நிழலாய் ஒரு நினைவு 1

0
684

ஹாய் பிரெண்ட்ஸ்…??? இதோ ‘நிழலாய் ஒரு நினைவு’ கதையின் முதல் எபி… படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க…??? லாக்டவுன் சோதனைகளால் எபி வர கொஞ்சம் தாமதமாகலாம்…??? அப்போ மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…???

(பி.கு… இந்த எபில ஹீரோ ஹீரோயின் தவற மத்த எல்லா கதாப்பத்திரங்களையும் இண்ட்ரோ குடுத்துட்டேன்…??? ஹீரோ ஹீரோயின் இண்ட்ரோ நெக்ஸ்ட் எபில???)

1587491020306.jpg

நினைவு 1
கதிரவன் பூமியில் தன் ஆதிக்கத்தை துவங்கியிருக்க, அன்றைய நாள் எப்போதும் போல அழகாய் விடிந்திருந்தது, அந்த மாளிகையில் இருப்பவர்களுக்கு. ‘மாளிகை’ என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட முடியாதவாறு அதன் அழகு கண்களைப் பறித்தது.

வெளி வாசலிலிருந்து அந்த பங்களாவிற்கு செல்வதற்கே குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஆகும். செல்லும் வழி முழுக்க, அழகிய பூச்செடிகளும், மரங்களும் சீரான இடைவெளியில் காட்சி தந்து கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

அந்த பங்களாவிற்குள் அடியெடுத்து வைத்தால், தரமான கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட தரை தான் முதலில் ஈர்க்கும். அங்கு உயர்ந்து நின்றிருந்த தூண்களில் செய்யப்பட்டிருந்த வேலைபாடுகளும், கண்கள் கூசாதவாறு சுவர்களில் அடிக்கப்பட்டிருந்த சாயத்தின் நிறமும், சிறந்த உட்புற வடிவமைப்பாளரின் கைவண்ணத்தை பறைசாற்றும். ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அலங்காரப் பொருட்களின் கலைநயம், அவ்வீட்டில் உள்ளவர்களின் ரசனையைக் கூறும்.

கீழே பெரிய ஹால், நவீன சமையலறையுடன் கூடிய உணவருந்தும் அறை, நன்கு அலங்கரிக்கப்பட்ட பூஜை அறை, ஒரு படுக்கை அறை, மேலும் சில அறைகள் இருந்தன. மேல் மாடியிலோ, இருபுறமும் வளைந்து சென்ற படிகளுக்கு அருகில் இரண்டு அறைகள் எதிரெராய் அமைந்திருந்தன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும், உள்ளே அறைவாசிகளின் மனநிலைக்கேற்ப இரண்டும் வெவ்வேறு விதமாய் அலங்கரிக்கப் பட்டிருந்தன.

ஆனால் இரு அறைகளுக்குமான ஒற்றுமை, அங்கிருக்கும் நீச்சல் குளமும், உடற்பயிற்சி அறையும் தான். இதிலிருந்தே, அவ்வறைகளியிருப்பவர்கள் ‘ஃபிட்னெஸ் ஃபிரீக்ஸ்’ என்பதை புரிந்து கொள்ளலாம்.

மற்றபடி வேறுபாடுகளை எடுத்துக் கொண்டால், ஒரு அறை, அவ்வீட்டின் சின்ன எஜமானிக்காக பிளே ஏரியாவைக் கொண்டுள்ளது. மற்றோரு அறையோ, ‘மினி-பார்’ வசதியுடன் இருந்தது. (அவ்வீட்டின் பெண்ங்களிடமிருந்து இந்த ‘மினி-பார்’ விஷயம் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது…)

மொத்தத்தில் இவ்விரண்டு அறைகளும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சூட் ரூமைக் காட்டிலும் பிரமாண்டமாக இருந்தது.

