மந்திரமென்ன மங்கையே ? -2

0
251

வசீகரனின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் , இன்றும் அந்த தேன்மிட்டாய்காரி வந்தாள் . ஆனால் அவளது அலங்காரம் கொஞ்சம் மாறி இருந்தது . நேற்று மடிப்பு கலையாத நூல் சேலையில் தூசு படிந்த ஓவியம் போல மங்கலான அழகில் மிளிர்ந்தாள் என்றால் , இன்றோ விரித்து விட்ட கருங் கூந்தலின் நடுவே ஒற்றை கல் தோட்டின் ஒலி நட்சத்திரமாய் வீச , சிக்கென்ற அந்த கருநீல சுடிதாரும் அதற்கு மேட்ச்சாக அவள் அணிந்திருந்த கழுத்து பட்டையும் அவளை வானத்து வர்ணமங்கையாய் ஒளிர செய்தது .

அவனை கண்ட அந்த கடைக்காரர் , ” இதெல்லாம் இங்க வழக்கம் தான ..இவன் என்ன பாடு பட போறானோ ” என்று மனதுள் எண்ணியவாறே தன் வியாபாரத்தை பார்க்க , வசீகரன் அவளையே ஆவலாக பார்த்து கொண்டிருந்தான் .

அவனது பார்வையை இனம் கண்டுகொண்ட அவளுக்கு எரிச்சலாக இருந்தது .” வாரத்தில் ரெண்டு மூணு லூசுங்க இப்டி கெளம்பீறுதுங்க …ஸ்ஸ்ஸ் அப்பா ஒரே ரோதனையா இருக்குடா சாமி ” என்று அவன் காது படவே அவள் முணுமுணுக்கவும் ,

அந்த கடைக்காரருக்கு சிரிப்பு வந்தது . அவளோடு வந்த மற்றொரு பெண் ,அவள் தோழி போலும் ,” ஏய் வாய வெச்சுட்டு சும்மா இருடி …” என்றவளை கடிந்து கொள்ள , அதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்த தேன்மிட்டாய்க்காரி “நீ சும்மா இருடி …ஆள பாரு நல்லா ப்ரம்ம ராட்சசன் கணக்கா …முழிய பாரு …போந்தா கோழி மாறி இருந்துட்டு …நான் என் மிட்டாய்ய எப்டி ஆசையா பாக்குறனோ ,அப்டில இவன் என்ன பாக்கறான் ” என்று மூச்சு விடாமல் பொறுமியவளை பார்த்து கொண்டே இருந்த வசீக்கு உள்ளே கடுப்பானது .

அவளை காண வேண்டும் என்று ஆவலாக அவன் வந்தது உண்மை தான் .ஒரு அழகான மலரை பார்த்தால் ரசிக்க தோன்றும் அல்லவா ? அந்த ரசனை தான் வசீக்கும் . ஆனால் அபத்தமாய் அவனை பற்றி விமர்சித்தவளை இப்போது அவனுக்கு ரசிக்க தோன்றவில்லை .

அவளது விமர்சனத்திற்கு பின்னே , அவனை போல் அல்லாமல் தொல்லை தந்த உத்தமர்கள் நெறய பேர் உண்டு என்பதை அறியாத வசீக்கு , அழகிய ரோஜாவின் முள்ளாய் தோன்றிய அவளது அகங்காரத்திற்கு தக்க பதிலடி குடுக்க வேண்டும் போல தோன்றியது .

“தான் மிகவும் அழகி என்ற கர்வத்தில் பேசும் இவளை என்ன செய்வது ?”
என்றவன் சிந்திக்கும் போதே , அவன் மனசாட்சி ” அது உண்மை தானே” என்று சொல்லி அவனை மேலும் கடுப்பேத்தியது .

