மாயவனம் – 2

0
15

தான் சென்னையில் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த புகழின் மனது கொஞ்சம் சலனமாகத்தான் இருந்தது . காலையில் கண்ட கனவில் வந்த கோவிலும் அந்த ஸ்வர்ண பூஷிதையும் அவனையறியாமலேயே அவன் நினைவிற்கு வந்தார்கள் . தலையை லேசாக உதறியவன் ” இந்த நினைப்பெல்லாம் ஓரங்கட்டி வச்சிட்டு அடுத்து ஆகற வேலையைச் செய் மேன் . ” என்று தனக்குள்ளேயே கட்டளையிட்டுவிட்டு தன் இரவு உணவினைத் தயாரிக்கலானான் .

உலகிலேயே செய்வதற்கு மிகவும் சுலபமான ஆனால் யாருக்குமே பிடிக்காத ( அவனுக்கும்தான் ) உப்புமாவையும் அதற்கு தொட்டுக்கொள்ள சர்க்கரையையும் அதன் மேல் தூவி ஒரு ஸ்பூன் சகிதம் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் வந்து அமர்ந்தான்.

டிராவல் எக்ஸ்பி சேனலில் வேர்ல்ட் ஹெரிடேஜ் நிகழ்ச்சியினை லயித்துப் பார்த்துக்கொண்டிருந்தவனின் சிந்தையைக் கலைத்துச் சிணுங்கியது அவனின் அலைப்பேசி .

அதை எடுத்துப்பார்த்தவன் புன்னகையுடனே ” விச்சுச் செல்லம் … என்ன பண்ற … சாப்டியா ? நானே உனக்கு போன் பண்ண நினைச்சேன் விச்சு . அதுக்குள்ள நீயே கால் பண்ணிட்ட “

” நான் இப்பேதான் சாப்பிட்டு முடிச்சேன் .. நீ என்ன பண்ற.. “

” நான் இப்போதான் சாப்ட்டுட்டு இருக்கேன்.. அப்புறம் விச்சு .. ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லனும் “

” சொல்லுடா… பீடிகைலாம் போடாதே … என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது “

சரி சரி நேராவே விஷயத்துக்கு வரேன் . நீ இன்னைக்கு காலையில போன் பண்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி நான் ஒரு கனவு கண்டேன் விச்சு… ரொம்ப ரியலா இருந்துச்சு … ஒரு பயங்கரமான இருட்டான காடு …. அந்த காட்டுல திடீர்னு புயல் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை … அந்த சமயத்துல தேவதை மாதிரி ஒரு பொண்ணு வந்தா… அப்படியே தங்கம் மாதிரி ஜொலிச்சா விச்சு… ஆனா அந்த பிராகசமே அவளோட முகத்தை எனக்கு தெளிவா காட்டாம போய்டுச்சு. அவ திடீர்னு வந்து என் கையை பிடிச்சு கொண்டுபோய் ஒரு கோவில் முன்னால நிறுத்தினா. அப்புறம் என்னை அதுக்குள்ள போன்னு சொல்லிட்டு சிரிச்சா”

” அப்புறம் என்ன ஆச்சு உள்ள போனியா “

” நல்லா போனேன் போ … அதுக்குள்ள நீ போன் பண்ணிட்ட தூக்கம் போய்டுச்சு… அப்படியே அந்த கனவும் கூட போய்டுச்சு… சரி சரி என்ன டைவர்ட் பண்ணாத இனிமேல் தான் மெய்ன் சப்ஜக்டே வர போகுது . இன்னைக்கு ஆஃபீஸ் போன உடனே என்னோட ஹையர் அஃபிசியல் என்ன கூப்பிட்டாரு . அவர்கிட்ட போன உடனே ஒரு போட்டோ காட்டி இந்த இடத்துக்கு நீங்க ஆராய்ச்சி பண்ண போகனும்னு சொல்லி அதை என் கையில கொடுத்தாரு .. நான் அதைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகிட்டேன் விச்சு… அப்படியே நான் கனவுல பார்த்த இடம் சேஞ்சஸே இல்ல… என்ன ஒன்னு அந்த குகை மட்டும்தான் லேசா மாறி இருக்கு… என்னால இப்ப கூட நம்ப முடியலை விச்சு ” என்று ஒரே மூச்சில் அன்று தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவங்களை தன் தாத்தாவிடம் பகிர்ந்தான் புகழ் .

