பன்னீர் பூக்கள் 4

0
150

பூக்கள் 4

எத்தனையோ இன்னல்களை கடந்து தான் ஈன்ற பிள்ளைசெல்வங்களை காண ஆவலாக காத்திருந்த இரண்டு தாய்மார்களில் ஒருவருக்கு மட்டுமே குழந்தை காட்டப் பட்டது. ஆம், மாலதியின் குழந்தை இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் இங்க்குபேட்டரில் தான் இருந்தது.

சாந்திக்கு மெதுமெதுவாய் மயக்கம் தெளிந்து கண்கள் திறக்க, புன்னகையும் அதிருப்தியும் சரிசமமாக போட்டிபோடும் பாவத்தோடு துறையும், அலட்சியம் கலந்த பொறாமையோடு நின்ற சாரதாவும் தான் கண்ணில் பட்டனர். ஆனால் சாந்தியின் கண்கள் தாமாக தன் குழந்தையை தான் தேடியது. சாந்திக்கு அழகான பெண் பிறந்தது. ஆம், பெண் குழந்தை தான். சாந்தி வேண்டவே வேண்டாமென்று வேண்டிய பெண் குழந்தை தான்.

கடவுள் பல நேரங்களில் நாம் எதை ஒதுக்க நினைக்கிறோமோ அதையே வலுக்கட்டாயமாக நம் கைகளில் திணிப்பார். அது, நம்மை பக்குவபடுத்துவதற்கான பாடமா? அல்லது நம் கையில் திணிக்கபடும் பொருளுக்கான தண்டனையா? அதற்கான விடை அவர் மட்டுமே அறிவார்.

வட்டமுகம், குண்டு குண்டு கன்னங்கள், இளஞ்சிவப்பு ரோஜா நிறம், பார்ப்பவர்களை தூக்க சொல்லும் அழகுடன் இருந்த அந்த குழந்தையை செவிலிமார் குளிப்பாட்டி ஒரு வெள்ளை துவாலையில் சுற்றி அப்போது தான் கொண்டு வருகிறாள். குழந்தையை சாந்தி அருகில் கிடத்திவிட்டு “ரொம்ப க்யூட்டா இருக்கு உங்க கொழந்த” என்று கன்னம் கிள்ளி கொஞ்சிவிட்டு போக ஆவலாக பார்த்தவளுக்கு ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம் மட்டுமே. நான் இருக்கிறேனென்று அதீத நம்பிக்கை தந்து கூட்டிப்போய் மலை உச்சியிலிருந்து தள்ளிவிடப் பட்டது போல உணர்ந்தாள்.

கலைத்தே தீரவேண்டுமென்று போராடிய சாரதாவிடமிருந்து பிள்ளையை காப்பாற்ற உதவிய கடவுள் இதில் தன்னை ஏமாற்றிவிட்டாரே என்று தான் தோன்றியது. உச்சபட்ச விரக்தி விரவிய புன்னகையொன்று சிறு மின்னலாய் ஓடிமறைந்தது இதழ்கடையில்.

கோவில்,தெய்வம், பூஜை, விரதம் இதுவன்றி வேறெதுவும் அறியாதவள் சாந்தி. அதுவும் கூட தொழுதல் தன் கடமை என்ற நோக்கம் கொண்டவள்.

கடவுள் ஒன்று கொடுத்தால் ஒன்றை மறுப்பார். ஆயினும் நாம் கேட்பவற்றை விட மேலானதையே, மேன்மையானதையே தருபவர். அதனால் அவர் செயல் எல்லாவற்றிலும் ஒரு காரணகாரியமிருக்கும் என்ற நம்பிக்கை உடையவள். நம்மை படைத்து இவ்வுலகில் நமக்கு தேவையானவற்றை நாம் கேட்கும் முன்பே தருவது தான் தெய்வம் அதனால், தேவைக்காக தெய்வத்தை தேடி ஆலயம் செல்லுதல் கூடாது என்ற கொள்கை உடையவள். அப்படிபட்ட சாந்திக்குமே, தன் வேண்டுதல் பொய்த்து போனதே என்ற வருத்தம் வந்து மேல் சொன்ன பக்குவத்தை உடைத்தது. ஆயிரமாயினும் சாந்தியும் சராசரி பெண் தானே.

என்ன இருந்தாலும் கிடைத்தவற்றில் சமாதானம் ஆகக்கூடிய குணம் உள்ள சாந்தி இந்த விஷயத்தில் கொஞ்சம் ரெண்டும்கெட்டானாக தான் உணர்ந்தாள்.

