மாயவனம் பகுதி 4

0
13

பகுதி 4

” என்ன விச்சு … நான் இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன். ஆனா நீ என்ன கொஞ்சம் கூட நம்ப மாட்டேங்குரியே ! நான் என்ன உன்கிட்ட வேணும்னே பொய்யா சொல்லிட்டு இருக்கேன் “

” இல்ல புகழ் நான் அப்படி சொல்ல வரல … உன்னோட பிரமையா இருக்கும்னுதான் சொல்றேன் . நீயே ஒரு முற்போக்குவாதி நீ இப்படி சொல்றதுதான் அதிசயமா இருக்கு . நீ மூளையை போட்டு ரொம்ப உழப்பிட்டு இருப்ப அதனாலதான உனக்கு இந்த மாதிரி இல்யூஷன்லாம் வருதோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு புகழ் “

” இல்யூஷன்லாம் இல்ல தாத்தா … எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு . என்ன நடக்குதுன்னே தெரியல … ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸா ஃபீல் பண்றேன். “

” என்ன புகழ் இது .… நீ இப்படி சொன்னா எனக்கு இங்க இருப்பே கொள்ளாது .பேசாம அங்க இருந்து கிளம்பி வந்துடு . இந்த வேலையே வேண்டாம் நமக்கென்ன சொத்துக்கு பஞ்சமா இல்ல பணத்துக்கு பஞ்சமா ? வேற வேலை பார்த்துக்கலாம் “

” விச்சு…. எனக்கு ஏதாவது சொல்யூஷன் சொல்லுவன்னு பார்த்தா என் வேலைக்கே ஆப்பு வைக்கிறியா நீ… ஆஃப்டர் ஆல் இதுக்கே வேலையை விட்டு வான்னா எப்படி விச்சு… இது உனக்கே ஓவரா இல்ல….பிச்சிபுடுவேன் பிச்சு… “

” பின்ன என்னடா … நான்தான் படிச்சு படிச்சு சொல்றேன்ல அது உன் பிரமையா இருக்க வாய்ப்பு இருக்குன்னு … நீ என்னவோ உலகத்துலயே உனக்கு தான் ரொம்ப கஷ்டம் இருக்குன்ற மாதிரி பேசுற . என் புகழ் ரொம்ப தைரியமானவன் , நிதானமா யோசிப்பான் , எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு முன்னேறுவன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன் . ஆனா நீ இப்படி பேசுறியே… “

அவர் கூறுவதிலும் உண்மை இருப்பதை உணர்ந்தவன் ” சரி சரி … எதுவும் புலம்பலை… நான் மறுபடியும் காலையில ஃபோன் பண்றேன் விச்சு… என்னைப் பத்தி கவலைப்படாதே… நான் பார்த்துக்குறேன். நீ நேரத்துக்கு சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கோ… சரியா ? ” என்று உரையாடலை முடித்துக்கொண்டு முடித்துக்கொண்டு தன் ஜாகைக்கு செல்லத்துவங்கினான் புகழ் ..

அவன் வருவதைக் கண்ணுற்ற ஶ்ரீதர் , “என்னடா தனியா போய்ட்டு வர … எவ்வளவு நேரம் உன்னைத் தேட்றேன் தெரியுமா …. யார்கிட்ட கேட்டாலும் தெரியலை தெரியலைன்னு சொல்லிட்டாங்க … அப்படி யார்கிட்டயும் சொல்லாம நீ இப்போ எங்க போய்ட்டு வர? “

“டேய் சாமி…. நான் ஒன்னும் புதையல் எடுக்க தனியா போகலைடா…. என் தாத்தாக்கு ஃபோன் பண்ண போனேன் . சிக்னல் உள்ள இடமா பார்த்து பேச வேண்டாமா? அடிக்கடி தலைவர் வீட்டுக்கு போய் ஃபோன் பேசுறது ரொம்ப சங்கோஜமா இருக்கு ஶ்ரீ … அதான் என் மொபைல்லயே சிக்னல் உள்ள இடமா பார்த்து போய் பேசிட்டு வறேன். ஆனா ரொம்ப நல்ல ஊர்லதான் நாம காலடி எடுத்து வச்சிருக்கோம் ” என்றவன் ” சரி சரி … ஏன் என்னைத் தேட்னீங்க … என்ன விஷயம் ” எனக் கேட்டான் .

