நிலவே உந்தன் நிழல் நானே 4

0
1376
NUNN Tamil Novels 37

கண் விழித்த மிதுலா முதலில் பார்த்தது கண்ணீரோடு நின்று கொண்டு இருந்த தாயின் முகத்தையும், குற்ற உணர்வோடு இருந்த சுஜியின் முகத்தையும் தான்.

அம்மா !!!   என்று மெலிதாக முனகிய படியே தாயை நோக்கி கையை நீட்டினாள்.

அம்மாடி!!! என்று பதறிய படியே மகளின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள் அந்த தாய்.

“ஸாரி டி மிதுலா என்னை மன்னிச்சுடு!!!!.என்னால தான் இவளோ பிரச்சினையும்…. எனக்கு மன்னிப்பே கிடையாது மிதுலா”.உன் வாழ்க்கையை நானே நாசம் பண்ணிட்டேன் என்று தலையில் அடித்து கொண்டு அழுத சுஜியை ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.

தெய்வானை மகளின் கையை ஆறுதலாக பற்றி இருந்தாலும் அந்த கண்களும் கண்ணீரை மட்டுமே பதிலாக தந்து கொண்டு இருந்தன.

அவளிடம் இருந்த ஆயிரம் கேள்விகளில் ஒன்றுக்கு கூட பதில் அளிக்க அவர்களில் யாருக்கும் தெம்போ ,தைரியமோ இல்லை. இப்படி எல்லாரும் மாத்தி மாத்தி அழுது கொண்டே இருந்தாள் அவளும் என்ன தான் செய்வாள்!!!.என்ன முயன்றும் அவளுக்கு நடந்த விஷயங்கள் ஏதும் கோர்வையாக நினைவு வரவில்லை.ஹோட்டலுக்கு போனோம் கேக் வெட்டி கொண்டாடினோம் எல்லாரும் டான்ஸ் ஆடினார்கள் ஜூஸ் குடித்தேன் மயக்கம் வந்தது.பிறகு ….. முகம் கழுவ போனேன் அப்போது யாரோ ….. என்னை தூக்கி கொண்டு போனார்கள்.பிறகு……..உச்சக்கட்ட அதிர்ச்சியோடு தாயை பார்த்தாள்.

மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த தெய்வானையோ அழுகையை சற்று மட்டுப்படுத்திக்கொண்டு கரகரத்த குரலில் சொன்னாள்.”  உனக்கு  இன்று முழுக்க உனக்கு ஓய்வு அவசியம் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்.அதனால் நாளை காலை உனக்கு கல்யாணம் “என்றாள் தெளிவாக.

மிதுலாவிற்கு  முதலில் ஒன்றும் புரியவில்லை.மயக்க மருந்தின் விளைவோ என்று காதுகளை நன்றாக தேய்த்து விட்டு தலையையும் நன்றாக உலுக்கி விட்டு  மீண்டும் கேட்டாள்.

” என்னம்மா சொன்னீங்க எனக்கு சரியாய் கேட்கலை” என்று கேட்ட மகளை பரிதாபத்துடன் பார்த்தால் தெய்வானை.ஆனால் இது பரித்தாப்படும் நேரம் இல்லை என்று உணர்ந்து ,”எல்லாம் சரியாய் தான் விழுந்தது. நாளை காலை உனக்கு கல்யாணம் அதனால உடம்பை போட்டு வருத்திக் கொள்ளாமல் ஓய்வு எடு. எனக்கு நிறைய வேலை இருக்கு.”

நான் வீட்டுக்கு போய் உனக்கு துணைக்கு நம்ம வேலைக்காரி கற்பகத்தை  அனுப்பி வைக்குறேன் என்றாள்.

அதுவரைக்கும் நான் அவளை   பார்த்து கொள்கிறேன் ஆன்ட்டி என்று கூறிய சுஜியை நோக்கி கை எடுத்து கும்பிட்டாள் தெய்வானை.

பதறிய சுஜியை கண்டு கொள்ளாது, நீ என் மகளை இதுவரை பார்த்து கொண்டதற்கே நாங்கள் இங்கே வந்து நிற்கிறோம்.போதும் நீ உதவி செய்தது,” தயவு செய்து இங்கு இருந்து கிளம்பு அதுவே பெரிய உதவி என்றாள்.

