நிலவே உந்தன் நிழல் நானே 2

0
1944
NUNN Tamil Novels 37

பஸ் ஸ்டாண்டை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள் மிதுலா. தெரு முனையிலே அவளது கல்லூரி பேருந்தை பார்த்துவிட்டாள். பேருந்தில் ஏற வேண்டுமே என்ற அவசரத்தில் எதிரில் வந்த வாகனத்தை பார்க்காமல் ரோட்டை கடக்க முயற்சி செய்தாள். ஆம் முயற்சி மட்டும் தான் செய்தாள். பாதி சாலையை கடந்த பிறகே எதிரில் வந்த வாகனத்தை பார்த்தாள். இனி பின்னோக்கியும் செல்ல முடியாது என்ன செய்வது என்று அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே அசுர வேகத்தில் அந்த வாகனம் அவளை நெருங்கி விட்டது.

பயத்தில் மிதுலாவுக்கு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றுமே புரியவில்லை. ஆயிற்று இதோ என் மேல் மோத போகிறது என்று அவள் நினைத்து பயத்துடனே கண்களை இறுக மூடி கொண்டாள். அடுத்த நிமிடம் அவள் முன்னே அந்த கார் “க்ரீச்”என்ற ஒலியுடன் பிரேக் போட்டு நின்றது.  

“மஹாராணி தூங்கி ஓய்வு எடுக்க ஒன்னும் கவர்மெண்ட் இங்க ரோடு போடலை! அப்படி தூங்கி தொலைக்கனும்னா வீட்டுலயே இருக்க வேண்டியது தான? என் இப்படி நடு ரோட்ல தூங்கி அடுத்தவங்க வேலைய கெடுக்கறீங்க? என்று கடுங்கோபத்தோடு ஒலித்தது ஒரு குரல் சட்டென கண்ணை திறந்து பார்த்தவள் திகைத்தாள். இவ்வளவு கோபத்தை கண்ணில் காட்ட முடியுமா? ஒரு மனிதனால்! எதிரில் நின்றவன் முகம் முழுக்க அப்படி ஒரு கோபம்.  

சூரியனோட சொந்தக்காரனா இருப்பானோ என்று அவள் நினைத்து கொண்டு இருக்கும் போது, ஏய்! இன்னும் எவ்வளோ நேரம் நடு ரோட்டில் நின்னு என் முகத்தையே பாத்து கிட்டு இருக்க போற. ஒழுங்கா வழிய விடு. ஆம்பிளைகளையே பார்த்தது இல்லையா என்ற அவன் குரல் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல இருந்தது மிதுலாவுக்கு. தான் இன்னும் நடு ரோட்டிலேயே நிற்பது புரிய சட்டென ஒதுங்கி நின்றாள்.  

இது வரை யாரிடமும் சுடுசொல் கேட்டிராத காரணத்தினாலோ என்னவோ கலங்கிய கண்களோடு அவனை ஏறிட்டாள். மெதுவாக தலையை நிமிர்ந்து அவன் கண்களை பார்க்காமலே, “சாரி காலேஜ் பஸ் கிளம்பிடுமோனு அவசரத்தில் வந்தேன் அதான் உங்க வண்டியை கவனிக்கலை என்று லேசான கம்மிய குரலில் அவனுக்கு விளக்கினாள்.  

அவளது குரலோ கலங்கிய கண்களோ இவைகளால் துளியளவும் பாதிக்க படாமல் வண்டியில் ஏறி கார் கதவை அறைந்து சாத்தி, “உங்களுக்கு இதெல்லாம் ஒரு சாக்கு நல்ல பணக்காரனா யாரையாச்சும் பார்த்தா போதும், அவன் கிட்ட பேசுறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வீங்க?” என்று எரிச்சல் குரலிலேயே சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்று விட்டான்.  

அவன் சென்று சில நிமிடம் கழித்துத் தான் அவளுக்கு சுய உணர்வே வந்தது. கடைசியாக அவன் பேசியது புத்தியில் உறைக்க அவளுள் சினம் துளிர்த்தது. இவன் கிட்ட பேச நான் அலையுறேனா? இவரு பெரிய தேசிங்கு ராஜா! என்று மனதுக்குள் அவனை வசை பாடிய படி அடுத்து வந்த பேருந்தில் ஏறி காலேஜ்க்கு சென்றாள்.  