மேல் தளத்தில் அவ்விரண்டு அறைகளுக்கும் பொதுவான இடத்தில், சோஃபா பீன்-பேக்குடன் கூடிய மேஜையும், அலங்கார மீன் தொட்டியும் இருந்தன. சில அடிகள் எடுத்து வைத்தால், எப்போதும் மென்காற்று வீசிக் கொண்டிருக்கும், பால்கனியை அடையலாம். அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் இடம்பிடிப்பதற்கு அவ்வீட்டில் இருப்பவர்களுக்கிடையே தினமும் சண்டை நடக்கும். அந்த ஊஞ்சலில் அமர்ந்து, கண்களை மூடியவாறு அந்த ஏகாந்தத்தைத் ரசிக்கவும் பாக்கியம் செய்திருக்க வேண்டுமல்லவா…

மேலும் சில முக்கியமில்லாத (!!!) அறைகளையும், ஒரே ஒரு பூட்டிய அறையையும் கொண்டது அந்த மேல் தளம். இவ்வாறு பழமையும் புதுமையும் கலந்த கலவையாய் இருந்தது அந்த ‘மாளிகை’.

இவ்வளவு வர்ணனைகளையும் தாங்கி நின்றிருக்கும் இந்த மாளிகை, இந்தியாவின் பல இடங்களில் கிளைகளைப் பரப்பியிருக்கும் ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனி’ஸின் உரிமையாளர்களின் உறைவிடம்.

‘வர்மா பேலஸ்’ என்று கருப்பு பலகையில் பொறிக்கப் பட்டிருந்த பெயரை, எப்போதும் போல், இன்றும் ஒரு நொடி நின்று கவனித்து விட்டே உள்ளே சென்றார், மனிஷ் வர்மா. இந்த குடும்பத்திற்கும் சரி, தொழில் சாம்ராஜ்ஜியத்திற்கும் சரி, இவர் தான் ஆணிவேர்.

தன் காலை நடைப்பயிற்சியை முடித்தவர், மெல்ல அந்த பிரம்மாண்டமான கதவை தள்ளியபடி உள்ளே வந்தார்.

அவர் வரவை உணர்ந்த காவலாளி பதட்டத்துடன் அருகில் வந்து, “சாரி சாப்… இப்போ தான் உள்ள போனேன்…” என்று தலையை சொரிந்துக் கொண்டே, எங்கே திட்டிவிடுவாரோ என்ற பயத்துடன் கூறினான்.

“கூல்…” என்று அந்த காவலாளியைப் பார்த்து கூரினார். பின் அங்கிருந்த தோட்டக்காரனை அழைத்து, “பத்து நிமிஷம் நீ இங்க காவலுக்கு இரு…” என்றவர், மீண்டும் அந்த காவல்காரனை நோக்கி, “நீ பத்து நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வா… ஆனா வந்ததுக்கு அப்பறம் உன் கவனம் வேற எங்கேயும் சிதறக் கூடாது…” என்று சிறு கண்டிப்புடனே கூறினார்.

தன்னை முதலாளி திட்டுவார் என்று எண்ணியிருந்தவனிற்கு, அவர் பத்து நிமிடங்களை அளித்து ஓய்வெடுத்துவிட்டு வர சொன்னது ஆச்சரியத்தையே தந்தது.

தன் முதலாளி கண்களை விட்டு மறைந்ததும், தோட்டக்காரனிடம் இதைப் பற்றி விசாரித்தான்.

“நீ வேலைக்கு புதுசுல… அதான் உனக்கு தெரியல… ஐயா எப்போவுமே இப்படி தான்… தட்டிக் குடுத்து வேலை வாங்குறதுல அவர மிஞ்ச ஆளே கிடையாது… அவரு பிள்ளைங்களும் அவர மாதிரியே தான்… என்ன சின்னவருக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்… ஆனா பெரியவரு அப்படியே அவங்க அம்மா மாதிரி… அம்மா ரொம்ப சாந்தமானவங்க… வேலைக்காரங்கள அதட்டிக் கூட வேலை வாங்க மாட்டாங்க…”

