மின்னல் விழியே குட்டித் திமிரே – 12

0
525
1551018907221|679x452

மின்னல் விழியே – 12

‘ஏன் இவ்வளவு கோபம்??? அவன் தானே பர்ஸ்ட் கட்டிக்கிட்டான்???? அப்புறம் ஏன்????’ தன்னை வீட்டு வாயிலில் சென்றவனின் வீட்டை பார்த்தவாறு வினு சிலையாக நின்றிருந்தாள்.

அவன் அணைத்ததும் தன் காதல் கை கூடிவிட்டது என்று எவ்வளவு சந்தோஷப்பட்டாள் ஆனால் அதன் ஆயுள் சில நொடிகள் கூட நீடிக்கவில்லையே என்று மனம் கதறியது. அவனது உதாசினம் அவளுக்கு பழக்கம் தான் என்றாலும் இன்று மனதளவில் அடி வாங்கியது போல் உணர்ந்தாள்..

திருவின் வீட்டை பார்த்தவாறே மழை சாரலில் நின்றவள் மழை வலுக்கவும் இயந்திரம் போல் தன் வீட்டிற்கு சென்றாள்..

தன் வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு திரு உள்ளே நுழைய… ஹனி ஓடி வந்து அவன் கால்களை கட்டிக் கொண்டாள்.

ஆபிஸில் இருந்து வர தாமதாமாகும் என்பதால் ஹரியின் வீட்டில் வேலை செய்யும் பாட்டியிடம் ஹனியை பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தான். இது வழக்கம் தான் என்பதால் அந்த பாட்டியும் ஹனியை அவளது ப்ளே ஸ்கூலில் இருந்து அழைத்து வந்திருந்தார். அவனை பார்த்ததும் அந்த பாட்டி அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட… அவனது நேரத்தை ஹனி எடுத்துக் கொண்டாள்… அதில் திருவும் வினுவை மறந்து அந்த குட்டி தேவதையின் உலகில் லயித்துப் போனான்.

அவளுக்கு சாப்பாடு ஊட்டி அவள் கூறும் கதைகளையெல்லாம் கேட்டு அவளை தன்னருகே தூங்க வைத்தவன் அவளை தட்டிக் கொடுத்தவாறே அமர்ந்திருந்தான்.

ஹனி தூங்கிவிட்டதை உறுதி செய்தவன் தன் அறை பால்கனியில் சென்று நின்றான்… சுற்றிலும் இருந்த அமைதி மாலை., காரில் தான் வினுவிடம் நடந்துக் கொண்டதை அவனுக்கு நினைவூட்டியது. மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டவன்., என்ன காரியம் செய்துவிட்டோம் என மீண்டும் வருந்தினான்.

‘இந்த அளவிற்கு சுயக்கட்டுப்பாடு இல்லாதவனா நீ’ என்று அவன் மனமே அவனை எதிர்த்து கேள்வி எழுப்ப., ‘இல்லை’ என்று அலறியது அவனது இன்னொரு மனம்… ‘அது வினுவாக இருந்ததால் மட்டுமே…’ என்று மனம் கதற… அதில் அவன் விதிர்விதிர்த்துப் போனான்…

‘அப்படியென்றால்..!!!! அது வினுவாக இருக்கும் பட்சத்தில் தான் அணைத்துக் கொண்டாயா???’ என்று தன் மனமே வினுவிற்க்காக அவனிடம் சண்டையிட., இப்போது அவனுக்குள்ளும் அதே கேள்வி., “தன் மனம் வினுவை ஏற்றுக் கொண்டதா????”

“ஆமா நீ வினுவ காதலிக்க தொடங்கிட்ட” என்று அவன் மனம் கண்ணாடியாய் மாறி அவன் நிலையை உணர்த்திவிட.,

‘இல்லை’ என்று இப்போது வாய்விட்டே கத்தினான்..