ஆன்ட்டி என்று பேச தொடங்கிய சுஜி தெய்வானையின் பார்வையில் கப்பென்று வாயை மூடி கொண்டாள்.

“அம்மா அவ இங்க இருக்கட்டுமே !!! எனக்கு அவ கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு”.

“நீ ஒண்ணும் பேச வேண்டாம்.பேசாம படுத்து ரெஸ்ட் எடு. “இல்லம்மா நேத்து அந்த ஹோட்டலில் என்ன நடந்த……. அந்த வார்த்தையை முடிப்பதற்குள் பளார் என்று ஒரு அறை விட்டார் தெய்வானை .

“இனி ஒரு வார்த்தை பேசினால் அந்த கன்னமும் பழுத்து விடும்.வாயை மூடிக் கொண்டு இரு”.அம்மாவா தன்னை அடித்தது என்ற அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்து விட்டாள் மிதுலா.

மிதுலாவை அடித்த அதே வேகத்தோடு திரும்பி,   நீ ஏன் இன்னும்   இங்கு இருக்கிறாய்??? உன் வீட்டுக்கு போகவில்லை???? இன்னும் என்ன செய்ய காத்துக் கொண்டு இருக்கிறாய்? கிளம்பு!!!!  இனி மிதுலாவை பார்க்கவோ, பேசவோ முயற்சி செய்யாதே. மிதுலாவும் நான் உயிரோடு இருக்கும் வரை உன்னை தேடி வர மாட்டாள். மீறி உன்னோடு பழகினால் அவளை பொறுத்த வரை தான் இறந்ததற்கு சமம்.

ஆன்ட்டி தயவு செய்து பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீர்கள்.எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ….

 எதற்கு என் பிணத்தை பார்ப்பதற்காகவா?

 அம்மாஆஆ !!!!…… ஆன்ட்டி!!!! ….. என்று ஒரே நேரத்தில் இருவரும் அலறினர்.

ப்ளீஸ்!!!… ஆன்ட்டி  தயவு செய்து இனி ஒரு முறை இப்படி பேசாதீர்கள்!!!!  இனி நான் மிதுலாவை தொந்தரவு செய்ய மாட்டேன். முடிந்தால் நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னித்து விடுங்கள். நான்  வரேன்.

 சோர்ந்த நடையோடு செல்லும் தோழியை பார்த்து மனம் வலிக்க  தொடங்க தாயை நோக்கி பேச தொடங்கினாள்.  அம்மா நான் …..

“பேசாமல் படுத்து ஓய்வு எடு மிதுலா”.அப்ப தான் நாளைக்கு கல்யாணத்துல முகம் களையா இருக்கும்.

அம்மா நான் என்ன சொல்ல வரேன்!! நீங்க என்ன சொல்றீங்க?

கதவு திறக்கும் ஓசை கேட்டதும் திரும்பிய தெய்வானை,”அடடே !!!! நீ வந்துட்டியா !!! வா கற்பகம்!! நீ கொஞ்ச நேரம் மிதுலா கூட இரு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வெளியே போய்ட்டு வந்துடறேன்.கற்பகம், “மிதுலாவுக்கு உடம்பு இன்னும் சரி ஆகலை. சும்மா எதையாச்சும் பேசி அவளை தூங்க விடாம பண்ணாதே. அவ தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்.அவ கல்யாணப் பொண்ணு நியாபகம் இருக்குல்ல!!! அவளை  பத்திரமா பார்த்துக்கோ.டாக்டரை தவிர யாரையும் உள்ள விடாதே.அவளை ரெஸ்ட் எடுக்க விட மாட்டாங்க.சொல்றது புரிஞ்சுதா”???

எப்பொழுதும் இது போன்ற அதட்டலான வார்த்தைகளை தெய்வானை பிரயோகிக்க மாட்டாள்.இன்று என்ன ஆனது இந்த அம்மாவுக்கு என்று எண்ணியபடியே வெளியில் பூம் பூம் மாடு போல வேகமாக தலையை ஆட்டினாள் கற்பகம்.

