நிலவே உந்தன் நிழல் நானே 32

0
1381
NUNN Tamil Novels 37

ஹாய் மக்களே,நிலவே உந்தன் நிழல் நானே இன்னும் ஒரு வாரத்தில் முடிஞ்சுடும்.. படிக்காதவங்க படிக்க ஆரம்பிச்சுடுங்க… ஏற்கனவே பலமுறை போட்ட கதை தான்.அதனால கதை முடிஞ்ச ரெண்டு நாளில் லிங்க் எடுத்துடுவேன்… அதுக்கு அப்புறம் kindle ல தான் படிக்க முடியும்…

“பெரியம்மா இவங்களை  யார் இங்கே வர சொன்னது????”

“மாப்பிள்ளை…… நா….. நானாக தான் வந்தேன்”

“இதோ பாருங்க பெரியம்மா….. இவர்களோடு பேசுவது பிடிக்காமல் தானே மிதுலாவுக்கு வேறு ஒரு புது சிம் கார்டு வாங்கி கொடுத்து இருக்கிறேன்…. இவர்களோடு தொடர்பே இருக்க கூடாது என்று நான் நினைத்தால் இவர்கள் இப்படி இங்கேயே வந்து நின்றால் என்ன அர்த்தம்……. கிளம்ப சொல்லுங்கள்”

வசீகரன் பேச பேச இது என்ன புது கதை என்று    தெய்வானையை தவிர மீதி இருந்த மூன்று பேரும் குழம்ப தொடங்கினர்.

“மாப்பிள்ளை…. ஒரே ஒரு முறை மிதுலாவை மட்டும் பார்த்து விட்டு போய் விடுகிறேனே” கெஞ்ச தொடங்கினார் தெய்வானை.

“என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு என் மனைவி உங்களிடம் பேசாமல் உங்களை ஒதுக்கி வைத்து இருக்கிறாள்.அப்படி அவளை நீங்கள் பார்ப்பதானால் இப்பொழுதே கையோடு அவளையும் உங்களோடு கூட்டி சென்று விடுங்கள்.சம்மதமா?????”

“வே…. வேண்டாம் மாப்பிள்ளை…. நான் போய் விடுகிறேன்….. இதையாவது அவளிடம் கொடுத்து விடுங்கள்”

“என் பொண்டாட்டிக்கு எதை கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அவள் விரும்பி கேட்டால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் வாங்கி தர என்னால் முடியும்……. இவர்களை கிளம்ப சொல்லுங்கள் பெரியம்மா….நான் மிதுலாவோடு சினிமாவிற்கு செல்ல வேண்டும்.மிதுலா கிளம்பி வெளியே வரும் போது இவர்களை பார்ப்பதை நான் விரும்பவில்லை.”

“நான் கிளம்புகிறேன் மாப்பிள்ளை….. இனி இப்படி கிளம்பி வர மாட்டேன்…….எனக்கு தேவை மிதுலாவின் மகிழ்ச்சி தான்” கண்கள் கலங்க தொண்டை கரகரக்க பேசி விட்டு வேறு யார் முகத்தையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

சமாதான படுத்த வேண்டிய காவேரியோ ஒன்றுமே புரியாமல் மௌனமாய் குழம்பி தவிக்க, வர்ஷினி மிதுலாவை பற்றி எதையாவது பேச போய் மீண்டும் வசீகரனின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தினால் வாயை திறக்கவே இல்லை. அனைவரும் அப்படியே தேங்கி நிற்க வசீகரன் சக்தியை நோக்கி திரும்பி ஒரு அழுத்த பார்வையை வீசினான்.அந்த பார்வையின் பொருளை உணர்ந்த சக்தி வாசலை நெருங்கிக் கொண்டு இருந்த தெய்வானையை நோக்கி ஓடினான்.

“அம்மா…. அதை என்னிடம் கொடுங்க அம்மா…. இதை உங்க மாப்பிள்ளைக்கு தெரியாமல் மிதுலாவிடம் சேர்ப்பது என் பொறுப்பு….”தெய்வானையின் கையில் இருந்த ஸ்வீட் டிபன் பாக்ஸை கையில் வாங்கி கொண்டான்.லேசாக முகம் மலர்ந்தது தெய்வானைக்கு.

“தப்பா எடுத்துக்காதீங்க அம்மா…. மிதுலாவை அவன் மனைவியா  இப்ப தான் ஏத்துக்க ஆரம்பிச்சு இருக்கான்.உங்க மேலே உள்ள கோபம் படிப்படியா குறைஞ்சுடும்.கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க அம்மா…… ப்ளீஸ்!!!!”

