மன்னவன் பைங்கிளி 9

0
2819

அத்தியாயம் 9

காலை விடிந்தவுடன் கண் விழித்து விட்டாலும் படுக்கையை விட்டு எழாமல் அப்படியே படுத்து இருந்தான் இளவரசன்.

‘எதற்கு வம்பு? நான் காலையில் வெளியே போய் நின்றால் அவள் கேலியாக எதையாவது பேசி வைப்பாள் எனக்கு கோபம் வரும்… கோபத்தில் எதையாவது செய்தாலும் செய்து விடுவேன். பிறகு அப்பா காதிற்கு விஷயம் போனால் ஆபத்து. அவர்களாகவே இந்த வீட்டை விட்டு கிளம்புவதற்கு என்ன வழியோ அதை செய்ய வேண்டும்’ என்று யோசித்தபடியே படுத்து இருந்தவன் நன்றாக விடிந்ததும் குளிப்பதற்கு பின் கட்டில் இருக்கும் பாத்ரூமிற்கு செல்ல அங்கே கண்ட காட்சியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை.

பெரிதாக ஒன்றுமில்லை… கிணற்றடியில் சுமதியும் ,நாயகியும் சேர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அதில் எல்லாருடைய துணிகளும் கலந்து இருந்தன. நேற்று இரவு இவன் கழட்டி போட்டு இருந்த அவனது அழுக்கு உடைகளும் அதில் இருக்கவே வேகமாக அங்கே போய் நின்றவன் சுமதியை சங்கடத்துடனும், நாயகியை ஆத்திரத்துடனும் பார்த்து விட்டு நாயகி துவைத்துக் கொண்டு இருந்த அவனது சட்டையையும், அடுத்து துவைப்பதற்காக அவள் எடுத்து வைத்திருந்த அவனது உடைகளையும் வெடுக்கென்று கையில் வாரிக்கொண்டு அருகில் இருந்த வாளியில் போட்டு எடுத்துக் கொண்டான்.

அவர்கள் இருவருக்கும் அவன் அப்படி செய்வதற்கான காரணம் சுத்தமாக புரியவில்லை. இது இயல்பாக எல்லா வீட்டிலும் நடக்கக்கூடிய விஷயம் தான். பெண்கள் தங்கள் துணிகளை துவைக்கும் பொழுது, வீட்டில் வேறு யாருடைய அழுக்குத் துணி இருந்தாலும் அதையும் சேர்த்து துவைத்து வைத்து விடுவார்கள். அது இயல்பாக அவர்கள் செய்வது என்பதே இவனுக்கு தெரியாதே.

தன்னுடைய உடையை பெண்கள் துவைப்பதா என்று சங்கடத்துடன் எண்ணித் தான் அவன் அவைகளை வாங்கிக் கொண்டான். ஆனால் நாயகியின் மீது அவனால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை.

‘அது எப்படி ஒரு வயசுப் பையன் சட்டையை இவ எடுத்து துவைக்கலாம்’ என்று எண்ணியபடி அவளை முறைத்துக் கொண்டே நகர்ந்தான்.

அந்த இடத்தை தாண்டும் முன் நின்ற இடத்தில் இருந்து திரும்பாமலே  பிசிறில்லாத குரலில் பேசத் தொடங்கினான்.

“இனி எப்பவும் என்னோட டிரெஸ்ஸை நானே துவைச்சுக்கிறேன்… உங்க இரண்டு பேருக்கும் அந்த சிரமம் வேண்டாம்.” என்று விட்டு வேகமாக குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள நாயகிக்கு சலிப்பாக இருந்தது.

‘அடப் போடா.. .நீ எப்போ.. என்ன செய்வனு ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. எது செஞ்சாலும் குத்தமா தான் இருக்கு உனக்கு… மொத்தத்தில் நாங்க இங்கே இருப்பது பிடிக்கவில்லை. அதனால எங்களை கண்டாலே உனக்கு வேப்பங்காயாத் தானே கசக்கும்’ என்று எண்ணியவள் அடுத்த வேலைகளை கவனிக்க சென்று விட அத்தோடு அதை மறந்து விட்டாள். ஆனால் சுமதியின் முகம் யோசனையை தத்தெடுத்தது.

மகளை மிச்ச துணிகளை துவைக்க சொல்லி விட்டு குமரேசனைத் தேடி சென்றார்.

“அண்ணே…உங்க கிட்டே கொஞ்சம் பேசணுமே?”