எனினும் தன் ரத்தத்தில் உதித்த தலைப்பிள்ளையாயிற்றே.. குழந்தையை பார்த்ததும் தாய்மை தலைதூக்க மற்றவை புறம் தள்ளப்பட்டது. குழந்தையை ஆசையாக தொட்டுப்பார்த்தாள். தலை முதல் கால் வரை வருடி பார்த்தாள்.

வெல்வெட்டில் செய்த
பொம்மை போல இருந்தது குழந்தை. சாந்தியின் கை பட்டதுமே தூக்கத்திலிருந்த குழந்தை சிரித்தது. இது இயற்கை உருவாக்கிய உன்னதமான அமைப்பு, எவ்வளவு கூட்டத்திலும் தன் பிள்ளையை கண்டுகொளவதும். விவரமறாயா பச்சை பிள்ளை தன் தாயை உணர்ந்துகொளவதும் இயற்கை அமைத்த முதல் உறவு சங்கிலி.

அத்தனை நேர வலி, வேதனை, வாங்கிய பேச்சு எல்லாம் மறந்து போனது சாந்திக்கு.

தன் சோர்வையும் மீறி குழந்தையை அள்ளியெடுத்து கொஞ்ச வேண்டும் என்ற ஆசை பீறிட்டு கிளம்பியது.
ஆனால் தையல் போடபட்டிருக்கிறது பிரிந்துவிடுமென்று நர்ஸ் தடா விதித்த போது தான் தன் அடி வயிற்றின் வலி உணர்ந்தாள் சாந்தி.

அங்கே மாலதி பிள்ளையை பார்க்க முடியாமல் தவித்தாள். ஆறு வருடம் அவமானங்களெனும் அமில ஆற்றில் நீந்தி, வன் சொல் நெருப்பில் தவமிருந்து, உண்டாகி, உரு கொடுத்து, அடிவயிற்றில் சுமந்து, படாதபாடு பட்டு பெரும்வலி தாங்கி பெற்ற பிள்ளை, அவர்களின் குலக்கொழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தால் எந்த தாய் தான் தாங்குவாள்.

ஒரே ஒரு முறை பிள்ளையை பார்க்க வேண்டுமென்று கெஞ்ச தொடங்கினால். ராஜேஷ் சொல்லிய சமாதானங்களோ, ஆறுதலோ ஒரு வார்த்தை கூட மாலதி செவிகளில் சேரவில்லை. நேரம் போக போக மாலதியின் மன்றாடல் மூர்கமானது. கைக்கு கிடைத்ததையெல்லாம் தூக்கியெறிந்து, ட்ரிப்ஸ் போட்ட ஊசியை பிய்தெறிந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள். டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் மாலதிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.

ராஜஷ் கதிகலங்கி போனார். எமனோடு போராடும் பிள்ளையை பார்ப்பதா, இல்லை அந்த பிள்ளைக்காக மன்றாடும் மனைவியை தேற்றுவதா என்று அறியாமல் திணறிப்போனார். அலைந்து குலைந்து மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். உணவின்றி உறக்கமின்றி கணமும் பிரியாது மாலதியின் பக்கத்திலேயே அவள் கையை இறுகபிடித்தபடியே அமர்ந்திருக்கும் மகனை காண காண மரகதத்தம்மாவுக்கு மனதில் பயம் குடிகொள்ள துவங்கியது.

இறைவனிடம் மூன்று உயிர்களை மீட்டு தருமாறு ப்ரார்தித்து கொண்டிருந்தார்.

மரகதத்தம்மாவின் வேண்டுதலோ, ராஜேஷின் நம்பிக்கையோ அல்லது நொடி பொழுதும் நிற்காது மாலதி வடித்த கண்ணீரின் பலனாகவோ குழந்தை மெல்ல இயல்புக்கு வர ஆரம்பித்தது. பிழைத்துவிட 90% வாய்ப்புள்ளதென்று மருத்துவர் சொன்ன பிறகு தான் ராஜேஷ், மாலதி தம்பதிக்கு உயிர் வந்தது. உலகமே அஸ்தமித்துவிட்டது போன்ற பாவம் சுமந்த கண்களில் ஒளி வந்தது.

