மன்னவன் பைங்கிளி 8

0
3164

அத்தியாயம் 8

அன்றைய இரவுப் பொழுதில் சாப்பிடும் பொழுது சுமதி மட்டுமே குமரேசனுக்கும்,இளவரசனுக்கும் பரிமாறினார்.நாயகி அங்கே இல்லை.சப்பாத்தியை குருமாவில் தோய்த்து வாயினுள் திணித்தபடியே தங்கையிடம் பேசினார் குமரேசன்.

“சுமதி…நாயகி எங்கே காணோம்?”

அதே கேள்வி தான் இளவரசனுக்கும்.ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“வானம் மழை வர்ற மாதிரி இருக்கு அண்ணா…அதான் கொல்லைப்புறம் காய வச்சு இருக்கிற துணியை உள்ளே எடுத்துட்டு வந்து வச்சுட்டு தீபத்தை எல்லாம் குளிர வைச்சு வீட்டுக்குள் எடுத்து வர சொல்லி இருந்தேன்.அதை தான் செஞ்சுக்கிட்டு இருப்பா”

“ஓ..சரி”என்று சொல்லி விட்டு அவர் தொடர்ந்து உணவை உண்ண இளவரசனால் அப்படி இருக்க முடியவில்லை.

‘அவளிடம் அப்படி கடுமையாக பேசியதால் தான் தன் முன்னே வர விரும்பாமல் இப்படி நடந்து கொள்கிறாளோ’ என்று அவனுக்கு தோன்றத் தொடங்கியது.வேகமாக சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான். கை கழுவி விட்டு முதலில் கொல்லைப் பக்கம் அவளைத் தேடினான்.கொடியில் துணிகள் எதுவுமில்லாமல் காலியாக இருக்க,வேகமாக வீட்டின் முன்னே சென்று பார்த்தான்.

ஒவ்வொரு விளக்கையும் பூவால் குளிர வைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.என்ன தான் சுற்றிலும் இருள் கவிழ்ந்து இருந்தாலும் விளக்கின் அருகே இருந்ததால் அவள் முகம் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.அவள் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிவதையும், அதை துடைத்துக் கொண்டே வேலை பார்ப்பதையும் பார்த்தவன் துணுக்குற்று வேகமாக அவளின் அருகில் சென்றான்.

“இப்ப எதுக்கு இப்படி அழுது டிராமா பண்ணுற…இப்ப நீ அழுறதை எங்க அப்பா பார்க்கணும்…அவர் காரணம் கேட்கணும்..உடனே என்னைக் கை காட்டி மாட்டி விடலாம்னு பார்க்குறியா?”

அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காதவள் பயந்து போய் எழ முயற்சி செய்ய தடுமாறி கீழே விழப் போக, கையில் வைத்திருந்த விளக்குகளை கீழே போட்டு விடுவோமோ என்ற பயத்தில் அருகில் நின்று கொண்டு இருந்த  இளவரசனின் தோள்களை ஒரு கையால் இறுக்கமாக பற்றிக் கொண்டு நேராக நிற்க முயற்சி செய்தான்.

அவனும் அவள் கீழே விழுந்து விடப் போகிறாளோ என்ற பதட்டத்தில் அவளது இடையைப் பற்றி நேராக நிறுத்தினான்.அப்பொழுது அவன் கரங்கள் அவளது வெற்றிடையில் பதிய,அதன் மென்மையை உணர்ந்தவன் அதிலே கரைந்து காணாமல் போக விரும்பினான்.

தனக்குள்ளே தோன்றும் மாற்றங்கள் அவனை அதிர்ச்சி அடைய செய்தது.அவனின் நிலை இப்படி இருக்க, நாயகியோ கீழே விழுந்து விட இருந்தோமே…ஒரு வேளை விளக்குகளை கீழே போட்டு இருந்தால் அபசகுனம் ஆகி இருக்குமே’என்பதை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தாள்.

ஒருவேளை அவள் மேனியில் இளவரசனின் கரங்கள் அத்துமீறி இருந்தாலோ,அல்லது விரும்பத்தகாத விதத்தில் ஊர்ந்து இருந்தாலோ அவள் எளிதாக கண்டு கொண்டிருப்பாள்.இப்பொழுது இருந்த பதட்டத்தில் அது அவள் கவனத்தில் படவே இல்லை என்பது தான் நிஜம்.

அவள் தன்னை சமப்படுத்திக் கொள்ளும் வரை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டவன் அடுத்த நிமிடம் அவள் கையை வெறுப்புடன் தட்டி விட்டான்.

