மின்னல் விழியே குட்டித் திமிரே – 13

0
821

1551018907221|679x452
மின்னல் விழியே – 13

கைகளை விரித்து வைத்துக் கொண்டு நின்றிருந்த திருவையும் ஹனியையும் கண்டவள் அடுத்த நிமிடம் அவர்களை நோக்கி ஓடினாள். அவனிடம் தான் வருவாள் என்று திரு எதிர்ப்பார்க்க வினுவோ ஓடிச் சென்று ஹனியை அள்ளி அணைத்திருந்தாள்.

தாயாகும் முன்பே தன்னை மம்மி என்று அழைத்து தன்னை தாயாக மாற்றியவளை அணைத்துக் கொண்டவள் அவள் முகமெங்கும் முத்தமிட., திருவிற்குள் அப்படியொரு நிம்மதி. தன்னிடம் அவள் சரண்புகுந்திருந்தால் கூட அவனுக்கு இவ்வளவு சந்தோஷம் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை, ஆனால் இப்போது நிறைவாக இருந்தது.

“பொண்ணை பார்த்ததும் என்னை மறந்துட்டியா???” கோபமாக கூறுவது போல் திரு நடிக்க, வினுவோ,

“எப்பவும் எனக்கு என் பொண்ணு தான் பர்ஸ்ட்” மிடுக்காக கூறியவள் ஹனியை கைகளில் ஏந்திக் கொண்டாள். ஹனியும் வினுவிடம் ஒட்டிக் கொள்ள திருவோ.,

“எனக்கு நீங்க ரெண்டு பேருமே பர்ஸ்ட் தான்.” அவர்கள் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டான். வினு இன்னும் நடப்பதையெல்லாம் நம்ப முடியாமல் அவனோடு ஒன்றினாள். சாலையில் போவோர் வருவோர் எல்லாம் அவர்களை திரும்பி பார்த்தவாறே செல்ல, அது எதுவும் அவர்களை பாதிக்கவில்லை.

நிமிடங்கள் கடக்க இருவருக்கும் பிரியும் எண்ணமே இல்லை.

தனது செல்போனை எடுக்க சென்ற விக்கி திரும்பி வர, அவன் முதலில் கண்டது சாலையோரத்தில் அனாதையாக கிடந்த காய்கறி கூடையை தான்.

“இது நம்மளோடது போல இருக்கே…” அருகில் சென்று பார்த்தவன், அது சற்று முன்பு வினுவின் கைகளில் தான் கொடுத்து சென்ற கூடை என்று புரியவும், வினு எங்கே என்று தேடினான். அவன் நின்றிருந்ததற்கு சற்று தொலைவில் திருவின் அணைப்பில் அவள் நின்றிருக்க., விக்கிக்கு தன் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை.

திருவை கண்டதும் கண்ணை கசக்கி கொண்டு பார்த்த வினுவை போல அவனும் தன் கண்களை கசக்கி கொண்டு பார்க்க, அந்த காட்சி மறையாமல் அவன் முன் அப்படியே தான் இருந்தது. மெதுவாக அவர்களை நெருங்கியவன்,

“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ.” அவர்களின் நெருக்கம் அவனுக்கு எதையோ உணர்த்த., திருவின் கைகளை மெதுவாக சுரண்டினான்.

தங்களின் உலகில் லயித்துக் கொண்டிருந்தவன் விக்கியின் அழைப்பில் கண்ணை திறவாமலே, “எவன் டா அது” என்க.,

“ஹான்…!!! நான் விக்கி… நான் தான் வினு கூட பொறந்தவன்..” விக்கி கேலியாக கூறயதில், சட்டென்று திருவின் அணைப்பில் நின்றிருந்த வினு அவனை விட்டு விலகினாள்.

“ஏய் விக்கி…! எப்போடா வந்த????” பல நூறு ஆண்டுகள் கழித்து விக்கியை சந்திப்பது போல் வினு கேட்க., திரு அவளை ரசனையோடு பார்த்திருந்தான். அவளது கேள்வியில் விக்கி, தன் கைகளை கட்டிக் கொண்டு….

“நான் வந்து 22 வருஷமாச்சு வினு.. என்னை ஞாபகம் இருக்கா???? ஹம்ம் இனி எங்க என்னை ஞாபகம் இருக்கும்…” கேள்வியும் கேட்டு பதிலையும் அவனே கூறிக் கொண்டவன், “எப்படி ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்திங்க??” என்றான் கேள்வியாக.

அவனுக்கு நடந்த விபத்தை விளக்கியவள், “எனக்கே ஒன்னும் புரியல டா.. ஆனா இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றவள் ஹனியின் கன்னத்தில் தன் இதழை பதித்தவாறு திருவை பார்க்க, அந்த முத்தம் தனக்கே கிடைத்துவிட்டது போல் தன் கன்னத்தை தொட்டு பார்த்துக் கொண்டிருந்தான் திரு.

விபத்து நேர இருந்ததை பற்றி வினு கூறவும் விக்கி பதறி போனான்.

