மன்னவன் பைங்கிளி 19

0
2165

“தையல்…இங்கே வா” குளியல் அறையின் உள்ளே இருந்து குரல் கொடுத்தான் இளவரசன்.

‘ஹையோ…மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா?…காலையில் இருந்து இவன் செய்யும் அக்கப்போருக்கு அளவில்லாம போச்சே…’ என்று நொந்து கொண்டவள் வேண்டாவெறுப்பாக குளியல் அறையை நோக்கி சென்றாள்.எதற்கும் இருக்கட்டும் என்று ஜாக்கிரதையாக இரண்டடி தள்ளி நின்றே அவனிடம் பேசினாள்.

“எதுக்கு கூப்பிட்டீங்க? சீக்கிரம் சொல்லுங்க..எனக்கு நிறைய வேலை இருக்கு”

“புருஷன் குளிக்கப் போறேன்..வந்து முதுகு தேய்ச்சு விடு”என்றான் சட்டமாக

“ஆங்..”என்று வாய் பிளந்தவள் நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டு கழுத்தை வேகமாக நொடித்தாள்.

“இத்தனை நாளும் நான் தான் வந்து அய்யாவுக்கு குளிப்பாட்டி விட்டேனோ.ஒழுங்கா குளிச்சுட்டு வந்து சேருங்க…”என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பியவள் அங்கிருந்து நகர முயல ஒரே இழுப்பில் அவளை பாத்ரூமின் உள்ளே இழுத்து இருந்தான் இளவரசன்.

இடுப்பில் துண்டோடு அவன் நின்று இருந்த கோலம் அவளை கிளர்ச்சியுற செய்ய வேகமாக பார்வையை திருப்பி அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள் நாயகி.

”ஒழுங்கா நீயே முதுகு தேய்ச்சு விடு..இல்லேன்னா அத்தையை கூப்பிட்டு சொல்லுவேன்..உங்க பொண்ணு எனக்கு முதுகு தேய்ச்சு விட மாட்டேங்கிறான்னு”

“கருமம்…கருமம்..இதை எல்லாமா அம்மா கிட்டே சொல்லுவீங்க…”

“நீ செய்யலேன்னா அத்தை கிட்டே மட்டும் இல்லை…ஊருக்கே சொல்லுவேன்”

“செஞ்சு தொலைக்கிறேன்”என்று ஆத்திரத்தில் சொல்லி விட்ட பொழுதிலும் அவளால் அதை செய்ய முடியவில்லை.

கட்டிய கணவன் தான்.இருந்தாலும் ஏனோ அவளால் நிமிர்ந்து அவனைப் பார்க்க முடியவில்லை.திருமணம் ஆனதில் இருந்தே அவளை தள்ளியே வைத்து இருந்தவன் திடீரென்று காட்டும் நெருக்கத்தை அவளால் சட்டென்று ஏற்றுக் கொண்டு அவனை நெருங்க முடியவில்லை.கைகளில் மெல்லியதாக ஒரு நடுக்கம்.அவனுடைய முதுகு வரை கைகளை கொண்டு போனவள் கடைசி நொடியில் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

வெட்கம் தாளாமல் கதவை திறந்து கொண்டு வெளியே ஓட முயன்றவளின் எண்ணத்தை நொடியில் தடுத்து நிறுத்தியவன் தன்னுடைய கைகளுக்குள் அவளை கொண்டு வந்தான்.திகைத்துப் போய் விழி விரித்து அவனைப் பார்த்தவள் அவனுடைய பார்வை மாற்றத்தில் அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்.

‘அப்பப்பா…என்ன மாதிரியான பார்வை இது…தொடாமலே பார்வையால் அவளை அணைத்துக் கொண்டிருந்தான்.விரல் தீண்டாமல் அவள் மேனியை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்.அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் வந்து மோதியது.நொடிகளில் அவன் மூச்சின் வெப்பம் அதிகரித்து விட்டதை போல ஒரு மாயை அவளுக்கு.நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்கவும் அஞ்சியவளாய் தரையில் தன்னுடைய பார்வையை பதித்துக் கொண்டாள்.

அந்த நொடி அவளுக்கும்,அவனுக்கும் இடையில் இருந்த பிணக்குகள் காணாமல் போய் விட்டன.தன்னை ஆசையுடன் நெருங்குபவன் தன்னுடைய கணவன் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்க அவள் முகத்தில் ஆனந்த மலர்ச்சி உண்டாகியது.

அவள் முகத்தை கைகளால் ஏந்தியவன் அவள் கண்ணோடு கண் கலக்க வெகுவாக போராடினான்.நாணத்தில் முகம் சிவந்து அவனை நிமிர்ந்து பார்க்கவும் மறுத்து விட்டாள்.

“ஹே…என்னைப் பாருடி…அட..பாருன்னு சொல்றேன் இல்ல”போதையேறிய குரலுடன் அவன் பேச,

“ஹுஹும் மாட்டேன்”என்று மறுப்பாய் தலையை அசைத்து மறுத்துக் கொண்டிருந்தாள் நாயகி.

