நேசவிதை தூவும் காரிகையவள்…3

0
101

பகுதி.3

யசோதா வீட்டிற்கு வந்து வாசலில் வண்டியை நிறுத்தியதும் வண்டியிலிருந்து இறங்கிய எழிலரசி கோபமாக செருப்பை கழட்டி எறிந்துவிட்டு வீட்டிற்குள் சென்றவளை திண்ணையில் கயிற்று கட்டிலில் உட்கார்ந்தவாறு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த அவளின் அப்பத்தா “அடியேய் கூறுகெட்டவளே செருப்ப ஒழுங்கா கழட்டிபோட்டு போகமுடியாதாடி?? பொட்டபுள்ளையா அடக்க ஒடுக்கமா என்னைக்குதா இருக்கபோறியோ தெரியலை” என திட்ட ஆரம்பிக்கவும்..

கோபமாக வீட்டுக்குள் போனவள் திரும்ப வந்து இடுப்பில் கைவைத்து அவரை பார்த்து முறைத்தவாறு “ஆமா எனக்குதா கூறு இல்லை உங்க மருமகளுக்கு மட்டும் கிலோ கணக்குல இருக்காக்கும். அதா அவங்க இஷ்டத்துக்கு முடிவு எடுக்கராங்களா?…” என தன் அம்மா மேல் இருந்த கோபத்தை எல்லாம் அப்பாத்தாவிடம் காட்டினாள்..

“இப்போ எதுக்குடி என்ற மருமகள இழுக்கர. அவ எது பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும். அவள குறை சொல்லாம நீ உன்ற வேலைய பாத்துக்கிட்டு போடி.” என்றார்.

“போறேன் போறேன், ஆனா போறதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லிபோட்டு போறேன். உன்ற மருமககிட்ட சொல்லி வை. என்ற அக்கா மாதிரி நா ஒன்னும் ஏமாந்தவ கிடையாது. உன்ற மருமக எத சொன்னாலும் வாயமூடிகிட்டு தலையாட்டரதுக்கு” என கோபமாக பொறிந்துவிட்டு உள்ளே சென்றாள் எழிலரசி.

“அடியேய் ஆட்டக்காரி இப்படியே எகத்தால மயிறு பேசிபோட்டு திரிஞ்சேனா பல்ல தட்டி கையில குடுத்துப்போடுவேன் பாத்துக்கோ” என அவரும் கோபமாக திட்டினார்..

அவளின் பின்னால் வந்த யசோதா சோர்வாக மாமியாரின் கட்டில் அருகிலே தின்னையில் உட்கார்ந்தார்…

மருமகள் சோர்வாக உட்கார்ந்ததை பார்த்ததும்

ஏம்புள்ள, என்னாச்சு முகமெல்லாம் வாடிபோய்கிடக்குது. இவ எதாவது உன்ன பேசிபோட்டாளா??

அவ சின்ன புள்ளைங்க அத்தை அவ படபடனுதா பேசுவா. ஆனா அதுவும் தப்பானதா இருக்காது. நீங்க அவள திட்டாதிங்க…

நானெங்க புள்ள திட்டறேன், அவதா என்ற வாய புடுங்கரா.
சரி அத வுடு உன்ற பெரியம்மா பேரனோட கண்ணாலம் நல்லபடியா முடிஞ்சதா புள்ள?? என்றவர், ஆமா எங்க பெரியவள காணோம். அவளும் உன்றக்கூடதானே கண்ணாலத்துக்கு வந்தா??

மாமியாரின் கேள்விக்கு பதில் சொல்லாமல்

அத்தை என்ன மன்னிச்சிபோடுங்க உங்கல கேக்காம ஒரு பெரிய முடிவு எடுத்துப்போட்டேன்… அந்த சூழ்நிலைல என்னால எதையும் யோசிக்கமுடியலை.பெரியம்மா தமிழ தன்னோட பேரனுக்கு கேக்கவும் என்னால மறுக்கமுடியலை. சரினு சொல்லிபோட்டேன் என தயங்கியவாறே கூறினார்…

