பூக்கள் 2

0
189

அன்று

மாலு மா…. மாலு மா……என்று தேடிக்கொண்டு வந்த ராஜேஷ் மேடிட்ட வயிற்றோடு மணிரதமாய் தயங்கி தயங்கி தளர் நடை நடந்து வரும் தன் மனைவியை ஆசை தீர பார்த்தார்.

எந்த ஒரு ஆணுக்கும் தன்னை ஒர் முழு ஆண்மகனாக உணரச்செய்வது அல்லவா தான் தந்தையாக போகும் தருணம். ராஜேஷ் அந்த பூரிப்பின் விளிம்பில் இருந்தார். தனக்கு அந்த தகுதியை தரவிருக்கும் தன் மனைவியை இப்போது தான் அதிகமாக காதலிக்க தோன்றியது அவருக்கு. நாளுக்கு நாள் தன்னவளின் அழகு கூடுவது போல உணர்ந்தார்.

புன்னகை மாறாத முகத்தோடு அவர் அருகில் வந்த மாலதி

“என்னங்க புதுசா பாக்குற மாதிரி பாக்கறீங்க”..

“டெய்லி நீ எனக்கு புது அழகா தெரிற டீ”
என்று நெஞ்சு நெகிழ காதலோடு அவள் கன்னத்தை ஆசையாக தடவி அவர் கொஞ்ச மாலதிக்கு வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

ச்சு… சும்மா இருங்க… உங்களுக்கு வெவஸ்தையே கிடையாது. சுத்தி முத்தி ஆளுங்க இருப்பாங்களே தோணுதா.. என்று செல்லக் கோபம் காட்டினாள் வெட்கப்பட்டுக்கொண்டே…..

அந்த வெட்கமும் மாலதிக்கு தனி அழகை தர இரண்டு கைகளாலும் அவள் முகம் வழித்து த்ருஷ்டி கழித்தவரை பார்த்து கலகலவென சிரித்தாள் மாலதி.

நேர் மாறாக சாந்தி வீட்டில் சாரதா அவளை கர்ப்பவதி என்றும் பாராமல் படுத்தி எடுத்தாள். தன் வீட்டு வேலை மட்டுமல்லாது தோட்டத்து வேலையும் பார்க்க வைத்தாள். மசக்கை ஒருபுறமும் மாமியாரின் கொடுமை ஒருபுறமென அல்லாடிய அந்த பாவைக்கு ஆறுதலாக சாய கணவனின் தோள்களும் கிடைக்கவில்லை..

கணவனின் அன்பு மட்டும் இல்லை, தாய் வீட்டின் வாசனை கூட இல்லாத செய்துவைத்த புண்ணியமும் சாரதாவுக்கே..

திருமணம் பேசும்போதெல்லாம் தன் குணத்தை காட்டாத சாரதா முடிந்ததும் அவரின் இன்னொரு முகத்தை காட்ட தொடங்கினர் .. அதற்கு காரணம் கணவர் தன் மூத்த மகனுக்கு திருமணம் முடியும் முன் இரண்டாமவனுக்கு திருமணம் என்று முடிவெடுத்ததும், மணமகளாய் சாந்தியை தேர்ந்தெடுத்ததும்.

சாரதாவுக்கு ஆண் மூன்றும் பெண் ஒன்றுமாய் நான்கு குழந்தைகள். ஆனால், தன் மூத்தமகனையும் மகளையும் மட்டுமே தன் பிள்ளைகள் போல பாவிப்பாள். அந்த இருவருக்குள்ளும் கூட மகள் இரண்டாம்பட்சம் தான். பாசம் என்ற ஒன்றெல்லாம் சாரதாவின் அகராதி விழுங்கி ஏப்பம் விட்ட அத்தியாயங்கள். தன் தலைபிள்ளையை கூட தருதலையாய் வளர்த்து, தன் கைபொம்மையாக தான் வைத்திருந்தாள்.