“சொல்லு தங்கச்சி…”

சுமதி ஒன்று விடாமல் நடந்த விவரங்கள் அனைத்தையுமே சொல்ல, பொறுமையாக கேட்டுக் கொண்ட குமரேசன் சுமதியின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்ததும் கலகலவென்று சிரிக்கத் தொடங்கினார்.

“அட … நீ வேற தங்கச்சி… பயலுக்கு எப்பவும் பெண்கள்னா ஆகாது… அதுதான்.. வேற ஒண்ணுமில்லை.. நீ விசனப்படாதே”

“எப்படி அண்ணா கவலைப்படாமல் இருக்க முடியும்? பொண்ணுங்க மேல தம்பி இவ்வளவு வெறுப்பா இருக்கும் பொழுது….”

“அடடா.. அதுக்குள்ளே உன்னோட கற்பனை குதிரையை தட்டி விட்டாச்சா? அவனுக்கு பெண்கள் மீது வெறுப்பெல்லாம் கிடையாது. அவன் கொஞ்சம் கூச்சப்படுகிறான் அவ்வளவு தான். கொஞ்ச நாள் போனா சரியாகிடும்” என்று தங்கையை தேற்ற முயற்சிக்க சுமதியின் முகமோ இன்னும் தெளிவடையவில்லை.

“அண்ணே… நீங்களும் கொஞ்சம் கூட புரியாத மாதிரி விளையாட்டா பேசினா நான் என்ன செய்ய? நாம என்ன முடிவு எடுத்து இருக்கோம்னு மறந்துட்டீங்களா? பெண்கள் கிட்ட பேசவே தயங்கினா எப்படி? அப்புறம் நாளைக்கு கல்யாணம் செஞ்சுகிட்டா நிலைமை இன்னும் மோசமாகி விடாதா? இதுக்கு நாம தான் ஏதாவது வழி செய்யணும்”

“என்ன செய்யலாம்னு சொல்ற தங்கச்சி?” வேறு வழி  தெரியாமல் சுமதியிடமே சரண் அடைந்தார் குமரேசன்.

“அதை நான் பார்த்துக்கிறேன்… நீங்க அப்பப்போ ஏதாவது உதவி தேவைப்பட்டா செய்ங்க போதும்” என்று தன்னுடைய திட்டத்தைக் கூற குமரேசனின் தலை வேகமாக ஆடியது.

இளவரசன் குளித்து விட்டு சாப்பிட அமரும் பொழுது மெல்ல பேச்சை ஆரம்பித்தார் சுமதி.

“அண்ணே … நாயகியை மேல படிக்கிறதுக்கு காலேஜில் சேர்க்கலாம்ன்னு நினைக்கிறேன்… இங்கே பக்கத்தில் எந்த காலேஜ் இருக்கு அண்ணா?”

“நம்ம வீட்டில் இருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில ஒரு காலேஜ் இருக்கு சுமதி.. அங்கே நம்ம பாப்பாவை சேர்த்திடலாம்.”

“அது சரி அண்ணா… ஆனா இரண்டு கிலோமீட்டர் போகணும்னு சொல்றீங்களே.. அங்கே போக பஸ் எதுவும் இருக்கா?”

“கிராமத்தில் எங்கே பஸ்க்கு போறது?” என்றார் ஒன்றுமறியாதவர் போல.

“அப்புறம் நாயகி எப்படின்னா தினமும் போய்ட்டு வருவா… பிள்ளை அசந்து போயிடுவாளே” என்று தயக்கமாக இழுக்க… அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார் குமரேசன்.

“அட… அதுக்கென்னம்மா… நம்ம இளவரசனை தினமும் காலையிலயும், சாயந்திரமும் கூட்டிட்டு போய்ட்டு மறுபடி அழைச்சுட்டு வர சொல்லிக்கலாம்” என்று அசால்ட்டாக சொல்ல, சாப்பிட்டுக் கொண்டு இருந்த உணவு புரை ஏறியது அவனுக்கு. வேகமாக தண்ணீரை எடுத்து குடித்தவனைப் பார்த்து குமரேசன் நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார் அவன் அறியாமல்.

