பன்னீர் பூக்கள் 5

0
314

அந்த முழநீள ஸ்பீக்கரில் மங்கள இசையாக நாமகிரிபேட்டை கிருஷ்ணன் அவர்களின் நாதஸ்வரமும், வலையப்பட்டி ஏ.ஆர். சுப்ரமணியன் அவர்களின் தவிலும் இசைக்கப்பட்டு மாலதி ராஜேஷ் வீடு கல்யாண கோலம் பூண்டது.. அவர்கள் வீட்டு தெரு முழுக்க மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டது. வின்மீனை கொண்டுவந்து கட்டிவைத்தார் போல வண்ண வண்ண விளக்குகள் மின்மினியாய் கண் சிமிட்டியது. வாசல் அடைத்து வாழைமரம், தென்னங்குலை, பாக்கு என கட்டி அலங்கரித்தனர். வீடு முழுக்க சந்தனமும் சாம்பிராணியும் கமகமத்தது. காலையிலேயே மாலதிக்கும், குழந்தைக்கும் நலங்கும் எண்ணெயும் வைத்து குளிக்கவைத்து, பட்டாடைகள் உடுத்து தயாராகினர்.

ராஜேஷ் தன் மனைவிக்கும் மகளுக்கும் ஒன்றாக இளம் கனகாம்பர நிறத்தில், ஆங்காங்கே ரோஜாக்கள் மலர்ந்து சிரிக்க, கிளிப்பச்சை நிற பார்டர் வைத்த லேசான மைசூர் பட்டு வாங்கியிருந்தார்.

தளர பின்னிய கூந்தல், அதில் காதோர ஒற்றை ரோஜாவோடு மயக்கும் மல்லிகை சரம் சூடி, அளவான நகையோடு மிதமான ஒப்பனையில் கூடவே தாய்மையின் பூரிப்பு தந்த ப்ரத்யேக அழகும் சேர்த்து தேவதையாய் நின்ற மனைவியை காண காண தெவிட்டவில்லை ராஜேஷுக்கு.

மகளோ, குட்டி பாவாடை சட்டையில், கருவண்டு கண்களில் மை தீட்டி, கழுத்திலும் கையிலும் பால்மணி மினுமினுங்க, கால்களில் தண்டையும், கொலுசும் சிலுசிலுங்க என்னை விட்டு பார்வையை திருப்பித்தான் பாரேன் என்று சவால்விட்டாள்.

ராஜேஷும் இவர்களுக்கு இணையான அழகும், குறைவில்லாமல் பொங்கும் தந்தையென்ற பெருமிதம் அந்த அழகோடு கம்பீரத்தையும் சேர்த்து தர கண்ணிறைய கண்டு மயங்கித்தான் போனாள் மாலதி.

ராஜேஷ், அவரின் கையணைப்பில் மாலதி, மாலதியின் கைகளில் அவர்களின் குட்டி இளவரசி என மூவரும் படியிறங்கி வருவதை கண்டு அகமகிழ்ந்தார் மரகதத்தம்மா. அவர்கள் வீட்டு வழக்கப்படி முதல் நாள் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து பூஜைகள் முடித்தனர். வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்கள் மற்றும் புடவையும் ரவிக்கைத் துண்டும் கொடுத்து ஆசி பெற்று, ப்ராமணர்களை வரவழைத்து வேத மந்திரங்கள் முழங்க, முறையான பூஜைகள் செய்து, வெள்ளித்தட்டில் நிறைத்த புதுநெல்லில், ராஜேஷ் மும்முறை தம்மகளின் பெயரை மோதிரவிரலால் எழுதி மகளின் காதுகளிலும் ஓதினார்.

சசிரேகா… சசிரேகா…… சசிரேகா…. என்று.

கல்யாணமான புதிதிலேயே இருவரும் சேர்ந்து தனக்கு பிறக்க போகும் பிள்ளைக்கு பெயர் தெரிவு செய்துவைத்திருந்தனர்.

ஆண் பிள்ளை என்றால் சசிதரன் என்றும் பெண் பிள்ளை என்றால் ரேகாஸ்ரீ என்றும் பெயர் வைக்கவேண்டும் என்று பேசி வைத்திருந்தனர். இப்போது பிறந்தது பெண் குழந்தை மற்றும் இதற்குமேல் இன்னொரு குழந்தைக்கு வழியும் இல்லை என்று ஆனதால் இரண்டு பெயரையும் சேர்த்து சசிரேகா என்று பெயர் வைத்தனர்.

குழந்தை மிக மிக அழகாக மலையோர மழைச்சாரலில் நனைந்த புது மலர் போல, மென்பட்டு போல இருந்தாள். பிறை நிலா போல நெற்றி, இளம் மெரூன் நிற கண்கள், இளங்காற்று தீண்டினாலும் சிவந்து போகும் அழகிய கன்னம், அடர்ந்த சிகை, என்று தேவதையின் பிரதியாகவே தெரிந்தாள்.