இருந்தும் அவனுக்கு முன் இரண்டாமவனுக்கு திருமணமென்பதை எப்படி ஏற்பாள். கோபாலுக்கும் வேறு வழியிருக்கவில்லை. சாந்திக்கு வரன் தேட தொடங்கியிருந்தனர் அவள் பெற்றோர். அன்பு, பண்பு, அடக்கம், பக்தி, நேர்மை என்ற நற்குணங்கள் கொண்ட குணவதியான சாந்தி தன் வீட்டு மருமகளானால் தன் வீடு சுபீக்ஷமாக இருக்குமென்ற ஆசை அவருக்கு. மூத்த பிள்ளைக்கு கட்ட இஷ்டமில்லை. முன்றாமவன் கல்யாணத்திற்கே தகுதியில்லை. அவரை பொருத்தவரை குணத்தில் நான்கில் கொஞ்சம் கூடுதல் மதிப்பெண் பெருவது தன் இரண்டாவது மகன் மட்டும் தான். தன் மாமனாரின் மேற்பார்வையில் வளர்ந்து, அவரிடமே தொழில் கற்றவன் என்பதால் அந்த எண்ணம். முத்தவனுக்கு மணமுடித்த பின் பெண் கேட்க இப்போது நேரமில்லை. எனவே தன் நல்ல சிநேகிதரின் மகளை, நல்ல குணநலன்கள் உள்ள குலமகளை விட்டு கொடுக்க மனமில்லாமல் தன் இரண்டாவது மகனுக்கு தர துணிந்து கேட்டு விட்டார் தன் வீட்டில் ஆலோசிக்காமலேயே.

சாரதாவின் குணம் ஊரறிந்த ரகசியம் தான். இருந்த போதும் துறையின் மரியாதையான நடத்தையையும், குணத்தையும், கோபாலுடனான நட்பையும் மதித்து சாந்தியின் தந்தையும் இத்திருமணத்தை ஆமோதித்தார். அவரும் செய்த தவறு தன் மனைவிக்கு இதில் சம்மதமாயென ஆலோசிக்காதது.

இரு வீட்டு ஆண்களின் தன்னிச்சையான முடிவில் சிக்கி சிறகொடிந்து போனது என்னவோ சாந்தி மட்டுமே….

விஷயம் தெரிந்து வீட்டை இரண்டல்ல நூறாக்கினாள் சாரதா. உக்ரகாளியாய் கோபாலை கீழே போட்டு நெஞ்சிலேறி நர்த்தனம் ஆடும் அளவுக்கு கோபம்.

இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். யார கேட்டு உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்றிங்க. என் புள்ளய அம்போனு விட்டுட்டு உங்க இஷ்டத்துக்கு கல்யாணம் முடிவு பண்றிங்களா… என்று வீடே அதிர ஆங்காரமாய் கத்தத் தொடங்கினார்.

துறைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை போனது. துறைக்கும் சாந்தியை பிடிக்கும் அதனால், எதிர்பாராமல் கைக்கு வருவது தாயால் தட்டிபோகுமோ என்ற பயம் வர

“இங்க பாரும்மா, அம்மாங்கற மரியாதைக்கு தான் உன்கிட்ட கெஞ்சிகிட்றுக்கோம், எனக்கு அவள புடிச்சிருக்கு. நீ ஒத்துகிட்டா சரி இல்லை அவள தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிக்க கூட நான் தயார்”

என்ற ஒரு குண்டை அசராமல் போட அதிர்ந்து போனது சாரதா மட்டுமில்லை கோபாலும் தான்.

சாந்தி அண்ணனின் முரட்டு உருவத்தில் சாரதாவுக்கு கொஞ்சம் பயமுண்டு. அது நன்றாக வேலை செய்ய மேற்கொண்டு விவாதங்கள் இல்லாமல் சம்மதித்துவிட்டார். ஆனால் சம்பந்தமில்லாமல் சாந்தி மீது வஞ்சமும் கொண்டது அவர் நெஞ்சம். புகுந்த வீடு வரும் முன்னேயே மாமியாருக்கு எதிரியாகி போனால் சாந்தி அவளறியாமலேயே.