“சே!!!! சே!!! என்ன தம்பி என்னிடம் போய் ப்ளீஸ் எல்லாம் சொல்றீங்க…. எனக்கு தெரியாதா மாப்பிள்ளையை பற்றி… எனக்கு தேவை என் பெண்ணின் மகிழ்ச்சி தான்….. அவளுக்காக இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்க மாட்டேனா”

“…………..”

“எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்….. இவ்வளவு தூரம் என் பெண்ணின் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே என்பது தான்….ஆனால் பரவாயில்லை அவள் மாப்பிள்ளையுடன் சந்தோசமாக தான் வாழ்கிறாள் என்பது மாப்பிள்ளையின் பேச்சில் தெரிகிறதே…..இன்னும் கொஞ்ச நாள் தானே…. மாப்பிள்ளையின் மனமாற்றத்திற்காக நான் காத்திருப்பேன் கிளம்புகிறேன் தம்பி…. “

அவரை வழி அனுப்பி வைத்து விட்டு விடுவிடுவென வீட்டிற்குள் நுழைந்தான் சக்தி.அவனுடைய கேள்விகளுக்கு பதில் வேண்டுமே.

வீட்டின் உள்ளே நுழைந்தவன் அங்கே நடந்த பேச்சு வார்த்தையில் என்ன செய்வது என்றே தெரியாமல் ஸ்தம்பித்து நின்றான்.

“என்னடா தம்பி….. நீ எப்படி எல்லாமோ பேசுகிறாய்….. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை….. உண்மையை சொல்லிவிடு வசீகரா….எங்கே மிதுலா????”

தொப்பென சோபாவில் விழுந்தவன்,இரு கைகளாலும் தலையை தாங்கிக் கொண்டு பேச தொடங்கினான்.”என்னை வேறு எப்படி பேச சொல்கிறீர்கள் பெரியம்மா….. கண் முழுவதிலும் பாசத்தை நிரப்பிக் கொண்டு மகளை பார்க்கவென்று ஓடி வந்திருப்பவரிடம் என்னால் உண்மையை சொல்ல முடியவில்லையே…. நான் சபிக்க பட்டவன் பெரியம்மா….. இறைவன் எனக்கு அன்பான  உறவுகளை கொடுப்பான்…. உடனே பிடுங்கியும் கொள்வான்….ராட்சஸன்….நான் ஒரு நாள் ஒரு பொழுது மகிழ்ச்சியாக இருந்தால் கூட அவனுக்கு பொறுக்காது…..  முதலில்   என்னை பெற்றவர்கள் …. இப்பொழுது மிதுலா…. ஐயோ” என்று கதறி முகத்தில் அறைந்து கொண்டு அழுதவனை தேற்றும் வழி அங்கிருந்த ஒருவருக்கும் புரியவில்லை.

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் எஃகென   உறுதியான குரலில் பேச ஆரம்பித்தான். “பரவாயில்லை பெரியம்மா….. மிதுலாவை காணவில்லை என்று சொல்வதால் ஏற்படும் வருத்தத்தை விட இப்பொழுது அவருக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம் குறைவு தான்.இனி நொடி பொழுது கூட தாமதிப்பதற்கு இல்லை பெரியம்மா…. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சரி ….. என் மிதுலாவை மீட்டு விட்டு தான் எனக்கு சாப்பாடு உறக்கம் எல்லாம்.சக்தி…. மாடிக்கு வா” என்று கூறிவிட்டு மாடி படிகளை நோக்கி ஓடினான்.

காவேரியையும் வர்ஷினியையும் புரியாத ஒரு பார்வை பார்த்துவிட்டு மாடிக்கு சென்றான் சக்தி.  மாடியில் வசீகரனின் அறைக்குள் உள்ளே நுழைந்ததுமே வசீகரனின் குரல் போனில் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தது.

“ஆமா சார்”

……………

“ரெண்டு நாள் ஆகுது”

……….

“இல்லை …. வீட்டை விட்டு அவளாக தான் போனாள்…. ஒரு சின்ன மனஸ்தாபம்”

………

“அவள் போட்டோ உடனே உங்களுக்கு ஈ மெயில் பண்ணிடறேன்……அப்பறம் சார் ஒரு சின்ன ரெக்வஸ்ட் இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம்”

…………..

“ஆமா சார் எனக்கு ஒரு ஆள் மேலே சந்தேகம் இருக்கு…..இல்லை சார் நானே போய் முதலில் விசாரிக்கிறேன்…. தேவைப்பட்டால் உங்கள் ஆட்களை அனுப்பி வையுங்கள் ……”

………….

