மன்னவன் பைங்கிளி 14

0
2731

அத்தியாயம் 14

காலையில் எல்லாரும் எழும் முன் அலாரம் வைத்து எழுந்த நாயகி வேகமாக சென்று குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றினாள். முதல் நாள் இரவு உறவினர்கள் எல்லாரும் மீண்டும் அவரவர் வீட்டுக்கு சென்று இருக்க, கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள் நாயகி. நேற்று அவர்கள் பேசியதைப் போலவே இன்றும் பேசினால் அவளால் தாங்கவே முடியாது என்று தான் அவளுக்குத் தோன்றியது.

காலை எழுந்ததும் வீட்டை சுத்தம் செய்து, வாசல் தெளித்து, கோலம் போட்டு, பசும்பாலை சுண்டக் காய்ச்சி எல்லாருக்கும் அவரவர் விருப்பத்துக்கு தகுந்த மாதிரி காபி கலந்து வைத்தவள் பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றி வைத்து வழி படத் தொடங்கினாள்.

அவள் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது.

‘கடவுளே… இந்த வாழ்க்கை நீ எனக்கு அமைத்துக் கொடுத்தது. எப்படி இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் அவருக்கு நான் பிடிக்காத மனைவி ஆயிற்றே… சீக்கிரம் எங்களின் வாழ்வு மலர வேண்டும். அதற்கு நீ அருள் புரிய வேண்டும்’ என்று மனதார வேண்டியவள் காபியை எடுத்துக் கொண்டு முதலில் குமரேசனிடமும், சுமதியிடமும் கொடுத்து விட்டு, கடைசியாகத் தான் கணவனைத் தேடிப் போனாள்.

அவள் தட்டுவதற்கு அவசியமே இன்றி கதவு திறந்தே இருக்க,’எங்கே போய் இருப்பார்’என்ற யோசனையுடன் அறையின் உள்ளே பார்த்தவளை காலி அறை தான் வரவேற்றது. அவள் யோசித்தபடியே வெளியே வரவும், குளித்து முடித்து தலையை துவட்டியபடி இளவரசன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

ஒருவர் மீது ஒருவர் மோதப் போகும் கடைசி நொடியில் சுதாரித்து இருவருமே ஒரு சில நிமிடங்கள் அப்படியே உறைந்து போய் நின்றார்கள்.

குளித்து முடித்து புத்தம் புது மலரென இருந்தவளின் நெற்றி வகிட்டில் புதிதாக வைக்கப்பட்டு இருந்த குங்குமம் இவள் உன்னுடைய மனைவி என்று சொல்லாமல் சொல்ல இளவரசனின் மனதின் மூலையில் மெல்லியதோர் அதிர்வு ஏற்பட்டது.

‘கல்யாணத்துக்கு முன்னாடி கீழே விழாம இருக்க என்னைத் தானே பிடிச்சுக்கிட்டு நின்னா… இப்ப மட்டும் என்னவாம்… ஓ..அது தான் கல்யாணம் முடிஞ்சுடுச்சே… இனி எதுக்கு ஒட்டி உரசணும்னு நினைக்கிறா போல’என்று எண்ணி அவன் பல்லைக் கடிக்க…

‘நல்லவேளை அவர் மேல மோதிடலை.. இல்லைன்னா மயக்க நினைக்கிறியான்னு கேட்டு வைப்பார். பாவம் ஏற்கனவே அவருக்கு நான் தொந்தரவு… இனி முடிஞ்ச அளவுக்கு அவருக்கு கோபம் வராத மாதிரி நடந்துக்கணும்’ என்று எண்ணி அவள் அறைக்குள் திரும்ப அவளை முந்திக்கொண்டு போய் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு காபி கொடுத்து விட்டு அவள் அப்படியே நின்று கொண்டு இருக்க, காபியை வாங்கியவன் அதை அருந்தாமல் அவளை அருகில் அமரும்படி சைகை காட்ட அவளோ தயங்கி நின்றாள்.

“ரொம்ப பயப்படாதீங்க டெயிலர் அம்மா… மேல பாஞ்சுட மாட்டேன். பயப்படாம நம்பி என் பக்கத்தில் உட்காரலாம்” என்று அவன் பொறியத் தொடங்க வேகமாக அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

“இதோ பார்… இப்ப நான் சொல்றதை கொஞ்சம் நல்லா கவனி… உனக்கே நல்லா தெரியும் இந்த கல்யாணம் எந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் நடந்ததுன்னு … எனக்கு இது கொஞ்சமும் பிடிக்கலை… இப்போதைக்கு நாம இதை மாத்த முடியாது… அதுக்காக என்னால உன்னோட சேர்ந்து குடும்பம் எல்லாம் நடத்த முடியாது.