“உனக்கு எதுவும் அடிபடவில்லையே வினு.” ஒருமுறை அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தவன்., “இனி இப்படி ரோட்ல விளையாட கூடாது சரியா செல்லம்” என ஹனியிடம் கூற, ஹனி ஆமோதிப்பாய் தலையசைத்தாள். அவளது தலை உருட்டலில் சிரித்தவாறே ஹனியை விக்கி கையில் வாங்கிக் கொண்டான். ஹனியும் சமத்தாக அவனிடம் செல்ல, திரு வினுவை அணைத்தவாறு பிடித்துக் கொண்டான்.

“சரி வாங்க வீட்டுக்கு போகலாம். ரொம்ப நேரமா இங்கயே நிற்கிறோம். வா மச்சான்.” விக்கியை திரு அழைக்க விக்கிக்கு அவன் அழைத்த மச்சானை கண்டு வியப்பாக இருந்தது..

“நீங்க தானா மச்சான் இது??? நீங்க தான் என்னை கூப்பிட்டதா??? “ஹனியிடம் பேசிக் கொண்டிருந்தவன் தன்னை தான் அழைத்தானா?? இல்லை தனக்கு தவறாக ஏதும் கேட்டுவிட்டதா என்ற குழப்பத்தில் திருவிடம் கேட்க., வினுவும் திருவும் சிரித்தார்கள்..

“நான் தான்… நானே தான்…. எல்லாம் வீட்ல போய் பேசிக்கலாம் வா மச்சான்…” என்றவன் வினுவோடு முன்னே செல்ல.. வினு இன்னும் நடப்பதையெல்லாம் நம்ப முடியாமல் அவன் இழுப்பிற்கு சென்றாள். அவனிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் இப்போது கேட்டு இந்த தருணத்தை கெடுக்கவும் மனமில்லாமல் அந்த நொடியை ரசிக்க தொடங்கினாள்.

அவர்கள் அங்கிருந்து நகர அவர்களை குரோதத்துடன் காரினுள் இருந்து பார்த்திருந்தான் ராம். யாரை வேண்டாம் என மறுத்து வினு பெங்களூருக்கு ஓடி வந்தளோ., அவனின் காரின் முன்பு தான் ஹனியை காப்பாற்ற அவளை அணைத்தவாறு நின்றிருந்தாள்.

பிஸினஸ் விஷயமாக ஒருவரை சந்திக்க சென்றுக் கொண்டிருந்தவன், யாரோ ஒரு குழந்தையும் பெண்ணும் தன் காரின் முன்னே நிற்கிறார்கள் என்பதை உணர்ந்து சுதாரித்து காரை ஒடித்து திருப்ப, கார் சற்று தூரம் வேகமாக சென்று பெரும் குலுங்களோடு நின்றது. அவன் சடன் பிரேக் போட்டதில் அவன் தலை ஸ்டியரிங்கில் மோத., வலி உயிர் போனது. தலையை தேய்த்தவாறே யார் தனது காரின் முன் விழுந்தது என கோபத்தில் அவன் கார் கண்ணாடியின் வழியாக பின்னால் பார்க்க, அங்கு நின்றிருந்தாள் வினு.

அவளை அங்கு சற்றும் எதிர்ப்பாராதவன் திகைத்தான்…வேகமாக தன் காரினை விட்டு இறங்கி நின்று அது அவள் தானா எனப் பார்த்தான்..

அவர்களை சுற்றியிருந்த கூட்டம் கலையவே அவளின் உருவம் ராமிற்கு நன்றாக தெரிந்தது. ஆனால் அவள் சுற்றியிருந்த யாரையும் கருத்தில் கொள்ளாமல் பக்கத்தில் நின்றிருந்தவனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். திருவை யாரவன் என ராம் புருவம் சுருக்கி யோசித்துக் கொண்டிருக்க , அடுத்ததாக அவர்கள் அணைத்துக் கொண்டு நிற்கவும் அவர்களை கொலைவெறியோடு பார்த்தான்.

“தன்னை அவமானப்படுத்திவிட்டு ஓடி வந்தது இவனுக்காக தானா???” வஞ்சத்தோடு அவர்களை பார்த்தவனின் மனம் அவர்களை சும்மா விடக்கூடாது, என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தது.

அவனுக்கு வினு வேண்டும்.. எத்தனையோ பெண்களிடம் பழகியிருக்கிறான் ஆனால் வினுவின் அழகு அவனை பித்தம் கொள்ள வைத்தது. அதுவும் அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்னும் வெறி அவனை மிருகமாக்கியிருந்தது. அதனால் தான் அவளது தந்தையின் மூலம் கல்யாணம் என்ற போர்வையில் அவளை அடைய முயன்றான். ஆனால் அதில் இருந்து அவள் தப்பி சென்றாலும் வினுவின் தந்தை மீது நம்பிக்கை வைத்திருந்தான். அவர் வெயூரில் இருந்து திரும்பியதும் வினுவை அடைந்து விடலாம் என அவன் எண்ணிக் கொண்டிருக்க., இப்படி ஒருவனை சாலையென்றும் பாராமல் அணைத்துக் கொண்டு நிற்பவளை கண்டு அவன் வெறி அதிகமானது.

