நிலவே உந்தன் நிழல் நானே 34

0
1235
NUNN Tamil Novels 37

வசீகரனின் மனம் முழுக்க மிதுலாவே நிறைந்து இருக்க அவனை கலைத்தது அவனுடைய போன்.அழைப்பது போலீஸ் கமிஷனர் என்று தெரிந்ததும் காரை நிறுத்திவிட்டு கைகள் நடுங்க போனை எடுத்து பேசலானான்.

போனில் பேசிக் கொண்டே மாடிப்படிகளை இரண்டு இரண்டாக கடந்து மின்னலென பாய்ந்து கீழே வந்தான் வசீகரன்.”அம்மா மிதுலா கிடைச்சுட்டா…. சக்திகிட்ட சொல்லிடுங்க…… ” தரையில் கால் படாமல் ஓட்டமாக ஓடினான்.

கமிஷினர் ஆபீஸ் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு வேக வேகமாக உள்ளே ஓடினான்.

உள்ளே நுழைந்தவனை ,”வாங்க வசீகரன் உங்களை ஒரு அரை மணி பொறுத்து தாமதமாக தானே வர  சொன்னேன்…. அதற்குள் வந்து விட்டிர்கள்…… நல்லவேளை சி எம் இன்றைக்கு மீட்டிங்கை கேன்சல் செய்து விட்டாங்க …போகலாம் வாங்க” என்று கூறிவிட்டு தன்னுடைய ஜீப்பிலேயே வசீகரனை அழைத்துக் கொண்டு போனார்.தன் காரை கூட மறந்து அவர் பின்னாலேயே ஓடினான் வசீகரன்.அவர் அழைத்து சென்றது திருச்சி கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்கு….

இடத்தை பார்த்ததும் ஆணி அடித்தது போல் அங்கேயே நின்றவன், கமிஷ்னரின் கைகளை இறுக்கி பிடித்தான்.

“இங்கே எதற்கு வந்து இருக்கிறோம் சார்???” இன்று வரை இல்லாத பதட்டம் அவன் குரலில்.தன் கைகளை இறுக பற்றியபடி நடுங்கிக் கொண்டு இருந்த வசீகரனின் கரங்களை ஆறுதலாக தட்டிக் கொடுத்து, “பயப்பட ஒன்றும் இல்லை யங் மேன்…. உள்ளே வாங்க”

“மிதுலாவிற்கு ஒன்றும் இல்லை தானே” அவன் கட்டுப்பாட்டை மீறி குரலும் உடலும் உதறல் எடுக்க தொடங்கியது.

“பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லைன்னு தான் நினைக்கிறன்….இதை போனிலேயே சொன்னால் நீங்கள் டென்ஷன் ஆவீங்கன்னு தான் நேரே அங்கே வர சொன்னேன்.”

“சார் ப்ளீஸ்…. மிதுலா எங்கே!!!! எனக்கு அவளை பார்க்கணும்….”

“பார்க்கலாம் வசீகரன்…ஏன் இத்தனை பதட்டம்…. முதலில் சொல்வதை கேளுங்கள்….உங்கள் மனைவி வந்த ஆட்டோ ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது…உங்கள் வீட்டில் இருந்து சரியாய் ஒரு அரை மணி தூரத்தில் நடந்து இருக்கிறது.ஆட்டோ டிரைவருக்கும் உங்கள் மனைவிக்கும் அடி கொஞ்சம் பலம் தான் போல…. இருவருமே சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்து மயங்கி விட்டார்கள்…. விடியற்காலை நேரமாதலால் ஆரம்பத்தில் எங்கள் விசாரணையில் தெரிய வரவில்லை.ஆட்டோ டிரைவருக்கும் மயக்கம் தெளியாததால் உங்கள் மனைவி பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.ஆட்டோ டிரைவரை பற்றி எங்கள் ஆட்கள் மூலம் விசாரிக்கும் பொழுது தான் அவர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருப்பது தெரிய வந்தது.”