அடுத்த 2 நாட்களில் குழந்தையின் நிலை சீறாகி மாலதியின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை கைகளில் ஏந்திய அந்த நொடி மாலதியும் ராஜேஷும் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, சொல்ல வார்த்தையுமில்லை. உலகையே வென்றுவிட்ட, அத்தனை இன்பங்களையும் ஆண்டுவிட்ட, யாருக்கும் கிட்டாத பெரும் பொக்கிஷத்தை கொண்டுவிட்டதாகவே உவகை கொண்டனர். மாலதியின் கண்கள் அனந்தகண்ணீரில் நிறைந்து அந்த கண்ணீரிலேயே தன் பிள்ளையின் உருவை சுமந்து ராஜேஷை ஏறிட, ராஜேஷும் அதே உணர்வுடன் தன் மனைவியின் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தமிட்டு தன் காதலையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

கண்களில் கண்ணீரும் இதழ்களில் சிறுநகையும்…. கண்டதுண்டா? அனுபவித்துண்டா? இது ஒரு வித்யாசமான சேர்க்கை. எனக்கு மிக பிடிக்கும். ஒரு விதமான உணர்வுகளின் உச்சம். தளும்பும் எண்ணங்களின் விளிம்பில் நிற்பது போன்ற நிலை. நம் ஆழ்மனதின் உண்மையான வெளிப்பாடு. வெயிலும் மழையும் சேர்ந்துவருவது போல, குளிரில் அருந்தும் சூடான தேநீர் போல அற்புதமான, அரிதான, சுகமான விஷயம்.

அந்த நிலையில் தான் இப்போது ராஜேஷ் இருப்பதும். கண்ணீரும் புன்னகையுமாக மாலதியின் கன்னங்களை தன் இரண்டு கைகளிலும் தாங்கி கண்ணோடு கண் நேராக பார்த்து ” தேங்க்ஸ் டா மாலு” என்றார் புலங்காகிதமடைந்து.

சிரித்துக்கொண்டே ” எனக்கு எதுக்குங்க தேங்க்ஸ், டாக்டருக்கு சொல்லுங்க. என்னையும் பாப்பாவையும் காப்பாத்தி குடுத்ததுக்கு. நான் தான் உங்களலாம் ரெண்டு நாளா ரொம்ப படுத்திட்டேன்” என்றாள் ஸ்ருதி இறங்க.

கண்டிப்பா உனக்கு தான் டா தேங்க்ஸ் சொல்லனும். டாக்டர் கஷ்ட பட்டது மூனு மணிநேரம், நாங்க கஷ்டபட்டது கூட 3,4 நாள் தான். ஆனா, நீ 8 மாசம் 1வாரம் கஷ்ட பட்ருக்க. கண்டிப்பா நான் உனக்கு தான் டா மொத தேங்க்ஸ் சொல்லனும் என்றார் ராஜேஷ் நிறைவான நெஞ்சோடு.

மேலும்,” எல்லா ஆம்பளைங்களுக்கும் அப்பாங்கற ஸ்தானம் முக்கியம் தான். ஆனா அதுக்காக நாங்க பண்றது ஒன்னுமே இல்லயே. உயிர் உருவான நாள்ளேந்து, மசக்கை, மயக்கம்னு கஷ்டபட்டு, பசி வேளைக்கு சாப்ட முடியாம, தண்ணி கூட அளவு பாத்து குடிச்சி, தூக்கம் மறந்து,பொரண்டு படுக்க முடியாம, கால் வலி, வீக்கம் னு அவதி பட்டு, எட்டி நடபோட கூட பயந்து பாத்து பாத்து நடந்து, பிரசவ நேரத்துல உயிர்போற வலி அனுபவிச்சு, உடல கிழிச்சு ரத்தத்தை வீணாக்கி னு குழந்தைய எங்க கைல குடுக்குற வர நீங்க பட்ற கஷ்டம் தான்டா பெருசு. அப்போ உனக்கு தானே டா நன்றி சொல்லனும். பாப்பா வளந்து அதுனால உனக்கு வயிறு பெருசாக பெருசாக முதுகு வலில நீ கஷ்டபடுறத பாக்கும்போது எனக்கு எப்டி இருக்கும் தெரிமா? என்று கண்மூடி அந்த வலியை தானும் உணர்ந்து ராஜேஷ் பேச பூரித்து போனால் மாலதி. என்ன தவம் செய்தோமோ, இப்படியொரு கணவன் கிடைக்க என்றே நெகிழ்ந்துருகியது நங்கை நெஞ்சம். அங்கே அன்பே உருவான இரு நேச நெஞ்சங்கள் தங்கள் காதலால் முகிழ்ந்து ஒருவர் வலியை மற்றவர் பகிர்ந்து , அன்பால் ஒத்தடம் தந்துகொண்டது .

குழந்தைக்கு இனி ஆபத்து இல்லேயென்றாலும் குறைபிரசவத்தில் பிறந்த காரணத்தால் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்றார் மருத்துவர்.

ஆனால் சிறு அபஸ்வரமாக கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டதில் மாலதியின் கர்பப்பை பலவீன பட்டிருப்பதாகவும், மீண்டும் ஒரு பிள்ளையை தாங்கும் சக்தி அதற்கில்லை,அப்படி உண்டானால் அது மாலதியின் உயிருக்கும் சேர்த்து ஆபத்தை விளைவிக்கும் என்றும் அறிவித்தனர்.