” அப்படியா புகழ் ரொம்ப ஆச்சரியமா இருக்கு… ஆனா இதுக்கு ஏதோ ரீஸன் இருக்குன்னுதான் என் உள்ளுணர்வு சொல்லுது . எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருடா . ஆமா எங்க இருக்கு நீ சொன்ன அந்த இடம் “

” மதுரைக்கு பக்கத்துல தேவதானம் அதுக்கு மாயவனம்னு இன்னொரு பேரும் இருக்காம் தாத்தா … ஆனா நான் ரொம்ப ரொம்ப எக்ஸைட்டடா இருக்கேன் அங்க போறதுக்கு . நாளன்னைக்கு நைட் ட்ரையின்ல நான் புறப்படனும் தாத்தா … இப்பவே கொஞ்சம் கொஞ்சமா பேக் பண்ணி வச்சாதான் கிளம்பும்போது பிரச்சனை இருக்காது . நீயும் சீக்கிரம் போய் தூங்கு நாளைக்காவது என்னை நேரத்தோட எழுப்பிவிடு விச்சு ” தாத்தாவிற்கு கட்டளையிட்டுவிட்டு உறங்கச் சென்றான் புகழ் .


பூர்ணசந்திரன் தன் ஒளிக் கற்றைகளை பூமித்தாயின் மீது ஊற்றி அவளை குளிரச்செய்துகொண்டிருந்த அவ்விரவு வேளையிலும் சென்னை சென்ட்ரல் இரயில்வே நிலையமானது பரபரப்புடன் காணப்பட்டது. புகழேந்தியும் அவனுடைய குழுவினரும்
திருநெல்வேலி எக்ஸ்ப்ரஸில் பயணச்சீட்டை பதிவு செய்திருந்தனர் . இரவு 10. 30 க்கு தொடங்கிய பயணம் காலை 6. 30 க்கு மதுரை ஜங்க்ஸனில் நிறைவடைந்தது .

புகழேந்தியின் நெருங்கிய நண்பனான ஶ்ரீதரும் அவனுடைய ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒருவனாக இருந்தான். அடுத்தது மைதிலி , சாகர் , ஹரிணி மற்றும் நேத்ரன். கூடுமானவரை அவனிற்கு தோதான ஆட்களையே தன்னுடன் வருவதற்கு தெரிவு செய்திருந்தான் புகழ் . மதுரைக்கு வந்த உடனே உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தான் புகழேந்தி . மதுரையிலிருந்து தேவதானம் சற்றுத் தள்ளித்தான் இருந்தது . குறைந்தது 30 கி மீ தூரமாவது இருக்கும் அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து போய்விடும்படி கூறினார் . அதன்படி ஒரு டாக்ஸியைப் பிடித்து அதில் அமர்ந்தவர்கள் அடுத்தடுத்து அவர்களுக்கு நடக்கவிருக்கும் அதிசயங்களையும் அமானுஷ்யங்களையும் சந்திக்க தங்களின் பயணத்தை இனிதே தொடர்ந்தனர்.

கார் தேவதானத்தை அடைந்ததும் அவ்வூரின் தலைவரின் வீட்டைத்தேடி கண்டுபிடித்துச் சென்றனர் .

ஊர்த் தலைவரின் வீடு நல்ல விஸ்தாரமான அமைப்புடையதாகத்தான் இருந்தது . புகழ் அங்குள்ள வேலையாளிடம் தாங்கள் தலைவரைப்பார்க்க வேண்டும் என்று கூறியவுடன் அவர்களை வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த நாற்காளிகளில் அமரச்செய்தவன் உள்ளே சென்றான் .