சந்தன நிறம் அவள் அழகுக்கு கூடுதல் சிறப்பென்றால், குழைய சிரிக்கும் போது நம்மை வழுக்கி விழ வைக்கும் அவள் கன்னக்குழி தனிச்சிறப்பு. துரு துரு கண்களால் அத்தனைப்பேரையும் ஆட்டி வைத்தால் அந்த குட்டி குலுமணாலி. குல வாரிசாக ஆண் பிள்ளை பிறக்கவில்லையே என்று மனம் சுணங்கிய மரகதத்தம்மா கூட தன் பேத்தி அழகை ஊரு முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டு திரிந்தார்.

விழாவுக்கு வந்தவர்கள் வயிறு நிறையும் வண்ணம் அறுசுவை விருந்து கொடுத்து, அனைவருக்கும் தாம்பூலத்தில் சிறு நினைவு பரிசும் வைத்து கொடுத்த தம்பதிகள், தங்கள் மனம் நிறைய அருகில் இருந்த முதியோர் இல்லம், கைவிடப்பட்ட, மாற்றுதிறனாளிகள் மற்றும் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் காப்பகங்களுக்கும் உணவும், புத்துடைகளும் தந்து மகிழ்ந்தனர்.

பல காலம் மக்கள்பேறு இல்லாமலிருந்து, அந்த குறை தீர்ந்த மகிழ்ச்சியை தம்பதிகள் இப்படி கொண்டாட, அதை பார்த்து மகிழ்ந்தவர்களும் உண்டு, புகைந்தவர்களும் உண்டு.

எனவே சந்தியா வேளையில் மூவரையும் அமர வைத்து மரகதத்தம்மா பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை என்று சுற்றி திருஷ்டி கழித்தார்.

இங்கே சாந்தி துறை தம்பதியின் சீமந்த புத்ரிக்கும் பெயர்சூட்டு விழா நடந்தது. வீட்டோடு மிக நெருங்கிய சாரதாவின் சொந்தங்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பட்டு, மிக கவனமாக சாந்தியின் சொந்தங்கள் மட்டுமல்ல அக்கம்பக்க, அண்டை அயலார் கூட தவிர்க்கப்பட்டு நடந்தது. உபயம் உயர் திரு சாரதாதேவி அவர்கள் தான் வேற யாரு?

கொழு கொழு கொழுக்கட்டையாக பால் போன்ற நிறத்தில், ஜொலிக்கும் கண்களோடு பார்ப்பவரை வசீகரித்தாள் குழந்தை. குண்டு குண்டு கன்னங்கள், ரோஜா நிறமென்று அழகு குவியலாக இருந்தாள். துறைக்கு அகம் கொள்ளாத ஆனந்தம். தன் அழகு தேவதைக்கு ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, சைக்காலஜி, பையாலஜி, ஆர்.ஜே.பாலாஜி என்று என்னவெல்லாமோ பார்த்து தேடி தேடி ஆராதனா என்ற பெயர் தேர்ந்தெடுத்தார்.

சாந்தியின் தாய் வீட்டு மக்களை வேண்டுமென்ற தவிர்த்த போதும், அவர்கள் வாராதமைக்கு ஆயிரம் குறைகள் சொல்லி சொல்லி சாந்தியை நோகடித்தார் சாரதா.

அவர்கள் வீட்டு வழக்கப்படி காலையில் புண்யாகவாசனம் செய்து பெயர் வைத்து, மாலை வேளையில் தொட்டிலில் இட்டு அந்த பெயரை மறுபடி குழந்தையின் காதில் ஓதி ஊராருக்கு அறிவித்தனர்.

( அழைப்பை ஏற்று பெயர் சூட்டு விழாக்கு வந்ததுக்கு மனமார்ந்த நன்றியை இரண்டு தம்பதிகளும் தெரிவிச்சிகிறாங்களாம் மக்களே. நானும் என் நன்றியை சொல்லிக்கிறேன்)

தொட்டில் போடும் வேளை, குழந்தைக்கு அத்தை காப்பு போட வேண்டுமெ என்று வந்த சொந்தகாரிகளில் ஒருவள் பற்ற வைத்தாள். அவ்வளவு தான். உற்றாரும், மற்றவரும் நிறைந்த சபையென்று கூட பாராது, சாந்தி உண்டான போது பேசிய அதே குத்தல் பேச்சுக்களை ஆரம்பித்து விட்டார் சாரதா.

