மன்னவன் பைங்கிளி 7

0
3323

அன்று கார்த்திகை தீபம் அவர்கள் வீடு முழுக்க தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.வாசலில் அழகிய ரங்கோலியும்,அதை சுற்றிலும் விளக்குகளால் நிறைந்து இருக்க வீடே ரம்மியமாகத் தோற்றமளித்தது.சிறு வயதில் இருந்தே இளவரசனுக்கு தன்னுடைய வீட்டில் இப்படி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கொள்ளை ஆசை.ஆனால் ஒருமுறை கூட அதை அவன் தந்தையிடம் சொன்னது இல்லை.ஒருவேளை சொல்லி இருந்தால் அவர் செய்து இருப்பாரோ என்னவோ..

அப்பாவிற்கு வீண் சிரமம் கொடுக்கக் கூடாது என்று சிறுவயதில் இருந்தே ஆசைகளை கட்டுபடுத்தி பழகியவன் தன்னுடைய இந்த ஆசையையும் மனதிலேயே மறைத்துக் கொண்டான்.

இன்று தன்னுடைய ஆசைப்படியே தன்னுடைய வீடு ஜொலிப்பதை கண்டவனால் அதிலிருந்து கண்களை பிரிக்க முடியவில்லை.வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த நாயகியைக் கண்டு இமைக்கவும் மறந்து சிலையாகவே மாறிப்  போனான் இளவரசன்.

இருளைக் கிழித்துக் கொண்டு பரவும் சூரியக் கதிர்களைப் போல அவனது மனதுக்குள் சத்தமின்றி அந்த நொடி புகுந்து கொண்டாள் நாயகி.இளம்பச்சை நிற தாவணியில்,தலை நிறைய பூ சூடி கைகளில் அகல் விளக்கை கைகளில் ஏந்திக் கொண்டு சிரித்த முகத்துடன் அவள் வந்து நின்ற கோலம் அவன் மனதை மயக்கியது.

அன்று காலையில் பார்த்ததில் இருந்தே எரிந்து விழுந்தவனின் இப்பொழுதைய ஆழ்ந்த பார்வையைக் கண்டு மூச்சு விடவும் மறந்து போனாள் பாவையவள்.இளவரசனின் பார்வை நாயகியின் பார்வையைக் கவ்விக் கொண்டது.அவனது கண்கள் இதயத்தின் அடி வரை சென்று பேச முயலும் பாஷை புரியாமல் அவள் தடுமாறித் தான் போனாள்.இம்மி அளவு கூட பார்வையை மாற்றாமல் அவன் பார்த்த பார்வையில் அவள் உள்ளம் படபடத்தது.இருவரின் நிலையையும் உணராது இயல்பான மகிழ்ச்சியுடன் குமரேசன் பேசத் தொடங்கிய பிறகே இருவரும் தன்னிலை மீண்டார்கள்.

“எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா தாயி…இவனோட அம்மா இருந்த வரை தான் இந்த வீட்டில் கார்த்திகை தீபம் எல்லாம்.அதற்கு பிறகு இதெல்லாம் நான் செய்ததே இல்லை. ரொம்ப வருஷம் கழிச்சு இன்னைக்குத் தான்  எங்க வீடு, வீடு மாதிரி இருக்கு.சும்மாவா சொன்னாங்க பெண்களைப் பத்தி …நேத்து வரை வெறும் கட்டிடமா இருந்த இடம் வந்த ஒரே நாளில் வீடா மாறினது உன்னால தான் தாயி”என்று அவர் புகழ நாயகிக்கோ கூச்சமாக இருந்தது.

வெட்கத்தோடு நிமிர்ந்து இளவரசனைப் பார்த்தவள் அவனது ஆத்திரம் நிறைந்த பார்வைக்கு காரணம் தெரியாது குழப்பத்துடன் பார்வையை மாற்றிக் கொண்டாள்.அது வரை கண்களால் அவளை கபளீகரம் செய்து கொண்டு இருந்தவனின் பார்வை எதனால் மாறியது என்று புரியாமல் குழம்பினாள் அவள்.குமரேசன் முகம் கழுவ கொல்லைப் புறம் சென்று விட தன்னைத் தாண்டி செல்ல முயன்றவளின் பாதையின் முன்னே குறுக்கே கை நீட்டி தடுத்து நிறுத்தினான்.

“இதோ பார்…எனக்கு இந்த வீட்டில் பொம்பளைங்க இருக்கிறது சுத்தமா பிடிக்கலை…நானே அப்பாகிட்டே பேசி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பக்கத்துக்கு தெருவில் இருக்கும் வீட்டை பேசி அங்கேயே நீங்க தங்குறதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சு தர்றேன்…ஒழுங்கா அதுவரைக்கும் இருக்கிற இடம் தெரியாம இருந்து பழகுங்க.அதை விட்டு சமையல் செய்யுறேன்,விளக்கு ஏத்துறேன், பூஜை பண்ணுறேன்னு… சொல்லிக்கிட்டு ஏதாவது செஞ்சுக்கிட்டு இருந்தன்னு வச்சுக்கோ…அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்”என்றவன் அடுத்த நொடி விருட்டென்று சென்று விட நாயகியின் கண்கள் கலங்கி கண்ணீர் வழியத் தொடங்கியது.

