மன்னவன் பைங்கிளி 18

1
2986

பெரியவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு இளவரசனின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது.பண்ணை வேலைகளை முடித்து விட்டு முடிந்த அளவு சீக்கிரம் வீடு திரும்பினான்.மாலைப் பொழுதில் வீட்டு முற்றத்தில் எல்லாருடனும் சிரித்துப் பேசினான்.

சிறுவயதில் தான் அடித்த லூட்டிகள்,தந்தையிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னர் தப்பிக்கும் விதம் என்று எல்லாவற்றையும் அழகாக அபிநயித்துக் காட்டி அந்த வீட்டையே கலகலப்பாக மாற்றினான்.

இது அத்தனைக்கும் மேலாக நாயகியிடம் இணக்கமாகவே நடந்து கொண்டான்.அவளிடம் கோப முகம் காட்டுவதே இல்லை.முடிந்த அளவுக்கு வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவியாக இருந்தான்.காலையில் எழுந்து அவளுக்கு முன்னால் வாசல் தெளித்து வைத்தான்.அவள் ஒன்றுமே பேசாமல் மௌனமாக பெருக்கி விட்டு கோலத்தை போட்டு விட்டு உள்ளே போய் விடுவாள்.

அவளாக கேட்பாள் என்று அவன் எதிர்பார்க்க அவளோ அவனை கண்டுகொள்ளவே இல்லை.அடுத்த நாள் முதலாக சமையல் கட்டில் அவளோடு சேர்ந்து காய்கறி நறுக்கி அவளுக்கு உதவி செய்தான்.அப்பொழுதும் அவளிடம் எந்த எந்த எதிரொலியும் இல்லை.மூன்றாவது நாள் அவளுக்கு துணி துவைக்க உதவி செய்வதற்காக அவன் துணிகளை கையில் அள்ளியதும் அவளுக்கு வந்ததே கோபம்.அப்பப்பா….அப்படியே காளி தேவியாக மாறி அவனை முறைத்தாள்.

“உ..உனக்கு உதவி”அவன் திணறலாக பேச அவனை நம்பாத பார்வை பார்த்தாள் அவள்.

“உங்களுக்குத் தான் பொண்ணுங்களை பிடிக்காதே…அப்புறம் எதுக்கு இப்படி பொய் பேசறீங்க?”

“இல்லை தையலு…நிஜமாவே உனக்கு உதவத் தான்…”என்று அவன் இழுக்க ஆத்திரத்துடன் அவன் கைகளில் இருந்த துணிகளை பிடுங்கிக் கொண்டு போய் துவைக்கத் தொடங்கினாள்.

“இத்தனை நாளா எல்லா வேலையும் நான் தானே செஞ்சேன்…இப்ப மட்டும் என்ன புதுசா கரிசனம்”

“தையலு…என் மேல கோவமா இருக்கியா?”

“இல்லை..குளுகுளுன்னு மனசு பூரா ஆசையோட இருக்கேன்.ஆமா அது என்ன புதுசா தையலுனு கூப்பிடறீங்க? உங்களைப் பொறுத்தவரை நான் வெறும் டெயிலர் அம்மா தானே…”அவளது கட்டுப்பாட்டையும் மீறி அவள் குரல் கரகரக்கத் தொடங்கியது.

“அது சும்மா விளையாட்டுக்கு…”

“என்ன விளையாட்டுக்கு…அடுத்தவங்க மனசை நோகடிப்பது விளையாட்டா உங்களுக்கு?”

“தப்பு செய்யாத மனுஷன்னு யாருமே இங்கே கிடையாது தையல்…”

“முதலில் அப்படி கூப்பிடறதை நிறுத்துங்க…”

“ஏன் பிடிக்கலையா?”

“வேணும்னா தூக்கி வைச்சுக்கிறதும்,வேண்டாம்னா தூக்கி எரியறதுமா இருக்க உங்க குணம் எனக்கு பிடிக்கலை.எந்த தப்புமே செய்யாத என்னை இந்த வீட்டுக்கு வந்து புதுசில் இருந்து திட்டித் தீர்த்தீங்களே அந்த சுபாவம் எனக்கு பிடிக்கலை”

“நான் மாத்திக்கறேன்”

“உங்க அப்பாவுக்குக்காகவா?”அவள் குரலில் இருந்த பேதத்தை அவன் உணர்ந்து கொண்டான்.

“நீ பேசுறதில் கொஞ்சமும் நியாயம் இல்லைடி …”

“ஏனாம்?”

“நீ மட்டும் என்னை எனக்காக விரும்பியா கல்யாணம் செஞ்சுகிட்டே…உங்க அம்மா சொன்னதுக்காகத் தானே?”என்று அழுத்தமான குரலில் கூறியவன் அங்கிருந்து வேகமாக கிளம்பி விட்டான்.

அதன் பிறகு இருவருமே அதிகம் பேசிக் கொள்ளவில்லை.இளவரசன் முடிந்த அளவு வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவி செய்தான்.அவள் அதை தடுக்கவும் இல்லை. பெற்றவர்களின் முன்னிலையில் இருவரும் சந்தோசமாக இருப்பதைப் போலவே காட்டிக் கொண்டனர்.ஆனால் இளவரசன் தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நினைத்தான்.