சற்று நேரத்திற்கெல்லாம் வெள்ளை வேட்டி சகிதம் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் உள்ளிருந்து வந்தார் . ” சொல்லுங்க தம்பி… நான்தான் இந்த ஊர்த்தலைவர் சர்வேஷ்வரன் … “யார் நீங்க …. என்ன விஷயமா வந்துருக்கீங்க ” என்றவரிடம் தாங்கள் வந்த நோக்கத்தினைக் கூறினான் புகழேந்தி .

” ஓ வந்துட்டீங்களா… எங்க ஊர்ல உள்ள கோவிலை ஆராய்ச்சி பண்ண போறதா ஏற்கனவே தகவல் கொடுத்துருந்தாங்க … ஆராய்ச்சின்னு சொன்ன உடனே ரொம்ப வயசானவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன்… நீங்க கொஞ்சம் இளவட்டமா இருந்தீங்களா …. அதுதான் எனக்கு உடனே தெரியலை … “

இந்த 29 வயதிற்குள்ளாகவே அவன் துறையில் அவன் கண்டுபிடித்த அரிய பொக்கிஷங்களும் செய்த ஆராய்ச்சிகளும் சிறிது அதிகம்தான் அதனால்தான் அவனின் திறமையையும் ,அவனையும் நம்பி இந்த பொருப்பை அவனின் உயரதிகாரி ஒப்படைத்திருந்தார் . அது அந்த ஊர்தலைவருக்கு தெரிய வாய்ப்பில்லைதான் .

அந்த மனிதரின் வார்த்தைகளை புன்னகையுடன் எதிர்கொண்டவன் ” சார் இந்த ஊர்லயே எங்களுக்கு தங்க இடம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்காங்கன்னும் அதைப்பத்தி தகவலை ஊர்தலைவர் கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கங்கன்னும் என் உயர் அதிகாரி சொல்லிருக்காரு . அதான் அது சம்பந்தமா உங்களைப் பார்க்கலாம்ன்னு வந்தோம் “. நேரிடையாக தாங்கள் வந்ததன் நோக்கத்தினை தெரியப்படுத்தினான் புகழ்.

” ஆமா ஆமா… நீங்க தங்கறதுக்கு இந்த ஊர்லயே என்னோட தோட்டவீடு ஒன்னு இருக்கு . நல்ல விஸ்தாரமாதான் இருக்கும் . உங்க 5 பேருக்கும் இடம் போதும்னுதான் நினைக்கிறேன் . அப்புறம் உங்களுக்கு சாப்பாடும் எங்க வீட்ல இருந்தே கொடுத்து அனுப்பிட்றேன்”.

” அதெல்லாம ஒன்னும் வேண்டாம் சார் .. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் … நாங்க ஏதாவது ஓட்டல்ல சாப்டுக்குறோம் “

” என்ன தம்பி நீங்க … இதையெல்லாம் சிரமம்னு சொல்றீங்களே … எங்க ஊர் கோவிலை ஆராய்ச்சி பண்ண வந்துருக்கீங்க … உங்களுக்கு சாப்பாடு போடக்கூடவா எங்களால முடியாது . அதுவுமில்லாம இந்த ஊருல நீங்க சாப்பிட்ற மாதிரி எந்த ஒரு ஓட்டலும் இல்ல … இங்க இருக்கிறது எல்லாம் பெட்டிக்கடை மாதிரியான ஒரே ஒரு மெஸ்தான் . அதான் நான் இங்க இருந்து சாப்பாடு அனுப்புறேன்னு சொன்னேன் ” என்று கூறினார்.