‘இல்லை இல்லை நான் அவளை லவ் பண்ணலை… என் லைஃப்ல இனி யாருக்கும் இடம் கிடையாது… ஹனி மட்டும் தான் என்னோட உலகம்… அவளை நல்லபடியா அம்மா அப்பா இல்லாத குறை தெரியாத அளவுக்கு வளர்க்கணும்.. என் பொண்ணுக்கு நான் இருக்கேன்.. காதல் அப்படிங்கிற பெயர்ல என் குடும்பம் உடைஞ்சி போனது போதாதா??? மறுபடியும் காதலா???.’ தன் மனம் சொன்ன உன்மையின் கனம் தாளாமல் தலையில் கைவைத்தவாறு அங்கு இருந்த கூடை நாற்காலியில் அமர்ந்தான்.

“எப்படி..!! எப்படி நடந்துச்சு… நான் அவளை வெறுக்கிறேன்… எனக்கு அவளை பிடிக்காது… அப்புறம் எப்படி அவ மேல லவ் வந்திருக்கும்????” தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டவன் எங்கு எப்படி தவறினோம் என்று யோசிக்க.. பதில் தான் தெரியவில்லை…

காதல் என்றதும் பத்து வருடங்களுக்கு முன்பு தனக்கு தோழனாக அறிமுகம் ஆகியவனின் முகம் நினைவில் வர., அதை தொடர்ந்து நடந்தவை அனைத்தும் ஞாபகம் வந்து., அவன் பட்ட காயங்களையும் வலிகளையும் நினைவுப்படுத்தி மனதை ரணமாக்கியது.

சிறிது நேரம் தங்கையின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தவன் பால்கனியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்., தான் அறியாமல் தனக்குள் எப்படி வந்தாள் என்ற கேள்வி எழுந்தாலும் இனி வினுவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என தனக்கு தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டான்.

தன் மனதில் மொட்டுவிட்டிருக்கும் காதலை அது மலர்வதற்குள்ளாகவே மூடி மறைக்க முடிவெடுத்தான்… அதன் பின் தான் அவனால் சற்று அமைதியாக இருக்க முடிந்தது.. வினுவின் வீட்டை சிறிது நேரம் நோட்டம் விட்டவன் ஹனியின் அருகே சென்று படுத்துக் கொள்ள., கைக்கூடாத காதல் ஏன் தனக்கு வந்தது என்று எண்ணியவாறே உறங்கிப் போனான்…

அங்கு வினுவோ திரு ஏன் அணைத்தான்?? பின் ஏன் விலகினான் என்று புரியாமல் குழம்பி தவித்தாள். நிதானமாக யோசித்துப் பார்த்தவளுக்கு அவன் மனதுக்குள் தான் நுழைந்துவிட்டோம் என்று புரிய சந்தோஷத்தில் துள்ளி குதிக்க வேண்டும் போல் இருந்தது.

அவன் அணைப்பில் அடங்கியிருந்த போது அவன் கண்களில் நிச்சயம் காதல் இருந்தது இல்லையென்றால் தன்னை அணைத்திருக்க வாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாக நம்பினாள். அந்த சந்தோஷத்தில் சீக்கிரமாகவே திரு தன் காதலை ஒத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் நிம்மதியாகவே தூங்கினாள்.

காதலை உணர்ந்த திரு வினுவிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்க., வினுவோ அவன் மனதுக்குள் தான் நுழைந்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் இருந்தாள்.

மறுநாள் உற்சாகமாக வினு கிளம்பி வெளியே வர., திருவின் கார் அங்கு இல்லை… ஆபிஸிற்கு சீக்கிரம் சென்றிருப்பான் என்று நினைத்தவாறு அவளும் விக்கியுடன் கிளம்பினாள்.

திருவோ தான் எடுத்த முடிவின் முதல் படியாக வினுவையும் விக்கியையும் மற்றொரு டீமிற்கு மாற்றினான். திருவை காண ஆவலாக வந்தவள் அதை அறிந்து சிலையாகி போனாள்..

உடனடியாக அந்த டீமில் சேர சொல்லி உத்தரவு வந்திருக்க. வினுவிற்கு கோபத்தில் முகம் சிவந்தது. கோபத்தோடு திருவை காண செல்ல. வெறுமையாக இருந்த அவனது கேபினே அவளை வரவேற்றது. அவளது தேடுதல் புரிந்து விக்கி சென்று நவினிடம் விசாரிக்க., நவினுக்கும் திருவை பற்றி தெரியவில்லை. இனி என்ன செய்வது என இருவருமே ஸ்தம்பித்து நின்றனர்.

