தினமும் ஒரு குட்டி கதை
பறக்கும் குதிரை !
பெர்ஷியாவின் சுல்தான் எப்போதும் விந்தையான பொருள்களைக் கண்டால், அவற்றைத் தாம் அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான்.
“”இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன?” என்று கேட்டார் சுல்தான்.
அந்த இளவரசன், “”இளவரசியைக் கை பிடிப்பது!” என்று கூறினான். சுல்தானும் ஒத்துக் கொண்டார்.
“”ஆனால், என்னுடைய மகன் முதலில் இந்தக் குதிரை மீது அமர்ந்து பறப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்!” என்று சுல்தான் கூறினார்.
சுல்தானின் மகன் அந்தக் குதிரை மீது அமர்ந்ததும், அது பறந்து சென்று எல்லாருடைய பார்வையிலிருந்தும் மறைந்து விட்டது. சுல்தானின் மகன் திரும்பி வராததால் சுல்தானும், அமைச்சர்களும் கவலை கொண்டனர். அவர்கள் இளவரசனைக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தனர்.
சுல்தானின் மகன் காற்றில் மேலே மேலே கொண்டு செல்லப்பட்டான். அவனால் அந்த மாய குதிரையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அவன் அந்தக் குதிரையை வலப்பக்கம் இழுத்தான்; இடப்பக்கம் இழுத்தான். ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
பல நாட்கள் பயணம் செய்த பிறகு அவன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினான். அரண்மனையில் எல்லாரும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர். அவன் திரும்பி வந்ததால் அந்த இளவரசனும் விடுவிக்கப்பட்டான். ஆனால், அந்த இளவரசன் அவர்கள் தன்னை அவமானப்படுத்தி விட்டனர். ஆதலால் அவர்களை பழிவாங்க வேண்டும் எனச் சபதமிட்டான்.
சுல்தானின் அரண்மனையில் இளவரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இளவரசியைக் குணப்படுத்துபவர்களுக்குச் சிறந்த வெகுமதி அளிக்கப்படும் என்று சுல்தான் உறுதியளித்தார். இளவரசன் மருத்துவன் போன்று மாறுவேடமணிந்து சுல்தானின் அரண்மனையை அடைந்தான்.
“”முதலில் மந்திரக் குதிரையையும், இளவரசியையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” எனக் கூறினான். மந்திரக் குதிரையும், இளவரசியும் வந்த பின்பு தன் மந்திரசக்தியைப் பயன்படுத்தி, இளவரசியைக் குணப்படுத்தி விட்டான். அதே நேரத்தில் அவளை இழுத்துத் தன்னுடைய மாயக்குதிரை மீது அமர்த்திக் கொண்டு பறந்து சென்று விட்டான். ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனக்கு சொந்தமான பொருளை தானே அடைந்தான்.