ஒரு வழியாக சற்று தாமதமாகவே காலேஜ் வந்து சேர்ந்து ஆசிரியரிடம் அதற்கும் வாங்கிக் கட்டிக் கொண்டு ப்ராக்டிகளை ஆரம்பித்தாள். தேர்வு முடிந்து அனைவருக்கும் முன்பே வெளியேறி அங்கு இருந்த மர பெஞ்சில் அமர்ந்தாள்.

எத்தனை முறை யோசித்தும் அந்த கார் காரனின் முகம் அவளது நினைவுக்கு வரவே இல்லை கோபத்தில் சிவந்த அந்த கண்களும் நெருப்பை கக்கிய அவன் குரலும் தான் அவளுக்கு நினைவு வந்தது.  

சுளீரென்று முதுகில் அடி படவும் திகைத்து போய் திரும்பியவள் அங்கு நின்ற சுஜிதாவை பார்த்ததும், ஏண்டி பிசாசே இப்ப ஏண்டி இப்படி அடிச்ச?

“ஹம் வேண்டுதல் ஏண்டி எத்தனை தடவ கூப்பிடறேன். கூப்பிடறது கூட காதுல விழாம அப்படி என்ன கனவு டி காணுற?”

“ஒண்ணும் இல்ல டி எவ்வளோ யோசிச்சும் அவன் முகம் நியாபகத்துக்கு வர மாட்டேங்குது அதான் யோசிச்சுகிட்டு இருந்தேன்…”

“அவன் முகமா? பையனா? யாரு டி பார்க்க எப்படி இருப்பான்? கலர் என்ன? ஹைட் எவ்வளோ? எங்க இருக்கான்? 

“ஹேய் சுஜி கொஞ்சம் மூச்சு விடுடி…” ஹப்பா எவ்வளோ கேள்வி ஒரு நாளைக்காவது கிளாஸ்ல டீச்சர் கிட்ட இப்படி ஒரு டௌப்டாவது கேட்டு இருக்கியா? இப்ப என்கிட்ட இத்தனை கேள்வி கேக்குற?

நான் என்ன டவுட் கேக்க கூடாதுனு விரதமாடி இருக்கேன்! ஒண்ணு அவங்க எடுக்கிறது எனக்கு புரியணும் இல்லைனா சும்மா அஜித் மாதிரி பர்சனாலிட்டியா யாராச்சும் வந்து கிளாஸ் எடுத்தா எனக்கு அவன்கிட்ட பேசுறதுக்காகவே புதுசா எதாவது டவுட் வரும் இங்க தான் அதுக்கும் வழி இல்லாம எல்லாம் கல்யாணம் ஆன டிக்கெட்ங்களா இருக்கே? நான் என்ன பண்ண சொல்லு?

அம்மா தாயே பரதேவதை தெரியாம கேட்டுட்டேன். ஆளை விடு. சரி இன்னிக்கு எக்ஸாம் எப்படி செஞ்ச?  

“அதெல்லாம் எப்பவும் போல பாஸ் மார்க் வாங்கிடுவேன். நீ பேச்சை மாத்த பார்க்காத… யார் அவன்?”  

அவனா? எவன்? “நீ யாரை சுஜி சொல்ற என்று ஒன்றுமே தெரியாதவள் போல இமை கொட்டினாள்…”  

“ஏய் வேணாம்டி ஒழுங்கா சொல்லிடு இல்ல ஈவினிங் வந்து உங்க அம்மாட்ட போட்டு கொடுத்துடுவேன்…”

வாடி நல்லவளே! போட்டு குடுக்கறதுனா உனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே! “எனக்கே தெரியாது டி என்றவள், காலையில் நடந்ததை கூறினாள்.  

நீ சும்மாவா விட்ட அவனை? இல்ல டி வண்டி மேல மோத போகுதுனு பயந்து போய் இருந்தேன் அந்த நிமிஷம் எனக்கு எதுவுமே தோணலை சுஜி.

சரி விடுடி. மறுபடி என்னைக்காவது பார்த்தால் ஒரு வழி பண்ணிடலாம் என்ற சுஜிதாவிற்கு, மறுபடியுமா! அதுவும் அவனையா? “ஒருவேளை அப்படி பார்த்தா அவன் இருக்கிற திசை பக்கம் கூட திரும்ப மாட்டேன் “என்றாள் மிதுலா.  

“சரி விடு மிதுலா, நீ பார்க்காத கண்ணை மூடிக்கோ ஆளை மட்டும் காட்டு. நான் நல்லா பாத்துக்கிறேன்…”  

நீதானே? நீ எப்படி லுக்கு விடுவன்னு எனக்கு தெரியாதா? என்பது போல ஒரு பார்வையை சுஜிதாவை நோக்கி பார்க்கவும். இருவரும் பக்கென்று சிரித்தனர்.  