என்னபுள்ள சொல்ர??அவருக்கு புரிந்தும் புரியாமலும் குழப்பத்துடனே கேட்டார்…

யசோதா கல்யாண மண்டபத்தில் நடந்த அனைத்தையும் கூறியதும் கேட்டவர் அதிர்ச்சியாகி

ஏம்புள்ள இப்படி பண்ணிபோட்டு வந்து நிக்கர? அவங்க எம்புட்டு வசதியானவங்க அவங்களவுக்கு நம்மலால சீர் செய்யமுடியுமா??நாளைக்கு நம்ம புள்ளைய ஒன்னுமில்லாம வந்தவ தானேனு சொல்லிகாட்டிட மாட்டாங்ளா??அதுவுமில்லாம நம்ம அங்காளி பங்காளிகிட்ட ஒரு வார்த்தை கேக்காம செஞ்சிபோட்டோம்னு நாளைக்கு நல்லது கெட்டதுக்கு வந்து நிக்கமாட்டாங்ளே!! என கவலையாக பேசினார்..

நா அப்ப இதலா யோசிக்கலைங் அத்தை பெரியம்மாவும் அண்ணாவும் கேக்கவும் மறுக்கமுடியாம சரினு சொல்லிபோட்டேன். பொண்ணும் மாப்பிள்ளையும் வூட்டுக்கு முதல் முதலா போகும்போது கங்கா அண்ணி ஆரத்தி எடுக்கக்கூட வராம இருந்தத பாத்ததும்தான் நா தப்பு பண்ணிபோட்டேனோனு தோணுதுங் அத்தை என யசோதா கலக்கத்துடனே கூறினார்…

மருமகள் கலங்குவதை பார்த்ததும் மனம் தாங்காமல் குடும்பமும் நல்ல குடும்பம்தான்.அன்னைக்கு நாம கஷ்டபட்ட காலத்துல உன்ற பெரியம்மாதான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வந்து உதவி பண்ணாங்க…நாமலே தேடியிருந்தாலும் இந்தமாதிரி குடும்பம் நம்ம புள்ளைக்கு அமைஞ்சிருக்காது.நம்ம புள்ளைக்கு அவந்தான் புருசனா வரபோறானு விதி இருக்கும்போது அத ஆராலதான் மாத்தமுடியும்.நீ வெசனப்படாம எழுந்து வா நாம ரெண்டுபேரும் நம்ம பங்காளிங்ககிட்ட போய் நடந்தத எடுத்து சொல்லி நாளைக்கு புள்ளைக்கு சீர் குடுக்க அழைச்சிபோட்டு வருவோம்…
ஊர்ல சொந்தக்காரங்ககிட்ட சொல்லலைனா தப்பா போயிடும்.

மாமியாரின் பேச்சை கேட்டதும் யசோதா கொஞ்சம் தெளிந்தவராக எழுந்து அடுத்து பாக்கவேண்டிய வேலையை செய்ய சென்றார்…

மருமகளுக்கு ஆறுதலாக பேசினாலும் அவரின் மனதில் பேத்தியின் வாழ்க்கையை நினைத்து பயம் உண்டானது. அகிலாண்டேஸ்வரியின் வசதியே அவரை பயமுறுத்தியது…

திருமணம் முடிந்த அன்று இரவு சரவணபாண்டியன் தனது தோட்டத்து வீட்டின் வாசலில் கயித்துகட்டிலில் படுத்தவாறு வானத்தை வெறித்துக்கொண்டிருந்தான். அவனின் அருகினிலே கண்ணன் கன்னத்திற்கு கைகுடுத்தவாறு நண்பனை பார்த்துக்கொண்டிருந்தான். சரவணனின் போனிற்கு வீட்டில் தனது தம்பியிடம் இருந்து அழைப்பு வந்துக்கொண்டே இருந்தது.

“டேய் மாப்பாள்ளை போன எடுத்து பேசுடா உன்ன காணோம்னு வூட்ல எல்லாரும் பயந்துபோய் இருப்பாங்க.”

கண்ணன் பேசியதை காதில் வாங்காமல் படுத்திருந்தான் சரவணன்.

இளமாறன் தனது அண்ணன் போனிற்கு அழைத்து பார்த்து அவன் எடுக்காததால் கண்ணனின் போனிற்கு அழைத்தான்.