” ஆமாடா அது ஒரு முக்கியமான விஷயம்தான் . ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஊர்த்தலைவர் சர்வேஷ்வரன் தோட்ட வீட்டுக்கு வந்தாருடா “

“எதுக்குடா… வந்து என்ன சொன்னாரு “

“அவர் சொன்ன விஷயத்தை நீ கண்டிப்பா நம்ப மாட்ட “

” நீ முதல்ல பீடிகை போடறதை நிறுத்திட்டு விஷயத்தை சொல்லு . ஐ டொன்ட் லைக் சஸ்பென்ஸ் அட் ஆல் “

” அது வந்து …. நாளன்னைக்கு பௌர்ணமி வருதாம்டா “

” சரி அதுக்கென்ன “

” இல்ல இங்க ஒரு நம்பிக்கை ரொம்ப காலமா இருக்காம் . மாயவனத்தம்மன்னு ஒரு சாமி இந்த ஊர்ல இருக்க கௌரி அம்மனுக்கு பௌர்ணமி நைட் அன்னைக்கு வந்து பால் அபிஷேகம் பண்ணுவாங்களாம் . அப்போ யாருமே வீட்டுக்குள்ள இருந்து வெளிய வரக்கூடாதாம் . ஐ மீன் அவங்களை யாரும் பார்க்க கூடாதாம் “

” ஓ இந்தக்கதையா… இது ஏற்கனவே தெரிஞ்ச கதைதான் . ஆனா இதை எப்படி கண்மூடித்தமா மக்கள் நம்பறாங்கன்னு தெரியலை . இந்தியால எது இருக்கோ இல்லையோ…. சூப்பர்ஸ்டிஸன்ஸ்க்கு மட்டும் குறைவில்லாம இருக்குடா”

” சரி விட்றா… ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு மாதிரி மனிதர்கள் . நம்ம இந்தியால மட்டும் சூப்பர்ஸ்டிஸன்ஸ் இல்லை நல்லா வளர்ந்த மேலை நாட்கள்ள கூட இந்த மூடநம்பிக்கைகள் இருக்கு . ஆனா நாம நம்புறோமோ இல்லையோ அவங்க நம்பிக்கைக்கு நாம மரியாதை தந்துதான் ஆகனும் . சோ இந்த விஷயத்துல அவங்க சொல்றமாதிரியே கேட்கலாம் . சரியா… எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்… நீயும் சீக்கிரம் வந்து படு … குட் நைட் ” என்ற ஶ்ரீதர் அங்கிருந்து நகன்றான் .

ஶ்ரீதர் அங்கிருந்து சென்றதும் புகழின் மனத்திற்குள் ஒரு விசித்திரமான எண்ணம் உதித்தது . ” இம்மாதிரி கட்டுக்கதைகளை எல்லாம் நம்பற ஆள் நான் கிடையாது . இது எல்லாம் ஒரு அண்டப்புளுகுன்னு நான் நிரூபிக்கிறேன் . அந்த பௌர்ணமி நைட் நான் கௌரி அம்மன் கோவிலுக்கு போய் என்ன நடக்குதுன்னு வீடியோ எடுத்து காண்பிச்சாதான் நம்புவீங்க . உங்க மூடநம்பிக்கையை பொய்யுன்னு நிரூபிச்சு காட்றேன் தேவதானம் வாழ் மக்களே ” என மனத்தினுள் எண்ணிக்கொண்டிருந்தான் .


தேவதானத்தில் இருந்து வடக்கு நோக்கி இரண்டு மைல் தொலைவில் உள்ள அந்த அடர்ந்த கானகத்தில் இரவு நேர அந்தகாரத்தை வெளிச்சமாக்கியபடி இருந்தது அந்த அக்கினிக்குண்டம் .

அக்கினிக்குண்டத்தின் நேர் எதிரில் அந்த திறந்த வெளியில் நடுநாயகமாக கம்பீரமாக ஸ்தாபிக்கப்பட்டிருந்தது அந்த அம்மன் சிலை. தலை மட்டும் நாகத்திற்கு உள்ளது போன்றும் உடல் முழுவதும் மனிதர்களுக்கு உள்ளது போன்றும் அமைக்கப்பட்டிருந்த அந்த சிலையைச் சுற்றிலும் திரிசூலங்கள் நாட்டப்பட்டிருந்தன .

அக்கோவிலின் பூசாரி இரவு நேர பூஜைக்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தார் . அவ்வேளையிலும் அம்மனை தரிசிக்க மக்கள் காத்திருந்தனர் . சிலபேர் கைகளில் எலுமிச்சை பழத்துடன் காத்துக்கொண்டிருந்தனர் . அவர்களில் தொழிலதிபர் ஈஸ்வரபாண்டியனும் ஒருவர் .

