நிலவே உந்தன் நிழல் நானே 33

0
1366
NUNN Tamil Novels 37

வசீகரனின் பயணம் எங்கும் தடைப்படவில்லை.போகும் போக்கிலேயே எல்லா வேலைகளையும் பார்த்தான்.

இடையிடையே போலீஸ் அதிகாரிகளிடம் பேசி நிலவரத்தை தெரிந்து கொண்டான்.போன் செய்து மிதுலா கிடைத்து விட்டாளா என்று அச்சத்தோடு கேள்வி கேட்ட காவேரிக்கு தான் பார்த்துக் கொள்வதாக வாக்கு கூறி அவரை சமாதான படுத்தி என்று ஒவ்வொரு வேலையாக பார்த்தான்.அது எதிலும் சக்தி தலையிடவும் இல்லை…. உதவவும் முன் வரவில்லை.

சக்தியின் கவனம் முழுக்க எங்கோ இருந்தது. திடீரென்று, “சக்தி எனக்கு பாண்டியனின் போன் நம்பர் சொல்லு” என்று கேட்டான் வசீகரன்.

“பாண்டியன் நம்பர் எதற்கு உனக்கு….அதுவும் இப்பொழுது????”

“நீ தருகிறாயா இல்லை நான் வேறு யாரிடமும் வாங்கி கொள்ளட்டுமா????”

மறுபேச்சு பேசாமல்  நம்பரை கொடுத்தான் சக்தி. நம்பரை வாங்கி உடனே கால் செய்தவன், “ஹலோ பாண்டியா…. நான் வசீகரன் பேசுகிறேன்…. ஒரு சின்ன வேலை…. நான் சொல்லும் ஒரு ஆளை  தூக்க வேண்டும்.அவனுடைய போட்டோவை உனக்கு அனுப்பி வைக்கிறேன்…”

………….

“இல்லை உடனே வேண்டாம்…. நான் சொல்லும் வரை அவனை தொடர்ந்து கண்காணியுங்கள்….எங்கே போகிறான் ??? என்ன செய்கிறான்??? யார் யாரை சந்திக்கிறான் ???? என்று எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து உடனுக்குடன் எனக்கு தகவல் தெரிவியுங்கள்… நான் சொல்லும் போது தூக்கினால் போதும்.”

………..

“ம்…இல்லை…அங்கே வேண்டாம்…உங்கள் இடத்திலேயே கட்டி வையுங்கள்”

…………

“அடிக்க வேண்டாம்…. உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருங்கள் . அது போதும்”

…………

“பணத்தை பற்றி கவலை வேண்டாம்….எப்பொழுதும் போல் வந்து சேரும்…. அவனுடைய போட்டோவும் முகவரியும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்…கவனம்… அவன் மீது ஒரு சின்ன காயம் கூட பட கூடாது”பேசிவிட்டு போனை வைத்து விட்டு கண்களை மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.

“டேய் வசி… அதுதான் வினோத்தை நேரில் பார்க்க போய் கொண்டு இருக்கிறோமே…. பிறகு ஏன் அவனை தூக்க  சொன்னாய்????”

“தூக்க சொன்னது உண்மை தான்…. ஆனால் அவனை அல்ல …. மூர்த்தியை” சலனமற்று கூறினான் வசீகரன்.

“மூர்த்தி சாரை எதற்கு தூக்க சொன்னாய்…. இந்த பிரச்சினையில் அவர் எங்கே வந்தார்???” கேள்வியாக பார்த்தான் சக்தி

“அவனை சார் என்று கூப்பிடாதே…. அந்த மாதிரி மரியாதைக்கு எல்லாம் தகுதி இல்லாதவன் அவன்”

“என்ன நடந்தது வசி”

“அன்று ஹோட்டலில் நடந்ததை கூறியவன், “ஒரு வேளை அவன் ஏதும் செய்து இருந்தால்…. அதற்கு தான். மேலும் அன்று அவனை சரியாக கவனிக்க முடியவில்லையோ என்று எனக்கு ஒரு எண்ணம்.அதுதான்”