அதனால இப்போதைக்கு ஒரு மாற்று ஏற்பாடு செஞ்சு இருக்கேன். அது என்னன்னு நான் சொல்லும் பொழுது நீ எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாம அப்படியே ஒத்துக்கணும்… அதை விட்டுட்டு ஏதாவது கலாட்டா செஞ்சு வச்சேன்னு வை.. அப்புறம் ஜென்மத்துக்கும் உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று பேசி முடித்தவன் அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்ததும் நறநறவென்று பற்களைக் கடிக்கத் தொடங்கினான்.

“என்ன அடுத்த என்ன திட்டம் போட்டு என்னை ஏமாத்தலாம்ன்னு யோசிக்கறியா?”

அடிபட்ட பார்வை ஒன்றை அவனை நோக்கி அவள் செலுத்த என்ன நினைத்தானோ ஒன்றுமே பேசாமல் எழுந்து சென்று விட்டான்.

மற்றவர்கள் அனைவரும் தயாராகி வரும் முன்னரே எல்லாருக்கும் சேர்த்து காலை டிபனை செய்து முடித்து எல்லாரும் வருவதற்காக காத்திருக்கத் தொடங்கினாள் நாயகி. சுமதிக்கு கஞ்சியை எடுத்து கொடுத்தவள் , குமரேசனுக்கும், இளவரசனுக்கும் உணவை பரிமாறத் தொடங்கினாள். எல்லாரும் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன் மெல்ல பேச்சைத் தொடங்கினான்.

“எனக்கு சென்னையில் ஒரு வேலை கிடைச்சு இருக்கு… இன்னும் இரண்டு நாளில் வேலைக்கு வந்து சேர சொல்லி அந்த கம்பெனியில் இருந்து கால் பண்ணினாங்க” என்று மின்னாமல் முழங்காமல் இடியை இறக்கினான் இளவரசன்.

“என்ன இளா… விளையாடுறியா? உனக்கு நேத்து தான் கல்யாணம் ஆகி இருக்கு.. இப்ப வெளியூர்க்கு கிளம்பினா என்ன அர்த்தம்? அதுவும் இல்லாம வெளியில் போய் வேலை செஞ்சு சம்பாதிக்கணும்னு உனக்கு என்ன தலை எழுத்து… இத்தனை நாளா நம்ம பண்ணையைத் தானே பார்த்துக்கிட்டு இருந்த… இப்போ என்ன புதுசா?”

“அது எல்லாமே உங்க சம்பாத்தியம்… அதுல எனக்கு எந்த உரிமையும் வேண்டாம். உங்களுக்கு எப்போ எப்படி கோபம் வரும்னு தெரியாது… நாளைக்கே உங்களுக்கு கோபம் வந்தா என்னை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொன்னா… நான் என்ன செய்வேன்?… முன்னே மாதிரி இருந்தா கூட பரவாயில்லை.. இப்போ எனக்கு கல்யாணம் வேற செஞ்சு வச்சு இருக்கீங்க… அவளுக்காகவாவது நான் வெளியில் போய் வேலை பார்க்க ஆசைப்படறேன்.”

“மன்னவா…நீ ஏதோ கோபத்துல” என்று நா தழுதழுக்க பேசியவரின் குரல் நெஞ்சை கொஞ்சம் அசைத்துப் பார்த்தாலும் இறங்கி வர கொஞ்சமும் தயாராக இல்லை இளவரசன்.

‘என்னோட உணர்வுகளை கொஞ்சமாவது மதிச்சு இருப்பாரா இவர்… இப்போ இவர் மன்னவான்னு கூப்பிட்டதும் உடனே நான் உருகிடணுமா… முடியாது’ என்று விராப்பாக நினைத்துக் கொண்டவன் அதே பிடிவாதத்துடன் அமர்ந்து இருக்க சுமதியின் பார்வையும் தவிப்புடன் மகள் மீது படிய நாயகி அவனுக்கு உதவ முன்வந்தாள்.

“மாமா… ஏன் இவ்வளவு பதட்டம்? அவர் வெளியூருக்கு வேலைக்குத் தானே போகப் போறார். வாரத்தில் ஐஞ்சு நாள் வேலைக்குப் போய்ட்டு சனி, ஞாயிறு இங்கே நம்மைப் பார்க்க ஒடி வரப் போறார். அதுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்?”