பூசாரி ஈஸ்வரபாண்டியனிடம் பழத்தை வாங்கி அம்மனின் அலங்கரிக்கப்பட்ட சிரசின் மீது வைத்து தீபாராதனை காட்டினார் . சிறிது நேரத்திற்கெல்லாம் பழம் யாரோ தூக்கி எறிந்தது போல் அம்மனின் சிரசின் மீதிருந்து குதித்து ஓடியது . அவ்வாறு விழுந்ததும் பழத்தை கொடுத்தவர் அம்மா தாயே…. நன்றிம்மா… என் கூட பக்கத்துணையா இருந்து காப்பாத்தும்மா என மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார் . அவருக்கு அருகில் நின்றிருந்த அவரின் மகள் வேங்குழலி…

” அப்பா… என்ன இது எதுக்கு என்ன இங்க அழைச்சிட்டு வந்தீங்க … அன்ட் இங்க என்ன நடக்குது . கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றீங்களா… ?”

“சொல்றேன்ம்மா … இவ பேரு மாயவனத்தம்மன். ரொம்ப ஷக்தி உள்ளவ … மனுஷியா பிறந்து தெய்வமா மாறின மகாஷக்தி … நமக்கு குலதெய்வம் . சென்னைக்கு போன நாம அங்கேயே செட்டில் ஆகிட்டோம் . இந்த ஊர் பக்கமே இத்தனை வருஷமா வராம போய்ட்டோம் . இத்தனை நாளா நாம இவள வழிபடாம இருந்ததாலதான் நமக்கு இவ்வளவு சோதனைகளும் … தொழில்ல நஷ்டம் , உங்க அம்மாவுக்கு உடம்பு சுகவீனம் எல்லாம் இனிமேல் சரியாகிடும் . இவ நம்மளை எல்லாம் நல்லபடியா பார்த்துப்பா…. இப்பக்கூட எலுமிச்சை பழத்தை அவ சிரசில வச்சி வாக்கு கேட்டதுக்கு எவ்வளவு அழகா பதில் சொன்னா பார்த்தியா ? அவ ஆசி இருந்தா அந்த எலுமிச்சை பழம் அதுவா அவ சிரசில இருந்து விழுந்து நமக்கு அருள் இருக்குன்னு காட்டிக்கொடுத்துடும் . நமக்கு அவ அருள் இருக்கும்மா … “

“என்னப்பா… நீங்க சொல்றது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு ” வேங்குழலியின் குரலில் நம்பிக்கையில்லா தொனி ஒலித்தது.

” அப்படின்னா என்னைப்போலவே கையில பழத்தோட எத்தனை பேர் நிக்கிறாங்க பார் … அவங்களுக்கு என் ஆகுதுன்னு போய் நீயே பாரு “.

தந்தையின் பேச்சைக்கேட்டு அங்கே சற்றுத்தள்ளி வந்து அம்மனுக்கு அருகில் நின்று வேடிகைபார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி விஷ்வநாதன் கூறியபடியே அனைவருக்கும் எலுமிச்சைப் பழம் விழுந்துகொண்டிருந்தது . ஆரம்பத்தில் பூசாரிதான் ஏதேனும் தந்திரம் செய்து பழத்தை விழுகிறார் போல் வைக்கிறாரோ என்று அவளின் சந்தேகம் பூசாரியின் மேலேயே இருந்தது . ஆனால் அவ்வாறு இல்லாமல் பூசாரி நன்றாக அழுந்த எலுமிச்சைப்பழத்தை சிரசில் வைத்தும் அது குதித்தோடி வருவதைப் பார்த்து அவளுக்கும் சிறிது சிறிதாக நம்பிக்கை பிறக்க ஆரம்பித்தது .

“அப்பா … நீங்க சொல்றதை நம்பவும் முடியலை நம்பாம இருக்கவும் முடியலை … எல்லாம் விசித்திரமா இருக்கு … சரி இவங்கதான் நம்ம குலதெய்வம்னா ஏன் இத்தனை நாளா நாம இந்த கோவிலுக்கு வரலை “

” அதுதான்மா நாம பண்ண தப்பு… குலதெய்வம்ன்றது நம்ம குடும்பத்துக்காகவே இருக்குற தெய்வம் அதை மறந்து இருந்துட்டா இப்படிதான் ஏதாவது ஆகும் . நீ வேனா பாரு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்க உங்க அம்மா சீக்கிரம் குணமாகிடுவா …”

” நீங்க சொல்ற மாதிரி நடந்தா எனக்கும் ரொம்ப சந்தோஷம்ப்பா ” மனதில் தோன்றிய புத்துணர்ச்சியோடு கூறினாள் வேங்குழலி அடுத்துடுத்து அவள் வாழ்வில் ஏற்படப்போகும் திருப்பங்களை உணராமல் .