“ம்ச்…பாருன்னா”என்று உரிமையுடன் அவன் உத்தரவு போட, தன்னையும் அறியாமல் அவள் விழி திறந்து அவனைப் பார்த்தாள்.

அந்த நொடிக்காகவே காத்திருந்தவன் போல தன்னுடைய முதல் முத்திரையை வன்மையாக அவள் இதழில் பதித்தான்.நொடிகள் கடக்க,கடக்க அவனின் வேகம் கூடியதே ஒழிய குறையவில்லை.அவன் கைகள் தன்னவளை உணர்ந்து கொள்ளத் துடித்து தன்னுடைய தேடலைத் தொடர நாயகியோ திணறித் தான் போனாள்.

சில நிமிடங்கள் மூச்சு விட்டு இளைப்பாறுவதற்காக அவளை விடுவித்தவன்,அடுத்த நொடியே மீண்டும் அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.இடையில் அழுத்தமாக பதிந்த அவன் கரங்களும்,காதோரம் சீறலாக ஒலித்த அவன் சுவாசமும் அவளை திக்குமுக்காட செய்தது.

இருக்கும் இடம் அறிந்து எந்த நேரம் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்ந்து கொண்டவள் அவன் கொஞ்சம் அசட்டையாக இருந்த நேரம் அவனை தள்ளி விட்டு வெளியே ஒடி வந்து விட்டாள்.

“சரியான முரடன்”என்று அவனது காதுகளில் விழும்படி திட்டிவிட்டு ஓடியவளைக் கண்டு அவனுக்கு உல்லாசம் பொங்கி வழிந்தது.

“இதுக்கே எனக்கு இப்படி முரட்டுப் பட்டம் கட்டறியே?இன்னும்…”என்று வேண்டுமென்றே குரலை உயர்த்தி அவன் கத்த,வீட்டுக்குள் ஓடியவள் மீண்டும் அவனை நோக்கி ஓடி வந்தாள்.

“ஏன் இப்படி கத்தி வைக்கறீங்க…வீட்டில் யார் காதுலயும் விழுந்து வைக்கப் போகுது…”

“நீ பக்கத்திலேயே இரு..நான் கத்தி பேசலை..நீ தள்ளி நின்னுகிட்டா நான் சத்தமா பேசினாத் தானே உன் காதில் விழும்…”அவன் நியாயம் பேசினான்.

‘சரியான திருடன்’ செல்லமாக அவனை மனதுக்குள் வைதபடியே அவனுக்கு அருகில் நின்று அவனது தேவைகளை பூர்த்தி செய்தாள்.ஜாக்கிரதையாக இரண்டு அடி தள்ளி நின்று தான்.

ஒருவழியாக அவனை பண்ணைக்கு அனுப்பி வைத்து விட்டு மனம் முழுக்க கணவனைப் பற்றிய இன்ப நினைவுகளில் மூழ்கி இருந்தாள் நாயகி.மதியம் சமையல் வேலையை முடித்து விட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினாள். இவன் ஒருவனுக்கு மட்டுமாக சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவள் அலைய வேண்டாம் என்று சொல்லி தினமும் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து விடுவான்.அன்று மதிய சாப்பாட்டிற்கு வந்தவன் மாலை கோவிலுக்கு செல்ல அவளை தயாராக இருக்கும்படி உத்தரவை இட்டு விட்டு பண்ணைக்கு கிளம்பி போய் விட்டான்..

கணவனுடன் முதன்முதலாக தனித்து செல்கிறோம் என்ற நினைவே அவளுக்கு உற்சாகத்தை கொடுத்தது.வெண்பட்டில் சிகப்பு கரையிட்ட பட்டுப்புடவையை அணிந்து கொண்டவள் முதன்முதலாக தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டாள்.சிகப்பில் கல் வைத்த ஜிமிக்கியும்,கழுத்தில் மெல்லியதான நெக்லசும் அணிந்து கொண்டாள். தலை நிறைய மல்லிகையை சூடி கண்ணாடியில் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள்.

‘அவர் இந்த அலங்காரத்தில் என்னைப் பார்த்ததும் என்ன சொல்வார்’என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே பின்னிருந்து இரு கரங்கள் உரிமையுடன் அவளை இறுக்கமாக சுற்றி வளைத்தது.

“மயக்கறடி…”என்று அவளின் காதோரம் முணுமுணுத்தவன் மெல்ல அவளை திருப்பி அவளது நெற்றியில் அழுத்தமாக தன்னுடைய இதழைப் பதித்தான்.

“இரு குளிச்சிட்டு வந்திடறேன்”என்று அவளின் கன்னத்தில் லேசாக தட்டி விட்டு குளித்து முடித்து வந்தவன் கோவிலுக்கு செல்வதற்கு தோதாக வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

கணவனின் தோற்றத்தில் மயங்கிப் போய் நின்றவளைப் பார்த்து லேசாக கண் சிமிட்டினான்.

