மன்னவன் பைங்கிளி 5

2
2895

அத்தியாயம் 5

சுமதியின் முகத்திலும், நாயகியின் முகத்திலும் எந்த வேறுபாடும் இல்லை. உண்மையை சொல்லப் போனால் தாய்மை ததும்பும் முகத்துடன் அவர்கள் இருவரும் பரிமாறிய விதம் அவனுக்கு பிடித்துத் தான் இருந்தது.

இருப்பினும் ‘சாப்பிடுவதற்கு முன் அவ்வளவு வீராப்பாக பேசிவிட்டு இப்பொழுது இப்படி சாப்பிட்டால் அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்… அதிலும் இந்த வாண்டு நிச்சயமாக என்னைப் பற்றி ஏளனமாகத் தான் நினைத்துக் கொண்டு இருப்பாள்’ என்று அவனே முடிவு செய்து கொண்டு வேகமாக எழுந்து கை கழுவி விட்டு தன்னுடைய அறைக்குள்  சென்று விட, அவனுக்கு பின்னாலேயே சென்று அறைக்கதவை இரண்டு முறை தட்டி அவனது அனுமதி பெற்ற பிறகு உள்ளே சென்று அவனுக்கு காபியை நீட்டினாள் நாயகி.

அவளைப் பார்த்ததும் ஏனோ அவனால் அவளை சீண்டாமல் இருக்க முடியவில்லை.

“என்ன ரொம்ப சந்தோசமா இருக்க போல.. சாப்பாட்டை வச்சு எங்க இரண்டு பேரையும் ஏமாத்திடலாம்ன்னு நினைச்சு இருந்தியோ… அது தான் நடக்காது” என்று அவன் பேச அவளோ குனிந்த தலை நிமிர்ந்தாளில்லை.

‘திமிர் ..திமிர்.. நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்கிறா … உடம்பெல்லாம் திமிர்… பதில் பேசறாளா பார்… என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கா இவ…’

“ஏய்.. உன்கிட்டே தான் பேசறேன் காதில் விழுந்துச்சா இல்லையா?” என்று கத்த அவள் உடல் ஒருமுறை அதிர்ந்து தூக்கிப் போடுவதைப் பார்த்ததும் அவன் பார்வை மெல்ல அவளது தலை முதல் கால் வரை ஆராய்ந்தது.

அவள் மேனியில் மெல்லியதோர் நடுக்கம்… கை விரல்கள் லேசாக நடுங்கிக் கொண்டு இருந்தது.

‘ஓ.. அம்மணிக்கு என்னைப் பார்த்தா உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயமா இருக்கு போல… நல்லது தான். இவளை கொஞ்சம் உருட்டி மிரட்டி வச்சுக்கிட்டா தான் காலையில் என்னைப் பார்த்து கேலியா சிரிச்சதைப் போல இனி சிரிக்க மாட்டா’ என்று எண்ணி குதூகலமானவன் கட்டிலில் அமர்ந்து தோரணையாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவளை நன்றாக பார்வையிடத் தொடங்கினான்.

மெல்லிய கொடி போன்ற தேகம் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, தலைக்கு குளித்து கருநாகமென அடர்ந்து இருந்த கூந்தலின் நுனியில் முடிச்சிட்டு இருந்தாள். மஞ்சள் நிற பாவாடையும், குங்கும நிறத்தில் தாவணியும் அணிந்து இருந்தாள்.

“காபியை எனக்குத் தானே கொண்டு வந்த… கையில் வைச்சுகிட்டே இருந்தா எப்படி? கொண்டு வந்து கொடு…” அதிகாரமாக சொன்னவன் அவள் நடந்து வரும் அழகை கண் கொட்டாமல் ரசித்துப் பார்த்தான். வெளியே மட்டும் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டான்.

நடுங்கும் விரல்களோடு காபியை அவனுக்கு கொடுத்து விட்டு வேகமாக அங்கிருந்து செல்ல முயல அவனது அதட்டல் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

“குடிச்சு முடிச்சதும்  டம்ளரை யாரு வாங்கிட்டு போவாங்க… உன்னோட தாத்தாவா?” ஏனோ அவளிடம் பேச விரும்பியது அவன் மனம்…

அவனுடைய வார்த்தைகள் கேட்டதும் அவளின் நடை நின்று போனது.ஆனால் திரும்பவில்லை.

“உன் பேர் என்ன?”

“தை….”

“தையா தக்கான்னு ஆடுறதைப் பத்தி அப்புறம் பேசலாம்… முதலில் உன் பேரை சொல்லு…”

“தை…தையல்நாயகி”

“என்னது தையலா? ஓ… டெயிலர் அம்மாவா?” என்றான் கிண்டலாக… அவளோ அழுது விடுபவள் போல உதட்டைப் பிதுக்க அவனுக்கு என்னவோ போலானது.

‘ரொம்ப சீண்டுறேனோ’ என்று எண்ணியவன் உடனடியாக சமாதானத்திற்கு வந்தான்.