“அப்பா…நான் எப்படி? என்னால் தினமும் கொண்டு போய் விட்டுட்டு வர முடியாது. இங்கே பண்ணையில் வேலை இருக்கும்பா”

“என்னடா பெரிய வேலை… காலையில் ஒரு அரைமணி நேரம் ,சாயந்திரம் ஒரு அரைமணி நேரம் நீயில்லாமல் சமாளித்துக் கொள்ள மாட்டேனா? அதெல்லாம் சமாளிப்பேன்… நீ அவளை அழைச்சுக்கிட்டு இப்பவே கிளம்பு”

“என்னது இப்பவேவா?”

“எதுக்குடா அலறி வைக்கிற…இன்னைக்கு நாள் நல்லா இருக்கு.. இரண்டு பேரும் கிளம்பி போய் அப்ளிகேஷன் எல்லாம் வாங்கிட்டு, கையோட பீஸ் பத்தின விவரத்தை எல்லாம் விசாரிச்சுட்டு வாங்க” என்று சொல்ல அதை செய்ய மனமில்லாமல் மீண்டும் தடுத்து பேசினான் இளவரசன்.

“அதுக்கு எதுக்குப்பா அந்தப் பொண்ணு… நான் மட்டுமா போய்ட்டு வர்றேனே”

“சும்மா கேள்வியா கேட்காதே இளா… நாயகியையும் கூட அழைச்சிட்டு போ… வேற ஏதாவது படிப்பு பத்தி விசாரிக்கணும்னா அதுவே விசாரிச்சுக்கும்” என்று சொல்லி விட்டு கை கழுவ எழுந்து சென்று விட அவரிடம் அதற்கு மேலும் மறுத்து பேச முடியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்.

அந்த நேரம் பார்த்து நாயகி சாப்பிட வர, அவளை அவன் பார்த்து வைத்த பாசப் பார்வையில் அவளுக்கு ஜன்னி வரும் போல இருந்தது.

“இப்போ எதுக்கு இப்படி ‘பாசமா பார்த்து வைக்கிறார்.. நான் ஒண்ணுமே செய்யலையே… பேசாம அப்புறமா வந்து சாப்பிட்டுக்க வேண்டியது தான்’ என்று எண்ணியபடி அவள் நகர, அவளை தடுத்து நிறுத்தியது அவன் குரல்.

“சீக்கிரமா கொட்டிக்கிட்டு கிளம்பித் தொலை”

“எங்கே?” என்று விழி விரித்தாள் நாயகி…

“ம்ம்ம்ம்.. உன்னை கூட்டிக்கிட்டு மாந்தோப்புக்கு போய் டூயட் பாடப் போறேன். கேள்வி கேட்டு எரிச்சல் படுத்தாம இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்பி இருக்க… மெதுவா சீவி, சிங்காரிச்சு கிளம்பிக்கிட்டு இருந்த, நான் பாட்டுக்குக் கிளம்பி போயிட்டே இருப்பேன்.” என்றவன் சாப்பிடப் பிடிக்காமல் எழுந்து சென்று விட அவளுக்குத் தான் ஒன்றுமே புரியவில்லை.

அதற்குள் அங்கே வந்த சுமதி நடந்தவற்றை கூறி அவளை கிளம்பச் சொல்ல அவளும் வேகமாக சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டாள்.

வேண்டா வெறுப்பாக தன்னுடைய பைக்கில் அவளை அமர வைத்து ஓட்டியவன் வீட்டின் தெரு முனை தாண்டியதும் வண்டியை நிறுத்தி விட்டு பின்னால் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

‘போச்சு.. எதையோ வில்லங்கமா சொல்லித் தொலைக்கப் போறான்’ என்று அவள் அஞ்சியதைப் போலவே தான் அவனது பேச்சும் இருந்தது.

“இதோ பார்.. அப்பா சொன்னாரேன்னு தான் உன்னை கூட்டிட்டு போக சம்மதிச்சேன். அதுக்காக மேலே விழுந்து என்னை மயக்கிடலாம்ன்னு எல்லாம் நினைக்காதே… இரண்டடி தள்ளி உட்கார்ந்தே வா… தப்பி தவறி மேலே வந்து உரசுன வண்டியை பள்ளத்துல விட்டுடுவேன் புரிஞ்சுதா” என்று கடுமையாக கேட்டவன் அவளின் பதிலை எதிர்பாராது வண்டியை எடுத்து ஓட்டத் தொடங்கினான்.

‘பெரிய மன்மத ராசான்னு நினைப்பு’என்று அவள் கழுத்தை நொடித்துக் கொண்டதை மட்டும் அவன் பார்த்து இருந்தால் நிச்சயம் அவளை ஒரு வழியாக்கி இருப்பான்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here