தெய்வானையின் தலை மறையும் வரை வாயை மூடி இருந்த கற்பகத்தால் அதற்கு மேல் இருக்க முடியாமல் வாயை திறந்து கேள்விகளை தொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

” ஏன் கண்ணு!!!! என்ன உனக்கு திடீர்னு கல்யாணமாமே???என்கிட்ட சொல்லவே இல்லை.சரி விடு வீட்டு வேலைக்காரிகிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்லணும்னு நினைச்சிட்ட போல…..ஹம்ம் அதுவும் சரி தான்.என்று புலம்பிய கற்பகத்திடம் அப்படி எல்லாம் நான் நினைக்கவே இல்லையே….என்று மனதுக்குள் அரற்றினாள்.

ஏன் தாயி மாப்பிள்ளை எப்படி ரொம்ப அழகோ? இல்ல ரொம்ப வசதியா….யார்கிட்டயும் சொல்லாம அவசர அவசரமா நடக்கிற மாதிரி இருக்கே அதான் கேட்டேன்.ஓ நீங்க எல்லாம் இந்த காலத்து பிள்ளைங்க இல்ல.மாப்பிள்ளையை நீ தான் பாத்தியோ???. உங்க அம்மா ஒத்துக்கலைனதும் மருந்தை ஏதும் குடிச்சிட்டியா????? இல்ல புள்ளை ஏதும் உண்டாகிடுச்சா??? கற்பகம் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டு இருந்தாள். கடைசி கேள்வியில் அருவருத்து முகம் சுளித்து விட கற்பகத்திடம் பேசக்கூட அவளுக்கு விரும்பாமல் கண்களை இறுக மூடி கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.

ஏம்மா, நான் இவ்ளோ கேக்குறேன் எதாவது   வாயை திறந்து சொல்லேன்.இப்படி ஒண்ணுமே சொல்லாம இருந்தா தெருவுல எல்லார்கிட்டயும் நான் போய் என்னன்னு சொல்றது???

அடப்பாவி !!!! அப்படின்னா இவளோ நேரம் என் மேல இருக்கிற அக்கறைல இதை பத்தி கேட்கவில்லையா????

ஒருவேளை பழைய மிதுலாவாக இருந்து இருந்தால் இந்நேரம் கற்பகம் இவளிடம் வாய் குடுக்க முடியாமல் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி இருப்பாள்.இப்பொழுது இருப்பவள் பேச்சையே மறந்தவள் போல் அல்லவா இருக்கிறாள்.தனியே இவளிடம் விட்டுவிட்டு போன தன் தாயை மனதாரத்   திட்டித் தீர்த்தாள் மனதுக்குள் தான். ஒரு வழியாக தெய்வானை வந்த பொழுது கற்பகம் மிதுலாவை எவ்வளவு நோகடிக்க முடியுமோ அத்தனை கேள்வியும் கேட்டு முடித்த பின்னரே வாயை மூடினாள்.

தெய்வானை சோர்ந்த முகத்தோடு அறைக்குள் நுழைந்தார். என்ன கற்பகம் இவ ஒழுங்கா தூங்கினாளா இல்லையா????.

அது எப்படிமா பாப்பா தூங்காம நான் விட்டுடுவேணா!!

 நீ ஏதும் அவளை தொந்தரவு செய்யலியே?

சே!!! சே!!! நான் என்னம்மா செய்ய போறேன்.நான் பாட்டுக்கு ஒரு ஓரமா சேரில் உட்கார்ந்து இருந்தேன். பாப்பா நீங்க கிளம்பின உடனே தூங்கிடுச்சுமா. இப்ப தான் கண்ணை திறந்து பார்க்குது.என்று போட்டாலே ஒரு போடு.வாய்க்குள் கொசு போனது கூட தெரியாமல் வாயை திறந்து படியே இருந்தாள் மிதுலா.

ஓ சரி!!! கற்பகம்,” நீ கிளம்பி வீட்டுக்கு போய் வீட்டை நல்லா சுத்தப் படுத்தி வை.நாளைக்கு வீட்டுல விஷேசம் இருக்கு இல்ல.நீ போய் அந்த வேலைகளை கவனி.ஒரு ரெண்டு நாளைக்கு நீ நம்ம வீட்டுலேயே தங்கிக்கோ.

என்னம்மா திடீர்னு கல்யாணம் வச்சு இருக்கீங்க.மாப்பிள்ளை நமக்கு சொந்தமா?….

அட சொல்ல மறந்துட்டேன் பாரு கற்பகம் நாளைக்கு விசேஷத்துக்கு கட்டிக்க உனக்கு ஒரு புடவை எடுத்து இருக்கேன்.வீட்டுல இருக்கு  வீட்டுக்கு போனதும் வாங்கிக்கோ.