கண்ணன், போனில் மாறனின் அழைப்பை பார்த்ததும் எடுத்தவன் “சொல்லு மாறா??”

மாமா எங்கன இருக்குரிங்க??
என கேட்டுக்கொண்டிருக்கும்போதே அகிலாண்டேஷ்வரி மாறனிடம் இருந்து போனை வாங்கி காதில் வைத்தார்.

“நாங்க தோட்டத்துலதான் இருக்கோம் மாறா” என கண்ணன் சொன்னதும் அகிலாண்டேஷ்வரி
“இன்னும் செத்தநேரத்துக்குள்ள அவன கூட்டிபோட்டு நீ வூட்டுக்கு வர” என அழுத்தமான குரலில் கூறினார்.

மாறன் என நினைத்து பேசிக்கொண்டிருந்வன் போனில் அகிலாண்டேஷ்வரியின் குரல் கேட்டதும் பயத்தில் போனை நலுவ விட்டு திரும்ப கைபற்றி காதில் வைத்து
“சரிங் அம்மச்சி” என கூறிவிட்டு போனை அணைத்து சட்டை பையில் வைத்துக்கொண்டு அப்பத்தாவும் பேரனும் எப்படித்தா ஒரே வார்த்தைல எதிர்ல இருக்கரவங்க மனசுல பயத்த கொண்டுவராங்களோ தெரியலை என பொலம்பியவன்,

“டேய் சரவணா எழுந்து வா டா வூட்டுக்கு போலாம். அம்மச்சி போன் பண்ணி வர சொல்ராங்கடா”

நா வரலை நீ போ என்றான்.

“உன்ன இங்கனையே வுட்டுபோட்டு நா வூட்டுக்கு போனேனா அம்மச்சி என்ன உண்டு இல்லைனு பண்ணிப்போடும்டா ப்ளீஸ்டா வாடா போலாம்”.

“அதா நா வரமுடியாதுனு சொல்ரேன்ல ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா?? “

என கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்தவாறு கோபமாக கத்தினான்.

அவன் கோபத்துடன் எழுந்து உட்கார்ந்து கத்தியதும் அவனருகில் உட்கார்ந்திருந்த கண்ணன் பயத்தில் கட்டிலில் இருந்து எழுந்து தூர நின்றுக்கொண்டான்.

ஆத்தாடி இம்புட்டு கோபமா இருக்கானே இவன எப்படி வூட்டுக்கு கூட்டிட்டு போரது இவன வுட்டுட்டு போனாலும் அம்மச்சிக்கிட்ட திட்டுவாங்கோணும் இப்போ என்னதா பண்றது’ என மனதில் யோசித்தவன் திரும்பவும் மாறனுக்கு போன்போட்டு ஸ்பீக்கரில் போட்டு
“மாறா உன்ற அண்ணன் வூட்டுக்கு வரமாட்டேனு சொல்றான்டா நீயே அவங்கிட்ட பேசு.” என்றான்

“மாமா நீங்க போன அண்ணன்கிட்ட குடுங்க…”

நா போன் ஸ்பீக்கர்லதான் போட்ருக்கேன் நீ பேசு மாறா”.

கண்ணன், போனை சரவணனின் அருகில் கட்டிலில் வைத்தான்.

“அண்ணா வூட்டுக்கு வாங்கண்ணா”

என்ற மாறனின் குரல் போனில் கேட்டதும் சரவணன் போனை தூக்கி எறியபோனான்.

“டேய் மாப்பிள்ளை இந்த போனையும் தூக்கிபோட்டு ஒடச்சிப்போடாதடா உன்னாலையே நா மாசம் ஒரு போன் வாங்கறேன்”

என அலறிக்கொண்டே சரவணனின் கையில் இருந்த போனை பறித்துக்கொண்டான்.