“ஓ… இங்க எல்லாருமே நல்லவங்களா தான இருக்காங்க… அப்போ எனக்கு முன்னாடி வேலை பார்த்தவன் ஏன் என்ன பயமுறுத்திட்டு போனான்…”

“ஹ்ம்ம்… நான் தான் சொன்னேன்ல… சின்னவருக்கு கொஞ்சம் கோபம் ஜாஸ்தின்னு… அவரு வந்தப்போ இவன் கதவ திறக்க லேட் பண்ணிட்டான்… அதான் உடனே வேலைய விட்டு தூக்கிட்டாரு…”

அந்த காவலாளியின் முகத்தை பார்த்தவன், “நீ பயப்படாத… அவரு இங்க ரொம்ப நாள் தங்கமாட்டாரு… ஏழு வருஷமா வெளிநாட்டுல படிச்சுட்டு, இப்போ தான் இங்க வந்திருக்காரு… இந்த ஊருல இருந்தாலும், அவங்க மாமா வீட்டுல தான் இருப்பாரு… எப்போவாவது தான் இங்க வருவாரு…” என்று அவனிற்கு ஆறுதல் கூறினான்.

அக்காவலாளியும், ‘சின்னவர்’ என்றழைக்கப்படும் அவனிடம் சிக்கிவிடக் கூடாது என்று மனதில் உருப்போட்டுக் கொண்டே ஓய்வெடுக்க கிளம்பினான்.

உள்ளே சென்ற மனிஷோ, தன் காதல் மனைவியின் செய்கைகளை ரசித்துக் கொண்டிருந்தார்.

பல்லவி, மனிஷின் காதல் மனைவி… இந்த மாளிகையை உயிர்ப்புடன் வைத்திருக்கக் கூடியவர். இவ்வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாது இருப்பவர். கடிந்து பேசத் தெரியாதவர். எவ்வித சூழலிலும் தன் அமைதி கொண்டே அனைவரையும் கவர்பவர். திருமணத்திற்கு முன்பு வரை தன் சகோதரன் சொல் தட்டாமல் வாழ்ந்தவர், திருமணத்திற்குப் பின், தன் பதிக்கேற்ற பத்தினியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர். சுருங்கச் சொன்னால், தன் குடும்பத்தையே உலகமாய் பாவிக்கும் குடும்பப் பெண்களில் இவரும் ஒருவர்.

சாமிப் படங்களுக்கு ஆரத்தி காட்டிக் கொண்டிருக்கும்போதே தன் கணவனின் வரவை அறிந்தவர், பூஜை அறையின் வேலைகளை வேகவேகமாக முடித்தார். கணவனிற்கேற்ற பதத்தில் குளம்பியைக் கலந்தார், அதை எடுத்துக் கொண்டு வரும்போது, கணவனின் பார்வையில் எப்போதும் போல் அவருக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது.

“ஹே ஜான்… என்னதிது… என்னமோ இன்னைக்கு தான் உன்ன பொண்ணு பார்க்க வந்திருக்க மாதிரி வெட்கப் படுற…” என்று கண்சிமிட்டி வேண்டுமென்றே அவரை வம்பிழுத்தார் மனிஷ்.

அவரின் சுத்தமான தமிழ் உச்சரிப்பில், ‘எல்லாம் தனக்காக…’ என்ற கர்வம் தோன்ற மனம் மயங்கினார் பல்லவி.

மனிஷ் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். பரம்பரை பணக்காரர்களாக இருந்தவர்கள், மனிஷின் தாத்தாவின் மெத்தனப் போக்கால், சிறிது சிறிதாக செல்வத்தை இழந்தனர். மனிஷின் தந்தை தலையெடுத்ததும், ஓரளவிற்கு இழந்ததை மீட்டெடுத்தனர். மனிஷ் தொழிலில் கால் பதித்ததும், அசுர வளர்ச்சியைக் கண்டது அவர்களின் தொழில்.

