மந்திரமென்ன மங்கையே – 10

0
159

மந்திரம் – 10

துஜாவை ரொம்பவும் பரிதவிக்க விடாமல் அன்று மாலை , அவர்கள் என்ன பேசி முடிக்க போகிறார்கள் ? என்பதை வசியே அவளிடம் உளறி விட்டான் .

அவள் தந்தை சென்றதும் , வீட்டின் அங்கத்தினர் அனைவரும் சத்தமில்லாமல் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு நகர , குதூகலத்தின் உச்சாணி கொம்பில் ஆணவத்தில் ஆடிக்கொண்டிருந்த வசியோ , துஜாவை கைபிடித்து அவர்களது அறைக்கு அழைத்து சென்றான் .

இஷ்டமில்லாமல் தாலி கட்டியதும் இல்லாமல் , கைபிடித்து உரிமையாக அவன் அவளை அழைத்து செல்ல , மனதிற்குள் கறுவிக்கொண்டே அவனோடு சென்றாள் .

எதிர்த்து ஏதும் அவள் பேசவும் இல்லை . இந்த பதரிடம் நாம் ஏன் பேச வேண்டும் ? தேவை இல்லை …அடிமை போல தானே அவன் இஷ்டத்திற்கு நடந்துகொண்டான் .அடிமைகள் எதிர்த்து பேசுமா என்ன ?

அறைக்குள் அவளை அழைத்து சென்றவனுக்கும் அவளது மௌனம் சிறு பயத்தை தந்தது தான் . இருந்தும் கண்டிப்பாக தனது அன்பினால் அவளை தன் வசமாக்கிக்கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு செயல்பட்டான் .

அவளை அங்கே கட்டிலில் அமரச்செய்துவிட்டு , அவளது பெட்டிகளை தனது அலமாரிகளில் வைத்தவன் …ஒர கண்ணால் அவளை பார்க்க , அவளும் அப்போது ஒர கண்ணால் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் .

மகிழ்ச்சி பொங்க “தேனு ” என்று ஆசையாக அவள் அருகே அமர்ந்தவன் , அவளது கையை எடுத்து தனது உள்ளங்கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு …”எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா தேனு , கண்டிப்பா நம்ம வீட்ல ஏத்துக்குவாங்கங்கற நம்பிக்கைல தான் உனக்கு தாலி கட்டுனேன் …நான் நெனச்ச மாறியே உங்க அப்பாகூட நம்ம கல்யாணம் பத்தி பேச சாயந்தரம் வீட்டுக்கு வரசொல்லிட்டாரு ….ஆனா பாரேன் இந்த மாறி பாக்கியம் யாருக்கு கிடைக்கும் …மறுபடி உன் கழுத்துல தாலி கட்ட நா புண்ணியம் பன்னிருக்கணும் ” என்று மனதில் உள்ளதை பேசிவிட ,அவளோ கொதி நிலையில் இருந்தாள் .

நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு வசி ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டு …துர்வாச முனிவர் போல் ஏற்கனவே கடும் கோவத்தில் சுற்றி கொண்டிருந்த துஜாவின் மனசாபத்திற்கு ஆளானான் .

எப்படி சகுந்தலையை துஷ்யந்தன் மறந்துபோவான் என்று அவர் சபித்தாரோ , அதுபோலவே விரைவில் அவனும் அவளை மறந்து அனாதரவாக தவிக்க வேண்டும் என்று சூளுரைத்து கொண்டாள் .

அவளுக்காக தானே , அவன் இப்படி செய்தான் …யாருக்காக அவன் இப்படி எல்லாம் நடந்துக்கொண்டானோ அவர்களேயே மறந்து வாழ்வது எத்தனை கடினம் .

