மந்திரம் -13

0
206

மந்திரம் -13

யோசனையோடு முதல் பக்கத்தைப் பார்த்தவள், “என் ஆச தேன்மிட்டாய்க்காக “ என்று அதன் முதல் பக்கத்தில் எழுதி இருப்பதை கண்டாள்.

காலையில் அவன் அவளை ‘தேனு ‘ என்று அழைத்து அணைத்தது அவளுக்கு நினைவு வந்தது.

ஆர்வம் உந்த குளியலரை பக்கம் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே, அந்த நோட்டின் பக்கங்களை புரட்டினாள்.

“அருகில் வா தேனே

நீ தான் என் காதல் வானே “

என்று முதல் முதலாக அவன் அவளுக்காக எழுதிய கவிதையை படித்தவளுக்கு, உள்ளே மகிழ்ச்சியாக தான் இருந்தது.

ஆக அவள் முதலில் எண்ணியது போல இவன் பொழுதுபோக்கிற்காக அவள் பின் சுற்றவில்லை.. ஹ்ம்ம் ஹ்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்… எண்ணிக்கொண்டவள் அடுத்தடுத்து இருந்தவற்றை படிக்கலானாள்.

கடைசியாக அவள் வரும்போது அவன் எழுதிக்கொண்டிருந்த எழுத்துக்களும் அவள் கண்ணில் பட்டன.

“போதுமடி கண்மணி

ஆசையில் நான் செய்த பாவம்…

என்னால் உனக்கும் ஏன் இந்த சாபம்?

முதல் பார்வையில் நான் ரசித்த

மெல்லிய மலர் நீ !!

உன்னையும் கொடுங்காரியாய்

மாற்றிய பாவி நான்..

எனக்கு தெரியும்

உன் மனம் படும் பாடு…

கொண்டவனை எண்ணி

மனம் கொன்றவனை கொய்ய

நீ ஏன் பிடிக்கவேண்டும் கத்தி??

கயவன் நான்..

காயம் படவேண்டியவன் நான்…

எப்படியும் என்வசம் வருவாய் என்று

மனப்பால் பருகியவன் நான்…

கர்வமும் திமிரும் பிடித்தவன் நான்…

உண்மை சொல்லவா??

இது நானல்ல..

என்னவளுக்காக…

எண்ணியவள் கிட்டுவதற்காக…

கிட்டாது போய்விடுமோ என் சொர்க்கம்..

என்ற அலைப்புறுதலுக்காக…

எனக்கு நானே பூசி கொண்ட அரிதாரம்…

புகைப்படத்திலாவது உன்னவனோடு சேர துடிப்பவள் நீ !!!

உன் நிழலாவது என்மீது படாதா என்று தவம் புரிபவன் நான்…

போகட்டும்…

நான் செய்த குற்றத்திற்கு தண்டனை தேவை தான்…

என் சகிக்கு வேண்டாம்….

சகிக்க இயலாது என்னால்…

விரைவில் விடுதலை அளிப்பேன்…

இனைந்துவிடுவாய் உன் இனியவனோடு..

இங்கிதம் அறிந்தவன் தானே நானும்???

பொறுத்துக்கொள்ளடி என் தேனே !!!”

வரிகள் ஒவ்வொன்றையும் திரும்ப திரும்ப படித்தவளுக்கு கண்களில் கண்ணீர் அரும்பியது.

அந்த நோட்டை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள் துஜா.

துஜா அந்த மற்றொருவனின் புகைப்படத்தை வைத்ததற்கான காரணமே வேறு.

அது வசியை பழிவாங்குவதற்காக.. அந்த படத்தை கண்டு அவன் நோகவேண்டும் என்பதற்காக அவள் செய்த வேலை.

அவள் அவுளுக்கென்று சில கட்டுத்திட்டங்கள் வைத்திருந்தாள். அவளை பொறுத்தவரை அவள் வாழ்வில் திருமணம் என்பது ஒருமுறை தான். அதுவும் ஒருவரோடு தான் !!!

அந்த கோட்பாட்டினால் தான் கட்டாய திருமணம் நடந்தபோதும், வசியை வெறுத்தபோதும் அவள் அவனோடவே வந்தது.

கௌதமனை அவள் வரவிருக்கும் கணவனாக எண்ணி மகிழ்ந்தது உண்மை தான்.. ஆனால் வசி கணவன் என்ற ஸ்தானத்திற்கு வந்ததுமே தனது மனதை சமாதான படித்துகொண்டாள்.

அவளது கோவம் முழுக்க முழுக்க அவளது விருப்பம் இல்லாமல் அவள் மனதை துச்சமாக எண்ணி அவன் செயல் பட்ட முறையினால் தான்.

கவிதைகள் அனைத்தும் அவன் மனதை அவளுக்கு கண்ணாடியாய் பிரதிபலித்துவிட, “இத்தனை ஆழமாக தன்னை நேசித்தவன் ஏன் அதை தனக்கு உணர்த்தாமல் இப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்தான்? “ என்றே சிந்தித்தது.

ஆனால் காதல் திருமணத்தை எட்டிக்காயாய் எண்ணும் அவள், அவன் தனது காதலை கூறி இருந்தால். அதை நம்பி இருப்பாளா என்பது அவளுக்கு தெளிவில்லாத ஒன்றுதான்….

அவனது அதிரடி செயலுக்கும் அர்த்தம் தேடி ஓடியது அவள் உள்ளம். ஒருவேளை போதுமான அவகாசம் கிடைக்காது… அவளுக்கும் நிச்சயம் நடக்க இருந்ததால் தான் அப்படி செய்துவிட்டானோ??

அவள் உள்ளம் அவனை நியாயப்படுத்துவதற்காக காரணம் தேடுவதை ஒரு திடுக்கிடலுடன் உணர்ந்தாள் துஜா…

“விரைவில் விடுதலை அளிப்பேன்…

இனைந்துவிடுவாய் உன் இனியவனோடு..

இங்கிதம் அறிந்தவன் தானே நானும்???

பொறுத்துக்கொள்ளடி என் தேனே !”

இந்த வரிகள் மீண்டும் மீண்டும் அவளுக்குள் ஓட, அதற்கான அர்த்தம் புரிந்த அவளோ இனி என்னசெய்வது என்று யோசித்தாள்..

அவள் உள்ளம் இப்போது என்ன நிலையில் உள்ளது? இது எப்படி சாத்தியம்? இல்லை.. இல்லை.. அவன் நெக்குருக எழுதிய கவிதையின் தாக்கம் தான்… வேறொன்றும் இல்லை.. இருக்காது… இருக்கவும் கூடாது…

நெஞ்சோடு அணைத்திருந்த நோட்டை இறுக பற்றியவரே அவள் தன்னை சமாதானம் செய்ய, குளியல் அறையின் கதவு திறக்கும் ஒலி அவளை சுதரிக்க செய்தது.

அவள் நின்ற கோலத்தை கண்டவனின் பார்வை அவள் மார்போடு அணைத்திருந்த அந்த நோட்டின் மீது படிந்தது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here