக்கத்துடன் மெதுவாக உள்ளே சென்று எட்டிப் பார்த்தாள்.

வசீகரன் பால்கனியில் நின்று கொண்டு இருப்பதை பார்த்தவள் உள்ளே வந்து கதவை சாத்தினாள்.வசீகரன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.இவரை எப்படி கூப்பிடுவது?

ஹலோ ஹஸ்பண்ட். – என்ன போன் பேசுரியா?

ஹுக்கும் ஹுக்கும்வெறும் காத்து தான் கவருதா?

ஏய் நீ கொஞ்சம் பேசாமல் இரேன். நானே எப்படி கூப்பிடறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்.நீ வேற ஊடால வந்து காமெடி பண்ணிக்கிட்டு.கிளம்பு முதல்ல. அடிப்பாவி நான் உன் மனசாட்சிடி.

 இருந்துட்டு போ.பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள உனக்கென்ன வேலை?

நேரம் தான்.அடியேய் என் தயவு உனக்கு என்றைக்கும் வேண்டும் மறந்து விடாதே. இப்ப போகிறேன்.தேவைப்பட்டால் கூப்பிடு வருகிறேன்.

வராதே போ.

ஒருவழியாக மனசாட்சியுடன் பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு சற்று நேரம் கணவன் திரும்புவான் என்று காத்து இருந்து பார்த்தவள்.அதன் பிறகு கைகளை மெதுவாக அசைத்து வளையல்களின் மூலம் ஒலி எழுப்பி அவனை திரும்ப வைத்தாள்.

வசீகரன் திரும்பியதும் அப்பாடி ஒரு வழியாக திரும்பிவிட்டார் என் புருஷர்ர்ர்ர் என்று மகிழ்ந்தவள் அதிர்ந்து நின்றாள் அவன் கையில் இருந்த பாட்டிலை பார்த்து.

வாடி என் அருமை பொண்டாட்டி வா வா என்று தள்ளாடிக் கொண்டே வந்தான் வசீகரன்.சிற்பமென உறைந்து போய் நின்றாள் மிதுலா.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here