வகுப்புகள் முடிந்ததும் கையோடு எடுத்து வந்து இருந்த டிஃபனையும் காலி செய்தாயிற்று. அதிலும் பசி அடங்காமல் மிதுலாவை இழுக்கு கொண்டு கான்டீன்க்கு போய் ஒரு சப்பாத்தி செட்டும் சாப்பிட பிறகே நிம்மதியானாள் சுஜிதா. “

சுஜி லைப்ரரி வேற போகணும்டி லேட்டா ஆக்காதே. அம்மா கிட்ட 6 மணிக்குள்ள வந்துடறேனு சொல்லி இருக்கேன். லேட்டா போனா தெய்வாவ சமாளிக்க முடியாது. சீக்கிரம் கிளம்பு.

“லைப்ரரிக்கா என்று கேட்ட சுஜியின் முகம் போன போக்கை பார்த்த மிதுலாவுக்கு சிரிப்பை அடக்க முடியலை.

“ஏண்டி பிசாசே! இப்ப தான் கிளாஸ் முடிஞ்சு இருக்கு. மறுபடி ஏன்டி புக்ஸ் ஆஹ் நியாபக படுத்துற. நான் கொஞ்சம் நிம்மதியா இருந்தா உனக்கு பொறுக்காதே…” இந்த புக்ஸ் படிப்பு இதெல்லாம் எனக்கு அல்ர்ஜி உனக்கு தெரியாதா? அப்பறம் ஏன் அத பத்தி பேசுற?  

சுஜி, உங்க வீட்டுல எவளோ கஷ்ட பட்டு உனக்கு பீஸ் கட்டி படிக்கச் வைக்குறாங்க. கொஞ்சமாவது அதை உணர்ந்து படிக்குறியா?

“யாரு எங்க வீட்டுல ஏண்டி நீ வேற! வீட்டுல என்ன சமாளிக்க முடியாம தான் என்ன காலேஜ் அனுப்பறாங்க. மத்தபடி நீ சொன்ன மாதிரி படிக்க ஒண்ணும் இல்ல. அதுவும் இல்லாம மகேஷ் வீடு கட்டி முடியற ஸ்டேஜ்ல இருக்கு. கட்டி முடிச்சு கிரக பிரவேசம் முடிஞ்சதும் எங்க கல்யாணம் தான். அந்த மகேஷ் கடன்காரனுக்கு அப்படி ஒரு கனவு. சொந்த வீட்டுல தான் கல்யாணம் நடக்குமாம்” 

அடிப்பாவி என்னடி அண்ணனை போய் இப்படி சொல்லுற?  

ஆமா பெரிய அண்ணன்! என் கஷ்டம் யாருக்கு புரியுது!

ஏண்டி இப்ப உனக்கு என்ன கஷ்டம்?

“சொந்த அத்தை பையனை லவ் பண்ணினேன் பாரு அது தான். லவ் பண்றது வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ அப்படிங்கிற பயம் இல்ல, ஒரு டென்ஷன், ஒரு பரபரப்பு ஒரு திரில் எதுவுமே இல்ல! நீயாவது லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கோடி. அதுவும் சொந்தத்துல எல்லாம் வேண்டாம். யாருனே தெரியாத ஆளை பாத்து லவ் பண்ணு. என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட கேளு நான் பண்ணுறேன். அப்ப தான் என் லைப் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். “

“சரிடி நீ சொல்லிட்டே இல்ல இனி அடுத்த வேலை அது தான். தயவு செஞ்சு இப்ப என்னை நம்ம ஏரியா லைப்ரரி ல உன் வண்டில கொஞ்சம் ட்ராப் பண்ணு.  

“சும்மா ஓசில எல்லாம் கூட்டிட்டு போக முடியாது. நாளைக்கு கேன்டீன்ல சமோசாவும் ஐஸ் கிரீமும் வாங்கி தரியா?  

வாங்கி தரேன் டி. இப்ப கூட்டிட்டு போயேன் ப்ளீஸ் நேரம் ஆகுது.  

லைப்ரரி வாசலில் இறக்கி விட்டதும், இத பாரு மிதுலா எனக்கு இந்த புக்ஸ் வாசனை எல்லாம் அல்ர்ஜி அதனால நான் இப்படியே கிளம்புறேன். நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் பை, என்றவள் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்து விட்டாள்.  