“அதற்கு தான் அன்றே அடித்து விட்டாயே….இன்னும் ஏன்… விட்டு விடேன்”

“என் மிதுலாவை பற்றி என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா…. அன்றே அவனை இன்னும் ஆசை தீர அடித்து இருப்பேன்.அவனை அடிப்பதை பார்த்து மிதுலா பயப்பட தொடங்கினாள்.அதனால் தான் அன்று அவனை விட்டு விட்டேன்…இப்பொழுது மிதுலா விஷயத்தில் அவன் மட்டும் ஏதாவது செய்து இருந்தான் என்றால் பிறகு அவனுக்கு காட்டுகிறேன்…நான் யார் என்று”

“என் மிதுலா என்று வாய் நிறைய இப்பொழுது சொல்லுகிறாயே….எப்பொழுதாவது அவளிடம் நேரில் சொல்லி இருக்கிறாயா???”

சக்தியின் கேள்விக்கு ஏதோ பதில் சொல்ல வாய் திறந்து விட்டு, பின் பேச்சை நிறுத்தி விட்டான் வசீகரன்.

‘வாயை திறக்கிறானா பார்…. சரியான கல்லுளி மங்கன்’ என்று மனதுக்குள் திட்டியவாறு பயணத்தை தொடர்ந்தான் சக்தி.

கங்காதரன் கொடுத்த மறுவாழ்வு மையத்திற்கு சென்று வினோத்தை பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்த வெய்ட்டிங் ரூமில் காத்திருந்தனர் இருவரும்.அதிக நேரம் அவர்களை காக்க வைக்காமல் உடனே வந்து சேர்ந்தான் வினோத்.அன்று ஹோட்டலில் அவனை பார்த்த போது இருந்ததை விட கொஞ்சம் இளைத்து காணப்பட்டான்.இவர்கள் இருவரையும் அடையாளம் தெரியாமல் அவன் முழிக்க ஆரம்பித்தான்.

“யார் நீங்க??? என்னை எதுக்கு பார்க்க வந்து இருக்கீங்க???”

“நான் வசீகரன்”

“இருந்துட்டு போங்க…. எனக்கென்ன அதை பத்தி” அலட்சியமாக பதில் வந்தது.

“நான் மிதுலாவின் கணவன்….”

“ஓ!!!! நீ தான் அந்த அசகாய சூரனா….. உன்னால் மட்டும் தான் மிதுலாவை காப்பாற்ற முடியும்… நீ பெரிய இவன் என்று என் அப்பா சொன்னாரே….. இப்போது இங்கே ஏன் வந்தாய்????”

“சும்மா… உன்னை பார்த்து விட்டு போகலாம்ன்னு தான்…உனக்கு இங்கே எல்லா வசதியும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வந்தேன்” அலட்டாமல் பதில் சொன்னான் வசீகரன்.

“என்ன கொழுப்பு உனக்கு…. எப்படி இருக்கிறாள் என் முன்னாள் காதலி அதாவது உன்னுடைய இந்நாள் மனைவி”

“என்ன கேட்ட சரியா காதில் விழலை …. கொஞ்சம் பக்கத்தில் வந்து சொல்லு” சலனமற்ற குரலில் கூறினான்.

சக்திக்கு நொடியில் புரிந்து விட்டது அடுத்து வசீகரன் என்ன செய்ய போகிறான் என்று.உடனே சக்தியிடம் வேகமாக திரும்பி , “டேய்… சொன்னால் கேளு… கிட்டே வராதே…அங்கேயே நில்லு”

“நீ யாரு என்னை தடுக்க ” என்று கேட்டுவிட்டு வசீகரனை நோக்கி ஒரு அடி முன்னேறினான்.இவனிடம் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து வேகமாக வசீகரனிடம் திரும்பி பேச்சு வார்த்தை நடத்தினான்.