வீட்டுக்கு வரும் மருமகளை எந்தெந்த வகையிலெல்லாம் வதைக்கலாமென்று தாயும் மகளும் திட்டமிட்டனர். ஆம், தாயும் மகளும் தான். அண்ணியாக போகும் அவளின் அழகில் அதீத பொறாமை கொண்டிருந்தாள் ராதா.( சாரதாவின் மகள்). ராதாவும் நல்ல நிறம் தான். ஆனால் சாந்திபோல பாந்தமான குடும்ப பாங்கான அழகில்லை. இருவரும் ஒன்றாய் தெருவில் போனால், சாந்தியை பார்க்கும் பார்வையில் மரியாதையும் ராதாவை பார்க்கும் பார்வையில் மயக்கமும் தெரிவதை அவளால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை.
(அதுக்கு நீ ஒழுங்கா இருக்கனும் பேபி)

ஏதாவது செய்து அவளை மட்டம்தட்ட காத்திருந்த ராதாவுக்கு அவளே தன் அண்ணியாக வருவது வசதிதான் என்று நினைக்கவைத்தது. “உன்ன எப்டிலாம் வச்சி செய்றேன் பாருடி” என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டாள்.

பல பல கலேபரங்களுக்கு இடையில் கல்யாணமும் நல்லபடியாக முடிந்தது. கல்யாணத்தில் கிடைத்த தருணங்கள் அல்லாது அவளே தருணங்களை உருவாக்கி சம்மந்தி அந்தஸ்தையும் கெடுபிடியையும் நிலைநாட்டிக்கொண்டாள் சாரதா.

திருமணம் முடிந்து புகுந்தவீடு வந்த கையோடு சாந்திக்கு தாய் வீட்டுக்கு போவது மட்டும் இல்லை தாய்வீட்டு உறவுகளோடு தொலைபேசியில் பேசுவதற்கு கூட தடா விதிக்கப் பட்டது.. யாரோட, என்ன விஷயமா, எதற்கு, என்ற விவரங்கள் சொல்லாமல் சாந்தியால் யாருக்கும் தொலைபேசியில் அழைக்க முடியாது. அப்படி அரிதாக பேச வாய்ப்புக்கிடைத்த வேளைகளிலெல்லாம் மனம்விட்டு பேச வழியில்லாது அருகிலோ, சுற்றிக்கொண்டோ யாரேனும் இருந்தனர். அதோடு 2 நிமிடங்களுக்கு மேல் பேச கூடாது, யாரோடு என்ன பேசப்பட்டது என்பதை விரிவாக சொல்லவேண்டும் போன்ற கண்டீசன்கள் வேறு…. தன் மனதின் புழுக்கங்கள் எதையும் யாரோடும் பகிரமுடியாது தனக்குள்ளேயே உழன்றாள்.

ஒவ்வொரு சடங்கிலும் தன் இஷ்டம்போல பெண்வீட்டாரை புரட்டியெடுத்தாள் சாரதா. கல்யாணத்தில் தனக்கு சரியான மரியாதை தரவில்லை என்று மறுவீடு அழைக்க வந்த சாந்தியின் அம்மாவிடம் சாரதா பாய, பிடிக்காத சம்பந்தம் என்றாலும் மகளுக்காக பார்த்து பார்த்து செய்தும், குறை சொல்வதாக சாந்தியின் அம்மா காய, சம்பந்தி சண்டை முற்றி போனது. பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் சாந்தி இருதலை கொள்ளி எரும்பானாள். இவையனைத்திற்கும் காரணமாக இருந்தவரோ ஆபத்து காலத்தில் மண்ணுக்குள் தன் தலையை புதைத்து கொள்ளும் நெருப்புக் கோழியாய் ஹிந்து பேப்பரில் தன் தலையை புதைத்துக்கொண்டாள். (இத நீ முன்னாலேயே பட்டிருந்தால் சாந்தி தப்பிச்சிருப்பா யா)