லைப்ரரிக்குள் சென்ற மிதுலா அவளது படிப்பு சம்பந்தமான குறிப்புகளை எடுத்து முடிந்ததும் ஒரு கவிதை புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்தாள். 6. 30 மணி ஆன பிறகே நேரத்தை பார்த்தவள். விரைந்து வீட்டுக்கு செல்ல கிளம்பினாள்.

மணி ஆச்சே! வீட்டுக்கு போனதும் தெய்வா அட்வைஸ் பண்ணியே ரெண்டு காதுலயும் ரத்தம் வர வச்சுடுவாங்களே என்ற யோசனையோடு சென்றவள். அப்பொழுதுதான் மரத்தில் இருந்து கீழே விழுந்த அந்த அணில் குட்டியை பார்த்தாள். அதே நேரம் அணில் குட்டியை நோக்கி வந்த ஆட்டோவை பார்த்ததும் நொடி கூட யோசிக்காமல் ஆட்டோவின் முன் பாய்ந்து அணில் குட்டியை கையில் எடுத்துக் கொண்டாள்.

ஆட்டோக்காரன் நிலை தடுமாறி எதிரில் வந்த வாகனத்தில் மோத போய் கடைசி நிமிடத்தில் தப்பினார். ஆட்டோவில் இருந்து இறங்கி கடும் கோபத்துடன் அவளை திட்டி கொண்டு இருந்தார்.

அவள் கையில் இருந்த அணில் குட்டியை பார்த்ததும், ஏம்மா இந்த அணில் குட்டிக்காகவா எங்க எல்லார் உயிரோடயும் விளையாடின? என்று கேட்டார்.

அவருக்கு பதில் கூற அவள் முனையும், “முன் மறுபடியும் நீயா? என்ற எரிச்சல் குரலில் சட்டென திரும்பி பார்த்தாள். இது அவன் குரல் ஆச்சே!

ஏய் உனக்கு வேற வேலையே இல்லையா? எல்லா வண்டி முன்னாடியும் விழுந்து வைக்குற?

காலையில என்னை திட்டின இல்ல என்று மனதுக்குள் நினைத்தவள், அதுவா சார் நேத்து தான் எங்க குல தெய்வ கோவிலுக்கு போய் அப்படி வேண்டிக்கிட்டு வந்தேன் அதான் என்றாள்.

என்ன கொழுப்பா? நீ தானே வேண்டிக்கிட்ட அதுக்கு ஏன் எங்களை பலி கெடா ஆக்குற? என்று கத்தியவன், சரியான லூசு! என்றவன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி போயே விட்டான். ஆங் லூசா! நானா? நீ தான் லூசு என்று அவள் திட்டியதை கேட்கத் தான் ரோட்டில் ஆள் யாரும் இல்லை. அவள் மட்டும் தனியாக ரோட்டில் “பே”என்று முழித்து கொண்டு இருந்தாள்.

இப்படி ரோட்டில தனியா லூசு மாதிரி புலம்ப வச்சுட்டானே இவன் மறுபடி சிக்கட்டும் இவனை சாரி சொல்ல வச்சே ஆகணும். மிதுலா வை பத்தி தெரியாம என்கிட்டேயே வந்து வழியக்க வந்து தலையை குடுகுறியே! இரு! இரு! என்கிட்ட ஒருநாள் மாட்டுவ அப்ப உனக்கு இருக்குடா! தீபாவளி! யாரை பாத்து லூசுன்னு சொன்னான். அவனை சும்மாவே விட கூடாது என்று அவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டே வீட்டிற்கு போனாள்.

மறுநாள் கல்லூரியில் சுஜிதா கெஞ்சி கொண்டு இருந்தாள் மிதுலாவிடம்.

“ஹே மிதுலா இவளோ கெஞ்சறேன்ல ப்ளீஸ் நீயும் வாயேண்டி?

“சொன்னா கேளு சுஜி மகேஷ் அண்ணா பர்த்டே பார்ட்டிக்கு உன்னை தான் கூப்பிட்டு இருக்கார். நீ போ நான் வரல. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் எதுக்கு நந்தி மாதிரி நீ போயிட்டு வாடி…”

“மிதுலா சொன்னா புரிஞ்சுக்கோடி. அவரோட பிரண்ட்ஸ் எல்லாரும் வராங்க எல்லாருக்கும் என்னை அறிமுகப் படுத்தறேன்னு சொல்லி இருக்கார். நான் மட்டும் தனியா போக ஒரு மாதிரி இருக்குப்பா. கூட துணைக்கு நீயும் வாயேன். “

“அம்மா விட மாட்டாங்க சுஜி. அம்மாக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல. தனியா ஸ்டார் ஹோட்டலுக்கு எல்லாம் அனுப்பவே மாட்டாங்க …”

“அம்மாகிட்ட நான் பேசி பெர்மிசன் வாங்குறேன். அப்ப ஓகேவா?