“ஆமாம் சார் …. நான் போய் முதலில் கிளம்பி விசாரிக்கிறேன்….அதற்குள் வீட்டு வேலையாட்களை உங்கள் ஆட்களின் மூலம் விசாரித்து விடுங்கள்….ஒருவேளை இதில் எனது தொழில் எதிரி யாரேனும் சதி வேலை இருக்க கூடும்.

………..

“இல்லை சார்…. ஒருவேளை பணத்திற்காக என்றால் இந்நேரம் எனக்கு பணம் கேட்டு யாரேனும் போன் செய்து இருப்பார்கள்.இதுவரை அப்படி எந்த போன் காலும் வரவில்லை.”

………….

“சரி சார்….நீங்கள் எல்லா கோணத்திலும் உங்கள் விசாரணையை நடத்துங்கள்” பேசிக் கொண்டே லேப் டாப்பை எடுத்து மிதுலாவின் போட்டோவை எடுத்து மெயில் அனுப்பலானான் வசீகரன்.

வசீகரனின் செய்கை அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தான் சக்தி.போன் பேசி முடித்ததும் “சக்தி உடனே இன்றைக்கே அந்த கங்காதரனின் வீட்டிற்கு போக வேண்டும்.காரில் போனால் லேட் ஆகிவிடும்.போய் பிளைட்டில் டிக்கெட் புக் பண்ணு…. நீ இங்கேயே இரு…. போலீஸ் கமிஷனிரிடம் பேசி விட்டேன்.இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே போலீஸ் வருவாங்க…..அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் நீ பார்த்துக் கொள். நான் அதற்கு முன் பெரியம்மாவிடம் போய் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்.

“நீ எதற்கு இப்பொழுது கங்காதரனின் வீட்டிற்கு போகிறாய்????” நிதானமாக கேட்டான் சக்தி

“என்னடா….. விளையாட இதுதான் நேரமா உனக்கு?”

“நான் ஒன்றும்  விளையாடவில்லை….. இதோ இப்பொழுது இவ்வளவு பதட்ட படுகிறாயே…. இரண்டு நாளாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்….. உன்னை நம்பி எல்லாம் என் தங்கையை தேடும் பொறுப்பை நான் தருவதாக இல்லை….. நீ ஒன்றும் போகவேண்டாம்”

“டேய் !!!! நான் அவள் புருஷன்டா”

“அப்படி நீ நடந்து கொள்ளவில்லை வசி…. உனக்கு என் தங்கையை விட உன் ஈகோ தான் முக்கியம்….. அவள் மீது அன்போ அக்கறையோ இல்லாத உன்னை நம்பி எல்லாம் என்னால் இருக்க முடியாது.நான் மிதுலா வை தேடி போகிறேன்.நீ இங்கேயே இரு.”

“என் மனைவியை தேட நான் போய் தான் தீருவேன் சக்தி…. என்னை தடுக்க யாராலும் முடியாது…. உன்னாலும் தான்” இரும்பென வந்து விழுந்தன வார்த்தைகள்.

“உன்னை நம்பிக் கொண்டு என்னால் இங்கே சும்மா இருக்க முடியாது…..”

“சக்தி…. என் பொறுமையோடு விளையாடாதே…. எனக்கு இப்பொழுது நேரம் இல்லை…. முடிவாக என்ன தான் சொல்ல வருகிறாய்”

“நானும் உன்னோடு வருகிறேன்”

“நீ எதற்கு சக்தி….. நீ இங்கே இருந்து போலீஸ்க்கு உதவி செய்”

“இதோ பார்…. மிதுலாவின் கடிதத்தின் படி அவள் அந்த கங்காதரன் வீட்டிற்கு தான் போயிருக்க வேண்டும். அதனால் முதலில் அங்கே போய் விசாரிப்போம்…. இங்கே போலிஸில் சொல்லியாச்சு இல்லையா…. அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்….என்னால் உன்னை நம்பி இங்கே வீட்டில் இருக்க முடியாது…. உனக்கு ஈகோ வந்தால் போன வேலையை மறந்து அப்படியே திரும்பினால் கூட திரும்பி விடுவாய்….. உன்னை நம்புவதற்கு இல்லை….   நானும் கூட வரத்தான் செய்வேன்.

வசீகரனுக்கு சக்தியிடம் பேச்சை வளர்க்க நேரமோ பொறுமையோ இல்லாததால் “வந்து தொலை”என்று கூறிவிட்டு டிக்கெட் புக் செய்து விட்டு மேலும் வேறு சிலரிடம்  போனில் பேசி ஏதேதோ உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டு இருந்தான்.சக்தி ஒருபுறம் தனது போனை எடுத்து பேச ஆரம்பித்தான்.வசீகரன் போனில் பேசி முடித்து விட்டு அருகில் வரவும் சக்தி போனை வைக்கவும் சரியாக இருந்தது.