ஆயிற்று திருவை முழுதாக பார்த்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. ஆபிஸில் கேட்டால் அவன் லீவ் எடுத்திருப்பதாக பதிலளித்தார்கள். வீட்டிற்கு சென்று பார்த்தால் அவன் அங்கும் இல்லை. ஹனியோடு எங்கோ சென்றிருந்தான். ஹரிக்கு அழைத்து கேட்டால் அவனுக்கும் திருவை பற்றி தெரியவில்லை. திருவிற்கு நண்பர்களென்று யாரும் இல்லாததால் யாரிடம் விசாரிப்பது என தெரியாமல் வினுவும் ஹரியும் திண்டாடித்தான் போனார்கள். ஹரியும் தன்னால் முயன்ற வரை விசாரித்துப் பார்த்தான். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.

போனையும் அணைத்து வைத்திருந்ததால் யாராலுமே அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதில் வினு சோர்ந்தே போனாள். வினுவின் கவலை படிந்த முகம் பார்த்து விக்கி கூட அவளுக்கு தெரியாமல் திருவிற்கு அழைத்துப் பார்த்தான். ஆனால் ஸ்விட்ச் ஆப் என்றே வர., எரிச்சலில் அவனும் திருவை திட்டி தீர்த்தான்.

இப்படியே பத்து நாட்கள் கடந்திருக்க… அன்று வார விடுமுறை என்பதால் விக்கி வினுவை பக்கத்தில் இருக்கும் மார்கெட்டிற்கு அழைத்துச் வந்திருந்தான். பத்து நாட்களாக திருவின் வீட்டை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருப்பவளை காண சகிக்காமல் அவளை இழுத்து வந்திருந்தான்.. முதலில் வேண்டா வெறுப்பாக வந்தவள் சிறிது நேரத்தில் விக்கியின் கேலிப் பேச்சில் திருவை மறந்து அவனோடு இணைந்துக் கொண்டாள்..

அவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள மார்கெட்டிற்கு தான் இருவரும் சென்றிருந்ததால் இருவரும் கதை அளந்தபடியே பொருட்களை வாங்கிவிட்டு நடந்து வந்தனர்.

“ஹேய் வினு.. என்னோட மொபைல்ல கடையிலே விட்டுட்டு வந்துட்டேன்.” தன் நெற்றிப் பொட்டை தட்டியவாறே விக்கி திடிரென்று ஞாபகம் வந்தவனாக கூற, வினு அவனை முறைத்தாள்.

“லூசு.. போடா.. போய் சீக்கிரம் எடுத்துட்டு வா… இப்படி தான் கேர்லெஸ்சா இருப்பியா????” காய்கறி கூடையை வாங்கிக் கொண்டவள் அவனை சாட.,

“திட்டாத டி… நான் போய் எடுத்துட்டு வரேன்.” சமாதனமாக கூறியவன் மீண்டும் கடையை நோக்கி செல்ல.. வினு மெதுவாக திருவை நினைத்தவாறே தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.

திருவை பற்றி எண்ணியவாறே நடந்து வந்துக் கொண்டிருந்தவளின் கால்கள், எதிர்புறத்தில் ஹனியோடு நடந்து வந்துக் கொண்டிருந்த திருவை கண்டதும் தன்னிச்சையாக நின்றது.

அவனை கண்டதும் கண்கள் விரிய, முன்னே வருவது அவன் தானா என்று நம்ப முடியாமல் தன் கண்களை கசக்கி கொண்டு பார்த்தாள். எவ்வளவு முறை கசக்கி விட்டு பார்த்தாலும் அவன் பிம்பம் தெரியவே… அந்த இடத்தில் அசையக்கூட முடியாமல் நின்று அவனை பார்த்திருந்தாள்.. கண்ணை சிமிட்டினால் கூட மறைந்து விடுவானோ என்ற பயம் அவனை பார்த்தவாறே நிற்கு வைத்தது.