இன்று இந்தியாவில் முதல் பத்து தொழிலதிபர்களில் மனிஷும் ஒருவர். இவர் ஆரம்பித்த, ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனி’ஸ் பல குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளித்து வருகிறது. கடந்த முப்பது வருட உழைப்பில், அவர் கால் பதிக்காத துறைகளை எண்ணிவிடலாம். அந்தளவிற்கு ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனி’ஸின் வளர்ச்சி இருந்தது.

தன் முப்பதாவது வயதில், சென்னையில் தன் தொழிலை விரிவு படுத்துவதற்காக வந்த மனிஷிற்கு, அவரின் வாழ்க்கையையே மாற்றிய நிகழ்வு தான் பல்லவியை சந்தித்தது.

எந்தவொரு தொழில் சம்மந்தப்பட்ட பேச்சு வார்த்தை நடக்கும் முன், கடவுளை வழிபடுவது, மனிஷின் வழக்கம். அது போலவே, அன்றும் ஒரு கோவிலில் கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தவரின் செவிகளில் மெல்லிய கொலுசொலி கேட்க, மெல்ல கண்களைத் திறந்தவர், பல்லவியின் அழகில் மயங்கித் தான் போனார்.

பல்லவியின் தோற்றம் மட்டுமல்ல குணமும் அவரை ஈர்க்கவே, இவ்வளவு நாட்கள், கல்யாணத்தைப் பற்றிய நினைவே இல்லாதவர், ஒரே மாதத்தில் பல்லவியிடம் காதலை சொல்லி, அவர் வீட்டில் பேசி, பல்லவியின் ஒரே உறவான அவளின் சகோதரன் கைலாஷின் அனுமதி பெற்று, பல்லவியை தன் மனையாளாக்கிக் கொண்டார்.

இதில் அவர் மிகவும் சிரமப் பட்டது, பல்லவியின் விருப்பம் அறியவே… பல்லவி அவ்வளவு சீக்கிரம் மனிஷின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர் இல்லாமல் தனியாக வளர்ந்ததால் உண்டான பாதுகாப்பற்ற உணர்வோ, தினந்தோறும் கேள்விப்படும் காதல் ஏமாற்றங்களோ, வாய்ப்பு கிடைத்தால் பழிப்பதற்காகவே காத்திருக்கும் சமுதாயமோ… ஏதோ ஒன்று மனிஷின் காதலை ஏற்பதற்கு முட்டுக் கட்டையாக இருந்தது.

மிகவும் சவாலான சூழ்நிலைகளையும் அசாதாரணமாகக் கையாளும் மனிஷிற்கு பல்லவியின் சம்மதம் பெறுவது கடினமாகவே இருந்தது. இரு வாரங்களாய் தொடர்ந்து பேசி, பல்லவியின் மனதைக் கரைத்தவருக்கு அடுத்த சவாலாக இருந்தது கைலாஷ், பல்லவியின் தம்பி.

இருவருக்குமிடையே உள்ள வேறுபாடுகளைச் சொல்லி மனிஷை நிராகரித்தான் கைலாஷ். அதில் முதலாவதாக அவன் கூறியது மொழி. மனிஷிற்கு ஹிந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியாது. பல்லவியோ தமிழ் மட்டுமே நன்றாக தெரிந்தவர். பள்ளியிலும் தமிழ்வழிக் கல்வி பயின்றதால், ஆங்கிலம் ஓரளவிற்குத் தான் தெரியும். இதுவே இருவரும் சேர பெரிய தடையாக இருந்தது.

அடுத்த ஒரு வாரம், மனிஷ் பல்லவியைக் காண வரவில்லை. இவ்வளவு நாட்கள் பின்னாடியே சுற்றியவர், ஒரு வாரமாக வரவில்லை என்பது பல்லவியைத் தேடத் தூண்டியதோ… தலைவனைக் காணாத தலைவியாய் துடித்தவர், அந்த கணத்தில் தன் காதலை உணர்ந்தார். மனிஷின் வருகைக்காக காத்திருந்தார்.

