நிலவே உந்தன் நிழல் நானே 30

0
1311
NUNN Tamil Novels 37

எழுதிய கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு மடித்து அதே கண்ணாடியின் கீழே இருந்த சிறு டிராயரில் வைத்து பூட்டினாள். மெதுவாக எழுந்து ஹாண்ட் பேக்கை எடுத்து தேவையான பொருட்களை அதில் அடிக்கி வைத்துக் கொண்டு  மாடியில் உள்ள ஜன்னல் வழியாக எட்டி வாசலை பார்த்தாள் மிதுலா.

வாட்சமேன் மட்டும் உட்கார்ந்து பழைய ரேடியோவில் ஏதோ பாட்டை கேட்டுக் கொண்டு இருந்தார்.ஓசை எழுப்பாமல் பூனை போல் நடந்து ஹாண்ட் பேக்கை கையில் எடுக்கவும் வசீகரனின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.போன் ஒலி கேட்டு வசீகரன் தூக்கத்தில் இருந்து புரண்டு விழித்தான்.தூக்க கலக்கத்தோடு போனை எடுத்து பார்த்து பேச தொடங்கினான்.

“என்னடா…சொல்லு”

……………

“அதெல்லாம் அந்த பைலிலேயே இருக்கும் . நன்றாக தேடிப்பார்”

………

“இரண்டு நாட்கள் கூட ஆனாலும் பரவாயில்லை.இருந்து முடித்துக் கொண்டு வா….சரிதானா”

…………

“ஆமாம் தூங்கி கொண்டு தான் இருந்தேன்.அதற்கென்ன இப்பொழுது…….”

….……….

“டேய்….ஒழுங்கா போன வேலையை முடித்துக் கொண்டு சீக்கிரம் வா….. புரிந்ததா”

……..

“சரி சரி தொனதொனக்காதே….போனை வை”

வசீகரன் போன் பேசிக் கொண்டு இருக்கும் போதே ஹாண்ட் பேக்கை மறைவாக ஒளித்து வைத்து விட்டு பால்கனியில் இருந்த ஊஞ்சலில் ஒன்றும் தெரியாதவள் போல போய் அமர்ந்து விட்டாள் மிதுலா.

போனை வைத்துவிட்டு தூக்க கலக்கத்தில் கைகளால் பக்கத்தில் துழாவினான்.  அருகில் மிதுலா இல்லாததால் அறை முழுக்க பார்வையாலேயே தேடியவன் பால் கனியில் அவளை பார்த்ததும் லேசான சிரிப்புடன் எழுந்து மிதுலாவை நோக்கி சென்றான்.வசீகரன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து இருந்தாலும் மிதுலா திரும்பவில்லை.

மெதுவாக மிதுலாவை உரசினாற் போல அவளுக்கு அருகில் அமர்ந்து அவளது. தோளில் கை போட்டு அருகில் இழுத்துக் கொண்டான்.

“என்ன இங்கே வந்து உட்கார்ந்து விட்டாய்….. கொஞ்ச நேரம் தூங்கலாம் இல்லையா….ஏன் இப்படி இங்கே வந்து உட்கார்ந்து இருக்கிறாய்!!!!”

…………..

“என்ன முன்னாடி எல்லாம் வாய் கிழிய பேசுவ…. இப்ப என்ன வாயையே திறக்க மாட்டேன்கிறாய்……… ஹ்ம்ம்…ஏதாவது பேசு”

…………..

ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் கண்களோடு தன் பார்வையை கலக்க விட்டான். அவள் கண்களில் தெரிந்த கலக்கத்தை நொடியில் உணர்ந்தவன் அவளை இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டான்.

“வேண்டாம் மிதுலா…… தேவை இல்லாததை எல்லாம் எண்ணி குழம்பிக் கொள்ளாதே…..இப்பொழுது இந்த நொடி மட்டுமே நிஜம்….அதை மட்டும் கருத்தில் கொள்…. இப்படி உன்னை நீயே வருந்திக் கொள்ளாதே…..”

………..

“சரி நீ இங்கேயே இரு….நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வருகிறேன்”

“நானே கீழே போய் சாப்பிட்டு கொள்கிறேன்…..காலையில் இருந்து கீழே செல்லவே இல்லை…. அத்தை தேடுவார்கள்”

“அதெப்படி தேடுவார்கள்…..உனக்கு தான் நேற்று இரவில் இருந்தே காய்ச்சல் அடிக்கிறதே” என்று கூறிவிட்டு கண் சிமிட்டினான்.