“என்ன படிச்சு இருக்க?” மென்மையாக பேசியது அவன் தானா என்ற ஆச்சரியத்தோடு அவள் நிமிர்ந்து பார்க்க அவளது கருந்திராட்சை விழிகள் அவனை கொள்ளை கொண்டது.

“இந்த வருஷம் தான் பிளஸ் டூ முடிச்சேன்…”

“மேற்கொண்டு என்ன படிக்கப் போற?”

“ஆத்தா கிட்டே தான் கேட்கணும்… அந்த ஊரில் இருந்தப்போ அந்த ராசு தொந்தரவு செய்வான் … மேலே படிக்காதேன்னு சொன்னாங்க… இப்போ என்ன சொல்றாங்களோ தெரியலை….”

“உனக்கு படிக்கிற எண்ணமிருக்கா? இல்ல என்னோட பண்ணையில் வந்து மாடு மேய்க்கிற எண்ணமா?” அவளின் ஆர்வத்தை தெரிந்து கொள்ள சீண்டினான்.

“எனக்கு படிக்கத் தான் ஆசை…” என்றாள் ரோஷமாக

“ஓ…படிக்க ஆரம்பிச்சா அந்த சாக்கை வச்சுக்கிட்டு வீட்டு வேலை எதுவும் தப்பிச்சுக்கலாம்னு நினைச்சியா?” என்று கடுமையாக கேட்டவன் எழுந்து வந்து அவள் கரங்களில் காபி டம்ளரை திணித்து விட்டு அவளின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்று அறையின் வெளியே தள்ளியவன் வேகமாக அறைக்கதவை அறைந்து சாத்தினான்.

அறையை சாத்தும் முன் அடி வாங்கிய குழந்தை போல மிரண்டு விழித்தவளை நெஞ்சில் சாய்த்து ஆறுதல் கூற வேண்டும் போல ஒரு எண்ணம் தோன்றவும் அதிர்ந்து போனான் இளவரசன்.

‘வேண்டாம் இளவரசா… அவளையும்,அவளது அம்மாவையும் இந்த வீட்டில் இருந்து அப்புறப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை செய்… அதை விட்டு விட்டு வயசுப்புள்ளயைப் பார்த்ததும் மனசை தடுமாற விடாதே…’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் தன்னை சமாளிக்க சில கணங்கள் எடுத்துக் கொண்ட பிறகே அறையை விட்டு வெளியேறினான். யாரிடமும் பேசாமல் பண்ணைக்கு சென்று விட்டான்.

அவனது நடவடிக்கைகளில் தெரிந்த ஒதுக்கம் குமரேசனை பெரிதாக பாதிக்கவில்லை. அவர் மகனைப் பற்றி அவருக்கு தெரியாதா? இரண்டே நாளில் மீண்டும் பழையபடி ஆகிடுவான் என்பதில் உறுதியாக இருந்தார். சுமதி தான் கவலையுடன் இருந்தார்.

“என்ன அண்ணே… தம்பி உங்ககிட்டே கூட பேசாம போவுது… நாங்க இங்கே வந்ததினாலயா?”

“அட நீ வேற தங்கச்சி… அவனுக்கு உங்களுக்கு பணம் , காசு செலவு ஆகுதேன்னு வருத்தம் எல்லாம் கிடையாது. பயலுக்கு வீட்டுக்குள்ளே புதுசா இரண்டு பெண்கள் வந்ததில் கொஞ்சம் சங்கோஜமா இருக்கான்… பொண்ணுங்க வாடையே படாமல் வளர்ந்தவன் இல்லையா? அவ்வளவு தான்… கொஞ்சம் கொஞ்சமா தெளிஞ்சுக்குவான். கல்யாண வயசு வந்துடுச்சு… இன்னும் இப்படியே இருந்தா வேலைக்கு ஆகுமா என்ன? அப்புறம் நாளைக்கு இவனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்து கட்டி வச்சா அவளை தனியா வீடு எடுத்து தங்கிக்க சொல்லுவான். அந்த அளவுக்கு வில்லங்கம் புடிச்சவன்” என்று அவர் கூற சுமதிக்கும், நாயகிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

நாயகியால் மட்டும் குமரேசன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘அவருக்கு நாங்கள் இங்கே வந்ததில் சங்கோஜம் எதுவும் இல்லை. கொஞ்ச நேரம் முன்னே எந்த அந்த மிரட்டு மிரட்டினார். இப்பொழுது நல்ல பிள்ளை போல ஒன்றுமே பேசாமல் போறார். உண்மையில் அவருக்கு பெண்களைப் பிடிக்காதோ அல்லது ஏதேனும் காதல் தோல்வியால் பெண்களை வெறுக்கத் தொடங்கி விட்டாரோ’ என்றெல்லாம் மனதுக்குள் எண்ணியவள் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் மௌனமாக வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

Facebook Comments Box
Previous PostVanavil Sirpame – Book
Next PostMannavan painkili 6
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here