பன்னீர் பூக்கள் 3

0
113

எல்லா வகையிலும் எந்த குறையும் இல்லாது இருந்த மாலதிக்கு பிரசவ வலி குறிப்பிட்ட நாளுக்கு வெகு முன்பாக 8 ஆம் மாதமே வந்துவிட்டது..

எட்டு மாதம் தானே என்ற நம்பிக்கையில் ராஜேஷ் தொழிலை கவனிக்க வெளியூர் செல்ல, பக்கத்து தெருவில் உள்ள உறவுக்காரர் வீட்டுக்கு வந்திருந்த அவர் மகளை பார்த்து வர மாலதியின் மாமியார் சென்றுவிட்டார். அவளும் கர்பவதி என்பதால் ஒருவருக்கு ஒருவர் நேராக சந்திக்க கூடாது என்று மாலதிக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி வீட்டில் வேலை செய்யும் கோகிலாவிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தான் அவர் போனார்.

ஆனால் கடவுள் நினைத்ததை மாற்றி எழுத யாரால் முடியும். கட்டிலில் படுத்திருந்த மாலதி தண்ணீர் குடிக்க எழுந்து வர யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. வாசலில் அவர்கள் பண்ணையை பாதுகாக்கும் மாயாண்டி நின்றிருந்தார். அடுத்த வாரம் வரவிருக்கும் தன் ஊர்த்திருவிழாவிற்கு செல்ல விடுமுறை கேட்டிருந்த மாயாண்டி அதோடு எப்போதும் தன் சம்பளத்தின் ஒரு பகுதியை தன் முதலாளியிடமே கொடுத்து சேர்த்துவைத்திருப்பார். அதை ஊருக்கு போகும் சமயம் வாங்கி கொள்வார். அந்த பணத்தையும் கேட்டிருந்தார்.

ராஜேஷும்.. ” அம்மாகிட்ட சொல்லி வெக்கறேன். வாங்கிக்கோ மாயா” என்று சொல்லியிருந்தார்.

வெளியூர் கிளம்பும் அவசரத்தில் ராஜேஷ் மாலதியிடம் இதை சொல்ல மறந்து
விட்டார். மாயாண்டி மறுநாள் புறபடவேண்டி பணம் வாங்கிக்கொள்ள வந்தார். கணவனுக்கு கால் செய்து விபரம் கேட்டு பணம் கொண்டு வந்து கொடுத்தாள் மாலதி. சேர்த்து வைத்த பணத்திற்கும் மேலாக சில ஆயிரங்கள் இருக்க

” அம்மா கூடுதலா குடுத்துடிய தாயி” என்று மாயாண்டி திருப்பி தர

“இருக்கட்டும் மாயா, தவறுதலா இல்ல தெரிஞ்சி தான் தந்திருக்கேன். உன் பேர பசங்களுக்கு எதுனா வாங்கிட்டு போ, இந்த வருஷம் உன் பொண்ணுக்கு முதல் கல்யாண நாள் வருது ல, அதுக்கு உன் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் எங்க சார்பா நல்லதா ஒரு பொடவ, வேட்டி வாங்கி குடு” என்று மஞ்சள் முகத்தின் மென்னகை மின்ன சொன்னவளை வாஞ்சையோடு பார்த்து

“தேவைக்கு தரவே யோசிக்கிரவங்க மத்தில தேவைக்கும் மேல பாத்து செய்யிர தாயி, உன் மனசுக்கு எந்த கொறயும் கடவுள் வக்காம இருக்கனும் என் நெஞ்சு நிறைய வேண்டி வாழ்த்தினார்”

அவரின் நெகிழ்வையும் வாழ்த்தையும் சிறு சிரிப்போடு பார்த்துக்கொண்டே..

பாத்து பத்தரமா போய்ட்டு வா மாயா, ஆமா எப்ப கிளம்பனும்…

காலைல மொத பஸ்ஸுக்கு தாயி என்றார் மாயாண்டி…

பெரியவர்கள் வாக்கு பெருமான் வாக்கு என்று சொல்வார்கள். மாலதி விஷயத்தில் அந்த வாக்கு பொய்த்து போனது யார் செய்த முன் வினையோ, தெய்வமொன்றே அறியும்.