‘எனக்கு ஜூரமா’

“அப்படித்தான் பெரியம்மாவிடம் சொல்லி இருக்கிறேன்.அதனால் இன்று முழுக்க நீ அறையை விட்டு வெளியே போகவில்லை என்றாலும் அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.எனக்கும் நீ இந்த அறையை விட்டு வெளியே போகாமல் இருப்பது தான் வசதி”என்று கூறி விட்டு இன்னும் கொஞ்சம் அருகில் நகர்ந்து அமர்ந்தான்.

………….

“உ…. உனக்கு இப்பொழுது உடம்புக்கு ஒன்றும் இல்லையே….நேற்று….என்னால் தான் உனக்கு உடம்புக்கு முடியாமல் போனதா…. நான் வேண்டும் என்றே அப்படி நடந்து கொள்ளவில்லை…..”

‘இவருக்கு மன்னிப்பே கேட்க தெரியாது போல….. இவரை விட்டு போய் தான் ஆக வேண்டுமா????……. பேசாமல் இவருடனே தங்கி விட்டால் என்ன…ஹ்ம்ம் இல்லை மிதுலா இது சரி படாது. இப்படி ஒரு திருமண பந்தத்தில் என்னை ஏன் கங்காதரன் மாமா சிக்க வைத்தார்???? இவர் நிவியை காதலிக்கிறாரா இல்லையா இது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாது என்னால் உறுத்தல் இல்லாமல்  நிம்மதியாக இருக்க முடியாது.

எங்கே சென்றால் இந்த கேள்விகளுக்கு பதில் தெரியுமோ அங்கே சென்று என் கேள்விகளுக்கு உண்டான பதிலை தெரிந்து கொண்ட பின் தான் என்னுடைய இல்லற வாழ்க்கை தொடங்கும்’ தனக்குள்ளேயே எண்ணி கொண்டவள் வசீகரனின் மீசை உராயவும் நிகழ் காலத்திற்கு வந்தாள்.

“கூப்பிட கூப்பிட கவனிக்காமல் என்ன யோசனை…..இரு நான் போய் உனக்கு சாப்பிட எடுத்து வருகிறேன் “என்று கூறிவிட்டு எழுந்து சென்றான் வசீகரன்.

தனக்கும் வசீகரனுக்கும் நிகழ்ந்தது காதல் திருமணம் இல்லை தான். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் ஒருநாள் கூட புருஷர்ர்ர்ர்ரை வெறுத்தது கிடையாது.அதுவும் நேற்று அந்த பார்ட்டியில் இன்னும் அவர் காலடியிலேயே நான் விழுந்து விட்டேன்.ஆனால் இப்படி ஒரு தொடக்கம் எங்கள் இருவரின் மகிழ்ச்சியையே கெடுத்து விடும்.அதற்கு இடம் அளிக்க கூடாது.’

“ஏய் …… பொண்டாட்டி…சாப்பிட வா” கையில் சாப்பாடு தட்டுடன் வசீகரன் தான் அவளை அழைத்தான்.கையில் இருந்த இரண்டு தட்டுகளில் ஒன்றை மிதுலா விடம் கொடுத்து விட்டு ஒன்றை அவன் சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டு முடித்ததும் தட்டை வாங்கி கொண்டு போய் வசீகரனே கீழே வைத்து விட்டு வந்தான்.”இதோ பார் இப்படி ஒன்றுமே பேசாமல் இருக்காதே…..எப்பொழுதும் போல இயல்பாக இரு….சரிதானா”

…………..

“பேச மாட்டாய்…. அப்படி தானே….சரி நீ ஒன்றும் பேச வேண்டாம் போ” என்று கூறிவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான்.

இரவு ஆகியும் மிதுலா அங்கு இருந்து எழவே இல்லை.நிலவை பார்த்துக் கொண்டே அப்படியே இருந்தாள். சற்று நேரம் பொறுத்து இருந்தவன் எழுந்து மீண்டும் மிதுலாவின் அருகில் வந்து நின்றான்.மிதுலா தன்னுடைய யோசனையிலேயே இருந்தவள் வசீகரனை கவனிக்கவில்லை.ஊஞ்சலில் அமர்ந்து இருந்தவளை அலேக்காக தூக்கி கொண்டு வந்து கட்டிலில் அமர வைத்து அவள் அருகிலேயே தானும் அமர்ந்து கொண்டு பேச தொடங்கினான்.