கல்யாண கூத்தில் ஆண்டான் அடிமையாக தான் பெண்வீட்டாரும் பிள்ளைவீட்டாரும் இருக்கிறார்கள். பிள்ளையை பெற்றவன் தன்னை ஆண்டானாகத்தான் பறைசாற்றப் பார்க்கிறான். பெண்ணை பெற்றவர்கள் அடிபணிந்து போனாலும் சரி, ஆர்பாட்டம் செய்தாலும் சரி கடைசியில் ஆனாதரவாவது என்னவோ தாலிவாங்கி வந்தவள் தான்.

சாந்தியின் நிலையும் அதுவே ஆனது.
உடல் உபாதைகளோடு மன போராட்டங்களாலும் சோர்ந்து போன சாந்திக்கு சாரதா மூலமே விடிவும் வந்தது.

பழி வாங்குவதாக நினைத்து சாரதா சாந்தியையும் துறையையும் தன் வீட்டுக்கு வரவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..

புள்ளதாச்சி பொண்ணு, வந்து போய்னு அலஞ்சா ஒடம்பு என்னாவறது என்று அக்கறை போல காட்டி தள்ளி நிறுத்தினாள்.

சாந்தியை திருமணம் செய்ய அம்மாவை எதிர்த்து பேசிய துறைக்கு, அம்மா வீடு கூட அவளுக்கு சௌஜன்யமா இல்ல. தனியா கஷ்டபடமாட்டாளா? நீ தானே மா பாத்துக்கனும் என்று கேட்க தோன்றாததை என்ன சொல்ல. எல்லா ஆண்களின் அதே சுயநல போக்கு. தன் தலை உருளாதவரை சந்தோஷமென்ற ஒதுக்கம், பொறுப்பற்ற தன்மை அவ்வளவு தான்.

தனியாக சாந்தி கஷ்டப்படவேண்டும் என்று செய்தது தான் இருப்பினும் சாந்திக்கு அது விடுதலையாகவே அமைந்தது..

அக்கம் பக்கத்துக்கு வீடுகளின் உதவியோடு சாந்தி தன்வயிற்றில் உள்ள பிள்ளை நன்கு வளர தேவையான கை வைத்தியங்கள் மற்றும் டாக்டர் தரும் மாத்திரைகளையும் சாப்பிட்டுக்கொண்டு
தன் பிள்ளையை எதிர்நோக்கி காத்திருந்தாள்..

ஆனால் மாதா மாதம் செக் அப்களுக்கு துணைக்கு ஆள் இல்லாதது தான் வருத்தமாக இருந்தது. எதிலும் நன்மையை தேடும் சாந்திக்கு அக்கம் பக்கத்தாரின் தொடர்ந்த போதனையில் இந்த பிள்ளை உருவான காலம் சரியில்லையென்றும், அது முதல் தான் மிகவும் கஷ்ட படுவதாகவும் தோன்றியது. பாசத்திலும் கவனிப்பில் குறை இல்லாத போதும் சாந்தியின் விருப்போடு சேர்த்து வெறுப்பையும் சம்பாதித்து கொண்டு தான் இருந்தது அந்த சிசு.

ஐந்தாம் மாதம் விளக்கெண்ணெய், ஏழாம் மாதம் வளைகாப்பு என சீரும் சிறப்புமாக நடத்தி ஒன்பதாம் மாதம் சீமந்தத்திற்கு நாள் குறிக்கப்பட்டது மாலதிக்கு. வீடே கோலாகலமாக திருவிழாவாக ஜொலித்தது. ஊருக்கே விருந்து வைத்து, தொழிளாலர்களுக்கு புத்தாடை வாங்கிதந்து, குலதெய்வ பூஜைகள் நடத்தி பெரியவர்கள் சுமங்கலிகள் ஆசிர்வதிக்க சீமந்தம் அருமையாக முடிந்தது. கைநிறைய அடுக்கப்பட்ட கண்ணாடி வளையின் ஓசை வீட்டை நிறைத்தது கூடவே எல்லார் நெஞ்சங்களையும்.