மேலும் சர்வேஷ்வரன் ” முத்து …. இங்க வந்து இவங்களை தோட்டவீட்டுக்கு கூட்டிட்டுப்போய் தங்க வை… கூடவே இருந்து என்ன வேணும்னு பார்த்து இருந்து செஞ்சிட்டுவா .. ” என்று பக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவனை அவர்களுக்குத் துணையாக அனுப்பி வைத்தார் சர்வேஷ்வரன் .

சர்வேஷ்வரனின் வீட்டிலிருந்து ஒரு பத்துநிமிட நடைப்பயணத்தில் வந்தது அவரின் தோட்டவீடு . அதுவும் சற்று பெரியதாகத்தான் இருந்தது . 5 பேருக்கு தாராளமாகவே இருந்தது. சுற்றிலும் பச்சைபசேலென்ற தாவரங்களின் வண்ணமும் அதன் மீது பட்டு வந்த காற்றும் கண்களுக்கும் மேனிக்கும் குளிர்ச்சியாய் இருந்தது .

அனைவரும் குளித்து முடித்து தயாராகி தலைவரின் வீட்டிலிருந்து வந்த காலைச் சிற்றுண்டியை உண்டனர். பின் அந்த கோவிலுக்குப் புறப்பட்டனர் .

சற்று நேரத்திலேயே அந்த கோவிலை அடைந்தனர் . அக்கோவிலும் அதன் சுற்றுப்புறமும் மீண்டும் புகழுக்கு அக்கனவினை நினைவூட்டியது . கோவிலுக்குள் நுழையும்போது கொஞ்சம் படபடப்புடன் அனிச்சையாகவே தன் காலுக்கடியில் பார்த்துக்கொண்டான் . மிகப்பெரிய கோவில் ஏன் இத்தனை வருடங்கள் கண்காணிக்காமல் விட்டுவிட்டார்கள் என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது . சுற்றாய்வுக்காக கைகளில் கையுறை சகிதம் தான் கொண்டுவந்திருந்த கேமராவினால் பல கோணங்களில் அக்கோவிலை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான் புகழ்.

திடீரென்று புகைப்படத்தின் முன் பெரிய சர்பம் ஒன்று தலையை நீட்டிக்கொண்டு இருப்பது போல் தோற்றமளிக்கவே சட்டென்று தன் கண்ணுக்கு முன்னால் வைத்திருந்த கேமராவினை விலக்கிப் பார்த்தான். கல்லையும் மண்ணையும் தவிர அவ்விடத்தில் வேறொன்றும் காணோம் . ” “எல்லாம் என் ஹாலுசினேஷன்” என்று தனக்குள்ளேயே கூறி சிரித்துக்கொண்டான் புகழ்”

கோவில் சுவர்களில் உள்ள வட்டெழுத்துக்கள் முதற்கொண்டு அனைத்தையும் படம் எடுத்த பின்னர். தான் கொண்டு வந்திருந்த சிறு கருவியினால் அவ்விடத்தை ஆராய்ந்துகொண்டிருந்தான் . சில நிமிடங்கள் கரைந்த நிலையில் இன்னும் சற்று கோவிலினுள் சென்று ஆராய்ச்சியைத் தொடர்ந்துகொண்டிருந்தான் .

அந்த சமயத்தில் அக்கோவிலின் மூலஸ்தானத்திற்கு வெகு அருகிலேயே சூரியனின் ஒளிக்கிரணங்கள் பட்டு ஏதோ ஒரு பொருள் மினுமினுத்துக் கொண்டிருந்தது அவனின் கருத்தைக் கவர்ந்தது .

அதன் அருகில் சென்றவன் அதை எடுத்துப்பார்க்க எத்தனித்தான். ஒரு பகுதி நிலத்திற்கடியில் புதையுண்டும் மறுபகுதி லேசாக நிலத்திற்கு மேலேயும் தெரிந்தது . அந்த பொருளுக்கு சேதம் விளைவிக்காமல் இலாவகமாக தான் கையில் வைத்திருந்த சிறு கரணையால் அதை தோண்டி எடுத்தான் .