“யாரிடம் பேசினாய்”

“டிடெக்ட்டிவ் ஏஜென்சிக்கு தான்…. போலீசில் சொல்லிவிட்டால் கடமை  முடிந்தது என்று நீ இருந்து விடுவாய்….. என்னால் அப்படி இருக்க முடியுமா…. அது தான்” வசீகரனை வார்த்தைகளில் முடிந்த அளவுக்கு காயப்படுத்தினான் சக்தி.

“பேசுடா….. இன்னும் பேசு…. புரியவேண்டிய அவளுக்கே என் நிலைமை புரியாத பொழுது உனக்கு எப்படி புரிய போகிறது…… அவள் என் கையில் சிக்கட்டும் பிறகு இருக்கிறது அவளுக்கு ஆனால் யாருக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்க எனக்கு நேரம் இல்லை…. இப்பொழுது கிளம்பு…. டிராவல்ஸ் கார் கீழே வந்துவிடும்…வா போகலாம்.”

வசீகரனின் பேச்சில் மிதுலாவை கண்டுபிடித்தால் அவளை அடித்து நொறுக்க வேண்டும் என்பது போன்ற கோபம் இல்லை.எப்படியாவது அவளை கண்டு பிடித்து விடுவேன் என்ற எண்ணம் இருந்தது.  மாடியை விட்டு கீழே இறங்கி வந்து வசீகரன் யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் காரில் போய் அமர்ந்து விட்டான்.

கவலையோடு பார்த்த காவேரிக்கு பார்வையாலேயே ஆறுதல் சொல்லிவிட்டு தானும் போய் காரில் அமர்ந்து விட்டான் சக்தி.காரில் ஏறிய பின் சக்தியோ வசீகரனோ ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை. காரில் மட்டும் இல்லாது விமானத்திலும் ஒருவகையான இறுக்கமான சூழ்நிலையே நிலவியது.

சக்தியின் பார்வை அவ்வப்பொழுது வசீகரனின் மேல் ஆராய்ச்சியாக படிந்து விலகியது.வசீகரன் அமைதியாகவே இருந்தான்.பிளைட்டை விட்டு இறங்கி பின் வெளியே வந்து காரில் ஏறியும் இந்த அமைதி தொடர்ந்தது.

கார் நேராக கங்காதரனின் வீட்டை அடைந்தது.தோட்டத்தில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டு இருந்த கங்காதரன் புதிதாக கார் ஒன்று உள்ளே நுழையவும்,’யார் அது’ என்று எண்ணியபடி எழுந்து நின்றார்.காரில் இருந்து இறங்கிய வசீகரனை அவர் நிச்சயம் எதிர் பார்த்து இருக்கவில்லை என்பது அவரது அதிர்ச்சியான முக பாவனையில் இருந்து தெரிந்தது.

ஒரு நொடியில் தன்னை சமாளித்து, “வாங்க…. வாங்க” என்று அன்பொழுக வரவேற்றார்.

“வாங்க ….. வாங்க….. சரஸ்வதி இங்கே பாரு யாரு வந்திருக்காங்கன்னு” என்று உற்சாகமாக வீட்டின் உள்பக்கம் குரல் கொடுத்தார் கங்காதரன்.வீட்டின் உள்ளே இருந்து தெய்வானையின் வயதை ஒத்த பெண்மணி ஒருவர் கண்களில் சோகத்தை நிரப்பிக் கொண்டு சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு  வந்தார். கணவர் எதற்காக இப்படி கூச்சலிடுகிறார் என்று புரியாமல் வாசலில் நின்ற வசீகரனையும் சக்தியையும் பார்த்தார்.அவருக்கு அடையாளம் தெரியவில்லை. அவர் தான் மிதுலாவின் திருமணத்திற்கு வரவே இல்லையே…. யோசித்தவாறே நின்று கொண்டு இருந்தார் சரஸ்வதி.

“என்ன சரசு…. யாருன்னு தெரியலையா…. நம்ம மிதுலா வீட்டுக்காரர்…   இவரு…..”

“நான் சக்தி …. இவனோட பிரண்டு…. ” தானாகவே முன்வந்து அறிமுகப்படுத்திக் கொண்டான் சக்தி.