மாயாண்டியோடு மாலதி பேசிக் கொண்டிருந்த சமயத்தில் பால் கறக்க அவிழ்த்து விடபட்ட கன்று குட்டி ஒன்று தன் தாயிடம் பால் குடித்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளி தத்தி விளையாடிக்கொண்டு வந்தது எதிர்பாராமல் கால் மடக்கி மாலதியை இடித்துக்கொண்டு அவள் காலடியிலேயே விழுந்தது. அதை எதிர்பார்த்திராத மாலதி கன்றுக்குட்டி இடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தால்….

நின்ற நிலையில் வெட்டிய மரம் போல கீழே சரிந்து விழுந்த மாலதிக்கு இடிப்பில் பலமாக அடிவிழ அந்த நொடியே பிரசவலி எடுத்தது…

யாரும் எதிர்பாராமல் நொடியில் நடந்துவிட்ட நிகழ்வு. மாயாண்டி என்ன நடந்தது என்றே புரியாமல் மலைத்துபோய் நின்றுவிட்டார்.

மாலதியின் அலறல் கேட்டு ஓடி வந்த கோகிலா மாலதி கிடந்த கோலத்தை பார்த்து அவளின் நிலையை சட்டென ஊகித்து பதறிப்போய் மாயாண்டியை மாலதியின் மாமியாருக்கு சேதி சொல்ல விரட்டிவிட்டாள்.. உடனே ராஜேஷுக்கும் தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தேவையானதை தயாராக எடுத்து வைத்தார்.

சேதி கேட்டு ஓடி வந்த மாலதியின் மாமியாரும் அவரசமாக மாலதியை மருத்துவமனை கூட்டிப்போனார்

எதற்கும் இருக்கட்டுமென்று ராஜேஷ் ஒரு மாதம் முன்பு தான் ஒரு புதிய கார் ஒன்று வாங்கி அதை வீட்டு அவசரத்திற்கென்று வைத்தார்.

மாலதிகூட ” இப்போ என்ன அவ்வளவு அத்யாவசியம்னு இப்டி அவசரமா கார் வாங்குறிங்க என்று ஆட்சேபித்த போதும்.

இருக்கும் மாலு, எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்கும் னு சொல்ல முடியாதே. நாளைக்கு எதுனா அவசியம் வந்து நான் பக்கத்துல இல்லனா.. என்று தன் மனைவியின் சூள் கொண்ட வயிற்றை ஆதூரமாக தடவிக்கொண்டே சொன்னார்.

எந்த வேளையில் சொன்னாரோ, அவ்வாறே அவர் சொன்ன அவசியம் அவரசமாக மாறி வந்துவிட, வாங்கி வைத்த கார் இப்போது உதவியதால் மாலதி துரிதகதியில் மருத்துவர் கையில் ஒப்படைக்கப்பட்டாள்.

நொடிக்கு நொடி மாலதியின் கதறல் சத்தம் அதிகரிக்க பயந்துகொண்டே வெளியில் கைகளை பிசைந்துக்கொண்டு ராஜேஷுக்காக காத்துக்கொண்டிருந்த மரகதத்தின் தலையில் இடியை இறக்கினர் டாக்டர்..

மாலதி கீழே விழுந்ததில் கருப்பை வாயில் அடிபட்டுவிட்டிருந்தது. கருவில் உள்ள குழந்தைக்கும் அடிபட்டிருக்குமோ என்று மருத்தவர் சந்தேகித்தார். குழந்தை வேறு கொடி சுற்றி கொண்டு மேலும் சிக்கலான பிரசவமாக மாறிப் போனது.

சிக்கலுக்கு மேலும் சிக்கலாக பனிக்குடம் வேறு உடைந்து போனது. ஒவ்வொரு நொடி தாமதமும் தாய் அல்லது பிள்ளை தான் பிழைக்கும் என்ற நிலையை உறுதி செய்துக்கொண்டே போனது. சி செக்ஷ்னை தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் ஆபரேஷனுக்கு தயார் செய்ய பட்டது..