அவர்கள் கிளம்பவும் தனது காரினுள் ஏறி அமர்ந்தவன் தனது காரை கடந்து சென்றவர்களை குரோதத்துடன் பார்த்திருந்தான்.

“உன்னை சும்மா விடமாட்டேன் டி…” சினத்தோடு நினைத்தவன் தான் வந்த வேலை விஷயத்தையும் மறந்து அவனது கெஸ்ட் ஹவுசிற்கு திரும்பினான்.

திருவும் வினுவும் அவர்கள் வீடு இருக்கும் குடியிருப்பை அடைய., வினுவின் மனதில் திருவின் வீட்டிற்கு செல்வதா வேண்டாமா என தயக்கமாக இருந்தது.. அவளது நடையில் வித்தியாசத்தை பார்த்தவன் அவளின் தயக்கம் புரிந்தாற் போல் வினுவின் தோள்களில் கைப் போட்டு தன்னோடு இறுக்கினான்…என்னவென்பது போல் பார்த்தவளிடம் கண்களால் அவன் “வா” என்க அவளும் அவனுடன் நடந்தாள்.

எவ்வளவு தான் அன்று திரு இருந்த நிலையை வினு புரிந்துக் கொண்டாலும் அவன் வீட்டு வாசலை நெருங்கும் போது தன்னையும் அறியாமல் உடல் விறைப்புற்றது. அதற்கு மேல் வினுவால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

அவளிடம் அசைவு இல்லை என்றதும் அவளை திரும்பி பார்த்தவன் அவள் கண்களில் தெரிந்த அலைபுறுதலில் அவள் மனம் புரிந்தவனாய் அவளை கையில் ஏந்திக் கொண்டான்.

அவன் தூக்கியதும் வினு தன் கண்களை விரித்துப் பார்க்க., ஹனி தன் தந்தை செய்ததை கண்டு கை தட்டினாள்.

“சாரி.. அன்னைக்கு நடந்ததை என்னால மாத்த முடியாது. ஆனா திரும்ப அந்த மாதிரி நடக்காது. என்னைக்கும் எனக்கும் இந்த வீட்டுக்கும் நீ தான் மகாராணி.” என்றவன் ஒரு நொடி நிறுத்தி, “தெரியாம தப்பு பண்ணிண இந்த இடியட்டை மன்னிச்சிடு..” தன்னை கண் விரித்து பார்த்துக் கொண்டிருந்தவளிடம் அவன் மன்னிப்பை வேண்ட…. தன் கைகளை அவன் கழுத்தை சுற்றி போட்டவள் அவன் மன்னிப்பை ஏற்றுக் கொண்டேன் என்று அறிவிப்பது போல் அவன் நெஞ்சில் சுகமாக சாய்ந்துக் கொண்டாள்.

அதில் திருவிற்கு நிம்தியாக இருந்தது. விக்கியும் திருவின் சமாதானத்தில் நெகிழ்ந்து போனான்.

உள்ளே வந்தவன் தன் கையில் இருந்தவளை சோபாவில் அமர செய்துவிட்டு தானும் அவள் அருகில் அமர்ந்தான்.

வினுவுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. தன் ஆசை நிறைவேறியதில் அத்தனை மகிழ்ச்சி இருந்தாலும், மனதில் இருந்த கேள்விகள் அவளை அவனிடத்தில் பேச தயக்கத்தை வரவழைத்தது.

“மம்மி… நீ இனி எங்க கூடவே இருப்பியா???” வினுவின் மடியில் ஏறி அமர்ந்தவாறு ஹனி கேட்க.. அவளை அணைத்துக் கொண்ட வினுவும்.,

“கண்டிப்பா டா.. இனி இந்த அம்மா எப்பவும் உன் கூட தான் இருப்பேன். உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்.” வினு உணர்ந்து சொல்ல அந்த வார்த்தைகள் திருவினுள்ளும் ஹனியினுள்ளும் ஆழப் பதிந்தது.

“ஸ்வீட் மம்மி… வா மம்மி என்னோட ரூம்க்கு கூட்டிட்டு போறேன்..” அவள் மடியில் இருந்து இறங்கியவள் வினுவின் கைப்பிடித்து இழுக்க, வினு தயக்கமாக திருவின் முகம் பார்த்தாள். அவன் போ என்பது போல் சைகை செய்ய வினுவும் ஹனியோடு சென்றாள்..

“மம்மி இங்க பாரு.. என்னோட டெட்டி…” அவளது பொருட்களை கடை பரப்பியவள் அதில் இருந்த ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கதை கூறினாள். எப்போதும் வினுவே அதிகம் பேசுவாள் ஆனால் இன்று ஹனி பேசுவதை கேட்டவாறு அவளது பாவனைகளை கவனித்தவாறு அமர்ந்திருந்தாள்.