“வாங்க தம்பி… உள்ளே போ… ப் …போய் பேசலாம்…. நீங்க வந்ததில் ரொம்ப சந்தோசம் “வார்த்தைகள் மெதுவாக நிறுத்தி நிறுத்தி  பேசினார் சரஸ்வதி.

“என்ன தம்பி என் மனைவியை அப்படி பார்க்கிறீர்கள்???? நன்றாக தான் இருந்தாள் தம்பி…. அடுத்து அடுத்து அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியினால் இப்படி கையும் காலும் லேசாக இழுத்துக் கொண்டது…… பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று டாக்டர் கூறி இருக்கிறார்….. பிசியோதெரபி , நியூரோ …. இன்னும் என்னென்னவோ வைத்தியங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்…. இவள் நன்றாக ஒத்துழைத்தால் சீக்கிரமே குணமாகிவிடும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்….. ஆனால் இவள் தான் பையனை பற்றிய கவலையில் சரியாக மருந்து மாத்திரைகளை சாப்பிட மாட்டேன் என்கிறாள்”

கங்காதரன் பேச பேச வசீகரன் அவரை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே இருந்தான்.அவர் கண்களில் தன்னை பார்த்ததால் பதட்டம் எதுவும் இருக்கவில்லை.இயல்பாகவே இருந்தார்.ஒருவேளை மிதுலா அங்கே வந்து இருந்தால் இவர் என்னை எதிர்பார்த்து இருப்பார்.அப்படி இல்லாமல் காரில் இருந்து நான் இறங்கியதை பார்த்து இவர் அதிர்ச்சி அல்லவா அடைந்தார்.’

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சக்தியும் வசீகரனும் யோசிக்கும் போதே அவர்கள் கேட்காமலே அவர்களுடைய கேள்விக்கு பதில் அளித்தார் கங்காதரன்.

“மிதுலா எப்படி இருக்கிறாள் தம்பி ”

‘அப்படியெனில் மிதுலா இங்கே வரவில்லையோ…’ என்று ஒரு நிமிடம் அதிர்ந்தவன், ஒருவேளை  இது வினோத்தின் சதி வேலையாக கூட இருக்கலாம்……  முதலில் அந்த வினோத் எங்கே என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து பேச தொடங்கினான்.வயதான அந்த பெரியவர்களிடம்  தன்கோபத்தை அவன் காட்ட விரும்பவில்லை. ஏனெனில் மிதுலா மீது கங்காதரன் கொண்ட பாசம் அவன் அறிந்த ஒன்று தான்.

எப்படி ஆரம்பிப்பது என்று இருவருமே யோசித்துக் கொண்டு இருக்கையில் சரஸ்வதி பேச தொடங்கினார்.

“என் வீட்டுக்காரர் சொன்னார் தம்பி….. மன்னித்து கொள்ளுங்கள் தம்பி….என் பிள்ளையால் தான் இவ்வளவு  பிரச்சினையும் ….. தவறு என் மீது தான் ….. ஒரே பிள்ளை என்று நான் தான் அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து விட்டேன்.இவர் வந்து நடந்ததை எல்லாம் சொன்ன பொழுது எனக்கு சர்வமும் ஆடி போச்சு….. “

“அவனுடைய போக்கு சரியில்லை என்று இவர் கூட எத்தனையோ முறை என்னிடம் சொல்லி இருக்கிறார். நான் தான் கண்டுகொள்ளாது அலட்சிய படுத்தி விட்டேன் . ஒரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தேன்..எப்படியோ கடைசி நிமிடத்தில் நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள் என்று இவர் சொன்னார்.நீங்கள் மட்டும் இல்லையென்றால் தெய்வானை அக்காவின் முகத்தில் எங்களால் முழித்திருக்க கூட முடியாது.”

சக்தியும் வசீகரனும் இதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மௌனமாய் அமர்ந்து இருக்க கங்காதரனே பேச்சை தொடர்ந்தார்.

“தம்பி அன்று நான் செய்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை தான். ஆனால் எனக்கு மிதுலாவின் வாழ்க்கையை விட வேறு எதுவும் அப்பொழுது என் கண்களுக்கு தெரியவில்லை….. பெற்ற மகனே ஆனாலும் எனக்கு வினோத்தை விட மிதுலா தான் முக்கியம்.அவன் தேவை இல்லாமல் மிதுலாவின் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டு விட்டான். ஆனால் அவளை பழி வாங்க இவ்வளவு தரங்கெட்ட செயலை செய்வான் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை.”