“எக்ஸ்கியூஸ் மீ ” என்றவள் பொருமலை இடைவெட்டியவன் , ” நீங்க கோவப்படற அளவுக்கு நா எதுவும் பண்ணல …உண்மையா சொல்லனும்னா ..உங்க பிரின்ட்ட நா ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன் ..அவங்கள எப்படி ஆஃப்ரோச் பண்றதுனு தெரியாம இருந்தப்ப தான் நேத்து உங்கள பாத்தேன் …அதான் உங்க மூலியமா அவங்ககிட்ட பேசலாம்னு இன்னிக்கு வந்தா கடைசில அவங்களே வந்துட்டாங்க ….இப்போ அவங்க கிட்ட எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியாம தான் யோசனையா உங்கள பாத்துட்டு இருந்தேன் …அதுக்குள்ள நீங்க என்ன தப்பா நெனச்சுட்டேங்க ” என்றவன் விளக்கமாக கூறவும் , அவளது தோழி சிரிக்க தொடங்கிவிட்டாள் .

வசீக்கு குதூகலமாக இருந்தது .அவனது பேச்சை கேட்டு முகம் சிவக்க நின்றுகொண்டிருந்த அந்த தேன்மிட்டாய்க்காரியை பார்க்க அவனுக்கு கொஞ்சம் பாவமாக கூட இருந்தது .

” இஷ்டத்துக்கு உன்ன பேசுனால ..தேவ தான் ..பெரிய அழகினு நெனச்சுட்டு பேசுனா …இப்போ நா உன்ன பாக்கல உன் பிரின்ட தான் பாத்தேன்னு சொன்னதும் மேடம்க்கு சப்புன்னு போயிருக்கும் ” என்றவன் மகிழும் போதே , அதற்கு மேல் அடக்கமாட்டாமல் அந்த தேன்மிட்டாய்யும் சிரிக்க தொடங்கியது .

புரியாமல் அவளது தோழியின் பக்கம் திரும்பி அவளை கேள்வியாய் பார்த்தவன் , அதிர்ந்து விட்டான் .

நெற்றி வகிட்டில் பளிச்சிட்ட குங்குமம் , கழுத்தில் தடினமாக இருந்த மஞ்சள் கயிறு .நிறம் மாறாத அந்த கயிறே அவள் புதிதாக திருமணமானவள் என்பதை பளிச்சென காட்டிகொடுக்க , இதை எதையுமே கவனிக்காமல் அவளிடம் வெட்டி வீராப்பு காட்டிய தன் புத்தியை நினைத்து நொந்து விட்டான் வசீ .

“டி ..இதை தான் எங்க ஊர்ல பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்னு சொல்லுவாங்க ” என்று தன் தோழியிடம் கூறுவது போல அவனை பரிகாசித்தவள் , ” சார் , இவகிட்ட எப்படி பேசணும்னு தெரியாம தான யோசிச்சுட்டு இருந்தீங்க …நா வேணா அவ அஸ்பெண்டு நம்பர் தரேன் ..நீங்களே கேட்டுகோங்க ” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான் .

வசீக்கு இது புது அனுபவம் . இதுவரை அவன் எந்த பெண்ணிடமும் இப்படி மூக்கறுபட்டது இல்லை . அவனது தோற்றம் படிப்பு செல்வநிலை இதற்காக மற்ற பெண்கள் தான் அவனை எப்பொழுதும் வட்டமிடுவார்கள் .இவள் போல அவனை அலட்சிய படுத்திய பெண்களை அவனை கண்டதில்லை .

அவளது இந்த அலட்சியமும் திமிரும் அவனுக்கு பிடித்திருந்தது .” அப்பா என்னா வாயி …நா ப்ரம்ம ராட்சசனா ..போந்தா கோழியா ..இரு இரு உன்ன இந்த ராட்சசன் எப்படி எல்லாம் இம்ச பண்ரான்னு பாரு ” என்று எண்ணிக்கொண்ட வசீகரனுக்கு , அன்று முழுவதும் அவள் சொன்ன உவமைகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தது .

திரும்ப திரும்ப அதையே நினைத்து கொண்டிருந்தவன் , “ஒருவேளை உண்மையில் நாம் அப்படி தான் இருக்கிறோமோ ? “என்ற ஐயம் தோன்ற வேகமாக எழுந்து சென்று கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தான் .