“புருஷன் கோவமா இருந்தா கெஞ்சி கொஞ்சி அவனை சமாதானம் செய்ய வேண்டும் புரிந்ததா???? அதை விட்டு இப்படி ஆகாயத்தையும், நிலாவையும் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடாது”

‘ஆமாம்…. உன் மீது நான் கோபமாக இருக்கும் பொழுதெல்லாம் நீ அப்படியே கொஞ்சி கொஞ்சி தான் என்னை சமாதான படுத்தினாயா’

“இதோ இப்படி அருகில் வந்து அமர்ந்து முதலில் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து சமாதான படுத்த வேண்டும். அதற்கும் மசியவில்லையெனில் கன்னத்தில்,அதற்கும் மசியவில்லையா அடுத்தது நேராக இதோ இந்த உதட்டில் தான்”என்று பேசிக் கொண்டே ஒவ்வொரு இடத்திலும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.

அவன் கைகளில் குழையும் உடலை தடுக்கும் வகை அறியாது வசீகரனை எதிர்க்க ஆரம்பித்தாள்.அவளின் எதிர்ப்புகளை சுலபமாக முறியடித்தவன்,”குழப்பம் வேண்டாம்டி என் பொண்டாட்டி….. என்னை தடுக்கவோ,என்னிடமிருந்து தப்பிக்கவோ உன்னால் முடியாது….. இது ருசி கண்ட பூனை… பாலை பார்த்தால் சும்மா விடாது” என்று பேசிக் கொண்டே அவன் காரியத்தை சாதித்து கொண்டான்.

குழப்பமான மனநிலையில் இருந்த மிதுலா தான் வசீகரனுடன் ஒன்றவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்து போனாள். தான் எடுத்த முடிவு சரி தான் என்று உறுதியோடு நினைத்தவள் வசீகரன் உறங்கும் வரை காத்திருந்தாள்.

வசீகரன் நன்கு உறங்கிய பின் ஹாண்ட் பேகில் எல்லாம் இருக்கிறதா என்று ஒருமுறை சரி பார்த்துக் கொண்டு மெலிதான விடியலுக்கு காத்திருந்தாள்.வசீகரன் இடையிடையே கண் விழிக்கும் போதெல்லாம் அருகிலேயே படுத்து உறங்குவது போல காட்டி கொண்டாள்.

மணி விடியற்காலை நான்கு ஆனதும் குளித்து விட்டு வெளியே வந்து வசீகரனின் போனை எடுத்து கொஞ்சம் நோண்டி விட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

அறை வாசலை தாண்டும் முன் நின்று வசீகரனை முழுமையாக ஒருமுறை நன்கு பார்த்து கண்களில் நிரப்பிக் கொண்டு கீழே சென்றாள்.வாசலில் இருந்த வாட்ச்மேனிடம் சென்று நின்றாள். இந்நேரம் அவளை அங்கு எதிர்பார்க்காததால் பேந்த பேந்த முழித்தார் வாட்ச்மேன்.

“ஒன்னும் இல்லை அண்ணா…..மாடியில் எங்க ரூமில் கண்ணாடிக்கு கீழே உள்ள லாக்கர் திறக்க மாட்டேங்குது…..கொஞ்சம் எண்ணெய் விட்டு திறந்தால் சரி ஆகி விடும்னு நினைக்குறேன்.போய் கொஞ்சம் ஆயில் வாங்கிக் கொண்டு வரீங்களா????”

‘வீட்டிலேயே இருக்குமே….வேறும் எண்ணெய் வாங்கவா இந்த பெண் இப்படி விடிந்தும் விடியாமலும் வந்து நிற்கிறது’என்று யோசனையோடு மிதுலாவை பார்த்தார் வாட்ச்மேன்.

“அது ஒண்ணும் இல்லை அண்ணா…என் புருஷ…….வீட்டுக்காரர்க்கு இப்ப காலையில் ஐந்து மணிக்கு வெளியூர் போகனுமாம்….கிளம்பிக்கிட்டு இருக்கார்.முக்கியமான பைல் ஒண்ணு உள்ளே மாட்டிகிச்சு….. அதான் உங்களை போய் உடனே வாங்கி வர சொன்னார்.கொஞ்சம் சீக்கிரம் போறீங்களா ….இல்லைன்னா அவர் கீழே வந்து உங்களை திட்ட ஆரம்பிச்சுடுவார்….சீக்கிரம் போங்க அண்ணா ……. ப்ளீஸ்!!!”