ஹனி கூறியதில் இருந்து வினுவிற்கு புரிந்த ஒன்று , ஹனி தாய் பாசத்திற்காக ஏங்கியிருக்கிறாள் என்பதே… அதில் அவள் மனதில் தாய்மை உணர்வு பொங்கியது. ஹனியை பத்து மாதம் சுமக்காவிட்டாலும் இப்போதே தாய் பாசத்தை முழுதாக அவளுக்கு உணர்த்திட துடித்தது. கண்கள் கலங்க அவள் கூறுவதை கவனித்துக் கொண்டிருந்தவள் அவளை தன்னோடு சேர்த்தனைத்துக் கொண்டாள்.

“மம்மி என்னாச்சு?? ஏன் அழுற??,” அவளின் கலங்கிய கண்களை கண்டு ஹனி கேட்க.,

“ஒன்னும் இல்ல டா… மம்மி கண்ணுல தூசி…” கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், சமாளித்தாள்.

“நீ என் அம்மா போட்டோ பார்க்கிறியா?” ஹனி கேட்டதில் வினு புரியாமல் பார்க்க., ஹனி அவள் அணைப்பில் இருந்து விலகி தன் கப்போர்டை நோக்கி சென்றாள். அதில் எதையோ தேடி எடுத்தவள் மீண்டும் வினுவிடமே திரும்பி வந்து அவள் கையில் இருந்த போட்டோவை வினுவிடம் காண்பிக்க., வினு அந்த போட்டோவை வாங்கி பார்த்தாள்.

“இவங்க சுமிம்மா.. என்னோட அம்மான்னு டேடி சொன்னாங்க… இவங்க ஸ்டார்ல இருக்காங்களாம்…” போட்டோவை பார்த்தவாறே திரு அவளிடம் கூறியதை வினுவிடம் ஹனி கூற., வினு அந்த போட்டோவை நன்றாக பார்த்தாள்.

சுமித்ரா., திருவின் ஜாடையில் அழகாக இருந்தாள். சிறிது பூசினாற் போல் இருந்தாலும் அவள் கண்களில் தெரிந்த குழந்தை தனம் நிச்சயம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.. கவலைகள் எதுவும் இல்லாத சிட்டுக் குருவியை போல் திருவின் தோளில் அவள் சாய்ந்திருக்க.. உலகத்தின் மொத்த சந்தோஷமும் என்னிடமே என்பது போல் தன் தங்கையை பாதுகாப்பாக அணைத்திருப்பது போல் அணைத்திருந்தான் திரு.. அவர்களின் பின்னால் தாய் பறவை தன் குஞ்சுகளை தன் சிறகின் கீழ் அடைகாப்பது போல் அணைத்திருந்தார் அவர்களின் தந்தை.

மூவர் இருந்த புகைப்படத்தையும் பார்த்தவளுக்கு ஏனென்று தெரியாமல் மனம் படபடவென்று அடித்தது. இந்த சந்தோஷம் காணாமல் போவதற்கு தன் குடும்பம் காரணம் என்பதை நினைக்கும் போதே மனம் வலித்தது.

“இது அம்மா…. அப்புறம் இது தாத்தா.. அப்புறம் இது டேடி…. மம்மி நீ ஸ்டார்க்கு போனா என் அம்மாவை கூட்டிட்டு வர்றியா?? அவங்க கிட்டயும் என்னோட டெட்டி எல்லாம் காமிக்கணும்.” திரு எவ்வளவு தான் ஹனியோடு நேரம் செலவழித்தாலும், எப்போதும் சுமியை பற்றி பேச அனுமதிக்க மாட்டான். அதனால் மடை திறந்த வெள்ளமாக ஹனி வினுவிடம் அனைத்தையும் கூற.,

“கண்டிப்பா குட்டிமா.. இந்த மம்மி உன்னோட அம்மாவை எங்க இருந்தாலும் கூட்டிட்டு வருவேன்..” ஹனியை அணைத்து உச்சி முகர்ந்தவள் அவளுக்கு வாக்களிக்க, ஹனியும் அவளோடு ஒன்றினாள்.

அவர்களின் சம்பாஷனையை கதவின் அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்தான் திரு. தனக்கு உதித்த காதலை அவன் வினுவிடம் கூறாமல் இருந்ததற்கு முக்கியமான காரணமே ஹனி தான். வினு எப்படி தன் பெண்ணை ஏற்றுக் கொள்வாளோ என்ற பயம் இருந்ததாலே., அவனால் அவளிடம் நெருங்க முடியவில்லை . ஆனால் இன்று வினுவின் அன்பை பார்க்கும் போது மனதில் இருந்த அனைத்து பாரமும் விலகியது போல் உணர்ந்தவனுக்கு, வினுவின் மேல் காதல் கூடியது.

இருவரையும் பார்த்திருந்தவன் உள்ளே வர.. வினு ஹனியை கைகளில் ஏந்திக் கொண்டாள்.

திருவை கண்டதும் வினுவின் கைகளில் இருந்து ஹனி திருவிடம் தாவ., திரு ஹனியை வாங்கிக் கொண்டான். வினு அமைதியாக தலையை குனிந்தவாறு நின்றிருந்தாள்.

