போதுமடா என் கணவா!

0
198

கதவோரம் எதிர்பார்த்து
காத்திருந்த நாளினிலே
கன்னிகையை களவாட
வந்தவனே எனதழகா

நாற்பதாயிரம் சம்பளமென
என்தந்தை உனைபார்க்க
எதிர்பார்ப்பு இல்லாமல்
எனைதர சம்மதித்தேன்

ஊர்பார்க்க என்கழுத்தில்
கயிறொன்று பூட்டிவிட்டு
உச்சி நெற்றி வகுடுனிலே
சிவப்புபொட்டு வச்சுபுட்ட

தோழிசெய்யும் கிண்டலிலே
முதலிரவு அறை புகுந்தேன்
முத்தத்தில் களவாடி
மொத்தமும் செய்தாயே

யுத்தத்தின் இறுதியிலே
நித்திரையும் மறுத்துவிட
நிஜங்களுடன் உன்னோடு
ஜாமங்கள் நகர்ந்ததடா

கோடிகனவு கண்டுகொண்டு
கூடிவாழ வந்தேனே
மறுபொழுது விடியலிலே
மருகிநிற்றேன் சொல்லாலே

குளித்த தலை காயவில்லை
சோற்றுபானையும் கொதிக்கவில்லை
கண்ணீர் பொங்கும் செய்தியொன்றை
காலையிலே சொல்லிபுட்ட

நாடிவந்த உறவைவிட்டு
நாடு தாண்டி போறேன்னு
நாலு நாள்கூட இல்லாம
பணத்தை தேடி ஓடுறியே

பெரிய வீடொன்னு வேண்டுமடி
ரெண்டுகார் அதில் நிக்கனுமே
மஞ்சகயிறு கழுத்துல தான்
தங்கம் நிரம்பி வழியனுமே

பத்து ஏக்கர் வயக்காடும்
பசுமாடு பண்ணையுமே
கோடி பணம் வேண்டுமடி
நீயும் நானும் வாழ்ந்திடவே

எந்தந்தை கடன்காரன்
நான் வந்து பிறக்கயிலே
நம்புள்ள பணக்காரன்
அவன் வயிற்றில் வரும்போது

வெள்ளிக்கிண்ணம் நெய்சோறு
அள்ளிதர வேணுமடி
என்றுசொல்லி புறப்படுற
விழிநீரை தான் துடைத்து

தாலி பிரிச்சு கட்டும்நாளில்
என்னை பிரிஞ்சு போறவரே
தனியாக என்ன செய்வேன்
என்றெண்ணம் வரவில்லையா?

புத்தியுள்ள மருமகன்னு
பெத்தவனும் நெகிழ்ந்திருக்க
மொத்தம் சொந்தம் அனுப்பியதே
எந்தன் மனம் அறியாமல்

செங்காட்டு பூமியிலே
ஒத்தயாக நிக்கறனே
உன்நெனப்பில் உயிர்வாழ
சத்தமின்றி அழதேனே

காதகிழிக்கும் சத்தமொன்று
காதோரம் வந்து செல்ல
ஓடிவந்து பாக்கறனே
மேல் போகும் விமானத்தை

நினைக்காத இரவுமில்லை
அழுகாத விழிகளில்லை
தலையணையே உணருமடா
தவிக்கின்ற என் மனதை

முகம் பார்க்க ஏங்கிடவே
சில நிமிடம் பேச்சுகளே
சொல்போனே நம் உணர்வை
சிறிதுநேரம் சொல்லுதடா

கூழோ களியோ போதுமென
பலமுறை சொல்லிவிட்டேன்
பிடிவாதம் பிடித்துக்கொண்டு
இங்கு வர மறுக்கறாயே

வருசம் ரெண்டு போனபின்னே
பாவி இங்கே தவிக்கிறேனே
பணமெல்லாம் சேர்ந்திடுச்சு
நாம சேரும் காலமெப்போ?