“இங்கேயே டேரா போட அடுத்த திட்டமா? அடுத்த வீட்டு ஆம்பிளை மேல வந்து இப்படி விழறியே…கொஞ்சமாவது பொண்ணுங்கிற நினைப்பு இருக்கா?ஆம்பிளை ஒரு அடி பக்கத்தில் வந்தா எட்டு அடி தள்ளி நிற்கிறவ தான் பொண்ணு.நீ எல்லாம் சீ..சீ’”என்று அவளின் நெஞ்சில் குத்தீட்டியை பாய்ச்சியவன் அடுத்த நொடி அங்கே நில்லாமல் விடுவிடுவென தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான்.

உண்மையில் அவள் தன் மேல் அவள் சாய்ந்திருந்த அந்த ஒரு நிமிடத்தில் அவனது ஹார்மோன்கள் எக்குத்தப்பாக வேலை செய்யத் தொடங்கின.பிறந்ததில் இருந்தே எந்தப் பெண்ணும் அவனை தொட்டது இல்லை.அவனது அன்னை உட்பட.

கரடுமுரடான தந்தையின் கரங்களையே உணர்ந்து இருக்கிறான் இளவரசன். முதன் முதலில் உணர்ந்த பெண்ணின் மெல்லிய ஸ்பரிசம் அவனுக்குள் ஏதேதோ மாற்றங்களை செய்தது என்பது மட்டும் நிஜம்.அவளுடைய பெண்மையின் மென்மை அவனுக்குள் ஊற்றெடுத்து பொங்கி பிரவாகம் செய்யத் துடிக்க எங்கே ஏதேனும் அசம்பாவிதமாக செய்து வைத்து விடுவோமோ என்ற அச்சத்தினாலேயே அவளிடம் கோபமாக பேசிவிட்டு அந்த இடத்தில் நிற்காமல் சென்று விட்டான்.

அறைக்குள் வந்தவன் வெகுநேரமாக குறுக்கும் நெடுக்குமாக அறைக்குள் நடந்து கொண்டிருந்தான்.நாயகி தன்னுடைய தோள்களை பற்றிய அந்த நிமிடம் அவனுக்குள் முதன்முறையாக ஆணுக்கே உரிய உணர்வுகள் கிளர்ந்து எழத் தொடங்கியது.

ஒருவேளை அவனது அன்னையுடனோ,அல்லது மற்ற பெண்களுடனோ இயல்பாக தொட்டு பேசி இருந்தால் அவனுக்கு அப்படி ஒரு  கிளர்ச்சி தோன்றி இருக்காதோ என்னவோ…முதன் முறையாக ஒரு பெண்ணால் அவனது உணர்வுகள் தூண்டப்பட்டு இருந்தது.அவனது உணர்வுகள் பேயாட்டம் போடத் தொடங்கியது.

அவளை மீண்டும் ஒருமுறை இறுகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றி அடுத்த சில நொடிகளிலேயே பெரும் வேட்கையாக மாறிப்போனது. பெரும்பாடுபட்டு தன்னுடைய உணர்வுகளை அடக்கியவனுக்கு கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது.

அவள் என்னவோ கீழே விழுந்து விடாமல் இருக்கத் தான் அவனது தோளைப் பற்றினாள்.ஆனால் இவனுக்கோ … அவள் வேண்டுமென்றே தன்னுடைய உணர்வுகளை தூண்டி விட்டு தன்னை அவளுக்கு அடிமையாக்க முயற்சிப்பது போல தோன்றியது.அவளுடைய அழகில் மயங்கி விட்டால் அதற்குப்பிறகு அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டேன் என்பதற்காகத் தான் அவள் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் என்று உறுதியாக நம்பத் தொடங்கினான் இளவரசன்.

இளவரசனின் மனம் தடுமாறத் தொடங்கியது.அவனது மனமே அவனுக்கு எதிரியாகிப் போனது.ஒருபுறம் அவள்பால் சாய சொல்ல,மறுபுறம் அவளை விட்டு தள்ளி நிற்க சொல்லி எச்சரிக்க இரண்டுக்கும் இடையில் எதை செய்வது என்று புரியாமல் திண்டாடினான் என்பது தான் உண்மை.

வீட்டிற்கு வந்தே ஒரே நாளில் ஒரு பெண் தன்னை ஆட்டுவிப்பதை அவனால் ரசிக்க முடியவில்லை.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவளை அனுப்பி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பிறகே உறங்க முடிந்தது அவனால்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here