“அண்ணா நீங்க வராம அப்பத்தா சாப்டமாட்டேனு உட்கார்ந்துருக்காங்கண்ணா. உங்களுக்கே தெரியும்ல அப்பத்தா மாத்திரை போடலைனா ப்ரசர் அதிகமாயிடும்னு கல்யாணத்துல நடந்த பிரச்சனைனால காலைல இருந்து அப்பத்தா எதுவுமே சாப்டாம இருக்கராங்க நீங்க வந்தாத்தா சாப்புட்டு மாத்திரை போடுவாங்க. ப்ளீஸ்னா வூட்டுக்கு வாங்க…”

அவன் பேசிமுடிக்கும் வரைக்கும் அமைதியாக இருந்தவன் எழுந்து சென்று பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.

அவன் பைக்கை ஸ்டார்ட் பண்ணியதை பார்த்ததும் கண்ணன்,

“டேய் சரவணா இருடா நானும் வாறேன் என்ன வுட்டுபோட்டு போயிடாதடா”

என கூறிக்கொண்டே வேகமாக சென்று பைக்கில் பின்னால் ஏறி அமர்ந்ததும் பைக் வீட்டை நோக்கி பறந்தது.

கண்ணனிடம் பேசிவிட்டு போனை திரும்ப மாறனிடமே போனை குடுத்தவர் ஹாலில் சரவணணை காணாததால் கவலையாக உட்கார்ந்திருந்த வீட்டினரை பார்த்து

“நீங்க எல்லாரும் போய் தூங்குங்க. பாண்டியன் இன்னும் கொஞ்சநேரத்துல வந்துருவான் என்றார்…”

“அம்மா நீங்க காலைல இருந்து சாப்டாமையே இருக்கிங்க வந்து சாப்புடுங்க” என்றார் தென்னரசு..

“நா அவன் வந்ததும் சாப்டுக்கறேன் தென்னரசு. நீ மருமகள சமாதான படுத்தி சாப்ட வை அவதா காலைல இருந்து சாப்டாம கோபமா ரூம்குள்ளையே உட்கார்ந்துருக்கா”

என கூறியவர் தமிழரசி இருந்த அறைக்கு சென்றார்.

நந்தினியின் அறையில் தமிழ் அவளுடைய அம்மா ஊரிலிருந்து குடுத்துவிட்ட உடையில் இருந்து சந்தனக்கலர் காட்டன் சேலை உடுத்தி காலையில் கல்யாணம் ஆனதற்கு அடையாளமாக மஞ்சள் கயிரும் தாலிக்கொடியும் மட்டும் கழுத்தில் தொங்க எந்தவித அலங்காரமும் இல்லாமல் நெற்றியிலும், வகுட்டிலும் குங்குமம் வைத்திருந்தவள் கட்டிலில் நந்தினியின் பையனை மடியில் படுக்கவைத்து கொண்டு தட்டிக் குடுத்தவாறே எதோ யோசனையுடனே உட்கார்ந்திருப்பதை பார்த்து அவள் அருகில் சென்று உட்கார்ந்தவர்

“என்றா கண்ணு யோசனைல இருக்க?? வூட்டு நீயாபகம் வந்துடுச்சா??” என கேட்டார்.

அப்பத்தாவின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள்

“அதலா ஒன்னுமில்லைங் அம்மச்சி சும்மா உட்கார்ந்திருந்தேன்…”

“சரிடா கண்ணு குட்டிபேராண்டிய கட்டில்ல படுக்கவச்சிட்டு நீ சரவணன் ரூம்ல போய் படுத்துக்கோடாம்மா என்றார்…”

காலையில் அவனின் கோபத்தை பார்த்ததால் மனதில் பயத்துடனே “இல்லைங் அம்மச்சி நா இங்கனையே படுத்து தூங்கிக்கறேனே” என தயக்கத்துடனே கூறினாள்…

“அது நல்லாருக்காது கண்ணு. இன்னைக்கு எல்லாரும் சந்தோசப்படர மாதிரி இந்த கண்ணாலம் நடந்துருந்தா இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் சாந்திமுகூர்த்தம் வச்சிருக்கோணும். இங்கதா அப்படி நடக்கலையே அவனும் வேர கோபத்துல இருக்கான். உனக்கும் இதலா ஏத்துக்க கொஞ்சம் டைம் வேணும். அதனால இப்போ ஒரே ரூம்ல இருங்க. உங்களுக்கு என்னைக்கு வாழோணும்னு தோணுதோ அன்னைக்கு உங்க வாழ்க்கைய ஆரம்பியிங்க கண்ணு. என்ன நா சொல்ரது புரியுதா கண்ணு…” என்றார் ஆதரவாக