“வேண்டாம் வசி…. இவன் மீது கையை வைத்து விடாதே… இவன் வாயில் இருந்து    நமக்கு வேண்டிய விஷயங்களை முதலில் கேட்டு தெரிந்து கொள்வோம்…. அதன் பிறகு வேண்டுமானால்…”

சக்தி பேசிக் கொண்டு இருக்கும் போதே அவனை தாண்டி வினோத்தின் அருகில் சென்று நின்று விட்டிருந்தான் வசீகரன்.

“இப்பொழுது கேட்கிறதா”என்று ஒருமுறை கேட்டுவிட்டு மிதுலா என்று ஏதோ சொல்ல வாயை திறந்தான் வினோத். அது மட்டும் தான் அவனுக்கு தெரிந்தது.நொடி பொழுதில் அவன் வாய் கிழிந்து கண்கள் கலங்க நின்று கொண்டு இருந்தான்.

“என்ன வினோத்…. பேச மாட்டேங்கிற…. ஏதோ சொல்ல வந்தாயே” என்று மேலும் தூண்டிவிட்டான் வசீகரன்.

இப்பொழுதும் பின்னால் இருந்து பேசாதே என்று சக்தி எவ்வளவோ சைகை செய்து பார்த்தான்…. அது எதையும் அவன் கவனிக்கவே இல்லை.

மீண்டும் வாயை திறந்து பேச தொடங்கும்  முன் அவனை சரமாரியாக குத்த தொடங்கினான் வசீகரன்.நிலை தடுமாறி வினோத் கீழே விழும் வரை அடித்துக் கொண்டே இருந்தான்.இதற்கு மேலும் விட்டால் அவன் செத்தாலும் செத்து விடுவான் என்று தோன்றவே குறுக்கே புகுந்து அவனை காப்பாற்றினான் சக்தி.

“ஏன்டா…நான் தான் அத்தனை தூரம் சைகை செய்தேனே … பேசாதே என்று கேட்க மாட்டாயா….கொஞ்ச நேரம் வாயை மூடிக் கொண்டு இரு”என்று வினோத்தை அதட்டி விட்டு வசீகரனை கொஞ்சம் தள்ளி அழைத்துக் கொண்டு போனான்.

“டேய்…. அவனிடம் பேசி மிதுலா பற்றி. விஷயத்தை கறப்பாயா….அதை விட்டு அவனை அடித்தே கொன்று. விடுவாய் போல”

“இவனுக்கு மிதுலாவை பற்றி எதுவும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை சக்தி…. நாம் கிளம்பலாம் வா” என்றான் வசீகரன்.

வாசல் வரை போன வசீகரன் திரும்பி வந்து வினோத்தை  மாறி மாறி கன்னத்தில் அறைந்து விட்டு ,” மிதுலா என் மனைவி…. வசீகரனின் மனைவி….இனி உன் நிழல் அவள் இருக்கும் திசையில் திரும்பினால் கூட உன்னை தொலைத்து கட்டி விடுவேன்…. புரிந்ததா???” கர்ஜனையாக வந்தது வசீகரனின் குரல்.

புரியவில்லை என்று மேலும் அடியை வாங்கி கொள்ள வினோத் என்ன முட்டாளா!!!! உடனே தலையை வேகமாக ஆட்டினான். ஏற்கனவே கங்காதரன் வேறு மிரட்டி இருக்கிறார்.’ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால் சொத்துக்கள் அனைத்தையும் தர்மத்துக்கு எழுதி வைத்து விடுவேன் என்று.இதில் இவன் வேறு அவரிடம் போய் நான் பேசியதை எல்லாம் சொல்லிவிட்டால் பிறகு அந்த மனிதன் என்ன செய்வாரோ…’ என்று நினைத்தவன் வலியோடு கன்னத்தை தாங்கி பிடித்து கொண்டு வேக வேகமாக  தலையை ஆட்டினான்.

இனி இவன் மிதுலாவின் பெயரை சொல்ல கூட துணிய மாட்டான் என்பதை உறுதி செய்து கொண்டு சக்தியோடு அங்கிருந்து வெளியேறி காரில் ஏறினான்.