“அன்று ஹோட்டலில் முதலில் நானும் தெய்வானையும் வந்தது மிதுலாவிற்கு இவனால் ஆபத்து என்று காப்பாற்றுவதற்காக தான்….. ஆனால் உள்ளே நுழைந்ததும் அவனை யாரோ அடித்து போட்டு விட்டதாக சொன்னதும் ஒரு தகப்பனாக உள்ளம் பதறி முதலில்  அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று அவனை பார்க்க ஓடினேன்…… ஆனால்…..”

  சற்று நேரம் அமைதி காத்து தொண்டையை செருமிக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். “ஆனால் அந்த பாவி குடி போதையில் என்னிடமே உளறுகிறான். மி… மிதுலாவை அசிங்கமாக போட்டோ எடுத்து இன்டர்நெட்டில் போட்டு அவள் மானத்தை வாங்க வேண்டும் என்று அது மட்டும் இல்லாமல் பலவந்த படுத்தியாவது அவளை மணந்து கொண்டு சொத்துக்களை அவன் பெயருக்கு மாற்றிய பின் அவளை கொன்று விட வேண்டும் என்று என்னிடமே சொல்கிறான்…… எனக்கு….. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?????…. எனக்கு அந்த நிமிடம் தெரிந்தது எல்லாம் என் குரு…மிதுலாவுடைய தகப்பன் என் உயிர்  நண்பன் தம்பி…. என் பையனால் என் குருவின் மகளுடைய வாழ்க்கை அழிய போகிறது என்பது தான்….. என்ன செய்தாவது அவளை காப்பாற்ற வேண்டும்.ஆனால் மிதுலாவை காப்பாற்ற எனக்கு இருந்த நேரம் மிக மிக குறைவு….”

” வினோத் போதையில் இருக்கும் வரை தான் எனக்கு கால அவகாசம்….. என்ன செய்வது என்று புரியாமல் தான் கீழே மிதுலாவை தேடி நான் ஓடி வந்தேன்.உங்களை பார்த்ததும் எனக்கு மிதுலாவை உங்களால் மட்டும் தான் காப்பாற்ற முடியும் என்று  தோன்றியது….ஏன் அப்படி தோன்றியது என்று கேட்டால் என்னிடம் அதற்கான பதில் இல்லை. தொழில் முறையில் நாம் சந்தித்த பொழுதெல்லாம் உங்களை பார்த்து பெருமை அடைந்து இருக்கிறேன்…. உங்களை போல வினோத் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று கூட நினைத்து இருக்கிறேன்.”

“கீழே நான் வந்து பார்த்த பொழுது சூழ்நிலை உங்களுக்கு எதிராக இருந்தது.அதை நான் மிதுலாவின் நன்மைக்காக பயன்படுத்திக் கொண்டேன். நான் செய்ததற்கு ஆயிரம் சமாதானம் சொன்னாலும் உங்களுக்கு அதை ஏற்றுக் கொள்வது கடினம் தான்.ஆனால்…. எனது சூழ்நிலையில் அப்பொழுது உங்களை பற்றி என்னால் யோசிக்க முடியவில்லை.

“எனக்கு அப்பொழுது தெரிந்தது எல்லாம் மிதுலா மட்டும் தான். ஓரளவிற்கு விவரமான மிதுலாவின் தோழி சுஜியையே ஏமாற்றி மிதுலாவும் அவனும் வெகுநாள் காதலர்கள் என்று நம்ப வைத்தவன் என் மகன்….. அவனை அத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.அதனால் தான் உங்கள் வாழ்க்கையை பற்றி நான் கவலைப்படவில்லை….. நான் சுயநலவாதி தான்…. இதனை சொல்வதில் எனக்கு எந்த விதமான தயக்கமோ, அவமானமோ இல்லை…. மிதுலாவிற்காக…. என் குருவிற்காக இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வேன்….கொலை கூட……”

“ஒருவேளை அன்று எனக்கு பதில் வேறு என் இடத்தில் வேறு யாரேனும்  இருந்து இருந்தால்…..அப்பொழுது உங்கள் முடிவு என்னவாக இருந்து இருக்கும்???” கூர்மையாக வந்து விழுந்தன வார்த்தைகள் வசீகரனிடம் இருந்து.

“தெரியவில்லை தம்பி…. ஆனால் உங்களிடத்தில் வேறு யாரையேனும் அங்கு பார்த்து இருந்தால் இதே முடிவை எடுத்து இருக்க மாட்டேன்… உங்களை பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்…. கண் கூடாகவும் பார்த்து இருக்கிறேன்…. எந்த காரணத்திற்காகவும் உங்கள் பொருளை பிறருக்கு விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.மிதுலாவையும் உங்கள் வசம் ஒப்படைத்தால் அவளை பற்றி பிறகு நான் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை…. நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளுவீர்கள் என்று எனக்கு தெரியும்.”