“அதில்லை தாயி…”

“இதெல்லாம் அவர் நேத்து ராத்திரியே என்கிட்டே சொல்லிட்டார் மாமா. எனக்கு அவர் சொன்னது தப்பா தெரியலை. அவரும் கொஞ்ச நாள் வெளியில் வேலை பார்த்தால் அவருக்கும் வெளி அனுபவம் கிடைக்கும் இல்லையா?” என்று எப்படி எல்லாமோ பேசி இளவரசன் ஊருக்கு கிளம்ப உதவி செய்தாள் நாயகி.

உண்மையில் அவளது செய்கை கண்டு இளவரசனுக்கு ஆச்சரியம் தான். அவன் வெளியூர் செல்வதை முடிந்த அளவுக்கு அவள் தடுக்க முயற்சி செய்வாள் , அல்லது அழுது ஊரைக் கூட்டுவாள் என்றெல்லாம் எதிர்பார்த்ததற்கு மாறாக அவளே அவனை அனுப்பி வைக்க ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் அவளை. உடனே வந்து மனசாட்சி அவனை கேலி பேசியது.

‘அவளுக்குத் தான் உன்னை பிடிக்காதே… பிடித்து இருந்தால் முதல் நாள் தாலி கட்டிய கணவன் பிரிந்து போகிறேன் என்று சொன்னதும் பிரிய முடியாமல் அழுது கதறி இருப்பாள். உன்னை வெறுப்பவள் அதை எதற்கு செய்யப் போகிறாள்?’என்று எண்ணியவனுக்கு அவனது தேவை என்ன என்பது குறித்து இன்னும் ஒரு தெளிவு ஏற்படவில்லை என்பது தான் நிஜம்.

அவளைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கித் தள்ள முடியாமல் அறைக்குள் சென்றவன் பெட்டியை எடுத்து வைத்து உடைகளை அடுக்கத் தொடங்கினான். அடுத்த சில நொடிகளில் அங்கே வந்த நாயகி அவனுக்கு உதவத் தொடங்கினாள்.

அடுக்கி வைத்துக் கொண்டிருந்த அவனது கைகள் அப்படியே நின்று விட்டன.

“ரொம்ப சந்தோசமா இருக்க போல…”

“ஆமா… உங்களுக்கு பிடிச்ச மாதிரி எல்லாமே நடக்குதே.. இனி தினமும் என்னோட மூஞ்சியில் நீங்க முழிக்க வேண்டிய அவசியம் இல்ல…”

“சபாஷ்.. நீ நினைக்கிறதை அப்படியே மாத்தி சொல்றியே?”

“வேற ஏதாவது எடுத்து வைக்கணுமான்னு ஒருமுறை பார்த்துடுங்க” என்று சொன்னவள் அறையை விட்டு வெளியேற அவனுக்கு ஆத்திரம் வந்தது.

‘நான் அப்படி எல்லாம் நினைக்கலைன்னு ஒரு வார்த்தை சொல்றாளா பார்… அப்படினா என்ன அர்த்தம்? இவளுக்கு நான் இங்கே இருக்கிறதில் பிடித்தம் இல்லைன்னு தானே அர்த்தம்….’ என்று எண்ணியவன்  தன்னுடைய சர்டிபிகேட்களை தேடி எடுத்து சூட்கேசில் வைக்கும் பொழுது அவர்களது கல்யாணத்தின் பொழுது அவர்கள் நால்வரும், அவனது அன்னையின் படத்தின் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவனது பெட்டியில் வைத்தாள். அந்த செயல் அவனது நெஞ்சை அசைத்துப் பார்த்தது என்னவோ நிஜம்.

“இவன் தான் பக்கத்தில் இல்லையே.. நாம என்ன வேணா செய்யலாம்னு உன் இஷ்டத்திற்கு திமிரா எதையும் செய்து வைக்காதே… ஒழுங்கா அப்பாவையும், அத்தையையும் பார்த்துக்கோ”

“அப்படியே நான் கொடுமை செஞ்சா கூட உங்களுக்கு எப்படி அது தெரிய வரும்? நீங்க என்ன பக்கத்திலயா இருக்கீங்க?” என்று கிண்டலாக அவள் கேட்க அவனுக்கு கோபம் துளிர் விட்டது.

“பக்கத்தில் இல்லேன்னா என்னடி தினமும் போனில் பேசி எங்க அப்பா கிட்டவும், அத்தை கிட்டவும் விசாரிச்சுப்பேன். அதனால ஒழுங்கா இரு… புரிஞ்சுதா” என்று அவன் மிரட்ட அவளோ உள்ளுக்குள் மகிழ்ந்து தான் போனாள். அவனை தினமும் வீட்டினரிடம் பேச வைக்கத் தானே அவள் அப்படி பேசியது. தன்னுடைய உத்தி பலித்ததில் மகிழ்ந்து போனவள் வெளியே முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டாள்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here