திரு வினுவிடம் பேச முயல., சரியாக விக்கி கையில் ட்ரேயுடன் உள்ளே நுழைந்தான்.

“மச்சான்.. ரெண்டு பேரையும் கூட்டிட்டு வர சொன்னா நீங்க இங்கேயே இருக்கிங்க.. அதான் நான் பாயாசத்தை எடுத்துட்டு வந்துட்டேன்..”

வினுவும் ஹனியும் உள்ளே பேசிக் கொண்டிருந்த நேரத்தில் விக்கி தான் பாயசம் செய்ய எண்ணி, திருவின் துணையோடு செய்திருந்தான். வினுவையும் ஹனியையும் அழைத்து வருவதாக கூறி வந்த திரு அவர்கள் பேசிக் கொண்டிருக்கவும் அவர்களை பார்த்தவாறு நின்றுவிட விக்கியே அவர்களை தேடி வந்துவிட்டான்.

“இந்தா வினு… மச்சானை கவுத்திட்டோம்.. அதை சந்தோஷமா செலிபிரேட் பண்ணுவோம்.. ஸ்விட் எடு கொண்டாடு…” ஆர்ப்பாட்டமாக கூறியவன் ஹனியின் கையில் கிண்ணத்தை கொடுத்தான்.

அவன் கூறியதில் திருவிற்கு சிரிப்பு வர., வினு அவனை முறைத்தாள்.

“சரி தான் மச்சான்.. உன் அக்கா என்னை கவுத்திட்டா தான்” விக்கி கூறியதை ஒப்புக் கொண்டவன் வினுவை காதலாக பார்த்தான். அதில் வினுவிற்கு உள்ளே சாரலடித்தாலும், இனி என்னாகுமோ என்ற பயமும் எழுந்தது.

வினுவின் அமைதி விக்கிக்கு வித்தியாசமாக பட அவர்களுக்கு தனிமை அளிக்க வேண்டி ஹனியை வெளியே அழைத்துச் சென்றான்..

விக்கி சென்றதும் வினுவை பார்த்த திரு அவள் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளை கண்டு., “வினு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்க.,

வினுவும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள். அவள் கைகளை பற்றிக் கொண்டவன் நேரே தன் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றான்.

நிலவு மெதுவாக தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்க., குளுமையான காற்று இருவரையும் தீண்டிச் சென்றது. காற்றில் பறக்கும் முடியை சரி செய்தவள் திருவின் புறம் திரும்பாமல் நிலவை பார்த்துக் கொண்டிருக்க திரு அவள் அருகில் நின்றிருந்தான்.

வினு.. மாடி திண்டில் கைப்பிடித்து நின்றிருந்தவளின் கைகளில் அவன் அவனது கைகளை அவன் வைக்க., அவள் அவனை திரும்பி பார்த்தாள்.

“என்னடா?? ஏன் இவ்வளவு அமைதி?? நீ இவ்வளவு அமைதியா இருக்கும் போது… நீ என்னோட வினு தானான்னு சந்தேகம் வருது…” கண்களில் சிரிப்பு பொங்க கூறியவனை பார்த்தவள், அவன் கைகளை தட்டி விட்டுவிட்டு கோபமாக முறைத்தாள்,

“என்ன வினு எதுக்காக கோபப்படுற??,” அவளின் கோபம் புரியாமல் திரு விழிக்க.,

“நீ நிஜம்மா என்னை லவ் பண்றியா?? இல்லை ஹனியை காப்பாத்தினதுனால எதாச்சும் சாப்ட் கார்னர்???” எப்படி கேட்பது எனத் தெரியாமல் வினு இழுக்க., திரு அவளை பார்த்து சிரித்தான்..

“லூசு இதை நினைச்சா இப்படி கலங்கிட்டு இருக்க??? நான் இந்த ரெட்டவால் குரங்கை லவ் பண்றேன்னு உணர்ந்து பத்து நாள் ஆகிடுச்சு. ஆனா எப்போ காதலிக்க ஆரம்பிச்சேன்னு தான் என்னும் கண்டுப்பிடிக்க முடியலை…” திரு சோகமாக நிறுத்த… வினு திகைப்பாக பார்த்தாள்.. அடுத்த நொடியே அவனை நெருங்கியவள் அவன் மார்பில் அடிக்க துவங்கினாள்..

“யூ ஸ்டுப்பிட்… அப்புறம் ஏன் டா என்னை தவிக்க விட்டுட்டு காணாமல் போன… நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா??? பைத்தியம்… அறிவு கெட்டவன்…” பத்து நாட்களாக அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தத்தையும் அவள் தன் அடிகளின் மூலம் காண்பிக்க, திருவோ அவள் கொடுத்த அடிகளை சுகமாக ஏற்றுக் கொண்டான்.

அவள் கைகளை பற்றியவன், அவளை தன் புறம் இழுக்க., அவன் மார்பில் வந்து மோதினாள் அவனது ரெட்டைவால் குரங்கு. தன் மார்பளவே இருந்தவளை நோக்கி குனிந்தவன்.,

“யூ ஆர் மெஸ்மெரைசிங் மீ” அவள் காதில் முணுமுணுத்தான்.