“வந்துட்டானா??? நிஜம்மா வந்துட்டானா???” தன்னை மறந்து உதடு துடிக்க முனகினாள். அவனை காணாததில் அவன் மேல் கொலைவெறியில் இருந்தவளின் கோபம் எல்லாம் சூரியனை கண்ட பனி போல் விலகிவிட., இந்த நிமிடம்.. இந்த நொடி.. தன் கண் முன் இருக்கிறான் அதுவும் நலமாக இருக்கிறான் என்ற நிம்மதியில் தன் கையில் இருந்த காய்கறி கூடை தவறியது கூட தெரியாமல் நின்றிருந்தாள்.

தன் அலைபேசியை பார்த்தவாறும் ஹனியை ஒரு கையில் பிடித்தவாறும் வந்துக் கொண்டிருந்தவன் தன் எதிரே வினு நிற்பதை கவனிக்கவில்லை. நடந்து வந்துக் கொண்டிருந்தவன் அவளை நெருங்கவும் தன் பாதையில் யாரோ நிற்பது போல் இருக்கவும் தான் நிமிர்ந்து பார்த்தான். கண்ணை சிமிட்டாமல் தன்னை பார்த்தவாறு நின்றிருந்தவளை கண்டவன் அவளை அன்னியப் பார்வை பார்த்தான்.

காணாமல் போனதும் அல்லாமல் இப்போது யாரையோ பார்ப்பது போல் அவன் பார்க்கவும் பறந்தோடியிருந்த கோபம் அனைத்தும் மீண்டும் அவளிடம் சரண்புக.,

“அரசு., எங்கடா போய்ட்ட????… உன்னை எங்கலாம் தேடினேன் தெரியுமா??? என்ன நடந்துடுச்சுன்னுடா இப்படி ஓடி ஒளிஞ்ச… எதுக்காக டா என்னை வேற டீம்க்கு மாத்தின??? எதுக்காக டா அவாய்ட் பண்ற??? இப்படியெல்லாம் நீ நடந்துக்கிட்ட நான் உன்னை விட்டுட்டு போய்டுவேனா???” கோபத்தில் படபட பட்டாசாக வினு வெடிக்க., அவளை சலனமே இல்லாமல் பார்த்திருந்தான் அவன்.

“வாட் ஆர் யூ டாக்கிங் வினு??? நான் எங்க போறேன் வர்றேன்னு எல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..” முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் திரு அழுத்தமாக கூற., வினுவிற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“என்னை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி இருக்கா??? தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ.. அன்னைக்கும் கார்ல அப்படி என்ன நடந்திடுச்சுன்னு நீ என்னை கெட் அவுட் சொன்ன??”… காதலை சொல்வதிலும் சரி.. அதற்காக போராடுவதிலும் சரி.. அனைத்திலும் அதிரடியை காண்பிப்பவளை திரு தான் விழிவிரித்துப் பார்த்தான்.

அவள் தன் மனதுக்குள் நுழைந்துவிடக் கூடாது.. தான் அவள் பக்கம் சாயக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே பத்து நாட்கள்., ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு அவசரமாக ஹனியை அழைத்துக் கொண்டு தலைமறைவாகியிருந்தான்… ஆனால் யார் தன் மனதுக்குள் நுழையக் கூடாது என்று அவன் ஓடினானோ அவள் தன் மனதுக்குள் ஏற்கனவே நுழைந்து ஆட்சி புரிய துவங்கி விட்டாள் என இந்த பத்து நாட்களில் ஒவ்வொரு நொடியும் உணர்ந்தான்.