“அத்தகாப்பு எப்ப போடுவா, அத்த வளந்து, கல்யாணம் பண்ணி குடுத்த பின்ன அவ, அவளோட குடும்பத்தோட வந்து காப்பு போட்டு சீன் பண்ணுவா. இங்க தான் ஊருக்கு மின்ன கல்யாணத்த பண்ணி, எங்க எங்க னு பரந்துகிண்டு பெத்துண்டாச்சே.

அதொட கொழந்தையொட அத்த சின்ன பொண்ணு. அதனால நாங்க தான் அதயும் போடனும். இல்லாத வீட்டுல பொண்ணெடுத்தா இதான் கதி”

என்று சொல்லி சாந்தி வாங்கி வைத்த காப்பும் கொலுசையும் தான் செய்ததாக அணிவித்துவிட்டு சுடும் தணலை வாரியிறைத்தாள் சாரதா மனசாட்சியற்று.

தன் பிள்ளைக்கான முதல் விசேஷத்தில் கண்ணிர் சிந்திவிட கூடாது என்று முடிந்தவரை தன்னை கட்டுபடுத்திக்கொண்டால் சாந்தி.
அது இன்னும் சாரதாவை உசுப்ப சாட்டையாய் தன் நாவை சுழட்டி சாந்தி கண்ணில் ஒரு துளி கண்ட பின்பே ஓய்ந்தாள்.

அடுத்தகட்ட சோதனையாக பிரசவம் முடிந்து சாந்தி போனது தன் மாமியார் வீட்டுக்கே.

கர்பகாலத்தில் அக்கம் பக்கத்தாரோடு சமாளித்தது போலவே சமாளித்துக் கொள்ளலாமென்று நினைத்திருந்த சாந்திக்கு துறை தன்னையும் பிள்ளையையும் மட்டும் அங்கே தங்க வைக்கப்போகும் திட்டம் அறிந்து திண்டாடிப் போனால்.

“அம்மா, உனக்கு ஆப்ரேஷன் பண்ணிர்கறதால,கொழந்தைய கவனிச்சிக்க கஷ்ட படுவ னு இங்கயே இருக்க சொன்னா” என்று தன் அன்னை உருவேற்றிவிட்டதை சாந்தியிடம் கக்கிவிட்டு போக, செய்வதொன்றும் இல்லாத தன் கையறு நிலையை நொந்து கொண்டால் சாந்தி.

(ஆடு நனையிதே னு ஓநாய் வருத்தபட்ட கதை தான்)

தான் பெண்ணாக பிறந்து துன்பபடும் தன்னை போலவே கஷ்டப்படக் கூடும் என்றே பெண் குழந்தை வேண்டாம் என்று நினைத்த சாந்திக்கு கைக்கு வந்துவிட்ட பிள்ளையாய் உதாசீன படுத்த முடியவில்லை. ஆனால் மனதின் ஓரத்தில் விழுந்த சிறுமுள் மட்டும் அப்படியே தான் இருந்தது. அதை யாருமே அறியாது போனது ஏன் சாந்தியுமே அறியாது போனது தான் விதியின் சதி.

நன்மை என்று எண்ணி செய்யும் செயல்களில் சிறு சறுக்கல் வரும்போது ஏற்படும் தடுமாற்றம் நம்மை பாதிப்பதோடு யாருக்கு நன்மை நினைத்தோமோ அவர்களுக்கும் சேர்த்து இன்னலை உண்டாக்கும் என்பதை நாம் மறக்கிறோம்.

அதுபோலொரு தவறு தான் சாந்தி செய்ததும். தன்னை பிடிக்காத தன் மாமியாருக்கு, தான் உண்டானதே பிடிக்காத மாமியாருக்கு எங்கே தன் பிள்ளை தன்னை போல பிறந்துவிட்டால் அதையும் ஏற்க மறுப்பார்களோ என்று குழந்தை தன் கணவன் குடும்பத்தார் போலவே பிறக்க வேண்டும் என்று கரு உண்டான நாள்முதல் வேண்டத் தொடங்கினாள். அவள் வேண்டல் வீணாகாது வழங்கப்பட்ட போது பேதை அதை வெறுத்தாள். இதுவும் விதியின் சதி தானோ????

கருவுற்ற பெண்கள் நல்லவைகளை பார்க்க, கேட்க, பழக, நினைக்க வேண்டும் என்று சொல்வதன் பொருள் இதுதான். தன்னை சுமக்கும் அன்னையின் மனநிலை உடல்நிலை எல்லாமே குழந்தையை உருவாக்கும் காரணிகளாக அமையும்.

தாயின் மனோநிலையில் 50% பிள்ளையின் அடிப்படை குணத்தின் அடித்தளமாக அமைகிறது. ஒரு குழந்தை முரடாக இருப்பது, கோபப்படுவது, சுயநலமாக இருப்பது, சோம்பேறியாகவோ உழைப்பாளியாக சுறுசுறுப்பாகவோ இருப்பது போன்ற சில குணநலன்களும், தன்னம்பிக்கை, தைரியம், நிதானம், தெளிவு, கூச்சம், பயம், பொறாமை, வஞ்சம் போன்ற மனநலன்களும் தாயின் கருவறையில் குழந்தை இருக்கும் காலத்தில் தாயின் செயல்பாடுகளில் இருந்து புகுத்தப்படுகிறது.