“என்ன வசி…. இப்படி செய்து விட்டாய்…. அவனிடம் மிதுலாவை பற்றி ஒன்றுமே கேட்காமல் இப்படி அவனை அடித்து விட்டு வேகமாக கிளம்பி வந்து விட்டாயே…. நீ இப்படி தான் செய்வாய் என்று எனக்கு தெரியும்…நான் கூட வந்து தடுத்தும் கூட கேளாமல் அவனை அடித்து விட்டு எனக்கென்ன என்று கிளம்பி விட்டாயே…. மிதுலாவை உண்மையாகவே நீ தேடுகிறாயா…. இல்லை தேடுவது போல் நடிக்கிறாயா??? “கோபமாக இரைந்தான் சக்தி.

“சக்தி… மிதுலா மீது உனக்கு இருக்கும் அன்பை விட எனக்கு அதிகமாகவே இருக்கிறது….அனாவசியமாக என் அன்பை சந்தேக படாதே…முதலில் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்து கொள்… “

“வினோத்திற்கு நம் இருவரையுமே அடையாளம் தெரியவில்லை.ஒருவேளை மிதுலாவை அவன் கடத்தி இருக்கும் பட்சத்தில் அவளை சுற்றி உள்ளோரை பற்றியும் அவன் தெரிந்து வைத்து இருப்பான்.அது மட்டும் இல்லை….. அவன் மிதுலாவை கடத்தி வைத்திருக்கும் பட்சத்தில் அவன் ஏன் மிதுலா என் முன்னாள் காதலி என்று கூறி அவள் மீது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக பேச வேண்டும்…. என்னோடு அவள் நிம்மதியாக வாழ கூடாது என்று தானே….அதை வைத்து தான் உறுதியாக சொல்லுகிறேன்.அவனுக்கு மிதுலா இப்பொழுது காணாமல் போய் இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

“அப்பறம் எதுக்குடா நான் எவ்ளோ தடுத்தும் அவனை போட்டு அந்த அடி அடித்தாய்”

“இனி ஒருமுறை அவன் எங்களின் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நுழைய வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு வரக் கூடாது…உனக்கு தெரியாது சக்தி…இவனால் மிதுலாவை எத்தனை முறை வருத்தப் பட வைத்து இருப்பேன் தெரியுமா….என் வாழ்க்கையில் முக்கியமான நேரங்களில் எல்லாம் அந்த சந்தோஷத்தை நான் அனுபவிக்க முடியாமல் என் தலைக்குள் அமர்ந்து எத்தனை பாடுபடுத்தி இருக்கிறான் தெரியுமா????”

 “இவனால் நான் அங்கே மிதுலாவை அத்தனை தூரம் வருத்தி இருக்கிறேன்….இவன் என்னவென்றால் நான் யார் என்று கூட தெரியாமல் இருந்து தொலைக்கிறான்….. இவனுக்காகவா நான் அப்படி எல்லாம் நடந்து கொண்டேன்.” வருத்தம் மேலிட பேசிக் கொண்டே போனான் வசீகரன்.

வசீகரன் வருந்துவது பிடிக்காமல் பேச்சை மாற்றினான் சக்தி.”அடுத்து என்ன செய்ய போகிறாய் வசி????”

“தெரியவில்லையே சக்தி…. வீட்டிலும் சரி வெளியிலும் சரி என் வார்த்தைக்கு யாரும் எதிர் வார்த்தை பேச மாட்டார்கள்…. ஆனால் அவள் ஒருமுறை கூட தழைந்து பேசியதில்லை தெரியுமா…. அதற்காக ஜான்சிராணி அளவுக்கு தைரியம் எல்லாம் கிடையாது….பூச்சியை பார்த்தால் கூட பயந்து நடுங்குவாள்…. அவள் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டாள் என்று தெரிந்த போது கூட நான் இத்தனை பயப்படவில்லை சக்தி.எப்படியும் அவள் அம்மா அவளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் என்ற எண்ணம் இருந்தது…அந்த தைரியத்தில் தான் கொஞ்சம் கூடுதலாக அலட்சியமாக இருந்து விட்டேன்….. ஆனால் இப்பொழுது…..”