வசீகரனிடம் திட்டு வாங்க வேண்டி இருக்குமோ என்ற பயத்திலேயே வாட்ச்மேன் பதறி அடித்துக் கொண்டு வாங்க கிளம்பினார்.

“அண்ணா…எதற்கு இத்தனை பயம்….மெதுவாகவே போய் வாங்கிட்டு வாங்க….வாங்கினதை மறக்காம அவர் கையில் கொடுத்துடுங்க. அவருக்கு கண்டிப்பாக தேவை படும்….எனக்கு தோட்டத்தில் வேலை இருக்கிறது.சரிதானா!!!!! என்று ஒருமுறைக்கு இருமுறை கேட்டு தெளிவு படுத்தி கொண்டு வாட்ச்மேன் அங்கிருந்து கிளம்புவதற்காக மறைந்து போய் நின்று காத்திருந்தாள்.

வாட்ச்மேன் அங்கிருந்து கிளம்பியவுடன் நொடி கூட தாமதிக்காமல் அங்கிருந்து வெளியேறினாள்.இயல்பாக நடந்து தன்னுடைய பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெயின் ரோட்டிற்கு நடந்து வந்து ஒரு ஆட்டோவை பிடித்தாள். செல்ல வேண்டிய இடத்தை கூறிவிட்டு கண்ணை மூடி கண்ணீர் வழிய வழிய அப்படியே அமர்ந்து விட்டாள் மிதுலா.

தூக்கம் கலைந்ததும் கைகளாலேயே மிதுலா வை தேடினான் வசீகரன்.அவள் தட்டு படாததால் மெதுவாக எழுந்து பால்கனியில் பார்த்தான்.அப்பொழுதும் அவன் ஒன்றும் பெரிதாக   பதட்டமடையவில்லை.சிரித்து கொண்டே எழுந்து குளியல் அறையை பார்த்தான்.அங்கேயும் அவள் இல்லை. ஒருவேளை நேற்றே பெரியம்மாவை பார்க்க வேண்டும் என்று சொன்னாளே என்று எண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியேறி நேராக கிச்சனில் இருந்த காவேரியை தேடி போனான்.

“என்ன வசி …… எழுந்து விட்டாயா…. மிதுலாவிற்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு.இன்னும் அவளுக்கு ஜுரம் குறையவில்லையா……”

“என்ன பெரியம்மா….அவள் கீழே வரவில்லையா”

“இல்லையே தம்பி…… அவளை நான் நேற்று மாலை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா பார்ட்டிக்கு போகும் பொழுது பார்த்தது தான். அதன் பிறகு அவளை பார்க்கவில்லையே….. ஒருவேளை தோட்டத்தில் இருக்கிறாளோ என்னவோ???”

காவேரி பேசி முடிக்கும் முன் மின்னலென பாய்ந்து தோட்டத்திற்கு சென்று மிதுலாவை தேடினான்.அதற்குள் காவேரியும் தோட்டக்காரனையும் வர்ஷினியையும் அழைத்து வீடு முழுக்க தேடி விட்டு தோட்டத்திற்கும் வந்து தேட ஆரம்பித்தனர்.

“அய்யா…. கிளம்பிட்டீங்களா”

மிதுலாவை தேடிக் கொண்டு இருந்த பரபரப்பில் வாட்ச்மேனை எரித்து விடுவது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் முழு தோட்டத்தையும் அலசினான் வசீகரன்.எங்கு தேடியும் மிதுலா கிடைக்காததால் சோர்ந்து போய் அப்படியே உட்கார்ந்து விட்டான்.காவேரி போன் செய்து விஷயத்தை சொன்னதும் சக்தி ஓடோடி வந்தான்.

“என்னடா…. என்ன ஆச்சு”

………..

“வசி உங்கிட்ட தான் கேட்கிறேன் பதில் சொல்லுடா”

………

“இவன் என்னம்மா இப்படி மரம் மாதிரி உட்கார்ந்து இருக்கான்….. கடைசியா மிதுலாவை எப்பொழுது பார்த்தீங்க????”