அன்று கவலையுடன் கோவிலுக்கு கிளம்பிய பல்லவி கண்டது, பட்டு வேட்டி சட்டையில் அழகாக வந்திருந்த மனிஷைத் தான். அக்காவையும் தம்பியையும் மேலும் அதிர்ச்சியடையச் செய்தது, அவர் பேசிய தமிழ்.

ஆம் காதலி(க்)ற்காக ஒரே வாரத்தில் சுமாராக இல்லாமல் நன்றாகவே தமிழ் பேசக் கற்றுக் கொண்டார் மனிஷ். அவரின் இச்செயலில் பல்லவி முடிவே செய்து விட்டார், மனிஷ் தான் தன் வாழ்க்கைத் துணையென.

ஆனாலும் கைலாஷ் திருப்தியடையாதவனாய், தமக்கையை அவ்வளவு தொலைவு கல்யாணம் செய்து கொடுத்து, தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று அடுத்த வாதத்தை முன் வைக்க, ஒரே நொடியில் அதற்கு தீர்வு கூறினார் மனிஷ்.

தன் ஒட்டுமொத்த தொழிலையும் சென்னைக்கு மாற்றி விடுவதாகவும், இனி சென்னையிலேயே இருப்பதாகவும் வாக்களித்தார்.

அதற்கு மேல் ஒன்றும் கூற முடியாத கைலாஷ், தன் தமக்கையைப் பார்க்க, அவரின் விழியிலேயே மனிஷ் மேலிருக்கும் காதலைக் கண்டு கொண்டவன், மனிஷிற்கு தன் சம்மதத்தை தெரிவித்தான்.

மனிஷும் பல்லவியும் தங்கள் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க, அதைக் கலைக்கும் விதமாய், “குட் மார்னிங் டேட்… குட் மார்னிங் மா…” என்றவாறே இறங்கி வந்தான் கௌரவ் வர்மா, மனிஷ் – பல்லவி தம்பதியின் மூத்த மகன்.

அவனிற்கு பின் தங்கள் இரண்டரை வயது மகள் சுர்வியுடன் இறங்கினாள் தீப்தி கௌரவ் வர்மா.

“மார்னிங் மாமா… அத்தை… காபி குடிச்சுட்டீங்களா மாமா…?”

“இப்போ தான் மா குடிச்சேன்… உங்க அத்தை கையால போட்ட காபி தனி டேஸ்ட் தான்…” என்றார் பல்லவியைப் பார்த்தபடி…

பல்லவியோ, ‘சிறியவர்கள் முன்பு என்ன இதெல்லாம்…?’ என்பது போல முறைத்தார்.

கௌரவ்வும் தீப்தியும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“டேட், நான் கூட பெட்-காபி குடிச்சுருப்பீங்கன்னு நெனச்சேன்… நீங்க என்னடானா நடு வீட்டுல ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க…” என்று கௌரவ் கேட்க…

“டேய் இது நான் கட்டுன வீடு டா… எங்க வேணா என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணுவேன்… நீ எதுக்கு டா அத கேக்குற…” என்றார் மனிஷும் அவனிற்கு சளைக்காதவராய்.

பல்லவி தான் இவர்களின் விவாதத்தைக் கண்டு தலையில் அடித்தவராக, தன் மருமகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இவ்வளவு நேரமும், தாயின் தோளில் தூக்கக் கலக்கத்தில் இருந்த சுர்வி, தன்னை யாரும் கண்டு கொள்ளாததால் உண்டான கோபத்தில், தாயிடமிருந்து இறங்கி, மனிஷின் மேலேறி அமர்ந்தாள். அவளின் செயலில் சிரித்தவர், இதே போல தான் தன் இளைய மகனும் அவனின் சிறு வயதில் தன்னிடம் ஒட்டிக் கொண்டே திரிந்ததை எண்ணி பெருமூச்சு விட்டார்.