வசீகரனின் தோள்களை ஆறுதலாக பற்றி,” நடந்ததை எண்ணி வருந்தாதே வசி… இனி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் யோசி….உன் கவனம் முழுக்க இப்பொழுது மிதுலாவை கண்டு பிடிப்பதில் இருக்கட்டும்….  மேலும் வருந்தி மிதுலாவை கண்டுபிடிப்பதில் கோட்டை விட்டு விடாதே…”

கேரளாவில் இருந்து மீண்டும் அவர்களின் பயணம் திருச்சியை நோக்கி ஆரம்பித்தது.சக்தி ஒருபுறம் டிடெக்ட்டிவ் ஏஜென்சியுடன் பேச வசீகரன் பாண்டியனிடமும் , போலீஸிடமும் மாறி மாறி பேச அடுத்த சில மணி நேரங்களில் வீட்டிற்கு வந்து இருந்தனர்.ஆவலோடு எதிர்நோக்கிய காவேரியின் முகத்தை கூட நேருக்குநேராக பார்க்காமல் விடுவிடுவென மாடி அறைக்குள் புகுந்து கொண்டான்.

கவலையோடு இருந்த காவேரியிடம்,” தேடிக் கொண்டு இருக்கிறோம்….. கூடிய விரைவில் கண்டுபிடித்து விடலாம்”என்று ஆறுதல் வார்த்தைகள் அளித்தான் சக்தி.இரவும் நெருங்கியது.

மாடியில் அறையில் குளித்துவிட்டு வெளியே வந்தவன் அறையில் ஒவ்வொரு அங்குலமாக அளந்தான்…. இங்கே தான் என்னிடம் சண்டை போட்டாள்… இங்கே என்னிடம் வம்புக்கு வந்தாள்… இங்கே நின்று தான் கண்கள் கலங்க உதடு துடிக்க என்னை கேள்வி கேட்டாள்….. இங்கே நின்று என்னை கள்ளப் பார்வை பார்த்தாள்….. இதோ இந்த கட்டிலில் தான்….. அதற்கு மேல் நினைக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறி பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தான். அங்கும் அவளின் நினைவுகளே நெஞ்சை ஆக்கிரமிக்க எழுந்து நின்று தோட்டத்தை பார்வையிட ஆரம்பித்தான். 

நினைவுகள் பின்னோக்கி செல்ல திருமணம் முடிந்த மறுநாள் மிதுலாவும் காவேரியும் கீழே தோட்டத்தில் இருந்து பேசிக் கொண்டு இருந்ததை எதேச்சையாக அங்கே வந்த வசீகரன் கேட்டான்.

“அத்தை ஒன்று கேட்டால் தப்பாக நினைத்து கொள்ள மாட்டீர்களே????”

“கேள் மிதுலா”

“இங்கே நம் தோட்டம் இவ்வளவு பெரிதாக இருக்கிறது…நம்மிடம் வசதியும் இருக்கிறது….முறையாக பராமரித்தால் இன்னும் அழகாக இருக்கும்…மேலும் இங்கு இருக்கும் ஒருமலர் கூட வாசனை வீசவில்லை….இதெல்லாம் வெறும் அழகுக்காக மட்டுமே இருக்கிறது….தோட்டத்திற்கு வந்தாலே அதன் நறுமணம் நம் நாசியின் வழி உள்நுழைந்து இதயத்தை சென்று அடைந்தால் தானே அங்கே இருக்கும் நமக்கும் ஒரு நிம்மதி, மனநிறைவு இருக்கும்.அதை விடுத்து இந்த வாசனை இல்லா மலர்கள் எதற்கு அத்தை????”