பார்ப்ததற்கு இளம் மஞ்சள் நிறத்தில் இருந்த அவ்வுலோகம் நட்சத்திர வடிவத்தில் ஒரு உள்ளங்கை அளவில் அமைந்திருந்தது . அதை எடுத்து தான் கொண்டுவந்திருந்த உயர்ரக ப்ளாஸ்டிக்பையில் பத்திரப்படுத்தினான். அதற்க்குள் சூரியன் தன் வேலையை செவ்வனே முடித்துக்கொண்டு மேற்குவானில் இறங்க ஆரம்பித்துவிட்டதால் நம் நண்பர்களும் அவர்களின் வேலையை மறுநாள் தொடரலாம் என்று முடிவெடுத்து தங்கள் ஜாகைக்கு திரும்பினர் .

அனைவருக்கும் இரவு உணவானது சர்வேஷ்வரனின் வீட்டிலிருந்தே எட்டு மணிக்கெல்லாம் தருவிக்கப்பட்டிருந்தது . நல்ல சுவையாக இருக்கவே அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் . சிறிது நேரம் அவரவர்கள் அக்கோவிலில் ஊன்றிக்கவனித்த விஷயங்களையும் கண்டறிந்த சில நாணயங்களைப் பற்றியும் விவாதித்துக்கொண்டிருந்தனர். அப்போது புகழ் தான் கண்டறிந்த அப்பொருளை அவர்களுக்கு காட்டி அவர்களின் கருத்தையும் கேட்டுத்தெரிந்து கொண்டான் . பின் நேரமாகவே அவரவர்களின் படுக்கையறைக்குச் சென்றனர் .

தனதறைக்குச் சென்ற புகழ் அங்கிருந்து கிடைத்த நாணயங்களையும் , அந்த நட்சத்திர வடிவமுள்ள உலோகத்தினையும் மெல்லிய தூரிகையினால் சுத்தம் செய்து தனித்தனி பைகளில் பத்திரமாக வைத்தான் . பின் தன்னுடைய உயரதிகாரி அவ்வூருக்கு வருவதற்கு முன்னர் தன்னிடம் கொடுத்த மாயவனத்தைப் பற்றிய ஒரு பழமையான புத்தகத்தை எடுத்து புரட்டத்துவங்கினான் . இரண்டு பக்கம் படித்துக்கொண்டிருக்கும்போதே தூக்கம் கண்களை சுழற்றவே தன்னையும் மறந்து உறங்கிப்போனான்.

ஏதோ ஒரு பொருள் க்ளிங் க்ளிங் என்ற சப்தத்துடன் உருளவே தூக்கம் கலைந்து எழுந்தவன் அதிர்ந்துதான் போனான் . அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த நட்சத்திர உலோகம் தன் பையிலிருந்து தரையில் உருண்டுகொண்டிருந்தது . அதை ஐயத்துடன் கையில் எடுத்தவன் ” எப்படி இது கீழே விழுந்துச்சு” …. என்று எண்ணகயபடியே சுற்றும் முற்றும் பார்த்தான் .” ச்ச நான்தான் ஒழுங்கா லாக் பண்ணி வச்சிருக்க மாட்டேன். எலி கிலி ஏதாவது உருட்டிட்டு போயிருக்கும் ” என தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டிருக்கும் வேளையில் அவன் பின்னால் ஏதோ நிழல் போல அசையவும் திடுக்கிட்டு திரும்பினான். இடமே நிசப்தமாய் இருந்தது . தன் படுக்கையைப் பார்த்தான் அவன் படித்துக்கொண்டிருந்த புத்தகம் அவன் வைத்திருந்த இடத்தில் இல்லாமல் யாரோ பத்திரப்படுததியது போல் அங்கிருந்த அலமாரியில் வைக்கப்பட்டிருந்தது . இவையனைத்தும் பார்த்து அதிர்ந்து நின்றான் புகழேந்தி.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here