பெண்களே பிடிக்காத ஒருவனுடைய வீட்டில் அவனை அண்டி வாழ வேண்டி இருக்கிறதே என்று எண்ணியவள் இறந்து போன தந்தையை எண்ணி கண்ணீர் வடிக்கலானாள்.அவரது தந்தை கணேசன் போன மாதம் விபத்தில் இறக்கும் வரை அழுகை என்பதையே அவள் அறிந்திருக்கவில்லை என்பது தான் நிஜம்.

என்ன தான் சுமதி மகளுக்காக தன்னை தெம்பாக காட்டிக் கொண்டாலும் அவரும் அந்த சமயத்தில் நொறுங்கித் தானே போனார்.அந்த சமயத்தில் உற்றார் உறவினர் யாருமே இல்லாமல் ஊரில் பழக்கமானவர்கள் தானே தந்தையின் இறுதி சடங்கை முன்னே நின்று செய்து வைத்தார்கள்.

ஏன் இவ்வளவு தூரம் பாசமாக இருக்கும் குமரேசன் மாமா கூட அப்பாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லையே.பேசாமல் பழையபடி தங்கள் வீட்டிற்கே போய் விடலாம் என்று எண்ணியவளை தடுத்து நிறுத்தியவன் ராசு மட்டுமே.

ராசு… படிக்காதவன்… பண்பில்லாதவன்… அவனளவில் அவன் நல்லவனே. அவனுக்கு நாயகியின் மீது எப்பொழுதுமே ஆசை உண்டு.வேலை,வெட்டிக்கு செல்வதில் எல்லாம் துளியும் விருப்பம் இல்லாதவன்.அவனுக்கு நல்லா சாப்பிடணும்,நல்லா உடுத்தணும்…அவ்வளவு தான்.மற்றபடி வேலைக்கு போவதை பற்றி எல்லாம் பேசினாலே அசட்டை செய்து விடுவான்.

நாயகியை அவன் தொல்லை செய்ய மாட்டான்.ஆனால் என்றேனும் அவள் தனியாக பள்ளி முடித்து வீடு திரும்பினால் அவளுக்கு துணையாக அவளுக்கு பின்னாலேயே சைக்கிளை தள்ளியபடி வருவான்.அவ்வளவு தான்.அதற்கு மேல் எந்த தொந்தரவும் கிடையாது.

அவனால் பெரிதாக எந்த தொந்தரவும் இல்லாததால் அவளும் வீட்டில் யாரிடமும் அவனைப் பற்றி எதையும் சொல்லவில்லை.ஆனால் தந்தை இறந்த பிறகு அவனது தொல்லைகள் ஆரம்பித்தது.எங்கேனும் சென்று விட்டு இவள் தனியாக வந்தால்,அவளை மறித்து நின்று பேசுவான்.

“உனக்காகத் தான் புள்ள டிவிஎஸ் வண்டி எடுத்து வந்திருக்கேன்.பின்னாடி உட்காரு…வீட்டுல இறக்கி விடறேன்.”என்று காவிப் பற்கள் தெரிய அவன் சிரிக்கும் கோணல் சிரிப்பைக் கண்டு முதன்முதலாக அவளுக்கு பயம் வந்தது.

ஏற்கனவே தந்தையை இறந்து விட்டு துக்கத்தில் இருக்கும் தாயை மேலும் நோகடிக்க விரும்பாமல் இவள் அமைதி காக்க , அதையே சாக்காக வைத்துக் கொண்டு அவன் வீட்டுப் படியேறி வந்து சுமதியிடம் அவளை திருமணம் செய்து தரும்படி நச்சரிக்கத் தொடங்கினான்.

சுமதி அதிர்ந்தே போனார்.காரணம் அவனுக்கு திருமணம் ஆகாவிட்டாலும் அவனுக்கு முப்பத்தி மூன்று வயது…நாயகிக்கோ பதினெட்டு…அது கூட பரவாயில்லை.ஒழுக்கமான நல்ல பையனாக இருந்து இருந்தால் அவரும் சந்தோசமாக திருமணம் செய்து வைத்து இருப்பார்.

அவனுக்கு பெண்கள் பழக்கம் மட்டும் தான் கிடையாது.ஆனால் அதைத் தவிர அத்தனை கெட்ட பழக்கங்களும் இருந்தது.வீட்டில் பெற்றவர்களை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டு வந்து அதை வைத்து சூதாடுவான்,குடி,கஞ்சா என்று எல்லா பழக்கமும் உண்டு.வேலைக்கு போய் சம்பாதிக்கும் எண்ணமெல்லாம் அவனுக்கு அறவே கிடையாது என்பது அந்த ஊரில் இருந்த பெரும்பாலானோர்க்குத் தெரியும்.

அப்படிப்பட்டவனுக்கு தன்னுடைய செல்ல மகளை மணமுடித்துத் தருவதா? ‘முடியவே முடியாது’ என்று அவர் மறுத்து விட ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாமல் அவன் சென்று விட்டான். சுமதி இனி அவனால் தொந்தரவு இருக்காது என்று எண்ணி ஏமாந்து போனார்.ராசு அவனது வேலையை காட்ட முடிவு செய்து விட்டான் என்பது அவருக்குத் தெரியாமல் போனது தான் விதியின் சதி.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here