“இதை எல்லாம் உன் கணவன் எங்கோ வெளியூரில் இருந்து வரவழைத்த செடிகள் மிதுலா….இவை எல்லாம் விலை அதிகம்….இந்த சுற்று வட்டாரத்தில் யார் வீட்டிலும் இந்த செடிகள் கிடையாது என்று உன் புருஷனுக்கு ரொம்பவும் பெருமை இதில்.அதனால் இதை பற்றி எதுவும் அவனிடம் பேசி விடாதே….என்ன சரிதானா!!!!”

“ம்ம்ம்  சரி அத்தை….. அவரிடம் பேசவில்லை… ஆனால் அத்தை என்னதான் விலை அதிகம் என்றாலும் நம் ஊரில் கிடைக்கும் மணம் கமழும் பூக்களின் அருகில் இந்த மணம் இல்லா பூக்கள் நிற்க கூட முடியாதே!!!…. நம் தோட்டத்தில் மட்டும் சந்தன முல்லை கொடி ஒன்று இருந்தால் கூட போதும்….இந்த ஏரியாவே மணக்கும்….”

“உனக்கு சந்தன முல்லை என்றால் அவ்வளவு பிடிக்கும் என்றால் உன் புருஷனிடம் சொன்னாய் எனில் நிமிடத்தில் ஏற்பாடு விடுவான்”

அதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் அன்று மிதுலா கவனமாக பேச்சை வேறு பக்கம் திசை திருப்பியதை இப்பொழுது நினைத்து பார்த்தான் வசீகரன்.

‘எங்கே இருக்கிறாய் மிதுலா….வந்து விடு…. என்னிடம் வந்து சேர்ந்து விடு….உன்னை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறேன்…. ஏன்டி இப்படி செய்தாய்…. எங்கே இருக்கிறாய்…ரொம்பவும் தவிக்க விடாதே….என்னால் நீயில்லாமல் இருக்க முடியவில்லை ஒவ்வொரு இடத்திலும் நீ தான் தெரிகிறாய்…. வந்து விடு மிதுலா’ என்று உள்ளுக்குள் உருகினான்.

அவனது  கவனத்தை  கலைத்தது  போனின்  ஒலி. அவசர  அவசரமாக போனை எடுத்தான்.

“ஹலோ… சொல்லுங்க “

………….

“எங்கே இருக்கிறான்?????”

……..

“அவனை தூங்குங்கள்….இப்பொழுதே….உங்கள் தனிப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லுங்கள்..நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் அங்கே இருப்பேன்”

காரை ராட்சஸ வேகத்தில் ஓட்டினான்.அவனின் கோபத்தின் அளவு வசீகரனின் காரின் வேகத்தில் தெரிந்தது.சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் பாண்டியனின் ரகசிய இடத்திற்கு வந்தான் வசீகரன்.

அங்கே சேரில் கட்டி போட்டு வைக்க பட்டு இருந்தான் மூர்த்தி.புயலென உள்ளே நுழைந்தவன், ” பாண்டியா…. அவன் கட்டுகளை அவிழ்த்து விடுங்கள்”

தான் ஏன் கடத்தப்பட்டோம் என்று புரியாமலே யோசித்துக் கொண்டு இருந்த மூர்த்தி வசீகரனை  பார்த்ததும் வாய் அடைத்து போய் திரும்பி பாண்டியனை பார்த்தான்.

“இதோ..கட்டை அவிழ்த்து விடுகிறேன் சார்…. இந்தா மூர்த்தி சாரே…கொஞ்ச நேரம் முன்னாடி  யாரோ மிதுலானு ஒரு பொண்ணை கடத்தணும்னு  சொன்னீங்களே….இப்போ சொல்லு அதை…. “என்று பேசியபடியே  மூர்த்தியின்  கை  கட்டுகளை  அவிழ்த்து  விட்டான்.

பேச்சாவது…. ஒன்றாவது…. வசீகரனை பார்த்ததும் அந்த இடத்திலேயே உறைந்து போய் விட்டான்  மூர்த்தி.