கையெழுத்து போட கணவரை தேட தாமதிக்காமல் அறக்க பறக்க வந்து சேர்ந்தான் ராஜேஷ். மற்றவைகள் தயார் ஆகும் நேரம் மாலதி ராஜேஷை பார்க்க விரும்புவதாக நர்ஸ் வந்து சொல்லவும் உள்ளுக்குள் மனைவியை பார்க்கும் ஆவல் இருந்தாலும் பயம் அவரை நகர விடாமல் வேரோடி போக வைத்தது. மரகதம் மகனை உந்தி பிரவச அறை வாசலில் நிறுத்த நடுங்கும் கால்களை ப்ரம்ம ப்ரத்தனம் செய்து எடுத்து வைத்து உள்ளே நுழைந்தார். அங்கு உடலில் சிறுசிறு ப்ளாஸ்டர்கள் ஒட்டப்பட்டு தலையெல்லாம் கலைந்து, சோர்ந்து வலி சுமந்த பார்வையில் ஆவலும், கலக்கமும் சரிக்கு சமமாக போட்டிபோடும் கண்களால் தன்னை தேடி கைநீட்டிய தன் மனைவியின் கை களைப்பால் மெல்ல இறங்கவும் ஒரே எட்டில் ஓடிப்போய் இறங்கும் அவள் கையை பற்றிக்கொண்டார்.

அவரின் கண்களை பார்த்து ” எனக்கொன்னும் இல்லங்க.. நான் நல்லா தான் இருக்கேன்”

என்று வலிய சிரிக்க முயன்ற மாலதியின் தலை வருடி உச்சியில் முத்தமிட்டான் ராஜேஷ்.

சார் நேரமாகுது, லேட் பண்ண பண்ண 2 உசுருக்குமே ஆபத்து சார் என்று உடனிருந்த டாக்டர் நினைவு படுத்த மெல்ல விலகிய ராஜேஷின் கையை மாலதி இறுக்கிப்பிடித்துக்கொண்டு

என்னங்க, எனக்கு ஒரு சத்தியம் பண்ணுங்க, ஒருவேளை எனக்கு என்னவாச்சும் ஆய்ட்டா பாப்பாவை மட்டும் விட்ராதிங்க, நாம அவள எப்டிலாம் வளக்கனும் னு ஆசபட்டோமோ அப்டியே வளக்கனும் சரியா? சத்தியம் பண்ணிக்குடுங்க… ம்ம் சத்தியம் பண்ணுங்க என்று வற்புறுத்தினாள்.

உள்ளுக்குள் மாலதியின் வார்த்தைகள் உண்டாக்கிய ப்ரளயத்தை மாலதி முன்பு காட்டாது மறைத்துக்கொண்டு..

“அப்டிலாம் இல்லடா மாலு மா, இப்டிலாம் பேசக்கூடாது. நீயும் சரி நம்ம பாப்பாவும் சரி நல்லபடியா நம்ம வீட்டுக்கு வரத்தான் போறீங்க.. கவலை படாத டா. நான் டாக்டர்ட்ட சொல்லிட்டேன் பெரிய உசுரா சின்ன உசுரான்னு பாக்கலாம் வேணாம். எக்கேடுகெட்டாலும் என் பொண்டாட்டிய மட்டும் எனக்கு காப்பாத்தி குடுத்துருங்க னு. என்ன ஆனாலும் எனக்கு நீ தான் டா முக்கியம். வீணா வெசனப்படாத டா”
என்று தைரியம் கொடுக்க பார்த்தான். ஆனாலும் சமாதானம் அடையாத மாலதி விடாப்பிடியாய் நிற்க, நேரம் விரயமாவதை குறிப்பாக தன் கை கடிகாரத்தை காட்டி மாலதியின் ஆசைக்காக சத்தியம் செய்யச்சொல்லி டாக்டர் கண் ஜாடை காட்டவும்.. ராஜேஷ் மாலதியின் கையே இறுக பிடித்தபடி.

சரி டா.. நீ சொன்னபடி (மாலதிக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ற வார்த்தையை கவனமாக தவிர்த்துவிட்டு) நாம ஆசபட்ட படியே நம்ம பாப்பாவ நான் வளப்பேன்.. ஆனா என்ன பாத்துக்க உன்ன விட்டா யாருமில்ல.. அதுனால எனக்காவாச்சும் நீ திரும்பி வந்துரனும் சரியா? என்று

தன் சத்தியத்திற்கு பதில் வாக்கு வாங்கிக் கொண்டு அவளை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் அனுப்பி வைத்தான்.