தரிசு நிலம் புடிச்சு
மச்சுவீடு கட்டிபுட்டேன்
சொந்தபந்தம் கூடுதடா
காசு பணம் சேரயிலே

காரைவீடு கம்பீரமா
ஊருமெச்ச நிக்குதடா
பொட்டல் காடா என்வயிறும்
பூச்சிவரவும் மறுக்கிறதே

அறுபது நாள் ஆசையில்ல
முப்பது நாள் மோகமுமில்ல
மூனுநாளை நிப்பாட்டி
முன்னூறு நாள் சுமக்கவில்ல

வந்துவிட நான் கெஞ்ச
வயக்காடு வேணுமுனு
விடமா உழைச்சுபுட்டு
மூனு வருசம் இழுத்துப்புட்ட

ஏக்கர் எட்டும் வாங்கியாச்சு
மாடு கன்று வாங்கியாச்சு
உழுது பாத்தி கட்டியாச்சு
நடவு கூடம் நட்டாச்சு

போதுமடா என் கணவா
புள்ளிக்குட்டி பெத்துக்கலாம்
வரும்நாளை சீக்கிரமாய்
சொல்லிவிட நான் கேட்க

வெறும் கழுத்து கைகாலும்
பொன்நகை பூட்டிடனும்
உன்னை நானும் ரசிக்கனுமுனு
வருசம் நாலு இழுத்துபுட்ட

பசுமாடு கன்னு போட்டு
தாய்ப்பாலும் கொடுத்துவிட
என் மார்பும் இறுகிருச்சு
என்னிதயம் நொறுங்கிருச்சு

தங்கத்துல தாலி செயினும்
கழுத்துல தான் மாட்டிகிட்டேன்
ஒட்டியாணம் வாங்க சொல்லி
ஒரு சண்டை போட்டீங்களே

வயித்துமேல நகை போட்டு
என்ன நானும் பண்ணபோறேன்
வயித்துக்குள்ள அலறல் சத்தம்
கேட்கும் காலம் எப்போது?

பெட்டி பணம் வேண்டுமுனு
ரெண்டு வருசம் போயிடுச்சே
கண்ணு ரெண்டும் பூத்திருச்சு
முடி கூட நரைச்சருச்சு

ஊருக்கு வாரேன்னு
சொல்லும் இப்ப வந்திருச்சு
சேத்த சொத்து போதுமுன்னு
ஞானம் கூட வந்திருச்சு.

ஊரை தேடி நீ வரவே
கனத்த மனம் கதறுதடா
பதினோரு வருசம் போயி
உன்னுருவம் தெரியுதடா

கண்டுவிட்ட நொடியினிலே
கண்ணீரும் நிற்கவில்லை
கட்டி தழுவி அழுகின்றேன்
உன் மார்பில் சாய்ந்து கொண்டு

வீட்ட சுத்தி பாக்கறியே
காட்டையும் சுத்தி பாக்கறியே
என்னை சுத்தி பாக்கனுமுனு
உன் நெஞ்சம் விரும்பலையா

தேக அழகு போயிடுச்சு
இளமையும் போயிடுச்சு
வயசும் கூட கூடிருச்சு
நாம இன்னும் கூடலையே

சொத்து நிறை சேர்த்தாச்சு
காசு பணம் சேர்த்தாச்சு
கைக்குழந்தை இல்லையென்று
காலம் முழுதும் அழுகறனே

சிலகாலம் கூடி பார்த்து
சிறுமாற்றம் இல்லையென
மருத்துவம் கேட்குதடா
வறண்டு போன கர்ப்பபையும்

சேர்த்த காசு செலவழிக்க
காட்டுநிலம் தான் விற்க
என் வயிறும் பெருகுதடா
மீறிச்சென்ற வயதினிலே

புள்ளைக்காக சேர்க்கறனு
ஓடி ஓடி சேர்த்த காசு
புள்ளைக்காக செலவழிய
என்னத்த மிச்சம் வச்ச?

காசு பணம் போயிடவே
குட்டி ராசன் வந்தானே
ஊரு பேச்சும் நின்றிடவே
தகுதி கொடுக்க வந்தானே

போதுமடா என் கணவா!

பணம்மீது மோகம் கொண்டு
தவறவிட்ட நாட்களெல்லாம்
இத்தோடு முடியட்டும்
மறுபடியும் வேண்டாமே

நானிங்கு பட்ட துயரம்
நம் குழந்தைக்கு வேண்டாமே
இனியொரு பிரிவுதனை
ஏற்காது என்னிதயம்

போதுமடா என் கணவா!

    - சேதுபதி விசுவநாதன்
Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here