ஹாய் பிரெண்ட்ஸ் ??? இந்த தளத்தில் என்னோட முதல் கதை??? மற்ற கதைகள் மாதிரியே இந்த கதைக்கும் உங்க ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் ???
கதை : நிழலாய் ஒரு நினைவு
ஹீரோஸ் : வைபவ் வர்மா, அதர்வா???
ஹீரோயின் : பாவ்னா ???
டீசர் 1
ஊட்டி – மலைகளின் ராணி அவள். நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமே ஊட்டி எனப்படும் உதகமண்டலம். உதகம் என்றால் தண்ணீர். மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர் என்று பொருள். இது அங்குள்ள ஏராளமான ஏரிகளைக் குறிக்கிறது. அவை மட்டுமல்லாது பல்வேறு பூங்காக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு குளிர் பிரதேசத்திற்கே உரிய அழகைக் கொண்டுள்ள ஊட்டி உலகத்தில் உள்ள 14 ‘ஹாட் ஸ்பாட்’களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
காலை 10.30 மணிக்கெல்லாம் தொட்டபெட்டாவில் ஓரளவு கூட்டம் இருந்தது. இதுவே விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஊட்டியில் உள்ள ஒவ்வொரு இடங்களையும் பார்த்து ரசித்துவிட்டு அவர்கள் கடைசியாக வந்த இடம் இது.
பெரியவர்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டதால் அவர்கள் சற்று நேரம் அங்கு இளைப்பாறினர். சிறியவர்களுக்கோ குஷி. இவ்வளவு நேரம் அவர்களின் கைகளுக்குள்ளே இருந்துவிட்டு தற்போது கிடைத்திருக்கும் இந்த சுதந்திரம் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அவர்கள் விளையாடச் செல்லும் முன் பல அறிவுரைகளைக் கூறியே விளையாட அனுமதித்தனர் அவர்களின் பெற்றோர்கள்.
“இங்க பாரு கண்ணா… அந்த பக்கம் போகக் கூடாது…” என்று அங்குள்ள பள்ளத்தைக் காட்டினார். “இங்கயே எங்க கண்ணு முன்னாடி தான் விளையாடனும்… சரியா… ராஜா நீ தான் தம்பியைப் பாத்துக்கனும்..” என்று தான் இரு மகன்களுக்கும் அறிவுறுத்தியப் பின்னரே அவர்கள் செல்ல அனுமதித்தார்.
இருப்பினும் அவர் மனதில் ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்ற எண்ணம் வலுப்பெற்றது.
“என்ன டார்லிங், ஏன் டல்லா இருக்க… கொஞ்சம் ரெஸ்ட் எடு…”
“இல்லைங்க… எனக்கு ஏதோ தப்பா தோணுது…”
“அதெல்லாம் ஏதுவும் நடக்காது.. நீ தேவை இல்லாம யோசிச்சு குழம்பாத… காலைலயும் நீ ஒழுங்கா சாப்பிடல… இப்போ வந்து ஜுஸ்ஸாவது குடி…” என்றவாறே அவரை அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த சிறுவர்களோ எதைப் பற்றியும் கவலை இல்லாமல் கண்ணைக் கட்டிக் கொண்டு தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இம்முறை கண்ணைக் கட்டிக் கொள்வது அவனின் முறை. தன் தம்பியிடம் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தி விட்டே தன கண்களைக் கட்டிக்கொண்டான் அந்த பாசமிகு அண்ணன்.
தன் அண்ணன் கண்களைக் கட்டும் வரை பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த குறும்பனோ, அதன் பின் சிறிது சிறிதாக யாருக்கும் சந்தேகம் வராதவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், தான் செய்யப் போகும் செயல் எத்தனை பேரை துன்பத்தில் ஆழ்த்தப் போகிறது என்பதை அறியாமல்…
வானமே தெரியாத அளவு பனிமூட்டமும் அது நகர்ந்து செல்லும் அழகும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும். அழகாய் இருக்கும் அனைத்தும் ஆபத்தையும் கொண்டிருக்கும்.
அந்த சிறு வாண்டோ அவனின் குட்டி மூளைக்கு எட்டும் படி அந்த பனிமூட்டத்தை யானையாகவும் குதிரையாகவும் உருவகப் படுத்திக்கொண்டு மேலே வானத்தைப் பார்த்துக்கொண்டே அந்த ஆபத்தின் அருகே சென்று கொண்டிருந்தான்.
சிறிது தூரம் சென்றதும் கழுத்து வலிக்க தன் பார்வையை மேலேயிருந்து கீழே நகர்த்தினான். கீழே தன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்ததும் அவனுக்கு மெல்ல பயம் எட்டிப் பார்த்தது. ஏனெனில் அவன் நின்றுக் கொண்டிருப்பது அவன் அம்மா செல்லக் கூடாது என்று அறிவுறுத்திய பள்ளத்திற்கு அருகில்.
அந்த குட்டி மூளை அவனை அங்கிருந்து செல்லத் தூண்டினாலும் பயத்தினால் கால்கள் நடுங்கியது அந்த 6 வயது பாலகனுக்கு. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று திரும்பும்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி அந்த பள்ளத்திற்குள்ளே விழுந்தான் அவன்.
விழும்போது, “அம்மா….ஆ…..” என்ற அவனின் கதறல் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.
திடுக்கிட்டு விழித்தனர் அம்மூவரும்…..
மூவரும் இது வரை ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள். ஆனால் அவர்களுக்கு வரும் கனவு மட்டும் ஒற்றுமை உடையது. இது முன்ஜென்மத்து தொடர்ச்சியா… இல்லை இறந்த காலத்தின் மிச்சமா… இல்லை வருங்காலத்தின் முடிவா…
அம்மூவர் யார்… ???
நினைவுகள் தொடரும்….