“என்னடி மச்சான் எப்படி இருக்கேன்?”என்று கண் சிமிட்டிக் கேட்க அவளோ வெட்கத்துடன் அந்த இடத்தை விட்டு ஓடி முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த தாயிடமும்,மாமனாரிடமும் சரண் அடைந்தாள்.

வெட்கத்தில் சிவந்து இருந்த அவளது முகம் வீட்டுப் பெரியவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சியையே கொடுத்தது.

“அப்பா…நானும் என் பொண்டாட்டியும் கோவிலுக்கு போய்ட்டு வர்றோம்”என்று சொன்னவன் அவர்கள் இருப்பதையும் பொருட்படுத்தாது அவளின் கையோடு கை கோர்த்துக்கொண்டு வாசலில் இருந்த பைக்கில் அவளை அமர வைத்தான்.அந்தக் காட்சியை கண்ட பெற்றவர்கள் இருவரின் முகமும் பூரித்துப் போனது.

குமரேசனுக்கும்,சுமதிக்கும் அந்த திருமணம் நடக்கும் பொழுதே இளவரசனை எண்ணி மிகுந்த கவலையில் இருந்தார்கள்.அந்த திருமணத்தை நடத்தி முடித்ததும் இனி எல்லாம் சரியாகி விடும் என்று அவர்கள் நினைத்ததற்கு மாறாக உடனடியாக இளவரசன் வெளியூரில் வேலையைத் தேடிக் கொண்டு சென்றுவிட மனதளவில் இருவருமே பாதிக்கப்பட்டு இருந்தனர்.

அதையும் தாண்டி ஊருக்கு போனவன் ஒரு மாதம் வீட்டுப் பக்கமே வராமல் இருந்தது அவர்களுக்கு கலக்கத்தையே கொடுத்து இருந்தது.இளவரசனின் வாழ்வையும்,நாயகியின் வாழ்வையும் இந்த திருமணத்தால் பாழடித்து விட்டோமோ என்று இருவரும் வெளியில் சொல்லாமல் புழுங்கிக் கொண்டு இருக்க,அவர்களின் அந்த கலக்கம் தேவையே இல்லை என்பதாக இருவரின் அன்னியோன்யமும் இன்று இருந்தது.

அதுவும் இளவரசன் தன்னுடைய வாயாலேயே நாயகியை பொண்டாட்டி என்று சொல்லி விட அவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள் என்றுத் தான் சொல்ல வேண்டும்.

கோவிலில் இருவரும் மனமாற இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.சாமி கும்பிட்டதும் அய்யர் கொடுத்த குங்குமத்தை தன்னுடைய கைகளாலேயே அவளுக்கு வைத்து விட்டான் இளவரசன்.இருவரின் மனமும் நிறைவாக இருந்தது.அதே நேரம் நாயகியின் மனதில் ராசுவை பற்றிய எண்ணங்கள் நெரிஞ்சி முள் போல உறுத்தத் தொடங்கியது.கணவனிடம் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி விட வேண்டும் என்று எண்ணினாள்.

வெகுநாட்களுக்குப் பிறகு கிட்டி இருக்கும் இந்த மகிழ்ச்சியை இழக்க அவள் விரும்பவில்லை.அதே சமயம் கணவனிடம் மறைத்து விட்டு குற்ற உணர்வுடன் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கவும் அவள் விரும்பவில்லை. ‘இன்று இரவு அவரிடம் கண்டிப்பாக எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும்’ என்று நினைத்தாள்.

இரவு உணவு முடிந்ததும் எல்லாரும் அவரவர் அறையில் சென்று முடங்கிக் கொள்ள எல்லா வேலைகளையும் முடித்தவளுக்கு அறைக்கு செல்ல பயமாக இருந்தது.காலையில் இருந்து கணவன் தன்னிடம் காட்டும் காதலும்,மோகமும் அவளை திணற வைத்துக் கொண்டு இருந்தது.அவளுக்கு அவனிடம் பேச வேண்டி இருந்தது.ஆனால் அவனோ பேச்சையே அனுமதிக்காதவன் போல நடந்து கொண்டான்.

இப்பொழுது அறைக்குள் சென்றால் நிச்சயம் அவளை பேச அவன் அனுமதிக்க மாட்டான் என்பதை எண்ணி அவளுக்கு கலக்கமாக இருந்தது.அறைக்குள் செல்லவே பயந்தவள் பூஜை அறைக்குள் கண் மூடி நின்று விட்டாள்.

அறையில் அவளுக்காக காத்திருந்த இளவரசன் வெகுநேரம் தாண்டியும் அவள் வருவதற்கான அறிகுறியே இல்லாததால் அவளைத் தேடி வந்தவன் பூஜை அறையில் கண்களில் கண்ணீர் வடிய நின்றவளைப் பார்த்து திகைத்துப் போனான்.

Facebook Comments
Previous PostMMK teaser 6
Next PostMMK episode 6
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here