ஹம் விட மாட்டியே சரி போனா போகுது அப்ப ஓகே. பட் ரொம்ப நேரம் இருக்க மாட்டேன்.

அங்கே போனதும் தன் வாழ்க்கை அடியோடு மாறிவிடும் என்று தெரிந்து இருந்தால் ஒருவேளை மிதுலா அங்கு செல்லவே ஒத்துக் கொண்டு இருக்க மாட்டாள்.  

அதெல்லாம் ரொம்ப நேரம் ஆகாது மிதுலா. சனிக்கிழமை சாயந்திரம் ரெடியா இரு. நான் வந்து அம்மாகிட்ட பேசுறேன்.

எப்படியோ அம்மாகிட்ட பெர்மிசன் வாங்கிட்டியே. சும்மா சொல்லக்கூடாது சுஜி நீ பெரிய ஆள்தான். பின்ன சுஜியா கொக்கா! என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்.

“போதும்டி ரொம்ப சீன் போடாத. நான் கை கழுவ போகும் போது நீ அம்மா காலுல விழுறத பாத்தேனே. காலுல விழுந்து கெஞ்சிட்டு பெருமை வேற உனக்கு. “

ஹே அது சும்மா எனக்கு கல்யாணம் ஆக போகுது இல்ல அதான் அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கினேன்.

“அப்படியா நீ சொன்னா சரியாய் தான் இருக்கும் நான் நம்பிட்டேண்டி… ஆமா சுஜி அது என்னவோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே, குப்புற விழுந்தாலும் மீசையில் மண்ணு ஓட்டலைன்னு, கேள்விப்பட்டு இருக்கியா?

சரி விடு டி. மானத்தை வாங்காத என்று இருவரும் ஒருவருக்கு ஒருவர் வம்பு இழுத்த படி பேசி கொண்டே மகேஷ் சொன்ன ஹோட்டலுக்கு ஆட்டோவில் சென்று இறங்கினர். சுஜி மஹேஷ்க்கு போன் செய்து எந்த டேபிள் என்று விசாரித்து கொண்டு இருந்தாள். இடைஞ்சலாக அங்கேயே நிற்க மனம் இன்றி வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கு இருந்து நகர்ந்தாள்.

அங்கு இருந்த செயற்கை நீரூற்றுக்கு அருகில் இருந்து அதன் அழகை ரசித்து கொண்டு இருந்தாள். யாரோ தன்னை உற்று பார்ப்பது போல் தோன்றவும் திரும்பி பார்த்தாள். ஆனால் அங்கே யாரும் இல்லை.

ஒருவேளை மனப்பிரமை ஆக இருக்கும் என்று அதோடு அதை விட்டு விட்டாள்.

போனில் பேசிவிட்டு வந்த சுஜிதா வாடி உள்ள போகலாம் மகேஷ் ஏற்கனவே வந்தாச்சு. உள்ள தான் இருக்கான்.

ஏய் சுஜி எருமை! உள்ள அண்ணாவோட பிரண்ட்ஸ் எல்லாரும் இருப்பாங்க அவங்க முன்னாடி இப்படி மரியாதையை இல்லாம பேசி வைக்காத!

மிதுலா, அப்படி சட்டுனு என்னால நல்ல பொண்ணா எல்லாம் மாற முடியாதுப்பா. இப்படி கூப்பிட்டு பழகிடுச்சு. விட்டுடு ப்ளீஸ்.

எப்படியோ போ. இப்ப வா உள்ள போகலாம். இங்க நிக்கவே ஒரு மாதிரியா இருக்கு. எல்லாரும் என்னையே பாக்குற மாதிரி இருக்கு. சரி சரி வா போகலாம் என்று இருவரும் உள்ளே சென்றனர். மிதுலாவை பின் தொடர்ந்து வந்த அந்த ஒரு ஜீவனை தான் இருவரும் கண்டு கொள்ளவே இல்லை. உள்ளே நுழைந்த மிதுலா சத்தியமாக அத்தனை பேரை எதிர் பார்த்து இருக்கவில்லை. ஒரு பெரிய கூட்டமே இருந்தது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here