அவளை பார்த்த முதல் தினத்தில் இருந்து அவளது குறும்பு, விக்கியிடம் அவள் காண்பிக்கும் அன்பு கலந்த கண்டிப்பு, ஆபிஸில் அனைவரையும் ஒரு எல்லைக்குள் வைப்பவள் தன்னிடம் மட்டும் உருகுவதும்., அவன் அறியாமல் அவன் மனம் விரும்ப ஆரம்பித்திருந்தது. அதன் வெளிப்பாடே போதையில் அவன் அவளிடம் உளறியது. அனைத்தும் அவனுக்கு அவளை விட்டு விலகி சென்ற இந்த பத்து நாட்களில் தெளிவாக விளங்கியது. ஆனால் அவளை ஏற்க தான் முடியவில்லை அவனால். ஏற்கனவே காதலின் சுவடுகளால் தன் குடும்பத்தை இழந்தவனுக்கு தானும் அந்த காதல் பள்ளத்தில் விழ ஆசையில்லை… ஆசையில்லை என்பதை விட பயமாக இருந்தது.. அதனால் வினுவை மறக்க நினைப்பதை விட தனக்குள் மொட்டுவிட்டிருக்கும் காதலை அவளிடம் இருந்து மறைக்க நினைத்தான். அவ்வாறு முடிவெடுத்த பின் தான் அன்று காலையில் ஹனியோடு தன் வீட்டிற்கு வந்தான்.

வினுவை சந்திக்க அவன் தயாராகி வந்திருந்தாலும் நிதர்சனத்தில் அவளை காண்கையில் அவன் மனம் தடுமாறியது. மூக்கு விடைக்க, முகம் கோபத்தில் ஜொலிக்க தன் முன் நின்றிருப்பவளை காண்கையில் அவளை அள்ளியெடுத்து எப்போதும் அதிரடியாக பேசும் அந்த இதழை வன்மையாக தண்டிக்க வேண்டும் என்று கைகள் இரண்டும் பரபரத்தது. எங்கே தன்னையும் மீறி செய்துவிடுவோமோ என்ற பயம் எழ அலைபேசியை பேண்ட் பாக்கெட்டில் வைப்பது போல் தன் கையையும் நுழைத்துக் கொண்டான்.

“சொல்லுடா… அன்னைக்கு கார்ல எதுக்காக டா அப்போ ஹக் பண்ணின?? பெரிய ரொமன்ஸ் மன்னன் மாதிரி பாட்டுக்கு தாளம் போட்டுட்டு இப்போ ஓடி ஒளியுறியா??” இடுப்பில் கை வைத்து அவள் எகிற.,

ஏன் தடுமாறினோம் என நூறாவது முறையாக நொந்துக் கொண்டான்.

“கொஞ்சம் நிறுத்துறியா??? நான் ஒன்னும் எந்த பாட்டுக்கும் தாளம் போடலை.. அது தெரியாம நடந்தது.. இப்போ வழியை விடு…” அவளிடம் பேசிக் கொண்டே இருந்தால் எங்கே அவளை காதலிப்பதை ஒத்துக் கொள்வானோ என்ற பயத்தில் நழுவ பார்த்தான்.

“முடியாது. இன்னைக்கு எனக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும்.” பதில் தெரியாமல் செல்ல மாட்டேன் என்ற பிடிவாதம் அவளிடம்.

“எந்த உண்மையும் இல்லை.. அன்னைக்கு கார்ல உன்னை ஹக் பண்ணினது தப்பு தான். தெரியாம பண்ணிட்டேன்… மன்னிச்சிடு …. இப்போ வழிய விடு…. நீ நினைக்கிற மாதிரி நான் உன்னை லவ் பண்ணலை…” அவளை சமாதனம் செய்ய முயன்றானா இல்லை தன்னை சமாதனம் செய்தானா என்று அவனுக்கே புரியவில்லை…

“தெரியாம ஹக் பண்ணிட்டியா??? பொய் சொல்ற… எனக்கு தெரியும் உன்னை பத்தி… உன் மனசுல நான் இல்லாட்டி உன் சுண்டு விரல் நகம் கூட என் மேல பட்டுருக்காது.. நீ மனசளவுல எவ்வளவு கட்டுப்பாடு உள்ளவன்னு எனக்கு தெரியும்… உன் மனசுல நான் இருக்கேன்… “ அவன் அவளை தவிர்ப்பது வலித்தாலும் வெளியே அவனிடம் வாயாடினாள்.

அவன் மனதை அவனுக்கே தெளிவாக அவள் கூறிவிட திரு அயர்ந்து போனான்.