“ஒருவேளை நான் வேறு யாரையாவது விரும்பி இருந்தால்….. எங்கள் இருவரின் வாழ்க்கையும் வீணாகிவிடுமே….அதை பற்றி நீங்கள் யோசித்து பார்த்தீர்களா????”

“மிதுலா உங்கள் மனைவி என்று ஆன பின் உங்கள் மனதை அவள் மாற்றி விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.அது மட்டும் இல்லாமல் பொறுப்பு என்று ஒன்றை கொடுத்த பிறகு அதில் இருந்து நீங்கள் விலக மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்….”

“சாதுர்யமாக பேசுவதாக நினைப்பா????”

“இல்லை தம்பி…..  சமாதானமாக பேசுகிறேன்….என் பக்க நியாயத்தை சொன்னேன்….. இன்னும் சொல்ல போனால் பாவமன்னிப்பு கேட்கிறேன்……..”

“எங்கே உங்கள் அருமந்திர புத்திரன்????”

“அவன் கேரளாவிற்கு போய் இருக்கிறான் தம்பி….. அவனை பற்றி எதற்கு கேட்கறீங்க???”

“கேரளாவில் அவனுக்கு என்ன வேலை….. யார் குடியை கெடுக்க அங்கே போய் இருக்கிறான்????” கோபப்பட கூடாது என்று நினைத்த மன கட்டுப்பாட்டையும் தாண்டி வசீகரனின் வார்த்தைகளில் உஷ்ணம் தெறித்தது.

“யார் குடியையும் கெடுக்க போகவில்லை தம்பி…… பொல்லாத அந்த குடி பழக்கத்தை நிறுத்துவதற்காக  மறுவாழ்வு மையத்திற்கு ட்ரிட்மென்டுக்கு போய் இருக்கிறான்…”

“எத்தனை நாட்களாக????”

“உங்களுக்கு திருமணம் ஆன மறுநாளில் இருந்து”

“அதன் பிறகு இங்கே எப்பொழுதாவது வந்தானா???”

“அப்படி எல்லாம் அந்த மறுவாழ்வு மையத்தில் விட மாட்டார்கள் தம்பி”

………

“சரசு….. தம்பிகளுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லுமா”

“இதோ…. மன்னிச்சுக்கோங்க தம்பி….இப்போ எடுத்துக் கொண்டு வர சொல்கிறேன்.”மனைவி சக்கர நாற்காலியில் இருந்து  கண் பார்வையில் மறையும் வரை பொறுத்தவர், “தம்பி  மிதுலாவுக்கு என்ன ஆச்சு….எதற்காக என் பையனை பற்றி விசாரிக்குறீங்க??? என்ன நடந்துச்சு…. சொல்லுங்க???”

அவரிடம் ஒன்றும் பேசாமல் முகம் திருப்பி நின்று கொண்டான் வசீகரன்.”சக்தி…. இவர் பையன் கேரளாவில் இருக்கும் அட்ரஸை வாங்கி கொண்டு வா…. கிளம்பலாம் … நமக்கு நேரம் இல்லை.”

“தம்பி ஏதோ பிரச்சினை என்று தெரிகிறது…… ஆனால் என் மகன் மீது சந்தேகம் வேண்டாம்…… அவன் இப்பொழுது எதுவும் செய்திருக்க வாய்ப்பு இல்லை….அப்படி நீங்கள் விசாரிப்பதானால் விசாரித்து கொள்ளுங்கள்….ஆனால் அவை எதுவும் என் மனைவியின் காதுபட நடக்க வேண்டாம்…. ஏற்கனவே மகனை எண்ணி வருந்தி , வருந்தி அவள் உடல் நலனை கெடுத்துக் கொள்கிறாள்….அதனால் தான் மற்றபடி எதுவும் இல்லை…. நான் விலாசம் தருகிறேன் …. நீங்கள் போய் விசாரித்துக் கொள்ளுங்கள்”

“வா.. சக்தி … கிளம்பலாம்…”

“தம்பி…. ஒரு நிமிடம்…. மிதுலா நல்ல பெண்…அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்”

‘எங்கே பத்திரமாக பார்த்துக் கொள்வது அவளை தான் தொலைத்து விட்டு நிற்கிறேனே’ என்று கசப்புடன் நினைத்தவன் ஒன்றும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்து விட்டான்.

சக்தி அவரிடம் பேசி கேரளா விலாசத்தை வாங்கி கொண்டு  காரில் ஏறி அமர்ந்தான்.உள்ளே பின் சீட்டில் அமர்ந்து அவனுடைய போனை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்த வசீகரனை யோசனையோடு பார்த்தான் சக்தி.