……………

“முதலில் நாம் டாக்டரை பார்த்து விடுவோமா வசீகரன்”

“இல்லை வேண்டாம் எனக்கு முதலில் என் மிதுலாவை பார்க்க வேண்டும்……”

“பார்க்கலாம் வசீகரன்….டாக்டரை சந்தித்து முதலில் உங்கள் மனைவியின் உடல்நிலையை தெரிந்து கொள்ளுவோம் வாருங்கள்….”

“சார் ப்ளீஸ்!!!! முதலில் நான் அவளை பார்க்க வேண்டும்… அதன் பிறகு டாக்டரை பார்த்துக் கொள்கிறேன்.”

எத்தனை பெரிய பிசினஸ் மேன் ஆனாலும் மனைவிக்கு ஒன்று எனும் போது எப்படி துடிக்கிறார்….. அன்பு வீரனைக் கூட கோழையாக்கிவிடும் போல என்று நினைத்துக் கொண்டே, அருகில் சீருடையில் இருந்த இன்னொருவரை அழைத்தார்.”இவர் இன்ஸ்பெக்டர் பரத்.இனி மேற்கொண்டு இவர் பார்த்துக் கொள்வார். நான் கிளம்புகிறேன் வசீகரன்…எனக்கு ஒரு மீட்டிங் இருக்கிறது” என்று கூறி விழி அசைவில் விடை பெற்றார்.ஆனால் அது எதையும் வசீகரன் உணர்ந்தானில்லை.

சாவி கொடுத்த பொம்மை போல இன்ஸ்பெக்டரின் பின்னாலேயே போனான்.ஐ சி யூ வார்டினுள் நுழைய மறுத்த கால்களை கஷ்டப்பட்டு எடுத்து வைத்து உள்ளே சென்றான் வசீகரன்.அங்கே அவன் கண்ட காட்சியில் இதயம் ஒருமுறை துடிப்பை நிறுத்தி விட்டது போல உணர்ந்தான்.முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டப்பட்டு முகத்தில் ஆங்காங்கே சிராய்ப்புகளோடு வாடிய மலரை போல்  படுத்து இருந்தாள் மிதுலா.

எப்படி இருந்தவள் இப்படி இருக்கிறாளே என்று அப்படியே உறைந்து போய் நின்றான் வசீகரன்.அறைக்குள் நுழைந்த டாக்டரை நோக்கி பாய்ந்து ஓடியவன் , “டாக்டர் மிதுலாவுக்கு ஒன்றும் இல்லை தானே….சும்மா தூங்கி கொண்டு இருக்கிறாளா…. அவளுக்கு எதற்காக ஆக்சிஜன் மாஸ்க் எல்லாம் மாட்டி விட்டு இருக்குறீர்கள்…. எழுந்ததும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் விடலாம் தானே????”

வசீகரனின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் , ” நீங்கள் யார்…. அந்த பெண்ணிற்கு நீங்கள் சொந்தமா????”எதிர்கேள்வி கேட்டார் டாக்டர்.

“ஆமாம் டாக்டர் நான் அவள் சொந்தம்…. அவளின் சொந்தம்…. அவளுக்கு மட்டுமே சொந்தம்” நிறுத்தாமல் பேசியவனை பார்த்து ஆறுதலாக புன்னகைத்தார் டாக்டர்.

“மகிழ்ச்சி….அவங்களுக்கு தலையில் தான் கொஞ்சம் அடிபட்டு இருக்கு…. பயப்படும் படி வேறு ஒன்றும் இல்லை…ஒரு வாரம் நல்ல ஓய்வில் இருந்தால் போதும்…தலையில் அடிபட்டு ரத்தம் நிறைய சேதாரம் ஆகிவிட்டது.வெளியில் இருந்து வரவழைத்து இவர்களுக்கு வேண்டிய ரத்தத்தை ஏற்றியாயிற்று….இனி பயப்பட ஒன்றுமில்லை.”