“இல்லை… அப்படி இல்லை.. என் மனசுக்குள்ள யாரும் இல்லை..”. அவள் கண்களை நேராக பார்க்க முடியாமல் அவன் தடுமாற அவளோ அவன் கண்களை தீர்க்கமாக பார்த்திருந்தாள்.

“என் கண்ண பார்த்து சொல்லு நீ என்னை லவ் பண்ணலை????” மனதுக்குள் எதோ முடிவெடுத்தவள் போல் அவள் கேட்க…

“இல்லை…” அவள் முகத்தில் பார்வையை நிலைக்க விட்டவாறு அவன் கூறினான்.

“அப்போ உன் மனசுக்குள்ள நான் இல்ல???” கேள்வியாக கேட்டவள் ஒரு அடி பின் நகர்ந்தாள்…

“இல்லை…” குரலில் முதலில் இருந்த உறுதி தேய ஆரம்பித்தது அவனுக்கு…

“ஸோ அன்னைக்கு கார்ல நடந்தது உன்னையும் மீறி நடந்ததுன்னு சொல்ற???” அவனை பார்த்தவாறே மீண்டும் அவள் அடுத்த அடியை பின்னோக்கி வைக்க.. திருவிற்கு பயம் தொற்றிக் கொண்டது.

இருவரும் சாலையின் ஓரத்தில் நின்று தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.. ஆள் அரவமற்ற சாலையாக இருந்தாலும் மாலை பொழுதுகளில் சிறிது வாகனங்கள் செல்லும் என்பதால் அவன் கண்கள் சாலையின் இருபுறமும் பார்த்தது.. ஒரு பக்கத்தில் இருந்து பஸ் ஒன்று வந்துக் கொண்டிருக்க… வினு அவனை பார்த்தவாறே பின்னோக்கி அடி மேல் அடி வைத்து நகர்ந்துக் கொண்டிருந்தாள்..

“வினு என்ன பண்ற??? பஸ் வருது…” அவளை எச்சரித்தவன் அவளை நோக்கி முன்னேறினான்…

“வரட்டும் அரசு… நீ தான் என்னை லவ் பண்ணலையே… தெரியாம ஹக் பண்ணிட்ட… நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு சொல்ற….” பதில் அவனிடத்தில் இருந்தாலும் கால்கள் சாலையை நோக்கி முன்னேறியது. பஸ்சும் சில நொடிகளில் அவளை நெருங்கும் என்பதால் அந்த பஸ் அவள் அருகே நெருங்கும் முன் திரு பாய்ந்து சென்று அவளை தன்னருகே இழுத்திருந்தான்..

அவள் செயலில் கோபம் துளிர்க்க… தன் கை வளைவுக்குள் இருந்தவளை தன் முன் நிறுத்தியவன், திட்ட துவங்கினான்..

“உனக்கு அறிவு இல்லையா???? படிச்ச பொண்ணு தானே… லூசா நீ??? எதாச்சும் ஆகிருந்தா என்னாகும்???? ஏன் இப்படி நடந்துக்கிற??? எப்பவும் உன்கூடவே ஒட்டிட்டு திரிவானே… அவன் எங்க???” அவளை மட்டுமல்லாது விக்கியையும் சேர்த்து அவன் திட்ட… வினுவோ அவனை கண்டுக் கொள்ளாமல் சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள்…

அதில் திருவிற்கு ஏக கோபம் வர, அவளை சரமாரியாக திட்டினான்.. அவன் திட்டுகளை ஒரு காதால் வாங்கி மறு காது வழியாக விட்டுக் கொண்டிருந்தவள் அப்போது தான் ஹனி எங்கே என்பது போல் தேட., அவளோ தன் மொம்மையை நடு சாலையில் தூக்கி எறிந்துவிட்டு அதை எடுக்க சாலைக்கு ஓடினாள். அதில் பதறிய வினு திருவின் கைகளை விடுவித்துவிட்டு, “ஹனி..!!!’” என்று அலறியவாறு சாலையை நோக்கி முன்னேறினாள்.