முன்னும் பின்னும் திரும்பி திரும்பி பார்த்தவனுக்கு , அப்படி ஒன்றும் தான் மோசம் இல்லை என்ற நினைப்பு தான் வந்தது .

சராசரியான உயரத்தை விட கொஞ்சம் அதிகம் , ஒல்லியும் இல்லாமல் சதையும் இல்லாமல் அளவான உடற்கட்டு . மாநிறத்திற்கு கொஞ்சம் அதிகம் , கம்ப்ளீட் ஷேவ் செய்த அந்த தாடியும் மீசையும் , அந்த இரவுக்கு தோதாக அவன் அணிந்திருந்த பெர்முடாசும் அரைக்கை பனியனும் அவனுக்கு விடலை பையன் போன்ற தோற்றத்தை தந்தது .

தன்னை முழுதாக கண்ணாடியில் ஆராய்ந்த போதும் , அதில் திருப்தி வராத வசீ , நேராக அவனது தங்கை ரதியிடம் சென்றான் .

“ரதி , அண்ணா எப்படி இருக்கேன் …பாஸா ? ” என்றவன் திடுதிப்பென்று கேட்க , அவனது கேள்வியில் ரதிக்கு சிரிப்பு வந்தது .” என்னண்ணா திடீருனு , இப்படி ஒரு சந்தேகம் உனக்கு ? கழுன்டுருச்சா ?” என்றவள் சைகையோடு கேட்க ,” வெளையாடாம சொல்லு ” என்றவளை அவசர படுத்தினான் வசீ .

“என்னாச்சு இவனுக்கு ? ” என்ற குழப்பத்தோடவே ” உனக்கென்னணா ..டக்கரா இருக்க ” என்றவளை “நிஜமாவா ?” என்று கேட்டு காண்டாக்கினான் வசீ .

“ஐயோ ” என்று தலையில் அடித்து கொண்டவள் ,” அம்மா இங்க வாயேன் …உன் பையனுக்கு ஏதோ டௌட்டாம் ” என்று கத்த , “அடிப்பாவி ” என்றவள் தலையில் கொட்டிவிட்டு வேகமாக தன் அறைக்குள் புகுந்து கொண்டான் வசீ .

“அச்சோ வசீ , அந்த தேன்மிட்டாய்னால இப்படி கிறுக்கு புடுச்சு சுத்தறியே டா …அவனால உனக்கு வீட்ல இருந்த கெத்து போயிரும் போல இருக்கே ” என்று அவன் தனியாக அமர்ந்து வாய்விட்டு புலம்ப , அவன் அறைவாசலில் நின்றுகொண்டிருந்த அவனது தாயும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர் .

வந்த சுவடு தெரியாமல் அவர்கள் சென்றுவிட , அவளது நினைவிலேயே கட்டிலில் தலைசாய்த்த வசியின் உள்ளத்தில் , தீடிரென கவிதை மழை பெய்ய தொடங்கியது .

“அருகில் வா தேனே
நீ தான் என் காதல் வானே

என் இதயத்தை கைது செய்த மானே
உன் விழிகள் அழகிய மீனே

உன்னருகில் நெருங்குவேன் நானே
அது தான் என் காதல் கைகூடும் நாளே !!”

“டேய் வசீ , என்னடா உனக்குள்ள இவ்ளோ நாள் ஒரு கவிஞன் ஒளிஞ்சு இருந்தது தெரியாம போச்சே ” என்று தன்னை நினைத்தே வியந்து கொண்ட வசீ , அலமாரியில் இருந்த ஒரு நோட்டை எடுத்து வேகமாக தனக்கு தோன்றிய வரிகளை எழுதி வைத்தான் .

எழுதியதும் புன்சிரிப்போடு அந்த நோட்டை மூட போனவன் , அதன் முதல் பக்கத்தை திருப்பி ” என் ஆச தேன்மிட்டாய்க்காக ” என்று கொட்டை எழுத்தில் எழுதி புள்ளி வைத்தான் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here