“அப்படியானால் நான் இவளை அழைத்து செல்லலாமா டாக்டர்…”

“ஹம்மம்…. என்னை கேட்டால் இன்னும் ஒரு இரண்டு நாள் ஹாஸ்பிடலில் இருப்பது நல்லது.விபத்து நடந்து முடிந்து இப்பொழுது வரை அவர் கண் திறக்கவில்லை.அவங்க கண் விழித்ததும் கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் எடுத்துவிட்டு பிறகு வீட்டிற்கு கூட்டிட்டு போங்க”

“இல்லை டாக்டர்…. அவளுக்கு வேண்டிய வசதிகளை நான் வீட்டிலேயே செய்து கொடுக்கிறேன்….இப்பொழுதே அவளை அழைத்துக் கொண்டு போகிறேன்….” என்றான் பிடிவாதமாக.

“அதற்கு மேல் உங்கள் விருப்பம்….எனினும் இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எடுத்து அவங்களால டிராவல் பண்ண முடியுமான்னு பார்த்துட்டு தான் நான் டிஸ்சார்ஜ்க்கு ஒத்துக் கொள்வேன்…சரிதானா…. அதுவரை கொஞ்சம் பொறுத்து இருங்கள்.” என்று கூறிவிட்டு டாக்டர் வெளியேறி விட்டார்.

மிதுலாவின் தலைக்கு அருகிலேயே சேரில் அமர்ந்தவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். சரியாக அந்த நேரத்தில் போன் ஒலிக்கவே எடுத்து பேசலானான்.

“சக்தி உடனே புறப்பட்டு ஜி எச் க்கு வா”

…….

“வரும் பொழுது மிதுலாவின் உடை அங்கே மாடியில் எங்கள் அறையில் இருக்கும் அம்மாவிடம் சொல்லி ஒரு இரண்டு செட் உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வா”

……..

“நான் அவள் பக்கத்தில் தான் இருக்கிறேன்….இப்பொழுது தூங்கிக் கொண்டு இருக்கிறாள்…நேரத்தை கடத்தாமல் சீக்கிரம் வா” பேசி முடித்து போனை பாக்கெட்டில் வைத்தவன் மீண்டும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இவள் இல்லாத இந்த நாட்களில் தான் அடைந்த வேதனை அனைத்தும் கண் முன்னே நிழலாடியது…. ஒருவேளை ….. ஒருவேளை இன்று தன்னால் அவளை காண முடியாமல் போய் இருந்தால்…… நினைத்துக் பார்க்க கூட முடியவில்லை அவனால்.

இனி தான் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன் அவள் முகத்தை பார்த்தபடியே அப்படியே அமர்ந்து இருந்தான்.

“வசி…. தங்கச்சிக்கு என்ன ஆச்சுது???” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் சக்தி.

சக்தியின் கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் அளித்தவன், ” சக்தி…. இன்னும் ஆட்டோ டிரைவர் கண்ணு முழிக்கலை… அவர் கண்ணை திறந்தால் தான் எப்படி விபத்து நடந்தது என்று தெரிய வரும் என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்.அதை பற்றி கொஞ்சம் விசாரி…. இது உண்மையிலேயே விபத்து தானா என்பதை தெரிந்து கொண்டு வா”

இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார்.

“சார் …. அந்த டிரைவர் கண் விழித்து விட்டார். அவரிடம் விசாரித்து விட்டேன்.தவறு தன் மேல் தான் என்று ஒத்துக்கொண்டார். குழந்தைக்கு பீஸ் கட்ட பணம் இல்லாததால் இரவு பகலாக வண்டி ஒட்டி இருக்கிறார்.  ஏற்கனவே இரண்டு நாட்கள் விடிய விடிய வண்டியை ஓட்டி இருக்கிறார்.தூக்க  கலக்கத்தில் தான் எதிரில் வண்டி வருவதை சரியாக கவனிக்காமல் மோதப் போகும் கடைசி நொடியில் சுதாரித்து வண்டியை திருப்பி இருக்கிறார்.ஆனாலும் அதற்குள் விபத்தை தடுக்க முடியவில்லை  என்று சொல்கிறார்.மேலும் உங்கள் மனைவியை பற்றியும் விசாரித்தேன்.அவர்கள் தானாகவே வந்து தான் ஆட்டோவில் ஏறி இருக்கிறார்கள். ஆட்டோவில் ஏறி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டும் என்று சொல்லி விட்டு அப்படியே ஸீட்டில் சாய்ந்து அமர்ந்து அழுது கொண்டே வந்தார்.வேறு எதுவும் நினைவில் இல்லை என்று சொல்லுகிறார்.வேறு ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா சார்”