அவனை கோபமாக விலக்கியவள்., “இதை சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சாடா???? தள்ளிப் போ… நான் கோபமா இருக்கேன்…” அவன் அருகே மனம் உருகினாலும் அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எத்தனை நாட்கள் தவிக்க விட்டுவிட்டான்.. இன்று கூட அவள் எவ்வளவு கேட்டாள்… ஒத்துக் கொண்டானா??? இல்லையே…. தன்னை விலக்கி விட தானே நினைத்தான்…

கோபமாக திரும்பி நிற்பவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவனது செய்கையில் கூச்சத்தில் அவள் நெளிய.,

“தள்ளி நில்லுடா…” அவனிடம் கூறியவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை..

“ம்ம்ஹும் நான் மாட்டேன்… இங்க இருந்து பேசினா தான் எனக்கு பேச வரும்..” அவளிடம் உரைத்தவன் “ஏன் வினு நீ தான் எப்பவும் எப்போ டா அரசு லவ் பண்ணுவன்னு நச்சரிப்ப… இப்போ நானே ஒத்துக்கிட்டேன் ஆனா நீ ஏன் என்னை தள்ளி நிறுத்துற…”

“என்னது தள்ளி நிறுத்துறேனா??? நீ தான் டா என்னை தள்ளி நிறுத்தின… நீ தான்டா என்னை விட்டுட்டு ஓடி ஒளிஞ்ச… இப்போ கூட என்னை லவ் பண்றதா நீ ஒரு வார்த்தை சொல்லலை..” கோபமாக கூறியவளை கண்டு திருவிற்கு அவளது கோபம் எதனால் என புரிந்து போனது…

“ஹா….ஹா…. என் செல்ல குட்டிக்கு இது தான் கோபமா??? நான் லவ் யூ சொல்லாதது தான் கோபமா???” அவளை தன் பக்கம் திருப்பியவன் அவள் நெற்றியில் தன் நெற்றியை கொண்டு முட்டினான்..

அய்யோ மாட்டிக் கொண்டோமே என்பது போல் வினு தன் உதட்டை கடிக்க அவன் பார்வை அவள் இதழில் நிலைத்தது.. எப்போதும் போல் அவளது உதட்டில் இருந்த மச்சம் அவனை இம்சை செய்ய, பார்வையை அதிலிருந்து விலக்கி அவள் கண்களை பார்த்தான்.

“என்னோட கண்ணை பாரு புஜ்ஜி மா…. அதுல தெரியுற காதலை விட என்னோட வாயிலிருந்து சொல்ற காதல் ஒன்னும் பெருசு இல்ல டா…” அவன் கண்களை பார்த்தவள் அதில் அவள் மீது அவன் வைத்திருக்கும் நேசத்தை கண்டு பேசற்று போனாள்.

தன்னை காதலிப்பான் என நம்பிக்கை அவளிடத்தில் இருந்தது தான். ஆனால் இந்த அளவுக்கு காதலிப்பான் என்று அவள் கனவில் கூட நினைத்தது இல்லை… அவன் ஒரு துளி காதலை காட்டினால் போதும், இந்த உலகத்தில் மீதமிருக்கும் ஒட்டு மொத்த காதலையும் அவனிடம் காட்ட அவள் தயாராக இருந்தாள். ஆனால் இப்போது அவன் கண்களில் தெரியும் இந்த காதலின் அளவு அவள் எதிர்பாராதது தான்.

“எனக்கு இந்த காதல்ன்னு சொன்னாளே வெறுப்பு புஜ்ஜி மா… ஏன்னா என்னோட தங்கச்சியோட லைஃப் அழிஞ்சதுக்கு காரணம் இந்த லவ் தான்..ஒரு நாளைக்கு ஒரு தடவையாச்சும் அவன் என் தங்கச்சிகிட்ட லவ் யூ அம்முன்னு சொல்லிடுவான். ஆனா அவளை பத்தி ஒரு நிமிஷம் கூட யோசிக்காம விட்டுட்டு போய்ட்டான். அதனால என்னமோ எனக்கு லவ் யூ அப்படிங்ற வார்த்தையை கேட்டாலே வெறுப்பா இருக்கு.” கடந்த கால நிகழ்வுகளை நினைத்து வலியோடு திரு கூற., வினுவிற்கு அவன் யாரை பற்றி கூறுகிறான் என்பது புரிந்ததால் அமைதியாக நின்றிருந்தாள்.

மேலும் அவனே தொடர்ந்தான்., “ஹனி என்னோட பொண்ணு இல்லை… என் தங்கச்சி சுமித்ரா பொண்ணு…” ஹரி ஏற்கனவே வினுவிடம் கூறியது அறியாது அவன் கூற., வினு தெரியும் என்றாள்.

அவளை அவள் யோசனையாக பார்க்க., வினு உளறிட்டோமே என்ற ரீதியில் அவனை பார்த்தாள்.