அந்த நீண்ட நெடிய மூன்று மணி நேரத்தை முள் மீது நிற்பது போல், நெருப்புக்கு நடுவில் இருப்பது போல் நிலைகொள்ள முடியாமல் தவித்தவரை மரகதம் ஆறுதல் படுத்த முயன்றார். அந்த நேர மனநிலைக்கு தாய்மடி தேவையாகவே இருந்தது ராஜேஷுக்கும்.

பிரசவம் நல்லபடியாக நடந்தது கடவுள் புண்ணியத்தில் மாலதி பிழைத்துக்கொள்ள, குழந்தைக்கு மட்டும் 24 மணி நேரம் கேடு வைத்தார்கள் மருத்துவர்கள்….

குழந்தையின் ஆரோக்கியத்தில் ப்ரச்சனை ஏதுமில்லை என்றாலும் மாலதி கீழே விழுந்த அதிர்வில் கலங்கி பிள்ளை பனிக்குட நீர் குடித்துவிட்டதாகவும், குறைமாதத்தில் பிறந்ததனாலும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுருத்தப்பட்டது.

இங்கே சாந்திக்கும் பிரசவ காலம் நெருங்க பக்குவங்கள் சொல்லி தரவும் செய்து தரவும் ஆள் இல்லாததால் டாக்டர் சொன்ன மருந்துகளை குழந்தை வளர்ச்சிக்கு நல்லது என்று சொன்ன காரணத்தால் அதிகமாகவே எடுத்துக்கொள்ள குழந்தை நன்கு வளர்ந்தது.

சிக்கலும் அங்கே தான் உண்டானது. குழந்தை சாதாரண எடையைவிட சற்று அதிகமாகவே வளர்ந்து விட்டிருந்தது..

அதனால் வந்த ஸ்ரமங்களால் அதிகம் அவதி பட்டாள் சாந்தி..குறித்த நாளுக்கும் ஒரு வாரம் தள்ளியே பிறந்தது குழந்தை. குழந்தையின் அதீத வளர்ச்சியால் சி செக்ஷன் ஒன்று தான் சாத்தியமென்று கூறி இரண்டு முறை ஆபரேஷனுக்கு சாந்தியை தயார் செய்து பின் திருப்பி அனுப்பினார்கள். ஏன் இப்படி என்று கேட்டதற்கு ஒரு டாக்டர் குழந்தை பிறக்கும் அறிகுறி தெரியவில்லை என்றும், மற்றோருவர் திடீரென விடுமுறை எடுத்துக்கொண்டு போய்விட்டதாகவும் காரணங்கள் சொல்லப்பட்டது. அது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆப்ரேஷனுக்காக தயார் செய்கிறோமென்று செவிலிகள் அடித்த கூத்தால் குழாய்கள் சொருகி பின்பு பிடுங்கி என தொண்டைக்குழி புண்ணாகி பேசக்கூட முடியாமல் கஷ்டப்பட்டாள் சாந்தி..

அழையா விருந்தாளியாய் வந்தமர்ந்து கொண்ட சாரதா வேறு தன்னிஷ்டத்திற்கு வறுத்து தள்ளினாள்.

“கவர்மண்ட்டு ஆஸ்பத்திரில சேர்த்தால் ஆகாதா, பெரிய ராஜ பரம்பரை தனி ரூம் குடுக்குற ஆஸ்பத்திரி ல தான் பிரசவம் பாப்பியோ. நான்லாம் நாலு பிள்ளையுமே வீட்டுல தான் பெத்தேன். என்னமோ இந்த காலத்து பொண்ணுங்க ரொம்பத்தான்டியம்மா சிலுத்துக்குறிங்க…. எம்புள்ள சம்பாதிக்கறத எல்லாம் கரியாக்கனே அலைவியா…..என தலைமாட்டில் அமர்ந்து அரித்துக்கொண்டிருந்த சாரதாவின் வார்த்தைகள் தன்னை மீறி சாந்திக்கு கண்ணை கலங்க வைத்தது.

