ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக் கொண்டு இருந்தான் ஒரு ஏழை சிறுவன். பசி அவனை வாட்டியது. அவனிடம் கையில் 10 பைசா கூட இல்லை. அப்போது பணக்காரர் ஒருவர் அந்த நாடக கொட்டகை அருகில் குதிரையில் வந்தார்.
டேய் தம்பி, இங்கு கட்டி வைக்கும் குதிரைகள் அனைத்தும் களவாடப் படுகிறது. நான் உள்ளே சென்று நாடகம் பார்த்து விட்டு வரும் வரை நீ என் குதிரையைப் பார்த்துக் கொள்கிறாயா? நான் உனக்குப் பணம் தருகிறேன் என்று அவர் கூறினார்.
அவனும் வேகமாக தன் தலையை அசைத்தான். நாடகம் பார்த்து விட்டு வெளியில் வந்த பணக்காரருக்கு ஒரே ஆச்சர்யம். அந்த குதிரை அவருடையது தானா? என்ற ஐயப்பாடு அவருக்கு வந்து விட்டது. அந்த அளவிற்கு குதிரையை சுத்தப்படுத்தி வைத்து இருந்தான் அந்த சிறுவன். பேசியதை விட அவனுக்கு 5 மடங்கு அதிகப் பணம் கொடுத்தார் அந்த பணக்காரர்.
மீண்டும் அடுத்த நாள் அதே இடத்தில் சிலர் வந்து அவனிடம் குதிரையை விட, அவனும் அதைப் பாதுகாத்து, சுத்தப்படுத்தி வருவாயை ஈட்டினான். இது ஒரு நல்ல தொழிலாக இருக்கிறதே என்று நினைத்த அவன் அந்த தொழிலைத் தொடர்ந்து செய்ய, ஒரு கட்டத்தில் குதிரை லாயமே அமைத்து, வேளைக்கு ஆட்கள் எல்லாம் போட்டு தன் பணியை தொடர ஆரம்பித்தான்.
நாடகத்திலும், இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட அவன், நாடகங்களை கவனிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் அவன் மிகப் பெரிய இலக்கிய மேதை ஆகி விட்டான். அந்த சிறுவன் தான் உலகப்புகழ் பெற்ற இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியர்.
நீதி:-
எந்த தொழிலையும் நேர்மையாகச் செய்து, தனக்குப் பிடித்த துறையில் உண்மையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.