“தாத்தா, சித்து எப்போ…” என்று கேட்க…

அவளின் கேள்வியைப் புரிந்து கொண்ட குடும்பத்தினருக்கு, அப்போது தான் அவன் இன்று வருவதாகக் கூறியிருந்தது நினைவிற்கு வந்தது.

“ராஜா, கண்ணா எப்போ வருவேன்னு சொன்னான்…” என்று கேட்டார் பல்லவி.

“கரெக்ட் டைம் சொல்லல ம்மா… என்னைக்கு அவன் சொன்ன டைமுக்கு வந்திருக்கான்…” என்று கடைசி வரியை முணுமுணுத்தான் கோபத்தில்.

ஆம் கோபம் தான்… வெளிநாட்டில் தன் எம்.பி.பி.எஸ் எம்.எஸ்ஸை வெற்றிகரமாக முடித்து, ஒரு மாதத்திற்கு முன்னர், நாடு திரும்பியவன், இரு நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தான். அதற்கு பின் தன் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாகக் கூறிக் கிளம்பியவன், இன்று தான் வருவதாய் கூறியிருந்தான் அவன்.

கௌரவ்விற்கு நன்கு தெரியும், தன் தாய்க்கு தன்னைக் காட்டிலும் தன் தம்பியின் மீது கொஞ்சமே கொஞ்சம் பாசம் அதிகம் என்று. அதை அவன் பெரிதாக என்றுமே எண்ணியதில்லை. அதுவும் ‘அந்த’ சம்பவத்திற்கு பின்னர், அனைவருமே அவனைத் தாங்கினர். இவ்வளவு பாசம் வைத்திருக்கும் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காமல், ஊரிலிருந்து வந்தவுடன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றது அவனிற்கு வருத்தமே… அந்த வருத்தமே கோபமாய் வெளிப்பட்டது.

அவனின் முணுமுணுப்பு அருகிலிருந்த தீப்திக்கு நன்றாகக் கேட்டது. அவள் தான் அவன் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு, கண்களால் ஆறுதல் கூறினாள்.

தீப்தி கூட அவனிடம் இதுவரை சரியாக பேசியதில்லை… இவர்களின் திருமணத்திற்கு முன்பே வெளிநாடு சென்று விட்டதால், அவ்வப்போது வீடியோ காலில் பேசுவதோடு சரி… ஒரு மாதத்திற்கு முன் வீட்டிற்கு வந்தபோது தான் நேரில் சந்தித்தாள்.

ஆனால், சுர்வியோ அவன் வந்த பின்னர், அவனையே சுற்றி வந்து கொண்டிருந்தாள். வீடியோ காலிலேயே நன்றாக பேசுவார்கள் இருவரும்… அது மட்டுமில்லாமல், அவன் வந்த பொது, சுர்விக்காக பொம்மை, சாக்லேட்ஸ் என்று விதவிதமாக வாங்கி வந்ததால், அவன் பின்னாடியே சுற்றினாள் அந்த குட்டி.

பல்லவியோ தன் ஆசைக் கண்ணன் எப்போது வருவான் என்று காத்திருக்க, மனிஷ் தன் மனைவியின் முகம் பார்த்தே அவரின் மனதில் இருப்பதை அறிந்தவருக்கு கவலை ஏற்பட்டது.

அந்த கவலைக்கு காரணம், அவரின் இளைய மகனே… அவனைப் பற்றி அவர் கேள்விப்படும் விஷயங்கள் எதுவும் நல்லதாக அவருக்கு படவில்லை… அவனின் வளர்ப்பில் எங்கோ தவரியதாக உணர்ந்தார்.

இவ்வாறு அவர்கள் ஒவ்வொருவரின் மனமும், ஒவ்வொரு உணர்ச்சியின் பிடியில் இருக்க, இவர்களின் எண்ணத்தின் நாயகனோ, அங்கு தன் நாயகியை ரசித்துக் கொண்டிருந்தான்.

நினைவுகள் தொடரும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here