மன்னவன் பைங்கிளி 10

2
2837

அத்தியாயம் 10

தினமும் கல்லூரிக்கு இளவரசனுடனே சென்று வரத் தொடங்கினாள் நாயகி. வீட்டின் உள்ளே இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அதாவது இருவருமே அப்படிக் காட்டிக் கொண்டார்கள். வீட்டை விட்டு வெளியே வந்ததுமே முதல் நாள் எந்த இடத்தில் சண்டையை நிறுத்தினார்களோ அதே இடத்தில் இருந்து சண்டையை தொடர்வார்கள்.

ஆரம்பத்தில் அவனது திட்டுக்களை எல்லாம் மௌனமாக வாங்கிக் கொண்ட நாயகி நாளடைவில் அவனை எதிர்த்து சண்டையிடத் தொடங்கினாள். அன்றும் அப்படித்தான் அவளை கல்லூரியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரும் பொழுது வேண்டுமென்றே அவளிடம் சண்டைப் போட்டான் இளவரசன்.

“உங்களுக்கு என்னையும் எங்க அம்மாவையும் வீட்டில் வச்சுக்கப் பிடிக்கலேன்னா உங்க அப்பாக்கிட்டே போய் சொல்ல வேண்டியது தானே… அதை விட்டுட்டு எப்பப் பாரு எங்களை எதுக்கு திட்டிகிட்டே இருக்கீங்க?”

“அந்த தைரியம் தானே உனக்கு?”

“ஆமா… ஏன் என்னிடம் இவ்வளவு பேசுறீங்க… எங்க அம்மாவிடம் போய் இதை எல்லாம் சொல்ல வேண்டியது தானே?”

“உன்னோட அம்மாவா இருந்தும் அவங்க அமைதியின் மறு உருவமா இருக்காங்க பார்… அதனால தான் கொஞ்சம் அமைதியா இருக்கேன்”என்றான் இடக்காக…

“அவங்க அமைதின்னா… நான் என்ன பத்திர காளி மாதிரியா இருக்கேன்” என்று மூக்கு விடைத்து கண்களை உருட்டிக் கொண்டு அவள் கேட்ட விதம் நிச்சயமாய் அவனுக்கு சுடுக்காட்டுக் காளியைத் தான் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

“அச்சு அசல் காளியே தான்…” அவன் பயந்து நடுங்குவது போல பாவனை செய்ய அவன் மீது தூக்கி ஏறிய கல்லைத் தேடத் தொடங்கினாள் நாயகி.

“டெயிலர் அம்மாவுக்கு ரொம்பத் தான் கோபம் வருது போல” என்று அவளுக்கு ஆத்திரமூட்டும் விதமாக அவளின் பெயரை கிண்டல் செய்தான். அவன் நினைத்தது போலவே அவள் கண்கள் இரண்டும் தக்காளியின் நிறத்திற்கு சிவந்தது.

“என்னோட பேரை சொல்லி கிண்டல் செய்யும் வேலை எல்லாம் வேண்டாம்… அது எங்க அப்பா எனக்கு ஆசையா வச்சது” உதடு துடிக்க நாசி விடைக்க பேசியதில் இருந்தே அவளது கோபம் புரிந்தாலும் அவனால் சட்டென்று பின் வாங்க முடியவில்லை.

“ஏன் உங்க அப்பா வச்ச பேருன்னா மத்தவங்க எதுவும் சொல்லக் கூடாதா? நான் அப்படித் தான் சொல்லுவேன்.”

“நீங்க மட்டும் எந்த நாட்டு இளவரசன்… உங்களுக்கு அந்த பேரை வச்சு இருக்காங்க” பதிலுக்கு அவன் முகத்தில் கரி பூசினாள் நாயகி.