சாரதாவின் பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் சாந்தி தானாக வந்து சேர்ந்த தனியார் மருத்துவமனையிது. ஆம், அவளாக பார்த்து சேர்ந்தது தான். அவளை பிள்ளைத்தாச்சி என்று தவறாமல் டாக்டரிடம் கூட்டிபோகவும், வேண்டியன பார்த்து செய்யவும் தான் யாருக்கும் நேரமிருக்கவில்லையே.

பக்கத்து வீட்டு அக்காள் அவளுக்கும், அவள் தங்கைக்கும் நல்லபடியாக பிரசவம் நடத்திக்கொடுத்த ஆஸ்பத்திரி என்று கைக்காட்டியது தான் இந்த மருத்துவமனை.

தனக்கென்று மட்டும் எப்படித்தான் வகை வகையாய் சோதனைகள் வருமோ என்று தளர்த்து போனவளுக்கு அவ்வபோது சொல்லப்பட்ட
“கொழந்த உண்டான ராசிதான் இப்டி படுத்துறது” என்ற
வார்த்தைகள் அனாவசியமாக நினைவுக்கு வந்தது.

வயிற்றுக்குள் உருளும் குழந்தை இப்போது சுமையாக தோன்றியது. இறக்கிவைத்தால் போதுமென்ற வெறுமை படர்ந்தது.

அத்தனை வேதனைகளும் அவளே அறியாமல் வெறுப்பாக மாறி ஒன்றாக திரண்டது குழந்தை மேல்.

மூன்றாம் முறையாக ஆப்ரேஷனுக்காக தயார் செய்ய சொல்லி உத்தரவு வர வெறுத்துப்போனது சாந்திக்கு. இந்த முறை என்ன சொல்லி அனுப்பபோகிறார்களோ என்று கலங்கி நின்றவள் அழைத்த அத்தனை தெய்வங்களும் நல்லவேலையாக அவளை ஏமாற்றவில்லை.

வாழ்க்கையில் எல்லோருக்கும் சர்வ சாதரணமாய் நடக்கும் விஷயம்தான் இது. எதிர்ப்பார்த்த நொடிகளில் நடவாதது. எதிரே பார்த்திரா நேரத்தில் நாம் தயாராகும் முன் நடந்து முடிந்து நம்மை கடந்தும் போய்விடும். உனக்கு மேல உள்ளவன் நானென்று கடவுள் உணர்த்தும் நேரமது. அவணன்றி ஓரணுவும் அசையாது என்று புரியும் தருணமது.

இருந்தும் தனக்கு சாதகமான சூழலை தன் திறமையென்றும் பாதகங்களை பிறர் தந்த பழியென்றும் தன்னை தானே சமாதானபடுத்திக் கொள்கிறது. மனிதமனம். காலம் காலமாக ஊறிப்போன, ஊற்றி வளர்த்த தன்மை. அதிலிருந்து வேறுபட்டு யோசிப்பவர்கள் அரிதிலும் அரிது.

அது போலத்தான் சாந்தி மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த இரண்டு முறையும் தவிர்க்கப்பட்டு, எதிரே பார்த்திராத மூன்றாம் முறை. பிரசவம் நடத்தப்பட்டது. அதே மூன்று மணி நேர போராட்டம்.

புத்தம்புது மலர்களாக, தன் நீண்ட நெடிய பயணத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்து மண்ணில் கால் பதித்தது இரண்டு மழலைச்செல்வங்கள்.

பூக்களத்தில் பூப்பதோ அன்றி போர்க்களத்தில் புதைவதோ..
இவர்களுக்கு விதி தன் விதியாக என்ன எழுதிவைத்திருக்கிறதோ தெரியாது.

வெவ்வேறு சூழ்நிலை மற்றும் மனநிலையில் தம் குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்மார்கள் தம் பிள்ளைகளை பார்க்க ஆவலோடு காத்திருந்தார்கள்.

தன் மணி வயிற்றில் தன் பிள்ளைகளை சுமக்க தொடங்கிய அந்த நாட்களில் இவர்கள் கண்ட கனவும் கொண்ட பிரார்த்தனையும் நிறைவேறுமா ????

பூக்கும்……

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here