“ம்ம் புரியுதுங் அம்மச்சி”

“நீ என்ற பேரன பாத்து பயப்படாத கண்ணு அவன் பாக்கத்தா அப்படி இருப்பான். ஆனா ரொம்ப பாசக்காரன். அவனுக்கு ஒன்னு வேணும்னா கூட கேட்டு வாங்கிக்க தெரியாது. எதுவா இருந்தாலும் நாமதா அவனுக்கு பாத்து பாத்து செய்யோணும். வூட்ல ஆருகிட்டையும் அதிகமா பேசமாட்டான், ரொம்ப அமைதியாதா இருப்பான். அவங்க தாத்தா மாதிரி. என்ன கொஞ்சம் கோபக்காரன். ஒன்னு புடிக்கலைனா அத கடைசிவரைக்கும் திரும்பிக்கூட பாக்கமாட்டான். இனி நீதா அவனுக்கு என்ன வேணுமோ அதெல்லாம் பாத்து செய்யோணும். என்ன செய்வியா கண்ணு??” என்று கேட்க

அவள் தலையாட்டிதும்,

“சரி கண்ணு, நீ அவன் ரூம்ல போய் படுத்துக்கோ..”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அறைக்கு நந்தினி வரவும்

“நந்து கண்ணு உன்ற அண்ணிய மாடில இருக்க உன்ற அண்ணனோட அறைக்கு கூட்டிட்டு போடா என்றார்…”

சரிங் அப்பத்தா…

நந்தினி கூட்டிவந்து விட்டு சென்றதும் அவனது அறைக்குள் சென்றவள் அவனின் அறையை பாத்து அசந்துபோய் நின்றாள். அந்த அறையில் அவனின் பொருட்கள் ஒன்றுக்கூட கலையாமல் அந்தந்த இடத்தில் அடிக்கி வைக்கபட்டிருந்தது ஒருபக்க சுவர் முழுவதும் புக் செல்ப் அமைத்து அதில் எண்ணற்ற புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மரத்திலான பீரோ வைக்கப்பட்டிருந்தது. ட்ரெசிங் மோடா அந்த அறையில் நான்கு பேர்க்கூட தாராளமாக படுக்ககூடிய தேக்கு மரத்திலான கட்டில் போடபட்டிருந்தது. அதில் சென்று உட்கார்ந்தவள், அந்த அறையை தனது விழிகளால் சுற்றி பார்த்துவிட்டு சிறிது நேரம் விழித்திருந்தாள்.

காலையில் நடந்த திடீர் கல்யாணத்தால் மனதில் ஏகப்பட்ட குழப்பத்தினோடே உட்கார்ந்திருந்தளுக்கு உறக்கம் வரவும் அந்த கட்டிலின் ஓரமாக அப்படியே குருகி படுத்துக்கொண்டு உறங்கினாள்…

சரவணன் வீட்டிற்கு வரும்போது வீடே இருளில் அமைதியாக இருந்தது. அகிலாண்டேஷ்வரி அறையில் மட்டும் லைட் எரிந்துக்கொண்டிருந்தது…

சரவணன் வாசலில் பைக்கை நிறுத்தியதும் வண்டியிலிருந்து இறங்கிய கண்ணன்

” சரி மாப்பிள்ளை, நா இப்படியே வூட்டுக்கு போறேன்” எங்க,

அவன் சொல்வதைக்கூட கவனிக்காமல் தனது அப்பத்தாவின் அறைக்கு கோபமாக சென்றான்…

அறையில் ஈசி சேரில் உட்கார்ந்தவாறு கண்மூடியிருந்தவரின் சோர்ந்திருந்த தோற்றத்தை பார்த்தும் அவரின் மேல் இம்புட்டு நேரம் இருந்த கோபத்தை எல்லாம் விட்டுவிட்டு அவர் சாப்பிட சாப்பாடை எடுத்துவர சமயலறைக்கு சென்று தட்டில் அப்பத்தாவிற்கு சாப்பாடை போட்டு எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தவன் அவரின் மடியில் சாப்பாட்டு தட்டை வைத்தான்…

அதில் கண்விழித்தவர் தன் முன்னால் நின்றிருந்த பேரனை பார்த்ததுமே அவரின் கண்கள் கலங்கியது…எதற்கும் கலங்காதவரின் கண்கள் இன்று தன் பேரனின் மன வலியை தன்னால சரிபண்ண முடியாததை நினைத்து கலங்கினார்..