அவளின் அலறலில் என்னவென்று திரும்பி பார்த்தவனின் உயிர் ஒரு நொடி உறைந்து போனது.. நடு சாலையில் விழுந்திருந்த பொம்மையை எடுக்க ஹனி சாலையின் நடுவே சென்றிருக்க… எதிர் வளைவில் இருந்து வேகமாக வந்துக் கொண்டிருந்தது ஒரு கார்.

ஹனினினினி…!!!!! கத்தியாவாறே திரு ஹனியை நோக்கி ஓட.. அதற்குள் வினு ஹனியை அடைந்திருந்தாள்… காரும் அதிவேகமாக இருவரையும் நெருங்க… வினு ஹனியை தனக்குள் அணைத்தவாறு சாலையில் நின்றிருந்தாள்., திருவிற்கு காலடியில் பூமி நழுவியது போல் இருந்தது.

கடைசி நொடியில் வினுவை நோக்கி வந்த கார் சுதாரித்து விலக… வினுவும் ஹனியும் மயிரிழையில் உயிர் தப்பினர். வினுவின் மேனி முழுவதும் நடுங்க… இதயம் தொண்டையில் வந்து துடிப்பது போல் இருக்க.. ஹனியை விடாமல் பிடித்திருந்தாள்… அதற்குள் நடக்க இருந்த விபத்தை கண்டு, சுற்றியிருந்த ஒரு சிலரும் அவர்கள் அருகில் வர, திருவும் அவர்களை விலக்கிவிட்டு அவர்களை அடைந்திருந்தான்…

வினுவின் கைகளில் இருந்து ஹனியை பிடுங்கியவன் தன்னோடு சேர்த்தணைத்தான்… திருவுக்கும் மனம் படபடவென அடித்துக் கொள்ள, ஹனிக்கு எதாவது ஆகியிருந்தால் தன் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியே அவனை பதற வைக்க., அவளை இறுக அணைத்துக் கொண்டான்…

“அரசு..ஷீ இஸ் ஓ.கே….” அவனின் பதட்டம் புரிந்து அவனை ஆறுதல் படுத்த முயன்றாள் ஆனால் அவனோ ஹனியை மேலும் மேலும் இறுக அணைக்க… ஹனி அவனை விலக்கினாள்…

“அரசு.. ஹனிக்கு ஒன்னும் இல்லை… ரிலாக்ஸ்.. பாரு… ஹனி பயப்படுறா.. நீ அவளை விடு…” திருவிடம் இருந்து அவள் ஹனியை விலக்க முயல… ஒரு இன்ச் கூட அவளால் திருவிடம் இருந்து அவளை விலக்க முடியவில்லை… கூடியிருந்த கூட்டமும் எதுவும் ஆபத்தில்லை என்றதும் விலக ஆரம்பித்தது..

“ஹனி… டேடிய பாருடா… உனக்கு ஒன்னும் இல்லையே.. உனக்கு எதாச்சும் ஆகியிருந்தா நான் செத்துருப்பேன் மா….” ஹனியிடம் கூறியவன் அவளது இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டான்… அவளை அணைத்தவாறே சாலை ஓரத்திற்கு வந்தவன் ஹனியிடம் பேசியவாறு இருக்க.,

வினு மட்டும் இருவரையும் பார்த்தவாறு நின்றிருந்தாள்.. அவளுக்கும் ஹனியை நடு சாலையில் கண்டதும் உயிர் கையில் இல்லை.. அவளை காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக., எதை பற்றியும் யோசிக்காமல் ஓடிச் சென்று அவளை அணைத்திருந்தாள். கார் தங்களை கடந்து சென்றுவிட்டாலும் அவளுக்கு கை கால் எல்லாம் வெடவெடத்தது.. எவ்வளவு தான் தைரியமான பெண் என்றாலும் மரணத்தின் வாயிலில் நிற்கும் போது பயம் வந்தது. அதை விட திரு ஹனியை வாங்கி கொண்டு தன்னை திரும்பிக் கூட பாராதது மேலும் வலித்தது..