அவன் பேச பேச துஜா மனதிற்குலேயே அவன் பேச்சிற்கெல்லாம் எதிர்வாதம் செய்துகொண்டால் …”நீ ஏன்யா சந்தோசமா இருக்க மாட்ட ?நீ ஆசைப்பட்ட நா உனக்கு கெடச்சுட்டேன் …..ஆனா எனக்கு ?வீட்ல ஏத்துக்குவாங்கனு நம்புன சரி , ஆனா நா ஏத்துப்பேனானு நெனச்சுபார்த்தியா ? நான் எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ …நீ எனக்கு தாலி கட்டிட்ட ….அதும் கொடும் பாதகம் செஞ்சிருப்பேன் போல , இன்னொரு முறை வேற அந்த கண்றாவி நடக்குமா ? சீக்கிரமே இவளை ஏண்டா கல்யாணம் பண்ணோம்னு உன்ன கதற விடறேன் ….நீயா என்ன வெறுக்கும் போது உன்னைவிட்டு விலகாம உன்ன இம்சிக்க தான் போறேன் …நீயும் அத பாக்கத்தான் போற “

அவளது எண்ணம் ஏதும் முகத்தில் பிரதிபலிக்க கூடாதென கவனமாக உணர்ச்சிகளை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டாள் துஜா .

வசி ஏதேதோ பேசினான் . அவள் காதில் தான் எதுவுமே விழவில்லை . பேசிக்கொண்டிருக்கும் போது தீடிரென அவன் “ஏய்ய் தேனு ? உனக்கு எப்படி ?” என்று கேட்டுக்கொண்டே அவன் அவளை உலுக்கவும் , சட்டென சுதாரித்து கொண்டவள் தீர்க்கமாக அவனை பார்த்தாள் .

பின்பு அவன் அவளை பற்றி இருந்த இடத்தை பார்த்தாள் .சிவுசிவுயென உள்ளே பற்றிக்கொள்ள விசுக்கென எழுந்தவள் , வேகமாக சென்று அந்த அறையில் இருந்த சின்ன பழம் வெட்டும் கத்தியை எடுத்து அவன் பற்றி இருந்த இடத்தில் கோடுகோடாக கிழித்துக்கொண்டாள் .

அதிர்ந்து விழித்தவனுக்கு ஒருநிமிடம் ஒன்றும் ஓடவில்லை . ஓடிச்சென்று அவள் கையை தட்டிவிட்டவன் , ரத்தம் சிந்திக்கொண்டிருந்த அவள் கையை ஏந்தவும் , அவன் பிடியை உதறிக்கொண்டவள் , ஒருவிரல் நீட்டி அவனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு குளியல் அறைக்குள் புகுந்துகொண்டாள் .

வசீக்கு புரிந்துவிட்டது ..தனது தீண்டலுக்கான எதிரொலி தான் அவள் தன்னையே காயப்படுத்தி கொண்டது என்பது ! அத்தனை கொடியவனா அவன் ?

அவனை பொறுத்தவரை அவளை உயிருக்கும் மேலாக நேசிப்பவன் அவன் …ஆனால் அவளது கண்ணோட்டத்தில் ? ராமனாக அவன் தன்னை பாவித்துக்கொள்ள , அவளோ அவனை ராவணனாக அல்லவா உருவாக்கப்படுத்திக்கொண்டாள் .

ஆனால் அவள் மனம் குறித்து சிந்திக்காத அவனுக்கு இது மட்டும் எப்படி தெரிய கூடும் ? என்னதான் அவள் விருப்பம் இல்லாமல் அவளை அவன் மணந்துகொண்டான் என்பதற்காக அவள் நடந்துகொண்டது அவனுக்கு சற்று அதிகப்படியாக தான் தோன்றியது .

“அனைவரையும் வசீகரிப்பவன் நான் ? என்னிடமே உன் ஜாலமா ?” என்று கர்வத்தோடு எண்ணிக்கொண்டவன் , எப்படியும் இவள் என்னிடம் தானே வந்தாகவேண்டும் ? என்று மெத்தனமாக எண்ணிக்கொண்டான் .

பாவம் அவனுக்கு சற்றும் சளைத்தவள் அல்ல தன் மனைவி என்பது அவனுக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை அல்லவா ?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here