இப்படியே இருவரும் எலியும்,பூனையுமாக இருப்பதில் என்ன பலன்? கூடிய விரைவில் அவளை சமாதானப்படுத்தி தங்களுடைய குடும்ப வாழ்க்கையை எந்த வித சிக்கலும் இன்றி தெளிவாக ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தான்.

அன்று இரவு வழக்கம் போல அறையில் வந்து கீழே படுத்து உறங்க முயன்றவளை தடுத்து நிறுத்தினான் இளவரசன்.

“வந்து கட்டிலில் படுத்துக்கோ தையல்…”

“தேவை இல்லை”என்று வெடுக்கென பேசியவள் கம்பளியை தலை வரை போர்த்திக் கொண்டு உறங்க முயல அடுத்த நொடி அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

அவளை கைகளில் ஏந்திச் சென்றவன் கட்டிலில் மென்மையாக இறக்கி விட்டு  அருகில் வர,வேகமாக கட்டிலின் மறுமுனை வழியாக கீழே இறங்கினாள்.

“நான் கீழே தான் தூங்கப்போறேன் என்ன செய்வீங்க?”

“பெருசா ஒண்ணுமில்லை…மறுபடி நானே என் கையால தூக்கிட்டு வந்து கட்டிலில் படுக்க வைப்பேன்.என்ன ஒண்ணு..எல்லா தடவையும் ஒரே மாதிரி இருக்காது.எசகுபிசகா கை வேற எங்கேயாவது பட்டுட்டா என்னைக் குறை சொல்லக் கூடாது சொல்லிட்டேன்.”என்றான் கண்களில் கள்ளத்தனத்துடன்.

“ஆங்…”என்று வாய் பிளந்தாள் நாயகி.

‘இத்தனை நாளாய் சாமியார் மாதிரி இருந்துட்டு இப்ப பேசுற பேச்சை பார்’என்று எண்ணியவள் கன்னச் சிவப்பை அவனுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.

கழுத்தை ஒரு பக்கமாக நொடித்துக் கொண்டு கட்டிலின் ஒருமுனையில் படுத்தவள் உறங்க முயன்றாள்.அதற்கு அவள் மனது மனது வைத்தால் மட்டும் போதுமா? அவனும் அப்படி நினைக்க வேண்டுமே…

“தூங்கிட்டியா தையல்”

“ஆமா…”

“ஒரு பாட்டு பாடேன்..கேட்டுக்கிட்டே தூங்கறேன்”என்றான் கெஞ்சலாக…

“ஹுக்கும்…அது ஒண்ணு தான் குறைச்சல்…ஏன் இதுக்கு முன்னாடி தினமும் பாட்டு கேட்டுத் தான் தூங்குனீங்க போல”என்றாள் கிண்டலாக.

“இல்லை தையல்..நான் பிறந்ததில் இருந்து இதுவரை யாருமே என்னை பாட்டு பாடி தூங்க வச்சது இல்லை.ஒருவேளை எனக்கும் எல்லாரையும் போல அம்மா இருந்து இருந்தால் என்னை தாலாட்டு பாடி தூங்க வச்சு இருப்பாங்க இல்ல”என்று வெறுமையான குரலில் கூறியவனின் சோகம் ஏதோ ஒரு விதத்தில் அவளை தாக்கியது.கணவனின் சோகத்தை அந்த நொடியே தீர்த்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே நொடியும் தாமதிக்காமல் தன்னுடைய அழகிய குரலில் பாடத் தொடங்கினாள் நாயகி.

மன்னவா மன்னவா நீ மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ

தன்னை மறந்து பாடத் தொடங்கினாள் தையல்நாயகி.அவள் பாடி முடிக்கும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தவனின் அமைதி அவளை என்னவோ செய்தது.

‘ஒருவேளை தூங்கி விட்டாரோ’என்று எண்ணி மெல்ல அவன் புறமாக திரும்பிப் பார்த்தாள்.அதற்காகவே காத்திருந்தவனைப் போல அவளை நோக்கி வந்தவன் அவள் மடி மீது தலை வைத்து படுத்துக் கொண்டான்.

“கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமா தையல்”என்று கரகரப்பான குரலில் கேட்டவனை தள்ளி விட அவள் மனம் ஒப்பவில்லை.தாயாகி அவனை தன்னுடைய மடியில் தாங்கிக் கொண்டாள்.

“அம்மாவை நான் போட்டோல மட்டும் தான் பார்த்து இருக்கேன்டி தையல்…அவங்க குரலை கேட்டதே இல்லை.இப்ப நீ பாடி கேட்கும் பொழுது ஏக்கமா இருக்கு.அவங்க குரல் இப்படித் தான் இருக்குமோன்னு…”அவனின் குரலும் அதில் இருந்த ஏக்கமும் அவளது மனதை போட்டு வாட்டியது.

“கண்டதையும் பேசாமல் படுத்து தூங்குங்க…” என்று அதட்டியவள் இதமாக அவனது தலையை வருட தன்னை மறந்து உறங்கினான் இளவரசன்.

உறங்கும் கணவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த நாயகி விடியலின் அருகாமையில் உறக்கத்தை தழுவினாள்.

Facebook Comments Box

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here