“நான் எங்க வீட்டுக்கு இளவரசன்…. நீங்க எந்த கடையோட டெயிலர்” விடுவேனா பார் என்று அவனும் மல்லுக்கட்ட

“இன்னொரு முறை அப்படி சொன்னா மண்டையை உடைச்சுடுவேன்” என்று அவளும் எகிற

“எங்கே மேலே கை வச்சுத் தான் பாரேன்… அப்புறம் தெரியும் இந்த இளவரசன் யாருன்னு”

“இல்லைன்னா.. எங்களுக்கு தெரியாதா… சரியான குரங்கு மூஞ்சி”

“ஏய் யாரைப் பார்த்து குரங்கு மூஞ்சி சொன்ன… நீ தான் மலைக் குரங்கு”

“நீ தான் வனக் குரங்கு”

“வேணாம்… வர வர உன்னோட வாய் ரொம்ப நீளுது…. பொம்பளை பிள்ளையாச்சேன்னு பார்க்கிறேன். இல்லை பல்லு எல்லாத்தையும் தட்டி கையில் கொடுத்திடுவேன்”

“ஏன் நீ என்ன பல் டாக்டரா…”

“கொழுப்பு குறையுதா பாரு”

“ஆமா உங்க வீட்டு சாப்பாடை சாப்பிடறேன் இல்ல… அதான் உங்க திமிரில் எனக்கும் கொஞ்சம் வந்துருச்சு”

“அடங்கவே மாட்டியா?”

“ஏன் நீங்க தான் அடக்கிப் பார்க்கிறது?”

“ஹ… அதுக்கு வேறு ஆளைப் பார்”

“பின்னே இந்த மூஞ்சியை சேர்ந்தா மாதிரி ஐஞ்சு நிமிஷம் கூட பார்க்க முடியாதே… வேறு மூஞ்சியைத் தான் பார்க்கணும்”

“ஏய்….வீடு வரப் போகுது… கொஞ்சம் உன் திருவாயை மூடு” என்று சொன்னவன் அதன் பிறகு அமைதியாகி விட அவளும் அதை அப்படியே பின்பற்றினாள்.

கல்லூரியில் இருந்து கிளம்பிய பொழுது தொடங்கிய அவர்களது சண்டை ஊரின் எல்லையை தொட்டதும் நின்று விடும். ஊரில் யாராவது இவர்களின் சண்டையைப் பார்த்து வீட்டில் போய் சொல்லி விட்டால் என்னாவது என்ற பயம் இருவருக்குமே இருந்தது.

இளவரசனுக்கு தந்தையை கோபப் படுத்தி விடக்கூடாது என்ற எண்ணம், நாயகிக்கு தாயை வருந்த விடக் கூடாது என்ற எண்ணம். இருவருமே வெளியில் ஒரு மாதிரியும் வீட்டுக்குள் ஒரு மாதிரியும் நடந்து கொள்ள, அவர்களை பெற்றவர்கள் இருவரும் நன்றாக பேசிப் பழகத் தொடங்கி விட்டதாக எண்ணத் தொடங்கினார்கள்.

அவர்களின் நிம்மதியை கெடுக்க விரும்பாமல் இருவரும் வீட்டின் உள்ளே அமைதியாகவே இருந்து கொண்டார்கள்.

வழக்கம்போல நல்ல பிள்ளைகளாக வீட்டிற்கு சென்றவர்களை வரவேற்றது பூட்டி இருந்த வீடு தான்.

‘எங்கே போய் இருப்பார்கள் இருவரும்….’என்ற யோசனையுடன் வண்டியை விட்டு கீழே இறங்கியவனை தடுத்து நிறுத்தியது எதிர்வீட்டு பெண்ணின் குரல்.

“தம்பி இளவரசா… நாயகி அம்மாவுக்கு தீடீர்னு உடம்புக்கு முடியாம போச்சு… அதான் உங்க அப்பா கூட்டிக்கிட்டு டவுன் ஆஸ்பத்திரிக்கு போய் இருக்காரு… நீங்களும் சீக்கிரமா கிளம்பி போங்க” என்று சொல்ல அடுத்த நிமிடம் அருகிலேயே பேயடித்தது போல நின்று கொண்டு இருந்தவளை மீண்டும் வண்டியில் அமர வைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் வண்டியை ஓட்டினான் இளவரசன்.

Facebook Comments Box

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here