மனதுக்கு கஷ்டமாக இருந்தபோதும் தங்க விக்கிரஹம் போல இருந்த அழகான பெண் குழந்தையை பார்க்கும் போது வேறெதும் பெரிதாக தோன்றவில்லை அவர்களுக்கு.

ஆறுவருட தவத்திற்கு வரமாக வந்த தங்க மகள் இவள். அது போதாதா?? என்றே தோன்றியது தம்பதிக்கு.


அம்மாவின் அருகிலேயே இல்லாமல் ஒட்டு மொத்த வார்ட்டையே சுற்றி வந்தாள் சாந்தியின் சீமந்த புத்ரி. பால் குடிக்கவும், தூங்குவதற்கும் மட்டுமே அன்னையிடம் அட்டென்டண்ஸ் போட்டாள். அதுவும் அவளாக தூங்கிய பின்பு தான் சாந்தியின் கைகளில் சேர்க்கப்பட்டாள்.

கொழுக்கு மொழுக்கென்று வெண்ணிலா மூட்டையாக இருந்தவளை அந்த வார்டில் இருந்த நர்ஸ்களும் ஆயாக்களுமே பாதி நேரம் வைத்து விளையாடினார்கள்.

(அதென்ன புள்ளையா பொம்மையா வெலயாட)

பிறந்து 2 நாள் தான் இருந்தாலும் குழந்தை யார் கைகளிலும் ஒய்யாரமாக தங்கிக்கொண்டாள்.

நல்லது உள்ள இடத்தில் கெட்டதும் இருக்குமே.

குழந்தை அழாமல் தங்களிடம் பொருந்திக்கொள்வதை ஆச்சரியமாக சாந்தியிடம் சொன்னவர்கள் மத்தியில் ஒரு ஆயா மட்டும் அபஸ்வரம் வாசித்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தாள்..

” இன்னமா உன் பொண்ணு பொறந்து ரண்டு நாள்தான் ஆவுது. அம்மாண்ட இருக்கனும்னு அழுவாம, ஆரு தூக்குனாலும் சிரிக்கிது, வெளாடுது. வளந்து உன்னாண்ட ஒட்டவே ஒட்டது போலயே. அத்தொட, ரட்டநாக்குகீது. நெறியா பொய் சொல்லி உன்னய ஊன் ஊட்டாருகைல மாட்டி உடும் பாரு” என்று பற்றவைத்தாள் மகராசி…

ஏற்கனவே ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் போதவில்லையென்று தன் சங்கிலியை அடகு வைக்க துறையிடம் தந்த போது சாரதாவும் இப்படி தான் அபசகுனமாக பேசி வைத்தாள்.

“இதுக்கு தான், கவர்மெண்ட் ஆஸ்பத்திரில பாக்கலாம்னு சொன்னேன். அட்லீஸ்ட் கொஞ்சம் கம்மியா செலவாகுற இடமாச்சும் பாத்துருக்கலாமா?? இப்ப பாரு ஆஸ்பத்திரி பில்லு கட்டவே போராட வேண்டியிருக்கு.
என்ன புள்ளையோ, பொறந்துமே அம்மா கழுத்த தொடச்சிகிட்டு தான் ஆஸ்பத்திரி விட்டு வெளில வரபோகுது” என்றது தான்
அசந்தர்ப்பமாக நினைவுக்கு வந்தது சாந்திக்கு. பல வித உணர்வுகளோடு மகளை பார்த்தாள்.

என்ன ஏது என்றே தெரியாமல் அம்மா பார்க்கிறாள் என்பதற்காகவே கன்னம் குழிய சிரித்தாள் குழந்தை…..

2 வார மருத்துவ மேற்பார்வைக்கு பிறகு, சாந்தி மாலதி இருவமே தத்தம் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆப்ரேஷன் மூலமாக குழந்தை பெற்றதால் 30 நாள் கழித்து புண்யாகவாசனமும், பெயர்சூட்டு விழாவும் நடத்த 2 வீட்டிலும் முடிவு செய்யப்பட்டது.

அடுத்த வாரம் எங்க குழந்தைகளுக்கு பேர் வைக்கிறோம்ங்க. தவறாம நீங்க எல்லாரும் கலந்துக்கனும் னு சாந்தி-துறை தம்பதியும், மாலதி-ராஜேஷ் தம்பதியும் நமக்கு அழைப்பு அனுப்பிற்காங்க மக்களே. அதனால தவறாம வந்துருங்க….

பூக்கும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here