அந்த அதிகாலைக் கதிரவனின் இளம் மஞ்சள் ஒளி தேவதானத்தையே பளபளப்பாக்கிக்கொண்டிருந்த அந்த விடியலில் அவ்வூருக்கு வந்து சேர்ந்தான் ஸ்டீபன் . கங்காதரன் அனுப்பிய தகவல்கள் நேற்றைய தினமே வந்து சேர்ந்ததினால் அதற்கேற்றவாறு தன்னை எழுத்தாளன் என்ற போர்வையில் மறைத்துக்கொண்டு அவ்வூருக்குள் நுழைந்தான் .

தான் எடுத்துக்கொண்ட வேலையை எப்பாடுபட்டாவதும் கச்சிதமாக முடித்துத் தரவேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவன் ஸ்டீபன் . அதற்கேற்ற திறமையும் அவனிடத்தில் தேவைக்கு அதிகமாகவே இருந்தது . தேவதானத்திற்குள் நுழைந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான் . பேருந்து நிலையத்திற்க்கு அருகே ஒரு டீக்கடை இருப்பதை கவனித்தவன் அக்கடையை நோக்கிச் சென்றான் .

இவன் டீக்கடையை நோக்கி வருவதை கவனித்த டீக்கடை மாஸ்டர் யாருமில்லா தன் கடைக்கு புது கஸ்டமர் கிடைத்துவிட்டார் என்ற மகிழ்ச்சியில் வாயெல்லாம் பல்லாக இருந்தார் . இவன் அருகில் வந்ததும் ” வாங்க சார் … டீ , காபி , பூஸ்ட் என்ன குடிக்கிறீங்க ?” என்று கேட்டவரிடம் ” ஒரு காஃபி நல்லா ஸ்ட்ராங்கா” என்றான் .

“இதோ ஒரு நிமிஷத்துல போட்டுற்றேன் சார் “என்றவன் அதற்கான வேலைகளில் ஆயத்தமானான் . ” சாரைப்பார்த்த பட்டணத்துக்காரர் போல தெரியுது . ஊருக்குள்ள யார் வீட்டுக்கு வந்துருக்கீங்க ” என்ற கேள்வியையும் முன்னிலைப்படுத்தினான் .

” நான் ஒரு நாவல் ரைட்டர் . சென்னைல இருந்து வந்துருக்கேன் . என் ஃப்ரண்ட் மூலமா இந்த ஊரைப்பத்தி கேள்விப்பட்டேன் . அதான் இங்க தங்கி இருந்து இந்த ஊரைப்பத்தி நல்லா ஸ்டடி பண்ணி புக் எழுதலாம்னு வந்துருக்கேன் . ஊருக்குள்ள வாடகைக்கு தங்குற மாதிரி ஏதாவது நல்ல ரூம் கிடைக்குமா ? என்று கேட்டான் ஸ்டீபன் .

” எங்க ஊரைப்பத்தி கதை எழுத போறீங்களா… ? எங்க ஊர் வர வர ரொம்ப பிரபலம் ஆகிட்டு வருது சார் . ரெண்டு நாள் முன்னாடிதான் கவர்மென்ட் அதிகாரிங்க ஆராய்ச்சி பன்றோம்னு வந்தாங்க … இப்ப நீங்களும் புத்தகம் எழுதனும்னு வந்துருக்கீங்க … ” என்றான் டீக்கடைக்காரன் .

” அவன் கூறியதற்கு மெலிதான சிரிப்புடன் தலையை ஆட்டியவன் ” வாடகைக்கு வீடு கிடைக்குமான்னு கேட்டேன் . நீங்க இன்னும் அதுக்கு பதிலே சொல்லலியே என்று தான் கேட்ட கேள்வியை மீண்டும் நினைவுபடுத்தினான் ஸ்டீபன்

” அட வாடகைக்கு வீடுதானுங்களே …. என் ஃப்ரண்ட் வீட்ல மாடில ஒரு ரூம் இருக்கு . பெரும்பாலும் யாரும் அங்க புழங்க மாட்டாங்க . அவன் கிட்ட கேட்டு அந்த ரூமை உங்களுக்கே தர சொல்லிட்றேன் ” என்றான் டீக்கடைக்காரன் .

ஸ்டீபனின் தோற்றமும் பேச்சும் அந்த டீக்கடைக்காரனை முற்றிலும் எழுத்தாளனாகவே நம்ப வைத்துவிட்டது .

வீட்டு ஓனரிடம் பேசி வீட்டையும் வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஸ்டீபன் முதல் வேலையாக கங்காதரனுக்கு அலை பேசியில் தான் வந்து சேர்ந்துவிட்டதாக குறுந்தகவலை அனுப்பினான்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here