ஆனால் சாந்திக்கு இது எதுவும் பார்த்து செய்ய ஆள் இருக்கவில்லை… அவள் தாய் வீட்டினர் தான் மொத்தமாக ஒதுங்கி கொண்டனரே, சாரதா இதெல்லாம் பார்த்து செய்து விட்டால் பிறகு உலகம் தலைகீழாக சுற்றிவிடாதா…

மனம் இல்லாதவர்க்கு எளிதான ஒரு வழி உண்டு “எங்களுக்கு அதெல்லாம் பழக்கம் இல்ல” என்று சொல்லி ஒதுங்கி கொள்வது. சாரதாவும் அதை தான் செய்தாள்.

ஆனாலும் சாந்தியின் ஏக்கத்தை போக்குவது போல துறை நண்பனின் தங்கைக்கும் சாந்திக்கும் ஒரே நேரம் தான் கரு உண்டானது. அவளை கட்டி கொடுத்திருந்ததும் சாந்தி இருக்கும் அதே ஊரில் தான் என்பதால் அவளின் தாய்வீட்டிலிருந்து வந்து தன் மகளுக்கு வளையடுக்கி சீமந்தம் செய்தவர்கள் மறுநாள் சாந்திக்கும் வளைகாப்பும் சீமந்தமும் செய்து தன்மகளுக்கு செய்தது போலவே சீரும் செய்துவிட்டே போனார்கள்.

சாந்தியின் மனது தன் பெற்றோருக்காகவும் உடன் பிறந்தவனுக்காகவும் ஏங்கி தவித்தது. அதை மனம் விட்டு புலம்பி கொள்ளவோ, ஒரு துளி கண்ணீரில் ஆறுதல் தேடிக்கொள்ளவோ விருப்பமில்லை அவளுக்கு. அதனாலேயே தன் மனக்குறைகளை இறைவனோடு மட்டும் பகிரத்தொடங்கினாள்.

துறை தன் தோளில் தாங்கிருந்தால் தன் குறைகளை சொல்லி ஆறுதல் தேடியிருப்பாளோ என்னவோ. தன் மனைவிக்கும் குடும்பமென்ற ஒன்று உண்டு என்பது மட்டுமில்லை அவளுக்கென்று ஒரு மனமும் அதில் ஆசை, ஏக்கம், விருப்பு வெறுப்பு, சுயகௌரவம், என்ற சாதாரண மனித உணர்வுகள் இருக்குமென்று தோன்றவில்லை.

காதல் கணவனாகவோ, பொறுப்பான புருஷனாகவோ என்ன ஒரு சகமனிதாக கூட அவளது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் நினைப்பு கூட இருக்கவில்லை.

ஆனால், மாலதிக்கு குறை என்று எதுவும் இருக்கவில்லை. அவளை வார்த்தைகளால் கொன்று கிழித்த மாமியார் மரகதம் கூட அவளை தலைமேல் வைத்து தாங்கினார். வேளாவேளைக்கு பார்த்து செய்ய மாமியாரும், குழப்பம், பேறுகால பயம், கவலை என்று எதையும் அண்ட விடாது அன்பு காட்ட கணவனும் உட்காரவைத்து வேலை செய்ய ஆட்களும் என்று சௌகர்யமாகவே இருந்தாள் மாலதி…

கடவுள் யாரையும் சரிசமமாக தானே சோதிப்பார்..

இவர்கள் விஷயத்தில் மட்டும் விதிவிலக்கா வைத்திருப்பார்….

பொருத்திருந்து பார்ப்போம்…..

பூக்கும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here