“நேற்று மாலை இவங்க ரெண்டு பேரும் பார்ட்டிக்கு போன நேரம் பார்த்தது தான்”….என்றார் காவேரி

“நான் எல்லாம் அவள் முகத்தை கூட பார்க்க மாட்டேன்” என்றாள் வர்ஷினி

‘உன்னை கேட்டேனா ‘என்பது போல ஒரு பார்வையை பார்த்துவிட்டு சமையல்கார அம்மாவிடம் சென்று விசாரிக்க ஆரம்பித்தான் சக்தி.

ஒவ்வொருவரிடமும் விசாரித்து கொண்டு இருக்கும் போது இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் வந்து நின்றான் வாட்ச்மேன்.

“வாட்ச்மேன் மிதுலாவை நீங்க கடைசியாக எப்ப பார்த்தீங்க???? நேற்று ராத்திரியா????”வசீகரனை பார்த்துக் கொண்டே தான் கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தான் சக்தி.வசீகரன் தலையில் கை வைத்த படி அப்படியே தான் அமர்ந்து இருந்தான்.

“இல்லை தம்பி…… இன்னிக்கு காலைல ஒரு நாலு – அஞ்சு மணிக்குள்ள பார்த்தேன்.”

“எங்கே இருந்தா….. பால்கனியிலா????”

“இல்ல தம்பி ……. வாசலுக்கு வந்து  என்கிட்ட பேசினாங்க”

“அந்த நேரத்தில் உங்ககிட்ட வந்து பேசினாளா உண்மையை சொல்” நம்பாமல் வெளிவந்தது சக்தியின் குரல்.

“ஐயோ தம்பி …..நிஜமா தான் சொல்றேன்…..முதலாளி தான் அவசரமாக போய் ஆயில் வாங்கிட்டு வர சொன்னதா சொன்னாங்க….நானும் அதை வாங்கிட்டு வந்து ரொம்ப நேரமா அய்யாகிட்ட கொடுக்க முயற்சி செய்றேன்….ஆனா அய்யா தான் நான் கிட்டே போனாலே துப்பாக்கி எடுத்து சுடற மாதிரியே பார்க்கிறார்…..அதான் கொடுக்கலை”

“என்ன ஆயில் வாங்கிட்டு வந்து அய்யாகிட்ட கொடுக்க சொன்னாங்களா….இவ்ளோ பெரிய வீட்டில் ஆயில் இல்லையா…. பொய் சொல்லாதே…..மிதுலாவை என்ன செய்தாய்????”

“அய்யா சாமி சத்தியமா சொல்றேங்க….அவங்க தான் வந்து என்கிட்ட சொன்னாங்க… நான் வாங்கிட்டு வந்து இதோ என் கையிலேயே வச்சு இருக்கேன்……அவ்வளவு தான் சாமி எனக்கு தெரியாது”

“இப்போ எதுக்கு இந்த ஆயில்”

“தெரியலைங்க….. மாடில அய்யா ரூம்ல கண்ணாடிக்கு கீழே இருக்கிற டேபிள்ல ஏதோ அய்யாவுக்கு தேவைப்படும் முக்கியமான விஷயம் இருக்குது…அதோட பூட்டு திறக்கறதுக்கு வேணும்னு சொல்லி வாங்கிட்டு வர சொன்னாங்க.கண்டிப்பா அய்யா எழுந்ததும் அதை திறப்பார்ன்னு சொன்னாங்க”.

மற்றவர்கள் அனைவரும் ஒன்றும் புரியாமல் குழம்பி போய் இருக்க, வசீகரன் மட்டும் ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் சென்று மாடியில் உள்ள அவனது அறைக்கு சென்று கண்ணாடியின் கீழே இருந்த அந்த ட்ராயரை திறந்தான்.நான்காக மடித்து வைத்து இருந்த காகிதம் அவனை பார்த்து சிரித்தது.கைகள் மெல்ல நடுங்க , உடலெங்கும் வேர்த்து வடிய அதை எடுத்து பிரித்து படிக்கலானான் வசீகரன்.

மனங்களும் சங்கமிக்க   சிக்கலின் நூல் நுனி எங்கே இருக்கிறது என்பதை அறிய கங்காதரன் மாமா வீட்டிற்கு போகிறேன்…..ஒருவேளை வர முடியாத சூழ்நிலை எனில் தங்கள் காதலியோடு இணைய என் வாழ்த்துக்கள்…..

இப்படிக்கு

மிதுலா

Facebook Comments Box
Previous PostMMK tamil novels 8
Next PostThanalai Erikum Panithuli 7
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here