அவர் கண் கலங்கியதுமே கண்களை துடைத்துவிட்டவாறே சாப்பாட்டு தட்டை அருகில் கட்டிலில் எடுத்து வைத்துவிட்டு அவர் உட்கார்ந்திருந்த சேரின் அருகிலே கீழே தரையில் உட்கார்ந்தவன் அப்பத்தாவின் மடியில் தலைவைத்துக்கொண்டான்…

அவனின் தலையை கோதியவாறே

“அப்பத்தாமேல கோபமா கண்ணு??” என கேட்டார்.

“ஏனுங் அப்பத்தா அப்படி பண்ணிங்க?? நா வேண்டாம்னு சொல்லியும் கேக்காம வூர் முன்னாடி அசிங்கப்பட வச்சிபோட்டிங்ளே. ரொம்ப வலிக்குதுங் அப்பத்தா…” என வலிமிக கேட்க

“அப்பத்தா ஏமாந்துபோட்டேன் கண்ணு. நல்ல குடும்பமானு மட்டும்தா விசாரிச்சேன். அந்த பொண்ணு மனசுல ஆராவது இருக்காங்களானு தெரிஞ்சிக்க அப்பத்தாவுக்கு தெரியலை கண்ணு”

என்றவரின் கண்களில் தன் பேரனின் வாழ்க்கை விசயத்தில் தோத்துபோன வலி தெரிந்தது…

சிறிதுநேரம் பேரனின் தலையை தடவிக்குடுத்தவர்.

“கண்ணு உன்ற பொண்டாட்டி அப்பா இல்லாம ரொம்ப வாழ்க்கையில கஷ்டப்பட்டு வளர்ந்த புள்ள. உன்ற கோபத்த எல்லாம் அந்த புள்ளமேல காட்டிடாத கண்ணு.
இனி நீதா அந்த புள்ளைக்கு எல்லாமே. ஆருக்காகவும் அந்த புள்ளைய விட்டுக்குடுத்துப்போடாத கண்ணு…” என்றார்.

அவரின் மடியில் இருந்து எழுந்து நின்றவன்

“உங்க வளர்ப்பு நான் அப்பத்தா. எப்பவும் குடுத்த வாக்க மீறமாட்டேன். நீங்க கவலைபடாம சாப்புட்டுபோட்டு மாத்திரை போட்டு தூங்குங்க அப்பத்தா..” என்றுவிட்டு தனதறை நோக்கி சென்றான்.

அவனின் அறைக்கு வந்தவனின் கண்களில் கட்டிலின் ஓரத்தில் குறுகி படுத்தவாறு உறங்கி கொண்டிருந்தவள் பட்டாலும் அவளை கண்டுக்கொள்ளாமல் உடையை மாற்றிக்கொண்டு கட்டிலின் மறுபுறம் சென்று படுத்து உறங்க ஆரம்பித்தான்…

கோழி கூவும் சத்தத்தில் கண் விழித்தவளின் பார்வையில் தன் கணவனின் அறையை பார்த்ததும் நேற்று நடந்த அனைத்தும் நியாபகம் வந்ததும் எழுந்து உட்கார்ந்து கட்டிலை பார்த்தாள்…

கட்டில் வெறுமையாக இருப்பதை பார்த்ததும்

“ராத்திரி அவங்க வரவே இல்லையா?? அப்போ எங்க தூங்கிருப்பாங்க”

என மனதில் நினைத்தவள் அறையை சுற்றிலும் பார்த்துவிட்டு எழுந்து அந்த அறையில் இருந்த பாத்ரூமிற்கு நேற்று அவளுடைய அம்மா குடுத்துவிட்ட பையிலிருந்து ஒரு சேலையை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here