அம்மா வேண்டும் என்றே பேச்சை மாற்றுகின்றாரோ என்று மிதுலாவுக்கு தோன்றியது.ஆனால் அது போன்ற சந்தேகம் எதுவும் துளியும் இல்லாமல் புது புடவை என்ற வார்த்தையை கேட்டதும் கற்பகம் உலகையே மறந்துவிட்டாளே!!!. இதிலெங்கே அவள் திருமணத்தை பற்றி மேற்கொண்டு கேட்க போகிறாள்.

வாயெல்லாம் பல்லாக, ” எனக்கு தெரியாதா அம்மா உங்களை பத்தி என்னையும் உங்க பொண்ணா தானே நினைப்பீங்க.”

உன் தங்கச்சிகிட்ட கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்ட கேட்டியே அப்படிப்பட்ட கேள்விகளை வாயை திறந்து கேட்பாயா?  எரிச்சலோடு பார்த்தாள் கற்பகத்தை.கற்பகம் ஊர் வம்புக்கு அலைபவள் என்று அவளுக்கு ஏற்கனவே தெரியும்.ஆனால் அப்பொழுதெல்லாம் அதை அவள் கண்டு கொண்டது இல்லை.ஆனால் இன்றோ அவள் மீது ஏற்படும் அருவருப்பை அவளால் தடுக்க முடியவில்லை.

வீட்டிற்கு வந்த பிறகு எத்தனையோ முறை தாயிடம் பேச முயன்ற மகளை தெய்வானை கண்டும் காணாதவாறு நடந்து கொண்டாள்.

அம்மா என்று தயக்கமாக, கெஞ்சலாக, கோபமாக என்று எப்படி எல்லாமோ அழைத்து பார்த்தாள். ஆனால் தெய்வானை அவளை கண்டுகொள்ளவே இல்லை. இரவு சாப்பாட்டை கொண்டு வந்த கற்பகத்திடம் மறுத்து விட்டு கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குபவளை போல படுத்து இருந்தாள்.

அவளுக்கு தெரியும் அவளை தேடி கண்டிப்பாக தெய்வானை வருவாள் என்று கண்ணை மூடி காத்திருந்தாள்.ஆனால் உடனடியாக வராமல் சற்று நேரம் பொறுத்தே வந்தார்.

“என்ன மிதுலா இன்னும் சின்ன புள்ளையா நீ”????.ஏற்கனவே ஹாஸ்பிடல் வேற போய்ட்டு வந்து இருக்க மாத்திரை எல்லாம் சாப்பிடணும் இப்படி பட்டினியா இருக்கலாமா????  எழுந்து சாப்பிடு.

ஆமாம் அம்மா உடம்பு சரி இல்லாத பொண்ணு சாப்பிடாம படுக்க கூடாது.ஆனா  கல்யாணம் மட்டும் செய்யலாம்!!!! அப்படித்தானே???? என்னால முடியலைம்மா!!! உங்களால எப்படிமா இப்படி செய்ய முடியுது???  என … எனக்கு …… நே … நேற்று அங்கே ஹோட்டல்ல …..

“வாயை மூடு மிதுலா”.இனி ஒரு தடவை நீ இந்த பேச்சை பேச கூடாது புரிஞ்சுதா?

அம்மா …. நான்..

“வாயை மூடுன்னு சொல்றேன்ல கேட்க மாட்டியா?? ஏற்கனவே சொந்தகாரங்க எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க.நீ பேசுறது யார் காதுலையும் விழுந்தா என்ன ஆகுறது?  உங்க அப்பா கட்டி காப்பாத்தின குடும்ப கவுரவம் எனக்கு முக்கியம்.அது கேட்டு போக நான் ஒரு நாளும்  விட மாட்டேன்.பேசாம படுத்து தூங்கு.காலையில் நேரமா எழுந்திரிக்கணும்.

கதவு வரை போன தெய்வானை நின்று திரும்பி கூட பார்க்காமல் , “நான் உன் அம்மா மிதுலா உனக்கு கெடுதல் செய்ய மாட்டேன் அதை மட்டும் நம்பு.இப்ப  சாப்பிட்டு படுத்து  தூங்கு”.

எதை எதையோ யோசித்து குழம்பிய படி விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தவள் விடியலின் அருகில் உறங்கினாள்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here