“அன்னிக்கு வாங்கினது உனக்கு பத்தலை இல்லையா!!!!! ….ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்து இருந்தால் என் மனைவியை கடத்த சொல்லி இங்கே வந்து இருப்பாய்????”பேசிக் கொண்டே  மூர்த்தியின்  சட்டையை கழுத்தோடு சேர்த்து   கொத்தாக பற்றி தலைக்கு  மேலே ஒற்றை கையால்  தூக்கி  தொங்க விட்டான்.

“உன்னை …வந்து பேசிக் கொள்கிறேன்… பாண்டியா… இவனுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்காதே…நான் வரும் வரை இவன்  உங்கள்  பாதுகாப்பிலேயே  இருக்கட்டும்.”

“சரி சார்…  இன்று இவனாகவே எங்களைத் தேடி  வந்து உங்கள் மனைவியை கடத்த எங்களிடமே பேரம் பேசுகிறான்…அதுதான் இவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே என் ஆட்களின் மூலம் உங்களுக்கு தகவல் தெரிவிக்க சொன்னேன். நம் ஆட்களிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும்…இவனை உரித்து தொங்க போட்டு விடுவார்கள்”

“அதெல்லாம் வேண்டாம் பாண்டியா…. இவனை இப்படியே விட்டு வையுங்கள்…இவனுக்கு என் கையால் பூஜை செய்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். இவனது உடம்பில் ஒவ்வொரு பாகத்தையும் செதில் செதிலாக என் கையாலேயே உரிக்க வேண்டும்.அப்பத்தான் எனக்கு நிம்மதி. இனி இவனுக்கு நான் இருக்கும் திசை பக்கம் திரும்ப கூட தைரியம் வர கூடாது.”  

வசீகரன் பேச பேச மூர்த்தி உறைந்து போய் நின்று விட்டான்.’ஐயோ இவன் பேசுவதை பார்த்தால் ஒழுங்காக வீடு போய் சேர மாட்டேன் போல் இருக்கிறதே…. இந்த பாண்டியன் கடைசியில் இந்த வசீகரனின் ஆளா!!! இது தெரியாமல் இவனிடமே வந்து அவன் மனைவியை கடத்த வேண்டும் என்று சொல்லி இப்படியா மாட்டிக் கொள்வது…. இப்பொழுது வசீகரன் பேசுவதை பார்த்தால் உயிரோடு விட மாட்டான் போல் இருக்கிறதே’ என்று பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தான் மூர்த்தி.

அங்கிருந்து கிளம்ப போன வசீகரனை நோக்கி கையெடுத்து கும்பிட்டான் மூர்த்தி.

“தெரியாம செஞ்சுட்டேன்…என்னை விட்டுடுங்க வசீகரன் சார்”

“உன்னை எல்லாம் எப்படி மன்னிப்பது….நீ செய்த தவறுக்கு தண்டனையை நீ அனுபவித்து தான் தீரவேண்டும்.நீ எனக்கு ஆபத்து ஏற்படுத்தி இருந்தால் கூட உன்னை மன்னித்து இருப்பேன்.ஆனால் நீ என் மனைவியை அல்லவா கடத்த நினைத்தாய்? ….. இனி நீ வெளியில் சென்றால் சோத்துக்கு பிச்சை தான் எடுப்பாய்… நீ இந்த இடத்தை விட்டு வெளியில் வரும் போது உன் தொழில் ஒன்றுமே இல்லாமல் போயிருக்கும்.” என்று கூறியவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் அங்கிருந்து வெளியேறினான்.

அங்கிருந்து கிளம்பி புயலென காரை ஓட்டி சென்றான் வசீகரன்.’மூர்த்தி செய்த தவறுக்கு அவனை தண்டித்தாயிற்று.இனி அவன் மறந்தும் எங்கள் வாழ்வில் குறுக்கிட மாட்டான். ஆனால் மூர்த்தியும் கடத்தவில்லை என்றால் மிதுலாவிற்கு என்ன தான் ஆனது’.. என்ற பதட்டத்தோடு  வண்டியை ஒட்டிக்கொண்டு சென்றான்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here