“ச்சு.. ஹனி தான் இன்னைக்கு அவ அம்மா போட்டோவை காண்பிச்சாளே… அதுல புரிஞ்சிக்கிட்டியா???” ஒரு முறை கூட வினு அவனிடம் ஹனி அவனது தங்கச்சி பெண் தானே என கேட்டிராததால் திரு வினுவுக்கு இப்போது தான் தெரியும் என நினைத்துக் கொண்டான்.

“இல்லை அரசு.. அன்னைக்கு குடிச்சிட்டு நீ சொன்ன…” ஹரி கூறியதை கூறாமல் அவன் குடித்த போது உளறியதை கூறினாள்.

அதைக் கேட்டுக் கொண்டவன்., “ஹம்ம் ஆனா அதுக்க முன்னாடியே நீ ஹனியை உன்னோட பொண்ணுன்னு சொன்னப்போ நான் எப்படி ஃபீல் பண்ணிணேன் தெரியுமா???” ப்ளட் டொனேட் செய்துவிட்டு வந்த அன்று தன் கேபினுள் தான் தூங்கிவிட்டதாக எண்ணி அவள் பேசியதை நினைத்து அவன் முகம் இப்போது மென்மையாக மாறியது.

“அதோட வினு உன்னோட பொண்ண இருக்க வாய்ப்பே இல்லைன்னு என் மனசு அடிச்சு சொல்லிச்சு…” அவனிடம் உரைத்தவளை அவன் கேள்வியாக பார்க்க அவளே., “ஒரு வேளை ஹனி உன்னோட பொண்ணா இருந்திருந்தா நான் லவ் சொன்னப்பவே உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லியிருப்ப” என்றாள் அவன் குணம் அறிந்து. அவள் தன்னை சரியாக கணித்திருப்பதை நினைத்து அவன் தான் மொத்தமாக அவள் பக்கம் வீழ்ந்துப் போனான்.

அவளை தன்னருகே இழுத்தவன் அவள் கன்னத்தில் இதழை பதித்தான். “தேங்க்ஸ் புஜ்ஜி மா… என்னை புரிஞ்சிகிட்டதுக்கு… நீ பேசின அளவுக்கு நான் யாரையும் என்கிட்ட பேச விட்டது இல்லை.. ஆனா அன்னைக்கு நீ என்னை லவ் பண்றன்னு சொன்னதும் கோபம் வந்துச்சே தவிர ஹனியை பத்தி சொல்லி உன்னை தள்ளி வைக்கணும்ணு தோனலை. நீ ஹனியை பார்த்த அப்புறம் அதை வச்சே என்கிட்ட இருந்து உன்னை தள்ளி வச்சிடலாம்னு நினைச்சா… நீ அவளையும் ஏத்துக்கிறேன்னு நான் தூங்கிட்டு இருந்தப்போ வந்து சொல்லிட்டு போற… எந்த பக்கம் போனாலும் மேடம் என்னை மேங்னெட் மாதிரி கட்டி இழுத்திங்க…” என்றவன் அவள் கன்னத்தில் மெதுவாக கடித்து வைக்க..

“ஸ்ஸ்… போடா….” தன் கன்னத்தை தேய்த்தவாறே சிலுப்பிக் கொண்டாள் அவனது புஜ்ஜி மா…

“சாரி டா புஜ்ஜி… வலிச்சிடுச்சா… நான் வேணும்னா கிஸ் பண்ணி மருந்து போடவா????” பெருந்தன்மையாக அவன் கேட்க வினு அவனை முறைத்தாள்…

“எப்பவும் இடியட்னு தானே டா கூப்பிடுவ இப்போ என்ன வந்ததுலேயிருந்து புஜ்ஜி மா ங்ற????” ஒரே நாளில் காதல் மன்னனாக மாறிவிட்டவனிடம் அவள் கேட்க… அவனோ சிரித்தான்…

“ஏன் டா சிரிக்கிற??? நீ சிரிக்கிறத பார்த்தா புஜ்ஜி மான்னு கூப்பிடுறதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கும் போலவே…” வினு சந்தேகமாக கேட்க… அதில் அவன் வாய்விட்டே சிரித்தான்…

“ஹா..ஹா .. பெருசா எதுவும் இல்லை… உன்னை மறக்கணும்னு நினைச்சி நான் ஹனியை கூட்டிட்டு ஊட்டி போய்ருந்தேன். அங்க போய் வெளிய சுத்தி பார்க்கவும் மனசு இல்ல.. ஹோட்டல் ரூம்க்குள்ளேயே அடைஞ்சு இருந்தோம். அப்போ தான் ஹனி ஒரு நாள் டோரா புஜ்ஜி பார்த்துட்டு இருந்தா… அப்போ அதுல வந்த புஜ்ஜி உன்னை மாதிரியே இருந்துச்சு… பட் அதுக்கு பெரிய வால் இருந்துச்சு… உனக்கு இல்லை…” அவளை குரங்கு என சொல்லாமல் சொல்லியவனை முறைத்தவள் அவனை அடிக்க கட்டையை தேட… அவளை அணைத்தவன்…