ஹனி முக்கியம் தான் என்றாலும் தன்னவனிடம் இருந்து உனக்கு எதுவும் ஆகவில்லையே என்ற பார்வைக்காக வேண்டி ஏங்கியது மனம்.. தன்னை பற்றி கவலையில்லையோ என்று வினுவின் மனம் ஊமையாக அழுதது. இதுவே தன் குடும்பம் இங்கிருந்திருந்தால் இந்நேரம் தன் கால் கூட கீழே பட விடாமல் தாங்கியிருப்பார்கள். யாரும் இல்லா உணர்வில் தத்தளித்துக் கொண்டு இருந்தவள் விக்கி வருகிறானா என்று பார்க்க., விக்கியை காணவில்லை.

ஹனியை அணைத்திருந்தவன்… “ரொம்ப தேங்க்ஸ் வினு.. நீ காப்பத்தியிருக்கிறது என்னோட உயிரை..” கண்கள் கலங்க கூறியவனின் கன்னத்தில் ஒரு சொட்டு கண்ணீர் உருண்டோடியது… அது அவனுக்கு ஹனி எவ்வளவு முக்கியம் என்பதை நிருபிக்க., அவன் பாசம் கண்டு வினுவிற்கு சிலிர்த்தது.

“ஹனிக்கு ஒன்னும் இல்ல…. நீ எமோஷனல் ஆகாத… குழந்தை பயப்படுறா…” தன்மையாக கூறியவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் மேனியை நிறுத்தும் வழி தெரியாமல்., இரு கைகளாலும் தன்னை தானே அணைத்துக் கொண்டாள்.

“ம்ம்…” என்றவன் ஹனியிடம் இனி இப்படி தன்னை விட்டு செல்லக் கூடாது என கண்டிக்க.. அந்த சின்ன சிட்டும் பயத்தில் சரி என்றது.. இருவரும் தங்களுக்கான உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க… வினுவிற்கு தான் அங்கு நிற்பது அதிகப்படியோ என்று தோன்றியது…

கால்கள் தள்ளாட., அவனிடம் எதோ எதிர்ப்பார்த்து ஏமாந்த குழந்தையாய் வினு திரும்பி நடக்க ஆரம்பிக்க, பின்னால் திருவின் குரல் கேட்டது..

“உனக்கு ஒன்னும் இல்லையே…”

ஹனியிடம் தான் கேட்கிறான் என்று நினைத்தவள் எங்கே திரும்பினால் அழுதுவிடுவோமோ என்ற தோன்ற., திரும்பாமலே, “ஹனிக்கு ஒன்னும் இல்ல அரசு” என்றாள்…

“நான் கேட்டது என் பொண்ணை பத்தி இல்லை.. அவளோட அம்மாவை பத்தி…” மீண்டும் திரு கேட்க.. வினுவிற்கு அவன் சொல்வது புரியவில்லை… யாரை சொல்கிறான் என அவள் யோசிக்க.,

“என் பொண்ணுக்கு மட்டும் இல்ல.. என் பொண்ணோட அம்மாவுக்கு எதாச்சும் ஆகியிருந்தாலும் நான் செத்துருப்பேன்…” என்றவனின் குரல் கரகரத்திருந்ததை அவளால் உணர முடிந்தது..

இப்போது வினுவிற்கு ஏதோ புரிவது போல் இருக்க ஆனாலும் அவன் கூறுவதை நம்பத்தான் முடியவில்லை… தான் கேட்பது பிரம்மையாக இருக்குமோ என்ற பயத்தில் வினு திரும்பாமல் நிற்க.,

“ஹேய் பொண்டாட்டி… எங்க போற உன் புருஷனையும் பொண்ணையும் விட்டுட்டு????” குறும்பு கூத்தாட திரு கூற., இதற்கு மேல் முடியாது என்பது போல் வினு திரும்பி பார்த்தாள்…

அங்கு கையை விரித்து வைத்துக் கொண்டு வா என்பது போல் தலையசைத்தவாறு நின்றிருந்தான் திரு.. தந்தையை போலவே ஹனியும் தன் தளிர் கரங்களை விரித்து வைத்துக் கொண்டு…. “மம்மி…” என்க…. வினுவின் கண்கள் ஆனந்த கண்ணீரில் நிரம்பியது.

விழிகள் தொடரும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here