“என்ன வசி…… இப்பொழுது என்ன செய்ய போகிறாய்…. மீண்டும் திருச்சிக்கு போய் அங்கிருந்து தேடலாமா”

“இல்லை சக்தி….. கேரளாவிற்கு போய் அந்த வினோத் அங்கே இருக்கிறானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதனால் கேரளாவிற்கு புறப்படும் ஏற்பாடுகளை செய்….”மரத்த  தன்மையுடன் ஒலித்தது வசீகரனின் குரல்.

“அங்கே எதற்கு வசி …. இப்பொழுது போய் நேரத்தை வீண் செய்து கொண்டு இருக்கிறாய்….அது தான் கங்காதரன் சார் சொன்னார் இல்லையா… அவன் தங்கி இருக்கும் இடத்தில் அது போல எல்லாம் விட மாட்டார்கள் என்று.நீ கவனிக்கவில்லையா?”

“நான் கவனித்தேன் சக்தி….. அதே நேரம் அவர் இன்னொரு வார்த்தையும் சொன்னாரே அதை நீ கவனித்தாயா???…”

…………..

“அவருடைய பிள்ளையை யாராலும் ஏமாற்ற முடியாது…. ஆனால் அவன் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றுவான் என்று ஒரு வார்த்தை சொன்னாரே…. எனக்கு அது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது…. அதனால் நாம் நேரில் போய் பார்த்து விடுவது தான் நல்லது…. இனி ஒருமுறை மிதுலா விஷயத்தில் எந்த ஒரு சிறு தவறு நடப்பதையும் நான் விரும்பவில்லை”

“அப்படியானால் அடுத்து கேரளாவிற்கு போக வேண்டுமா????”

“ஆமாம்”

“போலீஸ்கிட்டே இருந்து எதாவது தகவல் வந்ததா வசி”

“இப்பொழுது தான் பேசினேன் சக்தி…. நம் வீட்டில் இருந்து வெளியே வந்து ஒரு ஆட்டோவில் ஏறி இருக்கிறாள்…..அந்த ஆட்டோவை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்…. கண்டுபிடித்ததும் தான் மேற்கொண்டு விஷயம் தெரிய வரும்…. க… கண்டு… கண்டுபிடித்து விடுவார்கள் தானே… சக்தி”

‘தடுமாற்றமா…… அதுவும் தன் நண்பன் வசீகரனிடமா…. எத்தனை பெரிய விஷயமாக இருந்தாலும் அசால்ட்டாக செய்து முடிக்கும் என் நண்பனுக்கு  பயம் வருகிறதா????குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு தன் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு கேள்வி கேட்கும் நண்பனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனம் காத்தான் சக்தி.

“பதில் சொல்ல மாட்டாய் இல்லையா!!!! உன் கண்ணுக்கு நான் இப்பொழுது ஒரு கொடுமைக்கார கணவனாக தெரிகிறேன் இல்லையா….  இப்பொழுது நீ இங்கே வந்தது கூட எனக்கு உதவ இல்லை… உன் தங்கச்சிக்காக தானே…. எனக்குள்ளும் ஒரு மனசு இருக்கு சக்தி….. அது உங்கள் யாருக்கும் தெரியவில்லை…. எனக்கென்று இங்கே யாருமே இல்லையா சக்தி…. அவளுக்காக இத்தனை பேர் இருக்குறீர்கள்…அவளுக்காக பேசுகுறீர்கள்…. ஆனால் எனக்காக என் சார்பில் பேச யாரும் இல்லையே சக்தி…..என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை…. இத்தனை நாள் பழகிய உனக்கு கூட என்னை விட அவள் தான் உயர்வாக தெரிகிறாள் ” கசப்புடன் பேசினான் வசீகரன்.

…………

“அவள் எப்படி என்னை விட்டுப் போகலாம் என்ற கோபம்…ஆத்திரம்…. எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டது….அவளாக வரட்டும் என்று நினைத்தேனே தவிர …. இப்படி….இப்படி என்னை தவிக்க விடுவாளென்று நான் நினைக்கவில்லையே சக்தி”

புலம்பிய தன் நண்பனை சமாதான படுத்தும் வகை அறியாது மௌனமாக அமர்ந்து இருந்தான் சக்தி…..அடுத்த அவர்களின் பயணம் கேரளாவை நோக்கி சென்றது. அங்கே அவர்களுக்கு என்ன காத்திருக்கிறதோ……. பொறுத்து இருந்து பார்ப்போம்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here