“சாரி டா… உன்னை மறக்கணுனு நினைச்சி பத்து நாளும் உன்னை ஞாபகப்படுத்தின புஜ்ஜியை தான் பார்த்துட்டு இருந்தேன். ஹனி கூட டேடி ரொம்ப போர் அடிக்குது இந்த ஷோன்னு சொல்லிட்டா… ஆனாலும் பத்து நாள் அதை தான் பார்த்தேன். பட் என்ன இருந்தாலும் அந்த புஜ்ஜியை விட இந்த ரெட்டை வால் குரங்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் காதலாக…

பத்து நாட்களும் டோரா புஜ்ஜி பார்த்தேன் அதுவும் அவளை ஞாபகப்படுத்தியதால் என்று அவன் கூறவும் அவளுக்கு புல்லரித்தது அவனது காதலை கண்டு. அவன் அமர்ந்து கார்ட்டூன் பார்ப்பது போல் யோசித்து பார்த்தவள் சிரிப்பு தாளாமல் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்…

“நீ எப்போ டா என்னை லவ் பண்ண ஆரம்பிச்ச???” சிரிப்போடு அவனது சட்டை பட்டனை திருகியவாறே வினு கேட்க.. அவளை இறுக அணைத்தவன்.,

“எப்போ உன்னை விரும்ப தொடங்கினேன்னு எனக்கே தெரியலை… உன்கிட்ட கோபமா திட்டினாலும் ஒவ்வொரு தடவையும் நீ பண்ற சேட்டையை நான் ரசிக்க தான் செய்வேன்.. அது உனக்கு தெரிஞ்சிட கூடாதுன்னு கஷ்டபட்டு மறைப்பேன்… அதிலும் நீ நிறைய தடவை எனக்கு ஹனியை ஞாபகப்படுத்துவ… அதோட உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நீ ரொம்ப பரிட்சயமானவ மாதிரி இருக்கும்…”

அவன் மனதில் இருப்பதை கூற வினுவிற்குள் பயப்பந்து உருண்டது.. அவளின் அமைதியை கவனியாதவன்., “புஜ்ஜி மா நீ உன்னோட குடும்பத்தை பற்றி சொல்லு” என்க., அவன் கைகளில் இருந்து விலகியவள் நிலவை பார்த்தவாறு.,

“என் குடும்பத்தை பத்தி பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லை அரசு… அப்பா ரொம்ப ஸ்ரிக்ட்.. அம்மா ரொம்ப அன்பானவங்க.. ரெண்டு அண்ணாவுக்குமே என் மேல ரொம்ப பாசம்.. விக்கியை தான் தெரியுமே… என்னோட தம்பின்னு சொல்றதை விட பெஸ்ட் ஃப்ரெண்ட்…” தன் குடும்பத்தை பற்றி சுருக்கமாக கூறியவள் திருவின் முகம் பார்க்க… அவன் கனிவோடு கேட்டிருந்தான்..

“ரொம்ப பெரிய ஃபேமிலி… என்னை ஏத்துக்குவாங்களா புஜ்ஜி மா??? அதுவும் கையில் ஒரு குழந்தையோட…” கவலை தோய்ந்த முகத்தோடு கேட்டவனின் சட்டையை பற்றி தன் அருகே இழுத்தவள்.,

“யாருக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் எனக்கு நீ தான்.. அதை இந்த ஜென்மத்துல மாத்த முடியாது…” கண்களில் தீவிரத்தோடு கூறியவளின் மேல் திருவிற்கு அன்பு பெருகியது.. வாழ்கையை வெறுத்து பாலைவனத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவனிடத்தில் நேசத்தை காண்பிப்பவளை கண் சிமிட்டாமல் பார்த்தான்.

“நானும் யாருக்காவும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் டா புஜ்ஜி மா… இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல அடுத்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த அரசோட அரசி நீ தான்…” அவளிடம் உறுதியாக கூறியவன் அவள் இதழில் தன் முதல் முத்திரையை பதித்தான்…

தான் யார் என உண்மை தெரியும் போது தன்னை விலக்கி விடுவானோ என்ற பயம் அவளுக்குள் சுனாமியாக கொந்தளிந்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அவன் அளித்த முத்தம் அவளுக்கு தேவையாகவே இருந்தது.

‘என்னை விட்டுடாதே அரசு’ என அவள் மனம் ஊமையாக கதற., அவனை மொத்தமாக தனக்குள் புதைத்துக் கொள்ள முயன்றாள்.

வினுவோடு எல்லா ஜென்மங்களிலும் வாழ வேண்டும் என ஆசைப்பட்டவனே இன்னும் சில நாட்களில் அவளை எந்த ஜென்மத்திலும் என் முகத்தில் விழிக்காதே என கூறப் போகிறான் என அறியாமல் இதழ் யுத்ததில் சஞ்சரித்திருந்தார்கள் அந்த காதலர்கள்…

அங்கு ராமோ வினுவை பழி வாங்குவதற்கான திட்டத்தை வகுத்து அதன் முதல் படியாக வினுவின் அண்ணன் அகிலிற்க்கு அழைத்தான்.

விழிகள் தொடரும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here