இல்லை என்பது போல தலை அசைத்தவன் அன்றைய நாளில் மிதுலாவின் மனநிலை எப்படி இருந்து இருக்கும் என்று எண்ணிப் பார்த்தான்.இனி தான் செய்ய வேண்டியது குறித்து ஒரு முடிவுக்கு வந்தவன் சக்தியிடம் திரும்பி பேசலானான்.

“சக்தி நீ டாக்டரிடம் போய் மிதுலாவை இன்றே டிஸ்சார்ஜ் செய்வதற்கு வேண்டிய பார்மாலிட்டியை செய்து முடி.” என்று கூறி விட்டு மிதுலாவின் புறம் திரும்பினான்.இத்தனை நாட்கள் தன்னுடைய ஈகோவினால் இவளை தவிக்கவிட்டது போதும்.இனி அவள் இழந்ததற்கும் சேர்த்து ஈடு செய்யும் வகையில் அவளை இனி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உறுதியோடு நினைத்தவன் அவள் நெற்றியில் இருந்து தலை வரை ஒற்றை விரலால் மெதுவாக வருடி கொடுத்து விட்டு  மெதுவாக மிக மெதுவாக அவளின்  நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தான்.

டவல் பாத் கொடுக்க வந்த நர்ஸை மறுத்து வெளியே அனுப்பி வைத்து விட்டு ஐ சி யூ அறையில் வேறு யாரும் இல்லாததால் அறையை சாற்றிவிட்டு தானே அவளுக்கு டவல் பாத் செய்து முடித்தான். சக்தி எடுத்து வந்த மாற்றுடையை தானே அணிவித்தான்.உடை மாற்றுகையில் ஒரே ஒரு நிமிடம் கூட அவனது மனம் சலனப்படவில்லை . சேயை பேணும் தாயின் மனோ நிலையில் நடக்க ஆரம்பித்தான்.வசீகரன் அறை கதவை திறக்கவும் சக்தி வரவும் சரியாக இருந்தது.

“டேய் டாக்டர்கிட்ட பேசி பார்த்துட்டேன்டா… அவர் செக் பண்ணிட்டு தான் சொல்லுவேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு….ஏற்கனவே எடுத்த டெஸ்ட் ரிசல்ட் இப்ப வந்துடுமாம்…வந்ததும் பார்த்துவிட்டு சொல்றேன்னு சொன்னாருடா”

“நீ வீட்டுக்கு போய் அம்மாவை கூட்டி கொண்டு வா சக்தி…. அவர்களிடம் விபத்து குறித்து எதுவும் சொல்லாதே!!!! பயந்து விடுவார்கள்… போ” என்று கூறி சக்தியை அனுப்பி விட்டு மீண்டும் மிதுலா வின் அருகிலேயே அமர்ந்தான்.

“மிது …. என்னை ரொம்ப சோதிக்காதே …. உனக்கே நன்றாக தெரியும் என்னை பற்றி…. சீக்கிரம் வா… உனக்காக நானும் நம் வாழ்வும் காத்திருக்கிறது.நீ கண் விழிக்கும் போது உன்னுடைய இந்த உலகமே மாறி இருக்கும்… நான் மாற்றி வைப்பேன்….வந்துவிடு மிது… செய்த தவறை எல்லாம் திருத்திக் கொள்ள எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடு….இனி வாழ்நாளில் ஒருநாள் கூட நீ வருந்தும்படி நடக்க மாட்டேன்”.மிதுலாவின் காதருகில் குனிந்து அவள் நெற்றியை நீவியபடியே பேசிக் கொண்டு இருந்தான் வசீகரன்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here