ஒரு குழந்தையின் அடிப்படை குணம் தாயின் கருவறையிலேயே முடிவு செய்ய படுகிறது. அது குரங்கு கைப் பூமாலையாவதோ அன்றி குயவன் கை கலையாவதோ கரு சுமக்கும் தாய்மார்களின் கையிலும், அவர்களின் குடும்பத்தார் கையிலும் தான் இருக்கிறது.

அதற்காக தான் கர்பிணிகள் சரியான சத்தான உணவு உண்ணவேண்டும், சந்தோஷமான மனநிலையில் இருக்க வேண்டும். ஸ்லோகங்கள் சொல்வது, நல்ல இனிமையான பாடல்கள் கேட்பது, நல்ல புத்தகங்கள் படிப்பது, யோகா, நடைப்பயிற்சி செய்வது இவையெல்லாம் அத்தியாவசியம் ஆகிறது.

கிராமபறங்களில் உள்ளவர்களுக்கு மாடு, மனை பேணுதலில் உடல் அசதி ஏற்பட்டு நல்ல பசியும், ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கும். நகர்புற பெண்கள், எளிய உடற்பயிற்சி, யோகா, நடைபழகுதல் செய்ய வேண்டும்.

நான்காம் மாதத்திலிருந்து கருவில் உள்ள குழந்தை தன்னை சுற்றி நடப்பவற்றையும், தன் அன்னையின் குரல், சிரிப்பு, பேச்சு என அனைத்தையும் கவனிக்க தொடங்குகிறது.

அதற்காக தான் கர்பிணிகள் உள்ள வீட்டில் அல்லது கர்பிணிகளிடம் சண்டை சச்சரவுகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்த படுகிறது.

அவர்களின் மனநலன் காத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத்தான்,
நான்காம் மாதம் விளக்கெண்ணெய் தருதல்,
ஐந்தாம் மாதம் மசக்கை கருப்பு சாத்துதல்,
ஏழாம் மாதம் வளையடுக்குதல், எட்டு அல்லது ஒன்பதாம் மாதம் சீமந்தம் என சொந்தங்களை கூட்டி கொண்டாடுகிறோம்.

தன்னை பிடித்தவர், தனக்கு பிடித்தவர், நண்பர்கள் என கலந்து சிரித்து பேசி மகிழ வைக்கவே முக்கியமாக இவ்விழாக்கள்.

அதுபோக எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் நாம் ஆதரவு தேடுவது நம் அன்னையிடமே. அதுபோல அன்னையின் அரவனைப்பில் பிரசவகால அச்சமின்றி இருக்கவேண்டும் என்று தான் பிரசவத்திற்கு தாய்வீடு அனுப்புவதும்.

இவ்வாறு எல்லாம் சரியாக அமைந்து நல்ல சூழ்நிலையில் பிறந்த சசியின் குணம் சாந்தமாக, நல்ல தெளிவுடன் பக்குவத்துடன் இருந்தது. பிறர் நலம் வேண்டல், விட்டக்கொடுத்தல் என உயரிய குணநலன்கள் வாய்க்கப்பெற்று பெற்றவர்களை மகிழ்வித்தாள்.

இதற்கு நேநேர்மாறாக எதிர்மறை எண்ணங்கள் சூழ வெறுப்புக்கும் ஆற்றாமைக்கும் இடையிலும், சிறு அளவெனினும் அலட்சியத்துக்கு இடையில் பிறந்த ஆரா கொஞ்சம் பிடிவாதமும், கோபமும் கலந்தவளாக சிறிது முரட்டு குழந்தையாகவே இருந்தாள்.

எதையும் தனக்குமட்டுமே சொந்தம் என்ற குறுகிய மனப்பான்மையோடும் இருந்தாள்.

சின்னஞ்சிறு வயதில் அது பெரிதாக தெரியாத போதும். பள்ளிபருவ காலம் வந்த போது ஆராவின் இக்குணங்களால் ஆரா தன் மாமியாரின் பிரதியாக தெரிந்தாள் சாந்தியின் கண்களுக்கு. அதுவே பின்னாளில் பல சோதனைகளுக்கு வித்திட்டது.

எனினும் எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்ற போது விதி, எதிர் எதிர் குணங்கள் கொண்ட சசிரேகாவிற்கும் ஆராதனாவிற்கும் பொருந்துமா???

பொருத்திருந்து பார்ப்போம்…

பூக்கும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here